Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label கர்மா. Show all posts
Showing posts with label கர்மா. Show all posts

Tuesday, April 12, 2011

சாமீ....கருமம் கருமம்....!

நம் வாழ்க்கையில் பல வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்துகிறோம் என்பது உண்மை. இன்னும் ஒருபடி மேலே சொன்னால் பல வார்த்தைகள் நான் ஏன் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாமல் பயன்படுத்துகிறோம். நம் கலாச்சாரத்திலும் நம் முன்னோர்களாலும் செம்மையாக பயன்படுத்தபட்ட பழக்கவழக்கங்கள் நாளடைவில் வார்த்தையாகி, அவ்வார்த்தையே வெறும் சொற்களாக நம்மிடையே உலாவுகிறது. அப்படிப்பட்ட வார்த்தை தான் “கருமம்”.

நம் சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் ஆன்மீகத்தை ஒரு பகுதியாக வாழமல், வாழ்க்கையையே ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக வாழ்ந்தார்கள்.

தங்களின் ஒவ்வொரு செய்லும் அர்த்தத்துடன் இருக்க வேண்டும் என விரும்பினார்கள். கர்ம வினைகளால் மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு கர்மங்களையும் உணர்ந்து தெரிந்து செயல்பட்டார்கள்.

தன் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து அதற்கு தக்க செயல்பட்டால் கர்மவினைகள் அதிகரிக்காது. கர்மவினை அதிகரிக்காத பட்சத்தில் பல்வேறு பிறவிகள் எடுத்து கஷ்டப்படாமல் முக்தியை அடையலாம்.

இக்கருத்து நம் முன்னோர்களுக்கு ஆழமாக இருந்ததால் கர்மவினையை பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஒருங்கே கொண்டிருந்தார்கள்.

நம் செய்யும் செயல் (கர்மா) என்பது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு போன்றது. அதை மீண்டும் உள்ளே அடைக்க முடியாது, மேலும் அது செல்லும் திசையில் உள்ள இலக்கை அடையாமல் விடாது. குண்டின் இச்செயலை நாம் முடக்க வேண்டுமானல் துப்பாக்கியை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

ஒருவர் தான் எதற்காக பிறந்திருக்கிறோம் எனபதை உணர்ந்து அதற்கு தக்க செயல்படாமல் வேறு விதமான செயலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் கர்மாவை சேர்க்கிறார் என அர்த்தம்.

உதாரணமாக ஒருவர் ஆசிரியராக இருக்கிறார். அதற்கு தக்க செயலை செய்யாமல் தான் ஒரு ஜவளிக்கடை அதிபராக வேண்டும் என முயல்கிறார் என்றால் அவரின் கர்மா அங்கே நீட்டிக்கப்படுகிறது.

துறவிகள் தங்களின் செயல்களில் சமுதாய பயனுடன் செயல்படுவார்கள். அப்படி செயல்படும் சமயம் தங்களை உணராமல் தன் சுய நலனுக்கு ஏதேனும் செய்துவிட்டால் அது கர்மவினையாக தங்களை தாக்கும் என்று நம்புவார்கள். அவ்வாறு தங்களுக்கு கர்மவினை சேராமல் இருக்க தங்கள் செயலை கண்காணித்து எச்சரிக்கை கொடுக்க சிலரை அருகே வைத்திருப்பார்கள். அப்படி சுய நலன் மேலோங்கும் பொழுது அவர்கள் துறவியின் காதில் “கர்மம் கர்மம்” என கூறுவார்கள். துறவியும் உடனே உணர்ந்து அச்செய்கையை கைவிடுவார்.

இவ்வாறு தமக்கு ஒவ்வாத கர்மாவை செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டி எச்சரிக்க பயன்படுத்தும் வார்த்தை தான் “கர்மம் கர்மம்”. இவ்வார்த்தையை கேட்டதும் மனம் தெளிந்து அதிலிருந்து விடுபட்டு நற்கதியை அடைவார்கள்.

தமக்கு ஒவ்வாத கர்மம் செய்ததன் பலனை கிரகங்கள் அடுத்த பிறவியில் தீவினையாக அளிக்கிறது. கிரகங்களால் கர்மவினை தாக்கம் பீடிக்கப்பட்டு மன நிலையிலோ அல்லது உடல் நிலையிலோ கஷ்டப்படுவார்கள். இதை கொங்கு மண்டல கிராமங்களில் “கிரகம் புடிச்சவனே” என சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.

பிறர் கருமம் செய்வதையும் அதனால் அவர்களின் வாழ்க்கை சிரமத்தையும் எச்சரித்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் நடைமுறையில் நாம் பல விஷயங்களை எச்சரிக்க தவறுகிறோம்.

உதாரணமாக சென்ற வருடம் ஒரு நடிகை செய்ததை பார்த்து “கருமம் கருமம்” என நீங்கள் எச்சரித்து இருக்க வேண்டும். அல்லது அந்த நடிகையுடன் இருப்பவர் பார்த்து “கிரகம் புடிச்சவன்” என சொல்லி இருக்க வேண்டும். மாறாக இதை டீவியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து நாமும் கர்மம் செய்தோம்..!

மேலும் உதாரணம் சொல்லலாம். இரு நடிகர்கள். ஒருவர் மற்றொருவரை ஏதோ காரணத்தால் துன்புறுத்திவிட்டார். அது கர்மம் தான். ஆனால் அதை நாம் “கர்மம் கர்மம்” என எச்சரிக்கவில்லை. இப்பொழுது அந்த நடிகர் மற்றொரு நடிகரை குடிகர் என வீதிக்கு வீதி அசிங்கமாக பேசுகிறார். எப்பொழுதோ செய்த கர்மம் கிரகங்களால் பிடிக்கபட்டது பார்த்தீர்களா?

ஆகவே இனிவரும் காலத்தில் இவ்வாக்கியங்களை தவறாக பயன்படுத்தாமல் உள் அர்த்தத்துடன் பயன்படுத்துங்கள்.

டிஸ்கி : இவற்றை நான் எழுதக் காரணம் உங்களின் செயல்களை பார்த்து “கருமம் கருமம்” என எச்சரிக்கத்தான். இதை படித்து நான் “கிரகம் பிடித்தவன்” என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..! :)

Wednesday, April 8, 2009

ஆசை அறுமின்

ஆசை அறுமின்
- புத்தனாக ஆசைப்படு.

ஆசைப்படுதல் என்பது தனி மனிதனின் உரிமை. பிறந்து சுவாசம் துவங்கியது முதல் சுவாசம் நின்று இறக்கும் வரை ஆசை மற்றும் எதிர்பார்ப்பு மட்டுமே மனிதனை வளர்ச்சி அடையச்செய்கிறது. ஆசைப்படுவது குற்றம் என சிலரும், அத்தனைக்கும் ஆசைப்படு என சிலரும் மனிதனை மனக்குழப்பத்திற்கு தள்ளுகின்றனர்.

தற்சமயம் நமது சமுதாயம் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. பணம் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழ்கிறார்கள். பணம் இருந்தால் அனைத்தை யும் அடையலாம் எனும் எண்ணம் மேலோங்கியிருக்கிறது. பணத்தால் புதிய உயிரை வாங்க முடியுமா என்று, பல வருடங்களாக குழந்தை இல்லாத செல்வந்தரை கேட்டுப்பாருங்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் பல லட்ச ரூபாய் கொண்டு செல்லும்பொழுது விபத்தில் சிக்கி உயிர் இழந்தவரின் குடும்பத்தை கேழுங்கள், பணம் உயுர்காக்குமா? என்று. பணத்தால் ஆசையை பூர்த்தி செய்ய ஓர் எல்லை உண்டு. பணத்தை மட்டுமே நம்பினால் பல தொல்லை உண்டு. உங்கள் ஆசைகள் எதிர்பார்ப்புகளாய் மாறி அதை அடைய திட வைராக்கியத்துடன் செயல்பட்டால் அந்த ஆசையே லட்சியம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. விதை மரமாக வளரவும் , மொட்டு மலராக மலரவும் அதன் கருவில் இருக்கும் ஆசையே காரணம்.

ஆசைப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை இருந்தாலும் ஆசையை பற்றி முழுமையாக தெரிந்தபின் ஆசப்படுவது சிறந்தது. ஆசை என்பதை இருவகையாக பிரிக்கலாம். புத்திசாலித்தனமான ஆசை மற்றும் முட்டாள் தனமான ஆசை என கூறலாம்.


இரு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு செல்வ கடவுளான மஹாலஷ்மியை சந்தித்து தமது வறுமையை போக்கிக்கொள்ளவேண்டும் என்பது ஆசை. முதல் நபர் ஓர் ஆன்மீக குருவின் இடத்தில் மஹாலஷ்மி மந்திரம் பெற்று நெடுங்காலம் தவம் செய்தார். மஹாலஷ்மி வரவே இல்லை. இரண்டாமவரோ அதே ஆன்மீக குருவினிடத்தில் மூதேவியை காண மந்திரம் பெற்று தவம் செய்தார்.


தன்னை யாரும் அழைக்காத பொழுது வைராக்கியத்துடன் தன்னை அழைக்கும் பக்தனிடத்தில் மூதேவி ஓடிவந்தாள். ' என்ன வரம் வேண்டும் பக்தா! ' எனக் கேட்டாள். ' என்னை விட்டு எப்பொழுதும் விலகியே இரு. இதுவே எனது வரம் ' என்றான் மூதேவியை தவம் செய்தவன். மூதேவி இல்லாத இடத்தில் லஷ்மி முழுவதும் நிறைந்தாள். புத்திசாலிகள் ஆசையை தனது காலடியில் விழ வைப்பார்கள். முட்டாள்கள் ஆசையின் காலடியில் விழுந்துகிடப்பார்கள்.


முட்டாள் தனமான ஆசைகூட விபரீதமானதன்று. இது போன்ற ஆசை மன விரக்தியைத்தான் கொடுக்கும். ஆனால் மனதை சமநிலையில் வைக்காமல் ஆசைப்படும் பொழுது விபரீதத்தைக் கொடுக்கும். அனைவருக்கும் தெரிந்த நாடோ டி கதையை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரு வழிப்போக்கன் அடர்ந்த காட்டின் ஓர் மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தான். கேட்டதை கொடுக்கும் கல்பக விருஷம் அந்த மரம் என்பது அவனுக்கு தெரியாது. இளைப்பாறும் பொழுது சிறந்த நீரும் , உணவும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என எண்ணினான். உடனே அறுசுவை உணவும், குளிர்ந்த நீரும் அவன் முன் இருந்தது. உணவை சாப்பிட்டதும் உறக்கம் அவனை தாலாட்டியது. படுத்து உறங்க பஞ்சுமெத்தையும், காலகளைப்பிடித்துவிட சேவகர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தான்.

உடனே அவன் பஞ்சுமெத்தையில் படுத்திருந்தான். இருவர் அவன் கால்களை பிடித்த வண்ணம் இருந்தனர். இதை உணர்ந்த வழிப்போக்கன் நகை, ஆடம்பர ஆடைகள் என பல விஷயங்களை பெற்றான். இந்த வனவிலங்குகள் நிறைந்த காட்டில் திடீரென புலியோ, சிங்கமோ தன்னை கொண்றுவிட்டால் என்னவாகும் என எண்ணினான். உடனே பல திசைகளில் பாய்ந்துவந்த வனவிலங்குகள் அவனை கொன்றுதின்றன.


சமநிலையற்ற மனதுடன் ஆசைபடும் பொழுது ஏற்படும் விபரீதத்திற்கு இந்த கதை சிறந்த உதாரணம். சமநிலையில் உள்ள யோகிகள் ஆசைப்படுவதை விட்டு விலகியிருப்பார்கள். மனம் இருந்தால் மட்டுமே ஆசை உண்டு. மனமற்ற யோகிக்கு ஆசை என்பதே இல்லை. அப்படிப்பட்ட யோகிகளின் அருகில் அமர்ந்து தீர்க்கமாக நமது எண்ணத்தை குவித்தால் விரைவில் அதை அடையலாம். ஆனால் அவர்களிடத்தில் அமரும் பொழுது மனம் லயமடைந்து எண்ணங்கள் எழாது. யோகியானவன் தன்னை மட்டுமின்றி தன்னை நாடி வருபவர்களின் மனதையும் தூய்மையாக்குகிறான்.

நான் பயிற்சி அளிக்கும் யோக முறை இது போன்ற மனமற்ற நிலையை அடைய வழிவகுக்கும். சில மாணவர்கள் மனமில்லாமல் எப்படி வாழ்வது என குழப்பம் அடைவார்கள். முழு விழிப்புணர்வு நிலையில் இருக்கும் பொழுது மனம் செயல்படாது. நிர்விகல்ப சமாதி எனும் உணர்வு ஆன்மநிலை அடையவும் மன சிதறல்கள் இன்றி விழிப்புணர்வில் பிரகாசிக்கவும் இந்த யோகப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறிது நேரம் மனமற்ற நிலையில் இருந்து பார்த்தால் அதன் ஆனந்தம் புரியும். மன எண்ணங்களே ஆசையாக மாறுகிறது என கூறினேன். இவை மனதில் 'சம்ஸ்காரங்கள்' எனும் எண்ண படிவங்களாக பதிந்துவிடுகிறது.

ஆன்மாவில் பதிந்த இந்த சம்ஸ்காரங்கள், ஆன்மாவை பல பிறவிகள் எடுக்கத் தூண்டுகின்றன. இதை கர்போபனிஷத் , பிரசன்ன உபநிஷத் எனும் வேத பகுதிகள் உறுதி செய்கிறது. இதையே கீதை ' எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' எனும் வாசகத்தால் உணர்த்துகிறது.


பல பிறவிகள் ஏற்படும் தத்துவத்தை 'யோக வாஸிஷ்டம்' எனும் நூல் சிறிய கதை மூலம் சிறப்பாக விளக்கும். ஈஸ்வரன் தவ நிஷ்டையில் இருக்கும் சமயம் ஓர் தேனீ அவரை சுற்றி ரீங்காரம் செய்தது. ஈஸ்வரன் சமாதி நிலையிலிருந்து வெளிவந்து தான் தேனீயாக இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணினார். உடனே அவர் தேனீயானார். தேனீ பூக்களுக்கு சென்று தேன் சேகரித்தது. அப்பொழுது தேன் கொண்ட பூவானால் எப்படி இருக்கும் என நினைத்தது. தேனி பூவாக பிறந்தது. பூவைப்பறித்து அந்தனர்கள் பூஜை செய்தனர். கடவுளின் விக்ரகத்தில் பட்டவுடன் கடவுளாக மாற ஆசைப்பட்டது. பூ மீண்டும் ஈஸ்வரனாக நிஷ்டையில் ஆழ்ந்தது.


எவ்வாறு ஈஸ்வரன் பல வடிவங்கள் எடுத்து மீண்டும் தன்னிலைக்கு வருகிறான் என்பதை எளிமையாக உணரலாம். நமது சம்ஸ்காரமே அடுத்த பிறவிக்கும், முற்பிறவிக்கும் - ஏன் பலகோடி பிறவிகளுக்கும் காரணம் என்பதை உணரலாம். இதை படித்துக்கொண்டிருக்கும் சமயம் சிறிது கண்களை மூடி, இன்று காலை முதல் இந்த நிமிடம் வரை எத்தனை விஷயங்களுக்கு ஆசைப்பட்டோ ம் என்பதை எண்ணிப்பாருங்கள். முடிவற்ற சம்ஸ்காரத்தின் கிடங்காக வலம்வந்து கொண்டிருக்கிறோம். நாம் ஈசனாக மாறுவது எப்பொழுது ? சம்ஸ்காரத்தை விட்டொழித்தால் அடுத்த நிமிடம் நீங்களும் ஈசன் தான். முன்பு கூறிய கதையை போல ஈசனாக மாற எண்ணுங்கள். உங்கள் சம்ஸ்காரம் உங்களை விரைவில் பரமாத்ம நிலைக்கு உயரச்செய்யும்.


என்னிடதில் ஜோதிடம் கேட்க வந்தவர்களும் , ஆன்மீக பயிற்சி பெற வந்தவர்களும் ஜாதகத்துடன் வந்து பல ஆசைகளை முன் வைப்பதுண்டு. மூன்று ஆண்டுகளில் முற்பதுகோடி சம்பாதிக்க முடியுமா? சிறந்த தொழிலதிபராக முடியுமா? நான் ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய முடியுமா? என பல ஆசைகள். ஆனால் யாரும் நான் ஞானம் அடைவேனா? என் உள்நிலையை உணர்ந்து பரமானந்தம் அடைவேனா? என கேட்டதில்லை. உடல் இச்சை, பொருளாதாரம் மட்டுமே இவர்களின் ஆசையாக இருக்கிறது. புலன்கள் கடந்து ஆசைப்பட அவர்கள் தயாராக இல்லை.


ஒருவர் எவ்வாறு ஆசைப்படுவார் என அவரின் பிறப்பு ஜாதகம் காட்டும். என்னிடத்தில் ஜோதிடஆலோசனை கேட்டு வருபவர்கள் ஆசையை கூறியவுடன், அதை அவர்களின் ஜாதகத்துடன் ஒப்பிட்டுப்பார்ப்பேன். ஆசைகள் பல விதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என கூறுவார்கள். உண்மையில் ஜாதகங்கள் பல விதமாக இருக்க அதில் ஆசைகளும் பல விதங்களாக இருப்பதை உணர்ந்தேன்.


ஆசைப்படுவது தவறா? எவ்வாறு ஆசைப்படுவது என பல விஷயங்களை ஆராய்ந்தோம். எப்படி ஆசைப்பட வேண்டும் என்பதும் ஓர் ஆசைதானே, என சிலர் கேட்பதுண்டு. ஆசையை துறக்க வேண்டும் என புத்தர் கூறினாலும் அதை ஆசையாக மனதில் கொள்வது தவறா? எனும் எண்ணம் பலருக்கு உண்டு. இதற்கு திருமூலர் ஓர் சிறப்பான பதில் தனது திருமந்திரம் மூலம் அளிக்கிறார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

ஈசன்மேல் கொண்ட ஆசையையும் துறந்தால் ஆனந்தம் அடையலாம் என அவர் கூறுவது மனமற்று இருக்கும் மார்க்கத்தை உணர்த்தவே ஆகும். புலன் கடந்த ஆசை ஆனந்தத்தையும் , புலனுக்கு உட்பட்ட ஆசை துன்பத்தையும் அளிக்கும். ஆசைப் படுவதை ஆராய்ந்து ஆசைப்படுங்கள். புத்தரும் திருமூலர் வழியில் நானும் உங்களுக்கு கூற ஆசைப்படுவது,

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
புலனுடன் கூடிய ஆசை அறுமின்கள்

ஏப்ரல் 2007 சித்திரை

Wednesday, December 10, 2008

தர்மம் என்ன விலை ?

தர்மம் என்ன விலை

- அழித்து மகிழாமல் அளித்து மகிழ்.



நமது முன்னோர்கள் வாழ்வியல் கருத்துக்களை சிறப்பாகத் தொகுத்தார்கள். வாழ்க்கையின் பாதை எவ்வாறு அமையவேண்டும், அந்த பாதைக்கு உறுதுணையாக இருந்த கோட்பாடுகள் என்ன என்பதை உணர்ந்து வாழ்ந்தார்கள். இந்த வாழ்வியல் கோட்பாடுகளை எளிமையான முறையில் தர்ம, அர்த்த, காம, மோட்ச என வரிசைப் படுத்தினார்கள்.

முதலில் வரும் தர்மம் என்பது இங்கு பிறருக்கு கொடுக்கும் கொடைத் தன்மையை குறிப்பதில்லை. ஆனால் முழுமையாக குறிக்கவில்லை என்றும் கூற முடியாது. தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையிலிருந்து வேறுபடாமல் கடைசி மூச்சு வரை அதற்காக போராடுவதை குறிக்கும்.அதனால் இதை தமிழில் அறம் எனக் கூறுகிறோம். இந்த அறத்தோடு இணைந்ததுதான் தானமும், தர்மமும். இந்த இரண்டு வார்த்தைகளும், ஒரே விஷயத்தை குறிப்பதில்லை.

தானம் என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு கொடுப்பதை குறிக்கும். தர்மம் என்பது ஓர் குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து கொடுப்பதை குறிக்கும். இதை எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மஹாபாரத புராணத்தில் கர்ணன் செய்தது தானம், யுதிஷ்ட்ரன் செய்தது தர்மம்.

ஒருவர் தானம் செய்யும் பொழுது ஆணவம் தலைதூக்கக்கூடாது.இதை எளிய மஹாபாரத கதை மூலம் உணரலாம். பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கு கர்ணனை விட, தான் அதிகமான தர்ம காரியங்களில் ஈடுபடுவதாக அகந்தை தோன்றியது. இதை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா தர்மனின் அகந்தையை வேர் அறுக்க எண்ணினார்.

தனது மாய சக்தியால் தங்கம் மற்றும் வெள்ளியைக் கொண்டு இரண்டு மலைகளை உருவாக்கினார் பஞ்ச பண்டவர்களை அழைத்து ஒரு நாளுக்குள் தானம் அனைத்தையும் தானம் செய்யுமாறு கூறினார். அகந்தையில் மிதந்த ஐவரும் உலோகத்தை அறுக்கும் கருவிகளைக் கொண்டு உலோகக் கட்டிகளாக மலையை வெட்டி நாட்டு மக்களை வரிசையாக நிற்க வைத்து தானம் செய்தார்கள். ஒரு நாள் முடியும் தருவாயில் இரண்டு மலைகளின் அளவும் முற்றிலும் குறையவில்லை. பஞ்ச பண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் ஆணையை நிறைவேற்ற முடியாத மனக்குமுறலுக்கு ஆளானார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் தனது மாய சக்தியால் தங்க மற்றும் வெள்ளி மலைகளை உருவாக்கி கர்ணனை அழைத்து ஒரு நளைக்குள் தானம் செய்யும்படி கூறினார். கர்ணன் ஒரு அந்தணரை அழைத்து இரு மலைகளையும் அவருக்கு உடனடியாக தானமாக கொடுத்தார். ஒரு நிமிடத்தில் அவனுடைய தர்ம காரியம் முடிவடைந்தது. இதைக்கண்ட பஞ்சபாண்டவரின் ஆணவமும் முடிவுக்கு வந்தது. எனவே அகந்தையுடன் தானம் செய்யும் பொழுது அது சிறப்படையாது என்பதை பஞ்சபாண்டவரின் செயல் மூலம் அறியலாம்.

இந்த வாழ்வியல் பாதையில் தான தர்மத்தை செய்ய முற்படாமல் மோட்ச பாதைக்கு முயற்சி செய்கிறார்கள். முதல்படியான தர்மத்தை கடைபிடிக்காத இவர்கள்சிகரமான மோட்சத்தை எதிர்பார்ப்பது வேடிக்கையான விஷயம். பல யோகப் பயிற்சிகள், பல நூல்களின் மூலம் ஏற்பட்ட அறிவு இவற்றைக்காட்டிலும் எளிமையான மோட்ச பாதையை அடையும் நுட்பம் தர்மத்தை செய்வதால் கிடைக்கும். இதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கர்மயோகத்தை கீதையில் கூறும் பொழுது எடுத்துரைக்கிறார்.

64 நாயன்மார்களும் பிறருக்கு சிவத்தொண்டு சிவலோகம் அடைந்தார்கள். இவர்களில் அனேகம் பேர் சிவனடியார்க்கு தர்மம் செய்தே ஜோதியில் ஐக்கியமானார்கள். என்பதை மறந்து விடக்கூடாது. ஆக சைவ வழியிலும், வைணவ வழியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்மை இந்த தர்மம். தற்சமயம் சமூகத்தில் மனித நேயத்துடன் தர்மம் செய்பவர்கள் குறைவு. சுய லாப நோக்கத்துக்கோ, தற்பெருமைக்காகவோ செய்யப்படுவதே அதிகம். ஒருவர் தானம் செய்ய அவர் மனதில் உள்ள சமஸ்காரங்கள் விருத்தி அடைவதாக யோக சாஸ்திரம் கூறுகிறது.

பதஞ்சலி மாமுனிவர் தனது யோக சூத்திரத்தில் 'ஆஷ்தேயா' என்று பொருள் சேர்க்காத தன்மையை வலியுறுத்துகிறார். பொருள் சேர்க்கமை என்றால் பொருள் மேல் பற்றில்லாமல் துறவு நிலையை குறிப்பதில்லை. தன்னிடம் உள்ள பொருளை பிறருக்கு கொடுத்து பிறரிடத்தில் இருக்கும் பொருளை எதிர்பார்க்காமல் வாழும் முறையை குறிக்கும். நவீன யுகத்தில் பலவிதமான பிரச்சனைகளும், மன விவகாரங்களும் ஏற்படுவதற்கு தர்மம் செய்யாமல் இருப்பதே காரணம்.

தானம் கொடுக்கும் பொழுது எதை கொடுக்க வேண்டும், எதை கொடுக்கக்கூடாது என மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது. தர்மத்தை கொடுப்பவன் அதிகாரி என அழைக்கப்படுகிறான். தன்னுடைய தொழிலைச் சார்ந்து அவன் தர்மம் செய்யக்கூடாது என்பது மனுதர்ம சாஸ்திரத்தின் அடித்தளம்.
உதாரணமாக ஆசிரியர் தொழிலில் இருபவர் இலவசமாக கல்வி போதனை செய்வது தர்மத்திற்க்கு எதிரான செயல்.

தர்மசாஸ்திரம் பசு தானத்தை அதிகமாக செய்யத் தூண்டுகிறது. ஓர் பசுவை தானம் செய்வதால் ஓர் குடும்பம் மட்டுமின்றி, ஓர் கிராமமே உயர்வடைகிறது. மேலும் இது போல பசு தானங்கள் செய்வதால் ஒரு நாடே வளமடைகிறது. பசுவை கொடுக்க அதிகமான பொருள் செலவு ஏற்படும் என எண்ணுபவர்கள், அதைவிட எளிய முறையில் தானம் செய்து பசு தானத்திற்கு சமமான பலனை அடையக்கூடிய முறையையும் தர்ம சாஸ்திரம் வரையறுக்கிறது.

தன் பொருளின் மேல் இருக்கும் பற்றை மக்கள் விடுவதாக இல்லை. ஒருமுறை இழந்தால் மீண்டும் அந்த பொருள் கிடைக்காது என்ற எண்ணமே தர்மத்தை தடை செய்கிறது. தான் அந்தப் பொருளை உண்டாக்கினோம் என்ற அஹங்காரம், இறைநிலை மேல் இருக்கும் நம்பிக்கை இன்மையும் தர்மம் செய்யாமல் தடுக்கிறது.

சாதாரண மனிதன் பொருள் நிறைந்த பெட்டியில் மீண்டும் மற்றொரு பொருளை வைக்க வேண்டும் என்றால் முன்பு இருந்த பொருளை வெளியில் எடுத்த பின்பு வைக்க முயல்கிறான். ஆனால் அறியாமையில் இருக்கும் மனிதன், தர்மம் மூலம் தன்னிடம் உள்ள பொருளை எடுத்து அதை விட உயர்வான பொருளை வைக்க இறைவன் முயச்சிக்கும் பொழுதுஅதை வெறுக்கிறான். தர்மம் செய்வதால் ஏற்படும் இத்தகைய பலனை உணர்ந்தவர்கள் ஈதல் இசைபட வாழ்தல் எனப் படினார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் அவர் இசைபட வாழ்கிறாரா இல்லையா என அவன் ஈகை குணத்தை முடிவு செய்யும் கிரகத்தைக் கொண்டு முடிவு செய்யலாம். தான தர்மத்தைக் குறிக்கும் பாவம் 9ஆம் பாவம். 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதியின் தன்மையை பொறுத்து தானம் செய்யும் நோக்கு வேறுபடுகிறது. 9ஆம் பாவ உபநட்சத்திரம் 5,12 பாவங்களுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு தர்மம் செய்யும் பாக்கியம் உண்டு. 9ஆம் பாவம் குருவையும், ஆன்மீக முன்னேற்றத்தையும் குறிக்கும். குருவை தேடுபவர்கள் தான தர்மங்கள் செய்ய முற்படும் பொழுது அவர்களுக்கு உயர்வும் குருவின் கிருபையும் கிடைக்கும்.

* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி செவ்வாய் மற்றும் 4ஆம் பவ தொடர்பு இருந்தால் நிலம் தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி சுக்கிரன் மற்றும் 2ஆம் பாவ தொடர்பு பெற்று இருந்தால் பணமாக தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி சுக்கிரன்/ சந்திரன் மற்றும் 2, 4 பாவ தொடர்பு பெற்றால் அன்ன தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி புதன் மற்றும் 3 ஆம் பாவ தொடர்பு இருந்தால் புத்தகம் / நூல்கள் தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி குரு மற்றும் ரிஷப ராசியுடன் தொடர்பு பெற்றால் பசுதானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி செவ்வாய் லக்னம் தொடர்பு பெற்று மற்றும் நீர் ராசியுடன் இணைந்திருந்தால் இரத்த தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி 2, 12 ஆம் பாவம் மற்றும் சூரிய, சந்திர தொடர்பு இருந்தால் கண் தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி லக்னாதி பதியுடன் தொடர்பு பெற்று12 ஆம் பாவம் மற்றும் மிதுனம், துலாம், கும்பம், கன்னி ராசியில் 0-15 டிகிரியும் தனுசு ராசியில் 15-30 டிகிரியும் இணைவு பெற்றால் உடல் தானம் செய்வார்கள்.

இது போல பல தானங்கள் உண்டு. ஒருவரின் ஜாதகத்தை பொறுத்து அவரின் தானம் செய்யக்கூடிய தன்மை மாறுபடுகிறது. தானம் செய்வது என்றால் தன்னிடம் உள்ள விலை மதிக்க முடியாத பொருளையோ, உடல் உறுப்பையோ கொடுப்பது அல்ல. தன்னால் முடிந்த எந்த ஒரு விஷயத்தையும் குளிரும் படி செய்தலெ தானமாகும்.

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

எனத் திருமூலர் கூறுவது போல ஒரு கைப்பிடி உணவோ பசு மாட்டுக்கு இலையோ பிறருக்கு இனிய சொல்மூலமோ தானத்தை செய்ய முடியும்.


மஹாபரதத்தில் ஒரு அற்புதமான காட்சி:

அர்ஜுனனின் அம்பு மார்பினைத் துளைத்த நிலையில் தேர்ச்சக்கரத்தின் அருகில் கர்ணன் இறப்பை எதிர்நோக்கி வீழ்ந்து கிடந்தான். அவன் புண்ணியம் அவனின் உடலில் இருக்கும் வரை அவனின் உயிர் பிரியாது. என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உணர்கிறார். ஓர் அந்தணர் வேடத்தில் சென்று தானமாக கர்ணனின் அனைத்து புண்ணியத்தையும் கேட்கிறார்.

பரமாத்மா கர்ணன் அனைத்து புண்ணியங்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்யும் பொழுது "தானத்தால் ஏற்பட்ட அனைத்து புண்ணியங்களையும் உனக்கு அர்ப்பணிக்கிறேன். இதனால் ஏற்படும் புண்ணியத்தையும் உனக்கே அர்ப்பணிக்கிறேன்" எனக் கூறுகிறார். இத்தகைய உயர்ந்த நெறி நமது வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை என்றாலும் நம்மால் இயன்றதை பிறருக்கு செய்வோம். மற்ற வாழ்வியல் கோட்பாடுகளான பொருள், மற்றும் வீடு பேறு அடைவோம்.



2006 June.

Monday, November 3, 2008

சிசரியன் பிறப்பும் - ஜோதிடமும்

கேள்வி : இன்றைய விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்த உலகில் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் அதிகமாகி விட்டார்கள். சில ஜோதிடர்கள் கூட அறுவை சிகிச்சைக்கு நல்ல கிரகநிலை பார்த்து கொடுக்கிறார்கள். அனைவரையும் அறுவை சிகிச்சை மூலம் நல்ல கிரகநிலையில் பிறக்கச் செய்வதால் இந்த உலகில் அனைத்து பிறப்புகளையும் மேம்பட்டவர்கள் ஆக்கலாம் அல்லவா?

உங்கள் பார்வையில் அறுவை சிகிச்சை மட்டும் தான் தெரிகிறது. செயற்கை கருதரித்தல் கூட நல்ல நேரம் பார்த்தே செய்யப்படுகிறது. அதற்கு பிறகு அறுவை சிகிச்சையும் ஜோதிடர் குறித்த நேரத்தில் செய்வதால் அக்குழந்தை சிறந்த வாழ்க்கை வாழும் என நம்புகிறார்கள்.

எனக்கு தெரிந்த ஓர் நபர் தனக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்பதை தெரிந்து கொண்டார். குழந்தை மகம் நட்சத்திரத்தில் பிறப்பு கொடுக்க வேண்டும் என வெளிநாட்டிலிருந்து பல ஆயிரம் ரூபாய் செலவளித்து மருந்துகள் இறக்குமதி செய்து தாய்க்கு செலுத்தினார்கள். அந்த மருந்துகள் எதற்கு தெரியுமா?

மருத்துவர்கள் எதிர்பார்த்த பிரசவ நாளுக்கு 2 நாள் கழித்தே மகம் நட்சத்திரம் வருகிறது. அதுவரை தாய் வலி உணராத வண்ணமும், சேய்க்கு பாதிப்பு வழங்காத வண்ணமும் இருக்கத்தான் விலை உயர்ந்த மாத்திரை. மக நட்சத்திரத்தில் என்ன அப்படி மோகம் என கேட்டேன். அதற்கு பெண் மக நட்சத்திரத்தில் பிறந்தால் எதிர்காலத்தில் முதலமைச்சராக வர வாய்ப்பு உண்டு என ஓர் அறிவுப்பூர்வமான தகவல்களை கொடுத்தார்.

அவ்வாறு அந்த குழந்தை முதலமைச்சர் ஆனால் தவறல்ல, அதற்கு முன் நடிகை ஆகுமே? தாயும் நடிகை ஆக வேண்டுமே? தந்தையான உனது பெயர் வெளிவராமல் இருட்டடிக்கப்படுமே? உன் சந்ததி தழைக்காதவண்ணம் அந்த குழந்தை “செல்வி” யாக மட்டுமே இருக்குமே? என நான் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க அவர் கலங்கிதான் போனார். அவரை எனது கேள்வியால் துன்புறுத்துவது எனது நோக்கம் அல்ல ஆனால் உண்மை கூட சில நேரம் கசக்கும்.

சரி. இவ்வாறு நல்ல கிரகநிலை பார்த்து குழந்தையை பிறக்க செய்வதால் அதன் தலைவிதியை நாம் முடிவு செய்கிறோமா - சரியாக வருமா என்றால் அதற்கு ஓர் புராணத்தில் உள்ள உதாரணம் பார்ப்போம். நவீன காலத்தில் மட்டும் தான் இத்தகைய செயல் இருப்பதாக நினைக்க வேண்டாம். அந்த காலத்திலும் இத்தகைய செயல் உண்டு. பெரிய புராணத்தில் செங்கண்ண நாயனார் வரலாறு இதற்கு சரியான உதாரணம்.

ஓர் மஹாராணிக்கு பிரசவ நேரம் நெருங்குகிறது, அரண்மனை ஜோதிடர்கள் பிரசவம் ஆகும் நாளின் கிரக நிலையை கணித்தார்கள். பிறகு இந்த குறிப்பிட்ட நாளிகையில் குழந்தை பிறந்தால் அவன் சன்யாச யோகம் அடைவான். இதுவே அடுத்த நாளிகையில் பிறந்தால் சக்கரவர்த்தி ஆவான் என பலன் கூறினார்கள். உடனே ராணி தன்னை ஒரு நாழிகைக்கு ( 24நிமிடம்) தலைகீழாக கட்டி தொங்க விட சொன்னார். சரியாக ஒரு நாழிகை முடிந்ததும் தன்னை கீழே இறக்க செய்து குழந்தையை பிரசவித்தாள். அதிக நேரம் அக்குழந்தை கருவறையில் இருந்ததால் அக்குழந்தைக்கு கண் மற்றும் உடல் முழுவதும் சிவப்பு நிறம் கொண்டதாக இருந்தது. ராணியும் உடல் நிலை மோசமடைந்து இறந்தாள். இறந்து போவதற்கு முன் தனது குழந்தை சிவப்பு நிற கண்கள் கொண்டதாக இருந்ததால் அதற்கு செங்கண்ணன் என பெயர் வைத்தாள்.


ஜோதிடர்களின் கருத்துகேற்ப தனது உயிரை கொடுத்து தனது மகனை பெற்றடுத்தாலும் , உண்மையில் மன்னன் செங்கண்ணன் சக்ரவர்த்தி என வரலாற்றில் இடம் பெறவில்லை. அதிக சிவன் கோவிலை கட்டிய மன்னன் என ஆன்மீக புகழ் அடைந்து நாயன்மார் வரிசையில் அனைத்து சிவன்கோவிலிலும் நிற்கிறார். ஜோதிடர் சொன்னது பலித்ததா? அல்லது ஊர் ஜோதிடர்களை பழித்ததா? நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இது செங்கண்ன நாயனாருக்கு மட்டுமல்ல கெளதம புத்தருக்கு கூட இதே தான் நடந்தது. உனது மகன் துறவி ஆவான் என சொன்னதும் அவனை சகல சுக போகத்தில் வெளி உலகம் தெரியாமல் வளர்த்தினார்கள். கடைசியில் என்ன நடந்தது துன்பத்தை ஒரு கணம் பார்த்தான் துறவியானான் சித்தார்த்தன். புத்தருக்கு மட்டுமல்ல யேசுநாதர் என பல உலக ஞானிகள் பிறக்கும் பொழுதெல்லாம் ஜோதிடர்கள் விளையாடி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

உண்மையில் பிறப்பும் இறப்பும் நிர்ணயம் செய்யபட்ட ஒன்று. இதை எக்காரணம் கொண்டும் யாராலும் மாற்ற முடியாது. ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் தாங்கள் அறுவை சிகிச்சை செய்தோம் என்பது அறிவில்லாதவர்களின் வாதம். உண்மையில் இயற்கையாக அக்குழந்தை பிறக்கும் தருணத்தையே ஜோதிடர் கொடுக்க முடியும். இதை கணிக்கும் பொழுது ஜோதிடருக்கு அந்த நேரம் சரியானதாக தெரியும். உண்மையில் அந்த குழந்தை எந்த நேரத்தில் பிறக்க வேண்டுமோ அதில் தான் பிறக்கிறது. ஆணவம் கொண்ட இவர்கள் தான் , நான் குறித்த நேரத்தில் பிறக்கிறது என்கிறார்கள். இவர்கள் நேரம் குறித்தாலும் குறிக்காவிட்டாலும் அதே நேரத்தில் தான் பிரசவம் நடக்கும். இது இவர்களின் கற்பிதமே.

எனது ஆராய்ச்சிக்காக ஓர் பிரசவ மருத்துவமனையை அனுகி இதை ஆய்வு செய்த பிறகே இந்த கருத்துக்களை கூறுகிறேன். ஓர் குழந்தை பிறக்கும் நேரத்தை ஜோதிடர் இடத்தில் கணிக்க சொன்னேன். அதை மருத்துவருக்கும் அதன் பெற்றோருக்கும் கூறவில்லை. மருத்துவர் தாயிக்கு அறுவை சிகிச்சை செய்த பின் பார்க்கும் பொழுது இரண்டு நேரமும் சரியாக வந்தது.


சில நேரம் ஜோதிடர் நேரம் குறித்தாலும், தாயின் உடல்நிலை மாற்றத்தாலும் - மருத்துவரின் செயல்பாட்டாலும் அறுவை சிகிச்சை நேரம் மாற்றி அமைத்த சம்பவம் உண்டு. அதற்கு காரணம் நேரம் நாம் குறித்தாலும் அந்த குழந்தை பிறக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்பதே இதற்கு காரணம். ஆக "நாம் செய்கிறோம்" என்பதே முட்டாள்தனத்தின் உச்சம்.

அப்படியானால் சிறந்த குழந்தைகளை பெற்று எடுக்க முடியாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது. பிறப்பு நிகழ்தல் என்பது ஓர் குழதைக்கு அதன் வாழ்க்கையில் முதல் செயலாக இருக்கலாமே தவிர, அக்குழந்தையின் உருவாக்கத்திற்கு அது முதல் செயல் அல்ல.


பெற்றோர்கள் நல்ல மன நிலையில் இருப்பது, சாத்வீக உணவுகளை உண்பது மற்றும் ஆன்மீக சிந்தனை ஆகியவற்றுடன் வாழ்ந்தால் சிறந்த குழந்தையை பெற்று எடுக்க முடியும். மேலும் தாய் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது நல்ல சூழ்நிலையில் வாழ வேண்டியது அவசியம். பக்த பிரஹல்லாதன் கதை இதற்கு சிறந்த உதாரணம். தினசரியில் வரும் கொலை, கொள்ளை மற்றும் தவறான உறவு முறை பற்றிய செய்திகளை படித்தும், மோசமான மெகா சீரியல்களை பார்த்தும் வளரும் குழந்தை ஜோதிடர் குறித்த நேரத்தில் பிறந்தவுடன் மஹாத்மாவாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா?

கோலத்தை முதல் புள்ளியிலிருந்து துவங்குங்கள், கடைசி புள்ளியிலிருந்து அல்ல..

Thursday, October 16, 2008

குருவை தேடி

-உனக்குள் இருக்கும் ஒருவன் ....வெளியே குருவாக..

உலக பிணிகளில் கொடுமையானது அறியாமை எனும் பிணி. தற்பொழுது இதற்கு வைத்தியமும் இல்லை, வைத்தியரும் இல்லை. அறியாமை என்பது அஹங்காரத்தின் மறு உருவம். நமது அருகில் இருக்கும் இறை சக்தியை நாம் அறியாமல் இருப்பது அறியாமை. இதை நமக்கு உணர்த்த குருவடிவில் இருப்பதும் இந்த சக்தியே ஆகும்.

அனைவரும் குரு என்றால் இருளை நீக்குபவர் என பொருள் கூறுவார்கள். குரு இருளை நீக்குபவர்மட்டுமல்ல. குருவின் செயல் வார்த்தைக்கு உற்பட்டது அல்ல. அறியாமையை போக்கும் குருவை தேடி அலைந்த மக்கள் வேதகாலத்தில் அதிகம். தற்காலத்தில் பணத்தை தேடி அலையும் மக்களே அதிகம். பணத்தை தேடினால் பணம் கிடைக்கலாம். ஆனால் குருவை தேடினால் அனைத்தும் கிடைக்கும் எனும் போது செல்வமும் இதில் அடக்கம் என உணர வேண்டும். குரு என்பவர் எங்குள்ளார், எவ்வாறு நமக்கு ஒளி தருவார் என பார்க்க வேண்டும். இந்த செயல் ,கண்கள் இல்லாத ஒருவர் சிறந்த வண்ணத் துணியை தேர்ந்தடுப்பதற்கு சமம்.

உதாரணமாக தற்பொழுது உள்ள சமூக நிலையில் குரு என்பவர் பல கோடி மதிப்புள்ள ஆசிரமம் வைத்திருக்க வேண்டும், பல லட்சம் மதிப்புள்ள வாகனத்தில் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். இவர்களின் குருவை போஸ்டரிலும் , தொலைக்காட்சி பெட்டியிலுமே தேடி அலைகிறார்கள். இதன் விளைவு , 6 மாதத்திற்கு ஒரு ஆன்மீகவாதியை இவர்கள் குருவாக வைத்திருக்கிறார்கள்.

இதற்கும் ஒருவர் சினிமா நடிகரின் ரசிகராக இருப்பதற்கு
பெரிய வித்தியாசம் இல்லை. இது தான் அறியாமையின் வெளிப்பாடு. குரு இந்த ரூபத்தில் தான் இருப்பார் என்பதை இவர்கள் முடிவு செய்வதை விட்டுவிட்டாலே அறியாமை இவர்களை விட்டுவிடும். குரு உங்கள் வீட்டின் அருகில் பிச்சைகாரராக இருக்கலாம். சில சமயம் உங்கள் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய வரலாம். நான் மிகைபடுத்தி சொல்வதாக தெரியலாம்.

ஜென் கதை ஒன்று இதை விளக்கும். ஒருவன் குருவை கொண்டு ஞானமடைய எண்னான். அவனது ஊரில் ஓர் ஜென் குரு இருப்பதாவும் அவரிடத்தில் சென்று கேட்டால் தன் குருவின் இடத்தை கூறுவார் என்று னைத்து அவரிடத்தில் சென்றான். ஜென்குரு அவரின் ஆசிரமத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.


அவரிடத்தில் எனது குரு எங்கு இருக்கிறார் அவரை நான் எப்படி அறிந்து கொள்வது என கேட்டான். புதிய ரோஜாப் பூவின் மணம் கமழ ஒளிபொருந்திய முகத்துடன் யார் இருக்கிறார்களோ அவர் தான் உனக்கு ஞானம் அளிப்பவர் என்றார் ஜென் குரு.


பல வருடங்களாக தனது குருவை தேடி அலைந்தான். இருண்ட காடுகள் மலைகள் அனைத்தும் கடந்தான் எங்குதேடியும் குருவை காணவில்லை. ஓய்வு எடுக்க ஓர் மரத்தடியில் அமர்ந்தவனுக்கு திடீரென சுகந்த வாசனை வருவது அவனது நாசியில் உணர்ந்தான். அந்த மரத்தின் பின்பகுதியில் கண்களை கூசும் ஒளி இருப்பதை கண்டான். அந்த உருவத்தை நோக்கி சென்று வணங்கினான். புதிய ரோஜா பூவின் மணத்துடன் ஒளிபொருந்திய லையில் அங்கே உற்கார்ந்திருந்தவர் , அவனுக்கு முன்பு வழிகாட்டிய ஜென்குரு. கண்களில் கண்ணீர் பெருக அவரை நோக்கி கேட்டான், ஏன் ஐயா இத்தனை காலம் என்னை காக்க வைத்தீர்கள்?".

ஜென்குரு கூறினார், "உன் அறியாமை உன்னிடத்தில் இருக்கும் வரை இந்த ஒளியும் வாசனையும் நீ அறியவில்லை. இது எனக்கு எப்பொழுதும் இருந்தது. உன் தேடலின் பயனாக உன் அறியாமையை களைந்தாய் இதோ நான் உனக்காக காத்திருக்கிறேன்".

இது போலத்தான் நாம் குருவை மறந்து அவர் அருகில் இருப்பதை அறியமுடியாமல் அவரை தேடி அலைகிறோம். சினிமாவுக்கு போகும், உங்களுக்கு சமமாக கிண்டல் செய்யும் அல்லது தனது பைக்கில் ஜாலியாக சவாரி செல்லும் குருவை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். அவர் அமைதியாக புன்னகை புரியவேண்டும், காற்றிலிருந்து தங்க சங்கிலி எடுக்க வேண்டும் அல்லது மாலையை வைத்து ஜபம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். இது போல நீங்களே முடிவு செய்வதால் தான் பல தவறான வர்கள் ஆன்மீகத்தில் உதயமாகிறார்கள்.

என்னை சந்திக்க வட இந்தியாவிலிருந்து வந்த ஒருவர். சுவாமிஜீ நீங்கள் கம்யூட்டர் எல்லாம் பயன்படுத்துவீர்களா, ஆச்சரியமாக இருக்கிறது என்றார். எது என் தவறா? அவர் என்னை தான் எதிர்பார்த்ததை போல இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அவருடன் பேசிய சில மணி நேரத்தில் விடைபெறும் போது அவர் கூறிய வாசகம் " இது போல மனதுக்கு மிக அருகில் பேசும் ஒரு நபரை நான் பார்த்ததில்லை".

குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவுசெய்கிறோம். குருவை தேடுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது. உங்கள் தாய் அல்லது மனைவி கூட உங்கள் குருவாக இருக்கலாம். அறியாமை போல அஹங்காரமும் குருவை மறைக்கும் ஒரு உணர்வாகும்.

ஹரிவரதன் என்பவரின் கதை இந்த கருத்தை உணரவைக்கும். ஹரிவரதன் என்பவர் அதிக ஆன்மீக தேடல் கொண்ட பக்தன். குருவை தேடி ஞானம் அடைய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு அதிகமாக இருந்தது. பல ஆண்டுகளாக குருவை தேடி கிடைக்காமல் களைத்து விரக்தியான நிலைக்கு சென்றான். குடும்பம் இவனை நிர்பந்தப்படுத்த திருமண வாழ்க்கைக்கு தயாரானான்.

நல்ல மனைவியுடன் குடும்பவாழ்க்கை துவங்கிய ஹரிவரதனுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சில வருடங்கள் கழித்து மீண்டும் இவன் ஆன்மீக தேடல் அதிகமானது. அந்த வேட்கை கட்டுப்படுத்த முடியாமல், ஒரு நாள் இரவு மனைவியையும் குழந்தையையும் விட்டு பிரிந்தான். உணவையும் உடல் சுகத்தையும் மறந்து பல வருடங்கள் குருவை தேடி அலைந்தான். தன் நிலை மறந்து உடல் இளைத்து உருமாறி இவனின் வைராக்கிய தேடல் அதிகமாகியது.

ஒரு நாள் ஓர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கு சிறு ஆன்மீக கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஓர் ஒளிபொருந்திய இளைஞன் புன்சிரிப்புடன் ஆன்மீக கருத்துக்களை விவரித்துக்கொண்டிருந்தான். ஹரிவரதனும் களைப்பின் மிகுதியால் அந்த கூட்டத்தின் ஓர் மூலையில் அமர்ந்து, ஆன்மீக பேச்சை கேட்க ஆரம்பித்தார். ஆன்மீக கூட்டம் முடிந்ததும் இளைஞனுக்கு அருகில் சென்று பல ஆன்மீக கருத்துக்களை கேட்டு விளக்கம் பெற்றார். புதிய விடியல் அவருக்குள் பிறந்தது.

இளைஞனின் காலில் விழுந்து வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள மன்றாடினார். அந்த இளைஞன் புன்சிரிப்புடன் அவரை நோக்கி கூறினான், குருவை தேடி இவ்வளவு காலம் அலைந்தீர்கள் இதற்காக அனைத்தையும் துறந்தீர்கள். நான் வேறுயாருமல்ல உங்களுக்கு பிறந்த மகன் தான். குரு என்பவரை மகனாக பெரும் பாக்கியத்தை உங்களுக்கு கடவுள் அளித்துள்ளார். உங்களை ஞானமடைய செய்வேன் என்றான். ஹரிவரதனின் கதை உண்மையில் கதையல்ல உண்மை சம்பவம் கூட. இதே போன்று ரமணர் தனது தாயாருக்கு பிறவா வரம் அளித்த நிகழ்ச்சி இதை உறுதிப்படுத்துகிறது.

உங்கள் ஜாதகம் , குருவின் இருப்பிடத்தையும் அவர் எப்பொழுது உங்களை அடைவார் எனவும் உணர்த்தும். 9ஆம் வீடு குருவை குறிக்கும். அதனால் தான் ராசி லையில் 9ஆம் வீடு குருவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 9ஆம் வீடு யாருக்கு 1,5 ஆம் வீடுகளுடன் தொடர்பு கொள்கிறதோ அவர்கள்தான் குருவை காணமுடியும். தொடர்பற்றவர்கள் சில பிறவிகள் காத்திருக்க வேண்டிவரும். 1,5,9 ஆம் வீடுகளின் தசா புக்திகள் நடக்கும் சமயம் உங்கள் அருகில் பரமாத்ம சொருபமான குரு காணப்படுவார். 9 ஆம் வீட்டின் உபநட்சத்திரம் குருவின் இருப்பிடத்தை குறிக்கும். 2 ஆம்வீடு குடும்ப நபரையும், 9 ஆம் வீடு ஆசிரமம், 12 ஆம் வீடு மிக தொலைவாகவும் குருவின் இருப்பிடத்தை குறிக்கும். இது போல பிற வீடுகளும் அதற்கே உரிய காரகத்துவத்தை கொண்டு சொல்லலாம்.

9 ஆம் பாவம் 8 ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் குரு என நினைத்து சிலரை தவறான வழியில் தேர்ந்தெடுக்க வேண்டிவரும். இங்கு திருமூலரின் திருமந்திரம் நினைவுக்கு வருகிறது.

குருட்டினை நீக்குங் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குடுடுங் குழிவிழு மாறே.

குருவை நீங்கள் முடிவுசெய்தால் இது போல தவறானவர்களின் கையில் சிக்கி தவிப்பீர்கள். உங்கள் குருவை நீங்கள் முடிவு செய்யாதீர்கள், அவர் உங்களை முடிவுசெய்யட்டும். குருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள், அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும்.


குரு சிந்தனை மேம்பட : குருகீதை படியுங்கள்

Tuesday, October 7, 2008

கடவுள் பிரபஞ்சத்தை படைத்தாரா?

ஈஸ்வரன் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்றால் அதற்கான பொருட்கள் எங்கு இருந்தது?
எதிலிருந்து இவை அனைத்தையும் படைத்தார் என கேட்பதுண்டு. ஈஷ்வர நிலை என்பது இறைநிலையின் முதல் நிலை. இதை பற்றி விரிவாக பின்பு விளக்குகிறேன்.

ஓர் சிலந்தியை கவனித்தீர்கள் என்றால், தானே தனது வலையை உருவாக்கி அதன் மையத்தில் அமர்ந்துவிடுகிறது.

அது போல தன்னையே உலகாக்கி , அண்ட சராசரமாக்கி அதன் மையத்தில் ஈஸ்வர நிலை இருக்கிறது. சிலந்திக்கு தனது வலையை உருவாக்கும் பொருள் எங்கிருந்து கிடைத்தது? தன்னிலிருந்து எடுத்து தனக்காக உருவாக்கியதை போல, இறையாற்றல் தன்னிலிருந்தே அனைத்தையும் உருவாக்கியது. மீண்டும் ஒரு நாளில் அனைத்தையும் தன்னகத்தே எடுத்து ஒன்றாகி விடும். இதையே படைப்பு மற்றும் பிரலயம் என வழங்கப்படுகிறது.


இதை எப்படி உனக்கு தெரிந்தது? என கேட்கலாம். அந்த பிரம்மாண்டமான சிலந்தியின் ஓர் இழைதானே நானும்? அதற்குள்ளே இருந்து வந்ததால் என் மூலத்தை உணர்ந்தேன். அதனால் தெளிந்தேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள், நீங்கள் - நான் - அது என அனைத்தும் ஒன்று என உணர்வீர்கள்.


இறைவன் பிரபஞ்சத்தில் பூமியை படைத்து அதில் மட்டும் மனிதர்கள் வாழவைத்தான். ஏன் வேறு இடத்தில் உயிரினம் இல்லை.?

இது உங்கள் அறியமையை காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் பிற பகுதியில் உயிரினங்கள் இல்லை என எதை வைத்து முடிவு செய்தீர்கள்? சூரிய மண்டலத்தை விட்டு இன்னும் மனித இனம் தாண்ட வில்லை. சில மத நூல்கள் , கடவுள் மனிதனை அழைத்து அவனுக்கு பூமியை உருவாக்கிருப்பதாக சொன்னார் என்கிறது. அப்பொழுது அதற்கு முன் மனிதன் எங்கே இருந்தான்? அடிப்படை நிலையில் இருப்பதாலும், அறியாமையாலும் இந்த கருத்து வெளிபட்டுள்ளது.

பஞ்சபூதங்கள் உயிர் உருவாக்கதிற்கு காரணம் எனும் பொழுது, பிரபஞ்சத்தில் எந்த புள்ளியில் ஐபூதங்களும் சந்திக்கிறதோ அங்கு உயிர் தோற்றம் நிகழும். அவர்களும் நம்மை போல் இருக்க வேண்டும் என்பது இல்லை. வேறு மாதிரியும் இருக்கலாம். எவ்வாறு வேறு மாதிரி என்கிறீர்களா? உங்களை போன்று அறியாமையில் இல்லாமல், நல்ல ஞானத்துடன் இருக்கலாம்.


நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்? -கேள்வி கேட்டவர் கோவி.கண்ணன்.


நாம் யார் நாம் எங்கிருந்து வந்தோம் எனும் தேடல் இல்லாத காரணத்தால் இக்கேள்விக்கு பலருக்கு விடை தெரியவில்லை. இதற்கு முன் சொன்ன கேள்வி பதில் இதை தெளிவாக்கும் என்றாலும் வேறு கோணத்தில் இதை விளக்குகிறேன்.

யோக வாஷிஷ்டம் எனும் நூல் இதற்கான தகுந்த விளக்கத்தை தருகிறது.அதில் இருக்கும் ஓர் கதையை எளிய வடிவில் பதிலாக அளிக்க விரும்புகிறேன்.

சிவன் தியானத்தின் உச்சநிலையான சமாதி நிலையில் இருக்கிறார். தனது நிலை கலைந்து வெளியே வரும்பொழுது பரமாத்மா முன் ஓர் தேனீ ரீங்காரம் இடுகிறது. அதை கண்ட பரமாத்ம சொரூபம் தேனீயாக உருவெடுக்கிறது.

தேனீ பல இடங்களுக்கு சென்று தேனை சேகரிக்கிறது. அப்பொழுது அழகிய மலர் ஒன்றை பார்க்கிறது. தேனீ ஓர் மலராக மாற்றம் அடைகிறது. மலர் மணம் கமழ இருக்கும் சூழ்நிலையில் அதை பறித்து கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மலர் அர்ச்சனைக்காக கொண்டு செல்லப்பட்டு கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிக்கப்படுகிறது. மலர் தன்னிலை மீண்டும் உணர்ந்து சிவனாகிறது.

முதல் முதல் பிறவியில் நாம் இறைவனாகவே இருந்தோம். அந்த நிலை பிறப்பாலும் , நான் எனும் இருப்பாலும் மறக்கடிக்கபடுகிறது.

யோக வாஷிஷ்டம் என நான் குறிப்பிட்ட நூல் வஷிஷ்ட முனி ஸ்ரீராமருக்கு கூறிய ஞான கருத்துக்கள்.வஷிஷ்டர் ஸ்ரீராமனிடம் சொல்கிறார் ” நீ பரமாத்மா எனும் நிலை மறந்து இருக்கிறாயே அந்த தூக்கத்திலிருந்து வெளியே வா”. மாபெரும் இறைநிலையின் அவதாரத்திற்கே இந்த கதி எனில் நம் நிலையை எண்ணிபார்க்க வேண்டும்.

ஆணவத்துடன் நானே இறைவன் எனும் தன்மையை உணரும் பொழுது அரக்க குணம் ஏற்படுகிறது. பக்தியுடன் இதை உணரும் பொழுது அங்கே ஞானம் பிறக்கிறது.

நமது தர்மத்தில் இறைவனை தவிர அன்னியமாய் எதுவும் இல்லை. ஹிரண்ய கசிப்பு, கம்சன், ராவணன் என இறைவனுக்கு எதிராக செயல்படுவர்கள் எவரானாலும் அவர்களின் நிலை உணரவைக்கப்பட்டு இறுதியில் இறைவனுடன் இணைந்துவிடுவார்கள். காரணம் அவர்களும் இறைவனின் சொரூபமே.பிற மத கருத்துக்களை போல சாத்தான் என்ற எதிர் இயக்கம் கடவுளுக்கு அன்னியமாய் போர் செய்து கொண்டு இருக்க படைக்கப்படவில்லை.

தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்கியங்கள் உணர்த்தும் செய்தியும் இதுதான்.
நாமும் நம்மை கடந்து சென்றால் நமது சொரூபத்தை உணரலாம் அப்பொழுது நமது முற்பிறவி மட்டும் அல்ல முழுமுதற் பிறவியையும் உணர முடியும்.

Friday, October 3, 2008

விதியை மதியால் வெல்லலாம்

கேள்வி பதில் - பாகம் 3

விதியை மதியால் வெல்லலாம் எனும் முதுமொழி இருக்கும் பொழுது பரிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது என கூறுவது பொருந்துமா?


விதியை மதியால் வெல்லலாம் என்பதே அபத்தமான ஒரு பழமொழி. பரிகாரம் செய்யும் ஜோதிடர் கூட இதை மேற்கோள்காட்டி , மதி என்பது சந்திரனை குறிக்கும் அதனால் சந்திரனை வைத்து கணித்தால் விதியை மாற்றிவிடலாம் என கூறுவதுண்டு.

தன்னம்பிக்கை பயிலறங்கத்திற்கு சென்றால் , அங்கு ஒருவர் உன்னால் முடியாதது எதுவும் இல்லை - நீ நினைத்தால் அதை செய்ய முடியும் என கத்திக்கொண்டிருப்பார். வாழ்க்கையில் செல்வந்தராகவும் வெற்றி பெறவும் பலவழிகளை கற்றுக்கொடுப்பார். ஆனால் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களை காணும் பொழுது தான் நம்மால் முடியுமா ? எனும் நிதர்சனம் விளங்கும். தன்னம்பிக்கை பேச்சாளரின் கருத்து நமக்குள் ஓர் மனமாயையை உண்டு செய்ததை புரிந்துகொள்வோம்.

இதை விட வேடிக்கை அந்த நேரத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் செல்வந்தராகவோ - வெற்றியாளரோ ஆகாமல் மைக்கை பிடித்து ஏன் கத்திக்கொண்டிருக்கிறார் என நாம் சிந்திக்க தவறிவிடுவோம்.

இதை போன்றது தான், உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறேன் என கூறும் ஜோதிடர் ஏன் ஜோதிடராகவே இருக்கிறார் என நீங்கள் சிந்திப்பதில்லை. அவர் ஏன் தனக்கு பரிகாரம் செய்து தனது வாழ்க்கையை மாற்றி இருக்க கூடாது?

தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.

விதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.

உங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக மதங்கள் தங்கள் ஆன்மீக விஷயங்களில் அற்புதத்தை பற்றி கூறுகிறது. உதாரணமாக மார்கண்டேயன் தனது இறப்பை தடுத்தது, சாவித்திரி தனது கணவனை இறப்பிலிருந்து மீட்டது என கூறிகொண்டே போகலாம்.கிருஸ்தவத்திலும் குருடனுக்கு கண் கொடுத்த நிகழ்ச்சி உண்டு இவ்வாறு இருக்க விதியை மாற்ற முடியாது என்பது பொய்யா?

மார்கண்டேயன் தனது இளவயதில் இறக்கவேண்டும் என்பது விதி என யார் உங்களிடம் சொன்னது? மேலும் சிவன் மார்கண்டேயனை காத்ததும் அவன் பூத உடலில் வாழவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? யாரோ கூறும் கதையை முடிவான உண்மை என எண்ணி விடாதீர்கள்.

சாவித்திரி கற்பில் சிறந்தவள் என்பதால் அதை செய்தால் என கொண்டால், சாவித்திரிக்கு பிறகு கணவனை மீட்டவர் யவரும் இல்லை என்பதை வைத்து பார்க்கும் பொழுது சாவித்திரியே கடைசி கற்புகரசி என ஒத்துகொள்ளமுடியும் அல்லவா? இதனால் அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துவது போலக்கிவிடாதா?

தேவமைந்தன் கண்கள் இல்லதவர்கள் எல்லம் வரிசையில் நில்லுங்கள் கண் கொடுக்கிறேன் என தற்கால கடற்கரை கூட்டத்தில் கூறுவது போல கூறாமல் ஒரே ஒருவருக்கு மட்டும் கண் கொடுத்தது ஏன் என சிந்தியுங்கள்.

மார்கண்டேயன் தடுத்தாட்கொள்ளுதல் என்பதும், சாவித்திரி சத்தியவானுடன் மீண்டும் வாழ வேண்டும் என்பதும், கண் இல்லதவர் கிருஸ்து மூலம் கண் பெற வேண்டும் என்பதும் இவர்களின் விதியே.

இறைவன் நமது வாழ்க்கையை நிர்ணையிக்கிறார் எனும் பொழுது, அந்த விதியை மாற்ற முயல்வது இறைவனுக்கு எதிராக நாம் செய்யும் செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவனுக்கு எதிராக போராடியவர்கள் வெற்றது உண்டா என உங்கள் புராணத்தில் தேடுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கோளருபதிகம் பாடினால் கிரகதோஷம் விலகும் என்பது உண்மையா?

கோளருபதிகம் பாடி கிரகதோஷத்திலிருந்து விலகியவர் திருஞானசம்பந்தர். இவரை போல நீங்களும் ஞானப்பால் அருந்தி, முழுவாழ்க்கையும் ஆன்மீகத்திற்கு அற்பணித்தவராக இருந்தால் கண்டிப்பாக கிரகதோஷம் விலகும்.

--------------------------

மேற்கண்ட கேள்விகள் போக பரிகாரம் பற்றிய பல கேள்விகள் எனது மின்னஞ்சலுக்கு வந்தது.

ஜோதிடர்கள் பரிகாரம் செய்யாமல் விட்டாலும் மக்கள் அவர்களை திருந்த விடமாட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன். பல நூற்றாண்டாக பரிகாரம் செய்து தங்கள் தலைமுறையின் DNA-வில் அதை பதியவைத்துவிட்டனர். மெல்ல தான் புதிய ரத்தம் பாயும் என தோன்றுகிறது.

--------------------------
அடுத்த பதிவு பற்றிய முன்னோட்டம்

நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்? -கேள்வி கேட்டவர் கோவி.கண்ணன்.

Tuesday, September 30, 2008

ஜோதிடத்தில் பரிகாரங்கள் வேலை செய்யுமா?

- மாயத்தை மாயத்தால் மாய்க்கலாம்
நவீன உலகில் முட்டாள் தனமானது மற்றும் மூடநம்பிக்கை என பல நல்ல விஷயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பரிகாரங்களும் ஒன்று. உங்கள் மனலை எனக்கு புரிகிறது. பரிகாரம் இல்லை ! பரிகாரம் இல்லை! என வாய் கிழிய பேசியவன் பரிகாரம் உண்டு என கூறுவது விசித்திரம் தான். வருமானம் இல்லததால் இவரும் பரிகாரத்தை பேசுகிறார் என சிலர் சொன்னார்கள். இது வேடிக்கை தான்.


இன்றும் கூட ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஆயிரம் , ரெண்டாயிரம் என வாங்கி அல்லது கோவிலுக்கு சென்று வர கூறும் பரிகாரத்திற்கு நான் விரோதிதான்.இன்றைய கணக்குபடி சில ஜோதிடர்கள் பரிகாரத்திற்காக லட்சக்கணக்கில் கூறுகிறார்கள் என கேள்வி. இதுபோன்ற செயல்களை என் எல்லா ஜென்மத்திலும் எதிர்ப்பேன். எதிர்ப்பவனாக இருந்தால் இந்த கட்டுரைக்கு என்ன அர்த்தம்? உங்கள் கேள்வி புரிகிறது.ஜோதிட பரிகாரத்தை விஞ்ஞான பூர்வமாக அனுகும் தன்மையை கூறுவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.


நடைமுறையில் பரிகாரங்கள் செய்யும் ஜோதிடரை அணுகி சில கேள்விகளை கேட்டுப்பாருங்கள் அவரின் பதில் திருப்தி அளித்தால் அவரிடம் பரிகாரம் செய்யலாம்.

1) "இந்திய ஜோதிடத்தின் தந்தை " என கூறுப்படும் வராக மிகிரர், இளவரசனின் இறப்பை கத்ததால் புகழ் பெற்றார். இவர் ஏன் இளவரசனின் ஆயுளை நீட்டிக்க பரிகாரம் செய்யவில்லை?


2) குரு கடக ராசியில் உச்
சம் பெற்றால் ஸ்ரீராமரின் ஜாதகத்துடன் ஒப்பிட்டு சொல்லுவதுண்டு, பரமாத்மாவின் அவதாரமான ஸ்ரீராமர் வனவாசம் செல்வதை தடுக்க ஏன் பரிகாரம் செய்ய வில்லை?

3) ஸ்ரீகிருஷ்ணரும் பாரத போரை தடுக்க ஏன் பரிகாரங்களோ அல்லது பூஜையோ செய்யவில்லை. இதற்கும் பஞ்ச- பாண்டவர்களில் சகாதேவன் ஜோதிடனாக இருந்தும் இதை செய்யாத காரணம் என்ன?

4) வீட்டில் சண்டை சச்சரவு மற்றும் மன வேறுபாட்டை தடுக்க பரிகாரம் செய்யும் ஜோதிடர்கள்,பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் , இலங்கையில் உள்நாட்டு கலவரம் இதை தடுக்கவும் பரிகாரம் செய்வார்களா?


5) ஒரு ஜாதகரின் விதியையே மாற்றும் பரிகாரத்தை ஒர் ஜோதிடர் செய்வதாக வைத்துக்கொண்டால் , விதியை அமைத்த கடவுளுக்கு எதிராக செயல்பட்டார் என கூறலாம் அல்லவா?

இந்த கேள்விகள் அனைத்தும் ஜோதிடர்கள் இடத்தில் கேற்கப்பட்டு அவர்கள் வெட்கி தலை குனிந்தவை. காரணம் நடைமுறையில் ஜோதிடர்கள் அனுபவரீதியாக இல்லாமல், கேள்வி ஞானத்தால் மட்டுமே பரிகாரம் செய்கின்றனர்.

ஜோதிட மாத இதழ்களில் வரும் விஷயத்தையோ அல்லது மற்ற ஜோதிடரையோ பார்த்து பரிகாரம் செய்வது வாடிக்கையாகி விட்டது. திருமணஞ்சேரிக்கு சென்றால் திருமணம் 45 நாளில் நடைபெறும் என்கிறார்கள். அங்கு செல்லும் அனைவருக்கும் திருமணம் நடைபெறுமா? சிந்திக்க வேண்டும்.

வேதத்தில் சொல்லப்பட்ட ஜோதிடத்தையே நாங்கள் கூறுகிறோம் என்னும் ஜோதிடர்கள் 100 வருட பழைமையான கோவிலுக்கு அனுப்புகிறார்கள். வேதம் மக்களிடையோ 100வருடமாகத்தான் இருக்கிறதா? அல்ல சுமார் 90 ஆயிரம் வருடத்துக்கு முன் வந்தவை. அதில் 20 ஆம் நூற்றாண்டில் ஜோதிட பரிகாரம் செய்ய இந்த கோவிலை பற்றி சொல்லி இருக்கிறதா? சிந்தித்து பார்க்க வேண்டும்.

நவீன காலத்தில் பிறமதத்தவர்களும் ஜோதிடரை அனுகும் சமயம் அவர்களை கோவிலுக்கு அனுப்புவதா? அல்லது அவர்களின் ஆன்மீக மையத்திற்கு சென்றால் பலன் தருமா?

அப்படியானால் எனக்கு தெரிந்தவருக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் இருந்தது, அவர் ஒரு கோவிலுக்கு சென்றாதும் குழந்தை பிறந்தது. இதற்கு உங்கள் பதில் என்ன என சிலர் கேற்கலாம்.
கடன், குழந்தை இன்மை, வியாதி ஆகிய பிரச்சனைகளுக்கு கோவில் ஓர் தீர்வு இதை மறுக்க முடியாது. காரணம் மேற்கண்ட பிரச்சனைகள் 6 மற்றும் 4 ஆம் பாவத்தால் வருபவை. இதை தவிர்த்தி 5ஆம் பாவம் நடைபெற்றால் 6க்கு விரய பாவமாகவும், 4 ஆம் பாவத்தின் வேலையை தவிர்க்கவும் பயன்படும். 5 ஆம் பாவம் ஆன்மீகம் , மந்திர உச்சாடனம் ஆகியவற்றை குறிக்கும்.
ஆகவே கோவிலுக்கு செல்லும் சமயத்தில் இதைபோன்ற விஷயத்தை தவிர்க்கலாம். யோகா, தியானம், ஆகியவை 5 ஆம் பாவத்தை குறிப்பதால் இதை பயிற்சி செய்பவர்களுக்கு நோய் ,குழந்தை இன்மை ஆகிய வற்றிலிருந்து விடுபடுகிறார்கள்.

ஆனால் தொழில் முடக்கம், குடும்ப பிரச்சனை, கல்வி தடை இவற்றை சரி செய்ய இவை உதவுமா என்றால் உதவாது.அந்த காலத்தில் ஜோதிடத்தை வகுப்பாக எடுக்காமல் ஜோதிடரின் பக்கத்தில் இருந்து அனுபவமாக கற்றார்கள். இப்படி பயிற்சி செய்தவைதான் தவறான பரிகாரம் சொல்ல வைக்கிறது.

இந்த நேரத்தில் பரமார்த்த குருவின் கதை ஒன்று னைவுக்கு வருகிறது. பரமார்த்த குருவின் சிஷ்யன் மட்டி என்ற முட்டாள் வாலிபன், குரு இறந்ததும் ஓர் வைத்தியரிடத்தில் வேலைக்கு சேர்ந்தான். வைத்தியரின் பையை சுமந்துவருவது அவன் வேலை. மட்டியை, வைத்தியம் செய்யம் முறையை கூர்ந்து கவனித்து அதன் மூலம் மருத்துவம் படிக்குமாறு வைத்தியர் பந்திருந்தார்.

ஒரு நாள் பக்கத்து கிராமத்தில் ஒருவருக்கு வயிற்று வலியை தீர்க்க வைத்தியரும் மட்டியும் சென்றார்கள். நோயாளியை பரிசோதித்த வைத்தியர் அவன் நேற்று சாப்பிட்ட வாழைப்பழம் அவனின் வயிற்று வலிக்கு காரணம் என கண்டரிந்து மருந்து கொடுத்தார். வரும் வழியில் மட்டி கேட்டான்,"ஐயா அந்த நோயாளி வாழைபழம் சாப்பிட்டதை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்?" என்றான். வைத்தியர் சொன்னார் , "மட்டி வைத்தியம் செய்யும் சமயத்தில் அங்கு நிலவும் சூழ்லையை கவனி அது உனக்கு முதல் பாடம். நாம் சென்ற வீட்டில் நோயாளியின் படுக்கை அருகில் இருந்த குப்பை தொட்டியில் வாழைப்பழத் தோல் இருந்ததை கவனித்தேன். அனுபவமே வைத்தியம்" என்றார்.

சில மாதங்களுக்கு பிறகு வைத்தியருக்கு வேலையிருந்த காரணத்தால் மட்டி வைத்தியம் பார்க்க சென்றான். அங்கு ஒரு பிராமணர் மார்பு வலியால் துன்பப்பட்டார். மட்டி சூழ்லையை கவனித்தான். குப்பைதொட்டியில் எதுவும் இல்லை. நோயாளியின் வீட்டு ஜன்னல் வழியே பார்க்க, அங்கு மாடு கட்டிவைக்கும் இடம் காலியாக இருந்தது. மட்டியின் மூளை வேலை செய்தது,
"நீங்கள் பசுமாட்டை சப்பிட்டதால் தான் இந்த நெஞ்சு வலி வந்தது" என்றான். அதன் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். ஜோதிடத்தை அனுபவத்தில் கற்ற ஜோதிடர்கள் மட்டியை விட புத்திசாலிகள்.


ஒரு ஜோதிடர் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தார் அது பலித்தது என்றால் , எல்ல காரியத்திற்கும் கோவிலுக்கு அனுப்புவது முட்டாள் தனமானது. தொழில் முடக்கமா கோவிலுக்கு செல்லுங்கள் என்றால், கோவில் செல்லும் சமயம் ஜாதகருக்கு 5,9,12 நடைபெறும். இது 2,6,11 என்ற வருமானத்திற்கு எதிரான பாவங்கள். உதாரணமாக ஒரு சிறுவன் படிக்கவில்லை என்றால் அவன் ஜாதகத்தில் 4,9 க்கு பதில் 3,8 நடைபெறுகிறது என புரிந்து கொள்ளுங்கள். சரஸ்வதி அம்மன் அலயத்திற்கோ ஹயக்ரீவரின் ஆலயம் சென்றால் சிறு பிரயாணத்தின் பாவமான 3 ஆம் வீடே நடைபெறும். 3ஆம் வீடு 4க்கு எதிர் பாவம் அல்லவா? அவன் கோவிலுக்கு சென்று வந்ததும் படிப்பானா? சிந்திக்க வேண்டும்.


ஆக ஒருவருக்கு எந்த செயல் நடைபெற வேண்டுமோ அந்த செயல் சம்மந்த பட்ட பாவத்தின் வேலையை செய்தால் அதுவே பரிகாரம்.படிக்காத சிறுவனுக்கு அதிக விலையில் ஓர் புத்தகமே அல்லது எழுது பொருளோ வாங்கி கொடுத்தால் அவனின் ஜாதகத்தில் 4 ஆம் பாவ வேலை ஆரம்பிக்கும். இதே போன்று எல்ல காரியத்தை செயல் படுத்தலாம். இதற்கு பரிகாரம் என கூறாமல் சூட்சும முறையில் பாவத்தை செயல்படுத்துதல் எனலாம். அதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இல்லாத ஒன்றை தர பரிகாரங்கள் உதவாது. படிப்பே வராது, குழந்தையே பிறக்காது என்ற ஜாதகத்தில் முடிவு செய்துவிட்டால் பரிகாரம் சொல்வதை தவிர்கவும்.


இந்த கட்டுரை இவ்வளவு பெரிதாக கூற தேவை இல்லை,பரிகாரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் போதும். ஓர் பாவத்தின் காரகத்துவத்தை முறியடிக்க மற்றொரு பாவத்தின் காரகத்துவத்தை செயல்படுத்துகிறோம். அதற்கு பதிலாக இந்த காரகம். இதை பரி+காரம் எனலாம். பரி என்றால் மாற்றாக என பொருள்படும்.காரம் என்றால் காரகத்தை குறிக்கும்.

எனது அனுபவத்தில் இது பலருக்கு பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறேன். என் அனுபவத்தை புரிந்து கொண்டு முட்டாள் மட்டியின் கதைபோல செயல்படாமல், நீங்கள் இதை பற்றி சிந்தித்து அனுபவப்பட்டு பயனடையவும். இதை பற்றிய விமர்சனத்தை வரவேற்கிறோம்.

Friday, September 12, 2008

ஜோதிட கேள்வி பதில்

  • ஜோதிடத்தின் மூலம் மனிதன் மன பலம், தன்னம்பிக்கை பெற முடியுமா?

இதற்கு பதில் கூறும் முன், இந்த கேள்வி உங்களுக்கு ஏற்பட்டதன் காரணம் என்ன என பார்ப்போம். சிறு விதையை வைத்து மரத்தை முடிவு செய்யலாம் அல்லவா? தற்சமயத்தில் ஆன்மீகத்தை போதிப்பவர்கள் பலர் ஜோதிடத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். வேத உபஷத்துக்களை மேற்கோள்காட்டி பேசும் இவர்கள் வேதத்தின் கண்ணை மூடி தியானிக்க சொல்கிறார்களோ என நினைக்கிறேன். இவர்களின் பிரச்சாரத்தால் ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு பற்று அதிகமாகிறதே தவிர குறைவதில்லை. ஜோதிடம் வேண்டாம் என சொல்லும் இவர்கள் ஜோதிட சாஸ்திரம் சம்பந்தபட்ட பஞ்சாங்கம் மூலம் அமாவாசை , பௌர்ணமியை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதற்கெல்லாம் ஒரே காரணம் மட்டுமே.

ஜோதிடம் மூலம் தெளிவான உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு ஆற்றும் சேவையை தொடர்ந்து செய்வீர்களா என்பது சந்தேகம். இதை உணர்ந்த அவர்கள் ஜோதிடத்தை நம்பி உங்களின் வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என பிரசாரம் செய்கிறார்கள்.

தன்னம்பிக்கை பேச்சாளர் என வைத்துக்கொள்வோம். உங்களை 5 வருடத்தில் 5 கோடி சம்பாதிக்கும் ஆற்றலை தருகிறேன் என உற்சாகமாக பேசும் சமயம் உங்களின் கற்பனை எல்லை விரிந்து இருக்கும். ஐந்து வருடம் முடிந்ததும் , கையில் 5 ரூபாயுடன் திண்டாடும் சமயம் தன்னம்பிக்கை பேச்சாளரை
நினைத்தீர்கள் என்றால் உலகிலேயே அதிக மன அழுத்தத்தை கொண்ட மனிதனாக மாறுவீர்கள்.

ஏன் என்றால் தன்னம்பிக்கை கொடுக்கும் பேச்சாளரோ, ஆன்மீக வழிகாட்டியோ அனைவரையும் அந்த நிலைக்கு உயர்த்த முடியுமா? சிந்திக்க வேண்டும். உயராத மற்றவர்களின் நிலை வருத்ததிற்குரியதாகிவிடும். அதற்கு பதில் ஜோதிடரீதியாக உங்களின் எதிர்காலத்தை சிறந்த ஜோதிடர்கள் மூலம் தெரிந்து கொண்டால், நடைபெறாத காரியங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பை வைக்க தேவையில்லை . உங்கள் மனம் நீர்வீழ்ச்சியை போல கீழ்நோக்கி போகாமல் , காட்டாறு போல தானமாக போகலாம்.

  • செய்வினை கோளாறுகள் என்பது உண்மையா?
கடவுள் எனும் அளவிடமுடியாத சக்தி எல்லா நேரமும் உங்களை ஆட்டுவிக்கிறது என உணருங்கள். அவரை மீறி எதுவும் நடக்காது. இந்த நம்பிக்கை இருந்தால் எந்த கவலையும் இல்லை. கம்யூட்டரில் வைரஸ் வருவதால் ,அதை தடுக்க ஓர் ஏற்பாடு செய்கிறோம். வியாதி வரும் முன் தடுப்பூசி அளிப்பது போல. என்றும் கடவுளிடன் பக்தி கொண்டால் இதை போன்ற சின்ன விஷயத்திற்கு கவலை படவேண்டாமே. ஜோதிட சாஸ்திரத்தில் இதை ஆராயும் முறை உண்டு. தற்காலத்தில் மந்திர சாஸ்திரத்தை சிறப்பாக பயன்படுத்துபவர்கள் குறைவு. அதிலும் பிறர் வாழ்கைக்காக பயன் படுத்துபவர்கள் மிக குறைவு. ஆன்மீக ரீதியான தொடர்பு இல்லாதவருக்கே இந்த பயம்வரும். மாயை எனும் அறியாமையே இதற்கு காரணம்.

  • ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு கொடுக்கும் காணிக்கையை எவ்வாறு முடிவு செய்வது?

உண்மையைச் சொன்னால் இதற்கு அளவுகளே கிடையாது. உங்கள் வாழ்க்கையை துல்லியமாக சொல்லும் ஒருவருக்கு குறைந்தளவு பணம் குடுத்தால், உங்கள் வாழ்க்கையை நீங்களே சிறுமையாக்கினீர்கள் என அர்த்தம். பழங்காலத்தில் ஜோதிடரிடத்தில் வருபவர்கள் ஜாதகம் பார்ப்பதற்கு முன்னரே வேஷ்டி,பழங்கள் மற்றும் காக்கை கொடுத்துவிடுவார்கள். காரணம் குரு, மருத்துவர் மற்றும் ஜோதிடர் மூவரும் வாழ்க்கையை ஆராய்பவர்கள். இவர்களுக்கு முன்னரே மரியாதை செலுத்துவது முறை. என்று ஜோதிடரின் மேல் உள்ள அவநம்பிக்கையால் ஜாதகம் பார்த்து முடித்ததும் பணம் கொடுக்க துவங்கினார்களோ அன்று முதல் ஜோதிடரும் பல தவறான வழிகாட்டுதலை செய்கிறார்கள். முன்னரே கொடுப்பதால் மனரீதியாக ஜோதிடர் திருப்தி அடைந்ததும் அவரிடம் ஜோதிட பலன் கேட்பது எளிது. இல்லை என்றால் நாம் அளிக்கும் பணத்தில் அவருக்கு கவனம் இருக்கும் ஜாதகத்தை கவனிக்க தவறலாம்.

  • சூரிய குடும்பத்தில் 10வது கோள் கண்டுபிடிக்கப்படுள்ளதாகவும் இது ஜோதிட ரீதியான பலன் கொடுக்கும் என்கிறார்களே உங்கள் கருத்து என்ன?

ரிஷிகளும், மாமுனிவர்களும் கண்டுபிடித்தது இந்த ஜோதிட சாஸ்திரம். அவர்களின் ஞானத்திற்கு முன் இந்த விஞ்ஞானம் எல்லம் பூஜ்ஜியமே. விஞ்ஞானிகள் சூரியமண்டலத்தை ஆராயும் முன்னரே இவர் இதை பகுத்தாராய்ந்தவர்கள். சூரியமண்டலத்தையும் தாண்டி 27 நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரித்தவர்கள். சூரிய மண்டலத்தை தாண்டி செல்லும் சமயம் பத்தாவது என்ன பதினைந்தாவது கிரகத்தையே அவர்கள் உணர்ந்திருக்க கூடும். ஆனால் இவை ஜோதிடத்திற்கு பயன்படுமானால் முன்பே இணைத்திருப்பார்கள். இந்த மெய்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஒப்பு நோக்கினால் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஒன்றுமே இல்லை. ஜோதிட சாஸ்திரத்தில் வானில் எப்பொழுது வானவில் தெரியும் , எவ்வளவு நேரம் தெரியும் என கணக்கிட முடியும். ஆனால் விஞ்ஞானத்தில் அந்த வளர்ச்சி இல்லை. அதனால் விஞ்ஞானிகள் கண்டறிந்தது மெஞ்ஞானிகளுக்கு தெரிந்ததில் கால் பங்கு கூட இல்லை என்பதை உணருங்கள்.

  • கர்ம வினையை மாற்ற முடியுமா?

கர்ம வினையை ஏன் மாற்றவேண்டும்? உங்களுக்கு நல்ல கர்மவினை அமைந்து அதை நீங்கள் உணராமல் இருப்பதால் இந்த கேள்வி உதிக்கிறது. கடவுள் அமைத்த பாதையை மாற்ற துடிப்பது நமது அஹங்காரமே. கடவுளை சரணடைந்து உங்கள் தேவையை பூர்த்திசெய்யுங்கள். கடவுளுக்கு நிகரானவர்களின் சன்னிதானத்தில் மட்டுமே அது சாத்தியம். சிலர் கர்மத்தை கழிக்கிறோம் என கூறி வியாபாரம் செய்கிறார்கள். மனம் முழுவதும் அவனை நினைத்து உருகினால் அனைத்தும் சாத்தியம். சரணடைந்தவர்களுக்கு கர்மவினையை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

நீங்கள் உலக பிரபலமடைய்பவராக ஆவதாக உங்கள் கர்மவினை இருக்கிறது என கொள்வோம் , அது தெரிந்து கொள்ளாமல் கர்மவினையை மாற்றுகிறேன் பேர்வழி எனஒரு சாதாரண மனிதராக மாற வாய்ப்புள்ளது அல்லவா? முதலில் உங்கள் கர்மவினையை அறிய முற்படுங்கள் , அறிந்தால் மற்ற முயல மாட்டீர்கள். உங்கள் அறியாமையே மாற்ற வேண்டும் என போரடுகிறது - நிங்கள் அல்ல...!