Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, March 18, 2012

ப்ரணவ பீடத்தின் புதிய வெளியீடுகள்


சாஸ்திரம் பற்றிய திரட்டு என்ற இந்த வலைதளம் மூலம் பல்வேறு ஆன்மீக கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ப்ரணவ பீடத்தின் மாணவர்கள் பல்வேறு நிலைகளில் இருக்கிறார்கள். அனைவராலும் இணையத்தை தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருப்பதால் அவர்களுக்காக இங்கே வெளியிட்ட தொடர்களை புத்தக வடிவில் வெளியிட்டு இருக்கிறோம். 

காசி சுவாசி, சபரிமலை சில உண்மைகள், வேதகால வாழ்க்கை ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளியிட்டு உள்ளோம். மேலும் சாஸ்திரம் பற்றிய திரட்டு என்ற பெயரில் இந்த தளத்தில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டு உள்ளோம். 

கம்ப்யூட்டரில் படிப்பதை விட கையில் அச்சு புத்தகமாக படிப்பதில் ஒரு சுக அனுபவம் உண்டு, மேலும் வீட்டில் புத்தக வடிவமாக வைப்பதால் அனைவரும் படிக்கும் வாய்ப்பு உண்டு என்பதால் ப்ரணவ பீடம் இக்கட்டுரைகளை வெளியிட்டு உள்ளது.

இந்த வலைபக்கத்தில் தொடராக வரும்பொழுது இருந்த கருத்துக்களை விட சில புதிய கருத்துக்களை இணைத்து புத்தக வடிவில் வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புத்தகம் விலை பிரதி ஒன்று 100 ரூபாய். தபால் செலவு தனி.
புத்தகம் வாங்குவதற்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.






Thursday, March 1, 2012

சித்தர்கள் வாழும் கிரி

சித்தர்கள் அனேகமாக மலைகளிலும் குகைகளிலும் தான் வாழ வேண்டும் என்பது பெரும்பாலன நம் மக்களின் எண்ணமாக இருக்கிறது. தம் சித்தத்தை உணர்ந்தவர்கள் சித்தர்கள் என்பதை புரிந்து கொண்டால் அவர்கள் எங்கும் வாழலாம் என்ற தெளிவு பிறக்கும்.

சித்தம் என்பது நம் உள்ளே இயங்கும் உள் தன்மையை பற்றியது. வெளி சூழல் எப்படி இருந்தாலும் தன் சித்ததை சிதற விடாத சித்த தன்மை இருப்பவர் மலையில் தான் வாழ வேண்டும் என்பதில்லை.
ஆனாலும் சித்தர்கள் மலையில் வாழ்ந்தால் தானே அவர்களை நாம் சித்தர்கள் என அங்கிகரிப்போம்? 

சரி.... சித்தர்கள் வாழும் கிரி என்றால் எது?

சதுர கிரியா? 
இங்கே தான் அனேக சித்தர்கள் உண்டு என பலர் நம்புகிறார்கள்.
வெள்ளியங்கிரியா? 
இங்கேயும் சித்தர்கள் உண்டு என சொல்லி கேள்விப்பட்டதுண்டு.
அருணாச்சல கிரியா? 
அங்கே சாதுக்களும் சாமியார்களும் இருப்பார்கள். சில சித்தர்கள் அங்கே அடிக்கடி வருவார்களாம்.

பார்த்தீர்களா சித்தர்கள் என்றவுடன் மனதில் சித்தர்கள் இங்கு தான் வாழ முடியும் என பலர் ஏற்படுத்திய பிம்பம் நமக்கு தோன்றுகிறது.

இப்பொழுது நான் உங்களுக்கு சொல்லப்போவது சித்தர்கள் வாழும் கிரி... நீலகிரி..!

ஆம் ஊட்டி என பலரால் சுற்றுலாவுக்கு செல்லும் அதே மாவட்டம் தான்.

அங்கே ஆறு ஆன்மீக நிலை பெற்ற சித்தர்களின் சமாதி உண்டு. அந்த சித்தர்களில் இருவர் பெண்கள். நீலகிரி ஒருகாலத்தில் மலைவாழ் மக்களின் பூமியாக இருந்தது. அச்சமயம் ஆன்மீக உயர்வு பெற்ற பலர் அங்கே வாழ்ந்திருந்தார்கள்.

ஆங்கிலேயரின் கைகளில் அவை ஓய்வு ஸ்தலமாக மாற்றம் அடைந்ததும் அதற்கு முன்பு அங்கே இருந்த ஆன்மீகவாதிகளின் வரலாறுகள் மறக்கப்பட்டது. மாற்றமும் அடைந்தது.

இங்கே நான் விவரிக்கும் ஆறு சித்தர்கள் ஆங்கிலேயர் காலத்திலும், சுதந்திர இந்தியாவிலும் வாழ்ந்தவர்கள்.  

ஆறு சித்தர்களு ஒரே காலத்தில் ஊண் உடலில் வாழவில்லை என்றாலும் ஒன்றுடன் ஒருவர் தொடர்பு உடையவர்கள். ஆறு சித்தர்களின் சமாதியும் ஒரே இடத்தில் ஒரே அறையில் இருப்பது மிகவும் அற்புதமான சூழலை உண்டு செய்கிறது.

எளிய தியான சூழலை அங்கே உருவாக்கி இருக்கிறார்கள். உள்நிலையை பற்றி அங்கே ஒரு சித்தர் வரைந்த படத்தை பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். மிக அற்புதமான கருத்துக்கள் கொண்ட வரைபடம் அது. 


சித்தர்களின் சமாதி அருகில் காசி விஸ்வநாதர் - விசாலாட்சி கோவில் அமைந்திருக்கிறது. 


சமாதிக்கு பின் புறம் நன்கு வளர்ந்த ஆறு மரங்கள் இருக்கிறது. இம்மரங்களின் அடியில் அமர்ந்து தியானித்தால் இச்சித்தர்கள் இன்றும் உயிர் வடிவில் அம்மரங்களில் வாழ்கிறார்கள் என உணர முடியும். 
மேற்கண்ட படத்தில் வெண் நிற மர தாமரை காட்சி தருகிறது.

ஆறு மரங்களில் நான்கு மரங்கள் மர-தாமரை என்ற விசித்திரமான மர வகையை சார்ந்தது. இம்மரங்களில் தாமரை போன்று அதிக உருவ ஒற்றுமை வாய்ந்த பூக்கள் பூக்கின்றன. குளத்தில் தாமரையை பார்த்து பழகிய நமக்கு மரத்தில் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இம்மரம் நீலகிரி மலையில் வேறு எங்கும் இல்லை என நினைக்கிறேன். ஆறு மரங்களில் நான்கு மரத்தாமரை என்றால் மற்ற இரு மரங்கள் வெண் மகிழம் பூ மரங்கள். மரங்களும் தாங்கள் ஆண் - பெண் தன்மையில் சித்த வடிவங்களாக இருப்பதை கூறுகிறது.

நீலகிரியை பொருத்தவரை இக்கோவில் மிகப்பிரபலமானது. அடுத்த முறை நீலகிரி செல்லும் பொழுது தாவரயியல் பூங்கா, தங்கும் விடுதியின் கழிவுகள் கொண்ட ஏரியில் படகு சவாரி செய்த பின்  இச்சமாதி கோவிலுக்கு சென்று சில நிமிடம் தியானம் செய்துவிட்டு வாருங்கள். ’மர’க்காமல்
மரத்தின் அடியில் சில நிமிடம் தியானம் செய்து விட்டு வாருங்கள். 

இங்கே மரத்தில் அடியில் தியானிப்பதால் ஞானம் கிடைக்கிறதோ இல்லையோ... குறைந்த பட்சம் சித்தர்கள் மலையில் மட்டும் வாழ்வார்கள் அதுவும் குறிப்பிட்ட மலையில் மட்டும் வாழ்வார்கள் என்ற கற்பிதங்களில் இருந்து வெளியெ வருவீர்கள்...!


கோவில் முகவரி : காந்தல் சிவன் கோவில், காந்தல், ஊட்டி.