Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, April 24, 2016

வேளாண்மை பஞ்சாங்கம்- 2016-2017

 நம் கலாச்சாரத்தில் உருவான ஜோதிட நூல்கள் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த கருத்துக்களை கொண்டது. குறிப்பாக எப்பொழுது விவசாய பணி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி எவ்வகை பயிர்கள் லாபம் தரும் என்பது வரை குறிப்புக்கள் உண்டு. தமிழில் வருட பாடல் பாடிய இடைக்கடார் சித்தர் பாடல்களில் கூட இந்த வருடம் மழை பொழியுமா, வறட்சி நிலவுமா என்ற விவசாய குறிப்பை காணலாம். நம் நாடு விவசாய நாடு என்பதாலும் முன்காலத்தில் விவசாய பணிகள் மிக முக்கிய பணிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் தற்காலத்தில் ஜோதிடத்தின் விவசாய விதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு திருமணம், காது குத்து என நல்ல நேரம் பார்க்க பயன்படுத்துகிறோம். ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்ற விவாதம் தவிர்த்துவிட்டு பொதுவாக சொன்னால் ஜோதிடம் ஒரு வானிலை அறிவிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தினசரி காலண்டரில் கூட ‘சந்திரனின் வடகோடு உயர மழை பெய்யும்’ என்ற வாசகம் காணலாம்.  அது போல நம் நன்மைக்கும் வானிலை அறிந்து வேளாண் செய்யும் வகையில் பஞ்சாங்கம் தயாரித்துள்ளேன்.

வேதகால வேளாண்மை என்ற கருத்தியலின் ஒரு பகுதி வேளாண் ஜோதிடம். தற்காலத்தில் பயோ டயனமிக் - உயிர் ஆற்றல் விவசாயம் என்ற பெயரில் பஞ்சாங்கம் மேலை நாட்டினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதில் சந்திரனின் முழு நிலவு, அமாவாசை மட்டுமே கருத்தில் கொண்டு 15 நாட்கள் வரும் திதியின் அடிப்படையிலும் சில ஜோதிட கருத்துக்களுடனு அமைகிறது. ஆனால் நமது பஞ்சாங்கத்தில் நாள், வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதி ஆகிய பஞ்ச அங்கங்களை பயன்படுத்தும் முறைகளை நம் சாஸ்திரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

கம்ப்யூட்டர் யுகத்தில் பஞ்சாங்கம் வைத்து விவசாயமா என சிந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உயிராற்றல் விவசாயம் மற்றும் மேலை நாட்டு பஞ்சாங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தால் ஆதரவு பெற்ற ஒன்று. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் தானே நாம் நம்புவோம்? தற்சமயம் ப்ரணவ பீடத்தில் வேளாண்மை பஞ்சாங்கம் அமெரிக்க நாடுகள், அஸ்திரேலியா , பூட்டாண் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரணவ பீடத்தின் வேளாண் பஞ்சாங்கம் சாஸ்திர ரீதியாக தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் உயிராற்றல் விவசாயம் பரவலாகும் பொழுது அனைவருக்கும் கிடைக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வந்தாலும் விவசாயிகளுக்கு மட்டுமே தனிச்சுற்றாக அனுப்பி வந்தோம். தற்சமயம் பலர் விவசாய ஆர்வலர்களாக இருக்கிறார்கள், தங்கள் வீட்டின் மாடியில் பயிர் செய்கிறார்கள். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வருட (துன்முகி) வேளாண் பஞ்சாங்கத்தை இலவச டவுன்லோடு செய்யுமாறு வழங்குகிறோம்.

இலவச வேளாண்மை பஞ்சாங்கத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல நீங்களும் ஒரு கருவியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 

வேளாண்மை நமது உயிர் ஆதாரம்.

 
வேதகால வேளாண்மை பற்றிய எழுதிய கட்டுரைகளை படிக்க - வேதகால வேளாண்மை

Saturday, April 2, 2016

கொலம்பஸ் ...கொலம்பஸ் .. கொலம்பலைஸிங்...போதும்...!

இன்றும் கூட நம் பள்ளிகளில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என கூசாமல் கற்பித்து வருகிறோம். இவர் இந்தியாவை கண்டு பிடிக்க சென்றார் , திசை மாறி தன் குறிக்கோளில் தோல்வியுற்றார் அதனால் தான் கண்ட நிலப்பரப்பை இந்தியா என்றும் அதில் வாழ்பவர்களை இந்தியர்கள் என்றும் அழைத்தார் என வரலாறு சொல்வதில்லை. காரணம் பிரிட்டீஷ் எழுதிய வரலாறு புத்தகமே நம் கையில் உண்டு. பிறகு தற்காலத்தில் அமெரிக்கா சொல்லுவதை கேட்கும் நிலையில் இருக்கிறோம். இதனால் இந்தியாவின் கருத்துக்கள் உரக்க சொன்னாலும் எங்கும் செல்வதில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் சொல்லுவது சத்ய வார்த்தையாக இருக்கிறது. நம்மில் பெரும்பான்மையானவர்கள் கூட ”அமெரிக்காவுல ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்கானாம்..” என கண்கள் விரிய சொல்கிறோம்.  நம் தலையில் கட்டும் விஷயங்களை ஆராய்ச்சி என்ற பெயரில் அவர்கள் மார்கெட்டிங் செய்கிறார்கள். அந்த செய்தியை நம் கண்ணில் படுமாறு கசிய விடுகிறார்கள். பிறகு உங்கள் வீட்டின் அருகே இருக்கும் கடைகளில் அப்பொருள் வரும் பொழுது.....ஓ அமெரிக்க கண்டுபிடிப்பு என வாங்குகிறோம்.

அதற்காக நான் அமெரிக்க ஏகாதிபத்யமே...! என புரட்சி பேசும் ஆள் இல்லை.  அமெரிக்க மனநிலை என்ற ஒரு தன்மைக்கு இளைஞர்கள் மயங்கி கிடப்பதை சுட்டிகாட்டவே இதை பேசுகிறேன். வேப்பிலை , மஞ்சள் இவைகளை ஆயிரக்கணக்கான வருடமாக நாம் பயன்படுத்தி வந்தோம். கோவில்களிலும், வீடுகளிலும் மற்றும் மருத்துவத்திற்கும் இவை இரண்டும் பயன்படாமல் இருந்ததே இல்லை. ஆனால் அமெரிக்காவில் இதன் மருத்துவ குணத்தை கண்டறிந்து காப்புரிமை வாங்க முயன்றார்கள். பிறகு சில இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல விரும்பிகள் தடுத்தார்கள் என்பது நமக்கு தெரியும்.

முன்பே பயன்பாட்டில் இருக்கும் ஒருவிஷயத்தை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என சொல்லுவது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புதிதல்ல. காரணம் அமெரிக்காவே அப்படி கண்டுபிடிக்கப்பட்டது தானே? அங்கே பல்லாயிரம் வருடமாக பூர்வகுடிகள் வாழ்ந்து வந்தார்கள். கொலம்பஸ் கண்டறிந்தார் என சொல்லி அவர்களை கொன்று குவித்து இப்பொழுது அமெரிக்கர்கள் பேசுவதை பார்த்தால் கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்தகுடி போல பேசுவார்கள். சமூக ஆர்வலர்கள் இச்செயலை  கொலம்பஸிங் என கிண்டலாக சொல்லுகிறார்கள். முன்னரே இருந்த விஷயத்தை கண்டுபிடித்து அதனால் பழைய வரலாறை மறைத்து பெயர் வாங்கும் சின்ன புத்திக்கு கொலம்பஸிங் என கூறலாம்.

இணையத்தில் சூப்பர் யோகா என தோப்புகரணம் போடுவதை ஏதோ ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது போல சொல்லுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது போல இப்பொழுது இயற்கையை சேதப்படுத்தாத இலை பாத்திரங்கள் என சொல்லி தாய்லாந்து நாட்டின் யுனிவர்சிட்டி கண்டுபிடித்திருக்கிறார்களாம். இவர்கள் பின்புலத்திலும் கொலம்பஸிங் ஆட்கள் தான் இருக்கிறார்கள்.

விரிவாக பார்க்க இதோ இணைப்பு : http://m.bangkokpost.com/news/917069



மார்கழி மாச பஜனையும் தொன்னையும் அதில் வழியும் சக்கரை பொங்கலையும் மறக்க முடியுமா? இவர்கள் தான் இயற்கை வழி தொன்னையை முதன் முதலில் கண்டுபிடித்தார்களாம். நாம் நம்ப வேண்டும். புளிசோற்றை பாக்கு மட்டையில் கட்டி கட்டு சோறு என்று எடுத்து செல்வதும், தொன்னையை பயன்படுத்துவதும் நம் வழக்கமாக இருந்தது. அதில் ப்ளாஸ்டிக்கை நுழைத்து, இனியாவது மார்டனா இருங்க என சொல்லி நம் வழக்கத்தை குழைத்து இப்பொழுது இயற்கை கண்டுபிடிப்பு என சொல்லுகிறார்கள். இதை தான் கொலம்பஸிங் என்கிறோம்.

நான் அர்ஜெண்டினா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்லும் பொழுது எப்பொழுதும் தொன்னை எடுத்து செல்வேன். அங்கே இருப்பவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் எப்படி இதை உண்டாக்கினார்கள் என வியப்பார்கள். எடை குறைவாக இருப்பது, பூஜைகளுக்கு தூய்மை ஆகிய காரணங்களால் நான் தொன்னையை சுமப்பேன். அவர்களுக்கு இதன் உண்மை காரணம் தெரியாது...!

இது போன்று பல பாரம்பரியங்களை நாம்  இழந்து வருகிறோம். எதிர்வரும் காலத்தில் நம் சந்ததியினர் பிரான்ஸில் புதிய உணவு கண்டுபிடித்திருக்கிறார்களாம், பசும் பாலை ப்ராஸஸ் செய்து அதில் டோயிர் என உண்டு செய்து சாதத்தில் பிசைத்து சாப்பிடுவார்களாம் என சொல்லுவார்கள். நாமும் டோயிர் ரிஸொட்டோ என உணவு பட்டியலை பார்த்து தயிர்சாதத்தை பெருமையாக சாப்பிடுவோம்.

கற்றாழை, முருங்கை இலை பொடி என முன்பே சென்றுவிட்டது...
இப்படியாக கொலம்பஸிங் விரிவடையும் ....எப்பொழுது உண்மையை உரக்க சொல்லுவோம்?

#columbusing