Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Thursday, August 4, 2011

சென்னையில் ஸ்வாமி ஓம்கார்

*Discovery Book Palace*

ஸ்வாமி ஓம்கார் அவர்கள் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். அவரை டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் வரவேற்கிறோம். அவரை சந்திக்க விரும்பும் நண்பர்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மனிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் - வரவும். அவரின் “தினம் ஒரு திரு மந்திரம்” முதல் & இரண்டாம் பாகங்களின் அறிமுக விழாவாக அவை அமைய உள்ளது . அனைவரும் வருக.
----------------------------------------------------------------
டிஸ்கவரி புக் பேலஸ்,
இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர்,
சென்னை - 600078. தமிழ்நாடு.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் அமைந்துள்ளது)

தொலை பேசி : 99 44 2 333 55, 99 44 1 333 55

Tuesday, January 11, 2011

சென்னை புத்தக கண்காட்சியில் ஸ்வாமி ஓம்கார்..!

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு 12ஆம் தேதி புதன் கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி க்குள் வரலாம் என இருக்கிறேன். சென்னையை சேர்ந்த நண்பர்கள் சந்திக்க நினைத்தால் புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம்.

புத்தக கண்காட்சி பற்றி சுப்பாண்டியுடன் நடந்த பேட்டி..

எந்த ஸ்டாலில் இருப்பீர்கள்? ஸ்டால் எண் என்ன?

அங்கே போண்டா ஸ்டால் இருப்பதாக கேள்வி. அதில் அனேகமாக இருப்பேன்.
சொந்தமாக ஸ்டால் இல்லாதவருக்கு கேண்டீனே சொந்த ஸ்டால்

உங்கள் புத்தகம் இங்கே கிடைக்குமா?

புத்தக கண்காட்சி வெற்றிகரமாக நடக்கும்பொழுதே நீங்கள் ஒரு உண்மையை அறிய வேண்டும். என் ஒரு புத்தகமும் அங்கே கிடைக்காது..!

அப்படியானால் புத்தகத்தில் கையெழுத்து இட்டு தரமாட்டீர்களா?

தாராளமாக, நீங்கள் எந்த புத்தகம் வாங்கி வந்து என்னிடம் கொடுத்தாலும் கையெழுத்து போட்டு தருகிறேன். உங்களின் கோரிக்கையை என்றும் மறுக்கமாட்டேன்

மிக்க மகிழ்ச்சி. சிலர் புத்தக கண்காட்சியில் கையெழுத்து போட ஆயிரம் ரூபாய் பேனா வைத்திருக்கிறார்கள். நீங்களும் வைத்திருக்கிறீர்களா?

நான் பேனாவின் மதிப்பை விட என் கையெழுத்து மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புபவன். அதனால் பேனா 2 ரூபாயாக இருந்தாலும் என் கையெழுத்து மதிப்பு மிக்கது.

டிஸ்கி : இந்த பேட்டியில் கேள்வி கேட்டவன் நான். பதில் சொன்னவர் சுப்பாண்டி என்பது தனியாக சொல்ல வேண்டியது இல்லை :))

Wednesday, March 24, 2010

துறவிகள் நிறைந்த நகரம் - சிங்கப்பூர்...!

குரு சிஷ்யர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். குருகுலத்திற்கு வெளியே ஒருவன் கைகளில் மதுவுடன், ஒரு மாதுவை அணைத்தவாறு தள்ளாடி வந்துகொண்டிருந்தான். அவனை கண்ட குரு உடனே எழுந்து அவன் முன் சென்று அவனுக்கு மாலை அணிவித்தார். அவனையும் அந்த பெண்ணையும் மூன்று முறை வலம் வந்து விழுந்து வணங்கினார்.

இதை கண்ட சிஷ்யர்களுக்கு பயங்கிர அதிர்ச்சி. என்ன நம் குரு இவ்வாறு செய்கிறாரே என்று. சிஷ்யர்களின் கேள்விக்குறியான முகம் கண்டு குருவே விளக்க துவங்கினார், “சிஷ்யர்களே நாம் இறை நிலை பேரின்பம் வேண்டும் என்பதற்காக சிற்றின்பத்தை துறந்து துறவிகளாக இருக்கிறோம். ஆனால் இவர்களோ சிற்றின்பத்திறாக மேலான பேரின்பத்தையே துறந்திருக்கிறார்கள். பேரின்பத்தையே துறந்த இவர்கள் தானே உண்மையான துறவிகள்?” என்றார்.
குரு கதைகள் என்ற வலைதளத்தில் நான் எழுதிய இக்கதையை கொண்டு சிந்தித்தால் சிங்கப்பூர் துறவிகள் நிறைந்த நாடு என கூறலாம்.

புலால் உணவு, மது, சுற்றுலா, கேளிக்கை என எனக்கு கொஞ்சமும் சம்பந்தப்படாத இடமாக இருந்தது சிங்கப்பூர். இரும்பு அடிக்கும் இடத்தில் இந்த எறும்பு சென்ற கதையை சுருக்கமாக கூறுகிறேன்.



கடந்த மார்ச் 10 ஆம் தேதி சிங்கையை நோக்கி பயணம் செய்தேன். என்னுடன் பிரபல பதிவர் கேபிள் சங்கர் உடன் வந்தார். எதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பதை போல பல தளங்களில் சுவாரசியமான பேச்சுடன் பயணம் துவங்கி, சிங்கையை அடைந்தோம். இரவு சிங்கப்பூர் அடைந்ததும் எங்களை வரவேற்க திரளாக இணைய எழுத்தாள நண்பர்கள் வந்திருந்தனர். பின்னிரவு நேரத்திலும் எங்களை வரவேற்க வந்த அவர்களின் அன்பு நெகிழச்செய்தது. அப்பொழுது துவங்கிய பாச மழை இன்று நான் திரும்பி வரும் வரை இடைவிடாமல் பொழிந்துகொண்டே இருந்தது.

இந்த ஆன்மீக பயணத்திற்கு உறுதுணையாக இருந்த கோவி.கண்ணன், வைரவன், வெற்றிக்கதிரவன், ஜெகதீசன் மற்றும் சிங்கை பதிவர்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவிக்கிறேன். நான் எழுதிய சில குப்பைகளுக்கே உங்களை போன்ற நட்புகிடைக்கிறது என எண்ணும் பொழுது மகிழ்கிறேன். மேலும் சிறப்பாக எழுதி உங்களை போன்ற நட்புகளை மேலும் மேலும் பெறவேண்டும்.

காசி மாநகரமோ அல்லது திருவண்ணாமலையோ அல்ல சிங்கப்பூர். ஆகவே இதை நான் தொடராக எழுதி உங்களை கொல்லப்போவதில்லை. சுருக்கமாக சிங்கப்பூர் பயணத்தில் நான் கண்டவற்றை புள்ளிகளாக தருகிறேன்.


ஊர் கதை அளந்து விடு....

  • சிங்கப்பூர் அற்புதமான நகரம். வானளாவிய கட்டிடங்கள், நம்மை விட குறைந்த உயரத்தில் மக்கள், சமூக ஒழுக்கமும் கட்டுப்பாட்டில் நம்மை விட உயர்ந்து நிற்கும் சமூகம் என ரசிக்க எத்தனையோ இருக்கிறது.

  • சிங்க - பூரா என்ற சமஸ்கிருத பெயர் கொண்டே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது சிங்கப்பூர். தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது என பார்க்கும் பொழுது, பாரத் என அழைக்கவும், தமிழை ஆட்சிமொழியாக இல்லாத சூழலும் நினைக்கையில் கவலை அளித்தது.

  • மக்கள் பணம் செய்ய தேனிக்கள் போல ஓடுகிறார்கள். பறக்கிறார்கள். தங்கள் செய்ய வேண்டியதை மறந்து பொருளாதாரத்தால் மட்டுமே இயங்குகிறார்கள். இதில் சம்பாதிக்க சென்ற நம் தமிழர்களும் அடங்குவர்.

  • போக்குவரத்திற்கு உள்ள மெட்ரோ ரயில் சிறப்பாக செயல்படுகிறது. தில்லி நகரில் நான் இதை நன்கு பயன்படுத்தி பழகியதால் சுலபமாக இருந்தது. இந்தியாவிலும் உலகத்தரமான மெட்ரோ ரயில் தலைநகரில் உண்டு என்பதை நினைக்க பெருமையாக இருந்தது.

  • எலக்ட்ரானிக் கருவிகள், வீடு, அறையின் அளவு என அனைத்தும் சிறியதாக இருந்தது. சின்ன சின்னதாக செய்வது அவர்களின் இயல்பு என நினைக்கிறேன். அனைத்தும் சின்னதாக இருப்பது போல இந்தியாவும் சின்னதாக சிங்கையில் காட்சி அளிக்கிறது. லிட்டில் இந்தியா..!

  • நம் ஊரில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் அனைத்து பொருளும் இங்கே ஒரு டாலருக்கு கிடைக்கிறது. :) எனக்கு சிங்கை பொருளாதார ரீதியாக எளிமையான நாடாக தெரியவில்லை. நன்றாக பொருளீட்டுபவர்களுக்கு நல்ல நகரம். இந்தியாவில் சம்பாதித்து அங்கே செலவு செய்வது முட்டாள் தனம். இதை எதிர்மறையாக செய்யலாம். இதைதான் நம் ஆட்கள் அங்கே வேலைக்கு சென்று செய்கிறார்கள்.

  • சமூக விதிமுறைகளும், தண்டனையும் கடுமையாக இருக்கிறது. பெண்கள் முழுமையான சுகந்திரத்தில் இருக்கிறார்கள். பலதரப்பட்ட நாடுகளின் மக்கள் ஒன்றினைந்து வாழ்வதால் ஒரு பூங்கொத்துபோல நாடு காட்சி அளிக்கிறது.

  • இன்முகத்துடன் அனைவரும் உதவும் தன்மையில் இருக்கிறார்கள். குறைந்த பரப்பளவில் நாடு இருப்பதால் அவர்களின் முன்னேற்றம் விரைவாக இருந்தது என நினைக்கிறேன். விரிந்த பொருளாதார கொள்கையும், குறைந்த பரப்பளவும் நம் நாட்டு இருந்தால் இதைவிட எழில் மிகு தேசமாக உருவாகி இருக்கும்.

சொந்த கதை ஏதும் இல்லையா?


  • சிங்கப்பூர் சென்றதும் முதல் நிகழ்ச்சி திருமந்திர சொற்பொழிவு. ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டிருந்தாலும், சில சூழல் காரணமாக மக்கள் வரவில்லை பதிவர்கள் பலர் வந்து கூட்டத்தை கூட்டினார்கள். இதன் மூலம் அரசியல்வாதிகள் கூட்டணி வைக்கும் ரகசியம் தெரிந்து கொண்டேன்.
  • பதிவர்கள் போக செல்வகுமார், செந்தில் வேலன், முரளி மற்றும் மேலும் சிலர் தங்கள் வாசகர்கள் என அறிமுகமானார்கள். இந்த வலைதளத்தை படிக்கும் வாசகர்களாம். என்னத்தை சொல்ல... இன்னும் என்னை இந்த உலகம் நம்புது.
  • அறிவியலில் கேப்ளர் விளைவு என கூறுவது போல சிங்கையில் சென்ற இடமெல்லாம் நித்ய விளைவு இருந்தது.
  • நாம் தங்கி இருந்த இடத்திற்கு பெயர் “தானா மேரா”.இது மலாய் மொழி சொல்லாக இருந்தாலும் இந்தியில் இது உன் இடம் என கூறுவது போல இருந்தது.
  • இந்தியாவில் இருக்கும் பொழுது ஏதாவது பரபரப்பாக வேலை இருக்கும். அதற்காக தினமும் 22 மணிநேரம் உழைக்கிறேன் என டுமீல் விட தயாராக இல்லை :) சிங்கப்பூர் ஒரு விடுமுறை நாட்களாகவே இருந்தது. பரபரப்பான சிங்கப்பூரில் தளர்வாக வேலைபார்த்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.

  • திங்கள் முதல் வெள்ளி வரை மாலை நேரத்தில் திருமந்திரத்திலிருந்து சில பாடல்கள் மட்டும் எடுத்து விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கேலங் சிவன் கோவில் என்ற இடத்தில் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மிகசிறப்பாக கட்டி இருக்கிறார்கள். இக்கோவிலின் அருகில் இருக்கும் புத்தர் கோவிலும் அருமையாக இருந்தது. கேலங் என்ற இவ்விடத்தில் சிவன் கோவில், புத்தர் கோவில் மற்றும் மசூதிக்கு சென்று வந்ததன் மூலம் நான் சன்மார்க்கத்தை நிலைநாட்டினேன்.

  • கேலங் சிவன் கோவிலில் தினமும் மாலை 7 முதல் 9 வரை திருமந்திரம் அலசினோம். கோவிலின் உள்ளே இருக்கும் அர்த்த மண்டபத்தில் தென் திசைபார்த்து அமர்ந்திருக்க, விளக்கம் கேட்பவர்கள் வட திசை பார்த்து அமர்ந்திருந்தார்கள். தக்‌ஷணா மூர்த்தியும் சானகாதி முனிவர்களும் இப்படித்தான் அமர்ந்திருப்பார்களோ என எண்ணத்தோன்றியது. தின்ன தின்ன திகட்டாத தித்திப்பான திருமந்திரத்தை சுவைபட சுவைத்தோம்

  • திருமந்திரத்திற்கு நான்கு ஐந்து நபர்கள் தான் வருகிறார்கள் என என் மாணவர் வருத்தப்பட்டார். பகவத் கீதையை உபதேசிக்க பகவான் கிருஷ்ணனுக்கே ஒருவர் தான் கிடைத்தார். எனக்கு நான்கு பேர் கிடைத்திருக்கிறார்கள் என எண்ணி மகிழ்கிறேன் என்றேன்.

  • இந்தியாவில் பலர் என்னை மிகவும் மரியாதையாக நடத்துவதாக எண்ணி இயல்பாக பழகவிடமாட்டார்கள். இணையவழி எழுத்தாளர்களுடன் நான் முன்பிருந்தே இதை செய்யாமல் கட்டுடைத்ததால் இயல்பாக பழகமுடிந்தது. ஆனாலும் இன்னும் அவர்கள் கொஞ்சம் மாறவேண்டி இருக்கிறது. எப்பொழுதும் அவர்களே எனக்காக பணம் தருவது, பரிசுகள் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் மிகவும் மகிழ்வேன்.

  • சிங்கப்பூர் பயணத்தில் சிறப்பான ஒரு விஷயத்தை வழங்கினாலும் அது பலருக்கு சென்று அடையவில்லை என்ற எண்ணம் உண்டு. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களின் வேலை நேரம் மற்றும் பணம் விரயம் என்பதை நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது. அடுத்த முறை சுப்பாண்டியை களத்தில் இறக்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும் என நினைக்கிறேன்.

முடிவா என்ன சொல்ல வர்ரே?

வேற என்ன ஒரு ஜென்கதை தான்..

ஒரு அரசர் தனது பூந்தோட்டத்தை ஒரு ஜென்குருவிடம் காண்பிக்க எண்ணி அவரை அழைத்தார். பலவருடங்களாக தோட்டக்கலையில் உயர்ந்த ஆட்களை கொண்டு அரசன் உருவாக்கிய தோட்டம் அது. ஜென்குரு தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு தோட்டம் நன்றாக இல்லை என்றார். அரசனுக்கு மன வருத்தம் ஏற்பட்டது. என்ன குறை என கேட்டான். தோட்டம் என்றால் இலை தளை, சருகுகள் என கீழே விழுந்து கிடக்கும் அது இயற்கையானது. ஆனால் நீ சருகுகளை அப்புறப்படுத்தி மிகவும் தூய்மைபடுத்தி வைத்திருப்பதால் அதன் அழகு கெட்டுவிட்டது என்றார் ஜென் குரு. ஓடி சென்று மரங்களை உலுக்கினான் அரசன் சருகுகள் உதிர்ந்து குப்பையானது தோட்டம். ஜென் குரு கூறினார், “அற்புதமான தோட்டம்”.

அரசன் உருவாக்கிய தோட்டத்தை போல சிங்கப்பூர் மிகவும் தூய்மையாக இருக்கிறது. ஆனால் இயற்கையாக இல்லை. தெருக்கள், கட்டிடங்கள் உருவாக்கி மக்கள் அதை பயன்படுத்தாமல் இருப்பதை போல மிகத்தூய்மையாக காட்சி அளிக்கிறது.

இந்த ஜென்கதையை நினைத்தவாறே இந்தியா வந்தடைந்தேன். கையில் இருந்த காகிதத்தை கிழித்து தெருவில் வீசி, அதன் அருகே காறி உமிழ்ந்து என் இந்திய வாழ்க்கையை துவக்கினேன்.

Saturday, January 30, 2010

நச்-சுக் கவிதை - பல எதிர்வினைகள்...!

கவிதை எழுதி இலக்கியவாதி ஆகிவிட்டாலே பல எதிர்வினை வரும் என்பது தாமதமாகவே புரிந்தது.நானும் எதிர்வினையாக வந்த கடிதங்களை பதிவேற்றம் செய்து எனக்கு இலக்கிய அடையாளம் கொடுத்துகொள்ள முயற்சிக்கிறேன்.

கவிதையை
பதிவேற்றம் செய்து சில மணி நேரத்தில் பல தனி மடல்கள், மைனஸ் ஓட்டுக்கள் மற்றும் பின்னூட்டங்கள். சிலர் மிகவும் கடுமையாக எழுதி இதை இன்னும் இரண்டு மணி நேரத்தில் எடுத்துவிட்டு என கூறினார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

மைனஸ் ஓட்டு போட்டதில் நானும் ஒருவன் என்பதை சுட்டிகாட்டி எனது பின்னவீனத்துவ பாணியை இங்கே பதிவு செய்கிறேன். :)

மேல் எழுந்த வாரியாக எனது வரிகளை படித்துவிட்டு கூச்சலிடுவதும், நானும் நற்குடி பதிவரும் ஒன்று என்பது போலவும் சிலர் குறிப்பிட்டார்கள்.


முதலில் என் கவிதையின் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். நான் அனைத்து மதத்தையும் சுட்டி காட்டியே எழுதி இருக்கிறேன். ஆனால் படித்து அதற்கு கருத்து சொன்னவர்கள், தங்கள் மத அடையாளத்தை மறைந்துக்கொண்டு பிற மதத்திற்கு பரிந்து பேசியது வேடிக்கை. முதலில் உங்களிடம் இருந்து பரிவுக்காட்ட துவங்குங்கள்..!

மதம் என்பது ஒருவித பள்ளிக்கூடம். கல்வி பெற்று சமூகத்தில் வாழ பழகும் ஒருவருக்கு பள்ளியில் படித்த அடிப்படை கல்வி உதவும். அப்படிபட்ட பள்ளிக்கல்வியே மதம். அதனால் மதம் என்பது தேவை இல்லை என்றோ, தவறு என்றோ கூறமாட்டேன்.

நான் ஒருவன் பள்ளிபடிப்பை படித்துவிட்டேன் என்பதற்காக அனைத்து பள்ளிகளையும் தகர்த்து விடுங்கள் என கூறுவது முட்டாள் தனம்.

பள்ளிக்கல்வியில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையாக மதங்களும் வேறுபட்டு இருக்கிறது. அடிப்படை போதித்தவுடன் அதைவிடுத்து மேலே வரவேண்டுமே தவிர அதிலேயே தங்கே பள்ளி கல்வி மட்டுமே பயிலுவேன் கல்லுரிக்கு செல்ல மாட்டேன் என கூறுவது வளர்ச்சிக்கு அழகு அல்ல.

பிறந்தவுடன் குழந்தையாக சுய சிந்தனை இல்லாத நிலையில் நமக்கு மதம் திணிக்கபட்டது. நமக்கு பள்ளி கல்வி எப்படி திணிக்கபட்டதோ அதுபோலவே. குழந்தையிடம் சென்று மதங்களை கடந்துவா என விளக்க முடியாது, ஆனால் வளர்ந்தபிறகு மதங்களை பிடித்திருக்கும் குழந்தைகளுக்காகவே நான் அவ்வாறு எழுதி அதில் இருக்கும் நிலையை பற்றி மேலே வா என கூறினேன்.


பிரபல பதிவர் எனக்கு எழுதிய மடலின் பகுதி...

////இன்றைய உங்களின் கடைசி கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் என்றாலே ஒரு சராசரியைப் போல சுன்னத் மட்டுமே உங்களுக்கு நினைவுக்கு வருவது வருத்தமாக இருக்கிறது. அவன் குல்லா அணிவித்துக் கொண்டிருந்தான் என்பதாக எழுதியிருந்தால் நாகரிகமாக

இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.////

இந்துக்கள் அணியும் பூணுலையும் நான் குறிப்பிட்டுள்ளேன்- அது தெரியவில்லையா ?.

யாசகம் எடுப்பது ஒரு மனிதனுக்கு உளவியலில் பெரிய மாற்றத்தை உண்டு
செய்யும். ஒரு மனிதன் தன் அடையாளம், அகந்தை மற்றும் சுயகவுரவத்தை விட்டு ஒரு வீட்டின் முன் நின்று பிச்சை எடுத்தால் 90 சதவீதம் அவனுள் ஒரு தூய்மை வந்துவிடும். ஆனால் நடைமுறையில் உபநயணம் செய்யும் பொழுது தங்க வெள்ளி பூணலை போட்டு, மாமா-சித்தப்பாவிடம் காசு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்.அதனால் யாசகம் கேட்பதால் ஏற்படும் தன்மை இல்லாமல் போகிறது. மதங்கள் நாளடைவில் சம்பிரதாயமாகிவிட்டு கடைசியில் சடங்காகி முடிவில் சவமாகிறது. உண்மையாக பிச்சை எடுத்திருந்தால் தேவநாதன் உண்மையாக ’தேவ’நாதனாகி இருக்ககூடும்.

மதங்கள் மனிதனின் உடலில் புற அடையாளங்களை விதைக்கிறது. அதன் பயன்பாடு முடிந்தவுடன் அவன் அதை விடுக்க மறுக்கிறான். அதுவே எனது கவிதையின் கருத்து. அந்த கவிதையில் ’கார்’ என்ற வாகனத்துக்கு பதில் ’ஓம்கார்’ என நிரப்பி ஒரு மனிதனாக பாருங்கள். மதங்கள் சிலவற்றை திணிக்கிறது என கூறி இருக்கிறேன்.சுன்னத் என்பது இஸ்லாமிய அடைப்படை மத கோட்பாட்டில் ஒரு பகுதி, அது அவர்களுக்கு அடையாளமாகவும், புனிதமாகவும், மருத்துவ நோக்கத்துடனும் செய்யப்படுகிறது. அவற்றை நம் கண்ணோட்டத்தில் நாகரீகம் என தரம்தாழ்த்தி பார்க்க கூடாது.

கிண்டர் கார்டென் செல்லும் குழந்தைக்கு மார்ப்பில் கைக்குட்டையை இணைத்து அனுப்புவார்கள். அதுபோன்றது தான் இந்த புற அடையாளங்கள். ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட் போட்டுக் கொண்டு கல்லூரி செல்லும் பொழுது உங்கள் மார்ப்பில் கைக்குட்டையும், வலது தாடையில் திருஷ்டி பொட்டும் இருந்தால்? நினைக்கவே நடுக்குகிறதே... :)

சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நமக்கு நடைவண்டி கொடுத்து நடக்க பழக்கினார்கள். அதில் பழகிய பிறகு திருமணம் செய்யும் காலம் வந்தபிறகும் மணவரையில் மணப்பெண்ணுக்கு அருகே நடைவண்டி இருந்தால்தான் திருமணம் செய்வேன் என கூறுவது வேடிக்கையானது அல்லவா? அதுபோன்றதே இது. முடிவில் மணமகனின் புத்திசுவாதினத்தில் சந்தேகம் ஏற்படலாம்.

மதங்களை பற்றி கூறும் பொழுது நமக்கு கொதிப்பு வருகிறதே காரணம் அதில் நம் அஹங்காரத்துடன் ஐக்கியமாக்கிக்கொண்டோம். உங்கள் அஹங்காரத்தை விடுக்க மதத்தை கொடுத்தால், மதமே அஹங்காரமாகி நிற்கிறது. மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், மேலும் பல கவிதைகளும் எனது ரகசிய அறையில் இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும்.

கடைசியில் ஒரு கவிதை சின்ன விளக்கத்துடன்....



என் மார்க்கம்
------------------

உணர்ந்துகொள்ள ஜெய மார்க்கதை தேர்ந்தெடுத்தேன்
ராஜ மார்க்கத்தால் கவரப்பட்டேன்.
சன்-மார்க்கத்தில் நுழையும் முன் மின்சாரம் தடைபட்டது...!

விளக்கம் : மார்க்கம் என்றால் சானல் என்று அர்த்தம்.

Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன்...!

சில பக்தி பாடல்களில் பிறவி எடுத்தலை பற்றி இவ்வாறு கூறுவார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனையோ உயிர்கள் உலகில் பிறந்து இறக்கின்றன. ஆனால் இறைவா இத்தகைய மனிதப்பிறவி எனக்கு கொடுத்து எந்த நேரமும் என்னை பக்தி செய்ய தூண்டிய உன்னை வணங்க வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன் என பக்தி தோய்ந்து பாடுவார்கள்.

எல்லா உயிரும் மனிதப்பிறவி எடுப்பதில்லையாம்.. அப்படி மனிதனாக பிறந்த அனைவரும் இறைவனை நினைப்பதில்லையாம். ஆயிரத்தில் ஒருவருக்கே பிரதிபலன் நோக்காத பக்தி ஏற்படுகிறது. லட்சத்தில் ஒருவருக்கே அதனால் ஆன்மீக உயர்நிலை ஏற்பட்டு, இறைவனில் கலந்து இன்புறுகிறார்கள்.

சென்னையில் இணைய எழுத்தாளர்களை சந்தித்த பொழுது இந்த கருத்துக்கள் தான் தோன்றியது.

[இணைய எழுத்தாளர்னு சொல்லிட்டேன் ஓகேவா தங்கங்களே? :)) ]

எத்தனையோ நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் எத்தனை பேர் பதிவு எழுதுகிறார்கள், மேலும் பதிவு எழுதினாலும் பரஸ்பரம் எத்தனைபேர் சந்தித்துக் கொள்கிறார்கள் என பார்க்கும் பொழுது நான் ”ஆயிரத்தில் ஒருவன்” என்பதை உணர்ந்தேன்.

அப்துல்லா, கேபிள் சங்கர், பலாபட்டறை சங்கர், எறும்பு ராஜகோபால், ஜெட்லி சங்கர், துளசி டீச்சர் என பல இணைய எழுத்தாளர்களை சந்தித்தேன். பல கருத்துக்களில் கலந்துரையாடல் இருந்தது. ஆன்மீக பணியாக சென்னை வந்தாலும், இவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்கி சந்தித்தது எனக்கும் நிறைவை அளித்தது.

பதஞ்சலி யோகசூத்திரம் பற்றி எழுத சொன்னார்கள் திரு ராஜகோபாலும், சகோதரி துளசி கோபாலும் :)...! ஏதோ எனக்கு தெரிந்ததை கிறுக்குவதால் சிலர் வந்து செல்லும் தளமாக இருக்கும் இந்த வலைப்பக்கத்தை முற்றிலும் முடக்க அவர்கள் தீட்டிய திட்டத்தை ரசித்தேன். :)

நான் இணைய தளத்தில் எழுதுவது மற்றும் நகைச்சுவையாக செயல்படுவது எல்லாம் எங்கள் அறக்கட்டளை சார்ந்த நபர்களுக்கும், பல மாணவர்களுக்கும் அவ்வளவாக தெரியாது. எனது உதவியாளருக்கு கூட அன்றுதான் பதிவு, வலையுலகம் என்ற விஷயம் தெரியவந்தது.
அவர்களுக்கெல்லாம் இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம் தான். :)

இந்த வலைதளத்தை வாசிக்கும் ரங்கன், முனுசாமி மற்றும் உமாசங்கர் போன்றவர்கள் இதில் கலந்துகொண்டார்கள். நான் எழுதும் வரிகளும் உருப்படியானது என உணர்த்திய இவர்களுக்கு என் நன்றிகள்.

சென்னையை சேர்ந்த எனது மாணவர் தினகரன் சந்திப்பில் கலந்துகொண்டார். ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்புடன் இணைய எழுத்து மூலமே இணைந்த அந்த சந்திப்பு மிகவும் உன்னதமானது என நினைக்கத் தோன்றியது.

இரண்டரை மணிநேர சந்திப்புக்கு பிறகும் சந்திப்பை தவறவிட்டவர்களிடம் எத்தனையோ அழைப்புகளும் மின்னஞ்சல்களுக் எனக்கு வந்தது. நண்பர்களே விரைவில் சந்திப்போம்..

நான் காத்திருக்கிறேன்..”ஆயிரத்தில் ஒருவனாக...”

சந்திப்பை பற்றி இணைய சுட்டிகள் எழுதிய பதிவின் சுட்டிகள் :-
சுட்டி1
சுட்டி 2



எனது புகைப்பட கருவி அரபு நாட்டில் வாங்கப்பட்டதால் அதில் எடுத்த அனைத்து புகைப்படமும் ‘ஷேக்’ ஆகிவிட்டது. பலாபட்டறை எடுத்த அனைத்து புகைப்படமும் நன்றாக இருந்தது. அவர் பதிவில் கண்டுகளியுங்கள்.

Sunday, January 17, 2010

சென்னையில் ஸ்வாமி ஓம்கார்...!

வேதத்தின் கண்மணிகளுக்கு... ஒரு தனிப்பயணமாக சென்னை வருகிறேன்.

சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் புதன் (20 - ஜனவரி ) மாலை மெரினா கடற்கரையில் சந்திக்கலாம்.

இடம் : காந்தி சிலை அருகில், கலங்கரைவிளக்கத்திற்கு பின்புறம்.

நேரம் : மாலை 5:30.

அங்கே வந்து வரம் கொடுப்பீர்களா என கேட்பவர்களுக்கு தனி கவனிப்பும், மரியாதையை செய்யப்படும். :)

தினம் தினம் திருமந்திரம் புத்தகத்தின் சில பிரதிகள் என்னுடன் வருகிறது. விருப்பம் இருப்பவர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்களில் ஒருவனாக, நண்பனாக சந்திக்க வருகிறேன்.


தொடர்பு கொள்ள 99441 333 55.


Friday, December 4, 2009

ஜனநாயகம் சாகவில்லை

மக்களுக்கு ஓட்டுரிமை என்பது மிகமுக்கியம் என்கிறார்கள் ஜனநாயகவாதிகள். அந்த காலத்தில் பிச்சைக்காரனை அரசனாக யானை தேர்ந்தெடுத்த கதை உண்டு. இன்று பல யானைகளை மக்கள் அரசனாக தேர்ந்தெடுக்கிறார்கள். கடைசியில் மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள்.

சிவகாசிக்கு நியூமராலஜிப்படி பெயர் மாற்றினால் நன்றாக இருக்கும் என அவைக்கூட்டத்தில் முடிவு செய்கிறார்கள். நாளை மக்கள் நேமாலஜியும் உண்மை என நம்புவார்கள். ஏன் தெரியுமா? வாக்கு அளிக்கும் இடத்திற்கு வாக்கு’சாவடி’ என்று பெயராம். ஓட்டளிக்கும் பொழுதே சாவடிக்க துவங்கிவிடுகிறார்கள். பெயர் மாற்றம் அவசியம் என உணர்கிறீர்களா ?


என் உடம்புக்கு அரசியல் ஆகாது :) என்பதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.


சென்ற வாரத்தில் நம் வலைதளத்தில் ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. மொத்தம் 235 ஓட்டுகள். அதில் சிறப்பான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு தலைப்புக்கு சமமான ஓட்டுக்கள். இதன் மூலம் நான் கூறவிரும்புக் கருத்தை எப்படி விரும்புகிறார்கள் என தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.

வாக்கு விவரங்கள்

காசி நகரம் ஓர் அற்புதம் ------------------------- 82 (34%)

புதிய கோணத்தில் திருமந்திர விளக்கம்
---- 82 (34%)

முத்திரைகள் என்ன செய்யும்?
-----------------80 (34%)

வேதகால மருத்துவம்
---------------------------72 (30%)

மஹா கும்ப மேளா
------------------------------50 (21%)

எதுவும் எழுதாமல் இருந்தால் நல்லது.
----32 (13%)

Votes so far: 235

ஒரு 32 ஓட்டுக்கள் எதுவும் எழுதவேண்டாம் என விழுந்திருக்கிறது. அந்த 32 பேருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் (நாங்களும் அரசியல்வாதி ஆயிட்டோம் :) ).

காசி மாநகரம் மற்றும் திருமந்திரம் ஒரே எண்ணிகையான வாக்குகள் வாங்கி இருப்பதால் இரண்டில் ஒன்றை நானே தேர்ந்தெடுக்கிறேன்.

அடுத்து வரும் கட்டுரையின் தலைப்பு மற்றும் சித்திர வடிவம்....
.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்களேன்



Tuesday, July 28, 2009

எனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...


தலைப்பை படிச்சுட்டு சாமீ..... நீங்களுமா என கேட்பவர்களுக்கு.

எனக்கு உலகசினிமா பத்தியும் நம்மூர் சினிமா பத்தியும் அறிவு கம்மி. சினிமாவிஷயத்தில் நான் ஈரோட்டுக்காரர் மாதிரி.
ஆனால் எந்த ஒரு ஊடகத்திற்கும் நல்லது கேட்டதுனு இரண்டு கோணம் இருக்கும். ஊடகம் எப்பொழுதும் கத்தி மாதிரி யார் கையில் இருக்குங்கிறதை பொருத்து வேலை செய்யும்.

அந்த வகையில நான் ரசித்த சினிமாவை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

அதற்கு முன் ஒரு எச்சரிக்கை :

வாக்கிங் ஸ்டிக்குக்கு ஜீன்ஸ் டீசர்ட் போட்டு அது இருபத்து அஞ்சு பேரை அடிச்சுட்டு, கேமராவை பார்த்து நான் யாரு தெரியும்ல என கூறும் படங்களை பாத்துரசிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் நீங்க இதுவரைக்கும் வந்ததே பெருசு. என் அடுத்த பதிவை படிச்சுக்குங்க.

முதல் படம் : What the Bleep do we Know

இந்த படம் குவாண்டம் அறிவியல் கொள்கைகளை ஒரு கதையாக விளக்கும் படம். படத்திற்கு நடுவே சில விஞ்ஞானிகள் அறிஞர்களின் உரையும் உண்டு. படத்தின் தலைப்பே பல விஷயங்களை சொல்லிவிடும். ரியாலிட்டி (இருப்பு நிலை) மற்றும் கால பரிணாமம் ஆகியவற்றை கூறும் சிறந்த ஆக்கம். பல அறிவியல் தகவல்களை கொண்டது. 2004 ஆம் ஆண்டு வந்த படம். திரையாக்கம் மற்றும் ஒளியாக்கம் அருமை. பொழுதுபோக்குக்காக பார்க்கவேண்டும் என நினைத்தால் தலைவலி நிச்சயம். :) டாக்குமெண்டரி பாணி திரைப்படம் என்பதால் விவாதமாக எடுத்து பார்க்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள சுட்டி

இரண்டாவது படம் : THE LAST MIMZY

குழந்தைகளுக்காக குழ்ந்தைகள் உலகில் பெரியவர்களின் விஷயத்தை கொண்ட படம். அறிவியல் புனைகதைகள் என்றாலும் 90 நிமிடம் அசையமுடியவில்லை. இயக்குனர் இந்திய கலாச்சாரத்தை தெரிந்தவர் என நினைக்கிறேன். ஸ்ரீசக்ரம் மற்றும் மந்திர உச்சாடனம் போன்ற விஷயத்தை அறிவியல் புனைவில் சேர்த்திருக்கிறார். திபத்திய கலாச்சாரம் என திரைப்படத்தில் காட்டினாலும் அது இந்திய கலாச்சார அம்சமே.(இப்ப தெரிஞ்சுதா எனக்கு ஏன் இந்த படம் பிடிச்சுருக்குனு :) ).

குழந்தைகளை பெற்றோர் நடத்தவேண்டிய முறைகள், குழந்தைகள் உலகம் என படத்தில் அருமையான விவரிப்பு. இதில் வரும் சிறுவன் ஸ்ரீயந்திரத்தை வைத்து சில காட்சிகளை காண்பான். அவை யந்திர சாஸ்திரத்தில் உண்மையில் அப்படித்தான் இருக்கும். இதை தெரிந்து சேர்த்தார்களா தெரியாமல் சேர்த்தார்களா என புரியவில்லை.இவ்விஷயங்கள் ஆன்மீகத்தின் உயர்வில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. திரையில் அந்த சிறுமியின் முகமும் அவளின் நடிப்பு திறனும் விவரிக்க முடியாத அழகு.

மேற்கண்ட இரு திரைபடத்ததில் THE LAST MIMZY என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு காரணம் சொல்ல வந்த அறிவியல் விஷயத்தை கதையாக சொன்ன விதம் அருமை.

கோவை பதிவர்கள் விரும்பினால் ஞாயிறு அன்று பதிவர் சந்திப்பு ஏற்படுத்தி இந்த திரைப்படத்தை திரையிடலாம். அதற்கான இடம் மற்றும் சூழலை ஏற்பாடு செய்கிறேன். திரைப்படம் பற்றி பிற பதிவர்கள் பேச, இதில் இருக்கும் ஆன்மீக விஷயங்களை பற்றி நான் விளக்குகிறேன். இதற்கு கோவை பதிவர்கள் தலைவர் சஞ்சையை நெஞ்சை தொட்டு கோரிக்கைவைக்கிறேன். (ஏதோ நம்மால முடிஞ்சது..! பார்த்து செய்யுங்க சஞ்சய்.) இதற்கு அவர் ஏற்பாடு செய்வாராக....

இதில் ஒரு நன்மை என்ன வென்றால் சென்னை பதிவர்களிடம் நாங்களும் ஒலகபடம் பார்ப்போம்னு சொல்லிகிடலாம்

இந்த இரண்டு படமும் ரொம்ப பழசு. முன்னமே பார்த்துட்டேன்னு சொல்லும் அறிவுலகவாதிகள் பின்னூட்டத்தில் திரைப்படத்தை பற்றி கருத்துக்கள் சொல்லலாம்.

நம்மூரில் THE LAST MIMZY போன்ற திரைப்படங்கள் வந்தால் நன்றாக இருக்கும். இத்தகைய திரைப்படம் எடுக்கப்பட்டால் முதல் காட்சியில் முதல் டிக்கெட் வாங்கி அந்த இயக்குனருக்கு என்றென்றும் உபகாரமாக இருப்பேன்.

Friday, July 17, 2009

மதுரையில் ஒரு அதிசயம்..!

னைவருக்கும் இது இவ்வளவு நாள் நான் சொல்லவில்லை. ரகசியமாக வைத்திருந்தேன். காரணம் அதிசயத்தை வெளியே சொல்ல முடியுமா என்ன?

அப்படி என்ன மதுரையில் அதிசயம் என்று தானே கேட்கிறீர்கள். வேறு ஒன்றும் இல்லை. அடுத்த வார இறுதி முழுவதும் நான் அங்கே தான் இருப்பேன். இதைவிட அதிசயம் வேறு வேண்டுமா?

ஜோதிட பயிற்சி கொடுப்பதற்காக 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மதுரையில் இருக்கிறேன்.

உலகை காக்கும் மீனாட்சியும் சுந்தரேஷ்வரரை சந்திப்பதாக சொல்லி இருக்கிறேன். மதுரை சார்ந்த பதிவர்கள் விருப்பபட்டால் ஒரு எளிய பதிவர் சந்திப்பை செய்யலாம்.

உங்கள் விருப்பத்தை எனது மின்னஞ்சலில் தெரிவியுங்கள். நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்வோம்.


பின் குறிப்பு :

மதுரை வழக்கப்படி எனக்கு கட்-அவுட் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க விருப்பம் இருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சலுகே எனது புகைப்படத்தை அனுப்புகிறேன் :) என தாழ்மையுடன் கூறிக்கொ'ல்'கிறேன்.

Wednesday, July 1, 2009

ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி....

நமது வலைமனையை சார்ந்தவர்கள் முதலில் டைம்பாஸ்க்காக “ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி” என எழுத துவங்குகிறார்கள். அப்பறம் பாஸ் டைம் இல்லாமல் எழுதும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள் எனபது மகிழ்ச்சியான செய்தி. இவ்வாறு முன்னேற்றம் அடைய என்ன காரணம் என திரு சுப்பையா அவர்கள் தன்னுடைய வலையில் எழுதி இருந்தார்.

வாசகர்களின் நோக்கம் அறிந்து அந்த நேரத்திற்கு தேவையாக தலைப்புகளில்
எழுதுவது அதை சுவாரசியமாக எழுதுவது என்பது காரணமாக இருக்கலாம். 'நேரத்திற்கு' தேவையான என கருத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள். எதையும் நேரத்தில் செய்தால் அதிர்ஷ்டத்தின் பார்வை - அந்தாங்க லக்கி லுக் உங்களுக்கு கிடைக்கும்...!

திருவள்ளுவர் சொன்னது போல காலம் கருதி செயல்கள் செய்தால் ஞாலமும் உங்கள் கையில் வரும்.

“அஹோராத்ரா” என்ற வடமொழி சொல்லுக்கு பகல் மற்றும் இரவும் சேர்ந்த காலம் என
பொருள். அச்சொல்லில் இருந்து வந்தது தான் ஹோரா என்னும் சொல். ஹோரா என்றால் முழு நாளில் ஒருபகுதி என்று பொருள். ஹோரா என்ற இச்சொல் பிற்காலத்தில் ஹவர் என ஆங்கிலத்தில் மாறியது. ஓரை என இதை தமிழ் படுத்தினாலும் ஹோரா என்ற மூல சொல்லில் அழைப்போம்.

(இல்லை என்றால் - “காலத்தில்” ஒருவர் ஓரை என்பது தமிழ் சொல் தான் என பிற்காலத்தில் இடுக்கை இடுவார். :) )

ஹோரை என்பது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நேரம் என கணிக்கப்படுகிறது. வாரத்தில் ஏழு கிழமைகள் ஏழு கிரகங்களின் தன்மையால் ஆளப்படுகிறது. நவக்கிரஹங்களில் உருவ நிலையில் இருப்பது ஏழு கிரகங்கள். ராகு கேது என்பது நிழல் கிரகம் அல்லது அருவ கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. அதனால் முழுமையான கால கணக்குகளுக்கு ஏழுகிரகங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஏழுகிரஹங்கள் வார நாட்களை ஆட்சி செய்வது போல ஒவ்வொரு நாளில் இருக்கும் உட்பகுதியையும் ஆட்சி செய்கிறது.

சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை (சுமார் 60 நாழிகை) ஒரு நாள் என கணிக்கப்படுவது நமது நாள் கணக்கு. சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு கிரகம் வீதம் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும். இதற்கு ஹோரா என பெயர்.

உதாரணமாக சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று சூரிய உதயம் காலை 6 மணி எனக்கொண்டால் 6 முதல் 7 வரை சூரிய ஹோரை ஆகும்.

ஒவ்வொரு நாளின் அதிபதியும் அந்த வார நாளில் முதல் ஹோரையை ஆட்சி செய்து துவக்குவார்கள். ஹோரை அமைப்பை மனதில் வைத்துகொள்ளுவது எளிது.

ஒவ்வொரு நாளுக்கும் அதிபதியை பின்னோக்கு - ஒன்று விட்டு பயன்படுத்தினால் போதும். உதாரணமாக திங்கள் கிழமை முதல் ஹோரை சந்திரன். அடுத்த ஹோரை திங்கள் கிழமையிலிருந்து பின்னோக்கு சென்றால் ஞாயிறு அதை விட்டு அடுத்த நாள் சனி.

எனவே சனி ஹோரை. சனி கிழமை பின்னோக்கி வெள்ளி - அதை விட்டு வியாழன். திங்கள் கிழமை மூன்றாம் ஹோரை குரு.

ஞாயிறு அன்று ஹோரையை பார்த்தோமானல் அதன் அதிபதிகள் கீழ்கண்ட நிலையில் இருப்பார்கள்.

அதிபதி : சூரியன் - சுக்கிரன் - புதன் - சந்திரன் - சனி - குரு - செவ்வாய்
கிழமை : ஞாயிறு - வெள்ளி - புதன் - திங்கள் - சனி - வியாழன் - செவ்வாய்

இப்படியாக 7 மணி நேரம் வீதம் 7 கிரகங்கள் மூன்றே கால் முறை ஒரு நாள் முழுவதும் ஆட்சி செய்யும்.

மனக்கணக்கிலேயே இதை கணிக்க முடியும். இதையும் மீறி எனக்கு மூளை குறைவு -ஞாபக சக்தி குறைவு என சொல்லுபவர்களுக்கு :)) சுப்பையா அவர்களின் பதிவில் இருக்கும் அட்டவணையை பார்க்கவும். சுட்டி

வெளி நாட்டில் வசிப்பவர்கள் சூரிய உதயத்தை தான் கணக்கில் கொள்ள வேண்டும். Day Light Saving கணக்கில் கொள்ள கூடாது.

பஞ்சபட்சி சாஸ்திரம் என சாஸ்திரத்தின் ஒரு பகுதிதான் ஹோரா எனும் காலமுறை. ஹோரையை பயன்படுத்தும் தன்மை வேண்டும் என்றால் முழுமையாக பஞ்சபட்சி சாஸ்திரம் தெரிந்திருந்தால் முடியும். இல்லை என்றால் அது ஒரு கால கணக்கு அவ்வளவே.

தற்சமயம் நாம் காலத்தை எண்களால் கணிக்கிறோம். ஒரு மணி , ரெண்டு மணி என...24 மணி நேரம். நீயூமராலஜியில் 5ஆம் எண் நல்லது, 8ஆம் எண் கெட்டது என்பார்கள். இக்கருத்தை நாம் பார்க்கும் கடிகார மணியில் இணைத்துக்கொண்டு 8மணி என்பது கெட்ட நேரம் என சொன்னால் அது எவ்வாறு முட்டாள்தனமோ அது போன்றது சனி ஹோரை கேட்டது குரு ஹோரை நல்லது என சொல்லுவதும்.

இன்று காலை 10 மணிக்கு உலக மக்களுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான செயல் நடந்திருக்குமா? அது போன்றது தான் ஹோரையை வைத்துகொண்டு சுப நேரங்களை பொத்தம் பொதுவாக தேர்ந்தெடுப்பதும்.

உங்கள் ஜாதகத்தில் சனி என்ற கிரகம் சிறப்பாக இருந்தால் சனி ஹோரை நல்ல காலம்தான். குரு மோசமாக இருந்தால் குரு ஹோரையில் நீங்கள் அனுபவிப்பது வெளியில் சொல்ல முடியாது. ஆகவே ஹோரை காலத்தை உங்கள் பிறப்பு ஜாதகத்துடன் தொடர்புப்படுத்தியே பயன்படுத்த வேண்டும் அப்பொழுது தான் சரியான பலன்கிட்டும். அப்படி இல்லாமல் மேம்போக்காக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் நீங்கள் பகுத்தறிவாளராக நேரிடும். :)

ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் முதல் ஹோரை அந்த நாளின் அதிபதியால் ஆட்சி செய்யபடுகிறது அல்லவா அந்த நேரம் எல்லா நாளும் நல்ல நேரம் தான். [ சனிக்கிழமை முதல் ஹோரை சனி என்றாலும் நல்ல காலம் தான்].

ஜோதிடத்தில் எண்ணற்ற கால கணிதம் உண்டு. அதில் ஒருவகைதான் ஹோரா எனும் பகுப்பு. ஆதலால் இதை பயன்படுத்துவது என்றால் இதை மட்டுமே பயன்படுத்தவேண்டும். உதாரணமாக ராகு காலம் , எமகண்டம் காலத்தையும் ஹோராவையும் இணைத்து பயன்படுத்துகிறேன் என்றால் உங்களை காலதேவந்தான் காப்பாற்ற வேண்டும். காரணம் சில நல்ல ஹோரா நேரத்தில் பாதி அளவு ராகு காலத்தில் வரும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

இவ்வாறு காலத்தை கருதி செயல்படுங்கள் இல்லை என்றால் டவுசர் கிழியும் தாவு தீரும்... :)

பி.கு : இக்கட்டுரையை எழுத தூண்டிய திரு சுப்பையா அவர்களுக்கு நன்றிகள் பல.


Friday, June 5, 2009

பதிவுலக மேனியா



மேனியா என்ற வார்த்தையை பார்த்ததும் ஏதோ மனோதத்துவ விஷயம் என நீங்கள் நினைத்தால் , நீங்கள் தப்பான இடத்திற்கு வந்ததாக அர்த்தம்.


மேனி என்ற தமிழ் வார்த்தைக்கு உடல் என அர்த்தம். பதிவுலகின் உடல் முழுவதும் இந்த விஷயம் பீடித்திருப்பதால் இதை “மேனியா” என கூறிகிறேன். கடந்த பத்து நாட்களாக பன்றிக்காய்ச்சலை விட ஒரு மகாவியாதி பதிவுலகை ஆட்டிப்படைக்கிறது. ஆம் அது தான் தொடர்பதிவு காய்ச்சல்.

யாரோ ஒரு மஹானுபாவலு இதை தொடங்கி வைத்தாலும் வைத்தார் நம் மக்கள் அதை பொங்கல் கரும்பு போல கடித்து மென்று சுவைக்கிறார்கள்.

ஆரம்பித்தது சில எளிய பதிவர்களிடம் என்றாலும் அது பரவிய வேகம் அதிகமே. மெல்ல பிரபல பதிவர்களை வந்து அடைய துவங்கி உள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகள். உதாரணம் வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? பதில் எழுதும் பொழுது என்ன நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள்.

என்ன கேள்வி இது சாமி? முடியல. இதை தெரிஞ்சு என்ன செய்ய போறாங்களோ.

ஒன்று இரண்டல்ல 32 கேள்விகள். ஸ்ப்ப்பா....

அலுவலகத்தில் ரொம்ப பிஸி பதிவு போடவே வரமுடியரது இல்லை என்ற பதிவர்கள் எல்லாம்... இரவு இரண்டு மணிக்கு உட்கார்ந்து இதற்கு பதில் எழுதுகிறார்கள். இது என்ன IAS எக்ஸாமா?

தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை இவர்களிடமிருந்து தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் உச்சக்கட்டம் ஒரு பதிவர் மூன்று பேரை அழைக்கவேண்டுமாம். இதில் MLM வேறு.

சிலர் யாரையும் அழைக்கவில்லை. அதற்கு ஒரு பதிவர் பின்னூட்டத்தில்
“நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு நான் எழுதவா என்கிறார்” :)

இதற்கெல்லாம் மேல் ஒருவர் சாதனை செய்திருக்கிறார். 32 கேள்விக்கும் ஒரு முறை பதில் சொன்னாலே கண்ணை கட்டும். அவர் இரண்டு முறை வெவ்வேறு விதமா பதில் சொல்லி தனது பதிவு வறட்சியை தனித்துள்ளார்.

(நேற்று) இப்பொழுது ஒரு பதிவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு சென்னையிலிருந்து அழைப்பு. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் மறக்காம பதில் சொல்லுங்க என்று. இரண்டு பதிவர்களும் அரோக்கியமான நல்ல விஷயங்களை நீயா நானா என போட்டி போட்டு பதிய கூடியவர்கள். இவர்களுக்கு எதற்கு இந்த விளையாட்டு ?

இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.

கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.

இன்று உலக சுற்றுசூழல் தினம். இவர்களின் தொடர்பதிவுகள் அச்சு பிரதியாக வந்திருந்தால் இவர்களை போட்டுத்தாக்கும் மாவோயிஸ்ட் தலைவனாக மாறி இருப்பேன். காரணம் அத்தனை மரங்களை அழித்து காகிதம் உற்பத்தி செய்து அதில் தொடர்பதிவு எழுதினால் பூமி சூடாகாதா?

வலையில் எழுதினாலும் கணினி மின்சாரம் இதனால் பூமி சூடாகும். என்ன செய்வது யாரும் தொடர்பதிவு வேண்டாம் என சொல்லுவதில்லையே..

நீ மட்டும் இதற்காக ஒரு பதிவு எழுதி பூமியை வெப்பமடைய வைக்கவில்லையா என கேட்கலாம். இதையெல்லாம் படித்து எனது தலை சூடாவதை காட்டிலும் இந்த பதிவு ஏற்படுத்த போகும் சூடு குறைவுதான். :)

எழுத்து வறட்சி கேள்விபட்டு இருக்கிறேன் அதற்காக இப்படியா..

இப்படிக்கு
ஆரோக்கியமான வலைபதிவுகளை ஏதிர்பார்த்து

ஏமாந்த சாமானியன்

டிஸ்கி 1 : இந்த இடுக்கையில் குறிப்பிட்ட பதிவர்கள் யார் என கிசுகிசுக்க வேண்டாம் :). அவர்களாகவே பின்னூட்டம் இடுவது நல்லது :)

டிஸ்கி 2 : என்னை பற்றி “அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.”
என்று சொன்ன நண்பர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இந்த மொக்கச்சுவை பதிவை சமர்ப்பிக்கிறேன். (மொக்கை+ நகைச்சுவை = மொக்கச்சுவை) :)