தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை மிகவும் வித்தியாசமானது. பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தழுவி பார்க்கப்படும் ஜோதிட முறையாகும். சாதாரண மனிதனுக்கே ஜோதிடம் பார்க்க ஜோதிடர் எத்தனையோ சூத்திரங்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது அல்லவா? அப்படிப் பார்த்தால் கடவுளுக்கே ஜோதிடம் பார்க்க எவ்வளவு ஆற்றலுடன் பார்க்க வேண்டும் என யோசித்துப் பாருங்கள்.
ஜோதிடரிடம் நாம் ஆருடம் பார்க்க செல்லும் பொழுது நாம் வரும் நேரத்தை கொண்டு அவர் கிரகங்களை கணிப்பார். நாம் அவரின் இடம் விட்டு அகன்றதும் ஜோதிடர் நம்மை பற்றிய விஷயங்களை விட்டு அடுத்தவருக்கு ஜோதிடர் பார்ப்பார்.
ஆனால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தை கோவில்களில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்பதி நியதி. எளிமையாக சொல்லுவதானால் மனிதன் ஜோதிடரை தேடி செல்ல வேண்டும், தேவப்பிரசன்னத்தில் ஜோதிடர் கடவுளை தேடிப்போக வேண்டும்...!
கோவிலை நோக்கி பிரசன்னம் பார்க்க வீட்டை விட்டு கிளம்பும் நேரம், அச்சமயம் நடக்கும் சம்பவங்கள் (நிமித்தம்) துவங்கி கோவிலில் பிரசன்னம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேரும் வரை ஜோதிடர் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொள்வார். அவர் வீடு முதல் வீடு வரை நடந்த நிகழ்வுகள் கோவிலில் ஏற்பட்ட ஆருடம் இவை அனைத்தையும் ஒன்றினைத்து அடுத்த நாள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.
இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில் தேவப்பிரசன்னம் குழுவாகத்தான் பார்ப்பார்கள் என்றேன் அல்லவா? அவ்வாறு குழுவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் வீடு முதல் வீடு வரை நிகழ்வுகளை கவனிப்பார்கள். வெவ்வேறு ஊரில் இருந்து வந்து செல்லும் ஜோதிடர்களுக்கு, அடுத்த நாள் அனைவரும் கூடி விவாதிக்கும் பொழுது எல்லோருக்கும் நடந்த சம்பவம் மிகச்சரியாக ஒன்று போலவே இருக்கும். அனைவரும் பார்த்தது, கேட்டது, பேசியது என ஏதோ புரோக்கிராம் செய்தது போல இருக்கும்...!
நிமித்த அடிப்படையில் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருப்பதை கொண்டு இயற்கை அனைவருக்கும் பொதுவாக ஏதோ ஒரு கருத்தை கூற விரும்புகிறது என கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள்.
கோவிலுக்கு செல்லும் பொழுது நடக்கும் நிகழ்வுகள் இறந்தகாலத்தையும், கோவிலில் கிடைக்கும் பிரசன்னம் நிகழ்காலத்தையும், கோவில் முதல் வீடு வரை வரும் நேரம் நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தையும் குறிக்கும் என்பது தேவப்பிரசன்னத்தின் அடிப்படை சூத்திரமாகும்.
உதாரணமாக கோவிலுக்கும் செல்லும் நேரத்தில் அசிங்கமான அருவெறுப்பான விஷயங்களை காண நேர்ந்தால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவமானங்கள் நடந்து உள்ளது என்று குறித்துக்கொள்வார்கள். கோவிலில் கிடைக்கும் பிரசன்னத்தின் விடை முன்பு நடந்த செயலால் தற்சமயம் இறைநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது எவ்வாறு இருக்கிறது என்பதை உணர முடியும். பின்பு வீட்டிற்கு வரும் சூழல் நடக்கும் சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இறை நிலை கோவிலில் எவ்வாறு மேம்படுத்த முடியும் அல்லது நிலைபடுத்த முடியும் என்பதை காட்டும்.
தேவப்பிரசன்னம் பார்க்கும் நாள் பிறகு இரு நாட்கள் எடுத்துக்கொண்டு ஜோதிட குழு விவாதம் செய்யும். பிறகு அவர்கள் செய்த ஆய்வை பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே வெளியிட வேண்டும் என்பது நியதி. கோவில் நிர்வாகத்திடமோ அல்லது கோவில் சார்ந்த ஆட்களிடமோ பிரசன்ன பலன்களை தனியே கூறக்கூடாது. அவர்களையும் பொதுமக்களுடன் நிற்க சொல்லியே கூற வேண்டும் என்பது தேவப்பிரசன்னம் கூறும் நியதியாகும்.
ஜோதிடர்கள் குழு கூறும் பலன்களை பொதுமக்களுக்குள் அமர்ந்திருக்கும் ஜோதிடம் தெரிந்தவர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். அதற்கு ஜோதிட குழு தக்க பதில் கூற வேண்டும்.
நாங்கள் தேவப்பிரசன்னமே பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் என ஆணவம் இல்லாமல், பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு மிகப்பணிவுடன் பதில் கூற வேண்டும்.
லக்னத்தில் இவ்வாறு கிரகம் இருந்ததற்கு இன்ன பலன் என நீங்கள் கூறுகிறீர்கள் ஏன் இப்பலன் இவ்வாறு இருக்கக்கூடாது என ஒருவர் கேள்வி எழுப்பினால், ஏன் அவ்வாறு செயல்படாது என மிகவும் தன்மையாக விளக்க வேண்டும்.
உனக்கு ஜோதிடம் எந்த அளவு தெரியும்? இதையெல்லாம் கேள்வி என்று கேட்கிறாயா என அவர்களை கேட்கும் அதிகாரம் ஜோதிடர்களுக்கு இல்லை..! ஏன் என்றால் தேவப்பிரசன்னம் என்ற பணி செய்ய வந்தவர்களே தவிர அவர்கள் இறைவன் கிடையாதே..!
ஒரு முறை தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிட குழு ஒரு தவறு செய்துவிட்டது. அத்தவறு மிகவும் முட்டாள் தனமானது. ஆனால் மனிதர்கள் தங்கள் மூளையால் கண்டுபிடிக்க முடியாத சிக்கல் கொண்டது..! ஜோதிடக்குழு பொதுமக்களின் முன்னிலையில் பலன் விளக்கும் பொழுது அதை ஒருவர் கண்டறிந்து ஜோதிடர்களை சரியாக்கினார்.
மனிதனால் கண்டறிய முடியாததை ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் வேறு யாராக இருக்க முடியும்?
(பிரசன்னமாகும்)