Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, August 28, 2011

தேவப்பிரசன்னம் பகுதி 4


“அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!” என அந்த ஜோதிடர் கூறியவுடன் ஊர் மக்கள் திகைத்தார்கள்.

நீங்கள் வெளியூரை சேர்ந்தவர் கொடி ஏற்றும் பொழுது ஏதேனும் விபரீதம் நடந்தால் எங்கள் ஊருக்கு அது அவப்பெயராக ஆகிவிடும். மேலும் சாஸ்திரம் கற்ற உங்களுக்கு விபரீதம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

“நானாக இம்முடிவை எடுக்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்தியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இறைவனின் சன்னிதியில் நடக்கும் இறப்புக்கு ஒரு விடையை நாம் கண்டறிய வேண்டும். என்னை கொடியேற்ற அனுமதியுங்கள்” என ஜோதிடர் கூறினார்.

திருவிழா கொடியேற்றும் நாளும் வந்தது. கோவில் புதுபொலிவுடன் காட்சியளிக்கப்பட்டது. ஊர் மக்கள் பக்தியுடனும் ஒருவித பய உணர்வுடன் குழுமி இருந்தனர். கோவிலின் உள்ளே கொடி பூஜை செய்யப்பட்டது. செண்டை மேழம் முழுங்க, துந்துபிகளும் கொம்பும் ஒலிக்க கொடி கோவிலின் பலிபீடம் அருகே கொண்டு வரப்பட்டது.
கொடியேற்றும் தருணம் வந்தது. மேழம் உச்ச நிலையில் வாசிக்கப்பட்டது. கொடிமரத்தையும் கொடியையும் ஜோதிடர் விழுந்து வணங்கினார்.

வணங்கி எழுந்தவர் கொடியேற்றாமல் திடிரென செண்டை மேழம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒரு முதியவரின் இரு கைகளை பிடித்துக் கொண்டார். மங்கள ஒலியுடன் இருந்த கோவில் திடீரென நிசப்தமாகியது.

என்ன நடக்கிறது என மக்கள் புரியாமல் பார்க்க.. ஜோதிடர் அந்த முதியவரை பார்த்து கேட்டார், “ஏன் இப்படி செய்கிறீகள்? இறைவன் சன்னிதிக்கு முன் ஏன் இந்த விபரீதம்? உண்மையை இறைவன் முன்னால் கூறுங்கள்”

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர் பெருங்குரல் எடுத்து அழுதார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த முதியவர் உண்மையை கூறத் துவங்கினார்.


“இக்கோவிலில் சிறுவயது முதல் நான் மேழம் வாசிக்கிறேன். என் பன்னிரெண்டு வயது முதல் செண்டை மேழம் கற்று வந்தேன். செண்டை தாளத்தில் ஒருவிதான வாசிப்பு முறையை என் குருவிடம் கற்றேன். . செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார். இசையின் மூலம் தற்காப்பு கலையை ரகசிய பயிற்சியாக கற்றுக்கொண்டேன். என் சிறிய வயதில் அதை சோதிக்க எண்ணி இக்கோவில் கொடியேற்றத்தில் பயன்படுத்தினேன். என் வாசிப்பால் ஒரு விளைவு ஏற்படுவதை கண்டு எனக்குள் ஒருவித பெருமிதம் அடைந்தேன்.

யாரும் இதை கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் இங்கே செய்து பார்த்தேன். என் வாசிப்பே பலரது மரணத்திற்கு காரணமாக இருந்தது. இனி இதுபோல செய்ய மாட்டேன், இனிவரும் காலத்தில் யாருக்கும் இம்முறையை கற்றுக்கொடுக்க மாட்டேன். இறைவனும் ஊர்மக்களும் என்னை மன்னிக்க வேண்டும். ” எனக் கூறு ஊர் மக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.

அவரை தவிர்த்து பிறர் வாசிக்க, கொடியேற்றப்பட்டது. திருவிழா துவங்கியது. ஜோதிடரின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள். இது எப்படி சாத்தியம் என வியப்புடன் ஜோதிடரிடம் கேட்டார்கள்.

“தேவப்பிரசன்னம் வைக்கும் பொழுது சத்ருஸ்தானம் மற்றும் அபஸ்தானம் என்னும் இடத்தில் மாந்தியுடன் சனி என்ற கிரகம் அமர்ந்து கேடு பலனை அளித்து வந்தது. சனி அமர்ந்த ராசி காற்று ராசி இவைகளை முடிவு செய்து பார்க்கும் பொழுது முதிய வயதுடைய(சனி) மேழம்(காற்று-ஒலி) வாசிக்கும் ஒருவரால் அமங்கலம் ஏற்படுகிறது என்பதை கண்டுகொண்டேன். உதய லக்னத்திற்கு சனி நான்காம் இடத்தில் இருந்தது என்பதையும் குறித்துக் கொண்டேன்.

கொடியேற்றும் நாளில் பலிபீடத்தின் அருகே நின்று வாசித்தவர்களில் ஒரு முதியவர் நான்காவது நபராக நின்று வாசித்துக் கொண்டிருந்தார். அவர் இச்செயலுக்கு காரணம் என பிரசன்ன ரீதியாக முடிவு செய்து கண்டறிந்தேன்” என்றார்.

பதினைந்து வருடத்திற்கு பிறகு ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினார்கள்.

தேவப்பிரசன்னம் என்பது ஒரே ஒரு ஜோதிடர் மட்டும் பார்க்கப்படும் ஜோதிடம் அல்ல. குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். மேலும் அந்த ஜோதிடர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் சாஸ்திரம் நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.

இக்குழுவுக்கு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் பிரசன்ன ஜாதகத்தில் கண்ட விஷயங்களை நான்கு நாட்கள் விவாதிப்பார்கள் பிறகே கருத்துக்களை வெளியிடுவார்கள்.

மேற்சொன்ன சம்பவத்தின் பொழுது நானும் ஜோதிடக்குழுவில் ஒரு நபராக இருக்கும் அனுபவம் வாய்க்கப்பெற்றேன். தேவப்பிரசன்னம் என்னும் சாஸ்திரத்தை கற்றும் அதை அனுபவ ரீதியாக உணர்ந்தும் கொண்டதாலேயே உங்களுடன் இக்கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிகிறது.

சரி...தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது? படிபடியாக விளக்குகிறேன்..

(பிரசன்னமாகும்)

16 கருத்துக்கள்:

சேலம் தேவா said...

செண்டை மேளத்தின் மூலம் மரணமா..?! இந்த விடயங்களை வைத்து பல நிஜம் நடந்தது என்ன நிகழ்ச்சிகளை நடத்தலாம் போலயே...சுவாரசியமான கட்டுரை குருவே.

geethasmbsvm6 said...

மிக அரிய செய்தி. உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டம் கொடுக்க முடிந்ததில்லை. இது மிக முக்கியமான பதிவு. இம்மாதிரி நடக்கும், நடந்திருக்கும் என்பதை என்னால் முழுமனதாக நம்பவும் முடியும். நன்றி.

பிரகாசம் said...

இந்த மேள வாசிப்பின் மூலம் மரணத்தையே நடத்த முடியும் என்றால் முறையான தாளத்தில் வாசிப்பதன்மூலம் பல நன்மைகளையும் அளிக்கமுடியுமல்லவா? அதனால்தான் கேரள ஆலயங்களில் செண்டை மேளம் பரவலாக வழிபாட்டின்போது பயன்படுத்தப்படுகிறது போலும்

சுரேகா said...

ஆச்சர்யமான உண்மை!

அதை பிரசன்னத்தின் மூலம் கண்டுகொண்டதுதான் உச்சகட்டம்!

ஒரே மாதிரியான தாளகதியால், மனிதர்களின் மூளையில் , இதயத்தில் தாக்கங்கள் ஏற்படுத்தமுடியும் என்று இப்போதுதான் மேலை நாடுகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆனால், நமது முன்னோர்கள்...?

நாம் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு ...வெளிநாட்டு வெண்ணெய்க்கே அலையும் கூட்டமாகிவிட்டோமே ஸ்வாமி?

MANI said...

மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களை தந்துள்ளீர்கள் ஸ்வாமி. தேவ பிரசன்னம் குறித்து மேலும் பல ஜோதிட விதிமுறைகளை விளக்கமாக எழுத வேண்டுகிறேன். நன்றி.

திவாண்ணா said...

:-)

KARIKALVALAVAN said...

yes swami proper music can help as to come out from any disease
thank you swami

Anonymous said...

செண்டை மேளம் தான் என்று இல்லை எந்த ஒரு இசையாலும் இயலும்

மதி said...

படிக்க படிக்க நிறைய (அதிசயமான) புது விஷயம் கிடைகிறது....உங்கள் சேவையை தொடருங்கள்....

நன்றி....

Pattarai Pandi said...

சுவாமி,
//மேற்சொன்ன சம்பவத்தின் பொழுது நானும் ஜோதிடக்குழுவில் ஒரு நபராக இருக்கும் அனுபவம் வாய்க்கப்பெற்றேன்//
அப்படினா அந்த பெரியவர் கையை பிடிச்சு இழுத்து நீங்க தானோ?

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சேலம் தேவா,
திரு பிரகாசம்,
திரு சுரேகா,
திரு மணி,
திரு திவா,
திரு மதி,
திரு கரிகால்வளவன்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி கீதா சாம்பசிவம்,

உங்களின் முந்தய பின்னூட்டத்திற்கு பதில்.

ப்ரஷ்னம் என்று எழுதுவதே சரி. ஆனால்
படிப்பவர்கள் கவனம் சிதறும் என்பதால் பழக்கப்பட்ட வார்த்தையாகிய பிரசன்னம் என்றே எழுதுகிறேன்.

உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பட்டரைபாண்டி.

//அப்படினா அந்த பெரியவர் கையை பிடிச்சு இழுத்து நீங்க தானோ?//

என்ன கையை பிடிச்சு இழுத்தியா?

:))

Sanjai said...

அருமை !! keep going ..

Swami said...

அந்த மேளத்தின் ஓசை எல்லாராலும் தானே கேட்கப்படுகிறது, ஒரே ஒருத்தரை மட்டும் எப்படி பாதிப்பு அடைய செய்கிறது?

ஸ்வாமி ஓம்கார் said...

//அந்த மேளத்தின் ஓசை எல்லாராலும் தானே கேட்கப்படுகிறது, ஒரே ஒருத்தரை மட்டும் எப்படி பாதிப்பு அடைய செய்கிறது?

//
கட்டுரையில் கீழ்கண்ட வரிகளை நீங்கள் படிக்கவில்லையா?

”--------செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார்--------”