Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, August 23, 2011

தேவப்பிரசன்னம் பகுதி 3

தென்னிந்தியாவில் கேரள கட்டுமான முறைக்கும் தமிழக முறைக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள். கோவில்களின் கூறை தமிழகத்தில் கற்களால் கட்டப்பட்டால் கேரளாவில் ஓடு கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். பூஜை விதிகள் ஒன்றாக இருந்தாலும் ஆகமம் என்ற நிலை கேரளாவில் வேறு தமிழக கோவில்களில் வேறாக அமையும்.

இதற்கு காரணம் பரசுராமர் கேரளாவை உருவாக்கி அதன் பூஜா முறைகளை நிர்ணயம் செய்தார் என புராணங்கள் கூறுகிறது. அவ்வாறு நிர்ணயம் செய்யும் பொழுது இதற்கு முன் இருக்கும் செயல் முறைகளில் சில மாற்றங்கள் செய்தார். பிற்காலத்தில் பூஜா முறைகளில் சந்தேகம் வந்தாலோ அல்லது கோவிலின் இறை நிலை அமைப்பை மேம்படுத்துவதற்கு ஆலோசனை தேவைப்பட்டால் யாரிடம் கேட்பது?

இறைவனிடத்திலேயே கேட்டுக்கொண்டால் பிரச்சனை தீர்ந்தது அல்லவா? இறைவனுடன் ஐம்புலன் கொண்டு பேசுவது என்பது அனைவருக்கும் சாத்தியம் அல்ல. மேலும் ஒருவர் நான் இறைவனிடம் பேசிவிட்டேன் இப்படித்தான் செய்யச்சொன்னார் என பொய் கூறவும் வாய்ப்பு உண்டு.

இதனால் இறைவனுடன் பாமரனும் உரையாட பரசுராமரால் ஊக்குவிக்கப்பட்ட முறையே தேவப்பிரசன்னம்..!

கோயில் நடை முறைகளில் இறைவனின் ஆற்றல் அங்கே நிலை நிறுத்தப்படுகிறது. இறையாற்றல் எல்லா இடத்திலும் இருந்தாலும், வழிபாட்டு ஸ்தலங்களில் முழுமையாக குவிக்கப்பட்டு மக்கள் முழுமையாக உள்வாங்கும் தன்மையில் அமைக்கப்பட்டது.

இவ்வாறு மக்கள் உள்வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது அங்கே நிறுவப்பட்டுள்ள இறையாற்றல் முழுமையாக குவிக்கப்படாமல் இருந்தாலோ கோயில் இருந்து பிரயோஜனம் இல்லை அல்லவா? அச்சூழலில் தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டு இறையாற்றல் நிலை நிறுத்த என்ன செய்ய வேண்டும் ? ஏதேனும் யாகங்கள் அல்லது மந்திர ஜபம் செய்ய வேண்டுமா என முடிவு செய்யப்படும்.

கேரளக் கோவில்களில் தெய்வீகத்தன்மை நிறைந்திருக்க இதுவும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

கோயில் திருவிழாவிற்கு முன் ஒவ்வொரு வருடமும் தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை வழக்கத்தில் உண்டு. இன்றும் பல கோவில்களில் பார்க்கப்படுகிறது. தேவப்பிரசன்னம் மூலம் ஜோதிடர்கள் பல்வேறு விஷயங்களை மக்களுக்கு இறையாற்றல் மூலமாக கணித்து சொல்லி இருக்கிறார்கள்.

தேவப்ரசன்னத்தின் தன்மையை உணர ஓர் உண்மை சம்பவத்தை கூறுகிறேன். தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒரு பிரபல கோவிலில் விசித்திரமான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அங்கே திருவிழாவிற்கு முன் கொடி ஏற்றம் நடைபெறும் சமயம் கொடி ஏற்றுபவர் சுருண்டு விழுந்து இறந்துவிடுவார்...!

இதனால் திருவிழா நடக்காமல் தடைபடும். அடுத்த சிலவருடம் கழித்து மீண்டும் முயற்சி செய்வார்கள். அவ்வாறே கொடி ஏற்றுபவர் இறந்துவிடுவார். ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு மரணம் பார்த்த பிறகு அந்த கோவிலுக்குள் செல்லவே அனைவரும் பயந்து ஒதுங்கினார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் மக்கள் மீண்டும் திருவிழா கொண்டாட முன் வந்தார்கள். அதற்கு முன் சிலரின் வழிகாட்டுதலில் தேவப்பிரசன்னம் பார்த்துவிடுவது நல்லது என முடிவு செய்தார்கள். தெய்வம் தங்கள் மேல் கோபமாக இருக்கிறது போல என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆர்வமாய் இருந்தார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாளும் வந்தது. தேவப்பிரசன்னம் பார்த்து விட்டு அந்த ஜோதிடர்கள் குழு தலைவர் சொன்னார் “ அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!”

கிராம மக்கள் திகைத்தார்கள். உங்களை போல....

(ப்ரசன்னமாகும்)

14 கருத்துக்கள்:

geethasmbsvm6 said...

ப்ரச்னமா? பிரசன்னமா?? புரியலை.

geethasmbsvm6 said...

ப்ரஷ்னம்னு சொல்லியும் கேட்டிருக்கேன்.

Guru said...

ஸ்வாமி, நான் கேரள கோயில்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள கட்டுமான முறைகளைக் கண்டு வியப்பதுண்டு. அங்குள்ள கட்டுமானங்கள் சக்தி மிக்க பிரமிடுகளை ஒத்திருப்பதாய் இருக்கிறது.. பதிவில் குறிப்பிட்டுள்ள படி சக்தி அல்லது ஆற்றல் குவிக்கப்படுகின்ற முறையில் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரசன்னம் மூலம் ஆற்றலூட்டும் வழிமுறைகளையும் முறையே செய்கின்றனர். இங்கு அதெல்லாம் பேசினால் பகுத்தறிவு குறித்த சந்தேகம் எழுப்பப்படுவது வருத்தம்..

Guru said...

ப்ர்ச்னமா? பிரசன்னமா?

நமக்கு ப்ர்ச்னம் வந்தால் பிரசன்னம் பார்க்க வேண்டியுது தான். ஹி ஹி..

Sanjai said...

Interesting, நல்லா கீது :)

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி கீதா சாம்பசிவம்,

இது ப்ரச்ன என்ற வடமொழி வார்த்தை தான்.

ப்ரசனம் என்றாகி முதல் எழுத்து ஒற்று வரக்கூடாது என்பதால் பிரசன்னமாகியது.

க்ருஷ்ன என்பது கிருஷ்ண என்றாகி கிருட்டினன் ஆன கதையாக...

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குரு,
திரு சஞ்சய்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தேடல் said...

அய்யா ,
கேரளா கட்டடக்கலைக்கும் பிரமிடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது
அடியேனின் தாமையான கருத்து.
இந்தியாவிலேயே அதிகம் மழை பெரும் மாநிலங்களுள் கேரளாவும் ஒன்று
மழைநீர் அதிகம் தேங்காமல் இருக்க வேண்டி அவர்கள் சரிவு தளம் (Pitched roof or Sloped roof )
அமைபில் தங்களின் கோயில்களை வடிவமைத்து உள்ளனர் ,தவிர இதற்கும் பிரமிடுகளுக்கம்
எந்த தொடர்பும் இல்லை .தவிர கேரளா மக்களின் வீடுகளும் இதே விதி கடைபிடிக்கப்பட்டுள்ளது

உலகில் உள்ள பெரும்பான்மையான கோயில்களிலும் ஆற்றல்(சமமாக) குவிக்கப்பட்டு உள்ளது
அதனை நாம் உணரும் விதத்தில் தான் பாகுபாடு உள்ளது

தவறு இருந்தால் மன்னிக்கவும் .

அடியேனுக்கு அடியேன்

virutcham said...

சோழி போட்டு பார்த்து சொல்லுவதும் தேவப் பிரச்னமும் ஓன்று தானா அல்லது கோவிலில் பார்க்கபடுவது மட்டும் தேவப் பிரச்னம் என்று சொல்லப்படுமா?

மதி said...

கிராம மக்கள் திகைத்தார்கள். உங்களை போல....

ஆமாம்.....

சுரேகா.. said...

சுவாரஸ்யமாகவும், ஆழமான தகவல்களுடனும் இருக்கிறது ஸ்வாமி!
அடுத்த பாகத்துக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ADMIN - அனுபவம் புதுமை said...

அற்புதமான தொகுப்பும் ஆழமான விடயங்களும் சுவாமி. ஆனால் பதிவிடும் இடைவெளி அதிகமாக இருக்கிறதே? குறைக்க முடியாதா?தொடரும் போடும் இடத்தில் மட்டும் எப்படி மெகா சீரியல்களை விஞ்சி விடுகிறீர்கள்?

ADMIN - அனுபவம் புதுமை said...

அற்புதமான தொகுப்பும் ஆழமான விடயங்களும் சுவாமி. ஆனால் பதிவிடும் இடைவெளி அதிகமாக இருக்கிறதே? குறைக்க முடியாதா?
தொடரும் போடும் இடத்தில் மட்டும் எப்படி மெகா சீரியல்களை விஞ்சி விடுகிறீர்கள்?

geethasmbsvm6 said...

பிரசன்னம் என்றால் பொருளே மாறிவிடுகிறதே ஸ்வாமிகளே??? ப்ரஷ்னம் அல்லது ப்ரச்னம் என்றே சொல்லலாமோ????