ஒரு பேராசை பிடித்த மனிதன் இருந்தான். தனக்கு எல்லாமும் வேண்டும், அனைத்தும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கடவுளை நோக்கி தவம் இருந்தால் அவர் நம் முன் தோன்றி அனைத்தையும் வழங்குவார் என யாரோ சொன்னதை கேட்டு தவம் இருக்க துவங்கினான். வருடங்கள் ஓடியது தன்னை சுற்றி புதர்களும் செடிகளும் மண்டி புற்று வளரும் அளவுக்கு
கடுமையான தவம் இருந்தான். பத்து வருடங்கள் கழித்து கடவுள் அவன் முன் தோன்றினார்.
“உன் தவத்தை மெச்சினேன்.அப்பனே, கண்களை திற. உனக்கு என்ன வரம் வேண்டும் ? ” என்றார் கடவுள்.
“வரம் எல்லாம் இருக்கட்டும் கடவுளே, முதலில் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் கொடுங்கள். நான் கடுமையாக தவம் இருந்தும் நீங்கள் வர இத்தனை காலம் ஆனதே இது ஏன்?” என்றான் பேராசைக்காரன்.
“மானிடா, பூலோகத்திற்கும் தேவ லோகத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. பூலோகத்தில் ஒரு கோடி என்பது எங்களுக்கு ஒரு ரூபாய் போன்றது. பூலோகத்தில் உங்களுக்கு ஒரு வருடம் என்பது தேவ லோகத்தில் ஒரு நாள் போன்றது. அப்படி பார்த்தால் நான் பத்து நாட்களில் உன் முன் தோன்றி இருக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்..”
(பேராசைக்காரன் மனதில் கணக்கு போட்டான்) "ஓ அப்படியா? பூலோகத்தில் ஒரு கோடி என்பது உங்களுக்கு ஒரு ரூபாயா? ”
“கடவுளே என் மேல் கருணை செய்து தேவ லோக பணத்தில் ஒரு கோடி குடுத்து அருளவேண்டும்” என்றான்.
“ஒரு கோடி தேவலோக பணம் தானே ...? தந்தேன். ஆனால் அது தேவலோகத்தின் பத்து வருடம் கழித்து உனக்கு கிடைக்கும்..” என கூறி கடவுள் மறைந்தார்.
மேற்கண்ட கதை பேராசை பெரு நஷ்டம் என்ற கருத்தில் சொல்லப்பட்டாலும், இதில் ஒரு உண்மை புதைந்திருக்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் பூமியில் 24 மணி நேரம் ஒரு நாள் என நாம் கணக்கிடுகிறோம் அல்லவா? சூரிய குடும்ப என்ற நம் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் என்பது பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றிவருவதை குறிக்கும். அதாவது பூமி தன்னை தானே சுற்றினால் நமக்கு ஒரு நாள்.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வந்தால் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள். இந்த ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் தானே? வானவியல் (astronomy) இக்கருத்தை ஒத்துக்கொள்கிறது. இதற்கு நட்சத்திர மணி அல்லது சைடீரியல் டைம் என கூறுகிறார்கள்.
சூரிய மண்டலம் என்பதையே நம் புராணங்கள் தேவ லோகம் என உருவகப்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்களின் ஒரு நாள் நமக்கு ஒருவருடம் ஆகிறது. தேவர்களின் இந்த ஒரு நாள் இரவு பகல் என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? நமக்கு 12 மணி நேரம் பிரிப்பதை போல இவர்களுக்கு 6 மாதம் பகல் , 6 மாதம் இரவு என கூறலாம். இத்தகைய தேவர்களின் இரவு பகல் என்பதையே உத்திராயணம், தட்ஷிணாயனம் என்கிறோம்.
நம் நாள் எப்படி சூரிய உதயத்திலிருந்து துவங்குகிறதோ அது போல உத்திராயணம் என்ற தேவர்களின் பகல் சூரியன் குறிப்பிட்ட நிலைக்கு வருவதால் துவங்குகிறது. ராசி மண்டலத்தில் 12 ராசிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதில் 6 ராசிகள் பகல் வேளையும் 6 ராசிகள் இரவு வேளையும் குறிக்கும். பகல் வேளையை குறிக்கும் ராசிகளில் முதலில் ஆரம்பிக்கும் ராசி மகர ராசியாகும்.
மகர ராசியில் சூரியன் நுழைந்து உத்திராயண காலத்தை துவக்கும் வேளையை மகர ஜோதி என்கிறார்கள். இது மகர ராசியில் ஜோதி சொரூபமாக இருக்கும் சூரியனை குறிப்பதாகும். இதை தவிர்த்து காந்த மலை என்ற இடத்தில் தெரியும் ஜோதி , அதிசயம் அற்புதம் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மகர சங்கிரமம், மகர ஜோதி என்பது சூரியனின் நிலையையும், உத்திராயண காலத்தையும் குறிக்குமே தவிர மலையில் தெரியும் ஜோதியை அல்ல.
மலையில் தெரியும் ஜோதி இயற்கையாக தெரியும் விஷயம் அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படும் விஷயமே...!
பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னை நிரூபித்தால் அது இறைவனும் அல்ல..!
திருவண்ணாமலையில் ஏற்றப்படுவதை போல சபரிமலையிலும் தை மாதம் ஒன்றாம் தேதி (உத்திராயண ஆரம்பம்) கோவில் நிர்வாக குழுவினரால் ஜோதி ஏற்றப்படுகிறது. இது எனது கருத்து மட்டுமே. நீங்கள் இது இயற்கையாக இறைவனே ஜோதியாக வருகிறான் என நினைத்தீர்கள் என்றால் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!
திருப்பதி அதிசயம், சமய புரம் அதிசயம் என வதந்தியை கிளப்பிவிடும் நபர்கள் தான் இது போன்ற வதந்தியையும் துவக்கி இருக்க வேண்டும். ஆன்மீக யோகிகளின் இருப்பிடத்தில் உங்களின் உள்ளே தான் அதிசயம் நடக்க வேண்டுமே தவிர வெளியே அல்ல...!
திருவாபரண பெட்டி வரும் சமயம் கருடன் வட்டமிடும் அது அதிசயம் அல்லவா? ஒரு பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூட ‘நிஜம்’ என காட்டினார்களே என கேட்டால் உங்களுக்கு விளக்கும் அளவு என்னிடம் பதில் இல்லை. காரணம் மிருகங்களுக்கு நம்மை விட சக்தி மிகு பகுதிகளை உணரும் நுட்பமான அறிவு உண்டு. மனிதன் தன் மதி நுட்பத்தை இதில் உயர்த்தாத காரணத்தால் காண்பது எல்லாம் அதிசயம் என நம்புகிறான்.
48 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து எளிமையாக வாழ்ந்து இறைவனை காண செல்லும் பொழுது ஜோதி வெளியே தெரிய வேண்டுமா அல்லது உள்ளே தெரிய வேண்டுமா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும்...!
சன்மார்க்க சங்கத்தை நிறுவிய வள்ளலார் தன் உடலை மறைய செய்தார் என அதிசயப்படுவதை விட அவர் உயர்த்திய அக்னி தினமும் பலருக்கு உணவை வழங்குகிறது என்பது அதிசயம் அல்லவா? 150 வருடத்திற்கு முன் இட்ட அக்னி இன்றும் பலரின் வயிற்றில் இருக்கும் அக்னியை அணைக்கிறது. அவர் ஏற்றிய விளக்கு இன்றும் ஞான ஒளியை கொடுக்கிறது. இன்னும் சில
நூறு வருடங்களில் இவரையும் கடவுளாக்கி சடங்குக்குள் அடைப்பார்கள் என்பதில் எள்ளமுனை அளவும் சந்தேகம் இல்லை. ( தற்சமயமே இதன் சுவடுகள் தெரிகிறது..!)
யோகிகள் இறைவனை தரிசித்தவர்கள். அவர்களை இறைவனாக்குவதை விட அவர்களை யோகியாகவே வணங்கினால் நீங்களும் இறைவனை தரிசிக்க முடியும். அதை விடுத்து அவர்களை இறைவனாக்கினால் நீங்கள் இருளில் சிக்க நேரிடும்.
நம்முள் தூய்மை இல்லை என்றால் மட்டுமே இது போன்ற அதிசயங்களை நம்புவோம். சபரி மலைக்கு செல்ல விரத முறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அம்முறைகளில் இருந்தாலே அனைத்து விதமான தூய்மையும் ஏற்படும்.
ஆனால் தற்காலத்தில் எத்தனை பேர் முழுமையாக விரதம் இருக்கிறார்கள்? சாமிக்கு ‘தனி கிளாஸ்’ என்பது தானே தற்கால விரதம் இருக்கும் முறை?
வெகுவாக அழிந்துவரும் சபரிமலை விரத முறையை மீண்டும் ஒரு முறை விளக்கமாக கூறுகிறேன் கேளுங்கள்.
(சரணம் தொடரும்)