Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, February 20, 2019

அர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2



ஒரு குளிர்காலம், அதிக பட்சம் பத்து டிகிரியில் எலும்புவரை ஊடுருவும் குளிர், மிக மெல்லிய தூரத்தெரியும் விளக்கொளி, அமர்ந்திருக்கும் படித்துறையில் இரண்டு படிதாண்டி பெரும்பிரவாகமாக கங்கை, இருளில் குளிரில் உண்ட மயக்கத்தில் மெல்லிய குரலில் காதில் விழும் குரலொலி. கங்கை எப்படி பூமிக்கு வருகிறாள் என்று வர்ணனையை கண்களை மூடிக்கேட்டால் நாமும் கங்கையோடு விஷ்ணுவின் பாத்த்தை விட்டு வர மறுத்திருப்போம், பாகீரதனின் தவத்தில் விஷ்ணுவில் ஆணைக்கிணங்க கங்கை வர ஆயுத்தமானதை கண்டிருப்போம், ஒவ்வொரு உலகமாக கங்கை இறங்கி வர பூமிக்கு வரும் போது சிவபெருமானின் விரித்த சடையுடனான சுற்றில் கிறங்கியிருப்போம், கங்கையை முடிந்த சடையில் நாமும் கட்டுண்டிருப்போம். கண்களை திறக்காமல் இந்த காட்சிகள் நமக்குள் நடக்கும். இது ஒரு அனுபவம். 

எந்த ஒரு நிகழ்வு நம்மை  காலநேரக்கணக்குகள் தாண்டிஉறைந்த நொடிக்குள் ஆழ்ந்து போகச்செய்யுமோ அதுவே அனுபவம். உங்களுக்கு பிடித்த பிடிக்காத எந்த நிகழ்வானாலும் அந்த அனுபவம் நடந்தே தீரும். அதை மன இடுக்குகளில் ஒளிப்பதோ அல்லது தினமும் திறந்து நுகர்வதோ நம் விருப்பமே. நினைவுகளே மீதமாகி ஒரு காலத்தில் நம்மை மீட்டெடுக்கலாம், நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் போதே அதை சேமிப்பது பணத்தை சேமிப்பதை காட்டிலும் சிறந்தது. 

நாங்கள் சார்ந்திருக்கும் நாத கேந்த்ரா ஒரு வேதகால வாழ்வியல் சூழல் கொண்ட தனிமனித ஆன்மீக கல்வி மையம். இங்கு நாம் மறந்து போன நிறைய கற்றுக்கொடுக்கப்படுகிறது. வேதகால வாழ்க்கை முறை, ஆன்மீகம், ( ஆன்மீகமும் பக்தியும் வேறு, குழப்பிக்க வேண்டாம்) ஜோதிடம், யோகா, போன்ற பரவலாக அனைவரும் அறிந்தவைகள் தவிர மந்திர சாஸ்திரம், எந்திர சாஸ்திரம், கர்ம தந்திரா, ஸ்வரயோகா, அக்னி ஹோத்ரா என்று நீங்கள் கேள்விப்படாத வாழ்க்கை முறைகளையும் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் நீங்களாகவே இருந்து குரு மூலம் தனிமனித மேம்பாடு அடைய வேதகால வாழ்க்கை முறையில் அமைந்த பயிற்சிகள் இவை.

எங்கள் குரு ஸ்வாமி ஓம்கார் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும், அவரிடமே நேரடியாகவும் இப்பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம். நாத கேந்த்ரா கோவை ஆனைகட்டியை தலைமை இடமாக கொண்டு, நகர்ப்புற மையமாக பிரணவபீடம் ஆர்.எஸ் புரத்திலும், மற்றும் சென்னை, நெய்வேலி சிங்கப்பூர், அர்ஜெண்டினா மற்றும் பெரும்பாலான நாடுகளிலும் உள்ளது. எங்களுடைய மாணவர்கள் உலகம் முழுதும் பரவலாக இருக்கிறார்கள். இந்த பயிற்சிகளில் ஒரு அங்கம் ஆன்மீகப்பயணங்கள். திருவண்ணாமலை, காசி, இமயமலை, கும்ப மேளா போன்ற இடங்களில் உள்ள நிகரற்ற இயற்கையின் சக்தியை நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ளுதல் முக்கியமானது. இந்த பயணங்களில் பெரும்பாலானவை ஆண்டுதோறும் செல்லப்படுபவை. 

அர்த்த கும்பமேளா :

12 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மஹா கும்பமேளா சென்ற ஆறு வருட்த்திற்கு முன்பு அலகாபாத்தில் நடந்தது. அப்போது போக வாய்ப்பு அமையவில்லை. இந்த அர்த்த கும்பமேளாவிற்கு திட்டமிட்ட்தும் நான் போவதில் உறுதியாக இருந்தேன். 31 ஜனவரி அன்று காலையில் திட்டமிட்டபடி கிளம்பி பெங்களூர் விமானநிலையம் அடைந்தோம். அடுத்து அலஹாபாத் விமானம் கால தாமத்தால் மதியம் 3 மணிக்கு மேல் தான். இது மாதிரி ஸ்வாமி ஓம்காருடனான பயணத்தில் நான் பெரிதும் விரும்புவது அவர் கூறும் தகவல்களை. குருவுடன் பயணிப்பது என்பதே ஒரு அனுபவம். அதிலும் அவர் உங்களுடைய சிறந்த நண்பராகவும் இருந்தால் அந்த பயணம் மிகச்சிறப்பானதாக அமையும். ஸ்வாமியுடனான என் அனைத்து பயணங்களும் என்றும் நினைவிலிருக்கும் சிறந்தவையே. நான் மட்டுமல்ல எங்களுடைய மாணவர்கள் அனைவரும் இதை கட்டாயம் ஆமோதிப்பார்கள். 

பெங்களூரில் காத்திருக்கிறோம். எனக்குள் ஏகப்பட்ட கேள்விகளும் யோசனைகளுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதலின் நாம எதுக்கு கும்பமேளா போகிறோம்? பத்து நாட்கள் என்ன செய்வோம்? இந்த ரெண்டு கேள்விகளுக்கும் காரணம் இருக்கிறது. ஜோதிடம் தவிர அனைத்து பயிற்சிகளும் கற்றிருந்தாலும் எதையும் முழுதாக உபயோகிக்காத ஆள் நான். அதிலும் முக்கியமாக மந்திர ஜெபம் போன்றவைகளை என் கணவர் அளவிற்கோ, என் மகள் அளவிற்கோ, என்னுடன் இருக்கும் சக மாணவர்கள் அளவிற்கோ இடைவிடாது செய்யும் ஆள் இல்லை. என் இயல்பு அப்படி. காசி பயணங்களில் தினமும் இரு வேளை கங்கையை தரிசித்து, குளித்து , கேதாரநாதருக்கு கங்கையால் அபிஷேகம் செய்து , தொடர்ச்சியாக மந்திர ஜெபம் முடித்து அன்றைய பொழுது வேறு இடங்களை பார்ப்பது, பயணிப்பதுன்னு இருக்கும். ஆனால் கும்பமேளாவில் எங்கும் நகராமல் இதையே என்னால் செய்ய முடியுமா என்று பெரிய கேள்வி மிகவும் தொல்லையாகவே இருந்தது. பயணம் முடிவதற்குள் பதில் கிடைக்கும் என்றும் தோணியது. ஒரு வழியாக மாலை 5 மணிக்கு ப்ரயாக்ராஜ் என்னும் அல்காபாத் அடைந்தோம். எங்களை அழைத்து செல்ல வண்டி தயாராக இருந்தது. 

வழக்கமான வட இந்திய நகரங்கள் போன்றே தூசி நிறைந்த வழி, அலகாபாத் நகரை அடைந்ததும் நகரெங்கும் விழாக்கோலம். எங்கும் மந்திர ஓசைகள் பெரிய ஸ்பீக்கரில் வழிகிறது. ஹரஹர மஹாதேவ் , ஹரே ராம ஹரே சீதா , ஜெய் ஜெய் என்று விதவிதமான வழிபாட்டு முழக்கங்கள். இதற்கு முந்தைய கும்பமேளாவிற்கு நான் செல்லவில்லையே தவிர அங்கு இருந்தது போன்றே அத்தனை விசயங்களை ஆயிரம் முறை கேட்டிருப்பேன். கூட்டம், குளியல், அசுத்தம், உணவு, வெள்ளம் வந்து டெண்ட் நிறைந்தது, என்று ஏகப்பட்ட விசயங்கள் சொல்லப்பட்டிருந்த்தால் கொஞ்சம் பரபரப்பாகவும் இருந்தது. இன்னும் நான்கு நாட்களே மவுனி அமாவாசைக்கு இருந்த நிலையில் எங்கும் மக்கள் வெள்ளம். நம்மைப்போல் ப்ளைட் டிக்கெட் எடுத்து ரூம் புக் பண்ணி வரவங்க இல்லை. தலைச்சுமையாக உடைகளும் சமைக்க பொருட்களும் வயதானவர்கள் முதல் கைக்குழந்தை வரையிலுமாக சாரைசாரையாக மக்கள். எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த இட்த்தில் சமைத்து உண்டு உறங்கி கங்கையை பூஜித்து, வணங்கி , குளிப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். கம்பூன்றிய மூதாட்டி முதல் பால்குடிமாறாத பச்சிளம் குழந்தை வரை அந்தக்குளிரில் கங்கையை பிராத்தனை செய்வது தங்களது கடமையாக கருதுகின்றனர். 

மருமக்கள் எடுத்த தம்பதியினர் ஒரு மண்டலம் போல கங்கைக்கரையில் தங்கி தினம் அவர்களால்  முடிந்த்தை அவர்கள் குடும்ப பண்டிட்க்கு தானம் செய்து, ஒரு வேளை உப்பில்லாமல் சமைத்து விரதம் இருக்கின்றனர். அவர்களின் வசிப்பிடம் முன்பு கோதுமைப்புல்லை முளைப்பாரியாக விதைத்து பூஜிக்கின்றனர். சிலர் வாழைக்கன்றும் சிலர் துளசியும் கூட வளர்க்கிறார்கள். இவ்வாறு விரதம் இருப்பவர்கள் கல்பவாசிகள் என்று அழைக்கின்றனர். தசரதனுடைய முன்னோர் தன் அரசு உட்பட அனைத்தும் தானம் தந்து கங்கைக்கரையில் இந்த விரதம் மேற்க்கொண்ட்தால் அவர்கள் வம்சத்தில் ராமன் அவதரித்த்தாக நம்பிக்கை. அதே நம்பிக்கையுடன் இந்த கடும் குளிரில் இவ்விரத்த்தை அனுசரிக்கிறார்கள்.

மொத்தம் பத்து நாட்கள் கும்பமேளாவில் இருப்பதாக திட்டம் அதில் பிப்ரவரி 4 மவுனி அமாவாசையும்,  10 ஆம் தேதியும் முக்கியமான நாட்கள். 31 அன்று இரவு நாங்கள் எங்களுடைய தங்குமிட்த்தை அடைந்தோம். வழியெங்கும் டெண்ட்களை பார்த்தபடி போனதால் அதையே எதிர்பார்த்திருந்தேன். ஆனால் மிக அருமையான இரண்டு பெரிய டெண்ட்களும் , முன்புறம் பெரிய காலியிடமும், அதனை சுற்றி தகரத்தால் அமைந்த சுற்றுசுவரும், உள்ளே தனித்தனியான இந்திய, வெஸ்டர்ன் கழிப்பிடங்களும், தண்ணீர் பைப்பும், உள்ளே வைக்கோல் விரித்து அதன் மேல் ப்ளாஸ்டிக் ஷீட் தரை, படுக்க இதமான பெட், போர்த்துக்கொள்ள ரஜாய், தலையணை என்று  அட்டகாசமான இடம்.

குளிர் ஒரு மெல்லிய ஈரப்போர்வையாக படர ஆரம்பித்தது. நாங்கள் தங்கிருந்த இடம் விவேகானந்த ஷர்மா என்பவருக்கு சொந்தமானது, அவரும் அவருடைய சகோதர்ர்களுக்கும். குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு கும்பமேளாவிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்கள் இரண்டு மாதம் அங்கு தங்கி மேலே சொன்ன கல்பகவாசிகளை தினமும் வழிநட்த்துகின்றனர். தொழில்முறையில் நீதிபதியான ஷர்மா, குடும்ப பாரம்பரியமான பண்டிட் என்பதையே முக்கியமாக கருதுகிறார். அவரின் மொத்த குடும்பமும் எங்களுக்கு அருகிலிருந்த டெண்ட்டில் வசித்து, வேலையாட்கள் இல்லாத போது எங்களுக்கு தேவையான உணவையும் அவரின் மனைவியே செய்து தந்தார். இரவு நாங்கள் சென்றடைந்த போது சுடசுட ரொட்டி, சப்ஜி தயாராக இருந்தது. உணவு முடித்து கங்கைகரையை பார்க்க சென்றோம், நாங்கள் தங்கியிருந்த இடமே செப்டம்பரில் கங்கை பிரவாகமாக ஓடும் இடம் தான், இப்போது அங்கு தான் ஆயிரக்கணக்கில் டெண்ட், ரோடு, பாலம், மின்கம்பங்கள், கழிப்பிடங்கள், தண்ணீர் குழாய்கள், மனிதர்களால் நிறைந்திருந்தது. மிக அருகில் கங்கை, கரையெங்கும் மின் ஒளியில் குளிரில் கங்கையை தரிசிப்பதே ஒரு அனுபவம். 

நீங்கள் சுற்றுலாவாசியாக இல்லாமல் கங்கையை உணர்ந்து செல்பவராக இருந்தால், எங்களுக்கு அவளைப்பார்த்த்தும் வரும் சந்தோசத்தை புரியவைக்க முடியும். வெகு நாள் பார்க்காத அம்மாவை, காத்திருந்து நெடுந்தொலைவு பயணித்து  பார்க்க போனால்,   பார்த்த்தும் எப்படி உணருவீர்களோ அப்படியே எங்களுக்கு கங்கை. வெகுநேரம் ஆனதால் குளிக்க முடியவில்லை. எங்கே போகப்போகிறாள், எங்களை ஆசிர்வதிக்காமல் காலையில் பார்ப்போம்.

பிப்ரவரி 1- 5 வரை

இரவா பகலா என்று தெரியாத மின்னொளியில் கண்ணை மூடி தூங்க முயற்சித்தால் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் பஜன்கள். ஹரஹர மகாதேவ், சீதாராமா என்று ஆறு பக்கத்தில் இருந்து வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு அழைப்புகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு திசையாக கவனித்து எப்போது உறங்கிப்போனேன்னு தெரியவில்லை. விடிந்தது, குளிர் 10 டிகிரிக்குள் நடுங்கவைத்த்து. எங்களது தினப்படி வேலை இங்கு காலையில் அக்னிஹோத்ரா, தொடர்ந்து ஜெபம், முடிந்ததும் டீ வரும், குடித்து குளிக்க செல்வோம், உடல் நடுங்க, மனம் குளிர நிறைவாக குளித்து முடித்த்தும், மீண்டும் ஜெபம். 11 மணிக்கு உணவு வரும், உணவருந்தி சிறிது ஓய்வு, அல்லது வெளியில் சென்று வரலாம், மீண்டும் 4 .30 க்கு குளியல், அக்னிஹோத்ரா, ஜெபம், இரவு உணவு என்பது மட்டுமே. பிப்ரவரி 4 அன்று காலையில் சிறிது நேரத்தில் குளியல், அதனை தொடர்ந்து ஹோம்ம், பிராத்தனைகள், ஜெபம் , தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் சத்சங்கம் என்று 5 நாட்கள் ஓடியே விட்டது.

கங்கையில் குளியல் இரு வேளை என்பதே நோக்கம், காலையில் 8 மணிக்கு சென்றாலும் குளிர் சில நாட்களில் 6 டிகிரி இருந்தது. கரையில் கங்கையை விழுந்து வணங்கி, தியானித்து, ஸ்பரிசித்து பிறகே கால் வைப்போம். குளிர் நடு எலும்பில் சென்று நேராக தாக்கும். அத்தனை குளிர் பழக்கமில்லாவிட்டாலும் எங்களுடைய காசி பயணங்கள் பெரும்பாலும் இந்த காலநிலையிலேயே இருக்கும் என்பதால், இது புதிதில்லை. மெதுவாக, ஆர்பரித்து ஓடும் கங்கையில் மார்பளவு தண்ணீரில் நின்று மீண்டும் தியானித்து முங்கி எழுவோம். அதில் எங்களுக்குள் போட்டியும் உண்டு, விடாமல் 11 முறை நானும் ஹென்னாவும் முங்கி எழ முயற்சித்து 2வது நாள் தான் முடிந்தது. ஒரு முறை முங்கும் போது மட்டுமே குளிர், அது முடிந்தால் ஆனந்தமே, எத்தனை நேரம் வேண்டுமானாலும் கங்கையில் கிடப்போம், சில நேரம் மாணவர்களில் பெரும்பாலோனோர் இருப்பார்கள், எப்போதும் விட இந்த முறை ஜலஜபம் அநேகமாக எல்லா நாளும் செய்தோம். மாலையும் இதே நடைமுறை தொடரும்.

பிப்ரவரி 6-8

முன்பே சென்று இருந்தாலும் மீண்டும் ஒரு முறை குருவுடன் காசி பயணிக்கவேண்டும் என்பது நெடுநாள் விருப்பம். அதற்கு ஒரு வாய்ப்பாக அலகாபாத்திலிருந்து காசி. கேதார்நாதர் கோவில் கரையில் கங்கையில் குளியல், தனியே கங்கா ஆரத்தி பார்க்க நின்று கொண்டிருந்தேன். இணையம் தொடர்பு விட்டுவிட்டு வந்தாலும் அவ்வப்போது பேஸ்புக் லைவ் முயற்சித்துகொண்டிருந்தவளை கங்கா ஆரத்தியில் பெரிய விளக்கு ஏற்ற சில பொதுமக்களுடன் என்னையும் அழைத்து ஏற்ற சொன்னார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருக்கும்போது அழைத்து விளக்கேற்ற சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியான ஆனந்தமாகவே இருந்தது. எப்போதும் விட காசிவிசுவநாதரை தரிசிக்க மிகப்பெரிய வரிசை, கிலோமீட்டர் நீளத்தில் இருந்தது. நடக்கவே தேவையில்லாமல் தள்ளியே சென்ற கூட்டம். அடுத்த நாள் காலையில் நானும் ஸ்வாமியும் விசுவநாதரை தரிசிக்க சென்றால் அதே வரிசை இன்னும் பெரிய நீளத்தில். ஸ்வாமி என்னிடம் உள்ள போய் தான் தரிசிக்கனுமா என்றார், அப்படி எதுமில்லை, நீங்க எங்க சொல்றீங்களோ அங்கிருந்து பார்த்தால் போதும் சொன்னதும், விசுவநாதர் கோவிலை சுற்றி இடிபாடுகளுக்கிடையில் எங்கெல்லாமோ அழைத்து சென்று ஒரு உயரமான இடிந்த இட்த்தில் நின்று அதோ பாருங்கள் விசுவநாதர் கோவில் என்று காட்டினார். 

20 அடி தொலைவில் வெளியிலிருந்து தரிசித்த்தும், விசாலாட்சி ஆலயத்திற்கு சென்றோம். மிக சிறிய கோவில்தான் அவள் குடியிருப்பது,நெருக்கமான சந்துகளில் உள் புகுந்து புறப்பட்டால் பச்சை பட்டுத்தி பின்னால் சக்தி ரூபமும் முன்னாள் உற்சவருமாக அழகாக தரிசனம் தந்தார். அத்தனை நேரம் கூட்டமான கோவிலில் திடீரென்று நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். திருப்தியாக தரிசித்து,  அன்னபூரணி கோவிலில் மதிய உணவிற்கு சென்றோம். அத்தனை கூட்ட்த்தில் என்று நினைக்கும்போதே அன்னபூரணி எங்களை உடனே உள் அழைத்து இனிப்புடன் முழு உணவளித்தார். அங்கிருந்து மீண்டும் கேதாரநாதர். மாலைகுளியல் தரிசனம், ஜெபம். இரவு உணவிற்கு வெளியே சென்றதும் வாரணாசியை மேலும் குளிர்விக்க இடி மின்னலுடன் பெருமழை. கங்கைக்கரையோரம் தங்கியிருந்த இட்த்தில் காற்றின் சத்தமும் மழையும் அடிக்கடி மின் தடையுமாக மறக்கமுடியாத இரவானது. அடுத்த நாள்  மீண்டும் அல்காபாத் திரும்பினோம்.

பிப்ரவரி, 9-10. 

இன்னும் ஒரே ஒரு நாள் தான் என்னும் போது அதற்குள்ளாகவா முடிந்துவிட்டதுன்னு இருந்தது. இந்த இடத்தில் அலகாபாத்தில் கும்பமேளாவிற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பற்றி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஸ்டில் தகடினால் ரோடு, பாலம் என்று இராணுவம் பாதி வேலையை முடித்து கொடுத்திருக்கிறது. அனைத்து இடங்களிலும் கழிப்பறை, உடை மாற்றும் வசதி, கங்கையில் பூக்கள் உள்ளிட்ட எதையும் விடவும், துணிகள் துவைக்கவும் தடை, குழந்தைகள் குதித்து விளையாடினால் கூட கரையிலிருக்கும் காவலர்களும் தன்னார்வலர்களும் மிக மென்மையாக தடுக்கிறார்கள், பெண்கள் உடைமாற்ற எட்டுக்கு எட்டு அளவில் கரையெல்லாம் தற்காலிக அறைகள், வழுக்காமல் இருக்க தினமும் நிரப்ப்ப்படும் வைக்கோல்கள், தண்ணீர் குழாய்கள், இலவச உணவுகள் என்று அத்தனை சிறப்பான ஏற்பாடுகள். ஆனால் காசியில் அதற்கு நேர் மாறாய் சுத்தம் என்றால் என்ன விலைன்னு கேக்கும் நிலை. 

எங்களுடைய இந்த 10 நாள் பயணத்தில் கூடவே இருந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்த ஹென்னாவிற்கு தனிப்பட்ட முறையில் நன்றிகள். துறவு மட்டுமே ஆன்மீகம் அல்ல. குருவானவர் உங்கள் பொறுப்புகளை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபடு என எப்பொழுதும் கூறமாட்டார். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வழிகாட்டுவார். சரியான வழிகாட்டியுமாவார்.  எல்லாருமே அலகாபாத் போகலாம், திரிவேணி சங்கமத்தில் குளிக்கலாம், காசி செல்ல்லாம், கங்கையில் முங்கலாம், ஆனால் குருவுடன், குருவருளுடன், அவர் துணையுடன் வழிகாட்டுதலுடன் செல்வது எல்லோருக்கும் அமையாது. இந்த முறை எனக்கு   அந்த வாய்ப்பை தந்த என் குருவிற்கு அன்பும் நன்றியும் வணக்கங்களும்.

அனுபவ கட்டுரை எழுதியவர்

திருமதி.விஜி ராம்


Tuesday, February 19, 2019

அர்த்தமுள்ள கும்பமேளா 2019

கோமதி சுப்ரமணியம் எழுதிய கும்ப மேளா அனுபவங்கள்.

     ஒவ்வொரு பயணமும் தனித்துவமானது. சில பயணங்கள் நம்முடன் நினைவுகளாய் என்றும் நிறைந்து நின்று கொண்டிருக்கும். நாம் கண்களை மூடி சிறிது நேரம் பின்னோக்கிப் பார்த்தோமானால், அப பயணங்கள் மீண்டும் ஒருமுறை சென்று வந்த அனுபவத்தை நமக்குக் கொடுக்கும். 

அவ்வாறு நினைவில் நீங்காமல் நிறைந்துள்ள சில பயணங்களின் வரிசையில் புதிதாக இணைந்துள்ளது தற்பொழுது சென்று வந்த கும்பமேளா, ப்ரயாக்ராஜ், உ.பி.

     இந்த கும்பமேளா பயணம் செல்ல வாய்ப்புக் கிடைத்ததில் மனது பெருமகிழ்ச்சி கொண்டிருந்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு. முதலில், பூர்ண கும்பமேளா விற்க்கு (2013 பிப்ரவரி) செல்ல முடியாததால் இது மிகவும் எதிர் பார்த்துக் கிடைத்த வாய்ப்பு.  ஏற்கனவே சென்று வந்தவர்கள் வேறு என்னிடம் கும்பமேளா அனுபவங்களைப் பகிர்ந்து சிலாகித்து வெறுப்பேற்றி இருந்தார்கள். எனவே இது பெறற்கரிய வாய்ப்பாக இருந்தது. யாவற்றிற்கும் மேலாக " கும்பமேளா" - இந்த வார்த்தையை முதன் முதலாக 2013ல் சுவாமிஜியின் கட்டுரை வழியாகவே அறியப் பெற்றிருந்தேன். முன்னர் சென்று வந்தவர்கள் பகிர்ந்த அனுபவங்கள் வாயிலாக அங்கு சென்றால் எப்படி இருக்கும் என ஒரு வரைபடம் மனதில் உருவாகி இருந்தது. ஆனால் அங்கு சென்று வந்தால் என்ன கிடைக்கும், அது எப்படிப் பட்ட அனுபவமாக இருக்கும் என்பதை சென்று வந்தால் மட்டுமே நாம் உணர முடியுமே தவிர, பிறரின் அனுபவத்தை வார்த்தை வடிவில் கேட்டு புரிந்து கொள்ள முயற்சிப்பது, குருடன் யானையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிப்பது போன்று தான் என்றே எண்ணினேன்.

2 பிப்ரவரி 2019 (சனி)

     முதன் முறை கும்பமேளா, முதன்முறை கூடாரத்தில் தங்கும் அனுபவம், முதன்முறை விமானப் பயணம் என இப்பயணம், பல முதல் அனுபவங்களை வழங்கக் காத்துக்கொண்டிருந்தது. அங்கு குளிர் எப்படி இருக்குமோ என்று குளிருக்கான உடைகள் துவங்கி, பல முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தேன்.  

இம்முறை வழக்கத்திற்கு மாறாக பல நாட்களுக்கு முன்பே, பல திட்டமிடல்கள் உடன் பயண முன்னேற்பாடுகளை செயுத்தாலோ என்னவோ, எனக்கு விமான நிலையத்தில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பயண நாளும் இனிதே துவங்கியது. நான், கணவர் மற்றும் அவரது தந்தை என மூவரும் 2 பிப்ரவரி 2019 (சனி) அன்று காலை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டோம்.

     உள்ளே மனம் ஏற்கனவே கும்பமேளா விற்கு பயணப்பட ஆரம்பித்திருந்தது. விமான நிலையத்திற்கு சென்று, பாதுகாப்பு சோதனை முடித்து வெளியே வந்த பின்பு தான் தெரிந்தது, சோதனை இனிமேல் தான் என்று!

     பரிசோதனை முடிந்து வெளியே வந்து அங்கே கன்வெயரில் வந்து கொண்டிருந்த கணவரது பைகளையும், எங்களது மற்ற தொலைபேசி போன்ற சாதனங்களையும் எடுத்து விட்டேன், எனது கைப்பையைத் தவிர. யாரோ விமானத்திற்கு செல்லும் அவசரத்தில், எனது பையை மாற்றி எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள்.

     அந்தப் பையில் தான் எனது ஜெப மாலை, குளிருக்கு அணியும் உடை, அடுத்து மாற வேண்டிய விமானத்தின் போர்டிங் பாஸ், சில ஆயிரம் ரூபாய் பணம் என நான் முக்கியம் என்று கருதிய வை யாவும் இருந்தது. அதற்குள் பை சென்னையை நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தது. சரி ' இனி பை இல்லாமல் தான் கும்பமேளா செல்ல வேண்டும்' என அறிவு கூறியது. மனமோ அதை ஏற்க மறுத்தது.

     கும்பமேளா வில் பிரதானமாக செய்வது  ' ஸ்நானம் மற்றும் மந்திர ஜெபம் ' அப்படி இருக்க மாலை இல்லாமல் அங்கு சென்று என்ன செய்ய்வது என்று எனது மனம் என்னை இடை விடாது கேள்விகள் எழுப்பி, என்னை அமைதி இழக்க செய்து கொண்டிருந்தது. அனைத்திற்கும் மேலாக இப்படி பொறுப்பின்றி மலையை தவர விட்டு விட்டு குருவை எப்படிப் பார்ப்பது என்ற குற்ற உணர்வு வேறு மேலோங்கி இருந்தது.

     பையை மாற்றி எடுத்தவன் ஒரு வேளை மலையை தொட்டு விடுவானோ? அது பத்திரமாக திரும்ப வந்து சேருமா? என்று பல்வேறு மனக் குழப்பத்துடன் எனது முதல் விமானப் பயணம் இனிதே துவங்கியது.

     எனது குழம்பிய நிலை கண்டு ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று எனது கணவர் வேறு " ஒரு வேளை பையை எடுத்தவன் அதில் இருக்கும் அடையாள அட்டையைப் பார்த்து அலுவலகத்துக்கு கூறி விட்டால், ( நானே உடல் நலமில்லை என்று கூறி விடுப்பில் வந்துள்ளேன்!) என்ன நடக்கும்? ( ஏற்கனவே சென்னை விமான நிலையத்திற்கு பையை மாற்றி எடுதவரிடம் இருந்து வாங்கி வைக்குமாறு தகவல் அனுப்பப் பட்டிருந்தது.  எனவே, பையை மாற்றி எடுத்தவர் யாரிடம் ஒப்படைக்க வேண்டுமென தேட வேண்டியதில்லை.) அதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் இது சிரமமாக இருக்காது என்று கூறி என்னை கலங்க வைத்துக் கொண்டிருந்தார்.

     தலைக்கு மேலே வெள்ளம் போன நிலையில் கவலைப் பட ஒன்றுமில்லை என எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டு, பை தொலைந்த நிமிடத்தில் இருந்து என்னுடைய செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது, அதை எவ்வாறு இன்னும் சிறப்பாகக் கையாண்டு இருக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

     யோக வகுப்பில் பயிற்றுவிக்க பட்டிருந்த இயம, நியமங்களிலிருந்து எந்த அளவுக்கு விலகி இருந்தேன் என்பதையும், அதை எவ்வாறு ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம் என்பதையும் ஆய்வு செய்தவாரே எனது கும்பமேளாவை நோக்கிய பாதிப் பயணம் நிறைவுற்று இருந்தது. நாங்கள் டில்லி வந்தடைந்து இருந்தோம். அங்கிருந்து பின்னர் வாரணாசி சென்று, அங்கிருந்து பிரயாக் ராஜை நோக்கி பயணப் பட்டோம். டில்லி விமான நிலயத்திலிருந்து, என்னை சுற்றி இருந்த அனைவரும், குளிருக்குத் தேவையான உடைகளால் தங்களைக் குளிரிலிருந்து காத்துக் கொண்டிருந்தார்கள் ( என்னையும் என் கணவரையும் தவிர).

     வள்ளுவன் வாக்கைப் போல " என்பு தோல் போர்த்த உடலுடன்" குளிரில் பயணப் பட்டுக் கொண்டிருந்தோம். பிரயகிராஜ் செல்லும் வழியில், நெடுஞ்சாலையில் அமைந்திருந்த தாபா ஒன்றில் இரவு உணவுக்காக அமர்ந்திருந்தோம்.

     உள்ளே நுழைந்தது முதலே, அது இதற்கு முன்பே பார்த்த இடம் போலத் தோன்றியது. வெளியே ஒரு சிறிய அறையில் இருந்த ஒரு கிருஷ்ணரின் சிலையைப் பார்த்ததும், அவ்விடம் சென்ற முறை காசியிலிருந்து அலஹாபாத் செல்லும் வழியில் உணவுக்காக சென்ற அதேயிடம் என உணர்ந்து, சென்ற முறை பயண நினைவுகளில் சிறிது நேரம் ஆழ்ந்து இருந்தோம்.

     அந்த தாபாவில் ஒரு சிறிய மட்குடுவையில் அளித்த தேனீர் அக்குளிருக்கு சற்று இதமாக அமைந்திருந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிரயக்ராஜிற்கு வந்தோம். வரும் வழியெங்கும் வாகன நெரிசல். முக்கிய ஸ்நான நாளான தை அமாவசைக்கு மக்கள் இரண்டு நாட்கள் முன்பிருந்தே வரத் துவங்கி இருந்தார்கள். எங்களது வாகனம், சங்கம் என்று அழைக்கப்படும் மேளா நடக்கும் இடத்திற்கு சுமார் 2 கி மீ முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. அங்கிருந்து இறங்கி பைகளோடு (எனக்கு மட்டும் ஒரே பை தான்..😀) சிறிது தூரம் நடந்து சென்று, பின்பு ஒரு மாட்டு வண்டி போன்று முன்னர் சைக்கிள் இணைக்கப் பட்டிருந்த வண்டியில், பையோடு நாங்களும் அமர்ந்து, " நாக வாசுகி மார்க்" வழியாக நாங்கள் தங்கும் இடமான கூடார திற்க்கு உடைந்த ஹிந்தியில் வழி கூறி ஒரு வழியாக வந்தடைந்தோம். மணி அதிகாலை 2.30.  அந்நடுநிசியில், திரும்பிய இடமெங்கும் ஒரே பனி மூட்டம். ஆனால் தற்காலிகமாக ஏற்படுத்தப் பட்டிருந்த தெருக்கள் எங்கும் ஒளி வெள்ளம். நிறைய வழி காட்டி கள். பல கூடாரங்களில் " ஹரே ராம ஹரே கிருஷ்ண ஹர ஹர மகாதேவா" நாம ஜபங்கள். ஆங்காங்கே " சாய் வாலாக்கள்" ஒவ்வொரு தெரு முக்கிலும் காவலர்கள் என அது ஒரு பகல் போலவே தோற்றம் அளித்துக் கொண்டிருந்தது.

     அங்கு பல கூடரங்களைக் கடந்து வந்து இருந்த போதும், நாங்கள் தங்கவிருந்த கூடார அமைப்பைப் பார்த்ததும், அது மிகவும் அழகாக ஒரு வீடு போன்ற தோற்றத்துடன் இருந்தது, மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது. இன்னும் நான்கு நாட்களுக்கு இதுதான் நமது இடம் என்னும் எண்ணம் வந்து கிளம்ப வேண்டிய நேரத்தை இறங்கு முகமாக எண்ணத் துவங்கி இருந்தது.

     சிறிது நேர ஓய்வுக்காக sleeping bag - இற்குள் சென்ற போது தான் இவ்வளவு நேரமும் இருந்த குளிரின் தாக்கம் குறையத் தொடங்கியது.

3 பிப்ரவரி 2019 - ஞாயிறு 

     காலை அக்னி ஹோத்ரா வுடன் துவங்கியது. " சூர்யாயை ஸ்வாஹா , சூர்யாயை இதம் நமஹா ; ப்ரஜாபதயே ஸ்வாஹா , ப்ரஜாபதயே இதம் நமஹா " என இறைவனிடம் சரணாகதி அடைவதாகக் கூறும் மந்திரத்துடன் முதல் நாள் காலை வேளை இனிதே துவங்கி இருந்தது. அகன அக்னிஹோத்ரத்தைத் தொடர்ந்து மந்திர ஜெபம் செய்பவர்கள் யாவரும் ஜெபம் முடித்த பின் ஸ்நானத்திற்காகப் புறப்பட்டோம்.

     சுமார் 7.30 மணிக்கு ஸநானம் செய்ய நடந்து சென்றோம். செல்லும் வழியெங்கும் எங்கு திரும்பினாலும் குடில்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்நானம் செய்யவும், ஸ்நானம் செய்து திரும்புபவர் களுமாக சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை எனப் பல்வேறு மக்கள், பல்வேறு மாநிலத்தவர்கள், பல மொழிகள் பேசுபவர்கள், பல கலாச்சாரப் பின்புலமுடையவர்கள் எனப் பல தரப்பட்டவர்களைக் காண முடிந்தது.  அத்தனை வேறுபாடுகளிலும், அங்கு அப்போது இருந்த அத்தனை பேருக்குமான ஒரே ஒற்றுமை, "கும்பமேளாவில் பங்கெடுத்து, முக்கிய ஸ்நான நாட்களில் 
நீராடுவது ".

     அங்கு வருபவர்கள் ஒவ்வொருவருடைய பாதைகள் வெறுபட்ட தாக இருப்பினும் அனைவரும் ஸ்நானம் என்ற புள்ளியில் ஒன்றிணைந்து இருந்தோம். செல்லும் வழியெங்கும் வழி காட்டிகள் யாத்ரீகர்களுக்கு வழிகாட்டி கொண்டிருந்தன.  தற்காலிகமாக அமைக்கப் பட்டிருந்த கழிவறைகள் பலவற்றைக் காண முடிந்தது. கரை எங்கும் தூய்மைப் பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதையும் காண முடிந்தது. காவலர்கள் ஆங்காங்கே நின்று ஒழுங்கு முறை கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதுயும் பார்க்க முடிந்தது.

     ஆற்று மணல், சிறிது வெள்ளை நிறத்துடன் காண பெற்றது. கரை ஓரத்தில் மக்கள் காலில் உள்ள ஈரம் பட்டு மணல் ஒருவிதமான வழுகும் தன்மைக்கு மாறி விடுகிற காரணத்தினால், கரை எங்கும் ஒரு விதமான புல்லினால் நிரப்பப் பெற்று நடக்க வழி செய்யப் பட்டு இருந்தது. பெண்களுக்கான உடை மாற்றும் அறைகள் பல ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

     நாங்கள் கங்கைக் கரையை அடைந்து, பிரவாகமாக ஒடும் கங்கா மாதாவைக் கண்டு வணங்கி சிறிது நேரம் தியானித்திருந்தோம். பின்பு ஸ்நானம் செய்வதற்காக கங்கையில் இறங்கி என்றும் சாஸ்வதமான மாதாவான கங்கை அன்னையின் மடியில், அவளின் ஸ்பரிசத்தில் இருந்தோம். ஜல ஜபம் செய்தோம். அர்கியம் கொடுத்து ஸ்னானத்தை நிறைவுசெய்து பின் கூடாரத்தை அடைந்தோம். அவரவர் தங்களது அன்றாட கிரியாக்களை செய்து முடித்த பின்பு உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் இளைப்பரினோம்.  பின்பு மாலை ஸ்நானம் சென்று வந்தோம். அதன் பின்பு, அக்னிஹோத்ரம், மந்திர ஜபம், அதைத் தொடர்ந்து ஸ்வாமிஜியின் பஜன் மற்றும் சத்சங்கம் நடைபெற்றது.  சத்சங்கத்தில், சுவாமிஜி, கும்பமேளாவைப் பற்றி விளக்கினார்கள்.  நமது உடலையும் உலகத்தையும் அதிலுள்ள ஒற்றுமையையும் பற்றி பின்வருமாறு விளக்கியிருந்தார்கள்.

     மனித உடலில் 72,000 நாடிகள் உள்ளன.  அதைப்போலவே, இவ்வுலகில் 72,000 நதிகள் ஓடுகின்றன.  மனித உடலில் உள்ள நாடிகளில் 108 இடங்களில் நாடிப்புள்ளிகள் அமைந்துள்ளன.  அதில் மிகவும் முக்கியமானவை மூன்று நாடிகள்.  அவை ஈடா, பிங்களா மற்றும் சுஷும்னா.  ஓர் மனித உடல் 'சமநிலையுடன் இருக்க ஆன்மீக உயர்வு பெற'  பேன்ற பல்வேறு விசயங்கள் சுஷும்னா நாடியில் இருப்பதாலேயே நிகழும்.  ஆனால், சுஷும்னா நாடியில் ஒருவரால் தொடர்ந்து செயல்பட முடியாது.  ஈடா, பிங்களா மற்றும் சுஷும்னா என நாடிகள் சலனமடைந்து 
கொண்டே இருக்கும்.  ஒருவர், குறைந்தது 15 நிமிடங்கள் நாடிசுத்தி செய்தால், அவரால் 3 நிமிடங்கள் சுஷும்னாவில் இருக்க முடியுமாம்.  இதே சுஷும்னாவில் தொடர்வதாலேயே ஆன்மீக முன்னேற்றம் வலுப்பெறும்.  சரி, இப்போது நமது வெளிமுகமான யோகப்பயிற்சி மூலமாக  சுஷும்னாவில் இருக்க நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.  இவ்வாறு அன்றி இயல்பாகவே சுஷும்னா தூண்டப்பெறும் ஓர் அமைப்பு அமைந்துள்ள தன்மைதான் கும்பமேளா நடக்கும் காலமும், திரிவேணி சங்கமம் என்ற இடமும்.

     உடலில் 3 நாடிகள் போல, உலகில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகளும்.  இவை இணையும் புள்ளியில் திரிவேணி சங்கமம் இருப்பதாகக் கூறப்படுகிறது.  நமது மனித உடலில் புருவமத்தி போன்றது திரிவேணி சங்கமம்.  எனவே,  நாம் கும்பமேளா காலகட்டத்தில், அங்கே இருந்தோமானால் இயல்பிலேயே நீண்ட நேரம் சுஷும்னாவில் இருக்க வாய்ப்பு ஏற்படும்.  ஜோதிட ரீதியாகக் கூறும்பொழுது, சூரியன், சந்திரன் 
மற்றும் குரு ஆகியவை இந்த சூரிய மண்டலத்தின் ஈடா, பிங்களா மற்றும் சுஷும்னா நாடிகளைக் குறிப்பதாகும்.  இவை ஒன்றிணையும், சுஷும்னா தன்மை நிகழும் நிகழ்வே கும்பமேளா நிகழ்வாகும்.   

     இதேபோன்று குரு என்ற கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றோர் ராசிக்குச் செல்ல 1 வருடம் ஆகும்.  அந்த குருவின் ஒரு பெயர்ச்சியை ஒரு நாளாகக் கணக்கிட்டால், சூரிய மண்டலத்தின் ஒரு 1 வருடம் நமது 366 வருடங்களாகும்.  அப்படிப்பட்ட கிரகநிலையில் 366 வருடங்களுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா பூர்ணகும்பமேளா என்று வழங்கப்படுகிறது.  2013-ல் பூர்ண கும்பமேளா நடைபெற்றது.  அதே 'குரு' கிரகம் 180 பாகை நகர்ந்து இருக்கும் நிலையில் 6 வருடங்கள் கழித்து அர்த்த கும்பமேளா (அர்த்த என்றால் பாதி)-வாகக் கொண்டாடப்படுகிறது.  கும்பமேளா என்னும் நிகழ்வு முழுமையுமே ஆதிநாதரின் முழு கட்டுப்பாட்டில் நிகழ்கிறது.  யார் கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டுமென்பதை ஆதிநாதரே முடிவு செய்கிறார்.  அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஆதிநாதரின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது.  எனவே கும்பமேளாவில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் ஆதிநாதரின் அருளாலேயே அங்கு வரவோ இருக்கவோ முடியும் என்று கூறினார்கள்.   

     மாணிக்கவாசகரின் 'அவனருளாலேயே அவன் தாள் வணங்கி' என்ற கூற்றுக்கிணங்க, நாம் அங்கு சென்று ஆதிநாதரை வணங்குவதற்கே, அவர் அருள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்து கொண்டோம்.  

     பையைத் தவறவிட்டு பனிக்கு உகந்த முக்கிய உடையைத் தொலைத்திருந்தாலும், சகோதரி ஹென்னா அவர்கள் வழங்கிய குளிருடையும், என்னிடமிருந்த சில உடைகளும், குளிரிலிருந்து காத்துக் கொள்ள உதவியாய் இருந்தது.  மாலை ஸ்நானம் முடிந்தபின், குறைந்தது ஒரு நான்கு அடுக்கு உடைகளுக்குள் என்னைக் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.  'மாலை முழுதும் விளையாட்டு' 
என்று பாரதி கூறுவது போல, பனியாகிய சிறிய குழந்தை, மாலை முழுதும் விளையாடிக் கொண்டு எங்களை விட்டு அகலாமல் எங்கும் பனி மூட்டமாக நிறைந்திருந்தது.  இரவு உணவுடன் எங்களது முதல்நாள் பயணம் இனிதே நிறைவுற்றிருந்தது.  

4-பிப்வரி-2019, திங்கள்

     இரண்டாம் நாள் காலை (4-பிப்வரி-2019, திங்கள் - தை அமாவாசை) முக்கிய ஸ்நான நாட்களுள் ஒன்றாகும்.  அன்று மட்டுமே பன்னிரண்டு கோடிப் பேர் நீராடிச் சென்றனர் என அதற்குப் பின்பு வந்த புள்ளி விபரம் குறிப்பிடத்தக்கது.  அன்றைக்கு கூட்ட நிலவரத்தை மனதில் கொண்டு ஸ்வாமிஜி வழக்கத்தை விட சிறிது அதிகாலையிலேயே குளிக்கச் செல்ல அறிவுருத்தி இருந்ததால் காலையில் ஸ்நானத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தோம்.

     குளிருக்கான கவசங்கள் யாவற்றையும் விடுத்து தை அமாவாசை ஸ்நானத்திற்கு எங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டோம்.  எங்கள் சின்னஞ்சிறிய கூடார உலகத்திலிருந்து வெளியே வந்நத பின்பு எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளமாகக் காணப்பட்டது.  'இத்தனை நாட்கள் என்ன முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் இன்று எப்படி சமாளிக்க முடியும்?' என நிதை;திருந்தால் காலை மாலை என எல்லா 
வேளைகளிலும் தூய்மைப்பணி திறம்பட நடந்துகொண்டே இருந்தது.  இவ்விடத்தில் ஸ்வாமிஜியின் சத்சங்க உரையின் ஒரு பகுதியை நினைவுட்ட முயல்கிறேன்.  பகீரதன் கங்கையை பூமிக்கு அழைத்த போது இங்கே வரவிரும்பாதமைக்கு கங்கை கூறிய காரணம் 'அங்கு என்னைத் தூய்மையுடன் இருக்க விடாமல் செய்து விடுவார்கள்' என்று கூறினாளாம்.  அங்கு நடக்கும் தூய்மைப்பணி நம் தாயை நம்மோடு தக்கவைத்துக் கொள்ள செய்யும் குறைந்தபட்ச முயற்சியாகக் கருதினேன்.  ஒரு மனிதனுக்காக தான் மேற்கொண்டிருந்த வைகுண்ட 
வாழ்க்கையை விடுத்து பூமிவந்த தயாபரியை நம்மால் முடிந்தவரையில் தூய்மையுடன் அணுகுவது சாலச் சிறந்தது.  அதுவே நாம் நமது அன்னைக்குச் செய்யும் மரியாதையாக இருக்க இயலும்.  

     ஸ்நானத்துக் பின் அக்னி ஹோத்ரம், மந்த்ர ஜபம், சக்தி தரிசனம் மற்றும் தானம் ஆகியவற்றுடன் காலைப்பொழுது இனிதே நிறைவுற்றிருந்தது.  மாலையில் ஸ்நானம் மற்றும் அக்னி ஹோத்ரம், மந்த்ர ஜபம், பஜன் மற்றும் சத்சங்கம் நடைபெற்றது.  இரண்டாம் நாள் சத்சங்கத்தில் ஸ்வாமிஜி ஒரு கேள்வியை முன்வைத்தார்கள்.  கும்ப மேளா என்கிற காலநிலை மற்றும் கிரக நிலை உலகெங்கும் பொதுவானது. பின்பு எதற்காக ப்ராயாக்ராஜ்-ற்கு வந்து தங்கிஇருந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?  நமது வீட்டிலோ அல்லது நாத கேந்திராவிலோ  
நாம் நமது பயிற்சிகளை செய்யலாம் அல்லவா?.  
பதில்:  
1. ப்ராயாக்ராஜ்-ல் தான் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியும் திரிவேணிசங்கமமும் அமைந்துள்ளது.
2. ஆதிநாதரின் முழுமையான ஆற்றல் நிரம்பப்பெற்றுள்ளது.
3. இத்துடன் அந்த கிரகநிலைகளும் இணையும்பொழுதுதான் அது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.  

     இந்தியாவிலுள்ள சப்த நதிகளை ஜீவ நதிகள் என்று வழங்குகிறார்கள்.  எல்லா யாகங்களிலும் அந்நதிகள் கலசங்களில் எழுந்தருளுமாறு ப்ரார்த்திக்கிறார்கள்.  அதிலும் முதன்மையாக கங்கையை அழைக்கிறார்கள் என்று விளக்கி கங்கை எவ்வாறு பூமிக்கு வந்தாள் என்ற நிகழ்வையும் ஸ்வாமிஜி விளக்கினார்கள்.  எந்தவொரு பொருளும் பூமிக்கு வெளியே காற்று மண்டலத்தை விட்டு புறத்தே எடுத்துச் செல்லப்பட்டால் அப்பொருள் கெடாமல் அப்படியே இருக்கும்.  கங்கையும் பூமியில் தோன்றாமல் பூமிக்கு வெளியே இருந்து வரப் பெற்றமையால்  கங்கை நீரும் காலம் காலமாகக் கெடாமல் தூய்மையாகவே உள்ளது.  தற்கால அறிவியல் ஆய்வுகளும் கங்கை நீர் மற்றவற்றை விட வித்தியாசமாக இருக்கும் தன்மையை ஆமோதிக்கிறார்கள்.  

     பாகவத புராணத்தில் கங்கை பூமிக்கு பகீரதனின் தவத்தால் வந்த  நிகழ்வை ஸ்வாமிஜி விளக்கினார்கள்.  பூமிக்கு வரும் முன் கங்கை, விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் அமர்ந்து வேதம் ஓதிக்கொண்டிருந்த பிரம்மனின் கமண்டலத்திலிருந்து ப்ரணவ ஸ்வரூபமாக வெளிப்பட்ட கங்கையை அவர் விஷ்ணுவின் பாதத்தில் அபிஷேகிக்க அது பின்பு பாற்கடலில் விழுந்து மீண்டும் கமண்டலத்திற்குள் சென்று இதையே தொடர்ந்து கொண்டிருந்தாள்.  பகீரதன் தனது கடுந்தவத்தால் பிரம்மனிடம் கங்கையை பூமிக்கு வரவழைக்கும்படி வேண்டினான்.  அதற்கு 
பிரம்மா கங்கையிடம் கேட்காமல் முடிவுசெய்ய முடியாது என்று கூறிவிட்டு கங்கையிடம் பூலோகம் செல்வது குறித்துக் கேட்டார்.  கங்கையோ தான் வைகுண்டத்திலேயே இருப்பதாகவும் வேறு இடத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறினாளாம்.  

     இதையறிந்த பகீரதன் மீண்டும் கடுந்தவம் இயற்றி விஷ்ணுவிடம் கங்கையை வேண்டினான்.  விஷ்ணுவோ கங்கையிடம் சென்று நீ வைகுண்டத்தில் எங்கேயாவது தொடர்ந்து இறைநாமம் ஜபிக்கப்படுவதைக் கேட்டிருக்கிறாயா என்று கேட்டதற்கு அவள் இல்லை என்று பதிலளித்ததும் கங்கையிடம் நீ பூலோகம் சென்றால் அங்கு தொடர்ந்து இறைநாமம் ஒலிப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  இறைநாமத்தைக் கேட்டு லயித்து இருப்பதினும் வேறு மேலான இன்பம் என்று கூறி கங்கையை பூலோகம் வரப் பணித்தார்.  பின்பு பகீரதனிடம் 
கங்கை பூலோகம் வந்தாலும் அதைத்தாங்கும் அளவில் பூமி தயாராக இருந்தாலே கங்கை வர இயலும்.  அல்லாமல் கங்கை ப்ரவேசித்தால் பூமி அழிந்து விடும் என்று கூறினார்.  எனவே பகீரதன் மீண்டும் தவமியற்றி சிவனை வேண்டினார்.  தவத்தின் பலனாய் சிவன் எழுந்தருளியதும் சிவனிடம் கங்கையை பூமிக்கு வரவழைக்க உதவுமாறு வேண்டினார்.  சிவனும் அதற்கிசைந்து தனது ஜடாமுடியை விரித்து சுழன்று ப்ரவாகமாக வந்த கங்கையை தலையில் தாங்கி முடிந்து கொண்டார்.  அவர் தலையில் இருந்து சிறு துளிகளாக வரும் கங்கைiயை பூமியில் ஓடுமாறு செய்தார்.     

     இன்றும் கங்கை கோமுக் என்ற இடத்திலிருந்து சிறு ஓடை போல ஓடத்துவங்கி கங்கோத்திரி என்ற பெயரில் ஆரவாரமாக ஓடி, மந்தக முனியின் தவத்தை இடையூறு செய்ததாக அவர்; எண்ணி கங்கையை அவர் உள்வாங்கி பின்னர் அவரிடமிருந்து வெளிப்பட்டு மந்தாகினியாய் ஆரவாரமின்றி ப்ரவாகமாய் தேவப்ரயாகையை அடைந்து அங்கிருந்து அன்னை கங்கையாக வலம் வந்து செல்லும் இடம் எங்கும் வளம் பெருக்கிக் கொண்டிருக்கிறாள்.  மனிதர்கள் அனைவராலும் மதங்கள் கடந்து வணங்கப்படுகிறாள்.    

     பகீரதனின் தவத்தால் கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் வடிவில் இருந்து பூமிக்;கு வந்து கண்ணுக்கு புலப்படும் நீராக உருப்பெற்று பாகீரதி என்னும் பெயரும் பெற்ற கங்கை பூமிக்கு வரும் வழியில் சப்த ரிஷிகள்; மற்றும் துருவ முனி யாவரையும் கடந்து வருகிறாள்.  அப்போது அவர்கள் யாவரும், கங்கை பூலோகம் சென்று விட்டால், இனிநாம் கங்கா ஸ்நானம் செய்ய இயலாது என்று எண்ணிக்கொண்டே முதன் முதலில் அவர்கள் அனைவரும் ஸ்நானம் செய்தார்களாம்.     

     அவ்வாறு தவத்தில் சிறந்தவர்களுக்கே ஓரே ஒரு முறை மட்டுமே கிடைக்கப்பெற்ற வாய்ப்பு எங்கள் அனைவருக்கும் பலமுறை 
கிடைக்கப் பெற்றது குருவருளாலும் ஆதிநாதரின் அருளாலும் சாத்தியமானது எனலாம்.  இவ்வாறு இரண்டாவது நாளும் இனிதே நிறைவடைந்தது.  


5-பிப்வரி-2019, செவ்வாய்

     மூன்றாம் நாள் காலை (5-பிப்வரி-2019, செவ்வாய்) அக்னி ஹோத்ரத்துடன் துவங்கியது.  கங்கா ஸ்நானம் மற்றும் மந்திர ஜபம் ஆகியவைகளை முடித்து அமர்ந்திருந்தோம்.  பகல்வேளையில் சிறிது நேரம் வெளியே சென்று வரலாம் என கூடாரத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் துவங்கினோம்.  முதல் நாள் இருந்த ஆரவாரங்கள் ஏதும் காணப்படவில்லை.  சுற்றியிருந்த பல கூடாரங்களில் இருந்தவர்கள் கிளம்பி விட்டிருந்தார்கள்.  ஆங்காங்கே நாம ஜபத்தின் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.  நாங்கள் அனைவரும் சிறிது தூரம் சென்று பதினாலாவது பாலத்தை அடைந்தோம்.  அவ்விடம் சிறிது விஸ்த்தாரமாக இருந்தது.  பல கடைகள் காணப்பட்டன.  

     திருவிழாக்களில் இருக்கும் கடைவீதிகள் போல அத்தெருவெங்கும் வண்ணமயமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.  பல வண்ணங்களில் வளையல்கள் சிறு குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், குளிருக்குத் தேவையான கம்பளிகள், சில ஆன்மீகவாதிகளின் வணிக மையங்கள்,  தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் என இருமருங்கிலும் கடைகளால் நிரம்பப்பெற்றிருந்தது அந்த வீதி.  சிறிது நேரத்திற்குப் பின் கூடாரத்திற்குத் 
திரும்பினோம்.  

     ஓய்வுக்குப் பின் மாலை ஸ்நானம் அக்னி ஹோத்ரம் அதன் பின்பு சத்சங்கம் நடைபெற்றது.   அன்று சத்சங்க நிகழ்வில் ஸ்வாமிஜி நாங்கள் அமர்ந்திருந்த அந்த நதிக்கரையில்தான் முன்பு நாத பாரம்பரியத்தினர் கௌல தந்திரா பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிவித்தார்.  இவ்விடத்திற்கு பலதரப்பட்ட மக்கள் வந்து சென்றாலும் நாத பாரம்பரியத்தில் உள்ளவர்களுக்கு அவ்விடம் இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருக்கிறது.  மண்டனமிச்ரரும் அவரது மனைவி சாரதாவும் இங்கு வாழ்ந்து கௌல தந்ர பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.  ஆதிசங்கரருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு பின்பு மண்டனமிச்ரர் ஆதிசங்கரர் வழி சென்றமையால் அவருக்குப் பின்பு இங்கு கௌல தந்த்ரம் வெளிப்படையாக மேற்கொள்வது நின்று போனது. 
    
     திருமாலின் அவதாரமான இராம பிரானின் மூதாதையர்களுள் ஒரு அரசர் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்தார்.  அப்போது அவர் கும்பமேளா நேரத்தில் வந்து இங்கே தங்கி இருந்து எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு தன்னிடம் உள்ள அனைத்தையும் தானமாக வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.  பிறகு ஒரு புதிய தலைநகரை நிர்மாணித்து அடுத்த கும்பமேளா வரை ஆட்சி புரிந்து விட்டு இங்கு வந்து அவையனைத்தையும் தானமாகக் கொடுத்து விட்டு பின்பு மீண்டும் பல நாடுகளை வென்று திரும்பி புதிய 
தலைநகரை நிர்மாணிக்கத் துவங்குவாராம்.  

     அதைப் போலவே இன்றும் தம்பதியராய் இருப்பவர்கள் மட்டும் இங்கு வந்து தங்கியிருந்து மிகவும் எளிமையாய் வாழ்ந்து தங்களிடம் உள்ளவற்றை யாவும் தானமளித்து பின்னர் வீடுதிரும்புவர்.  இவ்வாறு செய்தால் தங்கள் குலத்தில் இராமனைப் போன்று அந்த இறைவனே தோன்றுவார் என இம்மாதிரியாக ப்ரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.  ஸ்வாமிஜி அவர்கள் கூறியவற்றை நாங்கள் அனைவரும் அங்கு இங்கு நகராமல் அமர்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தோம்.  பதஞ்சலி முனிவர் கூறியது போல ஸ்திரம் சுகம் ஆசனம் என்ற வாக்கையொட்டி நாங்கள் ஸ்திரமாகவும் சுகமாவும் ஒரே இடத்திலேயே அமர்ந்திருந்தோம்.  ஏனென்றால் சிறிது நகர்ந்தாலும் அந்த இடைவெளியில் குளிர் புகுந்து கொள்கிறது.  இவ்வாறாக அன்றைய சத்சங்கம் இனிதே நிறைவுற்றது.  அதன்பின் இரவு உணவு உட்கொண்டோம்.  குருநமச்சிவாயர் தமக்குப் பசி மேலிடும் போதெல்லாம் ஜகன்மாதாவைத் தொழுது பின்வரும் பாடலை புனைவார்.  
                'ஊன்பயிலும் காயம் உலராமல் உன்றனது
                 வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் - தேன்பயிலும்
                 சொல்லியல் நல்லார் துதிக்கும் சிவகாம 
                 வல்லியே சோறு கொண்டு வா'

உடனே அன்னையும் அன்னத்துடன் அருள்பாலித்து,
                'கொண்டு வந்தேன் சோறு குகைநமச்சிவாயரது
                 தொண்டர் அடியார் சுகிக்கவே - பண்டு பேய்ச்சிமுலை யுண்ட பெருமாளுடன் பிறந்த
                 நாச்சி சிவ காமி நான்' என்று அருள்வார்களாம்.  

      அதைப்போல சத்சங்கத்தில் இருப்பவர்கள் செவிக்கு உணவு பெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஹென்னா அவர்கள் சென்று 
வயிற்றுக்கான உணவுப் பணிகளைத் திறம்பட ஒருங்கிணைத்து, நாங்கள் சோறு எனக்கூறும் முன்பே உணவு தயார் நிலையில் இருப்பதை ஒவ்வொரு முறையும் உறுதி செய்து கொள்வார்கள்.  இவ்வாறு எங்களது மூன்றாவது மற்றும் பயணத்தின் இறுதி நாளை எட்டியிருந்தோம். 

      காலை எழுந்து ஸ்நானம் செய்தவுடன் நாங்கள் பயணத்தைத் துவக்குவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது.  எப்படி இத்தனை நாட்களும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடந்து போயிருந்தன என எண்ணும் போது இன்னும் சில நாட்கள் இங்கேயே இருந்திருக்குமாறு வாய்ப்பு அமைந்திருக்காதா என மனம் எண்ணமிட்டுக்; கொண்டிருந்தது.  

6-பிப்வரி-2019, புதன்

      மறுநாள், காலை (6-பிப்வரி-2019, புதன்) அதிகாலையிலேயே எழுந்து விடியும் முன்பே கங்கா ஸ்நானம் செய்தோம்.  வழக்கமாக 
வெளியே நிலவிய குளிருக்கு மாறாக கங்கை மிகவும் மிதமான குளிருடன் இருந்தமையால் குழந்தை எப்படி தாயின் ஸபரிசத்திலிருந்து விலக மனமின்றி இருக்குமோ அதுபோல நாங்களும் அன்னை கங்கையின் ஸ்பரிசத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு அடுத்த முறை மீண்டும் இங்கு வந்து கங்கையைக் காணவும், அவ்வன்னையின் அன்புப் ப்ரவாகத்தில் ஸ்நானம் செய்யவும் வாய்ப்பு நல்குமாறு வேண்டி வந்தோம்.  காலை 
அக்னி ஹோத்ரம் நிறைவடைந்ததும் எங்களது உடைமைகளைச் சீரமைத்து பைகளுடன் வீடு திரும்ப ஆயத்தமானோம்.  அங்கிருந்து செல்ல மனமின்றி அனைவரிடமும் விடைபெற்று ஸ்வாமிஜியின் ஆசிகளுடனும் அடுத்த கும்ப மேளாவிற்கு வர வாய்ப்பு அமைய வேண்டும் என்ற ப்ரார்த்தனைகளுடனும் பயணிக்கத் துவங்கினோம்.  மனம் எங்கும் கடந்த மூன்று நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நிரம்பப் பெற்று அவற்றை 
அசை போட்டுக் கொண்டிருந்தது.  

      ப்ரயாக் ராஜ்-லிருந்து வாரணாசி சென்று அங்கிருந்து கோவை திரும்புவதாகப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.  எந்தவொரு ஆன்மீக நிகழ்விலும் பங்கெடுத்து விட்டு பின்பு அங்கிருந்து திரும்பும் தருவாயில் மனம் ஒரு வெறுமை உணர்வுக்குள் வீழ்ந்துகொண்டிருப்பதை உணர முடியும்.  அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை அவசரமாக நிறுத்தும் போது, வேகம் காட்டும் கருவியின் முள் விரைவாகக் கீழிறங்குவதைப் போல நமது உடலில் யாரோ வேகத்தடையை இயக்க ஆரம்பித்தது போன்று உணர ஆரம்பித்;திருந்தோம்.  

      எப்படி ஆதிநாதரின் அனுமதியுடன் ப்ரயாக் ராஜிற்குள் செல்ல முடியுமோ அதுபோல கால பைரவர் முடிவு செய்தால்தான் காசி என்கிற புண்ணிய ஷேத்திரத்திற்குள் நம்மால் ப்ரவேசிக்க இயலும்.  
     
 ' பானு கோடி பாஸ்வரம் பவப்பிதாரகம் பரநீலகண்ட மீப்ஸிதார்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாஷ மஸ்தஸுன்ய மஷரம்
காசிகாபுராதினாத காலபைரவம் பஜே '
      
என்று பலகோடி சூரிய ஒளியைக் கொண்டவரும் பல பிறவிச் சக்கரங்களிலிருந்து நம்மை மீட்பவரும் ஆகிய நீல நிறக் கழுத்தினையுடைய, காசியை ஆளும் கால பைரவரை வணங்கி இம்முறை அங்கே வர வாய்ப்பளித்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம்.  என்றும் பூரணமாய் நிறைந்து சங்கரனின் ப்ராணணாய் வியாபித்து அருள்புரியும் அன்னபூரணியையும் மனமாரப் ப்ரார்த்தித்துக் கொண்டோம். 

 காசி விஷ்வநாதரையும் மாதா அன்னபூரணியையும் தரிசிக்கச் சென்றால் அங்கு அனுமனின் வால் போல மிகநீண்ட வரிசை இருந்தது.   நேரக் குறைபாட்டால் நாங்கள் திரும்பி தசாஸ்வமேதகாட் என்னும் படித்துறை வழியே பொறுமையாக கங்கையை ரசித்தபடியே நடக்கலானோம்.  எனக்கு எனது மனம் இதற்கு முன் காசி வந்த நிகழ்வுகளைத் திரையிடத்துவங்கியிருந்தது. 

 எனக்கு மிகமிக மனநிறைவான 
என்றுமே மறவாது எனது நினைவினில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பயணங்களில் 2015-ல் காசி சென்ற பயண அனுவபவமும் ஒன்று.

       ஒரு கரும்பினை எங்கு சுவைத்தாலும் இனிப்பு இருந்தாலும் அதன் அடிக்கரும்பில் தித்திப்பு மிகுதியுற்று இருப்பது போல 
அப்பயணத்தின் எல்லாப் பகுதிகளும் இனிமையான அனுபவமாய் இருப்பினும், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் கங்கைக் கரையில் அமர்ந்து ஸ்வாமிஜியுடனான சத்சங்கம் என் நினைவுகளில் என்றும் அகலா அடிக்கரும்பின் சுவையை ஒத்தது.  தசாஸ்வமேதகாட் படித்துறையிலிருந்து கேதார்காட் படித்துறை வரை சென்ற ஒவ்வொரு நிமிடங்களும் இதற்கு முந்தைய பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் ஒவ்வொன்றாய் மீண்டும் 
ஒருமுறை நிகழ்த்திக் காட்டிக் கொண்டே வந்தன.  

       ஸ்வாமிஜியுடனான சத்சங்கம் நடைபெற்ற படிக்கட்டுகளைக் கடக்கும் போது அவ்வாய்ப்பு மீண்டும் கிட்டாதா என மனம் ஏங்கிக் கொண்டிருந்தது.  திருமூல நாதரின் 'நினையாத வர்க்கில்லை நின் இன்பந்தானே' என்னும் கூற்றுப் போல, அங்கு நடந்து சென்று நாங்கள் கடந்து சென்ற பாதையனைத்தும் ஒவ்வொரு நினைவுகளாய் மலர்ந்து இன்பமளித்துக் கொண்டிருந்தது.  மனம் மிகவும் அமைதியுற்றிருந்தது.  கேதார் காட் படித்துறையை வந்;தடைந்தவுடன் கேதாரீஷ்வரரை வணங்கிப் பின்பு கங்கையைத் தியானித்து அமர்ந்திருந்தோம். 


       பொதுவாக எதையோ தேடச்சென்று பழைய நிழற்படத் தொகுப்பைக் கண்டெடுக்க நேர்ந்தால் அவ்விடத்திலேயே அப்படியே உடலால் நின்று மனத்தால் ஒவ்வொரு நிழற்படத்தின் நினைவுக்குள்ளும் சென்று வாழ்ந்து வந்திருப்போம்.  இம்முறை காசிப் பயணம் எதிர்பாராமல் கையில் கிடைத்த நிழற்படத் தொகுப்பாகவே எனக்குத் தென்பட்டது.  மனமெங்கும் மகிழ்ச்சியுடன், இந்த கும்பமேளா என்னும் அற்புதமான 
வாய்ப்பை நல்கிய குரு உருவிலான இறையருளை ப்ரார்த்தித்து நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.