Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, September 29, 2009

நானும் வரம் தரப்போகிறேன்...!

என் இமயமலை பயணத்தின் இடையே கங்கையாற்றின் கரையில் இளைப்பாருவதற்காக அமர்ந்தேன். கங்கை பிரவாகமாக சென்று கொண்டிருந்தது. கண்டிப்பாக ஆழமும் வேகமும் அதிகம் என அதன் போக்கை வைத்து பார்க்கும் பொழுதே தெரிந்தது.

சில நாட்களாக வெளியுலகில் இருந்து துண்டிக்கபட்டிருந்தேன். சரி நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள என் மடிக்கணினியை (Laptop) திறந்து இணைய இணைப்பை இணைத்தேன். அது கம்பி இல்லா அகண்ட அலை சேவை. (wireless broadband) சரியாக தொடர்பு கிடைக்கவில்லை. மடிக்கணியை அங்கே இங்கே அசைத்தேன்.. தொடர்பு விட்டு விட்டுவந்தது.. சிறிது சாய்வாகவும் ஒரு மரத்தில் அருகில் சென்றால் ஓரளவு அலைவரிசை கிடைத்தது. ஒரு பக்கமாக சாய்ந்து மரத்தின் அடியே அமர்ந்து கொண்டேன்.. என் கால்கள் இரண்டும் கங்கை ஆற்றின் உள்ளே வைத்திருந்தேன். பயணத்தால் களைத்திருந்த உடலுக்கு கால்களில் குளிர் நீர் படுவது இதமாக இருந்தது.

சில இணைய பக்கங்களுக்கு சென்று உலாவி விட்டு கணினியை மூடி கிளம்ப எத்தனிக்கும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. கைத்தவறி என் கணினியை கங்கையாற்றில் விழுந்துவிட்டது...!


நினைத்துபாருங்கள் எப்படி இருக்கும் எனக்கு?... செய்வது அறியாமல் திகைத்தேன்.. ஆற்றின் வேகத்திற்கு இந்நேரம் என் மடிக்கணினி வங்காள விரிகுடாவில் கலந்திருக்குமோ என்றெல்லாம் மனதில் எண்ணம் வந்து சென்றது. நல்ல வேளை வலைபக்கத்தை பார்த்த பிறகு மூடிவிட்டேன். இல்லையென்றால் அதில் மீன்கள் மாட்டியிருக்குமே என்று ஒருபக்கம் குழப்பம். அதுவும் அந்த பதிவரின் வலைபக்கம் வேறு. அதில் மாட்ட கூட வேண்டாம். மீன்கள் அதை பார்த்தாலே இறந்துவிடுமே என ஒரு வஞ்சக எண்ணமும் தலைதூக்கியது...

எத்தனை எத்தனை தகவல்கள் அதில்.. எதிர்கால உலகை மேம்படுத்த என சிந்தனைகளை அதில் வடித்துவைத்திருந்தேனே? மக்களை உய்விக்கும் அந்த எண்ண சிதறல்கள் எப்படி மீண்டும் நான் உருவாக்குவேன் என மனவருத்தத்தில் இருக்கும் பொழுது...கங்கை ஆற்றின் மேல் ஒரு புகைமண்டலம் உருவாகியது.....

புகைமண்டலத்தின் நடுவில் ஒரு தேவதை வெளிப்பட்டு கண்கள் கூசும் ஒளியுடன் என்முன் நின்றாள். தேவதையை நீங்கள் பார்க்க வேண்டுமே.... அப்பப்பா... திரைப்பட பாடலில் தேவதை என வர்ணிக்கும் சினிமா நடிகைகளுடன் இந்த தேவதையை ஒப்பிட்டால் அடுத்த ஜென்மத்திலும் நான் தமிழகத்தின் வாக்காளனாகவே பிறக்க நேரிடும்.

தேவதையின் அழகில் மூழ்கி இருக்கும் பொழுது தம்பூராவின் கடைசி தந்தியை மீட்டிய ஒலியில்
தேவதையின் குரல் ஒலித்தது..

“கவலைபடாதே மானிடா... உன் கவலையை போக்கவே நான் வந்திருக்கிறேன். உன் மடிகணினி இது தானே” என பிங்க் நிறத்தில் இருக்கும் சோனி வாயோ மடிகணினியை கண்பித்தாள் தேவதை. அதன் தற்சமய விலை 3800$.

நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்... பிறகு “இல்லை” என்றேன்.

சில வினாடிகளில் மீண்டும் ஒரு மடிக்கணினியை காண்பித்து இதுவா என்றாள். அது 4700$ விலைகொண்ட டெல் கணினி. தேவதையே எனக்கு சாமி டாலர் வாங்வே பணம் இல்லாத பிச்சைக்காரன். நான் எப்படி சோனியும் , டெல்லும் வாங்குவேன்? என்றேன்.

சில நொடிகளுக்கு பிறகு என் லினோவா டப்பாவை தேவதை காண்பித்தாள். நான் ‘ஆம்’ என்றேன்.

“மானிடா உன் நேர்மையை மெச்சினேன்” என்று என் கையை நீட்ட சொல்லி எனக்கு மூன்று கணிப்பொறியையும் கொடுத்தாள் தேவதை.

“தேவதையே உனக்கு அறிவு கிடையாதா? உங்கள் தேவதை பரம்பரையில் முன்னோர்கள் விறகு வெட்டியிடம் செய்தது என்னவோ அதையே நீயும் செய்கிறாயே? மூன்று மடிக்கணியையும் வைத்து நான் என்ன செய்ய? இருக்கும் ஒரு கணினியை வைத்தே உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றேன்.

“ தேவதை பரம்பரை பற்றி கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் யார் முன் தோன்றினாலும் அவர்கள் நான் கொடுக்கும் மூன்று பொருளை வாங்கி செல்லுவார்கள். நீ தான் அதிகப்பிரசங்கி போல இருக்கிறாய்”

“தேவதையே நான் அதிகப்பிரசங்கி என்பது ஊருக்கே தெரியும், ஆனால் விறகு வெட்டி போல வெகுளி அல்ல. நான் புத்திசாலி அதனால்தான் அப்படி கேட்கிறேன்.”

“சரி உனக்கு இவை எல்லாம் வேண்டாம் என்றால் மூன்று வரம் தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்”

“நீ வரம் தருவது இருக்கட்டும். நான் மீண்டும் சொல்லுகிறேன். வரம் கொடுத்துவிட்டு பின்னால் சங்கடப்பட கூடாது”

“அற்ப மானிடனே. நீரில் விழுந்த மடிகணினியை எடுக்க தத்தளித்தாய். இப்பொழுது எனக்கே அறிவுரை சொல்லுகிறாயா? ”

“தேவதைகளுக்கு அழகு இருக்கும் அளவுக்கு..... அ.......அனுசரணை இருக்காது என கேள்வி பட்டிருக்கிறேன்..இன்று தான் நேரில் பார்க்கிறேன். நான் வரங்களை யோசித்து கேட்க விரும்புகிறேன். இப்படித்தான் ஒரு எறும்பு யோசிக்காமல் வரம் கேட்டு மாட்டிகொண்டது”

“எப்படி கொஞ்சம் விவரமாக சொல்லேன்”

“மனிதர்கள் தங்களை வாழவிடுவதில்லை என எறும்பு ஒன்று கடவுளை பார்த்து தவம் இருந்தது. கடவுள் அதன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள் என்றார். மனிதர்கள் மேல் இருந்த கோபத்தில் எறும்பு கேட்டது. நான் கடித்தவுடன் சாகவேண்டும்.

கடவுள் தந்தேன் என மறைந்தார். வரத்தை சோதித்து பார்க்க மனிதனிடம் சென்று அந்த
எறும்பு கடித்தது. மனிதன் கோபத்தில் அதை “சத்” என அடித்து தூர வீசினான். வரமும் பலித்தது, கடித்தவுடன் எறும்பு செத்தது. யார் சாகவேண்டும் என வரம் வாங்கவில்லை அல்லவா?. இப்படி நான் அல்லல்பட கூடாது என்பதால் யோசித்து கேட்கிறேன் என்றேன். ”

என் தத்துவ கதையை கேட்டு டயர்டான தேவதை. பெருமூச்சு விட்ட பின் கூறியது.

“அதிகம் பேச்சு ஆண்களுக்கு அழகல்ல. முதல் வரம் தர நான் தயார். கேள்”


“ கேட்கும் வரங்களை கண்டிப்பாக கொடுப்பேன் என வாக்கு கொடு. நான் கேட்கிறேன்.”

“என் தேவதை பரம்பரையின் மேல் ஆணை. கேள்”

“ம்......உனக்கும் எனக்கும் நடந்த இந்த சம்பாஷணைகளை நான் ஒரு கதையாக எழுத போகிறேன். அதை அனைவரும் படிக்க வேண்டும்”

“தந்தேன். இரண்டாவது வரம்”

“உலகில் பலர் வரம் கொடுக்கிறேன் பேர்வழி என சுயநலத்தை தூண்டி பிறரின் எதிர்பார்ப்பு எனும் நெருப்பில் குளிர்காய்கிறார்கள். அவர்களை பற்றிய தெளிவு மக்களுக்கு கொடுக்க வேண்டும்”

“அவர் அவர் அழிவுக்கு அவர் அவரே காரணமாக இருப்பார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? இருந்தாலும் நீ கேட்ப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என வரம் தருகிறேன்”

“மூன்றாவது வரம்... மூன்றாவது வரம்....”

“மானிடனே கேள் என்ன தயக்கம்,?”

“எனக்கு மீண்டும் மூன்று வரங்கள் வேண்டும். இதுவே என் மூன்றாவது வரம்”

சிறிது வினாடி யோசித்த அந்த தேவதை.. “சரி. தந்தேன்” என்றது.

நானும் இமயமலை சாரலில் இருந்து வரம் கேட்கிறேன் பேர்வழி என அந்த தேவதையை கூட்டிவந்து விட்டேன். இப்பொழுது எல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட தேவதையிடம் வரம் கேட்பது என்றாகிவிட்டது. இரண்டு வரங்கள் கேட்டு விட்டு மூன்றாவதாக மீண்டும் மூன்றுவரம் கேட்டுவிடுவேன். கணிப்பொறி மென்பொருள் போல Do. Loop என திரும்ப திரும்ப தேவதை வரம் கொடுத்து என்னிடம் மாட்டிக்கொண்டது. தேவதை இப்பொழுது தான் உணருகிறது. இவனிடம் வசமாக சிக்கிவிட்டோம் என்று. இனி தேவதை பரம்பரையில் யாரும் புத்திசாலிகளுக்கு வரம் தர மாட்டார்கள்...!

உங்களுக்கு ஏதாவது வரம் வேண்டுமா? இரண்டு வரம் கேளுங்கள்... மூன்றாவது வரம் என்ன என்பது உங்களுக்கே தெரியுமே..

Saturday, September 26, 2009

வார்த்தைகளில் என்ன இருக்கு?

ஏறுவரிசை - இறங்குவரிசை
--------------------------------------
அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்

புத்தம் சரணம் கச்சாமி

யாழ்ப்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்‌ஷே

புத்தம் ரத்தம் கச்சாமி..!






கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!





போதனை
---------------
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!



அதிகப்பிரசங்கம்
-------------------------
இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!




முரண் முக்தி
--------------------
இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.





அவதார புருஷன்
-------------------------
கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!



நவயுக வேதாந்த விவாதம்
---------------------------------------
அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரத்தில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.



ஐங்கரன்
-------------

பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?



காமன் மேன்
------------------
திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!


பி.கு. மேற்கண்ட வரிகள் ஜீ மெயில் ஸ்டேட்டஸ் மெசேஜாக நான் வைத்திருந்த வரிகளின் தொகுப்பு.

Thursday, September 24, 2009

பழைய பஞ்சாங்கம் 24 - 09 - 2009

நான் தமிழக பிரபலமாக்கும்

பத்திரிகையில் வந்த கற்பனையான துணுக்கு ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாதவர்களுக்குகாக இதோ..

இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலின் மகன் ஒரு மனநல மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கே மனநலம் பாதிக்கபட்டிருந்த ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வந்தவர், சுருட்டு பிடித்துக்கொண்டிருந்த ஒரு நோயாளியை பார்த்தார். நோயாளி இவரிடம் நீ யார் என கேட்க..நான் சர்ச்சிலின் மகன் என்றார். அந்த நோயாளி இவரிடம் நெருங்கி வந்து ரகசியமாக, “விவரம் தெரியாத ஆளா இருக்கியே... நான் தான் சர்ச்சில்னு சொன்னதுக்கு என்னை இங்க அடைச்சு வச்சுருக்காங்க. சத்தமா சொல்லாதே.உன்னையும் அடைச்சு வைச்சுருவானுங்க” என்றார்.

இதற்கும் கீழ்கண்ட துணுக்குக்கும் சம்பந்தம் இல்லை... :)

நான் ரிஷிகேஷில் ஒரு ஆசிரமத்தில் அமர்ந்திருந்தேன். அப்பகுதியில் வசிக்கும் தோட்டவேலை செய்யும் ஒரு முதியவர் செடிகளை வெட்டிக்கொண்டிருந்தார். நான் மரத்தடியில் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்தவர், “எங்கிருந்து வரீங்க” என்றார். நான் தமிழ் நாட்டிலிருந்து என்றேன். உடனே அவர் , “போதும் போதும்... வேற எதையும் நான் கேட்க மாட்டேன். மேற்கொண்டு எதாவது கேட்டா நான் அங்க பெரிய நடிகன்னு சொல்லுவீங்க. இங்க வரவங்களுக்கு இதே பொழப்பா போச்சு” என்றார்.

சினிமா அளவில் இருந்த ஆன்மீக பொய் பிரச்சாரம் தற்சமயம் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறது. எதை சொல்லறேனு தெரிஞ்சுதோ? :)
------------------------------------------------------------------------------------

தென்னாடுடைய சிவனே போற்றி...

சென்ற வாரத்தில் ஒருநாள் நான் வீர சைவர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டேன். ஆமாம் மாட்டிக்கொண்டேன் என்றே சொல்லவேண்டும். என்னை சந்திக்க வந்த அவர். அவரின் சைவ கருத்துக்களை திணிக்க துவங்கினார். அவர் தான் பக்தியின் இலக்கணம் என்றும் சிவன் தென்னகத்து கடவுள் என்றும் வரிசையாக உரிமைகொண்டாடினார். அதனால் தான் தென்னாடுடைய சிவன் என அனைவரும் அழைப்பதாக சொன்னார்.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான்.. கைலாயத்தில் சிவன் இருக்கிறார் என்கிறார்கள். கைலாயம் தென்பகுதியில் இல்லை. தென்னாட்டில் பிறந்து வட நாடு சென்று விட்டாரா ? தென்னாடு என்றவுடன் ஏன் ஐயா தமிழகத்தை குறிப்பிடுவதாக கருதுகிறீர்கள்?

ஸ்ரீ லங்காவும் தென்னாடுதான். தமிழகமாவது மாநிலம்.
இலங்கைதான் நாடு. எனவே தென்னாடு என ஏன் இலங்கையை அவர்கள் குறித்திருக்க கூடாது என கேட்டேன்.நீங்க என்கிட்ட விதண்டாவாதம் பேசரீங்க என்றார். (இவர் இன்னும் வலைபதிவு எழுத ஆரம்பிக்கலை போல. அரம்பிச்சா எது விதண்டாவாதம்னு தெரியும் : ) ).

கோபாவேசத்துடன்....... நான் திருமறை பாடினால் சிவனே எழுந்தருளுவார் என்றார். அதுவரை பொறுமையாக இருந்த நான், திருமறை பாடாமலேயே நான் அழைத்தால் சிவன் வருவார் என்றேன்.. எப்படி என்பது போல என்னை பார்த்தார் அவர்..

“டேய் சிவா இங்க வா என்றேன்”... நான் வளர்க்கும் சிவா என்னிடம் வந்து வாலை ஆட்டியவாரே அவரை பார்த்து குலைத்தான்.

சிவனுக்கு தெரிந்திருக்கிறது யாரை பார்த்து குலைக்கவேண்டும் என்று..!
என்னுடன் இருக்கும் சிவாவும் லீலாவும்

---------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை கலைஞர்

ஒரு மனிதனுக்கு கலை ஞானம் உள்ளே மேம்பட மேம்பட நகைச்சுவை உணர்வும் மேம்பட வேண்டும். இல்லை என்றால் ஒரு கட்டத்தில் அந்த கலையானது

ஒருவித இறுக்கத்தை தழுவி அழியும். நம்ம ஊர் கர்நாடக சங்கீத மேதைகள் பலர் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வு மிக மிக குறைவு எனலாம். தாங்கள் கலையை காக்க வந்த பிதாமகன்கள் என்ற தோரணையிலேயே இருப்பார்கள்.

விதிவிலக்குகள் எப்பொழுதும் நம்மிடம் உண்டு அல்லவா. அப்படிபட்டவர் திரு.நெய்வேலி சந்தானகோபாலன். தமிழகத்தில் கவனிக்கபடாத கலைஞன் என சொல்லலாம். அருமையான சங்கீத ஞானமும் குரள் வளமும் கொண்டவர். பலருக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்து கர்நாடக சங்கீத உலகில் பிராசிக்க செய்பவர். தொலைக்காட்சியில் சங்கீதம் சொல்லித்தரும் இவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.திரு செம்மங்குடி மற்றும் திரு.பாலமுரளி கிருஷ்ணாவிற்கு பிறகு சில ராகங்களை நுணுக்கமாக கையாளக்கூடியவர். இவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது.

ஒரு உதாரணம் இதோ... ஒரு பேட்டியில் பேட்டி எடுப்பவரிடம் சந்தானகோபாலன் கேட்டார். பைரவி ராகம் யாரால் உருவாக்கபட்டது தெரியுமா? சிறிது இடைவெளிவிட்டு அவரே சொன்னார்..

By Ravi.

இவரை பற்றி முன்பின் தெரியாதவர்களுக்கு ஒரு டைமிங் பாடல் அவர் குரலில் இங்கே கேட்கவும் “பாடல்”

(உபரி செய்தியாக இந்த பாடலை எழுதியவர் யார் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். ஸ்ரீசக்ர புரிக்கும் பாடலாசிரியருக்கும் ஒரு தொடர்பு உண்டு..!)

திரு.சந்தானகோபாலன் வலைப்பூ எழுதுகிறார். அதன் முகவரி இதோ http://guruneyveli.blogspot.com/
-----------------------------------------------------------------------------------------

நான் நீ என்றால்....


முக்கியமாக ஒரு ஆவணத்தை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பொழுது அதில் புகைப்படம் ஒட்டுவதற்கு பசை தேவைப்பட்டது. எங்கு தேடியும் ஒட்டுவதற்கு பசை கிடைக்கவில்லை. சுப்பாண்டியிடம் கேட்டதற்கு, 'நாம்'னு சொல்லுங்க ஒட்டும், பஸ்சில் போட்டிருந்துச்சு என்றான்.

முடியல...

Wednesday, September 23, 2009

நவராத்திரி ஒரு சமூகத்தினரால் மட்டும் ஏன் கொண்டாடப்படுகிறது?


நவராத்திரி மட்டுமல்ல ஏனைய விஷயங்களை இவ்வாறு கேள்வியாக கேட்கப்படுகிறது.

திரு ஸ்ரீதரன் சென்ற பதிவில் கீழ்கண்டவாறு கேள்விகள் கேட்டிருந்தார்.


சுவாமிஜி, இப்பொழுதெல்லாம் நவராத்திரி பூஜை குறிப்பிட்ட சில சமூகத்தினரால் ( பிராமின்ஸ் ) மட்டுமே வீட்டில் கொண்டாடப்படுகிறது. ஒரு எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் அனைத்து சமூகத்தினராலும் நடத்தப்பட்டது என்று ஒரு ஞாபகம் ( வித விதமான சுண்டல் கிடைக்குமே! ) மேலும் வீட்டில் நவராத்திரி பூஜை எப்படி நடத்தவேண்டும் ?

இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கலாமா என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். நவராத்திரி ஆன்மீக சம்பந்தபட்டது தானே? தாராளமாக கேட்கலாம். ஆன்மீக கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். எத்தனையோ பேர் விடையளித்த கேள்வியாக இருந்தாலும் என் விடை உங்களுக்கு சில புதிய கோணங்களை காட்டும். உங்களை சிந்திக்க வைக்கும். இந்த கேள்வியின் பதில் விளக்கமாகவும் நீண்டும் இருப்பதால் தனிபதிவாகவே போட்டுவிட்டேன்.

நவராத்திரி என்பது ஒரு ஆன்மீக ரீதியாகவும்,காலநிலைக்காகவும் மற்றும் கலாச்சாரத்திற்ககவும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. வீட்டின் முன் அறையில் படிகள் வைத்து அதில் கீழிருந்து மேலாக பொம்மைகள் அடுக்கி வைப்பார்கள்.

சின்ன ஜீவராசிகள் முதல் படிபடியாக ஜீவராசிகளின் தன்மைக்கு ஏற்ப அடுக்கி உயர் படிகளில் கடவுள் சிலை இருக்கும். அனைத்து ஜீவனும் படிபடியாக முன்னேறி கடைசியில் முக்தி அடைதலை குறிப்பது போல அமையும்.நவராத்திரி விழாவை பயன்படுத்தி அருகில் இருக்கும் வீடுகளுடன் நட்பை பலப்படுத்துவது, பரஸ்பர புரிதல் ஏற்படுத்துவது என்பது நம் கலாச்சாரம். நம் நாட்டில் கலாச்சரத்துடன் இசையும், நாட்டியமும் எப்பொழுதும் கலந்துதே இருக்கும். அதனால் குழந்தைகள் பிறருக்கு தங்கள் கலை அறிவை வெளிப்படுத்தும் ஒரு நாளாக இருக்கிறது.

நவராத்திரி அன்று குழந்தைகள் பெரியவர்கள் பாடுவதையும் கலை நிகழ்ச்சி செய்வதையும் கேள்விபட்டதுண்டா?


இவை எல்லாம் இருக்கட்டும்....

அறிவியல் முன்னேற்றம் அடைய அடைய மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் தலைகீழாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எடிசன் மின்சார பல்ப் கண்டு பிடிக்கும் முன் விளக்குகள் மேல் நோக்கி இருந்தது. அதன் பின் விளக்கு கீழ் நோக்கி ஒளி கொடுக்கிறது. ஆட்டுக்கல் நிலையாக இருந்தது குழவி சுற்றியது அந்தகாலம், குழவி நிலையாக இருந்து ஆட்டுக்கல் சுற்றுவது கிரண்டர் காலம்.

அது போல அந்த காலத்தில் நவராத்திரியில் பொம்மைகள் படியில் அசையாமல் இருக்கும், மக்கள் அதன் முன் ஆடுவார்கள், பாடுவார்கள், பேசுவார்கள்.

இது விஞ்ஞனான காலமல்லவா? தொலைகாட்சி பெட்டி என்ற கொலு பொம்மை ஆடுகிறது பாடுகிறது பேசுகிறது. மக்கள் கொலு பொம்மைகளாக எப்பொழுதும் அதன் முன் அசையாமல் அமர்ந்திருக்கிறார்கள்..!

ஏனைய வேதகாலத்தில் அனேக விஷயங்கள் அனைத்து தரப்பினரும் செய்து வந்தனர். நாளடைவில் அவை யானை பூனையான கதையாக தேய்ந்து வருகிறது. பூணல் போடுவது, மந்திரம் சொல்லுவது, ஆடை அணியும் முறை என அனைத்தும் வேதகாலத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. ஆனால் தற்சமயம் பிராமணர்கள் என சொல்லும் குலம் மட்டுமே அதை செய்வதாக சொல்லுகிறோம். எனக்கு தெரிந்தவரை அவர்களில் அனேகர் அவற்றை சரியாக செய்வதில்லை. இன்னும் ஒரு ஐநூறு வருடங்களில் பல கலாச்சார மாற்றம் ஏற்படலாம்.

உங்கள் கொள்ளுப்பேரனோ பேத்தியோ பலவருடம் கழித்து ஒரு ஆன்மீகவாதியிடம் “ஏன் ஒரு சமூகம் மட்டும் தீபாவளி கொண்டாடுகிறார்கள் ?” என கேட்கும் நிலை வரலாம்.

பக்கத்து பிளாட்டில் இருப்பவர் இறந்த பின் துர்நாற்றத்தைவைத்து கண்டு பிடிக்கும் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் நவநாகரீகமாக கொண்டாடப்படுகிறது. அப்படி இருப்பவர்கள் கொலுவைத்து பிறரை கூப்பிட்டு பாட்டு பாடி ரசனையுடன் கழிப்பார்களா?

சுயநலமான பணத்தேடல் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. ஒன்பது நாள் இதை கொண்டாடினால் என்ன கிடைக்கும் என கேள்வி கேட்கப்படுகிறது. வேலை வேலை என ஓடி குழந்தைகளிடம் கூட பேச முடியாமல் இருக்கும் உலகில் கொலுவைத்து கொண்டாடி ரசனையுடன் வாழ்வார்கள் என எதிர்பார்ப்பது நம் முட்டாள் தனமே.

பெண்களின் கலை ஆர்வத்திற்கும் ஆவர்களின் கைவேலைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழா நவராத்திரியாகும். ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் சமூக நிகழ்வுகளை ஒரு சிறிய இடத்தில் பொம்மைகளாக செய்து வைத்திருப்பார்கள். அதை பார்க்கும் பொழுது அந்த வீட்டு பெண்மணியின் அறிவு மற்றும் திறன் வெளிப்படும்.

இந்த வருடம் ஒரு வீட்டில் பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஒரு பொம்மையாக அமைத்திருந்தார்கள். ஈழ படுகொலையை இன்னொரு பெண் தத்ரூபமாக செய்து அதன் அருகில் அவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி இருந்தாள்.

ஒருவீட்டின் பெண் அறிவாக இருக்கிறாள் என்றால் அந்த வீடு சுபிக்‌ஷமாக இருக்கும் என்பதன் அடையாளம். பலவீடுகள் அப்படி இருந்தால் அந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தம்.

இனி வரும் காலத்திலாவத் பெண்கள் நவராத்திரி கொண்டாட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமூதாயத்தை ஏற்படுத்துவார்கள் என பிரார்த்தனை செய்வோம்.

Monday, September 21, 2009

தசமஹா வித்யா பகுதி 2

தசமஹவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்து விதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹா சக்திகளை முழுமையாக உணர முடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் - அஷ்டமா சித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.

ஓர் ஊரில் மாபெரும்ஞானி ஒருவர் வாழ்ந்துவந்தார். தினமும் அவரிடம் பலர்அறிவுரைகேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் "நானே" காரணம் என்றார். 'நான்' என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்கவைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள் தனமே.


தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அது சுவை [ நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்துகொள்ளலாம்.

1. மாதங்கி : என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி : மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள்.

3. பகுளாமுகி : பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4. திரிபுரசுந்தரி : பதினாறு வயது கன்னிகையின் உருவை கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம் என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்கியவள் . சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா : நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹா சக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும் , செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம்.
வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி : கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்துவரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி : கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிறஆடையும், நகைகள் இல்லாத விரிந்ததலையும் கொண்டவள். கையில் புகைகக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10. திரிபுர பைரவி : பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹா வித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜய தசமி வரை இவர்களே வணங்கப்படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாடபடுவதாக சொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹா சக்தியின் அம்சம் உண்டு. மஹா சக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹா சக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ர சாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவி மஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் நான் வரிசைப்படுத்தியுள்ளேன்.


மஹா சக்திகளின் தொடர்பு கொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேத சாஸ்திரம், தந்த்ர சாஸ்திரம், தேவி பாகவதம், தேவி மஹாத்மியம் மற்றும் லலிதா சஹஸ்ர நாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளிய வடிவமே இந்த தொகுப்பு.


தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இதுபோல வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். இந்த நவ தானியங்களில் அரிசி ,கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யாவாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின்மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹா வித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதி சங்கராச்சாரியார் இதை தொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் கன்கல் என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீ சக்ரத்தில் அமைந்திருக்கும் மஹா சக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்துகொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹா சக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்துவித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.

Thursday, September 17, 2009

தசமஹா வித்யா

தசமஹா வித்யா
- சக்தியின் வடிவங்கள்.

பிரபஞ்ச ரகசியங்களில் பல விஷயங்கள் மனித நிலையில் உணர முடியாது. பிரபஞ்சமும் உயிர்களும் தோன்றுவதும், அழிவதும் ஏன் என்பதும் - அவை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதும் விடுவிக்க முடியாத முடிச்சாகவே இருக்கிறது. மனித அறிவால் உணரமுடியாத விஷயங்களை தெய்வீக நிலையால் உணரலாம். மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு மாற்றமடைவது எளிதான விஷயமா? பல பிறவிகளாகவும் பல யுகங்களாகவும் பலர் முயற்சி செய்து கிடைக்காத விஷயத்தை நம்மால் பெறமுடியுமா என உங்கள் கேள்விகள் விரிவடைந்து கொண்டே செல்வதை நான் அறிவேன். உலகின் மும்முதல் பணி என அழைக்கப்படும் படைத்தல் - காத்தல் - அழித்தல் இவற்றை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த பணிகளை செய்பவராக மாறினால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

தெய்வீகமான முப்பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவுடன் உங்களின் நிலை முழுமையை பெறும். இந்த நிலையே முக்தி அல்லது பிரம்மஞானம் என கூறப்படுகிறது. மேற்சொன்ன வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள். முப்பணிகளை செய்ய "ஆற்றல்" அவசியம். இந்த ஆற்றலே "சக்தி" என அழைக்கப்படுகிறது.

நடைமுறையில் ஆற்றல் என்ற சொல்லும், சக்தி என்ற சொல்லும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறானது. ஆற்றலுக்கு அழிவில்லை. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம் என விஞ்ஞான ரீதியாக குறிப்பிடுபவை "ஆற்றல்" என கூறலாம். தோற்றமும், முடிவும் அற்ற எங்கும் எல்லா பொருட்களிலும் வியாபித்து இருக்கும் ஓர் வஸ்து "சக்தி" எனலாம். இதை எளிய உதாரணம் மூலம் தெரிந்துகொள்வோம். வயது முதிர்ந்த ஒருவர் இளைஞகளைப் போல ஓட்ட பந்தயத்தில் கலந்துகொண்டார் என்றால் அவருக்கு இளைஞர்களைப் போல ஆற்றல் உண்டு எனலாம். ஓர் இடத்தில் இல்லாதது மற்றொரு இடத்தில் இருப்பதால் ஆற்றல் அழிவதில்லை. இடமாற்றம் அடையும் எனும் கூற்று கூறப்படுகிறது.


தனது குழந்தையின் மேல் தாய் காட்டும் பாசம் அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு காரணமாகிறது. இந்த தாய்மை உணர்வு பெண்களுக்கு ஏற்பட எந்த தூண்டுதலும் கிடையாது. தாய்மை எனும் உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் பொதுவானது மற்றும் ஏற்றத்தாழ்வு இருக்காது. இதனால் தாயுணர்வு இங்கு சக்தியாக மாறுகிறது. வெவ்வேறு வயதில் தாய்மை அடைந்தாலும் தாய்மை எனும் சக்தி மாறாது. ஆற்றலுக்கு மாறும் தன்மை உண்டு. ஆனால் சக்தி மாற்றம் அடைந்தாலும் சக்திநிலை மாற்றம் அடையாது. ஆங்கிலத்தில் Energy, power என்று பொதுவாக கூறப்பட்டதால் ஆற்றல், சக்தி என்ற வார்த்தைகள் பொதுவாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது.


இவற்றை விளக்க காரணம் முப்பணிகளை செய்யும் தெய்வீக நிலைக்கு " சக்தி " அவசியம். சக்தி நிலை இல்லை என்றால் எதுவும் இயங்காது. உடனே சிவம் பெரிதா, சக்தி பெரிதா எனும் பட்டிமன்றத்தை துவங்க வேண்டாம். இரு நிலைகளும் இருந்தால் மட்டுமே செயல் நடைபெறும். சிவம் என்பது உடல், சக்தி என்பது உயிர். இதில் எது இருந்தால் நல்லது என கூறமுடியுமா? இரண்டும் இணைந்த நிலையே சக்தி நிலை என கூறப்படுகிறது.


பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்து செயலுக்கும் ஒரே சக்தி காரணமாக இருக்கிறது. இந்த மாபெரும் சக்தியே மஹாசக்தி என கூறப்படுகிறது. இந்த சக்தி இல்லாத பிரபஞ்சத்தை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. காரணம் அந்த கற்பனையை செய்வதும் செய்ய தூண்டுவதும் இந்த மஹாசக்தியே ஆகும்.

இந்த மஹாசக்தி தனது நிலையை பத்து விதமாக வெளிப்படுத்துகிறது. பத்து விதமான மஹாசக்தியை தசமஹாசக்திகள் என அழைக்கலாம். இந்த மஹாசக்திகளை அறிந்துகொள்ளும் முறை "தசமஹாவித்யா" என்றழைக்கப்படுகிறது. 'வித்யா' எனும் வார்த்தை இங்கு ஞானம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் மந்திரசாஸ்திரம் பற்றி விவாதித்தோம். சென்ற மாதத்தில் யந்திர சாஸ்திரம் பற்றி விளக்கி இருந்தேன். யந்திர - மந்திர மற்றும் தந்திர எனும் மூன்றாக பிரிக்கப்பட்ட சாஸ்திரத்தில் தசமஹாவித்யா என்பது தந்திர சாஸ்திரத்தின் ஓர் பகுதியாகும். தந்திர சாஸ்திரம் என்றதும் அனைவரும் தவறான மதிப்பீட்டையே வைத்திருக்கிறார்கள். "தந்த்ரா" எனும் சொல்லுக்கு உயர்நுட்ப முறை என்று அர்த்தம். யந்திர மற்றும் மந்திரசக்தி துணை கொண்டு ஓர் இலக்கை அடையும் முறையே தந்த்ரா என புரிந்துகொள்ளுங்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இது எல்லாம் வழக்கத்தில் உள்ளதா அல்லது பயன்படுமா என நீங்கள் கேட்கலாம்.

கணிப்பொறி இயந்திரம் ஒர் செயல்படாத பொருள். அதன் உதிரி பாகங்களை பிளந்து பாருங்கள் ஒன்றும் இருக்காது. மேலும் அவை சிலிகா எனும் மண், செப்பு கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உயிரற்ற கருவிகள் மனிதன் இடும் கட்டளைக்கு செயல்பட்டு பல விதங்களில் மனித வாழ்வை உயர்த்துகிறது. இதே தத்துவத்தின் உயர்நிலை வடிவம் தான் தந்த்ரா.


கணிப்பொறியை நம்பும் மனிதன் கண்ணால் பார்க்காத காரணத்தால் தந்த்ர சாஸ்திரத்தை நம்புவதில்லை. இங்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இதைவிட கீழ்நிலையில் தந்த்ரா உணரப்படுகிறது. ஆண் - பெண் பாலின தொடர்பு மூலம் உயர்நிலையை அடையும்முறை என சில இந்திய ஆன்மிக வாதிகளால் கூறப்பட்டதால் மேல் நாட்டினர் தந்த்ரா என்றதும் ஆன்மீக உயர்வை அடையாமல் பாதாளத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.


தந்த்ரா பல வழிகளில் கையாளப்பட்டாலும் யாருக்கும் பாதிக்காத நிலையில் இருந்து ஆன்ம உயர்வுக்கு மட்டுமே பயன்படும் பகுதிதான் தசமஹாவித்யா. தந்த்ராவை எளிமையாக புரிந்துகொள்ள இதைவிட வேறுபகுதி இல்லை. அதே நேரத்தில் இந்த எளிய வழியின் மூலம் ஏற்படும் விளைவு பிரமாண்டமானது. Technology எனும் ஆங்கில வார்த்தை ஓரளவு தந்த்ரா என்னும் வார்த்தையை மொழிபெயர்க்கும். [Science] அறிவியல் ஆராய்ச்சி என்றால் வளர்ச்சி அடையக்கூடிய முற்றுபெறாத அறிவு எனலாம். உயர்நுட்பம் Technology என்றால் வளர்ச்சி அடையக்கூடிய முற்றுப்பெற்ற முழுமையான அறிவியல் என்று பெயர். இதைப்போல மெய்ஞானத்தின் திறவுகோல் என்பது தந்த்ரா.


நவராத்திரி துவங்கும் இவ்வேளையில் தந்திர முறையில் செயல்படும் தசமாஹாவித்ய பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.


(தொடரும்)

Monday, September 14, 2009

2012-ல் உலகம் அழியப்போகிறதா? -பக்தி Version

முன் குறிப்பு: இந்த கட்டுரை பக்தி சார்ந்து எழுதப்பட்டது. உங்களுக்கு பக்தி பூர்வமாக படிக்க விருப்பம் இல்லை எனில் இங்கே சென்று படிக்கவும் 2012ல் உலகம் அழியுமா?

னிதன் என்றும் பயம் என்னும் அசுர பிடியில் சிக்கித்தவிக்கிறார். ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கை குறைய குறைய பயம் எனும் விஷயம் அதிகரிக்கிறது. சுயநலத்துடன் செய்யும் பக்தி கூட பய-பக்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிதே. கடவுள் மேல் நமக்கு இருக்கும் பக்தி பல நிலைகளில் இருக்கலாம்.

ஆஞ்சனேயரை போல கடவுளை எஜமானனாக நினைக்கலாம், அர்ஜுனனை போல வழிகாட்டியாக நினைக்கலாம், குசேலனை போல நண்பனாக நினைக்கலாம் , மீராவை போல காதலனாக நினைக்கலாம். தந்தையாக, தாயாக என பக்தியை எப்படி செய்ய வேண்டும் என பல மஹான்கள் நமக்கு வழிகாட்டி உள்ளனர்.

பயம் என்றும் நம்பிக்கை இன்மையாலும் ஆணவத்தாலும் வரக்கூடியது. தூயபக்தியாளர்களுக்கு பயம் ஏற்படாது என்பதே உண்மை. மாணிக்கவாசகரையும், பிரகலாதனையும் கொடூரமாக துன்புறுத்தும் பொழுது கூட அவர்கள் பயப்படவில்லை. ஏன்? காரணம் அவர்களுக்கு எல்லையில்லா பக்தி இருந்தது.

தற்காலத்தில் சிறிய விஷயம் கூட மக்களுக்கு பயத்தையும் கலவரத்தையும் உண்டாக்குவதன் காரணம் தூய பக்தி என்பது குறைவாக இருப்பதால் தான்.

ஒரு நாத்திகவாதம் கொண்டு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவர் ஒருவர் இருந்தார். தனது வாழ்நாளில் இறைவனை அவர் சிந்தித்ததை விட நிந்தித்ததே அதிகம். ஒரு நாள் இரவு மலைபயணத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். இருட்டு காரணமாக ஒரு வளைவில் தடுமாறி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்தது. இவர் தூக்கிஎறியப்பட்டார். பல ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு திடீரென கடவுள் பக்தி வந்துவிட்டது. நம்மில் பலரும் இவரை போலத்தான் பிரச்சனையென்றால் தான் பகவானே என்பார்கள்.

கடவுளே என்னை காப்பாற்று காப்பாற்றினால் நீ இருப்பதாக நம்புகிறேன் என வேண்டினார். அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மரக்கிளை ஒன்று குறுக்கிடவே அதை கெட்டியாக பிடித்துகொண்டார். எங்கும் இருள். மரக்கிளையை பிடித்து தொங்கியபடியே உரக்க கேட்டார், “ கடவுளே என்னை காப்பாறுவீர்கள் என நினைத்து முதன் முதலாக உன்னை வேண்டினேன் இதற்கு நீ கொடுத்த பலனா இது? நான் நாத்திகனாக இருந்தாலும் இப்படி மரக்கிளையை பிடித்து இருப்பேனே...” வானில் இருந்து ஒரு குரல் கேட்டது... மனிதனே அந்த கிளையை விட்டுவிடு நான் உன்னை காப்பேன்..”

“என்னது இதையும் விட்டுவிட வேண்டுமா..நல்ல வேடிக்கை..... இதைவிட்டால் விழுந்து சாக வேண்டியது தான் ?” என்றவாறே தெய்வத்தின் குரலை அலட்சியப்படுத்திவிட்டு இரவு முழுவதும் மரக்கிளையில் தொங்கினான். விடிந்த பிறகு காலையில் பார்த்தால் அவன் தொங்கிகொண்டிருந்தது மலையடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய மரத்தில் அவனுக்கும் பூமிக்கும் ஐந்தடி தூரமே இருந்தது. இந்த மனிதன் போல “நான்” என்னை காப்பாற்றிக்கொள்வேன் என்ற ஆணவம் இருக்கும் வரை பரந்தாமனே நினைத்தாலும் காக்க முடியாது. இது தானே மஹாபாரதத்தில் திரெளபதிக்கும் நடந்தது?

உலகம் முழுவதும் ஒரு செய்தி பரப்பபட்டு வருகிறது. அதாவது டிசம்பர் மாதம் 12ஆம் தேதி 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என்று. எனக்கு தெரிந்து இது போன்ற செய்தி என்னையோ முறை பரப்பினார்கள் 2000ஆம் வருடம் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் பலர்.

2012ல் உலகம் அழியப்போகிறது அதனால் கடவுளை வேண்டுங்கள் என்றும் என்னை பின்பற்றுங்கள் என்றும் சொல்லும் நவீன ஆன்மீகவாதிகள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களிடையே பயம்காட்டி ஏமாற்றுவதை தவிர வேறு என்ன சாதிக்க போகிறார்கள்? பயத்தால் உண்டான பக்தி நிலைக்குமா? 2012க்கு பிறகு உலகம் இருந்தால் இவர்களை என்ன செய்யலாம் ?

வட அமெரிக்க கண்டத்தில் இருந்த மாயன் என்ற கலாச்சாரத்தின் நாள் காட்டி 2012ஆம் ஆண்டு வரைதான் இருக்கிறதாம். அதனால் தான் இது போல வதந்திகளை பரப்புகிறார்கள். வெளிநாட்டுக்காரர்களுக்கு மரண பயம் அதிகம். ஆன்மீகத்தில் இல்லாத பாமரன் கூட தான் மரணத்திற்கு பிறகு சொர்க்கத்திலோ நரகத்திலோ வாழ்வேன் என நம்பும் பாரதகலாச்சாரம் நம்முடையது.வெளிநாட்டுக்காரர்களுக்கு மரணத்திற்கு பின் என்ன என தெரியாது அல்லது அவர்கள் கலாச்சாரத்தில் இல்லை. இதனால் எப்பொழுது இறப்பு வரும் என்பதில் அவர்கள் பயத்துடன் இருக்கிறார்கள்.

மனிதன் பிறக்கும் பொழுதே இறக்கப்போகிறான் என்பது தெரிந்தது தான். அதற்காக ஒவ்வொரு நாளும் வருத்தப்படுகிறோமா? அது போலத்தான் எந்த ஒரு தோற்றமும் அழிவிற்கும் தயாராகவே தோன்றுகிறது.

உலகம் அழிந்தால் என்ன? அதற்கு ஏன் பயம் கொள்ளவேண்டும்.பிரளயம் என்ற வார்த்தை அருமையான பொருள் கொண்டது. பிர -லயம் அனைத்து பிரபஞ்ச பொருட்களும் ஆதிசொரூபமான இறைவனுடன் லயமாகிவிடுவது. வேறுபாடு இல்லாமல் இணைந்து விடுவதைத்தான் லயம் என்கிறோம். இறைவனுடன் ஒன்றிணைய ஏன் பயம் கொள்ளவேண்டும்.

நான் என்ற ஆணவம் மிகும் பொழுது தான் அழிவைபற்றிய பயம் உண்டாகும் மேலும் நம்பிக்கையின்மை ஏற்பட்டு பக்தி குறையும் என கூறினேன் அல்லவா ? இந்த கருத்தையும் 2012ல் உலகம் அழியும் செய்தி உண்மையா என்பதற்கும் விடையாக பாகவத புராணத்தில் கதை ஒன்று உண்டு.

பிரம்மா ஆணவத்தின் சொரூபம். அதனால் தான் அவருக்கு கோவில்கள் இல்லை. அவர் படைத்தல் தொழிலை செய்து வந்ததால் தானே உலகில் அனைத்துக்கும் காரணம் என்ற இருமாப்பு கொண்டார்.பிரம்மனின் இருப்பிடம் பரமாத்மாவின் நாபிக்கமலம் அல்லவா?வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவு தாயிக்கு தெரிவது போல பிரம்மனின் கர்வம் ஸ்ரீமன் நாரயணனுக்கு புலப்பட்டது.

பிரம்மனை அழைத்து நானும் நீயும் ஒரு முனிவரை காண செல்ல வேண்டும் என கூறினார். ஆணவத்தில் இருந்த பிரம்மாவோ அலட்சியமாக அவருடன் சென்றார்.

அங்கே உடல் முழுவதும் கரடி போன்று முடிகள் நிறைந்த ஒரு முனிவர் அமர்ந்திருந்தார் அவரின் பெயர் ரோமமுனிவர். அவர் உடல் முழுவதும் முடி இருந்தாலும் வலது கை மணிக்கட்டுவரை முடிகள் இல்லை. இத்தகைய வித்தியாசமான நிலையில் கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்த முனிவர் முன் இருவரும் தோன்றினார்கள்.

பரமாத்மாவை கண்டவுடன் விழுந்துவணங்கி அவர்களின் முன் பணிவுடன் நின்றார் ரோமமுனிவர். இறைவா என்க்கு தரிசனம் தந்தமைக்கு நன்றி. நீங்கள் அழைத்திருந்தால் நானே உங்களிடம் வந்திருப்பேன். இந்த எளியவனிடத்தில் வந்த காரணம் அடியேன் தெரிந்துகொள்ளலாம?” என பணிவுடன் கேட்டார்.

பிரம்மன் அருகில் இருப்பதை பார்த்தவாறே ஸ்ரீமந் நாராயணன் ரோமமுனிவரிடம் , “ரோம முனிவரே உங்கள் ஆயுள் காலம் என்ன? அதை தெரிந்து கொள்ளவே யாம் வந்தோம்” என்றார்.

“பிரபோ அண்ட சராச்சரங்கள் அனைத்தும் படைப்பவர் நீங்கள். தாங்கள் அறியாதது ஏதுவும் உண்டா? நீங்களே இக்கேள்வியை கேட்பதால் இதில் ஏதேனும் ஒரு திருவிளையாடல் உண்டு என்பதை உணர முடிகிறது. அதனால் என் ஆயுள் காலத்தை விரிவாகவே கூறுகிறேன்” என்ற ரோம முனிவர் விவரிக்க துவங்கினார்.

காலத்தை பொருத்துதான் ஆயுள் காலம் முடிவு செய்யப்படுகிறது. ஒரு மனிதன் ஒரு நாளில் 21,600 முறை சுவாசம் செய்கிறான். நான்கு சதுர்யுகங்களும் மனிதனின் சுவாசத்தாலேயே தோன்றுகிறது.

கலியுகத்தில் மனிதன் தனது 20 உறுப்புகளில் சுவாசிப்பதால் கலியுகம் 432000 வருடங்கள் (20 X 21600 =4,32,000 வருடங்கள்)

கலியுகத்தின் முன் இருக்கும் மஹாபாரதம் நடந்த துவாபர யுகம் கலியுகத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. (864000 வருடங்கள்).

திருதாயுகம் என்ற ராமாயண யுகம் கலியுகத்தைவிட மூன்று மடங்கும் அதிகமாகவும், துவாபர யுகத்தைவிட இருமடங்கும் கொண்டது. (1296000 வருடங்கள்)

கிருதாயுகம் என்பது கலியுகத்தைவிட நான்கு மடங்கும் திருதாயுகத்தைவிட இருமடங்கும் பெரியது. (1728000 வருடங்கள்).

கிருதாயுகம்,திருதாயுகம்,துவாபர யுகம் மற்றும் கலியுகம் என அனைத்தும் சேர்ந்த நான்கு யுகத்திற்கும் சதுர்யுகம் என பெயர். ஒரு சதுர்யுகம் என்பது பிரம்மாவின் ஒரு நாளின் பகல் பொழுது, நான்கு சதுர்யுகமும் இல்லாத பிரளயகாலம் பிரம்மனின் இரவு பொழுது. ஆகவே சதுர்யுகம் மற்றும் பிரளயம் இணைந்த காலம் பிரம்மனுக்கு ஒரு நாள்.

இது போல ஆயிரம் பிரம்ம நாட்கள் சேர்ந்தது ஒரு கல்பம் என்று பெயர். நூறு கல்பம் சேர்ந்தது மஹாயுகம்.ஒரு மஹாயுகம் பிரம்மனின் முழு ஆயுள் காலம் ஆகும். நூறு மஹாயுகம் கழிந்ததும் மற்றுமொரு பிரம்மாவை பரமாத்மா உண்டாக்குவார்.

மேற்கண்ட கருத்தை ரோம முனிவர் கூறும்பொழுது பிரம்மாவின் முகத்தில் பெருமிதம். தான் எவ்வளவு நீண்ட அயுளை கொண்டவன் என்று நினைத்துக்கொண்டார்.

ரோமமுனிவர் தொடர்ந்தார்....

இப்படிப்பட்டது பிரம்மனின் ஆயுள் காலம் என கூறுப்படுகிறது. அவ்வாறு

ஒரு பிரம்மவுக்கு ஆயுள் முடிந்தால் எனது உடலில் இருக்கும் ஒரு ரோமம் விழுந்துவிடும். எப்பொழுது எனது உடலில் அனைத்து ரோமமும் உதிர்கிறதோ அப்பொழுது எனது ஆயுள் முடிந்துவிடும். எனது வலது கை மணிக்கட்டில் மட்டுமே ரோமம் உதிர்ந்திருக்கிறது. இந்த அற்பனின் ஆயுள் இது தான் பிரபோ என்றார் ரோம முனிவர்.


பிரம்மனுக்கு தலைசுற்றாத குறை. தான் அனைத்தையும் படைப்பவன் தன்னை மிஞ்சிய ஆயுள் இல்லை என நினைத்தவருக்கு இது ஒரு மிகப்பெரிய தாக்கமாக இருந்தது.

இதற்காகத்தானே ஸ்ரீமந்நாராயணன் அவரை இங்கே அழைத்துவந்தார்? பிரம்மனின் மனதில் இருப்பதை அறிந்து கொண்டே அவரை ரோமமுனிவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் இன்னொரு முனிவரிடம் அழைத்து சென்றார்.

அங்கே உடலில் எட்டு இடங்களில் கோணலாக வளைந்த நிலையில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். உடலில் எட்டு இடங்களில் கோணல் இருந்ததால் அவரின் பெயர் அஷ்டவக்ரர்.

ஸ்ரீமந் நாராயணன் அவரிடத்திலும் ரோமமுனிவரிடம் கேட்டது போல ஆயுள் காலத்தை விளக்குமாறு கேட்டார். ரோம முனிவர் சொன்னது போல யுகம் மற்றும் கல்பம் ஆகியவற்றை விளக்கிவிட்டு சொன்னார். ரோமமுனிவர் இருக்கிறாரே அவரின் ஆயுள் முடிந்தால் என் உடம்பில் ஒரு கோணல் சரியாகிவிடும். அது போல எட்டு கோணலும் சரியானால் என் ஆயுள் முடிந்துவிடும் என்றார்..


பிரம்மனுக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. தனது அகந்தை சுக்குநூறாக உடைந்து மெளனமாக ஸ்ரீமந் நாராயணனின் பாதகமலத்தை பற்றினார்.

கலியுகத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். ஐயாயிரத்தி சொச்ச வருடங்களே கடந்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய வருடங்கள் பல உண்டு. பகவானை தியானித்து என்றும் அவரின் நினைவில் இருந்தால் ரோம முனிவர் மற்றும் அஷ்டவக்ரர் போல நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

ஒவ்வொரு முறையும் சுவாசத்தை உள்ளே இழுக்கும் பொழுது பிறக்கிறோம். சுவாசத்தை வெளிவிடும் பொழுது இறக்கிறோம் என சித்தர்கள் பாடலில் சொல்லுகிறார்கள். இறப்புக்கு அப்பால் ஒரு ஞானம் ஒன்று உண்டு அது சத் - சித் -ஆனந்த ரூபமான பரப்பிரம்மமே. இறைவனிடத்தில் பக்தி செய்வோம் தேவையற்ற அஹங்கார பயங்கள் என்ற இருளில் இருந்து வெளியேருவோம்.

சுபவரம் (
2009 செப்டம்பர் ) - ஆன்மீக மாத இதழில் வெளிவந்த கட்டுரை

Thursday, September 10, 2009

வாருங்கள் ஜென் ஆவோம்

புல்லின் நுனியில் இருந்த பனித்துளியால்
புல் வளைந்து பூமியை தொடும்
தொலைவில் இருந்தது.

சூரியன் உதித்ததும் பனித்துளி மறைந்தது.
புல் நிமிர்ந்தது.

-------------------------------------------

தற்கொலை செய்யும் நோக்கில்
மரக்கிளையில் கயிற்றில் தொங்கினேன்.
என் பழுதாங்காமல் கிளை முறிய
விழுந்தேன் “பொத்” என...

கிளையில் இருந்த இலை மெதுவாக

காற்றில் அசைந்தவண்ணம் கீழே விழுந்தது.

------------------------------------------------

தினமும் செடிகளுக்கு நீர் ஊற்றினேன்

வளர்ந்தது.

தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்
நான் வளரவில்லை.

--------------------------------------------------

எங்கள் ஊரின் கிழக்கே பெரிய மலை உண்டு.
இருந்தும் சூரிய கிரணங்களை மறைக்க முடியவில்லை.
சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது.

Wednesday, September 9, 2009

பழைய பஞ்சாங்கம் 09-09-2009

நடப்பது நல்லதற்கே.

சென்ற வருடம் இதே நாளில் தான் அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றது. ஆமாம் நான் இந்த வலைப்பக்கத்தை துவங்கினேன். எந்த
ஒரு திட்டமோ, கட்டமைப்போ இல்லாமல் நமக்கு தெரிந்த உண்மையை பிறருக்கு சென்று கொடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. ஆன்மீகம் - ஜோதிடம் என்ற பெயரில் மனதில் ஏற்படும் சுயமாயத்தோற்றத்தை கிழித்து நிதர்சனத்தை புகுத்தும் முகமாக பயணித்துவருகிறேன். ஜோதிடத்திற்காக துவக்கபட்டது, நீ எப்படி ஜோதிடம் தவிர பிற விஷயங்களை எழுதலாம் என கேட்டதால் சாஸ்திரத்திற்காக தொடருகிறது. அகோரிகள், ஸ்ரீ சக்ர புரி போன்ற தொடர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவுகளாக அமைந்தது.

முதலில் குரு கதைகள் எழுத மட்டுமே வந்த நான், இந்த வலைதளத்தால் அந்த குருகதைகளை மிகவும் தாமதமாக எழுதுகிறேன். சாஸ்திரம் பற்றிய திரட்டு என்னை அதிகமாக ஆக்கிரமித்தது.

வலைதளத்தில் எழுதுவதில் இருக்கும் சில நன்மை தீமைகள் உண்டு.

நன்மை : எனது பிம்மத்தை மனதில் கொள்ளாமல் நடுநிலையாக விமர்சனம் வருவது. தாங்கள் படித்தவிஷயத்தை என்னிடம் பேசும் பொழுது நினைவுபடுத்துவது.

தீமை : மிக முக்கியமாக சென்று சேர வேண்டும் என எழுதிய பதிவுகளை மக்கள் சீண்டாமல் போவது. ”மொக்கை” பதிவுகள் அதிகமாக மக்களை கவர்வது.


ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந்த வலைதளம் பற்றிய நிறை-குறைகளைமுடிந்தால் பின்னூட்டத்தில் பதியுங்கள்...!

ஹேப்பி பர்த் டே வேதிக் ஐ...!

---------------------------------------------------------------------
கோளாறு...!

சென்ற வாரம் வட இந்திய புனித ஸ்தலங்களுக்கு சென்று இருந்தேன். சுப்பாண்டியும் என்னுடன் பயணித்தான். ரிஷிகேஷ் சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கங்கையை சுட்டிக்காட்டி“ஸ்வாமிஜி ரிஷிகேஷில் ஆறு இருக்கும்னு சொன்னீங்க, இங்க ஒன்னுதான் இருக்கு. ஏமாத்திட்டீங்களே ஸ்வாமி..” என்றான். நான் ஒன்றும் பேசவில்லை. தியானம் செய்யும் முன் மனசை கெடுத்துக்கலாமா? பொறுமையாக சென்றுவிட்டேன்.

ரிஷிகேஷில் இருந்து நாற்பது கி.மீ தூரத்தில் தேவ ப்ரயாக் என்ற ஊர் உண்டு. பாகீரதி என்ற பெயரில் ஓடும் நதியும், அல்காநந்தா என்ற நதியும் இணைந்து சங்கமித்து இங்கிருந்து தான் கங்கை என்ற பெயரில் நதி உருவாகிறது. இரு நதியும் சங்கமிக்கும் இடத்திற்கு சென்றதும் சுப்பாண்டியை பார்த்து, “சுப்பு இங்க பாரு பாதி ஆறு ஓடுது” என்றேன். சுப்பாண்டி என்னை குழப்பத்துடன் பார்த்தான்.

”பாகீரதியும், அல்காநந்தாவும் இணைந்து கங்கையாக மூணா ஓடுது அப்போ ஆறுல பாதிதானே?” என்றேன். என்ன செய்யறது நாமளும் சில நேரத்தில சுப்பாண்டி ஆக வேண்டி இருக்கு.....!

----------------------------------------------------------------------
பிரதி வலது :) (Copy Right)

ஒரு பிரபல பதிவர் சாட்டில் (உரையாடியில்) வந்து, “நீங்க எல்லாம் என்ன எழுதறீங்க. ஒருத்தர் பாருங்க ருத்திராட்ஷம் பற்றி அருமையா எழுதி இருக்கார்” என அதன் சுட்டியைக் கொடுத்தார். அங்கே சென்று பார்த்த எனக்கு அதிர்ச்சி. காரணம் இந்த வலைதளத்தில் வந்த ருத்திராட்ஷம் பற்றிய கட்டுரையை அப்படியே காப்பி செய்து அங்கே பேஸ்ட் செய்திருந்தார் அந்த புண்ணியவான்.

அவருக்கு தனி மடலில் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிறகு அதை நீக்கி விட்டார். வேறு யார் எல்லாம் இதில் இருக்கும் தகவல்களை பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.

அது இருக்கட்டும்... தகவலை ஒருவர் சொல்லாமல் எடுப்பதைகாட்டிலும், எனது கட்டுரையை பிற வலைதளத்தில் வந்த பிறகுதான் "அருமையா எழுதி இருக்கார்னு சொல்ல வேண்டுமா?” நீங்க எல்லாம் முழுமையா என் கட்டுரையை படிக்கிறீங்களா தங்கங்களே?

இன்னொரு பதிவர் ஒரு படி மேல போயி, ஸ்ரீ சக்ர புரி காப்பிரயிட்குள்ள வருமா? என்றார். ஏன் என கேட்டேன். “அது தான் நீங்க எழுதலயே?” என்றார். ஸ்ஸ்....பா..... இந்த வலையுலக பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலப்பா...

---------------------------------------------------------------------------
யாவர்குமாம் இறைவனுக்கு ஒர் இட்லி..!

ஒரு கவிஞர் எழுதிய முற்போக்கு கவிதையை என்னிடம் காட்டினார் எனது மாணவர். கவிதையின் வரிகள் முழுமையாக நினைவில்லை, அதன் சாராம்சம் இதுதான். சிவனின் திருவிளையாடலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு ஒன்று உண்டு.

முதியவளுக்கு பதிலாக தான் வேலை செய்வதாக கூறி, அவளிடம் இட்லியை சாப்'பிட்டு', வேலை செய்யாமல் உறங்கிவிடுவார் சிவன். அரசன் வந்து அவரை தண்டிக்க பிரம்பால் முதுகில் அடிக்க, உலக உயிர்கள் அனைத்திற்கும் முதுகில் பிரம்படி விழும். இந்த நிகழ்வை பற்றி அந்த கவிஞர் கவிதையில் எழுப்பி இருந்த கேள்வி என்னவென்றால் ,” பிரம்படி மட்டும் அனைவருக்கும் கிடைத்தது, இட்லி சிவனுக்கு மட்டும் ஏன் கிடைத்தது? அதுவும் அனைவருக்கும் சென்று இருக்க வேண்டும் அல்லவா?” (யாருக்காவது அந்த கவிதை வரிகள் தெரிந்தால் சொல்லலாம்)

கவிதை ஸ்வாரஸ்யமாக இருக்க நிகழ்வுன் சாரத்தை விட்டுவிட்டார்கள். என் மாணவனிடம் சொன்னேன், “சூரியன் ஒளிரும் பகல்வேளையில் திடீரென இருள் சூழ்தால் அதிசயம், சூரியன் மீண்டும் மீண்டும் ஒளிர்ந்தால் அதிசயம் அல்ல. அது போல உலக உயிர்களுக்கு என்றும் உணவை அளித்துவருபவன் ஈஸ்வரன். அதனால் அவன் உண்டு அனைத்து உயிர்களுக்கும் நிறைவு ஏற்படுவது எப்பொழுதும் நடந்தவண்ணம் இருக்கிறது. ஆதாவது பகல் போல. பிரம்படி என்பது திடீரென இரவு வருவது போல. அதனால் தான் ஒரு கணம் அனைவருக்கும் உணர முடிந்தது. மேலும் இதில் இருக்கும் உள் கருத்தை தெரிந்துகொள், நீ இறைவனுக்கு எதை கொடுக்கிறாயோ, அது உனக்கும், உன் சுற்றதிற்கும் பன்மடங்காக திருப்பி கொடுக்கப்படுகிறது. அது பிரம்படியாக இருந்தாலும்....” என்றேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

-----------------------------------------------------------------------
ஆன்மீக கடி ஜோக்

அந்த ஈ மிகவும் பரபரப்பாக இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு கைகளை பிசைந்து கொண்டும் இருந்தது. காரணம் ஈயின் துணைவிக்கு இன்று பிரசவம். சில நிமிடம் பரபரப்புடனேயே கழிந்தது. பிறகு நர்ஸ் வந்து “வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்றாள்.

குழந்தையை பார்க்க உள்ளே சென்ற ஈக்கு ஒரே அதிர்ச்சி. அனைவரும் குழந்தையை வணங்கி பூஜை செய்து கொண்டிருந்தனர். காரணம் என்ன தெரியுமா?

அது “ஈ-சன்”

Monday, September 7, 2009

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

டிஸ்கோ லோகுவின் கடைக்கு வந்தான் மெண்டல் பாஸ்கர்.

“என்னடா காலையிலேயே வந்துட்டே...” இது டிஸ்கோ லோகு.

இருங்கள்...இவனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? டிஸ்கோ லோகு. என்றவுடன் தொப்பியில் ஒரு கையும் கால்சட்டையின் ஜிப்பில் ஒரு கையும் வைத்து மூன் வாக் போவான் என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு அதிகப்பிரசங்கி...! நகரின் மையத்தில் மணவறை அலங்காரம், சீரியல் லைட்டிங் செய்யும் கடைவைத்திருப்பவன். அதனால் இவன் பெயர் 'டிஸ்கோ' லோகு.

மெண்டல் பாஸ்கர் இவனின் உற்ற சகா. மெண்டல் பாஸ்கர் என்றவுடன் ஒரு அரை லூஸை நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களுக்கு நூறு மார்க். அவன் அப்படித்தான். திடீரென உணர்ச்சிவசப்படுவான் ஏன் எதுக்கு என அவனுக்கே தெரியாது.

இருவருக்கும் முழுநேரத்தொழில் பக்தியை பரப்புவது. உபதொழில் டிஸ்கோ டெக்கரேஷன்.

காலையில் டீ குடித்துவிட்டு பைக்கில் நகரை உலா வருவார்கள். காரணம் என்ன தெரியுமா? எல்லாம் ஆன்மீக தேடல்தான். நகரில் புதிதாக யாராவது ஆன்மீகவாதி வருவதாக போஸ்டர் பேனர் இருந்தால் அதை பார்த்து குறித்துகொள்ளுவார்கள். பிறகு அவரிடம் சென்று ஆசி பெறுவார்கள். அல்லது யோக பயிற்சி கற்றுக்கொள்வார்கள். தங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும்


ஆன்மீகவாதியின் மகிமைகளை விளக்குவார்கள். ஆன்மீகவாதியின் படத்தை வைத்து பூஜித்து தினமும் பக்தி மணம் கமழ பஜன் செய்வார்கள். இது எல்லாம் அடுத்த ஆன்மீகவாதி பற்றிய போஸ்டர் ஒட்டும்வரை நடக்கும்.

புதிய ஆன்மீகவாதியை பின்பற்ற துவங்கியதும் பழைய ஆட்களை சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்வது இவர்களின் வாடிக்கை. இல்லை என்றால் இவர்களின் நண்பர்கள் புதியவரை பின்பற்றமாட்டார்களே?

தனது இருதயம் கோளாறு , ஒரு ஆன்மீகவாதி சொஸ்தபடுத்தியதாகவும் லோகு அடிக்கடி வெளியே சொல்லுவான். உண்மையின் அவனுக்கு ஒரு கேடும் இல்லை. இப்படி சொன்னால் தானே தான் வழிபடும் ஆன்மீகவாதியை பிறர் மதிப்பார்கள்?

மெண்டல் பாஸ்கர் இதற்கு ஒரு படிமேல். ஒரு ஆன்மீகவாதியை பார்க்க பேருந்து ஏறினானாம், டிரைவர் சீட்டில் அந்த ஆன்மீகவாதியே உட்கார்ந்து 'வாடா என் மகனே' என அழைத்திருக்கிறார். உடனே அவன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, உங்களை காண கிளம்பினேன் நீங்களே இங்க இருக்கீங்களே என கூறி பேருந்திலிருந்து இறங்கி திரும்பி ஊருக்கு வந்துவிட்டான். வரும்பொழுது மறக்காமல் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆசிரமத்திற்கு போன் செய்து ஆன்மீக குரு அங்கேயும் இருக்கிறாரா என கேட்டுகொண்டான். இரண்டு இடத்தில் காட்சி கொடுத்தால் தானே அதிசயம்?

இப்படியே இருவரும் செய்வதால் டிஸ்கோ லோகுவும், மெண்டல் பாஸ்கரும் நாட்டாமையின் தீர்ப்பு இல்லாமலே ஊரில் ஒதுக்கிவைக்கபட்டனர். ஆனால் இருவரும் தாங்கள் ஆன்மீக முன்னேற்றத்தால் மக்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதாக எண்ணிக்கொண்டார்கள்.

ஆன்மீக பெருவெள்ளத்தில் இப்படி அவர்கள் மூழ்கி திளைக்கும் ஒரு காலை நேரத்தில் தான் மெண்டல் பாஸ்கர் , லோகுவின் கடைக்குவந்தான்...

“ஒன்னும் இல்லைடா மச்சான், இன்னைக்கு காலையில நம்ம வீட்டு பக்கம் ஒரு பேனர் பார்த்தேன். ஒரு ஸ்வாமிஜீ நம்ம ஊருக்கு வரார். அவரை சந்திச்சாலே வாழ்க்கையில் பல அதிசயம் நடக்குதாம். கேட்ட வரத்தை கொடுப்பாராம்...”

“போடா லூஸு... இதை எல்லாம் நம்புவாங்களா?”.. என்றான் டிஸ்கோ லோகு.

லோகு இப்படித்தான் முதலில் நம்பமாட்டான், குதர்க்கமாக பேசுவான். நம்பிவிட்டான் என்றால், அதை அவனே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள மாட்டான். அவன் பின்பற்றும் சாமியார் ஒருவரை இன்னும் பரோலில் சந்தித்துவருகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

“லோகு நம்புடா, இப்படி அவநம்பிக்கையா இருந்து நல்ல சான்ஸ்சை மிஸ் பண்ணிடாத.”

”டேய் பாஸ்கி, கேட்டது எல்லாம் கிடைச்சா மனுஷனுக்கு ஆணவம் வந்துடும்னு நீ படிச்சது இல்லையா?”

”அதெல்லாம் ரொம்ப பழைய தத்துவம்டா... இது புதுசு கண்ணா புதுசு. பாரதியாரே வரம் கேட்டுருக்கார் தெரியுமா?”

”அப்படியா? என்னடா வரம் கேட்டார்” என்றான் டிஸ்கோ லோகு.

பாரதியார் பாடல்கள் புத்தகத்தை எடுத்து உரக்க படிக்கதுவங்கினான் மெண்டல் பஸ்கர்.


நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
நீலி என்னியல்பு அறியாயோ?

தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

“டேய் பாஸ்கி ...நிறுத்து..... ” இடைமறித்தான் லோகு.

“இது ஒரு சினிமாவில வரும் வசனம். கமல் பேசுவார். யாரை ஏமாத்த பார்க்கற?”

“கஷ்டம்டா லோகு, இது பாரதியார் பாடல். இதில் இருக்கிறதை தாண்டா அவர் பேசினார்...”

”சரி மேல படி....”


நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து - மத
வேளை வெல்லுமுறைகூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.

கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.

கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!

ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!

பழைய சரித்திர படத்தில் வரும் வசனத்தை போல ஏற்ற இறக்கத்துடன் படித்து முடித்தான் மெண்டல் பாஸ்கர்.

“கேட்டியாடா லோகு பாரதியார் என்ன எல்லாம் கேட்டர்னு...? நாமும் அந்த ஸ்வாமிஜீ கிட்ட கேட்பமா?”

“பாரதியார் கேட்டது இருக்கட்டும். காளி தேவி அவருக்கு இதெல்லாம் கொடுத்தாளா?”

“லோகு நீ வர வர நாத்திகன் மாதிரி பேசர...”

“பாஸ்கி காளிகிட்ட இவ்வளவு அவர் கெஞ்சி, மிரட்டி கேட்டே கிடைக்கல, இந்த ஸ்வாமி கிட்ட கேட்ட கிடைக்குமா?”

“இவர் சாதாரண ஸ்வாமிஜீ இல்லை”

“பின்ன? குருவா?”

“இல்லை”

“இறைவனின் தூதரா?”

“இல்லை”

“பின்ன யாரு. சொல்லித்தொலை”

“அவரே கடவுள் தாண்டா”

“..........................................”
டிஸ்கோ லோகு ஒன்றும் பேசாமல் மெண்டல் பாஸ்கரை பார்த்தான்.


”பாரதியார் ரொம்ப காலம் முன்னாடி வாழ்ந்துட்டார். இப்போ வாழ்ந்திருந்தா ஸ்வாமிஜீயின் நிகழ்ச்சிக்கு வந்து இந்த பாட்டை பாடிருந்தா அவருக்கு எல்லாம் கிடைச்சுருக்கும்”

“அப்படிங்கற?.. சரி நாம போலாம்.”

--------------------------------------------------------------
டுத்த நாள் நகரின் ஒதுக்குபுறமாக இருந்த அந்த பொருட்காட்சி அரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டிஸ்கோ லோகு தனது செல்வாக்கை பயன்படுத்தி முன்வரிசையில் சென்று அமர்ந்தான். மெண்டல் பாஸ்கருக்கு உற்சாகம் தாங்கவில்லை.வரிசையாக ஸ்வாமிஜீயிடம் சென்று அனைவரும் வரம் வாங்கிகொண்டிருந்தார்கள். மெண்டல் பாஸ்கரின் முறை வந்தது. பரபரப்புடன் சென்று அவரை கட்டி அணைத்துகொண்டான். கண்ணீர்விட்டு அழுதான். அவன் கிளப்பிய ஓலம் அங்கே பாடிய பஜனையால் அமுக்கபட்டது. அவனை தேற்றிய ஸ்வாமிஜீ உனக்கு என்ன வேண்டும் என கேட்டார்.

‘நீங்கள் எப்பொழுதும் என்னுடன் இருக்க வேண்டும்” என்றான் மெண்டல் பாஸ்கர்.

ஸ்வாமிஜி அவனுக்கு அவரின் பெரிய படத்தை கொடுத்தார். ”இதை வைத்துக்கொள். நான் உன்னுடன் எப்பொழுதும் இருப்பேன்” என்றார்.மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தான் பாஸ்கர்.

கவனிக்கவும்...வெறும் பாஸ்கர்.

ஸ்வாமிஜீயின் படமும், இவனின் அடைமொழியும் பரிமாற்றம் அடைந்திருந்தது....!

அடுத்து டிஸ்கோ லோகுவின் முறை....

அவரின் முன் முழந்தாளிட்டு நின்றான் டிஸ்கோ லோகு....

சுற்றியும் பார்த்தான்... ஸ்வாமிஜீயின் சிஷ்யர்கள் அவரின் அருகில் அதிகமாக இருந்தார்கள். டிஸ்கோ லோகுவின் முகத்தை பார்த்த ஸ்வாமி அவனின் உள்ள கிடக்கையை புரிந்து கொண்டு அனைவரையும் விலகி நிற்க சொன்னார்.

டிஸ்கோ லோகு தனது வரத்தை கேட்க துவங்கினான்.....

“ஸ்வாமி நீங்க போன வருஷம் வந்த போதும் சரி, இப்போ வந்திருக்கும் பொழுதும் சரி.... உங்க மேடை அலங்காரம் எல்லாம் நான் தான் செஞ்சேன்.... ஆனா உங்க ஆளுக எனக்கு பேமெண்ட் கொடுக்கல... நீங்க தான் ஸ்வாமி எனக்கு அது கிடைக்க வரம் கொடுக்கனும்”

ஸ்வாமிஜீ அவனை பார்த்தார்.....தனது சட்டை பாக்கெட்டில் இருந்து விசிடிங் கார்ட் எடுத்து அவரிடம் கொடுத்தான் டிஸ்கோ லோகு.

ஸ்வாமிஜீயும் அவர் அருகில் இருந்த நகரின் பெரிய மனிதரை அழைத்து அதை கொடுத்தார். பெரிய மனிதர் டிஸ்கோ லோகுவை பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமி தனது கைகளில் வரம் அருளினார்.

கடவுளின் வரத்தால்.....டிஸ்கோ லோகு தன்யன் ஆனான்

நீங்களும் முயற்சி செய்யுங்கள்....
உங்கள் வாழ்க்கையும் வரங்களால் நிரப்பப்படலாம்.

கேளுங்கள் கொடுக்கப்படும்...
தட்டுங்கள் திறக்கபடும்...!

---------------------------------------------------------
டிஸ்கி 1 : படத்தில் இருப்பவர் மாடல் மட்டுமே. அவருக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. :))

டிஸ்கி 2: இந்த புனைவு யாரையும் குறிப்பது அல்ல.
..!

ஸ்ரீ சக்ர புரி - சிறு விளக்கம்

பரமாத்மாவின் பிரதிபிம்பங்களுக்கு,

கடந்த ஒரு மாதகாலமாக ஸ்ரீ சக்ர புரி என்ற தொடரை படித்து ரசித்து கருத்துக்கள் பகிர்ந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஸ்ரீ சக்ர புரி என்ற இந்த தொடரை பற்றியும் இதற்கு பின்புலத்தில் வேலை செய்த விஷயங்களை பற்றியும் விளக்க விரும்புகிறேன்.

முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இத்தொடரை நான் எழுதவில்லை...!

எனது உணர்வு நிலையில் எழுதினால் என்னால் இவ்வாறு எழுத முடியாது என்பதே உண்மை. இந்த வலைதளத்தில் இருக்கும் பிற கட்டுரையின் வடிவத்திற்கும், எழுது நடைக்கும் ஸ்ரீ சக்ர புரி தொடரில் உள்ள வடிவத்திற்கும் உள்ள வித்தியாசம் படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

உணர்வு நிலையில் எழுதி இருந்தால் நான் பல பகுதிகளை எழுதி இருக்க மாட்டேன். முக்கியமாக என்னை பற்றிய விஷயங்களை...!

ஸ்ரீ சக்ர புரி தொடரை பொருத்த வரை நான் ஒரு எழுது கோலாகவே இருந்தேன். படித்து ரசித்த உங்களுக்கும் எழுதுகோலான எனக்கும் என்ன வித்தியாசம் என்றால்.. முதலில் படிக்கும் பாக்கியமும், அதை சிறு மாற்றம் செய்து பதிவேற்றம் செய்யும் வேலை ஆகியவை தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. உங்களை போலவே சுவாரசியமாகவும், அடுத்த பகுதிக்காகவும் நான் காத்திருந்தேன் என்பதே உண்மை.

அதில் இருக்கும் சில விஷயங்களை திருத்தம் செய்ய நான் 'புத்திசாலிதனத்தை' பயன்படுத்தியதால் சிறு குழப்பமும் விளைந்தது. அவை அனைத்தும் அதன் அருளால் மேம்பட்டது.

திருவண்ணாமலை என்னும் இடத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் நோக்கில் மட்டுமே அந்த தொடர் எழுதபடவில்லை என படித்த உங்களுக்கு புரிந்திருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியவாரே உணவு ஊட்டுவது போல நம்மை அறியாமல் நாடிகள், சாஸ்திரங்களும் தெரிந்து கொண்டோம் அல்லவா?

நல்ல விமர்சனங்களை போல என் மேல் அன்புடன் பலரும் விமர்சனம் செய்தார்கள். அவர்களின் விருப்பபடியும் எனது விருப்பதினாலும் இனிவரும் கட்டுரைகளில் எனது ஆன்மீக அனுபவங்களை வெளிப்படையாக எழுதுவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும் என வேண்டுகிறேன்.


இவன்
உங்கள் அன்பன்
ஸ்வாமி ஓம்கார்

Saturday, September 5, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15

ஆன்மீகம் என்பது உலக மக்களிடயே மத ரீதியாக பரவி இருப்பதால் அவர்களுக்கு உள் நிலையும் முழுமையாடையாமல் இருக்கிறது. அதனால் தான் ஸ்ரீ சக்ர புரி போன்ற இடங்களில் எப்பொழுதும் மஹான்கள் தோன்றி ஆன்மீக பேராற்றல் குறையாத வண்ணம் இருக்க செய்கிறார்கள்.

ஜீவன் முக்தர்களான இவர்களின் ஆற்றல் ஏந்த வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சென்று சேருகிறது. ஏழை - பணக்காரன், ஆண்-பெண், ஜாதி-மதம் போன்ற வித்தியாசங்கள் இவர்களின் சன்னிதியில் இருப்பதில்லை.

பகவான் ரமண மஹரிஷியை புரிந்துகொள்ளாத பலர் அவர் பிராமணர்களுக்கு ஆசிரமம் நடத்தியதாக சொல்லுவார்கள். இவர்களின் அறியாமைக்கு விலங்குகளை கூட ஒப்பிட்டு விலங்குகளை அசிங்கபடுத்த கூடாது. பிரட்டீஷ் காலத்தில் வாழ்ந்த கட்டுபெட்டிதனமான பிராமண சமூகம் பிற ஜாதி மதத்தினரை அருகில் வரவோ தொட்டு பேசவோ அனுமதிக்க மாட்டார்கள். முக்கியமாக அவர்களை சமமாக வைத்து பேசமாட்டார்கள். ஆனால் பகவான் ரமணர் தனது ஆழந்த ஆன்மீக ஆற்றலால் பல்லாயிர கணக்கான கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள வெளிநாட்டினரை திருவண்ணாமலைக்கு ஈர்த்தார்.

அந்த வெளிநாட்டினரில் சிலர் ரமணரின் ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டு அங்கேயே முக்தி அடைந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சாது அருணாச்சலா. இவர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியில் போர் புரிந்தவர். பிறகு ரமணரின் தரிசனத்தால் தன்னிலை உணர்ந்து ஐரோப்பாவிலிருந்து வந்து ரமணாஸ்ரமத்தில் தஞ்சம் அடைந்தார். ஐரோப்பியரானாலும் தமிழ் பயின்று ரமணரின் மேல் வெண்பா பாடும் அளவுக்கு சாது அருணாச்சலா அவர்களின் ஆன்மீக வாழ்க்கை அமைந்தது. ரமணாஸ்ரமத்தில் பின் புறம் , கந்தாஸ்ரமம் போகும் வாயிலின் அருகில் இவரின் சமாதி இருக்கிறது.

சாதுக்களுக்கு மட்டும் அல்ல, காகம், குரங்கு, பசுமாடு மற்றும் மயில் ஆகியவற்றிற்கும் பகவான் ரமணர் முக்தி அளித்து ரமணாஸ்ரமத்திலேயே சமாதி எழுப்பி இருக்கிறார்கள். ஞானிகளின் முன் யாவரும் ஒர் நிலையில் இருக்கிறோம் என்பதை ரமணரின் சன்னிதியே மாபெரும் சாட்சியாகும்.

திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டினர் ஆன்மீக உணர்வு இல்லாமல் சுற்றுலா நோக்குடன் வந்தாலும் ஏதோ ஒரு சக்தி அவர்களை புரட்டி போட்டுவிடுகிறது. வந்தவுடன் பத்து நாட்கள் அவர்களின் செயல் சுருங்கி மிகவும் மெளனத்தில் இயற்கையாகவே இருப்பார்கள். அவர்களின் இயக்கம் மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும். எனது ஐரோப்பிய மாணவர்களிடமும், வேறு சிலரிடமும் நான் நேரடியாக உணர்ந்த விஷயம் இது. பிறகு அவர்களிடம் விசாரித்தால் ஆனந்த கண்ணீரை தவிர பதில் எதுவும் இருக்காது.

ஸ்ரீ சக்ர புரிக்கு வரும் வெளிநாட்டினர் தங்களுக்குள் இருக்கும் நற்பண்புகள், அன்பு, சேவை இவற்றை யாரும் கற்றுதராமலே உணருகிறார்கள். தங்கள் நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்க் கூட அவற்றை விட்டு விட்டு இங்கே பிறருக்கு சேவை செய்ய வந்து விடுகிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு ஐரோப்பிய இளைஞன் சைக்கிளில் மரகன்றுகளும் தண்ணீர் டிரம்முடன் தினமும் பயணிப்பார்.

மரக்கன்றை நட்டு நீர் ஊற்றி வளர்ப்பது அவரின் சேவை. திருவண்ணாமலை மற்றும் கிரிவல பகுதி இவ்வளவு பசுமையாக இருக்க அவர் அதிகபட்ச காரணம் என்பேன். ரமணாஸ்ரமத்தின் அருகில் சிறிய இடத்தில் அவர் மரக்கன்றுகளை வளர்க்கிறார். நீங்கள் அவரிடம் மரகன்றை இலவசமாக வாங்கி சென்றால் எங்கே வைக்கிறீர்கள் என கேட்டு அடுத்த நாள் சைக்கிளில் அதற்கும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார். யாரிடமும் உதவி பெறாமல் தனிமனிதனாக பல ஆண்டுகளாக இவர் இயங்கிவருகிறார். பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறோம் என தினசரியில் விளம்பரம் செய்யும் ஆன்மீகவாதிகளை காணும் பொழுது இந்த ஐரோப்பிய இளைஞனை நினைத்துக்கொள்வேன்.

திருவண்ணாமலையை பார்த்துக்கொண்டிருப்பது என்பதே தியானம் என சில பகுதிகளுக்கு முன் கூறினேன் அல்லவா? சில வெளிநாட்டினர் திருவண்ணாமலையை தினமும் காணும் நோக்குடன் அருணச்சலா லைவ் என்ற இணைய தளத்தை நடத்திவருகிறார்கள். இதில் தினமும் அருணச்சல மலையின் வெவ்வேறு வடிவங்களை நேரடி ஒளிபரப்பாக தருகிறார்கள். நீங்களும் தினமும் உங்கள் வீட்டில் இருந்தபடியே அருணாச்சலனை தரிசிக்கவேண்டுமா இதோ இணைப்பு. நினைத்தாலே முக்தி தரும் ஸ்ரீசக்ர புரியை தினமும் பார்த்தவாரே இருப்பது பெரும் பேறு அல்லவா?

திரு ரிச்சர்ட் என்பவர் அவரின் மனைவியுடன் அருணாச்சலத்தில் தங்கி எளிமையாக வாழ்ந்துவருகிறார். அவரின் வலைதளத்தில் ஸ்ரீசக்ர புரியின் ஒவ்வொரு அடியையும் ஆங்கிலத்தில் அவர் எழுதும் அமைப்பு சிறப்பு. தனது பெயரை கூட ரிச்சர்ட் அருணாச்சலா என மாற்றிவிட்டார் இவர். இவரின் வலையை படிக்க இங்கே சுட்டவும்.


தனது பிறந்த நாள் அன்று சாதுக்களுக்கு அன்னம் கொடுக்கிறார் ரிச்சர்ட் அருணாச்சலா.
அதை பின்னால் இருந்து பார்ப்பவர் யார் என தெரிகிறதா :) ?


மேற்கண்ட செயல்களை நம் ஆட்கள் செய்யவில்லை என்பதில் எனக்கு வருத்தும் உண்டு. பெளர்ணமி கிரிவலத்தில் சாப்பிட்ட மக்காசோள வில்லை, கடலை தோல், கரும்பு சக்கை மற்றும் மண்ணின் எதிரி பிளஸ்டிக் ஆகியவற்றை ஸ்ரீசக்ர புரியில் போடுவதை தவிர நம்மவர்கள் எதுவும் செய்யவில்லை. நமக்கு எப்பொழுதும் ஒரு விஷயம் கையில் இருக்கும் பொழுது அருமை தெரியாது.

பிரிட்டீஷ்காரர்களின் ஆதிக்கம் வரும் வரை நாட்டின் மேல் நமக்கு பற்றுவந்ததா என்ன? அது போல நாம் ஸ்ரீ சக்ர புரியை அனைவரும் உணரும் பொழுது காலம் கடந்திருக்கும்.

கடந்த மூன்று நாட்களாக இருந்த ஆனந்த நிலை என்னில் நிலைபெற்றவண்ணம் இருந்தது. கோவைக்கு திரும்ப செல்லும் முன் நான் வந்து இறங்கிய ரமணாஸ்ரமத்தின் முன் மண்டபத்தின் முகப்பில் அமர்ந்திருந்தேன். ஒரு ஐரோப்பியருடன் பேசியவாறே நடந்து சென்றார் நம் ஊர்காரர். அவர் ஐரோப்பிய ஆசாமி சொன்னது இதுதான். “ பிலிப் நீங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் ரமணருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ரமணர் அனைத்தையும் துறந்தவர். நியம அனுஷ்டானங்கள் அவருக்கு கிடையாது....” நான் மெல்ல என்னுள் சிரித்தேன்.

நான் மெல்ல சிரிப்பைதை கண்ட அந்த பிலிப் என்ற ஐரோப்பியர் அவருடன் வந்தவரிடம் ஒருநிமிடம் என சொல்லிவிட்டு. ஸ்வாமி நீங்கள் சிரித்ததன் காரணம் என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா? என கேட்டார்.

“பிலிப் பகவான் ரமணர் சராசரி மனிதனால்
புரிந்துகொள்ள முடியாதவர். அவர் இப்படித்தான் என சொல்ல நாம் ரமணராக இருக்க வேண்டும். ஸ்ரீ சக்ரம் என்பது தற்காலத்தில் சிலரால் தவறாக சித்தரிக்கபட்டுள்ளது. உண்மையில் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ரமணர் உபாசனை செய்ய வில்லை என்றாலும், ஸ்ரீ சக்ரத்தின் மையமான ஸ்ரீ மேரு ஒன்றை ரமணாஸ்ரமத்தில் நிறுவி அதில் தனது ஆற்றலை நிலை படித்தி இருக்கிறார். தனது பூத உடலை உதிர்த்தாலும் தனது ஆற்றலால் என்றும் இங்கே நிறைந்து இருக்கிறார் ” என்றேன்.


எங்கே எங்கே என இருவரும் ஆர்வமாக கேட்க, மாத்ரூ பூதேஸ்வரர் ஆலயத்தில் ரமணரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீமேருவை காண்பித்தேன். இன்றும் ரமணாஸ்ரமத்தில் தமிழ் மாத முதல் நாளும், பெளர்ணமி அன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் அனைவரும் பார்க்குமாறு ஸ்ரீ மேருவை பூஜிக்கிறார்கள் என விளக்கிவிட்டு அவர்கள் ஸ்ரீமேருவை வணங்கியபடி இருக்க நான் திரும்பி மெல்ல நடந்தேன்.

ரமணாஸ்ரம வாயிலில் வந்து நின்றேன். பின்னாலேயே
பிலிப் வந்து ,”ஸ்வாமி உங்களுக்கு ஸ்ரீ சக்ரம் பற்றி ஏதாவது தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றார். “எனக்கு அவ்வளவாக தெரியாது நான் இப்பொழுது கோவைக்கு செல்லுகிறேன். வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எனக்கு தெரிந்ததை பேசுவோம்” என்றேன்.

பிலிப் என்னை விடுவதாக இல்லை. நான் பேருந்துக்காக காத்திருப்பதை பார்த்து, தனது வாகன ஓட்டியுடன் தனது காரை என்னிடத்தில்
ஓட்டிவந்து,”ஸ்வாமி இந்தியாவின் எந்த மூலைக்கு செல்லுவதாக இருந்தாலும் உங்களை கொண்டு விடுகிறேன். என்னுடன் பயணத்தி படியே ஸ்ரீசக்ரத்தை பற்றி சொல்லுங்கள் என்றார். அவருடன் அன்று இரவு ஸ்ரீ சக்ரத்தின் தன்மையை விளக்கியபடியே அங்கிருந்து கோவை வந்தடைந்தேன்.

உங்களின் கருத்துக்களை கேட்டபிறகு மிக பிரம்மாண்டமாக ஸ்ரீ சக்ரத்தை உருவாக்க வேண்டும் என தோன்றுகிறது ஸ்வாமி என்றார் பிலிப். நான் புன்னகைத்தவாறே உங்களுக்கு அந்த வேலை பளு தேவை இல்லை என கூறி இந்த தொடரின் முதல் பகுதியை விளக்க துவங்கினேன்...

ஸ்ரீ சக்ர புரி என்றும் முடியாது. துவங்க மட்டுமே செய்யும்...!

|| ஓம் நமோ பகவதே அருணாச்சலேஷ்வராயா ||