Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 14, 2012

கும்பமேளா - 4


தென் தமிழகத்தின் சிறிய கிராமத்தில் நிசப்தமான பின் இரவு நேரம்.  மனைவியும் குழந்தைகளும் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருக்க மெல்ல கதவை திறந்து வெளியேறினான் அப்பு. இந்த சம்சார பந்தத்தில் இருந்தால் நம்மால் ஆன்மீக முன்னேற்றம் இருக்காது என்பது அவனின் உள்ளுணர்வு வெகு நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தது. இனி இமாலயத்திற்கு சென்று குருவை தேடி அலைந்து அங்கேயே இருந்து விடுவது என முடிவு செய்து புறப்பட்டான். 

காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ் என பல்வேறு ஊர்களுக்கு சென்று கடைசியில் உத்திர காசிக்கு வந்தடைந்தான். இன்னும் வடக்கே பயணித்து ஹிமாலய மலையின் காடுகளுக்குள் செல்ல வேண்டும் என்பது திட்டமாக கொண்டான். 

அடுத்த நாள் புறப்பட்டு அருகே இருக்கும் பாண்டவாச்சல் என்ற கிராமத்தின் மையத்தில் கங்கை ஓடும் பள்ளத்தாக்கின் அருகே பயணித்தான்.மனது இயல்புக்கு மாறான தட தடத்தது. தான் இயல்பாக இல்லை என்பதை உணரும் ஷணத்தில் வெகு தொலைவிலிருந்து மிக மில்லிய சப்தம் கேட்டது.

“அ..அ...ஓ.......ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”

ஓம் என்ற மந்திரம் கேட்கும் திசையை நோக்கி சென்றான். பள்ளத்தாக்கின் ஓரம் வரை சென்று விட்டான்.. சபதம் இப்பொழுது தீர்க்கமாக கேட்டது. பள்ளத்தாக்கு மிகவும் அபாயகரமாக செங்குத்தான அமைப்பில் இருந்தது. பாய்ந்தோடும் கங்கை வெள்ளிக்கம்பி போல சில நூறு மீட்டர்கள் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது. 

விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது என்பது புரிந்தது. இங்கே எப்படி சப்தம் என ஆராய்ந்தான். பள்ளத்தாக்கின் ஓரத்தில் சப்தம் அதிகமாக கேட்கவே விட்டு அகலவும் மனம்  இடம் கொடுக்கவில்லை. சரிவில் இருக்கும் செடிகளை கைகளில் பிடித்தவண்ணம் கீழே இறங்க முயன்றான். உடல் நடுங்கியது, நிலை  தடுமாறினாலும் சமாளித்து மெல்ல இறங்கினான். சில அடிகள் கீழே இறங்கியதும் ஒரு பாறை இடுக்கின் வழியே அந்த சப்தம் அதிகமாக கேட்டது. இடக்கையால் செடிகளை கெட்டியாக பிடித்து, கால்களை கற்களில்  ஊன்றி, மறுகையால் பாறையைமில்ல விலக்கினான். 

விலக்கப்பட்ட பாறை தடுமாறி பள்ளத்தாகின் ஆழத்தை நோக்கி வீழ்ந்தது. பெரிய பாறை தூசி போல பறந்து கங்கையில் சென்று மறைந்தது. பாறை இருந்த இடத்தில்  குறுகலான ஒரு குகை பாதை சென்றது. இப்பொழுது ஓம் என்ற சப்தம் பன்மடங்காகி இருந்து. 

தனது கைகளை நீட்டி குகையின் விளிம்பை பற்றி உள்ளே புகுந்தான். தன் உடல் அளவுக்கு மிக குறுகலாக இருந்ததால் பாம்பை போல ஊர்ந்து மெல்ல நகர்ந்தான்.

சில அடிகள் நகர்வுக்கு பின் குகை பாதை செங்குத்தாக உள்ளே இறங்கியது. கைகளின் பிடி தளர்ந்து செங்குத்தான பாதையில் விழுந்தான் அப்பு. மூட்டுகளிலும் முகத்திலும் சிராய்ப்புகளுடன் குகையின் அடியில் விழுந்துவிட்டதை உணர்ந்தான்.

ஓம் என்ற சப்தம் மிகவும் அதிகமாக அருகே கேட்டது. குகையின் இருளில் தற்காலிகமாக கண்கள் இருளடைய பார்வை இழந்து உட்கார்ந்திருந்தான் அப்பு. 

சில வினாடிகள் அவனுக்கு இருள் பழகி குகையின் சூழல் பழகத்துவங்கியது.  அங்கே உடலின் அனைத்து எலும்புகளும் தெரிய, தோல் மட்டுமே ஆடையாக  அணிந்து நிர்வாணமாக ஒருவர் அமர்ந்திருந்தார். எலும்புக்கூடு போன்று காட்சியளித்த அவர் உடலின் முடிகள் இல்லாமல் இருந்தது. விரல்களில் இரண்டு அடி நீள நகங்கள் வளர்ந்திருந்தன. அவரின் கண்கள் திறந்திருந்தது. கருவிழிகள் இல்லை. உதடு அசையவில்லை ஆனால் ஓம் என்ற சப்தம் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.

பயத்தால் உடல் நடுங்கினாலும், தன் குருவை கண்டுவிட்டோம் என மனதில் எண்ணம் எழுந்து பயத்தை போக்கியது.

“குருநாதா...” என சப்தம் எழுப்பிய வண்ணம் அந்த உருவிடம் சென்று கால்களை பற்றினான். நைந்து போன துணியை பிடிப்பதை போன்று உணர்ந்தான்.

“அப்பு உனக்காகத்தான் பல நூற்றாண்டுகளாக இங்கே இருக்கிறேன்” உடலில் சலனம் இல்லை உதடு அசையவில்லை ஆனால் சப்தம் மட்டும் கேட்டது.

குகை அறையில் குரல்கள் எதிரொலித்து இரண்டு முறை கேட்பது அமானுஷமாக இருந்தது.

“பல நூற்றாண்டுகளாகவா? எனக்காக காத்திருக்கிறீர்களா? ஏன் குருவே...நான் ஆன்மீக தூண்டுதல் கொண்டு என் வீட்டை துறந்து உங்களை இப்பொழுது  தானே தேடி அடைந்தேன்” என்றான் அப்பு...

அந்த உருவின் கால்கள் மெல்ல அசைந்தது.. இலை சருகு போல இருந்த கால்கள் மெல்ல உயர்ந்து அப்புவின் நெற்றியை நோக்கி உயர்ந்தது. அப்புவின் புருவ மத்தியில் கால் கட்டைவிரலை வைத்தது அந்த உருவம்.....

பெரு நாட்டின் மீனவன், ஆஸ்திரேலிய பழங்குடிப் பெண் என துவங்கி ரஷ்யாவின் போர் வீரனாக, துருக்கியில் விலைமகளாக, பெரிய மடாலயத்தின் மடாதிபதியாக இப்படி  நாற்பதுக்கும் அதிகமான காட்சிகள் விரிந்து சுழன்று அப்புவின் புருவ மத்தியில் அடங்கியது.

சில வினாடிகள் மெளனத்திற்கு பின் தன் சுயநினைவு வந்தவனாக கண்கள் திறந்தான் அப்பு. விளக்காமல் விளக்கிய குருவின் காலடியில் படுத்திருந்தான் அப்பு. 

“அப்பு...இனி காத்திருக்க முடியாது. இந்த உடம்பை விடுத்து மற்றொரு உடலை பெறும் நேரம் வந்து விட்டது. நீ இங்கிருந்து கிளம்பி மீண்டும் உன் குடும்பத்தாருடன் சென்று வாழத்துவங்கு. ஆறு வருடம் கழித்து நான் உனக்கு மகனாக பிறந்து புதிய உடல் பெறுவேன். அந்த உடம்பில் இருக்கும் என்னை சோமநாத் என அழை.....பிறகு உன்னுடன் வாழ்ந்து உன்னை முக்தியை நோக்கி செலுத்துவேன்....” 

சில ஷணம் மெளனம் நீடித்தது...

ஓம்....ஆதி நாதாய.. 

-என பெரும் சப்தம் எழுப்பியது அவ்வுருவம்....

அப்பு கண் முன்னரே மணல் துகள்கள் போல உடல் உதிர்ந்து விழுந்தது. உடல் இருந்த இடத்தில் புற்றுபோல சிறு குவியல் மட்டுமே தென்பட்டது.

கனவு போல நடந்து முடிந்த சம்பவத்தை நம்ப முடியாமல் குகையிலிருந்து மெல்ல வெளிப்பட்டு தென் திசையில் இருக்கும் தன் வீட்ட நோக்கி நடந்தான் அப்பு. சாம்சார பந்தத்தை துறந்த அப்புவை ஆன்மீகம் மீண்டும் சம்சார பந்தத்தில் இணைத்தது.

(மேளா தொடரும்)

Thursday, November 8, 2012

கும்பமேளா - 3


ஆஸ்திரேலிய காட்டுகளின் மையப்பகுதி. கரிய பழங்குடியினர்களின் கூட்டம் காட்டின் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துகொண்டிருந்தது. இருபது நாள் குழந்தையை கைகளில் சுமந்துகொண்டு தன் உடமைகள் தலையில் அழுத்த நடந்து கொண்டிருந்தாள் மலிந்தா.

சுருட்டை முடியும், கரிய உடலும் மேனியில் தோல் ஆடைகளும் கொண்ட கூட்டத்தின் நடுவே அதே உடல் மொழியுடன் கால்கள் மண்ணில் புதைபட பயனித்தாள். சிரமமான பிரசவத்தால் அவள் உடல் கிழிந்த துணிபோல துவண்டிருந்தது. சுமையின் அழுத்தமும், உடலின் தெம்பும் அற்றவளாக கால்களை இழுத்து இழுத்து நடந்து கொண்டிருந்தாள்.

குதிரைகளின் குழம்பொலி கேட்க ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டம் இவர்களை நோக்கி வரும் சப்தம் கேட்டது. பழங்குடியினர் கூட்டம் பல திசைக்கு ஓடினார்கள். உடல் வலுவற்ற நிலையில் நடக்க கூட சக்தி இல்லாத மலிந்தா சோர்வுடன் நின்றாள்.

ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் குதிரைகளுடன் மலிந்தாவை சூழ்ந்து நின்றுகொண்டனர். கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் இவளை நோக்கி குறி பார்த்தன.

 “பழங்குடியினரின் பூசாரி இவள் தான். இவளின் தலையை பிளப்போம்” என்றான் குதிரையில் அமர்ந்திருந்தவன்.

மலிந்தாவின் கண்கள் சிவக்க துவங்கின....

“ஹம்...ஊஊஊஊஊ..” என நீண்ட மற்றும் பெரிய சப்தம் எழுப்பினாள். 

காட்டில் உள்ள சிறிய பூச்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு லட்சக்கணக்காக அந்த இடத்தில் சூழ்ந்தது. ஒரே இரைச்சலும் குடைச்சலும் அதிகமாக ஆகிரமிப்பாளர்கள் நிலைகுலைந்து போனார்கள். துப்பாக்கிகள் கீழே விழுந்தன. சிலர் குதிரையிலிருந்து விழுந்து தங்கள் காதுகளை மூடிக் கொண்டனர்.

சில நிமிடத்தில் பூச்சிகள் மறைந்து போனது. மலிந்தா நின்று இருந்த இடம் காலியாக இருந்தது.

 “அந்த மாயக்காரியை பிடித்து வாருங்கள்....” குதிரைமேல் இருந்த ஒருவன் பெரும் சப்தம் செய்தான்.

அதே நேரத்தில் மலிந்தா சக்தியை திரட்டி காட்டின் ஒரு புறம் ஓடிக்கொண்டிருந்தாள். அவளின் இடம் நோக்கி ஓடினாள். இடம்பெயர இனி ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள்...!


அவளின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் ராட்சத மர பொந்தினுள் சென்று குழந்தையையும் தனது பொருட்களையும் வைத்து அருகே இருந்த விறகுகள் மற்றும் மர கட்டைகளை எடுத்துவந்து மர பொந்தின் வாயிலை அடைத்தாள்.

இருள் சூழ்ந்த மர பொந்தினுள் கண்களை மூடி வழக்கம் போல காவல் தெய்வத்தை வணங்கும் மந்திரத்தை உச்சரிக்க துவங்கினாள்.

சட்டனெ அவளின் மனக்கண்ணில் சில காட்சிகள் தெரியத்துவங்கியது.

கூடாரங்கள் கொண்ட பெரிய மைதானம்....மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கிறார்கள். நிர்வாண நிலையில் தலையிலிருந்து கால்வரை சடாமுடி தவழ ஒரு கூட்டம் நடந்து செல்கிறது.

அதன் நடுவே இருந்து தலை மழிக்கப்பட்ட நிலையில் கருப்பு சால்வை போர்த்திய ஒருவர் வெளிப்படுகிறார். கையில் பெரிய கம்பு மறுகையில் தீபம் ஏற்றப்பட்ட விளக்கை எடுத்துக்கொண்டு இவளின் அருகில் வந்தார்

தூரத்தில்.... பறவைகள் சலசலத்து பறப்பதை கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் அந்த திசையை நோக்கி குதிரைகளை முடுக்கினார்கள்.

பழங்குடியினரின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த ஒரு மரத்தின் அடிப்பாக முழுமையாக கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. மரத்தின் பாதி அளவு கரிய நிறத்துடன் காணப்பட்டது. மரத்தின் மேல் இருந்த பறவைகள் பீதியுடன் கூக்குரல் எழுப்பிய வண்ணம் விண்ணில் பறந்தன.

(மேளா தொடரும்)

Saturday, November 3, 2012

கும்பமேளா - 2


ஜப்பானுக்கு தெற்கே உள்ள கடலை நோக்கி கப்பல் புறப்பட்டது. இரண்டு நாள் கடந்திருந்தது. வழக்கமாக மீன்பிடிக்க கடலில் பயணிக்கும் பொழுது வேலையில்லாமல் அமர்ந்து பழக்கமில்லை. ஒன்று வலையை சரிசெய்யவோ அல்லது படகை செலுத்தவோ கைகள் ஓய்வின்றி வேலை செய்து பழக்கப்பட்டவன். தானாக சென்று ஏதேனும் வேலை இருக்கிறதா என விசாரித்து தன்னை இணைத்துக்கொண்டான். 

சமையல் அடுப்பில் கரிகளை நீக்கும் பணி கொடுத்தார்கள். சாம்பலையும் கரிகளையும் எடுத்து கடலில் கொட்டிவிட்டு புதிய கரிகளை அடுப்பில் சேர்க்க வேண்டும். கடலின் மேல்பரப்பு குளிர் காற்றுக்கு இந்த பணி இதமாக இருந்தது.

அன்று இடைவேளையில் கையில் இருந்த கரித்துண்டை கொண்டு சமையல் அறையின் பின்புற கதவில் படம் வரையத் துவங்கினான்.

 “இன்னும் என்ன செய்கிறாய். இங்கே வா” என அழைத்த அந்த கருப்பு உடை கொண்டவரை தனது கைபோன போக்கில் வரைய துவங்கினான். இவன் ஒன்றும் பெரிய ஓவியனல்ல. எழுத படிக்க கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவன். இவனின் அகக்காட்சியின் உந்துதலில் இவன் கை அசைய அங்கே தெளிவான அச்சிட்ட படம் போல அகக்காட்சியில் கண்டவரை வரைந்தான்.

கையில் ஊன்றுகோல் தலை மழிக்கப்பட நிலை. கருப்பு கம்பளி சுற்றிய உடல், கால்களில் தண்டை ஆபரணம் என அவன் தத்ரூபமாக வரைந்தது அவனுக்கே ஆச்சரியம் அளித்தது. அவனால் இது வரைபட்டதல்ல என நம்பினான். 

அடுத்த நாள் கரிக்கூடையை தலையில் சுமந்து கொண்டு கடலில் கொட்ட செல்லும் பொழுது அந்த அசாதாரண தன்மையை கண்டான். இவன் சமையல் அறையின் பின்புற கதவு அருகே வரைந்த ஓவியத்தின் முன்னால் சிறிது பழங்களும் உணவும் வைக்கப்பட்டிருந்தது. அருகே யாரும் இல்லை. அவனை அறியாமல் அந்த உணவை எடுத்து ருசிக்க துவங்கினான். சாப்பிட்டவுடன் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தவனாக உணர்ந்தான். உணவை யார் வைத்தார்கள் என்ற குழப்பம் இருந்தாலும் அதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கவில்லை.

அடுத்த சில தினங்களும் இது வழக்கமானதாக இருந்தது. ஒரு நாள் முன்னதாகவே கரியை எடுத்து செல்லும் பொழுது பிரதான சமையல்காரரும் மற்றொருவரும் உணவையும் பழங்களையும் வைப்பதை பார்த்தான். மனதில் மிகவும் உற்சாகமாக உணர்ந்தான். கூடையை அங்கேயே வைத்துவிட்டு அவர்கள் அருகே சென்று கரியில் வரைந்த ஓவியத்தை சுட்டிக்காட்டி...கைகளால் யார் இவர் என கேட்டான்.

“சங்கம் பாபா” என சொன்னார்கள். புரியாத சொற்களாக இருந்தாலும் அவர்கள் வானத்தை நோக்கி கண்களையும் கைகளையும் உயர்த்தி சொன்ன விதம் சங்கம் பாபா அசாதாரணமானவர் என உணர்த்தியது. இவர்களுக்கு அவரை பற்றி தெரிந்திருக்கிறது என்றதும் மிகவும் உற்சாகமானாலும் உடனே வருத்தமும் கொண்டான். புரியாத மொழி கொண்டவர்களிடம் எப்படி பேசுவது என்ற குழப்பம் அதிகரித்தது.

மிகுந்த யோசனையுடன் கரிக்கூடையை சுமந்துகொண்டு சென்றான். அன்று மாலை ஓய்வு நேரத்தில் மீண்டும் கரித்துண்டை கொண்டு பிற காட்சிகளை  அந்த கதவில் வரையத்துவங்கினான்.

இவன் வரைந்து முடிக்கவும் ஓவியத்தின் மேல் நிழல்கள் விழுகவும் சரியாக இருந்தது. பின்னால் திரும்பி பார்த்தான். காலையில் இருந்த சமையல்காரர் இன்னும் சிலரும் நின்றிருந்தனர். 

இவன் தத்ரூபமாக வரைந்த கூடாரங்கள், மக்கள் கூட்டம், நீண்ட ஜடாமுடி கொண்ட நிர்வாண மனிதர்கள் ஓவியம் இவைகளை கண்டு அவர்கள் உறைந்து போயிருந்தனர். 

அவர்களை நோக்கி இவை எல்லாம் என்ன என சைகையால் கேட்டான்.
“சங்கம்.....கும்பமேளா” என அவர்கள் ஒன்றுசேர உரத்த குரலில் கூறினார்கள்

இவனை நோக்கி இரண்டு அடி முன்னேறி வந்து இவனின் கால்களில் விழுந்தனர். இதை சற்றும் எதிர்பார்காத சூழலில் குழம்பி போனான். சற்று பின்வாங்கி அவர்களை கவனிக்கும் பொழுது அந்த சப்தம் கேட்டது.

“ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என புயல் அபாய சங்கு கப்பலில் ஒலித்தது.

அனைவரும் பரபரப்பானார்கள். பாய்மரங்களை சுற்றி கட்டிவிட்டு கப்பலின் கீழ்தளத்தில் சென்று பதுங்கினர். திடீரென பெரிய அட்டத்துடன் கப்பல் குலுங்கியது. அதுவரை தான் அவனுக்கு நினைவு இருந்தது.

சிதறி தெறித்த கப்பல் துண்டுகள் கடலின் மேல்மட்டத்தில் மிதந்த வண்ணம் இருந்தது. யாரும் மிஞ்சவில்லை. பதினாராம் நூற்றாண்டில் நடந்த இந்த விபத்து வரலாற்றில் பதியப்படாமலேயே அழிந்தது.

சில மாதங்களுக்கு பின் இந்தோனேசிய தீவு ஒன்றின் கடற்கரையில் மணலில் பாதி புதைந்த அளவில் ஒரு மரத்துண்டு தெரிந்தது. அதில் கரி ஓவியமாக சங்கம் பாபா கடலை பார்த்த வண்ணம் இருந்தார்.

(மேளா தொடரும்)