Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 14, 2012

கும்பமேளா - 4


தென் தமிழகத்தின் சிறிய கிராமத்தில் நிசப்தமான பின் இரவு நேரம்.  மனைவியும் குழந்தைகளும் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருக்க மெல்ல கதவை திறந்து வெளியேறினான் அப்பு. இந்த சம்சார பந்தத்தில் இருந்தால் நம்மால் ஆன்மீக முன்னேற்றம் இருக்காது என்பது அவனின் உள்ளுணர்வு வெகு நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தது. இனி இமாலயத்திற்கு சென்று குருவை தேடி அலைந்து அங்கேயே இருந்து விடுவது என முடிவு செய்து புறப்பட்டான். 

காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ் என பல்வேறு ஊர்களுக்கு சென்று கடைசியில் உத்திர காசிக்கு வந்தடைந்தான். இன்னும் வடக்கே பயணித்து ஹிமாலய மலையின் காடுகளுக்குள் செல்ல வேண்டும் என்பது திட்டமாக கொண்டான். 

அடுத்த நாள் புறப்பட்டு அருகே இருக்கும் பாண்டவாச்சல் என்ற கிராமத்தின் மையத்தில் கங்கை ஓடும் பள்ளத்தாக்கின் அருகே பயணித்தான்.மனது இயல்புக்கு மாறான தட தடத்தது. தான் இயல்பாக இல்லை என்பதை உணரும் ஷணத்தில் வெகு தொலைவிலிருந்து மிக மில்லிய சப்தம் கேட்டது.

“அ..அ...ஓ.......ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”

ஓம் என்ற மந்திரம் கேட்கும் திசையை நோக்கி சென்றான். பள்ளத்தாக்கின் ஓரம் வரை சென்று விட்டான்.. சபதம் இப்பொழுது தீர்க்கமாக கேட்டது. பள்ளத்தாக்கு மிகவும் அபாயகரமாக செங்குத்தான அமைப்பில் இருந்தது. பாய்ந்தோடும் கங்கை வெள்ளிக்கம்பி போல சில நூறு மீட்டர்கள் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது. 

விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது என்பது புரிந்தது. இங்கே எப்படி சப்தம் என ஆராய்ந்தான். பள்ளத்தாக்கின் ஓரத்தில் சப்தம் அதிகமாக கேட்கவே விட்டு அகலவும் மனம்  இடம் கொடுக்கவில்லை. சரிவில் இருக்கும் செடிகளை கைகளில் பிடித்தவண்ணம் கீழே இறங்க முயன்றான். உடல் நடுங்கியது, நிலை  தடுமாறினாலும் சமாளித்து மெல்ல இறங்கினான். சில அடிகள் கீழே இறங்கியதும் ஒரு பாறை இடுக்கின் வழியே அந்த சப்தம் அதிகமாக கேட்டது. இடக்கையால் செடிகளை கெட்டியாக பிடித்து, கால்களை கற்களில்  ஊன்றி, மறுகையால் பாறையைமில்ல விலக்கினான். 

விலக்கப்பட்ட பாறை தடுமாறி பள்ளத்தாகின் ஆழத்தை நோக்கி வீழ்ந்தது. பெரிய பாறை தூசி போல பறந்து கங்கையில் சென்று மறைந்தது. பாறை இருந்த இடத்தில்  குறுகலான ஒரு குகை பாதை சென்றது. இப்பொழுது ஓம் என்ற சப்தம் பன்மடங்காகி இருந்து. 

தனது கைகளை நீட்டி குகையின் விளிம்பை பற்றி உள்ளே புகுந்தான். தன் உடல் அளவுக்கு மிக குறுகலாக இருந்ததால் பாம்பை போல ஊர்ந்து மெல்ல நகர்ந்தான்.

சில அடிகள் நகர்வுக்கு பின் குகை பாதை செங்குத்தாக உள்ளே இறங்கியது. கைகளின் பிடி தளர்ந்து செங்குத்தான பாதையில் விழுந்தான் அப்பு. மூட்டுகளிலும் முகத்திலும் சிராய்ப்புகளுடன் குகையின் அடியில் விழுந்துவிட்டதை உணர்ந்தான்.

ஓம் என்ற சப்தம் மிகவும் அதிகமாக அருகே கேட்டது. குகையின் இருளில் தற்காலிகமாக கண்கள் இருளடைய பார்வை இழந்து உட்கார்ந்திருந்தான் அப்பு. 

சில வினாடிகள் அவனுக்கு இருள் பழகி குகையின் சூழல் பழகத்துவங்கியது.  அங்கே உடலின் அனைத்து எலும்புகளும் தெரிய, தோல் மட்டுமே ஆடையாக  அணிந்து நிர்வாணமாக ஒருவர் அமர்ந்திருந்தார். எலும்புக்கூடு போன்று காட்சியளித்த அவர் உடலின் முடிகள் இல்லாமல் இருந்தது. விரல்களில் இரண்டு அடி நீள நகங்கள் வளர்ந்திருந்தன. அவரின் கண்கள் திறந்திருந்தது. கருவிழிகள் இல்லை. உதடு அசையவில்லை ஆனால் ஓம் என்ற சப்தம் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.

பயத்தால் உடல் நடுங்கினாலும், தன் குருவை கண்டுவிட்டோம் என மனதில் எண்ணம் எழுந்து பயத்தை போக்கியது.

“குருநாதா...” என சப்தம் எழுப்பிய வண்ணம் அந்த உருவிடம் சென்று கால்களை பற்றினான். நைந்து போன துணியை பிடிப்பதை போன்று உணர்ந்தான்.

“அப்பு உனக்காகத்தான் பல நூற்றாண்டுகளாக இங்கே இருக்கிறேன்” உடலில் சலனம் இல்லை உதடு அசையவில்லை ஆனால் சப்தம் மட்டும் கேட்டது.

குகை அறையில் குரல்கள் எதிரொலித்து இரண்டு முறை கேட்பது அமானுஷமாக இருந்தது.

“பல நூற்றாண்டுகளாகவா? எனக்காக காத்திருக்கிறீர்களா? ஏன் குருவே...நான் ஆன்மீக தூண்டுதல் கொண்டு என் வீட்டை துறந்து உங்களை இப்பொழுது  தானே தேடி அடைந்தேன்” என்றான் அப்பு...

அந்த உருவின் கால்கள் மெல்ல அசைந்தது.. இலை சருகு போல இருந்த கால்கள் மெல்ல உயர்ந்து அப்புவின் நெற்றியை நோக்கி உயர்ந்தது. அப்புவின் புருவ மத்தியில் கால் கட்டைவிரலை வைத்தது அந்த உருவம்.....

பெரு நாட்டின் மீனவன், ஆஸ்திரேலிய பழங்குடிப் பெண் என துவங்கி ரஷ்யாவின் போர் வீரனாக, துருக்கியில் விலைமகளாக, பெரிய மடாலயத்தின் மடாதிபதியாக இப்படி  நாற்பதுக்கும் அதிகமான காட்சிகள் விரிந்து சுழன்று அப்புவின் புருவ மத்தியில் அடங்கியது.

சில வினாடிகள் மெளனத்திற்கு பின் தன் சுயநினைவு வந்தவனாக கண்கள் திறந்தான் அப்பு. விளக்காமல் விளக்கிய குருவின் காலடியில் படுத்திருந்தான் அப்பு. 

“அப்பு...இனி காத்திருக்க முடியாது. இந்த உடம்பை விடுத்து மற்றொரு உடலை பெறும் நேரம் வந்து விட்டது. நீ இங்கிருந்து கிளம்பி மீண்டும் உன் குடும்பத்தாருடன் சென்று வாழத்துவங்கு. ஆறு வருடம் கழித்து நான் உனக்கு மகனாக பிறந்து புதிய உடல் பெறுவேன். அந்த உடம்பில் இருக்கும் என்னை சோமநாத் என அழை.....பிறகு உன்னுடன் வாழ்ந்து உன்னை முக்தியை நோக்கி செலுத்துவேன்....” 

சில ஷணம் மெளனம் நீடித்தது...

ஓம்....ஆதி நாதாய.. 

-என பெரும் சப்தம் எழுப்பியது அவ்வுருவம்....

அப்பு கண் முன்னரே மணல் துகள்கள் போல உடல் உதிர்ந்து விழுந்தது. உடல் இருந்த இடத்தில் புற்றுபோல சிறு குவியல் மட்டுமே தென்பட்டது.

கனவு போல நடந்து முடிந்த சம்பவத்தை நம்ப முடியாமல் குகையிலிருந்து மெல்ல வெளிப்பட்டு தென் திசையில் இருக்கும் தன் வீட்ட நோக்கி நடந்தான் அப்பு. சாம்சார பந்தத்தை துறந்த அப்புவை ஆன்மீகம் மீண்டும் சம்சார பந்தத்தில் இணைத்தது.

(மேளா தொடரும்)

9 கருத்துக்கள்:

திவாண்ணா said...

சில விஷயங்கள் இப்ப புரிய ஆரம்பிச்சு இருக்கு!

Sivakumar said...

ஓ!! இது அந்த கதையோட தொடர்ச்சியா... நல்லாத்தான் போகுது.

Senthil said...

அருமை. தொடர்ச்சியின் தொடர்பு லேசாக தெரிவது போல் உள்ளது. பள்ளத்தாக்கு சிலிர்ப்பு இன்னும் சாரல் வீசுது. அடுத்த பயணம் எங்க சுவாமி?

guna said...

intersting

Sanjai said...

//சாம்சார பந்தத்தை துறந்த அப்புவை ஆன்மீகம் மீண்டும் சம்சார பந்தத்தில் இணைத்தது.// - Sweet & அருமை :)

arul said...

this story seems to be very interesting and revealing some facts unknown to the world

அரையாய் நிறை said...

arumai..thodarungul..nandri.

Unknown said...

Super thodar nandri namaskaram

geethasmbsvm6 said...

என்ன சொல்றது? முன்னேயே படிக்க முடியாமல் போச்சேனு நினைச்சுக்கறேன். வர முடியலை. :)))