அறிவிப்பு :இப்பதிவுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் எந்த சம்மந்தமும் அல்ல.
()அடைப்பு குறியில் கூறிய கருத்துக்கள் பிற சேர்க்கை அதில் ’சீரியசாக’ எதையும் தேட வேண்டாம்.
முதலில் அனைவருக்கும் “தீபாவளி நல்வாழ்த்துக்கள்”.
தீபாவளி கொண்டாட வேண்டுமா , நமது கலாச்சாரமா என கேட்பதற்கு முன் எனது சில கருத்துக்கள்.
மனிதன் தனது ஆனந்தத்தை புதுப்பித்து கொள்ள கொண்டாட்டங்கள் தேவைப்படுகிறது. அவனது அன்றாட பணிகளுக்கிடையே எடுக்கும் சிறிது விடுமுறை தான் இது போன்ற பண்டிகை. இதனால் அந்த தனிமனிதன் தனது வாழ்க்கையை சுவாரசியப்படுத்தி கொள்ள முடியும். பண்டிகைக்கு பிறகு அவனது அன்றாட செயலில் உற்சாகம் ஏற்படுவதற்கான ஒரு வித்தாக இது அமையும்.
அதனால் கொண்டாட்டங்களில் மத முலாம் பூசுவதை நான் வெறுக்கிறேன். பிறருக்கு தொல்லை தராதவகையில் தனிமனிதன் ஆனந்தமாக இருக்க முடியுமானால் அந்த ஆனந்தம் முக்கியமானது.அனைத்து கலாச்சரத்திலும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல.
ஐரோப்பிய கண்டத்தில் மதம், கடவுள் நம்பிக்கை இல்லதவர்கள் அதிகம். ஆனால் அவர்கள் கிருஸ்துமஸ் கொண்டாடுவர்கள். கிருஸ்து பிறந்ததற்காக அல்ல. தங்களின் உள்ளே ஆனந்தம் பிறக்கவேண்டும் என்பதற்காக.
கிருஸ்து பிறந்தால் என்ன ஆனந்தம் பிறந்தால் என்ன? விஷயம் ஒன்றுதானே.?
பாரத கலாச்சாரத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் சில காரண காரியங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது கிரக அமைப்புகள். 90% பண்டிகைகள் கிரகநிலை கொண்டே முடிவுசெய்யபட்டுள்ளது. (பலகாரத்தை கொண்டு இல்லையா என கேட்பது புரிகிறது)
சூரியன் கதிவீச்சு நமக்கு பல ஆதார சக்தியாக இருக்கிறது. சூரியனின் கதிர்கள் நமது உடலுக்கு சில வைட்டமின்கள் கொடுக்கிறது.
(இதில் ’மின்’ இருக்கே அதனால தான் மின்சாரம் எடுக்க முடியுதானு கேட்ட கூடாது. ஏற்கனவே மின்சார கொடுமையில் எனது சகோதரர்கள் வாடுகிறார்கள்- இதில் இது வேறயா?).
சூரிய ஒளி இல்லாவிட்டால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது. இன்னும் கிராமத்தில் நோய் குணமாகும் தருணத்தில் சிறிது நேரம் வெயிலில் உற்காரச் சொல்லுவார்கள்.அதன் காரணம் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்காகத்தான்.
(இளைஞர்களே...வேலைக்கு போகாமல் இருக்கும் உங்களை உங்கள் தந்தை அவ்வாறு உற்கார சொல்லுவது நோய் எதிர்ப்பு சக்திகாக அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.)
அவ்வாறு பயன்படும் சூரியன் ஐப்பசி மாதம் தனது வலுவை இழக்கிறான். வருடத்தில் 11 மாதம் சிறப்பாக செயல்படும் அவன் மழையாலும் , கால மாற்றத்தாலும் தற்காலிகமாக ஓய்வு எடுக்கிறான்.
சந்திரனுக்கு ஒளி எப்படி வருகிறது என்பது உங்களுக்கு தெரியும்.
( உண்மையா உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? என்னுடைய மாணவர் ஒருவன் - பொறியியல் படித்தவன். ஐயா சூரிய ஒளிதான் சந்திரனுக்கு கிடைக்கிறது என்கிறீர்களே, இரவில் சூரியன் தெரிவதில்லையே அப்புறம் எப்படி சந்திரன் எதிரொளிக்கும்? மலைபகுதியில் நமது குரல் நமக்கே கேட்பது போல காலையில் இருக்கும் சூரிய ஒளி மாலையில் எதிரொ(லி)ளிக்குமா? என கேட்டான். அவனை போன்ற பிரகஸ்பதிகள் இனிமேல் இந்த கட்டுரையை படிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)
ஐப்பசி மாதத்தில் காலை நேரத்தில் சூரிய ஒளி வலு இழக்கும் என சொன்னேன். இரவில் அதன் பிரதியான சந்திரனும் சூரிய ஒளி இல்லாமல் வலு இழக்கும் நாள், அமாவாசை.
அப்பொழுது அந்த நாள் முழுவதும் சூரிய ஒளி தாக்கம் இல்லத காரணத்தால் நோய் வர வாய்ப்புண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும்?
வரும் முன் காப்பது விவேகம் அல்லவா? அதனால் நீராடி, நல்ல தூய்மையான உடை உடுத்தி, உடல் வலு சேர்க்கும் உணவை அதற்கு முன்பு உட்கொண்டால் உடல் நிலையில் மேம்பாடு அடைவோம்.
இதை செய்யத்தான் அமாவாசைக்கு ஒரு நாள் முன்பு தீபாவளி கொண்டாடுகிறோம்.
சூரிய தாக்கத்தை உணர்ந்தவர்கள் எண்ணெய் தேய்து குளித்து,தூய்மையான ஆடை மற்றும் உடலுக்கு உறுதி சேர்க்கும் பலகாரங்களை சுவைத்தனர். விவசாயிகள் மற்றும் பிற தொழில் செய்பவர்களும் கூட அன்று எளிதில் ஜீரணிக்கும் உணவான அரிசியையும், உடலுக்கு வலு சேர்க்கும் மாமிசத்தையும் உண்டனர்.
ஆனால் இப்பொழுது நடப்பதோ வேறு. வெள்ளை சக்கரையில் பலகாரம் ( எலும்பை கரைக்கும் வஸ்து) , மேல்நாட்டினரின் ஜீன்ஸ் ( சந்ததியை குறைக்கும் வஸ்து) அணிந்து , சீனர்கள் கண்டுபிடித்த பட்டாசை (காதுகளுக்கு நல்லது) வைத்து ஓர் உலகமயமான[Globalization] தீபாவளியை கொண்டாடுகிறோம்.
சரி தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும்?
சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து ( வருஷத்திற்கு ஒருமுறையாவது செய்யுங்கள் என் தங்கங்களே), புத்தாடை உடுத்துங்கள். உடலுக்கு வலிமை சேர்க்கும் உணவை உண்டு. உடல் வேர்வை சிந்த சில தூரம் காலார நடங்கள். (ஆத்திகராய் இருந்தால் கோவிலுக்கும், நாத்திகராய் இருந்தால் கழகத்திற்கும் செல்லலாம்.). உங்கள் உறவினருடன் பேசி மகிழுங்கள். முடிந்தவரை தொலைக்காட்சியை தவிருங்கள். (அதற்காக டிவிடி பார்க்கலாம என கேட்க கூடாது)
பட்டாசு என்பது நமக்கும் நமது சூழ்நிலைக்கும் கேடுகளை கொடுக்கும். தவிர்க்கலாம். நீங்கள் தவிர்ப்பதன் மூலம் சிவகாசியில் ஓர் குழந்தை எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்ல வாய்ப்புண்டு. அனைவரும் தவிர்ப்பது நலமே. ( ரொம்ப செண்டிமண்டா இருக்கா? எதுக்கும் ட்ரை பண்ணுங்க).
அமாவசைக்கு முன் வரும் சதுர்தசி திதியை இவ்வாறு கொண்டாட சொல்ல காரணம் வேண்டாமா? அதற்குதான் நரகாசுரனும் கிருஷ்ணர் கதையும். ( நரசூஸ் காபி வித் நரகாசுரன்னு சொர்கத்தில் ஓர் நிகழ்ச்சி நடக்குது உங்களுக்கு தெரியுமா?)
ஓர் ஆணும் பெண்னும் வீட்டிற்கு தெரியாமல் கொண்டாடும் காதலர் தினத்திற்கே வாலண்டைன் எனும் பாதரியார் உயிர் துறக்க வேண்டி இருந்தது. ஒரு நாடே கொண்டாடும் கொண்டாட்டதிற்கு ஏதேனும் ஒர் காரணம் வேண்டுமல்லவா?.
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன் (அப்போ இன்னும் ஆரப்பிக்கவே இல்லையா?).
தீபாவளிக்கு பிறகு வரும் அமாவசையின் எதிர்தன்மைகளை சொன்னேன். அதில் சில நன்மைகளும் உண்டு. ( நீங்கள் அன்று குளிப்பதை சொல்லலை. ஏன் அதையே திரும்ப திரும்ப நினைக்கிறீங்க?.)
அன்று இருக்கும் கிரக நிலையில் சூரியன் முதல் ராசிக்கு 7ஆம் இடத்தில் இருக்கிறான். நான்காம் இடமான கடகராசி அதிபதியுடன் கூடி இருக்கிறான். கிரக நிலையில் 4,7ஆம் இடங்களுக்கு என்று சில நன்மைகள் உண்டு.
என்ன நன்மைகள்?
நமது செல்வம் மற்றும் உடமைகள் மேம்படவும். நமது செளகரியங்கள் உயரவும் மனதில் தீர்க்கமான உறுதி மொழி எடுத்தால் நடைபெறும். அதனால் அன்று மாலை, அமாவாசை வரும் சமயம் உங்கள் வீட்டில் மனதார பூஜை செய்யவும்.
இதற்கு குபேர லஷ்மி பூஜை என பெயர். உங்கள் செல்வங்களை கடவுளிடம் வைத்து கண்களால் அதை நன்றாக பார்த்து மகிழ்ந்து மனதில் செல்வம் மேம்பட பிரார்தனை செய்யலாம்.
( ரத்ன்லால் கடை அடகு சீட்டை வைக்கலாமா என யோசிப்பவர்கள் மேல் கடுமையான சட்டம் பாயும் என எச்சரிக்கப்படுகிறார்கள்)
புதிதாக ஏதாவது பொருளை வாங்கி வைக்கலாம். அல்லது யாருக்காவது தானம் கொடுத்து அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து மகிழ்ச்சி அடையலாம். இதை செய்வதனால் அன்று ஏற்படும் கிரக ஆதிக்கம் உங்கள் மனதில் வேர் ஊன்றி வளர்ந்து உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.
வரும் செவ்வாய் [28-10-2008] அமாவாசை அன்று மாலை 6மணி முதல் 7 மணிக்குள் [இந்திய நேரம்] அன்று உங்கள் வாழ்க்கையை ஐஸ்வர்யமாக மாற்ற வீட்டில் ப்ரார்த்தனை செய்யுங்கள்.
இது ஜாதி,மத,இன வேறு பாடுகள் இன்றி யார் வேண்டுமானாலும் செய்யலாம். சடங்கு சம்பிரதாயம் அன்று என்ன சுலோகம் என்றேல்லாம் கேட்பது தேவை இல்லை. சூரியனும் சந்திரனும் ஓர் குறிப்பிட்ட சமூகத்திற்கோ , மதத்திற்கோ சம்பந்த பட்ட விஷயம் அல்ல. நமக்கு தேவை அன்று எடுக்கும் மன உறுதி மட்டுமே.
(ஸ்லோகம் கேட்டா சொல்லுவீங்கல்ல?)
பண்டிகையை பற்றியும் அதன் தாத்பரியத்தைப் பற்றியும் விளக்கும் இந்த கட்டுரையின் இடை இடையே நகைச்சுவை பகுதிகள் எப்படி உங்களை சிரிக்கவைத்ததோ அது போல சீரியசான இந்த வாழ்க்கையின் இடையே கொண்டாடப்படுவதுதான் பண்டிகை.
ஆனந்தமாக இருக்க காரணம் வேண்டுமா? ஆனந்தமாக இருங்கள் அதற்கு காரணத்தை தேடதீர்கள்.
மீண்டும் கொண்டாட்ட நாள் வாழ்த்துக்கள்.