நானும் கல்லூரி நாட்களில் காதலை பரிசோதித்தது உண்டு. இதை எனக்கு கற்றுக்கொடுத்தவள் மீரா... என்றேன் அல்லவா?
இதில் எத்தனை பொய் இருக்கிறது தெரியுமா? முதலில் நான் கல்லூரி படித்தேன் என்பதும் பிறகு ஒரு பெண் எனக்கு கற்றுக்கொடுத்தாள் என்பதும்..! இங்கே நான் கூறப்போவது எனக்கு ஏற்பட்ட காதலை அல்ல...!
என் நண்பர்களிடையே இருக்கும் காதல் உறவை பற்றி சோதனை செய்வதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு. காதல் கொண்டவர்களிடம் நான் சில கேள்விகளைத் தொடுப்பேன். அவர்கள் கூறும் பதில் அவர்களின் உண்மையான காதலின் நிலையை காட்டும்.
எதற்காக நீ அவளை/அவனை காதலிக்கிறாய்? - இதுவே என் கேள்வி.
இதற்கு பலர் பதில்கள் பல வண்ணத்தில் இருக்கும்.
அவள் அழகாக இருக்கிறாள்,
அவள் புன்னகையே மிகவும் அழகு, இந்த நடிகை மாதிரி இருக்கிறாள்.
நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான்.
ஹாண்ட்சம்மா இருக்கிறான்.
என்னை நன்றாக பார்த்துக்கொள்வான்.
பொருளாதாரத்தில் நிலையாக இருக்கிறான்.
இப்படி அவர்கள் கூறும் பதிலை கேட்டதும் நான் புன்னகையுடன் கடந்து செல்லுவேன்.
காரணம் இவர்கள் அனைவருக்கும் ஏற்பட்டது உண்மையான காதல் அல்ல.
மனித நிலை என்பது மூன்று தளங்களில் செயல்படுகிறது. உடல்,மனம் மற்றும் ஆன்மா என்பதே அது.
ஆண்-பெண் இருவரை பார்த்து “நல்ல ஜோடி” என நீங்கள் கூறினால் அவர்களின் உடல் தளத்தில்இணைந்திருக்கிறார்கள் என அர்த்தம். நல்ல மனமொத்த தம்பதி என நீங்கள் சிலரை உணர்ந்திருக்கலாம். அவர்கள் மனம் என்ற தளத்தில் இணைந்திருக்கிறார்கள் என அர்த்தம்.
ஆன்மாவில் இணைந்த காதலர்கள் என்பது யாரை சுட்டிக்காட்ட முடியும்? ஆன்மாவில் இணையும் பொழுது தான் அது பூரண காதலாக மலருகிறது. உடலாலும், மனமாலும் ஏற்படும் காதல் எல்லைக்கு உட்பட்டது. ஆன்மாவில் ஏற்படும் காதல் எல்லைகளை கடந்தது.
இத்தகையவர்களிடம் “எதற்காக நீ அவளை/அவனை காதலிக்கிறாய் ?” என கேட்டால், “ தெரியாது” என்பார்கள். இதுவே சரியான பதில்..!
காரணம் ஆன்மாவை உணர முடியுமே தவிர விவரிக்க முடியாது. ஆன்ம ரீதியான காதலும் அத்தகையதே. இவ்வாறு ஏற்படும் காதல் எல்லையை கடந்து பயணிக்கும். அன்பு அங்கே அற்புதங்களை நிகழ்த்தும்.
இது போன்ற ஆன்ம காதலை எனக்கு உணர்த்தியவள் மீரா. பக்த மீரா என அனைவரும் கூறும் ராஜஸ்தானின் ராணியைத் தான் கூறுகிறேன். இவளின் அழகில் மயங்கி சாதாரணமாக இருந்த இவளை அரசன் மணந்து கொண்டான். ஆனால் இவள் இளவயது முதல் கண்ணனே தன் காதலன் என வாழ்ந்து வந்தாள்.
இறைவனை காதலனாக பாவித்தவளுக்கு எப்பொழுதும் பரமானந்தம் கிடைத்தது. ஆடினால், பாடினால் மகிழ்ந்தாள். சிலர் இவளை பைத்தியம் என்றார்கள். கண்ணன் மேல் ஏன் காதல் கொண்டாய்? என இவளின் காணவனே கேட்டான். மீரா என்ன சொன்னாள் தெரியுமா? “எதிர்ப்பார்ப்புடன் செய்யும் சேவை, பக்தி மற்றும் காதல் அனைத்தும் அசுத்தமானது. கண்ணனை நான் காதலிப்பது ஏன் என்பது எனக்கு தெரியாது. கண்ணனே இதற்கு காரணம்..!” என்றாள். கண்ணனை தவிர வேறு எதையும் அறியாதவள் மீரா...
மீராவின் வாழ்வில் நடந்த உன்னத சம்பவம் ஒன்று உண்டு. கிருஷ்ண கானம் பாடிய படியே அவள் பிருந்தாவனத்தில் வலம் வந்து கொண்டிருந்தாள். அங்கே ஒரு ஆன்மீக ஞானியின் ஆசிரமத்தை கண்டு அதனுள் செல்ல முற்பட்டாள். வாயிலில் இருந்தவர்கள் அவளை தடுத்தார்கள். இங்கே ஆண் துறவிகள் இருக்கும் இடம் பெண்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள்.
கல்கண்டை கண்ணாடியில் கொட்டியது போல சிரித்த மீரா கூறினால், “பரந்தாமனை தவிர வேறு யாரும் ஆண்கள் கிடையாது. அதனால் நாம் அனைவரும் பெண்களே..! உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது” என்றாள்.
ஆழ்ந்த வேதாந்த கருத்தை எளிமையாக கூறிவிட்டாள் மீரா. ஆன்மா இணைவது உன்னதமான காதல் என்றேன் அல்லவா? இந்த ஆன்மா பரமாத்தாவுடன் இணைந்தால் எத்தகைய காதலாக இருக்கும்? அப்படி பரமாத்தாவுடன் காதல் கொண்டால் அவர் தவிர வேறு யார் ஆணாக இருக்க முடியும்? அவர் தானே நமக்கு பக்தி என்ற குழந்தையை கொடுக்கிறார். பரமானந்தம் என்னும் அனுபவத்தை அளிக்கிறார். மீரா எப்படிபட்ட உண்மையை கூறினால் பார்த்தீர்களா?
இத்தகைய காதல் சிலருக்கு மட்டுமே இருந்தது. மீரா, சபரி மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் என இறைவனை காதலித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
தற்காலத்தில் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் காதல் பூக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். மலைகளுக்கு அரசன் தக்ஷன். அவனின் மகளான தாக்ஷாயினி மிக அழகானவள். அவளின் வாழ்க்கை சுகபோகத்துடன் இருந்தது. அவளுக்கு யார் மேல் காதல் ஏற்பட்டது தெரியுமா? பரமேஸ்வரனின் மேல் காதல் உண்டானது. தாக்ஷாயணியும் சிவனும் இணைந்து நின்ற மண கோலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
தாக்ஷாயணி நறுமணங்கள் தரிந்து பட்டு உடையுடன் நிற்கிறாள். இங்கே ஈஸ்வரன் மயான சாம்பலுடன் புலி தோல் கட்டிக்கொண்டு நிற்கிறார். தங்கமும் வைரமும் தாக்ஷாயணிக்கு, இங்கே பாம்பும் சடையும் பரமேஸ்வரனுக்கு..! அழகிய தோழிகளும், அரசர்களும் தாக்ஷாயணிக்கு அருகே, அகோரிகளும் முனிவர்களும் ஈஸ்வரனுக்கு அருகே நிற்க இத்திருமணம் நடைபெறுகிறது. தற்காலத்தில் இப்படி காண முடியுமா? எந்த பெண்ணாவது தாக்ஷாயணி போல திருமணம் செய்ய முன்வருவார்களா? அல்லது எந்த ஆணாவது கந்தனை போல வள்ளியை திருமணம் செய்ய தயாராக இருப்பார்களா?
பெண் என்ன படிக்கிறார், திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லுவாளா என்ற கேள்வியே காதலை இவர்களுக்கு முடிவு செய்கிறது..!
நம் கலாச்சாரத்தில் காதல் என்பது ஆன்மீக ரீதியாகவே உணரப்பட்டது. ஆன்மாவில் ஏற்பட்ட காதல் ஆன்மீக ரீதியானது தானே? ஆன்மாக்கள் இணைந்து ஆன்மானுபவம் ஏற்படுவதற்கு ஓர் ஆணும் பெண்ணும் இருக்க வேண்டும் என்பது இல்லை. பரமாத்மா சொரூபத்தில் உங்கள் ஆன்மாவை கரைக்க முயலுங்கள். எல்லையற்ற காதலை உணர வேறு யார் வேண்டும்?
“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என பாடினார்களே அவர்களின் காதலை நீங்களும் பெற வேண்டாமா? காதலியுங்கள், உங்களை காதலியுங்கள். உங்களின் உள்ளே என்றும் பிரகாசிப்பவனை காதலித்து கசிந்து உருகுங்கள்.