Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, January 30, 2009

கோவிகண்ணனின் அட்டகாசங்கள்

வலைபதிவுலகில் கடந்த ஆறு மாதங்களாக தட்டிக்கொண்டிருக்கிறேன். ( எழுதிக்கொண்டு என எப்படி சொல்லுவது? ) அதற்கு சில பல காரணங்கள்.

ஆன்மீக வாழ்க்கையில் இருக்கும் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஓர் ஊடகமாக பயன்படுத்த எண்ணம். பல்வேறு பரிணாமங்களில் எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தேன் அதற்கு காரணம் இருந்தது. எழுதும் எண்ணம் இருந்தாலும் போதிய நேரம் இல்லை என்பதும், சில புத்தகங்களையும் மாத பத்திரிகையையும் எழுதி வந்ததால் ஏற்பட்ட நெருக்கடியும் காரணமாக இருந்தது.

பதஞ்சலி யோக சூத்திரம், திருமந்திரம், ஜோதிட ஆய்வு என பல ஆன்மீக, வேத கருத்துக்களை புத்தக வடிவில் எழுதி வந்தேன். ஒரு நாள் யோக சூத்திரம் பற்றி ஒரு கருத்தை சுட்டியாக எனது மாணவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். திரு ஜெயமோகன் அவர்கள் பதஞ்சலியோக சூத்திரத்தை பற்றி எழுதிய பதிவு அது.

அதை படித்து விட்டு கிளர்ந்து எழுந்த நான், பல வரிகள் கொண்ட கடிதத்தை அனுப்பினேன். :)) வழக்கம் போல ஜெயமோகன் அவர்கள் அதை சாத்வீகமாக அனுகினார். :)

இந்த காலகட்டத்தில் தான் எனக்கு வலையுலகம் பரிச்சயமானது.. குரு கீதை என ஓர் வலைதளத்தை ஆரம்பித்து ’தட்டி’ தடுமாறி சில கதைகளை பதிவேற்றினேன். குரு சிஷ்யன் பற்றிய கதைகள் 108 எழுத வேண்டும் எனது எண்ணம். அந்த தளத்தில் வந்த கதைகளை படித்துவிட்டு காரசாரமாக பின்னூட்டம் இடுவதன் மூலமும் தனி மின்னஞ்சல் அனுப்பியும்
தொடர்பு கொண்டவர் தான் கோவி கண்ணன்.

கோவி.கண்ணன் என்ற பதிவர் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். (..தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள முயல வேண்டாம் என நல்லெண்ணத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். :)) )

அவரை பற்றி சில வரிகள்...

காலாகாலமாக சொல்லிவந்த விஷயங்களை காலம் எனும் தலைப்பில் பதிவு செய்து வருபவர்.
நாத்திகருக்காக பெரியார் படமும், ஆத்திகருக்காக வள்ளலார் படமும் போட்டு இரு தரப்பு வாசகர்களையும் கவர்ந்தவர் ( என்ன ஒரு அரசியல்த்தனம் ;). .)

கூகுள் பற்றியாகட்டும், ஆன்மீகம் பற்றியாகட்டும் எதுவாக இருந்தாலும் பொளந்து...கட்டுவார் ...
( இது என்ன ”பொளந்து...கட்டுவார் ...” என கேட்பவர்களுக்கு விளக்கம்: பதிவில் இவர் விஷயத்தை பொளந்து விடுவார்.. படிக்கும் வாசகர்கள் பின்னூட்டத்தில் கட்டுவார்கள் பாருங்கள் அப்படியொரு கட்டு :)) )

கோவியாரின் வலைதளத்தில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பரிமாறிகொள்ளும் பொழுது
அவரின் தூண்டுதலால் உருவானது தான் இந்த தளம். ஜோதிட சாஸ்திரத்தை பற்றி தெளிவு கொடுக்கும் ஓர் வலைபக்கம் உருவாக அவருக்கும் பங்கு உண்டு. ( இந்த வலை தளத்தின் மேல் காண்டுடன் இருப்பார்கள் கவனிக்க.. கோவியாருக்கும் பங்கு உண்டு)

ஆக இப்படி எனது வலையுலக பயணம் செயல்பட காரணமாக இருந்தார் கோவியார்.
சினிமா.. சினிமா எனும் தொடர் பதிவை பதிவர்கள் எழுதி வர அதில் என்னை அழைத்தார் எழுத..

என்னை தொடர செய்ய அவருக்கு எப்படி எண்ணம் வந்தது என எனக்கு தெரியவில்லை... ஆனால் அவரின் அழைப்பை சிறப்பாக செயல்படுத்தினேன் என்றே நினைக்கிறேன். சினிமா சினிமா என்ற எனது பதிவை படித்தவர்கள் பல குழப்பத்திற்கு ஆளானார்கள். ஸ்வாமி இப்படி எழுதலாம என்றும்... பிரபல பதிவர் வேறு பெயரில் எழுதுகிறார் என்றும் விமர்சமம் வர துவங்கியது. இந்த பதிவுக்கு பிறகு நகைச்சுவை பதிவு எழுதினால் வரவேற்பு இருப்பதை உணர்ந்தேன்...

இவ்வாறு எனது பல வலையுலக பயணத்திற்கு தூண்டுகோலாகவும், கிரியா யூக்கியாகவும், மேம்படுத்துபவராகவும், மோட்டிவேட்டராகவும் ( அட எல்லா எழவும் ஒன்னுதானு நீங்க சொல்லுவது கேட்கிறது - என்ன செய்ய கோவியார் அதற்கு தனி பேமெண்ட் தருவதாக சொன்னார்) இருந்தவர் கோவியார்.

இத்தகைய மாபெரும் பணியை செய்த கோவியார் கோவை வருவதாக சொன்னார். என்னை சந்திப்பதாகவும் கூறினார். மகிழ்ச்சியில் திளைத்தேன்... ஆனந்த கூத்தாடினே.. ( பாரட்டு பதிவு எழுதும் போது இதெல்லாம் சேத்துக்கனும் ;) ).

சொன்னது போல என்னை ச்ந்திக்க வரும் நேரத்தை தொலைபேசினார்...
”சிங்”கை கோவி கண்ணன் என்பதால் பஞ்சாபி போல தலையில் தலைப்பாகை வைத்திருப்பாரோ...
கண்ணன் என்பதால் தலையில் மயிலிற்கு வைத்திருப்பாரோ என எண்ணினேன்..

அவர் வந்த பிறகு தான் தெரிந்தது அவர் தலையில் ஒன்றும் இல்லை என்பது. ;)

வெளிநாட்டில் அதிக காலம் இருந்ததால் என்னவோ சொன்ன நேரத்தில் சரியாக வந்தார். தனது இந்திய அடையாளத்தை இழந்துவிட்டார் என்பதற்கு இதுவே சாட்சி... ;)



மேலும் இந்தியர்கள் புதிய நபர்களை அறிமுகப்படுத்தி , பயணம் செய்து சந்திப்பதை விரும்பமாட்டார்கள். வெளிநாட்டிலிருந்து வந்ததும் கையில் மினரல்வாட்டர் பாட்டிலுடன் உறவினர் வீட்டுக்கு சென்று அளந்து விடுவார்கள்...

இது போன்ற செய்கை அற்றவராக கோவிகண்ணன் இருந்தார். ( முக்கியமாக மினரல்வாட்டர் பாட்டில் கையில் இல்லை .. ;) பையில் இருந்திருக்கலாம்..!)

2000 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஆசிரமத்தையும்...
ஸ்வாமி ஜீ பிசியாக இருக்கிறார் காத்திருங்கள் என கூறி குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறையில் உற்கார வைப்பார்கள்...ஸ்வாமி சிஷ்யர்கள் புடைசூழ வருவார் என எதிர்பார்த்திருப்பார் என நினைக்கிறேன்.

ஆனால் நடந்தது வேறு :)

அவரின் கற்பனையில் இருந்த ”நான்” இயல்பில் வேறு மாதிரி இருந்திருப்பேன் என நினைக்கிறேன். அல்லது சுவாரசியமாக இருந்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன். வந்த சில மணி நேரத்தில் பிற பதிவர்களை சந்திக்க வேண்டும் என கிளம்பினார்..

நாங்கள் என்ன பேசினோம் என கேட்பவர்களுக்கு... இரு நாட்டு அதிபர்கள் என்ன பேசினார்கள் என வெளியிடுவார்களா? அதுபோலதான் நாங்கள் பேசியதும்..

ஒரே வித்தியாசம்... நங்கள் “NOT" அதிபர்கள்.

இனிக்க இனிக்க பேசினார்... குழந்தை சிரிப்பது போல அழகாக சிரித்தார்.. ( இது எல்லாம் உண்மைதாங்க.. அவர் எழுத சொல்லலை..)

திருப்பூர் சென்று பரிசல்காரன், வெயிலான் போன்றவர்களை சந்திக்கப் போவதாக சொல்லி விடைபெற்றார்... (பாவம் என அவர்களை நினைத்து தனியாக ப்ரார்த்தனை செய்தேன் ;) ).

நான் நேரில் சந்தித்த முதல் வலைபதிவர் இவர்தான். நான் வலைபதிவுக்கு வரும் முன்னரே கோவை வலைபதிவர்கள் கூட்டம் நடந்து முடிந்துவிட்டதால் பிற பதிவர்களை சந்திக்க முடியவில்லை..

என்ன கோவை பதிவர்களே சந்திப்போமா? ஆவலாக உள்ளேன்... (என்னையும் ஆட்டத்தில் சேத்துக்குங்கப்பா...;) )

விடைபெரும் பொழுது சில புத்தகத்தையும் சாக்கலெட்டையும் வழங்கினார்.

சாக்கலெட்டை விட அவரின் சந்திப்பு இனிமையாகவே இருந்தது...

Monday, January 26, 2009

நான் கடவுள் - சிறப்பு புகைப்படம்



போலியாக ஆன்மீக தன்மைகளை காண்பிக்கும் சினிமா மேல் கோபத்தில் “நான்” உருவாக்கிய படம்.

- ஸ்வாமி ஓம்கார்

ஜோதிட கல்வி - பகுதி II


சூரிய மண்டலம் மற்றும் அதில் இருக்கும் கிரகங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். சூரியனும் , பிற கிரகங்களும் கோள் வடிவமாக இருக்கிறது அல்லவா? சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் நீள் வட்ட பாதையில் சுழலுகிறது அல்லவா?

ஆக வான் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதன் செயல்களும் வட்டத்தின் அடிப்படையாகவே இருக்கிறது.இயற்கையில் உருவாகும் அனைத்து விஷயத்திலும் வட்டம் அடிப்படை வடிவமாகவே இருக்கும். வட்டம் வளரும்பொழுது கோளம், உருளை என முப்பரிமாணமாக மாற்றமடையும்.

கரு உருவாகும் பொழுது சூல் வட்டவடிவமாக இருக்கும். உலகின் முதல் விஞ்ஞான கண்டுபிடிப்பான சக்கரம் வட்டவடிவமானது என வட்டத்தின் சிறப்பை கூறிக்கொண்டே செல்லலாம்.

வட்டம் ஆரம்பமும் முடிவும் அற்றது. அதனாலேயே வட்டத்தின் அடிப்படையில் இயங்கும் பிரபஞ்சமும் தோற்றமும் முடிவும் அற்றதாக இருக்கிறது.

இத்தகைய வட்டத்தை தெரிந்து கொள்வது அவசியம்.

கணிதத்தில் வட்டத்தின் சுற்றலவு 360 டிகிரி என்கிறார்கள்.

வட்டத்தை இரண்டாக பிரித்தால்....இரண்டு... 180 டிகிரியாக மாறும்.

வட்டத்தை நான்காக பிரித்தால் ... நான்கு 90 டிகிரியாக மாறும்.

இதுவரை நாம் பிரித்தது செங்கோணமாக இருக்கும் வடிவங்கள். 90 டிகிரியை இரண்டாக பிரித்தால் 45 டிகிரி கிடைக்கும். ஆனால் அது செங்கோணம் அல்ல..

90 டிகிரியை மூன்று பிரிவுகளாக பிரித்தால் 30 டிகிரி என பன்னிரெண்டு பிரிவுகள் கிடைக்கும்.

30 டிகிரிக்கு கீழே பிரிக்க வேண்டும் என்றால் 1 டிகிரி என்பதே சரியான கோணமாகி 360 பிரிவுகள் கிடைக்கும்.





பன்னிரெண்டு பிரிவான 30 டிகிரியை ஓர் அடிப்படை அலகாக (Units) கொண்டு ஜோதிடத்தில் ஆய்வு செய்கிறார்கள். இந்த பன்னிரெண்டு பிரிவகளே ராசிகள் என அழைக்கப்படுகிறது.

பன்னிரெண்டு பிரிவுகள் எவ்வாறு அமைந்து இருக்கிறது என தெரிந்து கொள்ளவேண்டுமானால் ஓர் ஆரஞ்சு பழத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் சுளைகள் பன்னிரெண்டு இருப்பதாக கொண்டால், பூமியின் சுற்று பகுதியில் ராசிகள் அமைத்தவிதம் எப்படி இருக்கும் என யூகிக்க முடியும்.

ஜோதிட ஆய்வு செய்யுபொழுது கருத்துக்களை எழுத சிரமமாக இருக்கும் என்பதற்காகவே வட்டதின் மூலை பகுதிகளை சீராக்கி சதுர வடிவில் அமைத்திருக்கிறோம். மற்றபடி ராசி மண்டலம் என்பது வட்டவடிவம் தான், நமது செளகரியத்திற்காக அனைத்து பிரிவுகளும் சதுரத்தில் அமைந்திருக்கிறது.
மேலும் வட்டத்தின் சித்தாந்தம் குலையாமல் 30 டிகிரியாகவே அமைந்துள்ளது.

ராசி மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியும் அதற்கென ஓர் பெயரும் கிரக ஆதிக்கமும் கொண்டு அமைக்கபட்டுள்ளது. அதன் படம் கீழே..




















ராசி
மண்டலம் பற்றிய பாடத்தின் வீடியோ காட்சி




-----------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :


ஏன் மேஷம் என்ற ராசியை செவ்வாய் குறிக்க வேண்டும்? மகர ராசி - கும்ப ராசியை ஏன் சனி குறிக்க வேண்டும் ?
செவ்வாய் கன்னி ராசியை குறிக்க கூடாதா? என கேட்டால் எப்படி விளக்கம் சொல்லுவீர்கள்?

நன்றாக ஜோதிடம் தெரிந்தவர் என உங்கள் நண்பர் யாராவது இருந்தால் கேட்டுப்பாருங்கள்.
அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடையை அடுத்த பதிவில் இடுகிறேன்.

பதில் நேரம் :

சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி :
கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா?

இதற்கு பலதரப்பட்ட விளக்கம் வந்திருந்தது. கிரகணம் , கடல் அலைகள் என பல விளக்கங்கள். நான் கேட்டது மனித உடலில் கிரக வேலை செய்யும் என்றால்

எப்படி.

ஜோதிடத்தை பொருத்தவரை சூரியன் ஒரு கிரகம் அல்லவா? சூரியன் ஒளி மனிதனுக்கு கிடைக்கவில்லை என்றால் அதிக தோல்வியாதியால் துன்பபடுவான்.

வைட்டமின் ஈ மற்றும் டி கிடைக்காது.
கிரகம் என்றவுடன் ஒன்பது கிரகத்தையும் நினைத்து குழப்பிக்கொள்ளுகிறோம். சூரியன் எனும் கிரகம் மனித உடலில் வேலை செய்கிறது தானே?

எளிமையாக யோசிப்போம்..வளமை காண்போம் :))
-------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

[ இந்த பகுதியில் சின்ன சின்ன நகைச்சுவை வெளிவரும். கணமான கருத்துக்களை படித்து விட்டு புன்சிரிப்புடன் நிறைவு செய்வோமே....]

கோவில் திருவிழாவில் “டாடி மம்மி வீட்டில் இல்லேனு தடைபோட யாரும் இல்லைனு” பாடிக்கிட்டு இருக்காறே, யாரு அவரு?

அவர் “வில்லு” பாட்டுக்காரராம்.

Tuesday, January 20, 2009

இறைவா எங்களை காப்பாற்று....


பிரபஞ்ச நிகழ்வுகள் நமக்கு புரிவதில்லை. மழை பொழிவது எதனால், காற்றடிப்பது எதனால் என விஞ்ஞானம் ஒவ்வொரு காரணம் சொன்னாலும்உண்மையில் இயற்கை நிகழ்வுகள் நடைபெற நமது வான் சூழல் (atmosphere) காரணமாக இருப்பதில்லை.

நமது சூரிய மண்டலத்தில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமது இயற்கைமாற்றத்திற்கும் இயற்கை சீற்றத்திற்கும் காரணமாகிறது.

சூரியனை பூமி சுற்றி வரும் பாதை நீள் வட்டமானது என பள்ளி நாட்களில்படித்திருக்கிறோம். சூரியனுக்கு அருகில் பூமி வரும் சமயம் கோடை காலமாகவும், விலகி இருக்கும் பொழுது குளிர்காலமாகவும் இருக்கும் என விஞ்ஞானம் சொல்லுகிறது. ஆனால் பிற இயற்கை மாற்றத்திற்கு சூரியனையோ, வான் மண்டல நிகழ்வுகளையோ விஞ்ஞானம் சுட்டிக்காட்டுவதில்லை.

நான் மக்களுகான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பொழுதுஎப்பொழுதும் கேட்கப்படும் கேள்வி இது...

இயற்கை சீற்றங்கள் புயல், சுனாமி போன்ற நிகழ்வுகள் வரும் பொழுது இறக்கும்அனைவருக்கும் அந்த நாளில் இறப்பு வரும் என ஜாதகத்தில் இருக்குமா?”

இந்த கேள்வி கேட்கப்படுவதன் காரணம் நாம் இறப்பு எனும் நிகழ்வில் காட்டும் சோகமும், இழப்பு எனும் மனோபாவமும்.

ஒரு நகரில் தினமும் எத்தனையோ குழந்தைகள் பிறக்கிறார்கள். ஒரே நாளில் இத்தனை பேர் பிறக்க வாய்ப்பு இருக்கும் பொழுது இறக்கவும் வாய்ப்பு இருக்கிறதே.?

இயற்கை சீற்றங்களுக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

கடல், மலை, வெளி என அனைத்து இயற்கை சூழலையும் மனிதன் மாசுபடுத்தி வருகிறான் . இயற்கையை மனிதன் சுரண்ட சுரண்ட இயற்கை தான் எத்தனை பெரியவன் எனகாட்டும்.

மனிதன் எப்பொழுதும் இயற்கையை துன்பப்படுத்தினாலும், இயற்கை மனித இனத்திற்கு தனது பிரம்மாண்டத்தை காட்டும் முன் சில அறிகுறிகளை காட்டும்.

அந்த அறிகுறிகளை உணர்ந்தால் இயற்கையின் திருவிளையாடலில் சிக்காமல் இருக்கலாம். இயற்கையின் சைகையை புரிந்து கொள்ளவேண்டுமானால் மனிதன் தன்னை இயற்கையுடன் ஒன்றி இருக்கும்படியான விழிப்புணர்வு நிலையில் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் வரும் கிரகணங்கள் நமது பூமியில் நிகழும் இயற்கையான மற்றும் சமுக ரீதியான மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது.

(கிரகணத்திற்கும் பூமிக்கும் உள்ள தொடர்பை பற்றிய ஓர் பதிவை எழுதியிருக்கிறேன். கூடிய விரைவில் உங்கள் அறிவுக்கு விருந்தாகக் காத்திருக்கிறது.)

ஆனால் நாம் இங்கு பேச இருப்பது 2009 ஆம் ஆண்டு இயற்கை நமக்கு சொன்ன சில சைகைகளை பற்றியது.

சூரிய கிரகணம்:


26 ஜனவரி 2009 ஆம் ஆண்டு இந்திய நேரப்படி பகல் 1 மணி 29 நிமிடத்திற்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

நாசாவின் இணைய தள விவரம் : கிரஹணம்

எனது ஆய்வில் பூமியில் சூரிய கிரகணம் ஏற்படும் பகுதியும் அதன் எதிர் பக்கம் உள்ள பகுதியும் இயற்கை சீற்றத்தாலும், குழு மரணம் என சொல்லக்கூடிய பலர் இறந்து போவதற்கு காரணமாக இருக்கும்.

26ஆம் தேதி ஏற்படும் சூரிய கிரகணம் இந்தியாவின் தென்பகுதியிலும் , அமெரிக்காவின் கிழக்கு பகுதியையும் தொடுகிறது.

26ஆம் தேதியில் உள்ள கிரக நிலை மற்றும் பிப்ரவரி 13 வரை உள்ள கிரகங்கள்உலகின் பல அசம்பாவிதங்களுக்கு காரணமாக இருக்கப்போகிறது.

ஜோதிட ரீதியான ஆய்வு :

குரு அரசு மற்றும் அரசியல் நிலையை காட்டுகிறது. சூரியன் ஆட்சி மற்றும் உயர் பதவியில் உள்ள ஆட்சியாளர்கள் குறிக்கும். செவ்வாய் ராகு தீவிரவாதம் மற்றும் அசம்பாவிதங்களை காட்டுகிறது. மேற்கண்ட கிரகங்களானகுரு,சூரியன்,செவ்வாய்,ராகு என அனைத்தும் மகர ராசியில் இணைகிறது. குரு இந்த ராசியில் பொலிவிழந்து காணப்படுவார். இவர்களுடன் வக்ரமான புதன்மற்றும் கேதுவின் தொடர்பு வேறு.

சனி பொதுமக்களை குறிக்கும் கிரகம், சிம்மத்தில் உள்ள சனியை செவ்வாய், ராகுவுடன் இணைந்து தனது மோசமான பார்வையான 8ஆம் பார்வையால் பார்க்கிறார்.




இதனால் என்ன ஏற்படும்?

இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் ஏற்படும். செயற்கை நிகழ்வான தீவரவாத தாக்குதல் ஏற்படும்.

தென்கிழக்கு ஆசியா,இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளில் கிரகண தாக்கம் இருப்பதால் இந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படும்.

ஜூலை மாதம் 22ஆம் தேதி முழுசூரிய கிரகணம் ஏற்பட இருக்கிறது. ஜனவரியில்ஏற்படுவதை விட அதிகமான தாக்கம் ஜூலையில் உண்டு.

பேரழிவை தடுக்க முடியாதா?

ஜோதிடர்களான நீங்கள் பேரழிவை சொல்ல முடியுமா? என வீண் வாதம்செய்யும் முட்டாள்கள் நிறைந்த உலகம் இது. இங்கே பேரழிவை பற்றி நான்சொல்ல காரணம் என்னை விளம்பரப்படுத்த அல்ல. ஜோதிடத்தில் என்ன தான் கண்டறிந்தாலும் அதை தவிர்க்க முடியாது என கூறுவதற்கு தான்.

ஜனவரி 26 முதல் ஜூலை 22ஆம் தேதிவரை இருக்கும் இடைபட்ட காலத்தில் ஏற்படும் பேரழிவுகளுக்கு நம்மை தயார் படுத்திக்கொள்வோம்.

உங்கள் ப்ரார்தனைகளை துவக்குங்கள். பேரழிவை ஓரளவேனும் குறைக்க ப்ரார்த்தனை செய்வோம்.








இறைவா எங்களை காப்பாற்று....

Sunday, January 18, 2009

ஜோதிட கல்வி - பகுதி I

ஜோதிடம் எனும் சாஸ்திரம் வேத சாஸ்திரத்தின் ஓர் அங்கம். ஜோதிடத்தை கண்டு பிடித்தது இன்னார் என சுட்டிக்காட்ட முடியாது. சாஸ்திரம் என்பது முற்றிலும் கண்டறியபட்ட மெஞ்ஞானம் என பொருள் கொள்ளலாம். ஜோதிடம் என்பதும் சாஸ்திரம் எனும் தலைப்பிற்கு கீழ் வரும் ஓர் மெஞ்ஞானமாகும்.

தனிஒரு மனிதனால் கண்டுபிடிக்கபட்ட எந்த ஒரு சித்தாந்தமும் விஞ்ஞானம் என்றே அழைக்கப்படும். சாஸ்த்திரங்கள் எல்லாம் யார் கண்டுபிடித்தார் என கூறப்படாமல் இருக்கும், காரணம் அவை இறையருளால் மனித இனத்திற்கு தரப்பட்டது என்பதே உண்மை.

வராக மிஹிரர், பராசரர் மற்றும் ஜெயமினி என்ற முனிவர்கள் கண்டுபிடிக்கவில்லையா என கேட்கலாம். அவர்கள் தெய்வீகம் எனும் நதி வழிந்தோடும் பகுதியின் கரையாக இருந்தார்கள். அதாவது ஜோதிட சாஸ்திரம் உலகுக்கு கொடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கபட்ட கருவிகள். சில முட்டாள்கள் ஜோதிடத்தின் வரலாறை சொல்லும் பொழுது “ஆட்டு இடையர்கள் வானத்தை ஆராய நிறைய நேரம் கிடைத்தது அதனால் வானசாஸ்திரத்தை கண்டறிந்து முதலில் அவர்களுக்கு பிடித்த ஆட்டை ராசியின் வடிவமாக கொடுத்தார்கள்” என்கிறார்கள். சிறிது சிந்தித்து பாருங்கள் ஆட்டு இடையர்கள் கண்டறிந்தார்கள் என்றால் இன்றைய ஆட்டு இடையர்கள் ஏன் ஜோதிடர்களாக இல்லாமல் , புதிய கண்டுபிடிப்பு செய்யாமல் வெறும் ஆட்டுக்காரர்களாகவே இருக்கிறார்கள்? விட்டால் ஏசு நாதர் ஆடு மேய்த்தார் அவர்தான் முதல் வானியல் நிபுணர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

ஜோதிடத்தின் வரலாற்றை பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாம் ஓய்வாக இருக்கும் சமயம் அதை பற்றி பேசுவோம். இப்பொழுது ஜோதிடம் பற்றி அடிப்படை விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.


கிரகங்களுக்கு உண்மையில் வேலை செய்யுமா?

உங்கள் நண்பர் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் என கொள்வோம். உடனடியாக அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி கோடீஸ்வரர் ஆக்க முடியுமா?
.
.
.
.
முடியாது...
அவரின் சாதாரண நிலையிலிருந்து கீழ் இறக்கி ஒன்றுக்கும் ஆகாதவராக பிச்சை எடுப்பவறாக மாற்ற முடியுமா?
.
.
.
.
.
அதுவும் முடியாது.

உணர்வு நிலையில் தொடர்பு கொண்ட, கண்களால் பார்த்து உணரக்கூடிய உங்கள் நண்பரை இது போல மாற்றம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பொழுது....

கண்களால் பார்க்க முடியாத.. உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட கிரகம் இதை எல்லாம் செய்கிறது என்கிறார்களே அது எப்படி?

சுக்கிரன் வந்தது கோடீஸ்வரன் ஆனார், சனி வந்தது காணாமல் போனார் என்கிறார்களே?

கிரகத்திற்கு உண்மையில் சுயமான சக்தி கிடையாது.


புரிகிறது ... வேறு ஏதோ இணைய தளத்திற்கு வந்துவிட்டோமா என முழிக்கிறீர்கள்.

கிரக சக்தி கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் ஜோதிடம் இல்லை, கிரக சக்தி இல்லை என சொல்ல முடியாது.

அலைபேசியை உதாரணமாக கொள்வோம். அலைபேசியில் அதன் அலைகள் கண்களுக்கு தெரிவதில்லை. நம்மை ஒருவர் அலைபேசியில் அழைத்தால் அது எந்த திக்கிலிருந்து வருகிறது என நம் கண்களில் தெரிவதில்லை. அதற்காக அலைபேசி என்பது பொய் என நாம் எண்ணுவதில்லை. அதுபோல தான் கிரக சக்தியும்.

கிரகத்திற்கு சக்தி கிடையாது என கூறினேன். ஆனால் சக்தியே கிடையாது என சொல்லவில்லை. கிரகம் தனித்து இயங்காது. ஆனால் நட்சத்திரம் எனும் மாபெரும் சக்தி அதன் பின்புலத்தில் வேலை செய்தால் தான் இயங்க முடியும்.





அலைபேசி எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய்தால் நட்சத்திரம் - கிரகம் - மனிதன் எப்படி இயங்குகிது என புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.


அலைபேசியில் ஒருவர் மற்றொருவருக்கு தொடர்பு கொள்கிறார் என்றால் முதலில் அந்த அலைகள் அருகில் இருக்கும் கோபுரத்திற்கு (TOWER) செல்லும் அங்கிருந்து அலைபேசி மாற்றிக்கு (Tele Exchange) செல்லும் பின்பு இதே செயல் நடந்து மற்ற அலைபேசிக்கு சென்றடையும்.

அது போலதான் நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் கிரகத்தினால் பிரதிபலிக்கப்பட்டு நமது தாய் கிரகமான பூமிக்கும் எதிரொளிக்கப்படுகிறது.

மனிதனும் மற்ற ஜீவராசிகளும் ஏன்.. அனைத்தும் இதனால் இயங்குகிறது.




எனவே நட்சத்திரம் இல்லாமல் கிரகங்களும், கிரகங்கள் இல்லாமல் நட்சத்திரமும் பூமிக்கு ஆற்றலை வழங்க முடியாது. இரண்டு விஷயங்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

இங்கு வானவியல் பற்றி பேசவேண்டும். வானவியல் (Astronamy) என்பது ஓர் விஞ்ஞான சித்தாந்தம். கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளி பற்றி ஆராயும் சித்தாந்தம்.

வானவியல் ஜோதிடத்தின் அடிப்படை என சொன்னாலும், முழுமையான வானவியல் நமக்கு பயன்படாது. கிரகங்களின் சுற்றுபாதை, சூரிய மண்டலத்தின் அமைப்பு இதுவெல்லாம் வானவியல் மூலம் நமக்கு கிடைக்குமே தவிர ஜோதிடத்தை பற்றி நாம் இங்கு பேசிய கிரக ஆற்றல் எனும் கருத்து வானவியலில் இல்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள வானவியல் கிரகங்கள் பார்ப்போம்.

1) சூரியன் 2) புதன் 3) சுக்கிரன் 4) பூமி 5) செவ்வாய் 6) குரு 7) சனி 8) யூரைனெஸ் 9 ) நெப்டியுன் 10) ப்ளூட்டோ

இதில் சூரியன் என்பது ஓர் நட்சத்திரம், மற்றவை அனைத்தும் கிரகம். இதில் ப்ளூட்டோ என்பது தற்சமயம் கிரகம் அல்ல என அறிவிக்கப்பட்டுவிட்டது.


ஜோதிட ரீதியான கிரகங்களை பார்ப்போம்.

1) சூரியன் 2) சந்திரன் 3) செவ்வாய் 4) புதன் 5) குரு 6) சுக்கிரன் 7)சனி 8) ராகு 9) கேது.

வானவியல் கிரகத்திலும் , ஜோதிட ரீதியான கிரகத்திலும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா?
ஜோதிட ரீதியான கிரகங்களில் பூமி என்பது இல்லை, ராகு கேது என்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.




இதற்கு காரணம் என்ன?

வானவியல் என்பது விண்வெளி பொருட்களை கொண்டு ஆய்வு செய்யும் ஓர் அறிவியல், ஜோதிடம் என்பது விண்வெளியில் இருக்கும் ஆற்றல் மண்டலங்களை பற்றி ஆய்வு செய்யும் ஓர் மெய்ஞ்ஞானம்.

நட்சத்திர மண்டலங்கள் மூலம் வெளிப்படும் ஆற்றல் ஆனது பூமிக்கு எந்த பகுதியிலிருந்து பிரதிபலிக்கபடுகிறதோ அந்த பகுதியை கணக்கில் கொண்டு ஆய்வு செய்வது ஜோதிடம். பூமி நாம் இருக்கும் இடம் ஆகையால் இங்கு வந்தடையும் ஆற்றலை தான் நாம் கணக்கிடுவோம், மாறாக பூமியை இதில் இணைக்க முடியாது.

ராகு கேது என்பது என்ன?

விண்ணில் எந்த புள்ளியில் நட்சத்திர ஆற்றல் பிரதிபலிக்கப்படுகிறதோ அப்புள்ளி நமக்கு மிகவும் முக்கியமானது. பூமியின் வட்டபாதையும், சந்திரனின் வட்டப்பாதையும் இணையும் இடத்தில் விண்கற்களோ, விண் தூசுக்களோ இல்லாமல் வெற்றிடமாக வெறுமையாக இருக்கும். இந்த புள்ளியில் ஆற்றல் அதிக அளவில் கடத்தப்படும். ( வெற்றிடத்தில் ஆற்றல் பரவும் என்பது விஞ்ஞான தத்துவமும் கூட)

ராகு-கேது புள்ளிகளில் பூமியின் நிழல் படிவதால் அதை சாயா கிரகம் ( நிழல் கிரகம்) எனவும் அழைக்கிறார்கள்.




ஜோதிட ரீதியான கிரகங்கள் எனும் பட்டியலை பார்த்தீர்களா? அதன் வரிசையை ஞாபகம் வைக்க எளிய வழி உண்டு. ஞாயிறு முதல் சனி கிழமை வரை மனதில் வரிசையாக சொல்லி அத்துடன் ராகு / கேதுவை இணைத்து கொண்டால் போதுமானது.

உலகின் அனைத்து காலண்டரிலும் கிழமை ஒன்றாக இருப்பதன் காரணம் புரிகிறதா?

கிரகத்தை பற்றி புரிந்து கொண்டோம். ராசி மண்டலத்தை பற்றி அடுத்த வகுப்பில் விளக்குகிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :

இன்றைய பாடத்தை பார்த்தோம். இதில் உங்களுக்கு ஓர் கேள்வி.

கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா? முடியும் என்பவர்கள் அதற்கு தக்க உதாரணத்தை பின்னூட்டம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாக வோ சொல்லுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்திற்கான சவால்...

-------------------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

[ இந்த பகுதியில் சின்ன சின்ன நகைச்சுவை வெளிவரும். கணமான கருத்துக்களை படித்து விட்டு புன்சிரிப்புடன் நிறைவு செய்வோமே....]

பண்பலை வரிசை [FM] தொகுப்பாளர்
ஜோதிடரே உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொல்லுங்க,போடறேன்...
ஜோதிடர் : “ நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்”-னு பாட்டு போடுங்க. இந்த பாட்டை என்கிட்ட ஜோசியம் பார்க்கறவங்களுக்கு டெடிகேட் பண்ணறேன்.

Wednesday, January 14, 2009

ஜோதிட கல்வி

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.


ஜோதிட கல்வியை வலைதளம் மூலம் கற்றுகொள்ளும் கல்வி பட்டறை இன்று முதல் துவங்குகிறது. ஜனவரியில் துவங்கும் என அறிவிப்பு வந்தவுடன் அனைவரும் ஆவலுடன் பின்னூட்டம் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எப்பொழுது என ஆவலாக கேட்டார்கள். ஜோதிடம் என்பதே காலதேவனின் கணக்கு என இருக்கும் பொழுது, கல்வியை துவக்கும் நேரம் நல்ல நேரமாக பார்த்து ஆரம்பிக்க வேண்டாமா?


இதோ தைமாதத்தின் முதல் நாளில் ஜோதிட பயிற்சியை துவக்கியிருக்கிறோம். சூரியன் மகரம் எனும் ராசிக்கு செல்லும் தருணம், வான சாஸ்திரத்திற்கும் ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது.



வேதிக் ஐ எனும் இந்த வலைதளத்தில் ஜோதிட கல்வி தேவைதானா?


ஜோதிட சாஸ்திரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வளைதளம் செயல்படுகிறது. ஜோதிடத்தை நிரூபணம் செய்யும் நோக்கமோ, நாங்கள்
சொல்லுவது தான் ஜோதிடம் எனும் கருத்தை திணிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல.

ஜோதிடத்தில் பல முறைகள், யுக்திகள் உண்டு. அதில் நாங்கள் விளக்கும் முறையை பற்றிய அறிவு இருந்தால் விளக்கத்தை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் பயன்படுத்தவும் ஏதுவாக இருக்கும்.

கிருஷ்ண மூர்த்தி பத்ததி எனும் உயர் நிலை ஜோதிடத்தை தெரிந்து கொள்வது எளிதான ஒன்று. இதை கற்றுகொடுப்பவர்களும், ஜோதிடத்தை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர்களும் கிருஷ்ண மூர்த்தி ஜோதிட முறையை சமூகத்திலிருந்து துடைத்து எறிய முயற்சி செய்கிறார்கள்.
.......காரணம் பல.


விஞ்ஞான ரீதியான மற்றும் எளிய முறையில் பயன்படுத்த கூடிய KP ஜோதிட முறையை கற்றுக்கொள்ள உங்களை அனைவரையும் வரவேற்கிறோம்.


உங்களுக்கு ஜோதிடம் கற்றுகொடுக்க என்ன தகுதி இருக்கிறது?


கடந்த பத்துவருடங்களாக ஆயிரத்துக்கும் மேம்பட்ட மாணவர்களுக்கு ஜோதிடம் கற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து வருடங்களுக்கு மேலாக
ஜோதிடத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டிய அனுபவம். சில ஜோதிட புத்தகங்களும், மாத பத்திரிகை மூலம் மக்களிடம் கருத்தாடிய அனுபவம் எங்களை ஜோதிடம் கற்றுக்கொடுக்கும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

வீடியோ மூலம் வெளிநாடுகளில் வாழும் மாணவர்களுக்கு கற்று கொடுத்து அவர்களுக்கு நேரடியாக கற்றுகொண்ட அனுபவத்தை அளித்துள்ளோம். பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு விவசாயம், பங்குசந்தை, ஆன்மீகம், வாழ்வியல் என அனைத்து துறையிலும் ஜோதிடத்தை பயன்படுத்திய அனுபவம் உண்டு.

.......மேலும் பல.


முன்பே ஒருவர் ஜோதிட பாடம் நடத்துகிறாரே?


திரு.சுப்பையா அவரது வலைதளத்தில் ஜோதிட பாடம் நடத்தி வருகிறார். அதில் நாங்களும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்வதுண்டு. அவரின் பணிக்கு எங்கள் பாராட்டுக்கள்.

தனது ஓய்வு நேரத்தில் தான் படித்தவைகளை பகிர்ந்து கொள்கிறார், ஆனால் இந்த தளம் கே.பி முறையை பற்றி பேச கூடியது - ஜோதிடம் எனும் பொதுவான கருத்தை பற்றி அல்ல. அடிப்படை நிலையில் ஜோதிடம் ஒரு போல இருந்தாலும் பயன்பாடுகளில் வேறுபடுகிறது.

கே.பி முறையில் அப்படி என்ன விஷேஷம்?

  • மேலோட்டமாக இல்லாமல் கிரகங்கள் நட்சத்திர ரீதியாக ஆராயும் முறை.
  • டிகிரி முறையில் ஜாதகங்கள் துல்லியமாக கணிக்கப்படுவதால் பலன்களும் துல்லியமானதாக அமையும்.
  • கே பி முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் ஒருவருக்கு இருப்பது போல மற்றொருவருக்கு அமையாது.
  • (வெறும் ராசி நவாம்ச வைத்து பார்க்கப்படும் ஜோதிடம் 480 நபர்களுக்கு ஒன்று போலவே இருக்கும். இது போன்ற பொதுவான ஜோதிடம் அல்ல கே.பி முறை)
  • 27 நட்சத்திரங்களை பகுத்து மிகவும் அதிக நுண்ணிய பிரிவுகளாக 249 உட்பிரிவில் ஜாதகம் கணிக்கலாம்.
  • ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறிப்பட்ட தேதியில் நடக்கும் என கூறும் அளவிற்கு துல்லியமாக கூற முடியும்.
  • பரிகாரங்கள், தோஷங்கள் போன்ற தகிடுதத்தங்கள் இல்லை.
துல்லியமான, தூய்மையான மற்றும் விஞ்ஞான ரீதியான கே.பி முறையை கற்றுக்கொள்ள உங்களை அழைக்கிறோம்.


பின்குறிப்பு :

இக்கட்டுரையில் “எங்கள் -நாங்கள்” என குறிப்பிடப்படுவதால் பலர் இணைந்து எழுதுகிறார்களோ? என சந்தேகம் வேண்டாம். ஜோதிடம் என்பது என் குல சொத்து அல்ல, நான் கண்டு பிடித்ததும் அல்ல. பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் உலகக்கு அளிக்கப்பட இந்த அற்புதத்தை “நான் -எனது” என சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது? அதனால் நாங்கள் என்பது ரிஷிபுருஷர்கள் முதல் ஸ்வாமி ஓம்கார் வரை என அனைவரையும் குறிக்கும்.


இத்தளத்தில் வரும் ஜோதிட கட்டுரைகள் புத்தக வடிவில் வர இருப்பதால், ஜோதிட கல்வி சார்ந்த கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.

Saturday, January 10, 2009

ஜின்ஜினகாலஜி - ஓர் தொலைகாட்சி நிகழ்ச்சி

முன்னுரை :

நவநாகரீக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அலாதியானது. எத்தனையோ ஆலஜிக்களுக்கு அவர்களின் நம்பிக்கை கரங்கள் நீட்டுகிறார்கள்.ஆலஜி என்றால் என்ன என புரியவில்லையா? அத்தாங்க நியூமாராலஜி, நேமாலஜி, கிராபாலஜி என எத்தனையோ கருமாந்திரங்கள் இருக்கிறதே.

(எனக்கு தெரிந்த ஒருவர் இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் அவரின் ECG யை பார்த்து டாக்டர் கூட 45 டிகிரியில் உங்க ஹார்ட் பீட் வேலைசெய்யனும் சொல்ல , தலை தெரிக்க ஓடிவந்திருக்கிறார் ;) )




டீவியை ஆன் செய்தால் போதும் வாடகை கோட் சூட் அணிந்து கொண்டு இவர்கள் செய்யும் காமெடி தாங்கவில்லை. ஒருத்தர் கல்லை போட சொல்லுகிறார், இன்னொருத்தர் பெயர் மாற்ற சொல்லுகிறார், இன்னொருவரோ கையில் எதோ " T " போல வைத்து கொண்டு ஆட்டுகிறார். இதை விட கொடுமை ஒருத்தர் மணிபர்ஸை எங்கே வைக்க வேண்டும் என சொல்லுகிறார். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் this is bit too much...

இந்த அனைத்து ஆலஜிக்கலையும் ஓர் ஆய்வு செய்து சில கருத்துக்களை சேகரித்துள்ளேன். இந்த உட்டாலக்கடி ஆய்வு இவர்களில் யார் சிறந்தவர்கள் என சொல்லுவதற்கு இல்லை. இவர்களுக்கு போட்டியாக நானும் ஓர் ஆலஜியை கண்டுபிடித்துள்ளேன். அதை இந்த மனித சமுதாயம் பின்பற்றி பயன்பெறுமானால் , எனது கண்டு பிடிப்புக்கு நோபல் பரிசு கிடைக்கலாம். பிறகு மனித சமுதாயம் என்ன ஆகும்னு மட்டும் கேட்காதீங்க. அதை நான் இன்னும் ஆய்வு செய்யலை.



சரி நிகழ்ச்சிக்கு போகலாமா?

ஜின்ஜினகாலஜி

பல கோவில்கள், சித்தர்களின் படத்துடன் பெயர் பட்டியல் போட்டுவிட்டு நிகழ்ச்சி துவங்குகிறது.

ஜின்ஜினகாலஜி என்னும் புதிய முறையை நீங்கள் யாரும் கேள்விபட்டிருக்க முடியாது. காரணம் அது நான் கண்டுபிடித்த முறை.

உலகிலேய முதல் ஜின்ஜினகாலஜி மாமேதை, ஜின்ஜினகாலஜியின் தந்தை என என்னை கூப்பிடுவாங்க.

ஜின்ஜினகாலஜி-னா என்னனு கேட்கறிங்க தானே?
என்ன அவசரம்? பொருமையா இருந்து அழிஞ்சு போங்களேன்.

ஜின்ஜினகாலஜினா ஒருவரோட பெயரை மாற்றாமல் அவரின் பெயரில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றி அவரை உலக புகழ் அடையவைக்கும் உன்னதமான விஞ்ஞானம் தான் ஜின்ஜினகாலஜி .

சில எழுத்துக்களை மட்டும் மாற்றினால் உலக புகழ் அடையலாமா உங்களுக்கு சந்தேகம் வந்தால் நீங்க வேற சானலை பாருங்கள். என்னய்யா என்னையா இம்சை பண்ணுறீங்க?


எனனோட 60 வருட ஆராய்ச்சியில் பெயரில் வட மொழி எழுத்துக்கள் இருந்தால் அவர்கள் பிரபலமானவங்களா இருப்பங்கனு கண்டுபிடிச்சிருக்கேன்.

(60வருட ஆராய்ச்சியா? உங்களுக்கு வயசு முப்பதோ நாற்பதோ இருக்ற மாதிரி தெரியுதே சந்தேகமா? நான் ஓவர்டை செஞ்சேன். இதையெல்லம் கண்டுக்க பிடாது....)

உதாரணமா உங்க பெயர் செந்தில் குமாருனு வெச்சுக்குங்க. உங்க பெயரை “ஷெந்தில்” குமாருனு மாத்திக்கனும் அவ்வளவுதான். அதுக்கப்பறம் பாருங்க உங்க வாழ்க்கையில் ஜின்ஜினகாலஜி எப்படியல்லாம் மாத்த போகுதுனு தெரியும்.

ஜ வரிசைனு சொல்ல கூடிய ஜ,ஜா,ஜி,ஜு,ஜெ,ஜே. அப்பறம் ஸ்ரீ, ஹ, ஷ இருக்கற வட மொழி சொல்லை எதாவதது ஒன்னை உங்க பேரு கூட சேத்திக்குங்க.

அப்புறம் உங்களை சாதரண மனிதனா இல்லாமல் உலக புகழ் மனிதனா தான் பார்க்க முடியும்.

என்னிடம் தொலைபேசியில் கருத்துகேட்டு பெயர் மாத்தினவங்க அட்ரஸ் இல்லாம போயிருக்காங்க. தப்பா நினைச்சுக்காதீங்க, ஒரு அட்ரஸ்லிருந்து இன்னொரு அட்ரஸுக்கு மாறி போயிருக்காங்க. குடிசைலிருந்து பங்களாவுக்கு மாற வேண்டாமா?

இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலைனு நினைக்கறேன்.. இதோ சில பிரபலங்களின் பெயர்களை உங்களுக்காக சொல்லறேன், அதில் இருக்கும் வடமொழி எழுத்தால அவங்க எப்படி உச்சத்துக்கு போனாங்கனு உங்களுக்கு தெரியும்.
(”உச்சத்துக்கு” என வாசிக்கவும் ;) )



அரசியலில் பிரபலமானவங்க பெயரை எடுத்துக்கலாம், எம்.ஜியார், காமரார், ராஜாஜி இவங்க எல்லாம் எப்படி பெரும்தலைவர்கள் ஆனார்கள் தெரியுமா? எல்லாம் ஜின்ஜினகாலஜி தான்.

சினிமா நடிகர்கள் எடுத்துக்குங்க..(அதுக்காக அவங்களை தூக்க வேண்டாம்).

அந்தகாலத்துல சிவாஜி கணேசன் முதல்,
ஜினி, கமல் ஹாசன் -னு பயணப்பட்டு அஜித், விய் வரைக்கு ஜின்ஜினகாலஜி இல்லாமல் யாரும் பிரபலமானதா சரித்தரமே இல்லை.

இருங்க மேற்கொண்டு இந்த கருத்தை சொல்லறதுக்கு முன்னாடி ஒரு நேயர் தொலைபேசியில் அழைக்கிறார் அவர்கிட்ட பேசுவோம்..

நேயர் : சார் நான் ஈரோட்டிலிருந்து ராமசாமி பேசறேன்...

ஜின்ஜினகாலஜிஸ்ட் : ஐயா மன்னிச்சுகுங்க....நான் இல்லீங்க , ஏதோ பிளைப்புகாக இதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்னுங்க.

நேயர் : சார் என்ன சொல்லறீங்க? நான் ராமசாமி சாதாரண விவசாயி.

ஜின்ஜினகாலஜிஸ்ட் : மனதுக்குள் (அட கண்றாவி பிடிச்சவனே, ஊர் பேரோட உன் பெயரை சொல்லி ஏண்டா கிலி எற்படுத்தறீங்க..) அது ஏதோ கிராஸ்டாக். உங்களுக்கு என்ன பிரச்சனைனு சொன்னீங்க ?

நேயர் : என் பொண்ணுக்கு கல்யாணம் தள்ளி போயிக்கிட்டே இருக்கு. கடன் பிரச்சனை வேற. இதுக்கு என்ன தீர்வுங்க?

ஜின்ஜினகாலஜிஸ்ட் : உங்க பேரு ராம சாமினு இருக்கறது தான் பிரச்சனை, இனிமேல் உங்க பெயரை “ ராம ஷாமி”-னு பேருவையுங்க.

நேயர் : இப்படி பேரு மாத்தினா கடன் பிரச்சனை தீருமா?

ஜின்ஜினகாலஜிஸ்டட் : ராமசாமினு பேருல தான கடன் வாங்கிருப்பீங்க. ராம ஷாமினு மாத்திக்கிட்டா இந்த புது பெயரில் இன்னும் கடன் வாங்கி பழைய கடனை அடைக்கலாம்.

நேயர் : அப்போ புது கடனை என்ன செய்யறதுங்க ?
...... டாங்..... டாங் ....(தொலை பேசி துண்டிக்கப்படுகிறது)

விளம்பர இடைவேளை...

உலகின் முதல் ஜின்ஜினகாலஜிஸ்ட் சந்திக்க வேண்டுமா?

ஜின்ஜினகாலஜிஸ்ட் விஜய அட்டவணை இதோ..

அண்டார்டிக்கா விஜயம்... பிரதி மாதம்...26,27
ஆர்டிக் விஜயம் பிரதி மாதம் 15,30
சகாரா பாலைவன விஜயம் பிரதி மாதம் 29,30 ( பிப்ரவரியில் வரமாட்டாரோ? )

நிகழ்ச்சி தொடருகிறது....


சினிமா நடிகர்களை பத்தி சொன்னேன். நடிகைகளுக்கும் ஜின்ஜினகாலஜி ”அதிகமா” செயல்படுது.
சரோஜாதேவி முதல் ஸ்ரீ தேவி, ஸ்ரீப்ரியா கடந்து இப்போ ஜோதிகா, திரீஷா,ஜெனிலியா வரைக்கும் ஜின்ஜினகாலஜி வர்கவுட் ஆனவங்க பட்டியல் நீளம்.

அப்போ வட மொழி சொல் இல்லதவங்களும் பிரபலம் ஆயிருக்கங்களேனு. ...
உங்களுக்கு இருக்கிற கொஞ்சூண்டு புத்திசாலிதனதை வைச்சுக்கிட்டு நீங்க என்கிட்ட ஒரு கேள்வி கேட்கலாம்.
இதுக்கே உங்களுக்கு ஜின்ஜினகாலஜி வேலை செய்யாது. இதோ என்னோட பதில்...
ஒன்னு அவங்க பிறந்தப்ப வைச்ச பெயரில் வடமொழி சொல் இருக்கும். அதனால ஜின்ஜினகாலஜி பிறக்கும் போதே வர்கவுட் ஆயிடும்.

உதாரணமா சிவாஜி ராவ் ரஜினி யானதால ஜின்ஜினகாலஜி ரெண்டு முறை அவருக்கு வர்க் ஆயிருக்கும்.ராஜாஜி பாருங்க அதே தான் காரணம். பெயரில் இரண்டு முறை ஜின்ஜினகாலஜி செஞ்சா அதிக புகழ் பெறலாம்.

மன்மோகன் சிங், சோனியா காந்திக்கு ஜின்ஜினகாலஜி பிரகாரம் பெயர் இல்லைனு நீங்க கேட்கலாம். அவங்க வட நாட்டில் இருக்கிறதால வட மொழி தேவை இல்லை. மேலும் அவங்களை எல்லோரும் மன்மோகன் “ஜீ”, சோனியா ‘ஜீ” னுதான் கூப்பிடுவாங்க. அதனால வட நாட்டுக்காரங்களுக்கு ஜின்ஜினகாலஜி தன்னால அமைஞ்சுடும்.

இப்போ தெரியுதா? சில பிரபலங்கள் பெயருக்கு முன்னாடி ஏன் ...”விய”னு சேர்த்திருக்காங்கனு?

எழுத்தாளர்களை கூட பாருங்க சுஜாதா, ஜெயமோகன்-னு தங்கள் எழுத்தில் புகழ் பெற்றவர்களை காட்டிலும் ஜின்ஜினகாலஜி மூலமா பிரபலமானவங்கதான் அதிகம்.

பிளாக்கு பிளாக்கு-னு ஏதோ இண்டர்நெட்டில் மக்கள் எழுதறாங்க. அதுல கூட பார்த்திங்கண்ணா.. அதிக வாசகர்கள் கொண்ட பிரபல பதிவர்கள் இருவர்களோட இயற்பெயர்கள் “கிருஷ்ணா”-னு இருக்கு அதனால ஜின்ஜினகாலஜி மூலமா பிரபலம் ஆயிட்டாங்க.


அதனால உலக மக்களே உங்கள் வாழ்க்கை வளமாக்கனும்னா ஜின்ஜினகாலஜி மேல நம்பிக்கை வையுங்க.

உங்க பெயரின் சில எழுத்துக்களை மாற்றி அமைத்தாலே போதும் ஜின்ஜினகாலஜி உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..

உங்கள் வேலை நேரமா பார்த்து, முதலாளிக்கு உழைக்காமல் ஜின்ஜினகாலஜி பற்றி சிந்தித்து எனக்கு தொலை பேசியில் தொடர்புகொள்ளவும்.

அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்...


நிகழ்ச்சி ஆக்கம் , ஊக்கம், தாக்கம்

ஜின்ஜினகாலஜிஸ்ட்
ஸ்”வாமி ஓம்கார்


டிஸ்கி : இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அனைவர் மனதையும் பண்படுத்த எழுதபட்டது.

Thursday, January 8, 2009

எந்த கடவுளை வணங்குவது ?

- வேதம் காட்டும் வழி [பாடு]

சனாதான தர்மம் என அழைக்கப்படும் நமது பாரத கலாச்சாரத்தில் வழிபாடு என்பது ஓர் முக்கியமான அங்கமாக இருக்கிறது. மனித குலம் தோன்றிய முதலே வழிபாடு என்பதும் பிறந்தது எனலாம். கற்கால மனிதனாக இருந்த முதல் மனிதன், இயற்கை பொருட்களை வழிபடத் துவங்கினான். தனக்கு புரியாத அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியை வணங்கினான் என சொல்லலாம். உதாரணமாக மின்னல், இடி, சூரியன் இவை அனைத்தும் அவனுக்கு அதிசயமாகவும், அச்சத்தை தூண்டுபவையாகவும் இருந்தன. அதனால் அவற்றை வழிபட ஆரம்பித்தான்.


கற்கால மனித நாகரீகத்தின் செயல் தற்சமயத்திலும் கூட ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் இருப்பதை காண முடிகிறது. காட்டில் சிங்கம் மற்றும் பிற மாமிசம் உண்ணும் விலங்குகள் கொன்று வீசிய மிருக உடல்கள் காய்ந்து அதில் உள்ள எலும்புகள் மட்டும் எஞ்சி இருக்கும். மழை வரும் நேரத்தில் ஏற்படும் மின்னலை வழிபடும் இந்த பழங்குடியினர், மின்னல் விழும் திசையை நோக்கி ஓடுவார்கள். அங்கே குவிந்துகிடக்கும் எலும்புகளை பார்த்து மின்னல்தான் பூமியில் குவிந்துகிடப்பதாக எண்ணி மிருக எலும்பை எடுத்து வந்து வழிபட்டனர். இவ்வாறு இருந்த வழிபாடு மெல்ல முன்னேற்றம் அடைந்தது.

மனித நாகரீகம் வழிபாட்டு முறையை ஏற்படுத்த இருவேறு காரணம் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலில் தன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை வணங்கும் தன்மை. இரண்டாவதாக உலக நிகழ்வுகளின் தன்மையை புரிந்துகொள்ளாததனால் ஏற்படும் அச்சம். இந்த இரு காரணமும் மனிதன் உருவாவதற்கு முன்பே அவன் மிருகமாக இருந்த காலத்திலேயே ஏற்பட்டது எனலாம்.

ஓர் மிருகம் தனது சக்தியைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த மிருகத்தை கண்டால் தாழ்ந்து மிகவும் அமைதியாக செல்வதை காணலாம். அதுபோல அச்சம் கொண்டு ஏற்பட்ட வழிபாடு மிருக நிலையில் இருக்கும் பொழுதே தோன்றியது என கூறலாம்.

மனித சமூகம் பழங்காலம் தொட்டுஅச்சத்தினாலும், ஆச்சர்யத்தினாலும் வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வரும் நேரத்தில் பாரத தேசம் தனது அறிவால் வழிபாட்டு முறைகளை கண்டறிந்து ஆழமாக வேர்விட்டு விருட்சமாக உயர்ந்தது.

பரந்து விரிந்த இந்த தேசம் மொழியால் வேறுபடாலும் தனது கலாச்சாரத்தால் ஒன்றுபட்டு இருக்கிறது என கூறுவார்கள். உண்மையில் கலாச்சாரத்தினால் என்பதைக் காட்டிலும் வழிபாட்டு முறையினால் ஒன்றுபட்டு இருக்கிறது என கூறலாம். வட இந்தியாவின் வடக்கு பகுதியில் வைணவதேவி என சக்தியை வழிபடும் மக்கள் தென் பகுதியின் தென்முனையில் கன்யாகுமரி என சக்தியை வழிபடுகிறர்கள். சிவ, விஷ்ணு வழிபாடு எங்கும் காணப்படும் ஒன்றாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது பாரத தேசத்தில் மனிதன் வழிபாட்டு முறையை ஒன்று போலவே வைத்திருந்தான் என்றும், அனைத்து வழிபாட்டு முறைக்கும் ஏதோ ஒரு கருத்து பொதுவாக இருந்திருக்க வேண்டும் என்றும் சிந்திக்க முடிகிறது.

கணக்கற்ற கோவில்கள் ஒவ்வொன்றிலும் பல கடவுள் உருவங்கள், அவற்றிற்கு காரண கதைகள், தல புராணங்கள் என பாரத தேச கோவில்கள் பற்றி ஆய்வு செய்தால் அதை வெளியிடும் புத்தகத்தின் பக்க அளவு பிரமாண்டமாக இருக்கும்.நமது சானாதன தர்மத்தின் உள்ளார்ந்த கருத்துக்கள் பற்றிய அறிவு பரவலாக அனைவரிடமும் குறைவு என கூறலாம். இதனால் நவ நாகரீகத்தில் இருக்கும் மக்கள் கோவிலுக்கு செல்வதையும், வழிபடுவதையும் பிற்போக்கான மூட நம்பிக்கையான எண்ணமாக காண்கின்றனர். வழிபாட்டு முறையில் அனைத்து பகுதிகளையும் தொட்ட ஓர் சமுதாயம் நமது பாரத சமுதாயம் என கூறமுடியும்.

எங்கும் வியாபித்து இருப்பவனின் தன்மை சில பொருட்களில் வெளிப்படுவதால், எல்லையற்ற இறை வனை அந்த பொருட்கள் மூலம் வழிபட்டனர். நமது வழிபாட்டு முறையில் உள்ள தத்துவத்தை மேலோட்டமாகப் பார்க்கும் வெளிநாட்டினர் பாரத மக்கள் உருவ வழிபாடு செய்பவர்கள் என எண்ணுங்கள்.

உண்மையில் வேத சாஸ்திரத்தில் ஒரு இடத்தில் கூட கடவுளின் உருவ நிலை விளக்கப்படவில்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் உருவநிலை விளக்கப்படுவதற்கான காரணம் இறைவன் அதில் ஓர் கதாபத்திரமாக வருவதாலும் , பாமர மக்கள் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கவும் உருவாக்கப்பட்டது.

வேத சாஸ்திரத்தில் விளக்கப்பட்ட இறைநிலையை சற்று தெளிவாக காண்போம். அனைவராலும் பயன்படுத்தபடும் காயத்ரி மந்திரம் ரிக், யஜூர், சாம வேத்தில் காணப்படுகிறது. நான்கில் மூன்று வேதங்களிலும் காணப்படும் மந்திரங்களில் காயத்ரியும் ஒன்று. இந்த மந்திரத்தின் பொருளை எளிமையாக கூறவேண்டும் என்றால் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை ஒளிமயமான ஆற்றலை வணங்குகிறேன். இதில் குறிப்பிட்ட ஒளி என்னும் சொல் வெளிச்சத்தை குறிப்பதில்லை. ஒளிர்கின்ற மேல் நிலையை குறிக்கும்.

ரிக், யஜூர் வேதத்தின் சாரங்களான உபநிசத்துக்களில் 'தத்வமஸி','அஹம் பிரம்மாஸ்மி' எனும் இரு வாசகம் புகழ்பெற்றது. "நீயே அது" "உன் உள் பரம்பொருள் உறைகிறது" என்பதே இதன் விளக்கம். வேறு எந்த சாஸ்திரத்திலும் மனித நிலையில் கடவுள் தன்மை உண்டு என கூறப்பட்டது இல்லை. "நீயே அது" என பல விளக்கங்கள் உண்டு. இந்த ஒரு வாசகத்தை கொண்டு பல மணிநேரம் பிரசங்கம் நிகழ்த்தும் அளவுக்கு விஷயம் இதில் புதைந்து கிடக்கிறது.

வேத காலத்திற்கு முன்பு நமது கலாச்சாரத்தில் திகழ்ந்த சித்தாந்தம் சாங்கிய சித்தாந்தம். கபில முனிவர் இதை வரையறுத்தார் என கூறப்படுகிறது. பாரத கலாச்சாரத்தில் தோன்றிய முதல் சித்தாந்தம் என சாங்கியம் புகழப்படுகிறது. சாங்கிய தத்துவத்தில் "இறைவன்" எனும் கொள்கை இல்லை என்பதே ஆச்சர்யம் ஊட்டும் , அதிர்ச்சி கொள்ளச் செய்யும் விஷயம்.

இந்த உலகில்[ஜெகத்] நீ மட்டுமே இருக்கிறாய், உன்னை தவிர அன்னியமாக வேறு எதுவும் இல்லை. நீயே அனைத்திற்கும் கிரியா சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும் இருக்கிறாய். நீ இயற்கையின் ஓர் பிரிவு எனவே நீயே இயற்கை என மிகவும் உயரிய சித்தாந்தம் கொண்டது சாங்கிய தத்துவம். இங்கே நாம் ஒன்று கவனிக்க வேண்டும். மனிதன் ஓர் கண்டுபிடிப்பை கண்டறிகிறான் என்றால், முதலில் அதை முழுமையற்ற நிலையில் கண்டறிவான். பின்பு சிறிது சிறிதாக மேம்படுத்துவான். உதாரணமாக தொலைபேசியை கண்டுபிடிக்கும் பொழுது பெரிய அளவில் அதிக சிக்கலுடன் இருந்தது, இந்த குறைகளை தீர்த்து இப்பொழுது கைபேசியை பயன்படுத்துகிறோம். ஆகவே மனித கண்டுபிடிப்பில் மேம்பட்ட தன்மை கடைசி நிலையிலேயே வர வாய்ப்பு உண்டு. கண்டுபிடித்தது முதலே மேம்பட்ட நிலை வர வாய்ப்பு இல்லை. ஆனால் சாங்கிய தத்துவம் என்பது எடுத்தவுடன் மாபெறும் உயர்நிலையை அடைந்தது என கூறலாம். இக்கருத்தை கொண்டு ஆராய்ந்தால் இந்த உயர் சித்தாந்தம் மனிதனால் உருவாக்கப் பட்டது தானா? என கேள்வி எழுகிறது.

சராசரி மனிதன் சாங்கிய தத்துவத்தை உணர முடியாது. பல குழப்பங்களும், விரக்தியும் அடைய நேரிடும். இதனால் கபிலர் காலத்திற்கு பின்பு வந்தவர்கள் கடவுள் தன்மையை இத்துடன் இணைத்து எளிமைப்படுத்தினார்கள். இதனால்சாங்கிய மதம் தனது உருவை இழந்து பல்வேறு மதங்களாக பாரததில் உருவெடுத்தது. பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற எண்ணற்ற தத்துவங்கள் சாங்கிய சித்தாந்தத்தின் பல பரிணாமங்கள் எனலாம். முன்பு குறிப்பிட்டது போல நமது பாரதத்தில் சித்தாந்தம், முதலில் தோன்றும் பொழுதே உயர்நிலையில் [Advanced stage] இருப்பதாக கொண்டால் அதற்கு பின்பு அந்த உயர்நிலை மேம்பட பரிமாணமடைந்தால் எவ்வளவு உயர்நிலை பெற்றிருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

சாங்கியம் துவங்கி அனைத்து சித்தாந்தங்களிலும் மனித நிலை திரிகுணங்களில் இருக்கிறது என விளக்கப்படுகிறது. சாத்வ, ரஜஸ், தமஸ் எனும் இந்த முக்குணங்கள் நமது இயக்கநிலைக்கு காரணமாக இருக்கிறது. இந்த முக்குணமற்ற நிலை இறை நிலை என அழைக்கப்படுகிறது. இவற்றை மனிதர்கள் சராசரியான நிலையில் புரிந்துகொள்ள முடியாது என்பதால் தான், எளிமையான முறையில் பல மதங்களும் சித்தாந்தமும் நிலவுகிறது.

"தத்வமஸி" எனும் மஹா வாக்கியம், 'நீ அதுவே' என கூறுவதாக சொன்னேன். சிறிது சிந்தித்து பாருங்கள் உங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்றால் அது சிறிது சிரமம் தான். கேட்கும் பொழுது புரிந்தது போல இருந்தாலும் உணர்வு நிலையில் இதை புரிந்துகொள்ள முடியாது. இந்த மஹாவாக்கியம் மனிதனை பொறுத்து மாறுபடுகிறது.

பிரம்மா தத்வமஸி எனும் வாக்கியத்தின் பொருளை தேவருக்கும், அசுரருக்கும் போதித்தார். தேவர்களுக்கு ஒரே குழப்பம். அது எப்படி நான் கடவுளாக முடியும் ? மீண்டும் பிரம்மாவிடம் வந்து விளக்கம் கேட்டனர். ஆனால் அசுரர்கள் தாங்களே கடவுள் என்ற எண்ணத்துடன் ஆணவ மிகுதியால் அழிவு செயலை துவங்கினார்கள். இந்த கதை மூலம் விளக்கப்படுவது யாதெனில் அஹம்பாவம் மற்றும் கீழ்குணம் கொண்ட மனிதனால் முழுமுதல் உண்மையான வேத கருத்துக்கள் புரியாது. எனவே அகம்பாவம் குறைய பிற வழிமுறைகளை பின்பற்றி தெளிவுற்றவுடன் 'சத்' தரிசனம் [உண்மை உணர்தல்] கிடைத்தால் மேம்பட்ட நிலை யை அடையலாம். இல்லையேல் மனிதன் அசுர நிலையை அடைய வழிவகுக்கும். நமது கோவில்கள் அதன் அமைப்பு மனித உடலை அடிப்படையாக கொண்டது. முதலில் கடவுளின் இடமாக கருதி வழிபட துவங்கும் மனிதன் இறுதியில் தன்னைத்தானே வழிபடுவதாக உணருவான். அங்கு மஹா வாக்கியம் 'தத்வமஸி' உணரப்படும்.


ஆகம சாஸ்திரம் கோவில் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் அமைப்பு செயல்படும் தன்மை ஆகியவற்றை விளக்குகிறது. நமது உடலில் உள்ள உறுப்புகள், நவ துவாரம், ஐந்து விதமான ப்ராணன், பஞ்ச கோசம், ஐம்புலன்கள் என இதன் அடிப்படையிலேயே கோவில்கள் அமைக்கப்படுகிறது.

நவ கோபுரங்கள் மனித உடலில் நவ துவாரத்தையும் அவனது மூளை மற்றும் சித்ராகாசம் என கூறப்படும் புருவ மத்தியப்பகுதி கருவறையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. நமது வழிபாட்டு முறைகள் மூன்று முக்கிய பிரிவுகளை கொண்டது அவை உருவம், அருவம் மற்றும் அருஉருவம். உருவநிலை இறைவழிபாடு நமக்கு தெரிந்த ஒரு விஷயம் தான். பெருமாள், முருகன், அம்பாள் என மனித உருவில் அவர்களை வழிபடுகிறோம். இதற்கு உருவ வழிபாடு என பொருள்.

அருவம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. இல்லாத ஒரு விஷயத்திற்கு எப்படி விளக்கம் கூற முடியும் ? அருஉருவம் என்பது அருவ நிலையில் இருக்கும் உருவ அமைப்பு. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 'உருஅருவம்' என கூறாமல் அருஉருவம் என்றே வழங்கப்படும் தன்மை. அருவம் முதலில் இருக்க உருவம் பின்பு வருகிறது. இதற்கு சிவலிங்க ரூபம் ஓர் உதாரணம். சுயம்பு நிலை விக்ரஹங்கள், மஞ்சள் பிள்ளையார் என அனைத்திலும் அருஉருவ நிலை உண்டு. சராசரி மனிதன் படிப்படியாக அருவநிலை வழிபாட்டை அடைய உருவம், அருஉருவம் என அமைப்பை ஏற்படுத்தினார்கள். மூன்று வகையான வழிபாட்டு முறை மூன்று குண ரீதியாகவும் அமைகிறது. ஓர் சிறு குழந்தையை அழைத்து அருவ நிலை வழிபாட்டை விளக்கினால் அக்குழந்தை புரிந்துகொள்ள முடியாது. மாறாக அக்குழந்தைக்கு மன அழுத்தம் உருவாகும். இன்னும் எளிமையாக சொன்னால் குரங்கை நினைக்காமல் மந்திரம் சொல்லும் கதையாக மாறிவிடும்.

நமது உடலில் 72,000 நாடிகள் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த 72,000 நாடிகளில் மூன்று முக்கிய நாடிகள் மனிதன் உயர்நிலைக்கு செல்லவும், கர்மங்கள் செய்யவும் உதவுகிறது. இடா நாடி, பிங்கள நாடி மற்றும் சுழுமுனை என தமிழில் கூறப்படும் இந்த நாடிகள் மனித செயலை தீர்மானிக்கிறது. எனவே இந்த மூன்று தன்மையை உணர்த்தும் நோக்கில் உருவ வழிபாடு அமைகிறது. இவற்றை புரிந்துகொள்ள உருவ நிலை விக்ரஹங்கள் எவ்வாறு மூன்று தன்மை பெறுகிறது என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இறைநிலை ---------------------இடா--------------------- சுழுமுனை---------------- பிங்கலை

பெருமாள் --------------------- பூதேவி ---------------------ஸ்ரீ விஷ்ணு----------------- ஸ்ரீ தேவி
முருகன்------------------------- வள்ளி ---------------------முருகன் ---------------------தெய்வானை
விநாயகர்---------------------- சித்தி ------------------------விநாயகர் --------------------புத்தி
ஸ்ரீ ராமர் ------------------------லஷ்மணர் -----------------ஸ்ரீ ராமர்---------------------- சீதாதேவி
ஜெகந்நாதர் -------------------பலராமர் --------------------ஸ்ரீ கிருஷ்ணர் -------------- சுபத்ரா
சிவன் ---------------------------கங்கை ---------------------சிவன் --------------------------பார்வதி
ஸ்ரீகிருஷ்ணர் ----------------- ருக்மணி -------------------ஸ்ரீ கிருஷ்ணர் ---------------பாமா

நாடிகளின் தன்மை சராசரி மனிதனுக்கு புரிவதில்லை. அவர்கள் இறைவனுக்கு இரு மனைவிகள் என தவறாக பொருள் கொள்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கருவறை 72,000 பொன் ஓடுகளால் அமைக்கப்பட்டு, மூன்று முக்கிய நாடிகளையும் பிரதிபலிக்கும் வண்ணமும் உருவாக்கப்பட்டுள்ளது.


ஆழ்ந்து சிந்திதோமானால் நமது ஒவ்வொரு செயலும் அர்த்தம் கொண்டதாக அமைகிறது. ஐம்புலன்களும் செறிவு பெற்றால் மேம்பாடு அடைந்து இறைநிலை உணரலாம் எனும் தத்துவத்தின் அடைப்படையில் கோயிலில் உள்ள செயல்கள் அமைந்துள்ளது. ஐம்புலன் செயல்படும் தன்மை கோவிலில் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என காண்போம்.

உறுப்பு ------------------செயல்கோவில் -----------------சம்பிரதாயம்
காது ---------------------ஓசை --------------------------------மணிஓசை
மூக்கு -------------------நுகரும் தன்மை ------------------சுகந்த சாம்ராணி - சந்தனம்
வாய் ---------------------ருசி --------------------------------- பிரசாதம், பழங்கள்
தோல் ------------------தொடு உணர்வு ---------------------கற்பூர ஆரத்தி, நமஸ்காரம்
கண் ---------------------பார்வை -------------------------------அலங்காரம், கோவில் சிற்பம்.

மேற்கண்ட செயல்மூலம் தூய்மை அடையும் ஐம்புலனும் சமாதானம் அடைந்து செயலை நிறுத்திவிடும். ஆன்மா தனது செயலை துவங்கி வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது செய்யும் ப்ரார்த்தனை முழுமையான ஆன்ம உயர்வுக்கு வழி ஏற்படும்.



நமது சானதன தர்மங்கள் இவ்வாறு செழித்து வளரும் நிலையில் பல தவறான நபர்களால் சிதறடிகப்பட்டு மூடப்பழக்கங்கள் புகுந்தது. அவற்றை சரியான வழிப்படுத்தி மேன்மை அடைய ஆதிசங்கரர் அவதரித்தார். தனது தெய்வீக ஆற்றலால் ஆறுவிதமான வழிபாட்டுமுறையை ஸ்தாபித்தார். இவை ஷண்மதங்கள் என அழைகப்படுகிறது. சூரியன், சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், விநாயகர் என தனித்தனியே வகை பிரித்து வழிபாட்டு முறையை சரிபடுத்தினார்.

அத்வைத கொள்கை கொண்ட ஆதிசங்கரர் ஷண்மதங்களை கொடுத்த காரணம் என்ன? சராசரி மனிதன் ஷண்மதங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தன்னை மேம்படுத்தினால் இறுதியில் அத்வைத நிலையை உணரமுடியும் என்ற ஆழமான நம்பிகையில் ஷண்மதங்களை உருவாக்கினார்.

ஆதிசங்கரர் கூறிய வழிபாட்டு முறைகளில் எதை தேர்ந்தெடுப்பது எனும் குழப்பம் இயற்கையானது. சிவன் கோவிலை எடுத்துக்கொண்டால் அங்கு பார்வதி, முருகன் மற்றும் விநாயகருக்கு தனி சன்னிதி உண்டு. நவகிரகத்தில் சூரியனும் வீற்றிருப்பார். ஷண்மதங்களில் சிவன் கோவிலிலேயே நான்கு மதங்களும் இருப்பதால் ஷண்மதங்களில் ஒன்றை தேர்ந்தெடுப்பவர்கள் குழப்பமடைவார்கள். ஜோதிடம் இதற்கு எளிய தீர்வை வழங்குகிறது. 5ஆம் பாவகம் வழிபாட்டு முறையை குறிக்கும் பாவகம்.

5ஆம் பாவ கிரகங்கள் தொடர்பை பொறுத்த ஷண்மதங்களை தேர்வு செய்யலாம்.

கிரகம்--------------------- ஷண்மதம் மற்றும் ---------------------நடைமுறையில் வழிபாடுகள்
-------------------------பிற வழிபாடு உள்ள தன்மை ----------------------------------------------------------

சூரியன்--------------------- சூரிய வழிபாடு ---------------------சூரிய நாராயணன்
சந்திரன் -------------------- சக்தி வழிபாடு --------------------- பார்வதி - அம்மன்
செவ்வாய் ----------------- கௌமாரம் -------------------------முருகன்
புதன் ------------------------- வைணவம் -------------------------பெருமாள்
குரு -------------------------சைவம் -------------------------------தஷிணாமூர்த்தி, பைரவர்
சுக்கிரன் -------------------அரு உருவ நிலை ----------------ஸ்ரீ வித்யா
சனி -------------------------அருவ நிலை --------------------- அத்வைத நிலை
ராகு -------------------------தாந்த்ரீக முறை -----------------காளி, பலி கொடுக்கும் முறை
கேது -------------------------கணபதியம் ------------------------விநாயகர்

5ஆம் பாவக அதிபதி, உபநட்சத்திரம் மற்றும் 5ஆம் பாவகத்தை தொடர்பு கொள்ளும் கிரகத்தை கொண்டு வழிபடும் இறைநிலையை தேர்ந்தெடுக்கலாம். வழிபாடு என்பது மனிதனை நல்வழிப்படுத்த மட்டுமல்ல, அம்மனிதன் தன்னைத்தானே உணரவேண்டும் என்பதால் தான். நீங்கள் எனக்கு இட்ட ஆணையால் மேற்கண்ட கருத்துக்களை விவரித்து இருக்கிறேன். உங்கள் குழப்பம் புரிகிறது. நீங்கள் எப்பொழுது ஆணையிட்டீர்கள் என யோசிக்க வேண்டாம்.

இறைவனின் ஆணையால் இதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். என்பதையே அப்படி சொன்னேன். நமது வேத சாரம் கூறும் கருத்து அதுதானே / மறந்துவிடாதீர்கள்.


தத்வமஸி - நீயே அது !


சித்திரை ஏப்ரல்- மே 2008