ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள். மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. அன்று ரோகிணி நட்சத்திர தினம். பிருந்தாவனம் கோலகலமாக இருந்தது. கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவு பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகறைக்கு செல்ல முயன்றனர்.
யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படி சந்திப்போம் என குழப்பமானார்கள்.
யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார். அவர்களிடம் கோபியர்கள் சென்று, “ரிஷிகளின் ரிஷியே இன்று கிருஷ்ணனின் அவதார தினம், அவனை சந்திக்க வேண்டும் ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றை கடக்க முடியுமா என தெரியவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும்” என்றார்கள்.
“ கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்கு கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்” என்றார் வியாச மஹரிஷி.
கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார். கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனை பிறந்த நாள் அன்று சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.
அனைத்து கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி. பிறகு கூறினார், “ கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள். யமுனை வழிவிடும். நீங்கள் கூற வேண்டியது இது தான். வியாசர் நித்ய உபவாசி"
கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன். இவரோ அனைத்து கூடையும் காலி செய்துவிட்டார். மேலும் நித்ய உபவாசி என்கிறார். என்றும் உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா என சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்
யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.
யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.
மறுகரைக்கு சென்று கிருஷ்ணனை சந்தித்தனர். கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.
“எங்களை காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூற சொன்னார். யமுனை வழிவிட்டது. நாங்கள் மீண்டும அதே விஷயத்தை கூறி யமுனையை கடக்கலம் என நினைக்கிறோம். நீ அருள் தர வேண்டும் என கிருஷ்ணனிடம் கேட்டனர்.
மாய புன்னகையுடன் கிருஷ்ணன் , “பக்தியின் சிறந்த கோபிகைகளே யமுனையை கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள் - கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” என்றார் கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் “கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” கூறினார்கள். யமுனை வழிவிட்டது.
புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.
“மஹரிஷியே. இது என்ன முரண்பாடு. நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே? இது என்ன மாய வேலையா?”
“கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாக கருதுகிறேன். இறைவனே என் உணவை உண்கிறார். அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.
கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளை செய்கிறான். அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை. ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான். அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”
தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்தை கோபியர்கள் உணர்ந்து கொண்டனர்.
-------------------------------
டிஸ்கி : மேற்கண்ட கதை புராணங்களில் இல்லை. உபன்யாசம் செய்பவர்களால் புனையப்பட்டது. சில நாட்களாக பத்திரிகை தொலைகாட்சிகளை பார்க்கும் பொழுது இக்கதை ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கட்டுரையின் சில வார்த்தைகள் போல்ட்-ஆக இருப்பது தற்செயலானதே.. !
தற்காலத்தில் இக்கதை நடந்தாலும் தவறு இல்லை. ஆனால் மறுகரையில் வியாசர் இருந்திருந்தால் செய்தித்தாளில் வந்திருப்பார். தான் உபவாசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது வியாசருக்கு தெரிந்திருக்கிறது. சிலருக்கு தெரியவில்லை.
அக்கரைக்கு இக்’கறை’ பச்சை..!