Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label தவறான நபர்கள். Show all posts
Showing posts with label தவறான நபர்கள். Show all posts

Saturday, April 2, 2016

கொலம்பஸ் ...கொலம்பஸ் .. கொலம்பலைஸிங்...போதும்...!

இன்றும் கூட நம் பள்ளிகளில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என கூசாமல் கற்பித்து வருகிறோம். இவர் இந்தியாவை கண்டு பிடிக்க சென்றார் , திசை மாறி தன் குறிக்கோளில் தோல்வியுற்றார் அதனால் தான் கண்ட நிலப்பரப்பை இந்தியா என்றும் அதில் வாழ்பவர்களை இந்தியர்கள் என்றும் அழைத்தார் என வரலாறு சொல்வதில்லை. காரணம் பிரிட்டீஷ் எழுதிய வரலாறு புத்தகமே நம் கையில் உண்டு. பிறகு தற்காலத்தில் அமெரிக்கா சொல்லுவதை கேட்கும் நிலையில் இருக்கிறோம். இதனால் இந்தியாவின் கருத்துக்கள் உரக்க சொன்னாலும் எங்கும் செல்வதில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் சொல்லுவது சத்ய வார்த்தையாக இருக்கிறது. நம்மில் பெரும்பான்மையானவர்கள் கூட ”அமெரிக்காவுல ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்கானாம்..” என கண்கள் விரிய சொல்கிறோம்.  நம் தலையில் கட்டும் விஷயங்களை ஆராய்ச்சி என்ற பெயரில் அவர்கள் மார்கெட்டிங் செய்கிறார்கள். அந்த செய்தியை நம் கண்ணில் படுமாறு கசிய விடுகிறார்கள். பிறகு உங்கள் வீட்டின் அருகே இருக்கும் கடைகளில் அப்பொருள் வரும் பொழுது.....ஓ அமெரிக்க கண்டுபிடிப்பு என வாங்குகிறோம்.

அதற்காக நான் அமெரிக்க ஏகாதிபத்யமே...! என புரட்சி பேசும் ஆள் இல்லை.  அமெரிக்க மனநிலை என்ற ஒரு தன்மைக்கு இளைஞர்கள் மயங்கி கிடப்பதை சுட்டிகாட்டவே இதை பேசுகிறேன். வேப்பிலை , மஞ்சள் இவைகளை ஆயிரக்கணக்கான வருடமாக நாம் பயன்படுத்தி வந்தோம். கோவில்களிலும், வீடுகளிலும் மற்றும் மருத்துவத்திற்கும் இவை இரண்டும் பயன்படாமல் இருந்ததே இல்லை. ஆனால் அமெரிக்காவில் இதன் மருத்துவ குணத்தை கண்டறிந்து காப்புரிமை வாங்க முயன்றார்கள். பிறகு சில இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல விரும்பிகள் தடுத்தார்கள் என்பது நமக்கு தெரியும்.

முன்பே பயன்பாட்டில் இருக்கும் ஒருவிஷயத்தை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என சொல்லுவது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புதிதல்ல. காரணம் அமெரிக்காவே அப்படி கண்டுபிடிக்கப்பட்டது தானே? அங்கே பல்லாயிரம் வருடமாக பூர்வகுடிகள் வாழ்ந்து வந்தார்கள். கொலம்பஸ் கண்டறிந்தார் என சொல்லி அவர்களை கொன்று குவித்து இப்பொழுது அமெரிக்கர்கள் பேசுவதை பார்த்தால் கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்தகுடி போல பேசுவார்கள். சமூக ஆர்வலர்கள் இச்செயலை  கொலம்பஸிங் என கிண்டலாக சொல்லுகிறார்கள். முன்னரே இருந்த விஷயத்தை கண்டுபிடித்து அதனால் பழைய வரலாறை மறைத்து பெயர் வாங்கும் சின்ன புத்திக்கு கொலம்பஸிங் என கூறலாம்.

இணையத்தில் சூப்பர் யோகா என தோப்புகரணம் போடுவதை ஏதோ ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது போல சொல்லுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது போல இப்பொழுது இயற்கையை சேதப்படுத்தாத இலை பாத்திரங்கள் என சொல்லி தாய்லாந்து நாட்டின் யுனிவர்சிட்டி கண்டுபிடித்திருக்கிறார்களாம். இவர்கள் பின்புலத்திலும் கொலம்பஸிங் ஆட்கள் தான் இருக்கிறார்கள்.

விரிவாக பார்க்க இதோ இணைப்பு : http://m.bangkokpost.com/news/917069



மார்கழி மாச பஜனையும் தொன்னையும் அதில் வழியும் சக்கரை பொங்கலையும் மறக்க முடியுமா? இவர்கள் தான் இயற்கை வழி தொன்னையை முதன் முதலில் கண்டுபிடித்தார்களாம். நாம் நம்ப வேண்டும். புளிசோற்றை பாக்கு மட்டையில் கட்டி கட்டு சோறு என்று எடுத்து செல்வதும், தொன்னையை பயன்படுத்துவதும் நம் வழக்கமாக இருந்தது. அதில் ப்ளாஸ்டிக்கை நுழைத்து, இனியாவது மார்டனா இருங்க என சொல்லி நம் வழக்கத்தை குழைத்து இப்பொழுது இயற்கை கண்டுபிடிப்பு என சொல்லுகிறார்கள். இதை தான் கொலம்பஸிங் என்கிறோம்.

நான் அர்ஜெண்டினா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்லும் பொழுது எப்பொழுதும் தொன்னை எடுத்து செல்வேன். அங்கே இருப்பவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் எப்படி இதை உண்டாக்கினார்கள் என வியப்பார்கள். எடை குறைவாக இருப்பது, பூஜைகளுக்கு தூய்மை ஆகிய காரணங்களால் நான் தொன்னையை சுமப்பேன். அவர்களுக்கு இதன் உண்மை காரணம் தெரியாது...!

இது போன்று பல பாரம்பரியங்களை நாம்  இழந்து வருகிறோம். எதிர்வரும் காலத்தில் நம் சந்ததியினர் பிரான்ஸில் புதிய உணவு கண்டுபிடித்திருக்கிறார்களாம், பசும் பாலை ப்ராஸஸ் செய்து அதில் டோயிர் என உண்டு செய்து சாதத்தில் பிசைத்து சாப்பிடுவார்களாம் என சொல்லுவார்கள். நாமும் டோயிர் ரிஸொட்டோ என உணவு பட்டியலை பார்த்து தயிர்சாதத்தை பெருமையாக சாப்பிடுவோம்.

கற்றாழை, முருங்கை இலை பொடி என முன்பே சென்றுவிட்டது...
இப்படியாக கொலம்பஸிங் விரிவடையும் ....எப்பொழுது உண்மையை உரக்க சொல்லுவோம்?

#columbusing

Wednesday, November 9, 2011

www.அகஸ்திரை பாரு.com

சுப்பாண்டி சில நாட்களாக என்னை கண்டும் காணாதது போல இருந்தான். அவனின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு கேட்டதில் அதிர்ச்சி தகவலை தந்தான் சுப்பாண்டி. இண்டர்நெட்டில் ஏதோ தேடிக்கொண்டிருக்கும் பொழுது அகஸ்தியரை நேரில் காணும் மந்திரம் ஒரு வெப்சைட்டில் இருந்ததாகவும் அது எப்படி சொல்ல வேண்டும் என்ற வழிமுறையும் கொடுக்கப்பட்டுருந்தது என்றான். நானும் சுவாரசியம் அடைந்து, என்ன மந்திரம் அது என கேட்க, முகத்தை ஏதோ சீக்கு வந்த கோழி போல வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். ஏனப்பா என்னாச்சு என்றேன்...சும்மா கேட்டா சொல்லிடுவோமா? அதுக்கு எல்லாம் தட்சணை தரணும் என்றான்.

என்ன கொடுமை என தலையில் அடித்துக்கொண்டு என்ன தட்சணை என கேட்க, 101 ரூபாய் என்றான். நானும் அவன் கையில் கொடுத்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பவ்வியமாக மந்திர உபதேசம் கேட்க தயாராக நின்றேன். என் காதின் அருகே வந்து....

டபிள்யூ டபிள்யூ டபிள்யூ அகஸ்தியரை பாரு டாட் காம் என கூறிவிட்டு சென்றான். அவன் கூறிய வெப்சைட்டில் இருந்த மந்திரம் சுமாராக இப்படி இருந்தது... “அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வா வா” என துவங்கி கொஞ்சம் டெரரான மந்திரமாக இருந்தது. மந்திரம் 1008 முறை தினமும் கூறிவர வேண்டும். 41 நாள் சொல்ல வேண்டும், இப்படி பத்தியம் இருக்க வேண்டும் என பல கன்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டிருந்தது. இது பத்தாது என்று அகஸ்தியர் 41ஆம் நாள் முடிவில் நம் முன் தோன்றும் பொழுது எப்படி இருப்பார் என அவரின் அங்க லட்சணத்தையும் கூறி இருந்தார்கள்.

நமக்கு மந்திரம் சொல்லுவது, பத்தியம் இருப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நம்ம சீனியரிடம் அவரின் அனுபவத்தை கேட்க எண்ணினேன்.

சுப்பாண்டி நீ இந்த அகஸ்திய மந்திரத்தை சொன்னியா? 41 நாள் விரதம் எல்லாம் இருக்கனுமாமே? நீ அகஸ்தியரை பார்த்தியா? என கேட்டேன்.

தன் அகஸ்திய அனுபவங்களை கூற துவங்கினான் சுப்பாண்டி...
“ஓ முதல் நாள் தொடங்கி தினமும் பத்தியம் இருந்து காலையில் சூரிய உதயம் முன்னாடி அந்த மந்திரத்தை ஆயிரத்து எட்டு தடவ சொன்னேன். அதுவும் வாய்விட்டு - அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வாவா சொல்லும் பொழுது ஒரு வைப்பிரேஷன் தெரிஞ்சுது...” என்றான்.

அப்புறம் கடைசி நாள் அகஸ்தியர் வந்தாரா? - இது நான்.

“கடைசி நாள் நான் சொல்லி முடிச்சுட்டு மெல்ல கண் திறந்தா அங்கே இரண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க..”

“சூப்பர் சுப்பு.. எப்படியோ ஸித்தி பண்ணிட்ட..”

“நீங்க வேற சாமி .....பஞ்சாப் சர்தார்ஜி ரெண்டு பேர் எம் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாங்க. யாரு நீங்கனு கேட்டேன். ஒருத்தர் அங் சிங்-காம், இன்னொருத்தன் மங் சிங்-காம்.” என சொல்லி தான் பெற்ற அனுபவத்தை கதறலுடன் முடித்தான் சுப்பாண்டி.

எனக்கு 101 ரூபாய் நஷ்டம்..!

------------------------------------------------------------
டிஸ்கி :

மந்திரங்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் குருவழியில் பெறுவதே சிறந்தது. சில இணையதளங்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

அகஸ்திரயை, வசிஷ்டரை காணும் மந்திரம் என கூறி அவர்கள் இந்த உயரம் இருப்பார்கள் தாடி வைத்திருப்பார்கள். கையில் கமண்டலம் இருக்கும். என விவரித்து இந்த மந்திரம் சொன்னால் அவர்கள் தெரிவார்கள் என கூறுவது தவறான வழிகாட்டுதல் ஆகும்.

மந்திரம் உபதேசிப்பவர்கள் மந்திரத்தை மட்டுமே கூறுவார்கள். அதன் விளைவை கூற மாட்டார்கள். கூறினால் நீங்கள் கற்பனையில் நடந்ததாகவே நினைப்பீர்கள் பிறகு ஆன்மீகத்தின் உண்மையை உணராமல் கற்பனை உலகில் வாழ்வீர்கள்.

அகஸ்தியரையும் பதினெட்டு சித்தர்களையும் காணும் மந்திரம் சொல்லுவதை விட, இவர்கள் எல்லாம் வணங்கிய ஒரு உயர் சக்தி இருக்கிறது. அதற்கான மந்திரத்தை சொல்லி அந்த உயர் பொருளை கண்டீர்களானால் பதினெட்டு சித்தர்களும் உங்களை காண வருவார்கள். நீங்கள் அவர்களை பார்க்க பத்தியம் இருக்க வேண்டியதில்லை..!

Saturday, August 28, 2010

நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே...!

சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கும் கூறுவதற்கும் எனக்கு தயக்கம் உண்டு. அதில் அதி முக்கியமானது சமாதி என்ற ஒரு விஷயம். சமாதி என்ற கருத்தை வெளிப்படுத்தும் பொழுது பலருக்கு இந்த கருத்து புரிவதில்லை. சமாதி பற்றி பேசவோ எழுதவோ என்றும் நான் விரும்பியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் விளக்குவதால் பலர் விளங்காமல் போகலாம். விளக்காமல் போனால் சிலர் வீணாகப் போகலாம். விவரித்தாலும் விவரிக்கவில்லை என்றாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றே என்பது சமாதி என்ற கருத்தில் மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன்.

நம்மில் இருப்பவர்களில் இக்கருத்தை பற்றி அறிந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஒரு சிலருக்கு சமாதி என்றால் இறந்த பின் வைக்கும் கல்லறை என நினைக்கிறார்கள். சென்னைக்கு செல்லும் நம் ஆட்கள் கூட அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி பார்க்கும் திட்டத்துடன் செல்லுவதுண்டு. இவர்களுக்கு கல்லறை என்பதை அந்தஸ்தாக கூறும் வார்த்தையே சமாதி. சமாதி என்பதை தெரிந்து கொள்ள முயலாமல் தங்களுக்கு தெரிந்த சமாதி என்பதே சரி என்பவர்கள் இவ்வகை.

இன்னும் சிலருக்கு சமாதி என்பது பல்வேறு ஆன்மீக நூலில் படித்த வாசகம் என்றோ அல்லது பெரிய ஆன்மீக உயர் நிலை என்றோ கருதுவார்கள். என்னிடம் யோகம் பயில வரும் சிலர் புத்தக குப்பைகளை அவர்களுக்குள் சுமந்து வருவார்கள். சமாதிகளையும் சமாதியின் வகைகளையும் இவர்கள் விலாவாரியாக பேசுவார்கள். ஆனால் அந்த நிலை அடைய ஒரு துளி கூட முயற்சி செய்ய மாட்டார்கள்.

மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் இந்த இரண்டு தன்மையையும் கடந்து இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாமல் உடுத்தி, உண்டு, உறங்கி இறந்துவிடுவார்கள்.

எங்காவது சமாதி என்ற வார்த்தையை கேள்விப்பட்டு விளக்கமாக தெரிந்து கொள்ளும் நோக்கில் இவர்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்கள் தெரியுமா?

முதல் வகை : தம்பி பார்த்து யோகா செய்யுப்பா. யோகா பண்ணி மூளை வெடிச்சு செத்துப்போகிறதைத்தான் சமாதினு சொல்லுவாங்க.
(இவ்வாறு தனக்கு தெரிந்ததை சரி என நினைத்து கொஞ்ச நஞ்ச ஆட்களையும் நஞ்சாக்கிவிடுவார்)

இரண்டாம் வகை : தம்பி சமாதினா சாதாரண விஷயமா? ஹிமாலயாவில ஒரு குருஜி இருக்காராம் அவர் முன்னூறு வருஷமா சமாதியில இருக்காராம். அதுக்கு குண்டலாமிக ஜிர்விஸ்தி சமாதினு பேராம். அதை பத்தி நேத்து தான் படிச்சேன்.
(இதை கேட்டதும் நம் ஆட்கள், ஓ இது பெரிய விஷயம் போல என ஒதுங்கிவிடுவார்கள்)

மூன்றாம் வகை : என்ன தம்பி யோகா அப்படி இப்படினு ஏதோ சொல்லிக்கிட்டு. சமாதினு சொன்னவுடன தான் எனக்கு நியாபகம் வருது, நம்ம வளர்மதிக்கு வர இருபதாம் தேதி கல்யாணம். உனக்கு பத்திரிகை வச்சாங்களா?
(இவர்களுக்கு சமாதி என்பது ஏதோ ஒரு அன்னிய மொழி)

மேற்கண்ட மூன்று நிலையில் கடைசி நிலையில் இருப்பவர்கள் மேம்பட்டவர்கள் என்பேன். முதல் இரண்டு நிலையில் இருப்பவர்கள் மிகவும் கொடூரமானவர்கள், இவர்களால் பலருக்கு தீங்க விளையும் என்பது உண்மை.

சமாதி என்ற விஷயத்தை பற்றி விளக்குவதற்கான விவரிப்பு அல்ல இது. விவரிப்பதால் யாதொரு பயனும் இல்லை. மொழியால் விளக்க முடியாத ஒரு விஷயம் தான் என்றாலும் சமாதியை பற்றி விளக்குவதை விட சமாதியில் இருப்பவர்களை பற்றி விளக்குவது இங்கே அவசியமாகிறது.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் சமாதி யோகம் என்ற விஷயம் ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனம் மற்றும் ஐந்து வகையான உணர்வு உறுப்புகளை குவித்து தாரணை என்ற நிலையில் ஒருவர் இருந்தால் அதிலிருந்து த்யாணா என்ற நிலைக்கு செல்லலாம். அந்த த்யாணா (தியானம்) என்ற நிலை விரைவில் அவர்களை சமாதிக்கு இட்டுச்செல்லும். சமாதி நிலையில் இருக்கும் ஒருவருக்கு உடல் உணர்வு இல்லாமல் முழுமையாக அசைவற்று இருப்பார்கள். அவர்களின் சுவாசம் இல்லாமல் நாடி துடிப்பு இல்லாமல் ஒரு மரம் போல இருப்பார்கள். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இவர்கள் வாழும் பிணம்...!

இதைத்தான் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்.

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

இவ்வாறு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் அடுத்த நிலை சமாதிக்குமாற்றம் அடைந்துவிடுவார்கள். இவர்கள் பார்க்க சாதாரணமான நம்மை போல வேலைகளில் ஈடுபடுவார்கள் ஆனால் உள்ளே ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு கால தேச வித்தியாசம் இருக்காது. மேலும் சுவாசிக்கும் தன்மையிலும் உள் நிலையிலும் வித்தியாசமாக இருப்பார்கள்.

பூமியின் வட துருவத்திற்கு சென்று வந்த ஒருவர் அங்கே வீசும் பனிப்புயலை பற்றி எவ்வளவு தான் விளக்கினாலும் நமக்கு புரியாது. நாம் பனிப்புயலில் இருந்தால் தானே அது உணர முடியும். அது போன்றதே சமாதி பற்றிய விளக்கமும் என்பேன்.

இறைவனுடன் முழுமையாக கலக்கும் இந்த உயர் ஆன்மீக நிலையை பலர் தவறாக புரிந்துகொள்வதும், தவறாக பயன்படுத்துவதும் உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு தவறான நபரின் விடியோ உலகை வட்டமிட்டது. அவர் தன்னை காப்பற்றிக்கொள்ள நான் சமாதியில் இருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்றார் என கேள்விபட்டேன். உலகில் சமாதியை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. இப்படியே போனால் நாளை திருமணம் முடிந்து ‘சமாதி’ முகூர்த்தத்திற்கு நாள் பார்க்க சொல்லுவார்கள்.

தான் சமாதி அடைந்தேன் என அதை விவரிப்பவர்கள் உண்மையில் சமாதி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது அறிக. இவர்களை போன்றவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். முன்காலத்தில் ஆன்மீக வாதிகளின் போர்வையில் இருந்த பலர் தான் பெரிய யோகி என காட்டுவதற்கு, இந்த நாளில் இந்த நேரத்தில் ஜீவசமாதி அடையப் போகிறேன் என அறிவிப்பார்கள். அந்த நாளில் அவர்கள் இருக்கும் இடமும், ஊரும் திருவிழாக் கோலம் கொண்டு திகழும். மக்கள் இவர் சமாதி ஆவதை காண நேரில் வருவார்கள்.

சமாதி கட்டும் குழிக்குள் இந்த யோகி அமர்ந்திருப்பார் நேரம் செல்லும் ஆனால் உடலை விட்டு உயிர் பிரியாது. உண்மையான யோகிக்குதானே அதெல்லாம் முடியும்? இவரோ டம்மி பீஸ்...! நேரம் கடக்க கடக்க மக்கள் கொந்தளிக்க துவங்குவார்கள். இன்னும் தாமதித்தால் விபரீதம் என உணரும் சிஷ்ய கோடிகள் குருவுக்கு தீபாராதனை காட்டி அவரின் உச்சந்தலையில் நன்றாக முற்றிய தேங்காயால் ஒரே போடு...!

குருஜி கபால மோக்ஷம் அடைந்துவிடுவார். சொன்ன தேதியில் ஜீவ சமாதியான (ஆக்கப்பட்ட) யோகியின் புகழ் பரவும். இல்லையேல் மக்கள் குருவை நையப்புடைப்பார்கள் அவர் வேறு ஊரில் ஆசிரமும் தேடுவார். இது போன்று நடந்த சம்பவங்கள் ஏராளம். இவற்றை புரிந்துகொள்ளாத மக்கள் இன்னும் கூட ஆன்மீக உயர் நிலை அடைய தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளுவதுண்டு. இப்படிபட்ட (போலி)யோகிகளின் வழிகாட்டினால் இப்படி பட்டவர்களே தானே உருவாகும் சாத்தியம் உண்டு ?

ஏதோ திருமந்திரத்திலும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் மட்டும் இதை பற்றி கூறி இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். அனைத்து மத நூல்களிலும் இக்கருத்து மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஏன் மறைமுகமாக கூறவேண்டும்? உழுத நிலத்தில் தானே விதைக்க முடியும்? இல்லை என்றால் பயிரும் களை என கூறுவார்கள் அல்லவா? அதனால் முழுமையான தெளிவு பிறக்கும் பொழுது மத நூல்களில் இருக்கும் மறை பொருட்கள் விளங்க துவங்கும்.

அப்படிபட்ட வாசகம் தான் பைபிளில் உள்ள “நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே” என்ற வாசகம்.

Isa 2:22
Cease ye from man, whose breath [is] in his nostrils: for wherein is he to be accounted of? (நன்றி bible.cc)

இதற்கு நேரடியான விளக்கம், சமாதியில் இருக்கும் தன்மை கொண்டவர்களை நம்பு உன்னை ஆன்மீக உயர் நிலை அடைய செய்வார்கள் என்பதே ஆகும். சமாதி நிலை கண்டு நாசியில் சுவாசமில்லா மனிதர்கள் முழுமையான ஞான நிலையை அடைந்தவர்கள். அதைவிடுத்து சாதாரணமாக உன்னை போன்று சுவாசிக்கும் மனிதனை வழிகாட்டியாக நம்பி விடாதே என எச்சரிக்கிறது. திருமூலர் கூறிய “செத்திட் டிருப்பார் ” என்ற பதத்தை இங்கே நினைவு கூறுங்கள்.

"i am that I am" போன்ற வசனங்கள் பழைய ஏற்பாட்டில் முழுமையான யோக நிலையை உணர்வதற்காக அமைந்திருக்கிறது. பைபிளில் மட்டுமல்ல இது போல குரானிலும், குரு கிரந்த சாகிப் என்ற சீக்கிய புனித நூலிலும், பெளத்த மற்றும் சமண நூலிலும் காணக்கிடைக்கிறது.

“நாசியில் சுவாசம் இருக்கும் மனிதனை நம்பாதே” என்ற வாசகத்தை ஒரு கற்று தெளிந்த ஆட்சியாளர் - யாரையும் நம்பாதே என்பதற்கு உதாரணமாக பத்திரிகை பேட்டியில் பேசியது கவலை அளித்தது. இது போன்ற அறிய கருத்துக்களை ஆராயாமல் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது.

நான் அனைத்து மத நூல்களையும் ஆழ்ந்து படித்தவன் அல்ல. எனக்கு தெரிந்தவற்றை அவ்வாசகத்துடன் தொடர்பு கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறேன். இவ்வாசகங்களை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோன்றியதை இங்கே விவரித்தேன். அவ்வளவே..!

சரி... சமாதி என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? நான் கேட்டதற்கு பின்வருமாறு திருமூலர் கூறினார்.

காரிய மான உபாதியைத் தாங்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே

.............. என்ன புரிஞ்சுச்சா?

Thursday, June 3, 2010

ஆன்மீக மாத இதழ்களின் தவறான போக்கு

சில நாட்களுக்கு முன் பழைய பஞ்சாங்கத்தில் காஞ்சி பெரியவரை ஆன்மீக ஆற்றலை பற்றி எழுதாமல் சில பத்திரிகைகள் அதிசயம் என்ற பெயரில் அவமதிப்பதாக எழுதி இருந்தேன். அதற்கு ஒரு சகோதரி கொதித்தெழுந்து விமர்சனங்கள் கொடுத்திருந்தார். தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தை தொகுக்கும் பொழுது அப்பெயர் வேண்டாம் என முதலில் மறுத்தவர் காஞ்சி பெரியவர். பிறகு சிலரின் வேண்டுளின் அடிப்படையில் அவ்வாறு வெளியிடப்பட்டது.

ஆனால் தற்சமயம் சில ஆன்மீக பத்திரிகைகள் காஞ்சி பெரியவரை பற்றி எழுதினாலே புத்தகம் விற்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலரிடம் அனுபவ கட்டுரைகள் எழுத சொல்லுகிறோம் என்ற தன்மையில் காஞ்சி மஹானை பற்றி வேறு ஒரு பிம்பத்தை கொடுக்கிறார்கள்.

மஹான்கள் எல்லோரும் பல்வேறு அதிசயங்கள் செய்பவர்களாக இருக்கட்டும்...! ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஒன்று போல அதிசயம் செய்யமாட்டார்கள். சிலர் கடிகாரத்தை கைகளில் பதுக்கி வைத்து வருபவர்களுக்கு எல்லாம் கொடுத்து தான் அவதாரம் என்பார்கள் அவர்கள் போல் இவர் என்ன ரோலக்ஸ் வாட்ச் கம்பெனியா வைத்திருந்தார் ?

மடாதிபதிகள் பட்டாடை மற்றும் ஆபரணம் தரிக்கலாம் என்றபொழுதும் எளிமையாக கதர் உடை தரித்து வாழ்ந்து நமக்கு எளிமையை கற்றுக் கொடுத்தவருக்கு இவர்கள் செய்யும் மரியாதை கவலை அளிக்கிறது.

ஆன்மீக பத்திரிகைகள் அளவுக்கு மீறி செயல்படுகிறது என நான் கூறுவதில் சிலருக்கு சந்தேகம் வரலாம். அவற்றை உணர்த்தவே கீழ்கண்ட படத்தை வெளியிடுகிறேன்.


இந்த மாதம் அப்பத்திரிகையின் அட்டையில் வந்திருக்கும் படம் இது.

அப்படியானல் உள்ளே வந்திருக்கும் கட்டுரையை பற்றி யூகம் செய்யுங்கள். புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் காமம் சார்ந்த தலைப்பில் வியாபாரம் செய்யும் பத்திகைக்கும் இவர்கள் போன்ற ஆன்மீக பத்திரிகைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இவர்கள் ஆன்மீக பத்திரிகை நடத்தினாலும், இவர்களுக்கு காசே தான் கடவுளடா..!

Thursday, April 29, 2010

நித்ய பிரம்மச்சாரி...!

ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள். மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. அன்று ரோகிணி நட்சத்திர தினம். பிருந்தாவனம் கோலகலமாக இருந்தது. கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவு பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகறைக்கு செல்ல முயன்றனர்.

யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படி சந்திப்போம் என குழப்பமானார்கள்.

யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார். அவர்களிடம் கோபியர்கள் சென்று, “ரிஷிகளின் ரிஷியே இன்று கிருஷ்ணனின் அவதார தினம், அவனை சந்திக்க வேண்டும் ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றை கடக்க முடியுமா என தெரியவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும்” என்றார்கள்.

“ கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்கு கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்” என்றார் வியாச மஹரிஷி.

கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார். கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனை பிறந்த நாள் அன்று சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.

அனைத்து கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி. பிறகு கூறினார், “ கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள். யமுனை வழிவிடும். நீங்கள் கூற வேண்டியது இது தான். வியாசர் நித்ய உபவாசி"

கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன். இவரோ அனைத்து கூடையும் காலி செய்துவிட்டார். மேலும் நித்ய உபவாசி என்கிறார். என்றும் உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா என சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்

யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.

யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.

மறுகரைக்கு சென்று கிருஷ்ணனை சந்தித்தனர். கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.

“எங்களை காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூற சொன்னார். யமுனை வழிவிட்டது. நாங்கள் மீண்டும அதே விஷயத்தை கூறி யமுனையை கடக்கலம் என நினைக்கிறோம். நீ அருள் தர வேண்டும் என கிருஷ்ணனிடம் கேட்டனர்.

மாய புன்னகையுடன் கிருஷ்ணன் , “பக்தியின் சிறந்த கோபிகைகளே யமுனையை கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள் - கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” என்றார் கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் “கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” கூறினார்கள். யமுனை வழிவிட்டது.

புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.

“மஹரிஷியே. இது என்ன முரண்பாடு. நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே? இது என்ன மாய வேலையா?”

“கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாக கருதுகிறேன். இறைவனே என் உணவை உண்கிறார். அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.

கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளை செய்கிறான். அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை. ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான். அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”

தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்தை கோபியர்கள் உணர்ந்து கொண்டனர்.

-------------------------------

டிஸ்கி : மேற்கண்ட கதை புராணங்களில் இல்லை. உபன்யாசம் செய்பவர்களால் புனையப்பட்டது. சில நாட்களாக பத்திரிகை தொலைகாட்சிகளை பார்க்கும் பொழுது இக்கதை ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கட்டுரையின் சில வார்த்தைகள் போல்ட்-ஆக இருப்பது தற்செயலானதே.. !

தற்காலத்தில் இக்கதை நடந்தாலும் தவறு இல்லை. ஆனால் மறுகரையில் வியாசர் இருந்திருந்தால் செய்தித்தாளில் வந்திருப்பார். தான் உபவாசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது வியாசருக்கு தெரிந்திருக்கிறது. சிலருக்கு தெரியவில்லை.

அக்கரைக்கு இக்’கறை’ பச்சை..!

Monday, April 12, 2010

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஸ்வாமி ஓம்கார்


இது நடக்கும் என தெரியும்....இது எதிர்பார்த்தது தான் என நீங்கள் புன்சிரிப்புடன் படிக்க துவங்குவது எனக்கு தெரியும். :)

சிங்கப்பூர் பயணம் முடித்தவுடன் நான் சென்ற இடம் ... அப்படி பட்டதாக இருந்திருக்கக் கூடாது. கோவைக்கு செல்லாமல் நேராக சென்னையிலிருந்து அந்த இடத்திற்கு தான் வந்து சேர்ந்தேன். பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.

திருவனந்தபுரம்.

கேரளாவின் தலைநகரம்.

வெளிநாட்டு மாணவர்கள் சிலருக்கு யோகப் பயிற்சி கொடுக்க பயணமானேன்.


பல நூறு வருடங்களாக அறிவு மிக்க அரசர்கள் ஆண்டுவந்த நகரம். திவ்ய தேசங்களில் ஒன்றான பத்மநாப ஸ்வாமி கோவில் அங்கே தான் இருக்கிறது.

சிறுவயதில் சென்ற நினைவுகள் இருந்ததால் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றேன்.

ஸ்ரீமந் நாராயணனின் சயன கோலத்தில் இருக்கும் கோவில்கள் மிக அரிதி. அதிலும் ஸ்ரீரங்கம் மற்றும் இன்ன பிற கோவில்கள் என இந்தியாவின் சயன நிலையில் இருக்கும் திவ்ய தேசங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இக்கோவிலை தவிர கேரளாவில் சயன நிலையில் மஹாவிஷ்ணு கிடையாது என நினைக்கிறேன். கேரளாவில் தமிழ் பாணியில் கட்டப்பட்ட கோபுரத்துடன் காட்சி அளிக்கும் கோவில் அது.

அனந்தபத்மநாப ஸ்வாமி என அழைக்கப்படும் பத்மநாப ஸ்வாமியின் பெயரால் இந்த தலைநகரே திரு-அனந்த-புரம் என அழைக்கப்படுகிறது.

ஆனால் அங்கே நடக்கும் அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல. கோவிலை தங்கள் அதிகாரத்தால் துஷ்பிரயோகம் செய்யும் நம்பூதிரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் என பார்க்கும் இடமல்லாம் குளறுபடி.

சட்டை அணிந்து செல்லக்கூடாது என்பது கேரளாவில் பெரும்பான்மை கோவில்களின் நடைமுறை. அதை நான் வரவேற்கிறேன். கோவிலின் ப்ராண சக்தி உடலில் புகுவதற்கு மிகவும் ஏற்ற சூழல் அது. ஆனால் பத்மநாப ஸ்வாமி கோவிலில் சட்டையை கழற்றினாலும் அதை கோவிலுக்குள் கொண்டு செல்லக்கூடாது என தடை விதிக்கிறார்கள். அதை பாதுகாக்க ஒரு தனிக்கட்டணம்.

இவ்வாறு நடைமுறைக்கு மீறிய செயல்கள் அவர்களின் நடவடிக்கை இருந்தது. கோவிலுக்குள்ளே இவர்கள் செய்யும் அராஜத்தை பக்கம் பக்கமாக எழுதலாம்.

கோவிலின் ஆற்றல் எப்படி இருக்கிறது என ஆராய்ந்தால் அது மிகவும் குன்றி, அங்கே இருக்கும் தெய்வாம்சம் சிரமப்படுவதும் உணர முடிந்தது.

பத்மநாப ஸ்வாமி கோவிலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் ஆட்டுங்கால் பகவதி அம்மன் எனும் கோவிலுக்கு சென்றேன். அற்புதங்களின் உறைவிடம். மிகவும் சக்திவாய்ந்த இடம்.

இங்கே சட்டையுடன் அனுமதிக்கிறார்கள். இவர்களுக்கு சாநித்யம் எதுவும் கெட்டுப்போவதில்லை. பெண்களில் சபரிமலை என கூறப்படும் இத்தலம், சென்ற ஆண்டு மட்டும் தைமாதம் 25 லட்சம் பெண்கள் கூடி பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை பதிவு செய்திருக்கிறார்கள். அக்கோவில் வளாகத்தில் கின்னஸ் சான்றிதழ் இருக்க கண்டேன்.

ஆட்டுங்கால் கோவிலுக்கு வெளியே ஒரு குரு மஹானின் சமாதி இருந்தது. பத்மநாப ஸ்வாமி கோவிலில் கிடைக்காதது இந்த சிறு சமாதியின் முன்னே கிடைத்தது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சென்ற ஸ்வாமி விவேகானந்தர், “கேரளம் பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்றார். ( 'I have wandered into a lunatic asylum!')

இன்னும் அந்த பைத்தியக்கார கூடாரம் மாறவில்லை...பைத்தியங்கள் மட்டும் மாறியிருக்கின்றன...


Saturday, January 9, 2010

சர்வரோக நிவாரணம் = சர்வலோக பாஷாணம்..!


அன்பு சாமிக்கு,

உங்களுடன் இருக்கும் சுப்பாண்டி எழுதிக்கொள்வது.
சிலவிஷயங்களை உங்களுடன் நேரில் பேச முடியாது என்பதால் இந்த மின்னஞ்சல்.

முதலில் இந்த லிங்கைப் படிக்கவும்.

சர்வரோக நிவாரணம் லிங்க் - [ உலக நலன் கருதி லிக் சென்சார் செய்யப்பட்டுள்ளது ]
படிச்சாச்சா???

ஒ.கே இப்ப டீலிங் ஸ்டார்ட்.

நீங்க என்னைய பெரிய எழுத்தாளர் ஆக்கிட்டீங்கனா, நானும் இதுமாதிரி உங்களைப்பற்றி எழுதுவேன்ல?? ...
யோசிங்க சாமி!!

நீங்களும் என் வாழ்க்கையில் அதிசயம் செஞ்சீங்கனு பலர் கிட்ட போயி சொன்னா நாலு காசி சம்பாதிக்கலாம்.

ஸ்வாமி ஓம்கார் ஆசிர்வதிச்சதால குருடனுக்கு காது கேட்கிறது, ஊமைக்கு கண் தெரிகிறது, முடவனுக்கு பாடும் ஆற்றல் கிடைத்தது என
கட்டுரை எழுதலாம்.

குருடனுக்கு காது கேட்கும் என்றும்,ஊமைக்கு கண் தெரியும் - இதில் அதிசய வெங்காயம் ஒன்னும் இல்லைங்கிறது படிக்கிற சுவாரசியத்தில் தெரியாது. ஹாப்பாயில் ஆசாமிங்க நம்பிடுவாங்க.

லிங்கம் எடுப்பது, விபூதி வரவழைப்பது ஓல்டு பேசன் ஸ்வாமி. நாமும் இது போல புதிதாக முயற்சி செய்வோம்.
என்னைப் பெரிய எழுத்தாளராக்க நீங்க வரம் தந்து ஆசிர்வதமெல்லாம் பண்ண வேண்டாம்.

அப்பப்ப எனக்கு சம்திங் வெட்டினாலே போதும் :)


அளவில்லா எதிர்பார்ப்புடன்,

சுப்பாண்டி

---------------------------------------------------------------------------------------------

அளவில்லா எதிர்பார்ப்பு கொண்ட சுப்பாண்டிக்கு,

ஒரு கதை... :)

வங்காள இளவரசி ஒருவர் விவேகானந்தரிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்டாளாம்.
அதற்கு விவேகானந்தர், எதற்கம்மா இப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு என கேட்டார்.

உங்களை போன்ற அழகும் அறிவும் கொண்ட குழந்தை வேண்டும் அதனால் தான் விருப்பப்படுகிறேன் என்றாளாம் இளவரசி.


நானும் நீங்களும் திருமணம் செய்துகொண்டால் அழகும் அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் என நிச்சயம் கிடையாது. சில நேரங்களில் குழந்தை வேறு மாதிரியும் பிறக்கலாம்.

குழந்தை கருவுற்று பெற்று எடுப்பதற்கு கால தாமதமும் ஆகும். அதனால் என்னையே உங்கள்
மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா என கூறிய விவேகானந்தர் இளவரசியில் காலில் விழுந்தார்.

இப்போ கருத்து... :)

உங்களை பெரிய எழுத்தாளர் ஆக்கி அப்புறம் என்னை பற்றிய அதிசங்களை நீங்கள் எழுதி சம்பாதிப்பதை விட... அனைத்து நோய்க்கும் ஒரே மருந்தாக சர்வரோக நிவாரணியானந்தாவை பற்றி நீங்கள் எழுத துவங்கினாலேயே உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

உடனே இலக்கியத்தில் பழுத்தப் பழத்தின் ’ஜூஸ்’ என்ற புனைபெயரில் எழுதி சம்திங் பார்க்கவும்.


அதிசயத்தை மக்கள் எதிர்பார்க்கும் வரை இவர்கள் போன்றவர்கள் இருந்தே தீருவார்கள். ப்ரதிபக்‌ஷ பாவனையில் கூறவேண்டுமானால்
இவர்கள் இருப்பதாலேயே பிறர் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது நமக்கு தெரியும்.

என் சார்ப்பாக அவரிடம் சென்று ஒரு வரம் கேளுங்கள்... அது என்னவென்றால்..

“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!”


தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

Tuesday, September 29, 2009

நானும் வரம் தரப்போகிறேன்...!

என் இமயமலை பயணத்தின் இடையே கங்கையாற்றின் கரையில் இளைப்பாருவதற்காக அமர்ந்தேன். கங்கை பிரவாகமாக சென்று கொண்டிருந்தது. கண்டிப்பாக ஆழமும் வேகமும் அதிகம் என அதன் போக்கை வைத்து பார்க்கும் பொழுதே தெரிந்தது.

சில நாட்களாக வெளியுலகில் இருந்து துண்டிக்கபட்டிருந்தேன். சரி நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள என் மடிக்கணினியை (Laptop) திறந்து இணைய இணைப்பை இணைத்தேன். அது கம்பி இல்லா அகண்ட அலை சேவை. (wireless broadband) சரியாக தொடர்பு கிடைக்கவில்லை. மடிக்கணியை அங்கே இங்கே அசைத்தேன்.. தொடர்பு விட்டு விட்டுவந்தது.. சிறிது சாய்வாகவும் ஒரு மரத்தில் அருகில் சென்றால் ஓரளவு அலைவரிசை கிடைத்தது. ஒரு பக்கமாக சாய்ந்து மரத்தின் அடியே அமர்ந்து கொண்டேன்.. என் கால்கள் இரண்டும் கங்கை ஆற்றின் உள்ளே வைத்திருந்தேன். பயணத்தால் களைத்திருந்த உடலுக்கு கால்களில் குளிர் நீர் படுவது இதமாக இருந்தது.

சில இணைய பக்கங்களுக்கு சென்று உலாவி விட்டு கணினியை மூடி கிளம்ப எத்தனிக்கும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. கைத்தவறி என் கணினியை கங்கையாற்றில் விழுந்துவிட்டது...!


நினைத்துபாருங்கள் எப்படி இருக்கும் எனக்கு?... செய்வது அறியாமல் திகைத்தேன்.. ஆற்றின் வேகத்திற்கு இந்நேரம் என் மடிக்கணினி வங்காள விரிகுடாவில் கலந்திருக்குமோ என்றெல்லாம் மனதில் எண்ணம் வந்து சென்றது. நல்ல வேளை வலைபக்கத்தை பார்த்த பிறகு மூடிவிட்டேன். இல்லையென்றால் அதில் மீன்கள் மாட்டியிருக்குமே என்று ஒருபக்கம் குழப்பம். அதுவும் அந்த பதிவரின் வலைபக்கம் வேறு. அதில் மாட்ட கூட வேண்டாம். மீன்கள் அதை பார்த்தாலே இறந்துவிடுமே என ஒரு வஞ்சக எண்ணமும் தலைதூக்கியது...

எத்தனை எத்தனை தகவல்கள் அதில்.. எதிர்கால உலகை மேம்படுத்த என சிந்தனைகளை அதில் வடித்துவைத்திருந்தேனே? மக்களை உய்விக்கும் அந்த எண்ண சிதறல்கள் எப்படி மீண்டும் நான் உருவாக்குவேன் என மனவருத்தத்தில் இருக்கும் பொழுது...கங்கை ஆற்றின் மேல் ஒரு புகைமண்டலம் உருவாகியது.....

புகைமண்டலத்தின் நடுவில் ஒரு தேவதை வெளிப்பட்டு கண்கள் கூசும் ஒளியுடன் என்முன் நின்றாள். தேவதையை நீங்கள் பார்க்க வேண்டுமே.... அப்பப்பா... திரைப்பட பாடலில் தேவதை என வர்ணிக்கும் சினிமா நடிகைகளுடன் இந்த தேவதையை ஒப்பிட்டால் அடுத்த ஜென்மத்திலும் நான் தமிழகத்தின் வாக்காளனாகவே பிறக்க நேரிடும்.

தேவதையின் அழகில் மூழ்கி இருக்கும் பொழுது தம்பூராவின் கடைசி தந்தியை மீட்டிய ஒலியில்
தேவதையின் குரல் ஒலித்தது..

“கவலைபடாதே மானிடா... உன் கவலையை போக்கவே நான் வந்திருக்கிறேன். உன் மடிகணினி இது தானே” என பிங்க் நிறத்தில் இருக்கும் சோனி வாயோ மடிகணினியை கண்பித்தாள் தேவதை. அதன் தற்சமய விலை 3800$.

நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்... பிறகு “இல்லை” என்றேன்.

சில வினாடிகளில் மீண்டும் ஒரு மடிக்கணினியை காண்பித்து இதுவா என்றாள். அது 4700$ விலைகொண்ட டெல் கணினி. தேவதையே எனக்கு சாமி டாலர் வாங்வே பணம் இல்லாத பிச்சைக்காரன். நான் எப்படி சோனியும் , டெல்லும் வாங்குவேன்? என்றேன்.

சில நொடிகளுக்கு பிறகு என் லினோவா டப்பாவை தேவதை காண்பித்தாள். நான் ‘ஆம்’ என்றேன்.

“மானிடா உன் நேர்மையை மெச்சினேன்” என்று என் கையை நீட்ட சொல்லி எனக்கு மூன்று கணிப்பொறியையும் கொடுத்தாள் தேவதை.

“தேவதையே உனக்கு அறிவு கிடையாதா? உங்கள் தேவதை பரம்பரையில் முன்னோர்கள் விறகு வெட்டியிடம் செய்தது என்னவோ அதையே நீயும் செய்கிறாயே? மூன்று மடிக்கணியையும் வைத்து நான் என்ன செய்ய? இருக்கும் ஒரு கணினியை வைத்தே உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றேன்.

“ தேவதை பரம்பரை பற்றி கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் யார் முன் தோன்றினாலும் அவர்கள் நான் கொடுக்கும் மூன்று பொருளை வாங்கி செல்லுவார்கள். நீ தான் அதிகப்பிரசங்கி போல இருக்கிறாய்”

“தேவதையே நான் அதிகப்பிரசங்கி என்பது ஊருக்கே தெரியும், ஆனால் விறகு வெட்டி போல வெகுளி அல்ல. நான் புத்திசாலி அதனால்தான் அப்படி கேட்கிறேன்.”

“சரி உனக்கு இவை எல்லாம் வேண்டாம் என்றால் மூன்று வரம் தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்”

“நீ வரம் தருவது இருக்கட்டும். நான் மீண்டும் சொல்லுகிறேன். வரம் கொடுத்துவிட்டு பின்னால் சங்கடப்பட கூடாது”

“அற்ப மானிடனே. நீரில் விழுந்த மடிகணினியை எடுக்க தத்தளித்தாய். இப்பொழுது எனக்கே அறிவுரை சொல்லுகிறாயா? ”

“தேவதைகளுக்கு அழகு இருக்கும் அளவுக்கு..... அ.......அனுசரணை இருக்காது என கேள்வி பட்டிருக்கிறேன்..இன்று தான் நேரில் பார்க்கிறேன். நான் வரங்களை யோசித்து கேட்க விரும்புகிறேன். இப்படித்தான் ஒரு எறும்பு யோசிக்காமல் வரம் கேட்டு மாட்டிகொண்டது”

“எப்படி கொஞ்சம் விவரமாக சொல்லேன்”

“மனிதர்கள் தங்களை வாழவிடுவதில்லை என எறும்பு ஒன்று கடவுளை பார்த்து தவம் இருந்தது. கடவுள் அதன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள் என்றார். மனிதர்கள் மேல் இருந்த கோபத்தில் எறும்பு கேட்டது. நான் கடித்தவுடன் சாகவேண்டும்.

கடவுள் தந்தேன் என மறைந்தார். வரத்தை சோதித்து பார்க்க மனிதனிடம் சென்று அந்த
எறும்பு கடித்தது. மனிதன் கோபத்தில் அதை “சத்” என அடித்து தூர வீசினான். வரமும் பலித்தது, கடித்தவுடன் எறும்பு செத்தது. யார் சாகவேண்டும் என வரம் வாங்கவில்லை அல்லவா?. இப்படி நான் அல்லல்பட கூடாது என்பதால் யோசித்து கேட்கிறேன் என்றேன். ”

என் தத்துவ கதையை கேட்டு டயர்டான தேவதை. பெருமூச்சு விட்ட பின் கூறியது.

“அதிகம் பேச்சு ஆண்களுக்கு அழகல்ல. முதல் வரம் தர நான் தயார். கேள்”


“ கேட்கும் வரங்களை கண்டிப்பாக கொடுப்பேன் என வாக்கு கொடு. நான் கேட்கிறேன்.”

“என் தேவதை பரம்பரையின் மேல் ஆணை. கேள்”

“ம்......உனக்கும் எனக்கும் நடந்த இந்த சம்பாஷணைகளை நான் ஒரு கதையாக எழுத போகிறேன். அதை அனைவரும் படிக்க வேண்டும்”

“தந்தேன். இரண்டாவது வரம்”

“உலகில் பலர் வரம் கொடுக்கிறேன் பேர்வழி என சுயநலத்தை தூண்டி பிறரின் எதிர்பார்ப்பு எனும் நெருப்பில் குளிர்காய்கிறார்கள். அவர்களை பற்றிய தெளிவு மக்களுக்கு கொடுக்க வேண்டும்”

“அவர் அவர் அழிவுக்கு அவர் அவரே காரணமாக இருப்பார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? இருந்தாலும் நீ கேட்ப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என வரம் தருகிறேன்”

“மூன்றாவது வரம்... மூன்றாவது வரம்....”

“மானிடனே கேள் என்ன தயக்கம்,?”

“எனக்கு மீண்டும் மூன்று வரங்கள் வேண்டும். இதுவே என் மூன்றாவது வரம்”

சிறிது வினாடி யோசித்த அந்த தேவதை.. “சரி. தந்தேன்” என்றது.

நானும் இமயமலை சாரலில் இருந்து வரம் கேட்கிறேன் பேர்வழி என அந்த தேவதையை கூட்டிவந்து விட்டேன். இப்பொழுது எல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட தேவதையிடம் வரம் கேட்பது என்றாகிவிட்டது. இரண்டு வரங்கள் கேட்டு விட்டு மூன்றாவதாக மீண்டும் மூன்றுவரம் கேட்டுவிடுவேன். கணிப்பொறி மென்பொருள் போல Do. Loop என திரும்ப திரும்ப தேவதை வரம் கொடுத்து என்னிடம் மாட்டிக்கொண்டது. தேவதை இப்பொழுது தான் உணருகிறது. இவனிடம் வசமாக சிக்கிவிட்டோம் என்று. இனி தேவதை பரம்பரையில் யாரும் புத்திசாலிகளுக்கு வரம் தர மாட்டார்கள்...!

உங்களுக்கு ஏதாவது வரம் வேண்டுமா? இரண்டு வரம் கேளுங்கள்... மூன்றாவது வரம் என்ன என்பது உங்களுக்கே தெரியுமே..

Friday, June 26, 2009

உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க..!

மக்களின் மூடநம்பிக்கைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் அதில் முதலில் நிற்பது மரணம் பற்றி யாரு ஒருவர் சொல்லும் செய்தி. மனிதன் நல்ல செய்தியை விட கெட்ட செய்தியை அதிகமாக நம்புவதற்கு அவனின் மனோபலம் (பலவீனம்) காரணம். குடுகுடுப்பைக்காரன் நல்ல செய்தியை சொன்னால் இயல்பாக எடுத்துக்கொள்ளும் மக்கள் கெட்ட செய்தியை சொன்னால் மனதில் பயம் ஏற்பட்டுவிடும்.

செய்வினை பற்றி என்னிடம் கேள்வி கேட்கப்படும் பொழுது நான் கூறுவதும் இது தான். இக்காலத்தில் மந்திர மாந்திரீகம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை, ஒருவரிடன் நீங்கள் இறக்க போவதாக சொல்லும் ஒரு வார்த்தை போதும் ஒரு வாரத்தில் அவர் வாழ்க்கை தலைகீழாக்கி விடும்.

உலகின் அனேக மதங்கள் மனிதனை பயத்தின் பிடியின் வைத்து அவனை நல்வழிப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் இந்த யுக்தி எல்லா காலத்திலும் பயன்படாது. மனிதன் தனது ஆன்மீக நிலையில் முன்னேறிவிட்டான் என்றால் அவனிடம் இது செல்லாது.

கைக்குழந்தைக்கு சோறு ஊட்டும் பொழுது நீங்கள் மூணுகண்ணன் வரான் என சொல்லலாம். அவன் இருபது வயது இளைஞன் ஆனதும் அவனிடம் மூணுகண்ணன் என்றீர்கள் எனில் அவன் உங்களை மருத்துவ மனையில் சேர்க்க வாய்ப்பு உண்டு. மதங்கள் மறைமுகமாக செய்த பயமுறுத்தலை சிலர் “யோகிகள்” என்ற பெயரில் நேரடியாக செய்கிறார்கள்.

மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதனால் தான் ஆங்கிலத்தில் அதை “FAITH" என்கிறார்கள். ஆனால் ஞானி, யோகி என கூறிக்கொள்ளும் சிலர் இதை செய்யும் பொழுது முற்றிலும் மனிதன் நம்பிக்கை இழக்க நேரிடும்.

ஒரு தனிநபரை பின்பற்றும் யோக கழகம் மாதப்பத்திரிகை ஒன்று நடத்துகிறது. அந்த தனி நபர் மீதும் அவரின் செயல் மீதும் எனக்கு எப்பொழுதும் அபிமானம் உண்டு. ஆனால் விஷயமோ அதில் சென்ற மாதம் வந்த கட்டுரை பற்றியது.

அந்த பத்திரிகையில் வந்த கட்டுரையின் சாரம் என்னவெனில் “2012ல் டிசம்பர் 12ஆம் தேதி உலகம் அழிந்துவிடும். கருப்பு சூரியன் என்ற ஒன்று தோன்ற இருக்கிறது. இரண்டு சூரியன் உதிக்கும் அன்னாளில் உலகம் அழியும். இதை நாசா விஞ்ஞானிகளுக்கு தெரிந்தும் வெளியிடாமல் இருக்கிறார்கள். பூமியிலிருந்து இடம் பெயர்ந்து செவ்வாய் கிரகத்திற்கோ, சந்திரனுக்கோ செல்ல விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள். உலகம் அழிய இன்னும் சில வருடமே இருக்கிறது என்பதால், புண்ணியம் செய்யுங்கள். எனது யோக முறை உங்களை நல்வழிப்படுத்தும்”.

யோகிகள் என்பவர்கள் யார் என அடையாளம் இன்னும் மக்களிடயே சென்றடையாததால் இப்படி பட்ட முட்டாள்களின் பேச்சை கேட்கவேண்டி இருக்கிறது. அவருக்கு ஆன்மீகமோ, நாசா பற்றியோ துளியும் தெரியவில்லை என்பது அவரின் கட்டுரையே சாட்சி. நவீன வானியலில் நாசாவிடம் பட்டம் பெற்றவனும், அவர்களிடம் பழகியவனும் ஆகிய எனக்கு அவர்களின் செயல் நன்றாக தெரியும். உலகுக்கு ஏதாவது கெட்ட விஷயங்கள் நடக்குமெனில் அதை தீர்க்க ஆராய்வதை காட்டிலும் மக்களிடையே பரப்பி பீதியை உண்டு செய்வார்கள். காரணம் அப்பொழுது தான் அவர்களுக்கு ஆராய்ச்சிக்கான பணம் கிடைக்கும்.

ஆனால் அந்த 'யோகி' சொல்கிறார் பல வருடங்களுக்கு முன்னே நாசா விஞ்ஞானிகளுக்கு
தெரியுமாம். ரகசியமாக ஆய்வு செய்தார்களாம். இவருக்கு மட்டும் அந்த ரகசியத்தை எந்த விஞ்ஞானி சொன்னாரோ...! என்ன கொடுமை இது?

பூமியின் வான்மண்டலத்தில் ஒரு வித காப்பு படலம் உண்டு. நேரடியாக எந்த வான் பொருளும் உள்ளே நுழைய முடியாது. பூமியின் சுற்றும் வேகத்திற்கு (30KM/hr) சுழன்று கொண்டே பூமியை சுற்றினால் வேண்டுமானால் தரை இறங்கலாம். எத்தனையோ செயற்கைகோள்கள் இவ்வாறு பூமியை அடையாமல் வான் வெளியில் சென்றதுண்டு. மேலும் விண் கற்கள் என எதுவும் விழுவதில்லை என்பதன் காரணமும் இதனால் தான். வான்காப்பு படலம் இல்லை என்றால் 24 மணி நேரமும் தலைகவசத்துடன் தான் நாம் உலா வர நேரிடும்.

ஏதோ வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர் மாயன் கலாச்சார நாள்காட்டியை பார்த்து 2012ல் ஏதோ அசம்பாவிதம் என கிளப்பிவிட்டது தான் உருமாறி இப்படி அலைகிறது. இதை கருத்தில் கொண்டுதான் நான் சிறுகதை வடிவில் மேற் சொன்ன கருத்தை பகடி செய்து எழுதினேன். வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர்களின் கற்பனை திறன் அலாதியானது. எகிப்து,இந்தியா மற்றும் சீனா பற்றி அவர்கள் சொன்ன கற்பனை கதைகள் ஏராளம். அவர்கள் சொன்னது தான் சரி என்பதை போன்ற வாதத்தை வைப்பார்கள்.

யுவான்சுவாங் போல ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் தனது பயணகட்டுரையில் இவ்வாறு எழுதினார். இந்தியாவின் தென்பகுதியில் பயணம் செய்யும் பொழுது ஒரு விசித்திரமான தண்டனை பெற்ற மக்களை பார்த்தேன். அவர்கள் ஆறு குளங்களின் அருகே இருக்கும் பாறைகளை துணியால் பிளக்க முயற்சி செய்தார்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் தென் இந்திய மக்கள் என்ன செய்தார்கள் என்பதும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளரின் அறிவு திறனும்...!


முழுமையான ஞானம் பெற்றவர் என கூறிக்கொள்பவர் இவ்வாறு அறைகுறை விஞ்ஞானிகளின் பின் பற்றி இத்தகைய பிரச்சாரம் செய்வது வெட்கக்கேடானது.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் என்னுடன் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு ஆன்மீக அமைப்பில் இணைந்திருந்தான். 2000 வருடம் ஆரம்பித்தவுடன் உலகம் அழிந்து சத்திய யுகம் என ஒன்று துவங்கும். அதில் புண்ணியம் செய்தவர்கள் மஹாராஜா, ராணியாக வாழ்வார்கள் என ஆன்மீக அமைப்பை சார்ந்தவர்கள் சொன்னதை கேட்டு தினமும் புண்ணியம் செய்கிறேன் பேர்வழி என படிப்பை விடுத்து வேறு பணிகளை செய்தான். கடைசியில் உலகம் அழியவில்லை. அவனின் படிப்பு தான் அழிந்தது. இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்கள் புண்ணியம் செய்கிறார்களா என தெரியவில்லை. அவர்களுக்கு சத்திய யுகத்தில் என்ன பதவி கிடைக்கும்?

இங்கே யாரையும் புண்படுத்தவோ கிண்டல் செய்யவோ இக்கருத்தை கூறவில்லை. மக்களை நல்வழிபடுத்த ஆயிரம் வழிகள் உண்டு. உங்களுக்கு ஏன் இந்த வழி என்பதே எனது கேள்வி. ஏதோ ஒரு மாதபத்திரிகையில் வந்த விஷயம் என இதை ஒதுக்க முடியவில்லை. காரணம் முதல் பத்தியில் சொன்னதை போல இத்தகைய விஷயங்கள் தான் விஷம் போல பரவும். உங்களிடம் இக்கருத்து வந்தால் சிந்தியுங்கள்.

இதற்கு மேலும் 2012ல் உலகம் அழியும் என நீங்கள் நம்பினால் எனது வங்கி எண்ணை தருகிறேன் அதில் உங்கள் பணத்தை மாற்றி விட்டு உலகம் அழிய காத்திருங்கள்...!
------------------------------------
யோகி என்பவன் தன்னையும் தன்னை சார்ந்தவைகளையும் அந்த ஷணம் மட்டுமே வாழ வழிகாட்டுபவன். அவனுக்கு அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஒரு ஜென்கவிதை நினைவுக்கு வருகிறது....

நான் சுவாசத்தை உள்ளிழுக்கும்
பொழுது உலகம் உருவாகிறது.

வெளியிடும் பொழுது உலகம் அழிகிறது.

இடைபட்ட நேரத்தில் நான் இருக்கிறேன்.