Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, January 20, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 9

இந்தியாவில் உள்ள இமாலய மலை தொடர்களில் நிறைய வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. குளிரின் நடுவே அத்தகைய வெந்நீர் ஊற்றுக்களில் குளித்தால் ஏற்படும் அனுபவம் சுவையானது.

ஆனால் இங்கே ஆண்டிஸ் மலைத்தொடரில் இருக்கும் வெந்நீர் ஊற்றை காண சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வெந்நீர் ஊற்றுக்கள் கந்த அமிலத்தால் ஆனது. கந்த அமிலத்தின் புகையும் அதன் கரைசலும் பாறைகளில் கலந்து ஓடிவருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு இதில் மக்கள் குளிக்கும் வண்ணம் இந்த கந்தக ஊற்று குகையில் ஓர் ஹோட்டல் வைத்திருந்தார்கள் என கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

கந்தக நீர் ஊற்றுக்கு அருகே கந்தக படிமங்களால் ஆன ஓர் பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் முன்பு மக்கள் நடந்து சென்று குகையை அடைந்திருக்கிறார்கள். ஆனால் தற்சமயம் அதன் பலம் குறைந்ததால் அதன் மேல் மக்கள் நடக்க அனுமதி இல்லை. இந்த வெந்நீர் ஊற்றின் அருகே வாழும் உயிரினங்கள் தங்கள் இயற்கையான குணத்தை மாற்றிக் கொண்டு வெப்பத்தை தாங்கும் வண்ணம் இயல்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இச்செயலை டார்வின் கண்டறிந்து பரிணாம கொள்கையை கண்டறிந்திருக்கிறார்.

சார்லஸ் டார்வின் என்றவுடன் பலர் அவரை ஓர் விஞ்ஞானியாகவே கருதுகிறார்கள். அவர் ஓரு கிருஸ்துவ மத ஆய்வாளராக பணியாற்றியவர். பரிணாம கொள்கை அவர் இருந்த மதத்திற்கு எதிரானதாக கருதி அவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தனர். அவர் ஓர் சிறந்த ஓவியரும் கூட. இந்த இயற்கை சூழலை தன் கைப்பட வரைந்தும் இருக்கிறார். அவர் வரைந்த ஓவியம் அருகே இருக்கும் ஓர் தங்கும் விடுதியில் இருந்தது. அதை கண்டு களித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் புகைப்பட கருவி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அவர் கண்ட காட்சிகளை எல்லாம் அவர் ஓவியமாக பதிவு செய்தார். 

இப்படி சுவாரசியமாகவும் அறிவு தளத்திலும் பயணம் சென்றுகொண்டிருந்தது. அடுத்து நாங்கள் வான ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்ல வேண்டும். நாங்கள் இருக்கும் இந்த இடத்திலிருந்து ஜஸ்ட் 300 கி.மீட்டர்தான் என்றார்கள். வழக்கம் போல GPS-ல் வழித்தடத்தை சரி செய்துவிட்டு நான் ஓட்டத்துவங்கினேன்.

செல்லும் வழியில் ஓர் செக் போஸ்ட் எதிர்பட அங்கே இருந்த காவலர் வண்டியை ஓரங்கட்டினார். இந்தியாவில் இப்படி ஓரம் கட்டினால் நாம் இறங்கி அருகே இருக்கும் மரத்தின் பக்கம் சென்று யாருக்கும் தெரியாமல் காந்தி படத்தை அளித்தால் காவலரும் நாட்டுப்பற்றுடன் தேச தந்தையை வணங்கி வழியனுப்பி வைப்பார். அர்ஜண்டினாவில் என்ன சம்பிரதாயம் என தெரியவில்லை. நான் குழப்பத்தில் இருக்க அவர் அருகே வந்து செம்மொழியாம் ஸ்பேனிஷ் மொழியில்  “ஏதேனும் பழங்கள் வைத்திருக்கிறீகளா?” என கேட்டார்.

இவர் ஏன் பழங்களை பற்றி கேட்கிறார். இவங்க ஊரில் இது ஏதோ லஞ்சம் கேட்கும் சங்கேத பாஷையோ என நினைத்து, என் மாணவி ராமதாஸியை கேட்க, அவர் எனக்கு விளக்கம் அளித்தார். அர்ஜண்டினாவின் மாநிலங்கள் சுயாட்சியில் இயங்குவதால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பழம் காய்கறிகளை தனி நபர்கள் கொண்டு செல்லுவதற்கு தடை செய்து இருக்கிறார்கள். மேலும் சுகாதரம் கருதியும் சில நோய் தடுப்பு காரணத்தால் இந்த தடை அங்கே விதிக்கப்பட்டிருக்கிறது என விளக்கினார். அந்த போலீஸ்காரரரிடம் சுப்பாண்டியை காண்பித்து இந்த ஞானப்பழம் தவிர வேறு எதுவும் இல்லை என்றேன். 

காரின் உள்ளே சோதனை செய்துவிட்டு ரெண்டு அடி திரும்பி நடந்தவர், மீண்டும் திரும்பி.... கார் ஓட்டிக்கொண்டிருக்கும் என்னை பார்த்து, இவரை பார்த்தால் நம் நாட்டுக்காரர் போல தெரியவில்லையே, லைசன்ஸ் இருக்கா? என்றார். நான் சுப்பாண்டியை பார்க்க சுப்பாண்டி என்னை பார்க்க, நிலமையை புரிந்து கொண்டது போல ராம தாஸியும் காரைவிட்டு இறங்கி போலிஸ்காரரை தனியாக  கூட்டு சென்று ஏதே ஸ்பேனீஷில் விளக்கி கொண்டிருந்தார்.

சில நிமிடம் கழித்து ஒன்றும் புரியாமல் நான் ராமதாஸியிடம் விபரம் கேட்க, உங்களிடம் லைசன்ஸ் இல்லை, ஆனால் இவர் ஒரு பெரிய ஸ்வாமி, அதனால் லைசன்ஸ் கேட்காதீர்கள் என விளக்கி கொண்டிருந்தேன் என்றார். நான் புன்சிரிப்புடன் என் பையில் இருந்து இண்டர்நாஷனல் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்து காண்பித்தேன். உலகின் குடியரசு மொத்தம் 249 குடியரசு நாடுகளில் 210 நாடுகளில் வாகனம் ஓட்டும் அனுமதி வாங்கி இருப்பார் என அந்த போலீஸ்காரர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ராமதாஸியும் மகிழ்ச்சியுடன் இவரிடம் லைசன்ஸ் இருப்பது எனக்கு தெரியவில்லை என போலீஸ்காரரிடம் கூறி அவரிடம் இருந்து விடைபெற்று கிளம்பினோம்.

மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம், “என்னிடம் லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என தெரியாமல் எப்படி என்னை கார் ஓட்ட அனுமதித்தீர்கள்?” என ராம தாஸியிடம் கேட்டேன்.  “நீங்கள் என் குரு, உங்களுடன் பயணம் செய்வது என்பது மட்டுமே என் எண்ணம், எல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என வந்துவிட்டேன்.  நான் அந்த போலீஸ்காரரிடம் பேசும் பொழுது கூட என்னை சட்டத்திற்கு புறம்பாக செல்ல விடாமல், லைசன்சுடன் நீங்கள் நிற்கிறீர்கள் பார்த்தீர்களாஸ்வாமிஜி...என்றார்.  

இப்படி ஓரு சரணாகதி நிலையில் எனக்கு ஒரு சிஷ்யையா? என்ன சொல்லுவது என தெரியாமல் பயணத்தை தொடர்ந்தேன்.

சில கி.மீட்டர் பயணித்திருப்போம், 

“ஸ்வாமிஜி இத்தனை நாள் ஓம்-காரா இருந்த நீங்க இப்ப அர்ஜண்டினாவில் அப்கிரேட்யிட்டீங்களே” என சுப்பாண்டி காட்டிய திசையில் பார்த்தால் அங்கே ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. அதன் பெயர்....ஓம் பஸ்...!இப்படியாக எங்கள் பயணம் நகைச்சுவையுடன் நகர்ந்தாலும் இனி சில கிலோமீட்டர்களில் கலவரம் காத்திருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது...

(அன்பு பெருகும்) 

Sunday, January 5, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 8

 முழங்கால் அளவு இருக்கும் பெரிய காலணிகள். கயிறுகள் மற்றும் உலர் பழங்கள் என நானும் சுப்பாண்டியும் எங்கள் பையில் திணித்துக் கொண்டோம்.

உலகின் இரண்டாவது பெரிய சிகரம் மற்றும் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய சிகரம் என்றால் சும்மாவா? மலையேற்றங்களும் பாறையில் லாவகமா ஏறுவதை பயிற்சி செய்திருப்பதால் சமாளித்துவிடலாம் என நினைத்து கிளம்பினோம்.

வில்லிபுத்ரர் எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு அவரின் ஆசிரியர் பணிக்கு சென்றுவிட்டார். மலைச்சிகரம் மிக அருகே என்றார்கள். விசாரித்ததில் 150கி.மீ. தூரம். இங்கே 200 , 300 கி.மீ எல்லாம் அருகே என்கிறார்கள். அரை மணி நேர பயணம் தான் என அவர்கள் குறிப்பிட்டாலே 200 கிமீ. என புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஞானம் பின்னர்தான் கிடைத்தது. சென்னைக்கு மிக அருகே என விளம்பரப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கொஞ்சமும் சளைக்காதவர்கள்.


மலைஏற்றம் என்பதால் இம்முறை ராமதாசியை கார் ஓட்ட சொல்லிவிட்டு நானும் சுப்பாண்டியும் பின் சீட்டில் அடைக்கலமானோம். பின்ன இரண்டாவது சிகரம் ஏறுவதற்கு ஆற்றலை சேமிக்க வேண்டாமா? கார் ஓட்டி வீணாக்கினால் அப்புறம் மலை ஏற ஆற்றல் வேண்டாமா?

சுற்றிலும் பல்வேறு வண்ணங்களில் மலைத்தொடர்கள். அகண்ட சாலைகள் , தூய்மையான காற்று என பயணம் துவங்கிய சில மணி நேரத்தில் நானும் சுப்பாண்டியும் தூங்கிப்போனோம்.

சில மணி நேர பயணத்திற்கு பின் வாகனம் நின்றது. நாங்களும் கண் விளித்தோம். அவசர அவசரமாக தூக்க கலக்கத்துடன் எழுந்த எங்களை ராமதாசி அசுவாசப்படுத்தினார். பின்னர் காரின் வலதுபக்க கண்ணாடியை இறக்கி ஸ்வாமி இதோ நாம் சிகரத்தின் அருகே வந்துவிட்டோம் என ஜன்னல் வழியாக கண்பித்தார்.

சிகரத்தின் அருகே சென்று பார்க்கும் வரை சாலைகள் அமைத்திருக்கிறார்கள். மலை ஏறவோ பாறைகளில் கயிறு கட்டி ஏறவோ தேவையில்லை...! சிகரத்தை கண்டு ரசிக்கவும் அதன் மேல் செல்லவும் கேபிள் கார்கள் உண்டு. கார் நிறுத்தும் இடத்தில் நாம் பசியாற பிசா முதல் அனைத்து உணவும் கிடைக்கும் வகையில் உணவகங்களும் உண்டு. மலையேற்றத்திற்கு நாங்கள் கொண்டுவந்த கயிறையும் உலர் பழங்களையும் நைசாக மறைத்துவிட்டு...ராமதாசியுடன் சென்றோம். நாம் அசிங்கப்படுவது இது முதல்முறையா என்ன? :))

கேபிள் கார் பவனி வரும் இடம்.

மலையின் உச்சியை அடையும் ஒற்றையடி பாதை. (படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்த்தால் ஒரு ஆரஞ்சு கலர் உடையுடன்
பொடியாக ஒர் உருவம் தெரியும்)

அர்ஜண்டினாவின் உணவில் மாமிசம் இல்லாமல் பெற்றுக்கொண்டு, உணவகத்தின் வாசலில் அமர்ந்து சிகரத்தை ரசித்தவாறே சாப்பிட்டோம். பிறகு மெல்ல நடந்து சிகரத்தின் அருகே சென்று கண்டு களித்தோம். பிரம்மாண்ட மலைக்கு அருகே நம்மை கொண்டு செல்லும் பொழுது நாம் சிறு துரும்பு நம்மை நினைக்க வைக்கிறது இயற்கை. ஆணவம் அழிந்து பிரபஞ்ச துகளாக நாம் நம்மை அறியும் தருணம் அது. 

அடுத்து நாங்கள் செல்ல திட்டமிட்ட இடம் மிகவும் முக்கியமானது. பரிணாம கொள்கையை ஆய்வு செய்ய சார்லஸ் டார்வின் தென் அமெரிக்காவின் பல இடங்களில் முகாம் அமைத்தார். அதில் ஓர் வென்னீர் ஊற்றுக்களுடன் இருக்கும் இயற்கை சூழ்ந்த இடம் அது. அங்கே செல்லும் வரை ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டுமே என  நினைத்திருந்த டார்வினின் வாழ்க்கையை புரிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்த பயணம் அது.

சிகரத்தின் உச்சியில்...

(அன்பு பெருகும்)
Friday, January 3, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து பகுதி 7

வில்லிபுத்திரரின் கவனிப்பில் மகிழ்ந்து அவரின் இல்லத்தில் அந்த மாலை உணவருந்தி விட்டு இரவு உறக்கத்திற்கு முன் வீட்டுக்கு வெளியே வந்தால் 5 டிகிரி குளிர். மாலை வரும் பொழுது 30 டிகிரி வெயில் அதன் சுவடே இல்லாமல் உறங்க போயிருந்தது.

வீட்டின் வெளியே அக்னியை மூட்டி அதன் அருகே அமர்ந்திருந்தார் வில்லி. மேலே நட்சத்திர மண்டலங்கள் தெளிவான ஒரு காட்சியை காட்டிக்கொண்டிருந்தன.

வில்லியின் வாழ்க்கை தன்மையையும் அவரின் ஆன்மீகத்தை பற்றியும் கேட்க அவர் தனது கதையை ஸ்பானீஷ் மொழியில் விளக்கினார். 

ஒரு சாதாரண டிஸ்கோ கிள்ப் மேலாளராக இருந்தவர் பத்து வருடம் முன் இந்தியாவுக்கு வந்து சாயிபாபாவை சந்தித்து இருக்கிறார். அவருக்கு உள்ளே ஒரு மாற்றம் ஏற்பட்டு தன் பணிகளை துறந்து தனிமையில் தன்னை பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார். டிஸ்கோ மேலாளராக இருக்கும் பொழுது பொருளாதார நிலையில் உயரத்தில் வாழ்ந்திருக்கிறார். பிறகு அவரின் இம்மாற்றம் மிக சராசரிக்கும் கீழ் வாழ வைத்திருக்கிறது. அருகே ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுக்கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகிறார்.

சாய் பாபாவை தனது மனதில் குருவாக கொண்டு ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், அனைத்து இந்திய ஆன்மீக நூல்களையும் கற்று, சைவ உணவு பழக்கத்தில் இருந்து கொண்டு ஆன்மீக நிலையை உணர தனது வாழ்க்கையை மாற்றுக்கொண்டு இருக்கிறார் என தெரிய வந்த பொழுது ஆச்சரியம் அடைந்தேன்.

சாய்பாபாவின் மேல் பல முரண்பட்ட கருத்துக்கள் பலர் கொண்டுருந்தாலும் இத்தகைய மனிதர்களின் உள் தன்மையை மாற்றம் செய்ததற்கு அவரை நாம் பாராட்டலாம்.


சில வருடம் முன் இந்தியா சென்ற வில்லி புத்திரரின் தோழர் ஒருவர் அங்கிருந்து இந்திய கடவுளின் சிலையை கொண்டுவந்திருக்கிறார். வில்லி புத்திரரும் அவர் தோழரும் இணைந்து கோவில் போன்று ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைத்திருக்கிறார்கள்.

அதிகாலையில் நீங்கள் கோவிலை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். காரணம் இயற்கை முறையில் கட்டபட்ட வில்லிபுத்திரரின் வீட்டில் மின்சாரம் இல்லை. சூரிய ஒளியில் இயங்கும் பல்ப் மட்டுமே இருக்கிறது.

சூரிய ஒளிவராத ஆண்டிஸ் மலை அடிவாரத்தில் ஒருவர் சூரிய ஒளி பல்ப் வைத்திருக்கிறார். ஆனால் நாம் இந்தியாவில் முழுமையான சூரிய ஒளி கிடைத்தும் அதை வீணாக்குகிறோம் என்பதை உணர்ந்து வெட்கமடைந்தேன்.

அதிகாலை புலர்ந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்ததும் நான் கண்ட காட்சியை மொழியாலும் வார்த்தையாலும் விவரிக்க முடியாது.

சுற்றிலும் மலைத்தொடர் பல்வேறு வண்ணங்களில் ஒரு புறம் சூரியன் மறுபுறம் சந்திரன். சிறிய ஓடையின் ஓசை...சுற்றிலும் சமவெளி என ஓர் கனவு உலகில் வாழ்வதை போல இருந்தது.

வில்லி புத்திரர் கட்டிய கோவிலுக்குள் நிழைந்தால் அங்கே பாராசக்தி இருக்கிறார். பர்வதம் என்ற மலை சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இவள் இங்கே பார்வதியாகி காட்சி தருகிறாள்.

வெறும் காட்சி பொருளாக இருந்த அம்பிகையை ப்ராண பரதிஷ்டா என்ற முறையில் ஆற்றல் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு வழிபாட்டு முறைகளையும் வில்லிக்கு சொல்லிக்கொடுத்தேன்.

தனது குரு பத்து வருடத்திற்கு முன் யோக வாசிஷ்டத்தை கையில் கொடுத்து, அம்பிகைக்கு கோவில் கட்டு, உன்னை தேடி இந்தியாவிலிருந்து ஒருவன் வந்து அம்பிகையின் ஆற்றலை உணர்த்துவார் என சொல்லி அனுப்பினார் என வில்லி சொன்னதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. நீங்களும் தயவு செய்து நம்பாதீர்கள்.

எளிய காலை உணவுக்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய மலை சிகரத்தை காண காரை முடுக்கினோம்.

அக்கோன்காகுவா .....இது தான் அந்த சிகரத்தின் பெயர்...

(அன்பு பெருகும்)