சில கோவில்களுக்கு சென்றால் அங்கே பஞ்சபாண்டவர்கள் வந்தார்கள் என வரலாறு சொல்லுவார்கள். சில கோவில்களில் ராமர் வந்து வணங்கினார் என்பார்கள். இப்படி செல்லும் இடமெல்லாம் பலர் பஞ்சபாண்டவர்களும், ராமரும் வந்து சென்றார்கள் என கூறும் பொழுது இது கட்டுக்கதையோ என எண்ணத்தோன்றும்...
சபரிமலையில் சபரி என்ற மூதாட்டிக்கு மோட்சம் கொடுத்தார் ராமர் என கதை சொல்லுவார்கள். இதுவே ரிஷிகேஷ் அருகே ஒரு இடத்திலும் இதே கருத்து உண்டு. அர்ஜுணன் சிவனிடம் தவம் இருந்து பசுபதாஸ்திரம் பெற்றான் என சிவன் பல்வேறு கோவில்களில் சொல்வதுண்டு. தங்கள் கோவிலின் மகிமையை உயர்த்தி சொல்ல இப்படி சொல்லுகிறார்களோ என நினைக்கத் தோன்றும்.
உண்மையில் அனைத்தும் சரியே. சபரி மோட்சம் மட்டுமல்ல ராமாயணத்தில் வரும் ஒரே சம்பவம் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. அதே போல மஹாபாரதத்திலும் அவ்வாறு இருக்கிறது.
இக்குழப்பத்திற்கும் விடையை ராமாயணத்தின் ஒரு உபகதை கூறுகிறது.
ராவணனை வதம் செய்துவிட்டு ஸ்ரீராமர் ராமேஸ்வரத்திற்கு வருகிறார். அங்கே சிவனை வழிபடுவதற்கு லிங்கம் வேண்டும் என ஆஞ்சனேயரை காசிக்கு சென்று லிங்கம் எடுத்து வர பணிகிறார். ஆஞ்சனேயர் வர தாமதமாகி , அங்கே ஸ்ரீராமர் மணலால் லிங்கம் வைத்து வணங்கிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அக்கதையின் இடையே ஒரு சம்பவம் கூறுவார்கள்.
ஸ்ரீராமர் தனது பூஜையை முடித்துவிட்டு தன் கையில் இருந்த கமண்டலத்தை அருகே இருந்த கிணற்றில் வீச சொன்னாராம். ஆஞ்சனேயர் அந்த கிணற்றில் வீச சென்றதும் அதில் லட்சக்கணக்கான கமண்டலங்கள் இருந்தனவாம். இக்கமண்டலங்கள் எல்லாம் யாருடையது என கேட்க ஸ்ரீராமர், “பல்வேறு யுகங்களில் பல்வேறு ஸ்ரீராமர் கொடுத்து பல்வேறு ஆஞ்சனேயர்கள் வீசியது தான் இவைகள்” என கூறுனாராம்.
சதுர்யுகம் என்பது பல கோடி வருடங்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு. ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தால் பிரம்மாவின் ஒரு நாள். பிரம்மாவின் ஒரு வருடம் என்பது மஹாகல்பம் என நம் காலகணக்கை சாஸ்திரம் விவரிக்கிறது.
ஆக பிரம்மாவின் ஒரு பகலில் ஆயிரம் ராமனும் ஆயிரம் கிருஷ்ணனும் வருகிறார்கள். ராமன் எத்தனை ராமனடி என பாட தோன்றுகிறதா?
அவ்வாறு அனைத்து யுகத்திலும் இராமாயணமும் மஹாபாரதமும் ஒரே இடத்தில் நடக்க வேண்டும் என்பதில்லை. பல்வேறு இடங்களில் நடந்திருக்கலாம். அவ்வாறு நடந்த இடங்கள் தற்சமயம் இருக்கலாம், பல இடங்கள் கடலின் அடியிலோ அல்லது முற்றிலும் அழிந்திருக்கலாம்.
பல்வேறு யுகயுகாந்திரங்களில் நடந்த இதிஹாசங்களைத்தான் பல்வேறு கோவில்களிலும் , புண்ணிய தலங்களிலும் ஒரே போல சொல்லுகிறார்கள். இப்படி பார்த்தால் அமெரிக்காவிலும் அஸ்வமேதயாகம் நடந்திருக்கலாம், சிட்னியில் சீதா கல்யாணம் நடைபெற்று இருக்கலாம்.
தர்க்க ரீதியாக இவ்வாறு கூறினாலும், உண்மையில் சாங்கிய தத்துவ ரீதியாக நம்மில் உள்ளே இதிஹாசங்கள் நடைபெறும் பொழுது உலகின் ஒவ்வொரு மூலையிலும் ராமாயணமும் மஹாபாரதமும் நடப்பது என்பது தானே உண்மை?
மேலும் சாங்கிய தத்துவத்தை முழுமையாக புரிந்துகொண்டால் உலகம் என்பதே பொய்.. நம் இருப்பே மெய், அதில் புருஷார்த்தம் என்ற ஆன்மா இயற்கை குணம் கொண்ட ப்ரகிருதியுடன் இணைவதே யோகம் அல்லது முக்தி என்பது தானே உண்மை.
ஆகவே இதிஹாசங்களை புத்தகத்தில் தேடாமல் நம்முள்ளே தேடுவோம். உங்களுக்குள் ஒவ்வொரு கணமும் அவதார புருஷர்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் அதர்மத்தை அழிக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுது நான் தோன்றுவேன் என சொன்னதன் அர்த்தம் விளங்குகிறதா?
இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்...
ராமாயணம் மஹாபாரதம் உண்மையா?
(வினை முற்றியது)