Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, June 6, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 8

சென்ற பகுதியில் ராமாயணத்தை பற்றி பார்த்தோம் அல்லவா? அதுபோன்றே மஹாபாரதத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களை அவ்வாறு வகைப்படுத்த முடியும். ராமாயணத்தை விட மஹாபாரதத்தில் சாங்கியம் மிக வெளிப்படையாகவே விளக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்கள் ஐவருக்கும் ஒரே மனைவி என்பதன் மூலம் கலாச்சாரத்தை பற்றி கவலை கொள்ளாமல் எதை கூற வியாசர் முயல்கிறார் என உணர்ந்தாலே நாம் தெளிவடைவோம்.

பீமன் சாப்பாட்டு பிரியனாக இருக்கிறான். அர்ஜுனன் காமப்பிரியனாக இருக்கிறான். தர்மத்தை நிலைநாட்டுவதில் யுதிர்ஷ்டர் என்ற தர்மர் குறிக்கோளாக இருக்கிறார் என்பதில் இருந்து இவர்கள் வாய், மெய் மற்றும் கண்களை குறிப்பதாக உணரலாம். நகுலனும் சகாதேவனும் முறையே மூக்கு மற்றும் காதுகளுக்கு காரணமாகிறார்கள். இவர்கள் அனைவரும் மனம் என்ற திரெளவுபதியுடன் இணைந்து வாழ்கிறார்கள். இவ்வுண்மை தெரியாவிட்டால் கடவுள் மறுப்பு வியாபாரம் செய்பவர்கள் கூறும் “தர்ம சங்கட கதையை” கேட்டு மனம் வருந்துவீர்கள்.

பஞ்சபாண்டவர்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும் திரெளவுபதிக்கு மட்டும் சும்மா இருக்க முடியாது..! துரியோதனனை பார்த்து சிரிக்க...வந்தது விபரீதம். துரியோதனன் என்ற தமோகுணம் சூதுக்கு அழைக்க..பஞ்ச அவயங்களான பாண்டவர்கள் வந்தார்கள் சூது விளையாட, அங்கே வீழ்ந்தவுடன் மனம் என்ற திரெளவுபதி அவமானப் படுத்தப்பட்டாள். அப்புறம் என்ன மஹாபாரதம் தான்..!

நீங்களும் மஹாபாரதத்தை உங்களுக்குள் நிகழ்த்தலாம். தமோ குணம் சொல்லும் விஷயத்திற்கு உடன்பட்டால் ஐந்து அவயங்களும் ஒரு நாளில் அதில் பணியும். கடைசியில் மனம் வருத்தப்பட்டு இனி இதை செய்யக் கூடாது என கூறும். போராட்டம் நிகழும்....கடைசியில் முழுமையான நிலைக்கு உங்கள் உறுப்புகள் மேம்பட்டு ஞானம் பிறக்கும். கிருஷ்ணர் என்ற ஆன்மா உங்களுக்கு கீதை கூறும். அப்புறம் எல்லாம் சுபம்...!

மேற்கண்ட விஷயங்களை நான் ஏதோ தொடர்புபடுத்தி இதிஹாசங்களை உண்மை என கூறுவதற்கு விளக்கவில்லை. நான் சூரியனை பற்றி விளக்கினாலும் விளக்கா விட்டாலும் எப்படி சூரியன் தன் வேலையை செய்து கொண்டே இருக்குமோ அது போல நான் இவ்விளக்கங்களை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்களுக்குள் இதிஹாசங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும்.

நம் கலாச்சாரத்தின் ஆறு தத்துவங்களின் முதன்மையான இத்தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாத நிலையில் நம் கலாச்சாரத்தை புரிந்துகொண்டோம் என மதத்தை காக்கிறேன் என புறப்படுகிறவர்களை நினைத்தால் சிரிப்பை தவிர வேறு என்ன பதில் கூற முடியும்? தனக்குள் இருக்கும் ராமனை புரிந்துகொள்ள முடியாதவர்கள் வெளியே ராமனின் சொத்தை காப்பாற்ற புறப்படுகிறார்கள். இது வேதனையானதே..!

சாங்கிய தத்துவத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து செயல்களும் நடக்க ப்ராணன் என்பது இன்றியமையாதது. ராமாயணத்தில் ஆஞ்சநேயரும், மஹாபாரதத்தில் பீமனும் ப்ராணனாக இருக்கிறார்கள். ப்ராணன் எப்பொழுதும் பரமாத்மாவின் ஈர்ப்பில் இருக்கிறது. அதனால் தான் ஆஞ்சநேயரை பீமன் சந்திப்பது போன்று மஹாபாரதத்தில் ஒரு காட்சி வரும். இரண்டும் ஒன்றே என கூறுவது போன்று அமைந்திருக்கும் இக்காட்சியில் பல்வேறு உள்கருத்துக்கள் உண்டு.

இப்படி எத்தனையோ விஷயங்களை உள்புகுத்தினாலும் நாம் ஏன் இப்படி நிகழ்கிறது என கேட்காமலேயே தாண்டி செல்லுகிறோம். பார்த்தீர்களா நமக்குள் நிகழும் சாங்கியத்தை தூண்டிவிட்டாலும் நான் தாண்டி வருவதில் குறியாக இருக்கிறோம்.

சாங்கிய தத்துவத்தை எளிமையாக புரிந்துகொள்வது சற்று கடினம் தான். நம்முள் நடக்கும் விஷயத்தை வெளியிலிருந்து ஒருவர் குரு என சுட்டிக்காட்டினாலே அந்த அற்புதம் நிகழும். முதலில் இறைவன் என்ற நிலை இன்றி - “சுய இருப்பது மட்டுமே நிஜம்” என்ற தத்துவத்தில் உருவான சாங்கியம் பின்பு படிப்படியாக பலரால் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது அதில் இறைவன் என்ற ரூபம் சேர்க்கப்பட்டு எளிமையாக்கப்பட்டது.

இனிப்பில் எப்படி வண்ணங்களை சேர்த்து புதிய சுவையை கொண்ட புதிய இனிப்பு உருவாகிறதோ அதுபோல சாங்கியத்தில் இறைவன் என்ற ரூபம் சேர்ந்ததும் அது பல்வேறு தத்துவங்களாக ஒளிர்ந்தது.

பகவத் கீதையும் சாங்கிய பின்புலம் கொண்டது. அதில் இறைவன் என்பதை விஸ்தாரணை செய்து விளக்கியது பலர் இறை கற்பனையில் வீழ்ந்தார்கள். அதில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் “அனைத்து உயிரிலும் ஆன்மாவாக இருப்பது நானே”. உண்மையில் அவர் தன் உடலை குறிக்கவில்லை. என்னுள் இருக்கும் ஆன்மாவே அனைத்து உயிரிலும் இருக்கிறது என்கிறார். இதுதானே சாங்கியம் சொல்லிகிறது? ஆனால் நம் ஆட்கள் கற்பனையில் மயில் இறகுடன் கிருஷ்ணர் நமக்குள் புல்லாங்குழல் வாசிப்பதை கற்பனை செய்து கொள்வார்கள்.

பதஞ்சலி முனிவர் சாங்கிய பின்புலத்தில் அமைந்த தன் கருத்தில் இறைவன் என்பதை கலந்தார். ஆனால் இறைவனுக்கு அவர் உருவம் கொடுக்கவில்லை. இது பதஞ்சலி யோக சூத்திரம் என வழங்கப்படுகிறது.

இப்படி நம் கலாச்சாரம் சாங்கியம் முதல் பல்வேறு வடிவம் கொண்ட தத்துவங்களாக வளர்ச்சி அடைந்தது. தற்சமயம் ஆன்மீகவாதிகள் என வேடம் தரித்தவர்கள் யவரும் சாங்கியத்தை பொதுமக்களிடம் பேசுவதில்லை. காரணம் “நீயே அது” என கூறிவிட்டால் அப்புறம் எங்கே தங்களை பிறர் வணங்குவார்கள் என்ற எண்ணம் தான்.

மேலும் இதை பற்றி சில முக்கிய விஷயங்களை கூறி நிறைவு செய்கிறேன்.

(வினை தொடரும்)

17 கருத்துக்கள்:

yrskbalu said...

“நீயே அது” என கூறிவிட்டால் அப்புறம் எங்கே தங்களை பிறர் வணங்குவார்கள் என்ற எண்ணம் தான்.

-- true words.

we need mahans likes ramanar, yogiramsuratkumar.

Pattarai Pandi said...

அன்புள்ள சுவாமிக்கு,

அருமையான தொடர். எளிமையான விளக்கங்கள்.

வேதம், வேதாந்தம், மகாதர்சனங்கள்(சாங்கியம், நியாயம்...), ஆகமம் மற்றும் (உங்கள் செல்ல எதிரியின் :) ) திருமந்திரம் இவை யாவைக்கும் தொடர்புகள் உண்டா அல்லது இவை எல்லாம் ஆன்மாவை அறிய வெவ்வேறு பாதைகளா? சமயம் உள்ள போது தயவுகூர்ந்து விளக்கவும்.

நன்றி.

subramanian said...

வணக்கம் சுவாமிஜி,

கட்டுரை பதிவு மிகவும் அருமை.
கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டி அறிவுக்கு மேலும்
விளக்கம் உண்டாக்குகிறது.

தயை கூர்ந்து பின்வரும் ஐயங்களைத் தீர்க்க உதவுங்கள்.

சென்ற பதிவில் கேட்கப் பட்ட கேள்விக்கு பின்னூட்டத்திலிருந்து
பின்வரும் விடையை அறிய முடிகிறது.

/// இராவணன் - ரஜோ குணத்துடன் ஞான & கர்ம இந்திரங்களை
கட்டுக்குள் வைத்திருபதால் 10 தலை உள்ளது.
விபீஷணன் - ஸாத்வ குணம்; கும்பகர்ணன் - தமோ குணம்; ////

அதே பதிவில் பின்வரும் கருத்தும் கூறப்படிருக்கிறது..

/// ... தசரதனுக்கு ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் கொண்ட மூன்று
மனைவிகள் முறையே கெளசல்யா, கைகேயி, சுமித்ரா. ..... ///

இங்கே ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களுக்கு ராமர் தரப்பிலிருந்து
மூன்று பேரும், ராவணன் தரப்பிலிருந்து மூன்று பேரும் உவமை கூறப்படுவதில்
உள்ள உட்கருத்தினை தயை கூர்ந்து விளக்க வேண்டுகிறேன்.

அத்துடன் ராமர் என்ற ஆன்மா ரூபம், ரஜோ மற்றும் தமோ குணங்களை
ஒழிப்பதாகக் கொண்டால், கைகேயி மற்றும் சுமித்ரா ஏன் கொல்லப்படவில்லை.

அத்துடன் தசரதன், இராவணன் - இருவருமே கர்ம, ஞானேந்திரியங்களுடன்
தொடர்புபடுத்தப்படுகின்றனர். இந்த இடத்தில் கொஞ்சம் சரியாகப் புரியவில்லை.
தயை கூர்ந்து இதன் உட்கருத்தினையும் விளக்க வேண்டுகிறேன்.

நன்றி.
- சுப்பிரமணியன் (மதுரை)

Sivakumar said...

நீளமான பின்னூட்டம் தட்டச்சு செய்தேன். ஆனால் அதைக் காணவில்லை. மீண்டும் தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம்.

சம்மரைஸ் செய்கிறேன்.
1. தயவு செய்து இந்து மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களை கிண்டல் செய்யாதீர்.
2. அவர்கள் மட்டும் இல்லையெனில் நம் நாடு எப்படி இருந்திருக்குமோ என்று எண்ணவே அச்சமாக இருக்கிறது. (உத. நம் அண்டை நாடுகள்)
3. நீங்கள் ஈஸ்வரனின் புருவ மத்தியில் வாழ்பவர். எங்களுக்கெல்லாம் அந்தத் தகுதி எல்லாம் இருக்கா என்பதே சந்தேகம்.
4. என் சந்ததிகளுக்கு எந்நிலையோ என்று (இல்லாதபோதே) மனம் வெறுமை அடைகிறது.

5. எந்த ஒரு குருமார்களும் தங்களை வணங்குங்கள் என்று கூறுவதில்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பட்டரை பாண்டி,

வேதத்தின் உட்பகுதிகளே வேதாந்தம் மற்றும் இதர மஹாதர்ஷணங்கள்.

வேதத்தையும் பிற சாஸ்திரத்தையும் எளிமை படுத்தப்பட்ட வடிவம் திருமந்திரம்.

நமக்கு எது எளிமையாக இருக்கிறதோ அதை பாதையாக்கி ஆன்மாவை அறியலாம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பிரமணியன்

உங்கள் சந்தேகம் சரியானதே.

எளிமையாக நீங்களே இக்கேள்விக்கான பதிலை யூகித்தரிய முடியும்.

முக்குண வடிவமான தசரதனின் மனைவிகள் யாரை துன்பப்படுத்தினார்கள்?
முக்குண வடிவமான இராவண சகோதரர்கள் செய்தது என்ன?

எப்பொழுது நாம் பிறப்பு எடுக்கிறோமோ அப்பொழுது குணங்களுடனே பிறக்கிறோம்.
அதில் ஆழ்ந்து ஈடுபட்டு குணங்களினால் துன்பம் மிகும் பொழுது ஆன்மா விழித்தெழுந்து தன் சுயத்தை காட்டும். இது ஒரு வழி.

மற்றவழி ஒன்று உண்டு. அது குணங்களை நல்வழிப்படுத்தி ஆன்மாவை அடைவது.

இராவணன் சென்றது முதல்வழி. தசரதன் மனைவிகள் சென்றது இரண்டாம் வழி.

முதல்வழியில் ஞானம் அடைந்தவர்களைத்தான் கொளதம புத்தர் முதலானவர் என நான் முன்பு குறிப்பிட்டு இருந்தேன். ராமன் இராவணனை வதம் செய்ததும் அவன் ஞானம் அடைந்தான்.

வால்மிகி ராமாயணத்தில் மட்டுமல்லாமல் அனேக ராமாயணத்தில் ராவணனை உயர்த்தியே சொல்லுகிறார்கள். இவை எல்லாம் நமக்கு குணங்களை பற்றி விளக்கம் கொடுப்பதற்கே ஆகும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவக்குமார்,

உங்கள் கருத்துக்களுக்கு என்ன பதில் சொவதென்றே தெரியவில்லை :)

உங்கள் வருகைக்கு நன்றி

KARIKALVALAVAN said...

//தற்சமயம் ஆன்மீகவாதிகள் என வேடம் தரித்தவர்கள் யவரும் சாங்கியத்தை பொதுமக்களிடம் பேசுவதில்லை. //
அது நாத்திக மதம் நாத்திகவாதிகள் தான் அது குறித்து
பேசுவார்கள் என்று நான் அறிந்த சில மடாதிபதிகள் தங்கள்
வலைபதிவை (சாங்கிய கருத்துகளை)
நான் கூறியபோது கத்தினார்கள்

Sanjai said...

இந்த பதிவு, ஒரு சுவையா அல்லது அறுசுவையா :) ?

ADMIN - அனுபவம் புதுமை said...

சுவாமி ஒரு சில சந்தேகங்கள். இதிகாசங்களை நடை முறை வாழ்க்கையோடு ஒப்பிடுகிறீர்கள். உருவாகிக் கொண்டிருப்பவை என்றும் கூறுகிறீர்கள் அற்புதம்.

ஆனாலும் இதிகாசங்கள் நடைபெற்றதாகச் சில ஆதாரங்களை எடுத்துக் கூறுபவர்கள் சம்பவம் நடந்த ஊர், இடங்கள், ஆயதங்கள் என்று விவரிக்கின்றார்களே?
அத்துடன் இதிகாசங்களில் ஆலயங்கள் குறித்து எதுவும் பேசப் பட்டிருக்கவில்லை அப்படியானால் இறை வழிபாடு பிற்காலத்தில் தோன்றியதா?

நிறைவாக ஒன்று.. எதற்கெடுத்தாலும் ஏளனமாக மறு பதில் இடுபவர்களைக் காணவில்லையே??? :))

Prabu said...

நீங்கள் "God Talks with Arjuna" என்ற புத்தகத்தை படித்துள்ளீர்களா?

Sivakumar said...

to Vanakkam Radio
//
நிறைவாக ஒன்று.. எதற்கெடுத்தாலும் ஏளனமாக மறு பதில் இடுபவர்களைக் காணவில்லையே??? :))
//
ஏன்னா... சுவாமி ரொ'ம்ப ஸ்ட்ரிக்டு! ஸ்ட்ரிக்டு! ஸ்ட்ரிக்டு!

புதுகை.அப்துல்லா said...

// ஸ்வாமி ஓம்கார் said...
திரு சிவக்குமார்,

உங்கள் கருத்துக்களுக்கு என்ன பதில் சொவதென்றே தெரியவில்லை :)

//

டோண்ட் ஓர்ரி சாமி. நான் சொல்றேன் :)


// 1. தயவு செய்து இந்து மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களை கிண்டல் செய்யாதீர்.

//

அவர்களை மட்டுமல்ல..யாரையுமே கிண்டல் பண்ணக்கூடாது.


// 2. அவர்கள் மட்டும் இல்லையெனில் நம் நாடு எப்படி இருந்திருக்குமோ என்று எண்ணவே அச்சமாக இருக்கிறது. (உத. நம் அண்டை நாடுகள்)

//

இல்லாட்டினாலும் இப்ப எப்படி இருக்கோ அப்படியேத்தான் இருந்திருக்கும். எதையும் முடிவு செய்வது மனிதர்கள் அல்ல.. சிவமாம் இறைநிலை.// 3. நீங்கள் ஈஸ்வரனின் புருவ மத்தியில் வாழ்பவர். எங்களுக்கெல்லாம் அந்தத் தகுதி எல்லாம் இருக்கா என்பதே சந்தேகம் //

எல்லாருக்கும் இருக்கிறது. மெனக்கெடலில் மட்டுமே வித்தியாசம்.


// 4. என் சந்ததிகளுக்கு எந்நிலையோ என்று (இல்லாதபோதே) மனம் வெறுமை அடைகிறது.//

எதனையோ யோகிகளும்,சூஃபிகளும் இன்றும் ஜீவனாய் உலவும் பூமி இது. ஒரு குறையும் வராது. கவலையை விடுத்து கடமையைச் செய்யுங்கள் :)


// 5. எந்த ஒரு குருமார்களும் தங்களை வணங்குங்கள் என்று கூறுவதில்லை.

//

உண்மைதான். தன்னுள் உறைபவனே இறைவன்..தான் அல்ல என்பதை உணர்த்துபவரே குரு.

Sivakumar said...

அப்பா இவ்ளோ தெளிவா ஒரு இஸ்லாமியரா?

நான் ரொரொம்ப பிளாக் பொருத்தவரை நான் ரொம்ப ஜூனியர்!!

என் கூட பழகுபவர்கள் தான் வேறு மாதிரி இருக்கிறார்களோ?!

Irai Kaathalan said...

சுவாமி ஜி அவர்களுக்கு வணக்கம் ...
என்ன தெளிவான விளக்கங்கள் ...இது வரையிலும் ராமாயணம் , மகாபாரதம் போன்றவை பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வீடியோ வடிவில் கதை சொல்கிறார்கள் என்று தான் நினைத்தேன் ...ஆனால் உங்களின் அறிவு சார்ந்த விளக்கங்கள் , ஒரு தனி கவனத்தை செலுத்த தூண்டுகிறது ...
இன்றைய எந்திர சூழலில் மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக சென்று கொண்டிருக்கிறது...உங்களது இந்த கட்டுரைகளும் , விளக்கங்களும் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தையும் , பகுத்தறிவையும் புகட்டும் என்பதில் பெருமஹிழ்ச்சி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவக்குமார்,

//அப்பா இவ்ளோ தெளிவா ஒரு இஸ்லாமியரா?

//

பெயரைவைச்சு இவரை இஸ்லாமியர்னு சொல்லீட்டீங்களே :)