ஜென் எனும் வார்த்தை பல பரிமாணங்களை ஏற்படுத்தவல்லது. ஆனால் ஜென் என்றால் கார் என்ற அளவில் மட்டுமே நம் மக்களுக்கு தெரியும். ஜென் கதைகளும், கவிதைகளும் இலக்கிய இலக்கணத்தை கட்டவிழ்த்தே செயல்படும். கதைகளுக்கு உண்டான கட்டமைப்பு இல்லாவிடினும்நமக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கும். படித்து முடித்ததும் பலமணி நேரம் நம் உள்ளே பிசையும். பலகாலங்களாக ஜென் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை ஒரு துளி உங்களுடன் பகிர்ந்தேன். இது அனைவருக்கும் நடக்கும் என சொல்ல முடியாது. இதற்கு மேலும் நடக்கலாம்.
ஜென் கதைகள் இருவரியில் இருக்கும், சில நேரம் பல வரிகள் கூட இருக்கும். நான் முன்பு சொன்னது போல ஜென்னின் நோக்கம் நம்மில் ரசாயனத்தை உண்டாக்குவதுதான். உதாரணமாக நான் ரசித்த ஜென் கதையை இங்கே தருகிறேன்.
----------------------------------------------------------
ஞானம் முன்னும் - பின்னும்
ஒருவன் ஞானம் தேடி காடுமலைகளில் அலைந்தான்.
அவன் குருவை தேடி செல்லும் பொழுது அருவிகள் மற்றும் மரங்களை கண்டான்.
குருவின் பணியில் ஈடுபட்டு ஞானம் அடைந்து வீடு திரும்பினான்.
மீண்டும் காட்டுவழியில் செல்லும் பொழுது அருவி மற்றும் மரங்களை கண்டான்.
அவை அருவி மற்றும் மரங்களாகவே தெரிந்தது.
-----------------------------------------------------------
இது போன்று ஏனைய கதைகள் மற்றும் கவிதைகள். ஜென் என்பது ஒரு மதம் என பலரும் தவறாக அனுகுகிறார்கள்(zen buddhism). பாரதகலாச்சாரம் எப்படி மதமாக்கபட்டதோ அதுபோல ஜென்னும்
மதமாக்கப்பட்டது.குரு சிஷ்யன், ஞானம் என்ற உயர் சிந்தாந்த கோட்பாட்டை தெளிவுபடுத்தும் ஒரு
நிலை ஜென். ஜென்னை விளக்க விளக்க அதை அசிங்கப்படுத்துகிறோம் என அர்த்தம். அது புரிதல் ஏற்படவேண்டியது. விளக்க வேண்டியது அல்ல. இத்துடன் நான் அசிங்கப்படுத்தியதை நிறுத்திக் கொள்கிறேன்.
எனது முயற்சியில் சில ஜென் கவிதைகளை தருகிறேன். நன்றாக இருக்கிறது என சொன்னால் இம்சை தொடரும்.
நானும் குருவும்
----------------------------
நானும் குருவும் இருந்தோம்.
குரு இருந்தார்
பிறகு ஒன்றும் இல்லை.
மனத் தவளை
-------------------------
இங்கும் அங்கும் குதித்தது
கத்தியது.
சர்ப்பத்தின் வாயில் மாட்டியதும்
கால்களை அசைத்தது.
அதுவரைக்கும் தான் தெரியும்.
ஞானம்
-------------
மரத்தில் கடைசி இலை
உதிரும் பொழுது
கூட நினைக்கவில்லை
ஞானம் அடைவேன் என்று.