Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label நோயற்ற வாழ்வு. Show all posts
Showing posts with label நோயற்ற வாழ்வு. Show all posts

Tuesday, April 6, 2010

வெய்யிலை சமாளிக்க சுப்பாண்டியின் டிப்ஸ்...!


கோடை வெயில் மிகவும் கொடுமையாக இருக்கிறது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிக வெயில். இதை சமாளிக்க என்ன செய்யலாம் என யோசிக்கும் பொழுது சுப்பாண்டி தான் சொல்லுவதாக கூறினான்.

ஏதோ சஹாரா பாலைவனத்தில் பட்டாணி வித்தவன் போல பல பாயிண்டுகளை கூறினான். எனக்கே அவனின் அறிவு முதிர்ச்சிகண்டு மிகவும் புல்லரித்தது. அதன் காரணம் கடைசியில்...!

சுப்பு சொன்ன பாயிண்டுக்கள் இதோ :

  • கோடை முடியும் வரை தளர்வான ஆடைகளே உபயோகியுங்கள். ஜீன்ஸ் மற்றும் டைட்டான டீ சர்ட்டுக்கள் தவிர்க்கவும்.

  • முடிந்தவரை அதிக காரம் மற்றும் மசால உணவுகளை தவிர்க்கவும்.

  • நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி பழங்களை சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் அருந்தலாம்.

  • தினமும் காலை மற்றும் மாலை இரண்டு முறை குளிக்கவும்.

  • குளிர்ச்சியான பானங்களைவிட குளிர்விக்கபடாத பானங்கள் உடலுக்கு நல்லது.

  • பகல் நேரத்தில் வெளியே பயணிக்கும் பொழுது தலையில் தொப்பி அல்லது துணியை தலைப்பாகை போன்று அணிந்து கொண்டு செல்லலாம். அதற்காக காவி துணி எடுத்து முண்டாசு கட்டிக்கொண்டு தெருவில் நடந்தால் விபரீதம் சம்பவிக்கும். இதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

  • நீச்சல் குளம் அல்லது ஆறுகள் அருகே இருந்தால் வாரம் ஒருமுறை நீராடவும்.

  • பெரிய அண்டா போன்ற பாத்திரம் வீட்டில் இருந்தால் அதில் தண்ணீர் நிரப்பி அதில் அரைமணி நேரம் அமரலாம்.

  • கோடை கால பானம் : நாக்கு வரண்டு இருக்கும் சமயம் வேதிப்பொருட்கள் நிறைந்த குளிர்பானம் குடித்து உடலை கெடுத்துக்க கூடாது. ஒரு மண் பானை வாங்கி மண் வாசனை போக அதை நன்றாக கழுவி எடுக்கனும். காலை ஆறு மணிக்கு அதில் 2 டம்ளர் மோர் , 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கணும். கொஞ்சம் உப்பு, எலுமிச்சை சாறு கொஞ்சம், எலுமிச்சை தோல் சிறிது, சுக்கு, பச்சை மிளகாய், கருவேப்பிலை இவை எல்லாம் சேர்த்து மூடி வைக்கவும். பகல் 10 மணிக்கு மேல் அதை எடுத்து ஒரு வாய் குடிச்சா உங்களுக்கு அண்டார்டிக்காவில் இருப்பது போல இருக்கும். தில் மாங்கே மோர் என சொல்லத்தோன்றும்...!

  • குளிர்சாதன அறையில் அதிக நேரம் செலவிடாதீர்கள். வெப்பம் தாங்கும் சக்தியை உங்கள் உடல் இழந்து, கோடை தாக்குதலால் உடனடியாக உடல் பாதிக்கப்படும். முடிந்த அளவு மின்விசிறி மற்றும் குளிர்சாதன கருவிகள் இல்லாமல் இயல்பு வெப்பத்தில் இருங்கள்.

  • சில எளிய சுவாச பயிற்சியால் கோடை வெப்பத்தின் தாக்கத்தை நம் உடல் உணராமல் குறைக்கலாம்.

சீத்தலி என்ற கோடைக்கால சுவாச பயிற்சி ஒன்று உங்களுக்காக விளக்குகிறேன். முயன்று பாருங்கள்.

  • உணவு சாப்பிடாமல் காலை நேரத்தில் செய்ய வேண்டிய பயிற்சி இது.

  • உடலை நேராக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

  • கைகளை தளர்வாக தொடைப்பகுதியில் வைத்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் நாக்கை குழாய் போல குவித்துக்கொள்ளுங்கள்.

  • சுவாசத்தை வாய் வழியே நாக்கின் குழாய் வழியே முழுமையாக இழுக்கவும்.
    வாய் மூடி சுவாசத்தை மூக்கின் வழியே வெளிவிடவும்.

  • கண்களை மூடிக்கொண்டுக் கொண்டு இதே போல சுவாசத்தை வாய் வழியே எடுத்து நாசிவழியே வெளிவிடவும்.

  • தொடர்ந்து 10 நிமிடம் செய்யவும்.

இந்த பத்து நிமிட பயிற்சியால் நாள் முழுவதும் உடல் மிகவும் குளிச்சியாகவும், சூழலில் இருக்கும் வெப்பம் உணரமுடியாத அளவுக்கு குறைவாகவும் தெரியும்.


இவற்றில் குறைந்தது இரண்டு விஷயங்களையோ அல்லது அனைத்தையும் பின்பற்றினால் எளிமையாக கோடைகாலத்தை சமாளிக்கலாம்.

இவ்வாறு விளக்கினான் சுப்பாண்டி.


சுப்பாண்டியின் அறிவுத்திறனுக்கு காரணம் என்ன தெரியுமா?

கோடை உச்சத்திற்கு போனால் சிலருக்கு மனநிலை பிசகிவிடுமாம். அதுபோல சுப்பாண்டி பாதிக்கப்பட்டு மனம்நிலை தவறிவிட்டான்..!


குறிப்பு : ஏப்ரல் மாதம் 20 முதல் மே 5 ஆம் தேதி வரை வெய்யிலின் அளவு அனைத்து இடங்களிலும் அதிகபட்சத்தை எட்டும் அளவுக்கு இருக்கும் என்பதால் தகுந்த முன் ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.

Thursday, December 17, 2009

யோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா ?

ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் நான் வினை ஆற்றுவதில் கவனமாக இருப்பேன். கர்மாக்களை களைந்து இறை நிலையில் இருக்க முயற்சி செய்வது ஆன்மீக வாழ்க்கையின் ஒரு அங்கம். வினையற்று இருப்பதுவே தியானமும் சமாதியும் என என் ரகசிய எதிரி திருமூலரின் கருத்து.

அப்படி இருந்தாலும் இந்த தலைப்பில் எதிர்வினையாற்றலாமா என யோசித்தேன். என் சுய நலத்திற்காக ஒரு வினையோ, பிறருக்கு செய்வினையோ வைத்தால் தானே தப்பு :) . ஒரு சிந்தாந்தத்தை பற்றி மக்களுக்கு குழப்பம் வரும் பொழுது, அக்குழப்பத்தின் பதில் என்னிடம் இருந்தும் குழப்பங்களை கண்டு சும்மா இருந்தால் அதுவே தீவினையாக மாறுமல்லவா? என்ன ரொம்ப குழப்பமா இருக்கா? மேற்கொண்டு படியுங்கள். :)

யோகம் என்பதும் தியானம் என்பதும் பலர் குழப்பிக்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

அஷ்டாங்க யோகம் என்ற ஒரு முறை உண்டு. அது யாமம், நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு நிலைகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்ற பெயர் பெறுகிறது.


பதஞ்சலி என்பவர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை என்ற அழைப்படுகிறார். அதற்கு முன் பலர் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றினாலும் புத்தக வடிவில் அஷ்டாங்க யோகத்தை வடித்தவர் பதஞ்சலி. இவர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவரை பற்றி கூற பல விஷயங்கள் உண்டு. இருந்தாலும் இவர் கூறும் சில வார்த்தைகளை கொண்டு நம் கேள்விக்கு பதில் தேடுவோம். அவர் கூறும் சூத்திரங்களில் முதலில் எடுத்தவுடனேயே கூறுவது

“யோகா சித்த விருத்தி நிரோதனா”

இதன் பொருள் , யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.

நம் மனநலத்தின் காரணமான சித்தம் மேம்படுகிறது. சித்தம் என்பது உணர்வதற்கு அரிய ஒரு உள் மன கட்டமைப்பு. பதஞ்சலி நம்முள் இருக்கும் மனம் என்ற உள்நிலையை மூன்று கட்டமைப்புகளாக பிரித்து பதஞ்சலி யோக சூத்திரத்தில் ஆய்வு செய்கிறார். அவை மனம், சித்தம், புத்தி என வகைப்படுத்துகிறார்.

பதஞ்சலியின் இந்த அலசல் அசாத்தியமானது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு மனிதன் மனோத்தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் இப்படி அலசமுடியுமா என யோசித்ததால் எனக்கு பல நாள் தூக்கம் கேட்டது உண்டு.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் இறைவன் என ஒருவன் இருக்கிறான் என ஒரே ஒரு இடத்தில் மறைமுகமாக கூறுவதுடன் நிறுத்திவிடுகிறார். வேறு எங்கும் இறைவனையோ வழிபாட்டு முறையை பற்றியோ கூறுவதில்லை.

நீ இருக்கிறாய் உனக்கு கூறுகிறேன் என்ற கட்டமைப்பில் அமைந்தது பதஞ்சலி யோக சூத்திரம். மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறலாம்.மேலை நாடுகளில் தத்துவ பள்ளிகளிலும், பல பல்கலைகழகத்திலும் ஆய்வு நூலாக இருக்கிறது.

நம்
நாட்டில் பதஞ்சலி யோக சூத்திரம் என்பதை ஒரு படித்த மனிதனிடம் கேட்டால் பதஞ்சலியா? - பாஞ்சாலியின் தங்கச்சியா என கேட்கக் கூடும்.

நம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமை அடையும் நோக்கத்தில் செய்யபடுவதே யோக முறைகள். யோக முறை என்பது முன்பு ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கே பயன்பட்டு வந்து.

யோக முறை இருவகையாக தற்காலத்தில் இருவகையாக பயன்படுகிறது. ஒன்று யோக பயிற்சி மற்றொன்று யோக சிகிச்சை.

யோக பயிற்சி என்பது ஆன்மீக பாதையில் நம்மை செலுத்த உதவும் கல்வி. முன்காலத்தில் குருவுடன் இருந்து பயணித்து கற்றதை ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கற்றுக்கொள்ளும் பாஸ்ட் புட் பயிற்சிகள்.

இதை தீவிரமாக முயற்சி செய்தால் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும். இத்தகைய
பயிற்சிகள் ஆன்மீக கிண்டர் கார்டன் என வேடிக்கையாக சொல்லலாம்.

யோக சிகிச்சை என்பது தனி நபரின் உடல் குறைபாடுகள், மனக்குறைபாடுகள் கண்டு அதற்கான பயிற்சியை அளிப்பது. எளிமையாக சொல்ல வேண்டுமானல் அஷ்டாங்க யோகத்தை மருந்தாக கொடுப்பது பலரும் யோக பயிற்சியையும், யோக சிகிச்சையையும் போட்டு குழப்பிகொள்கிறார்கள். யோக பயிற்சியால் நிச்சயமாக நோய் குணமாகாது. எதிர்காலத்தில் வரும் நோயை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால் யோக சிகிச்சையால் குணமாக வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

யோக பயிற்சி மற்றும் யோக சிகிச்சை இரண்டுமே மிகவும் தேர்ச்சி பெற்ற நபர்களால் வழங்கப்பட வேண்டும்.

’தேர்ச்சி பெற்ற’ என்றவுடன் பல்கலைகழக பட்டயம் கேட்டாதீர்கள். பட்டயங்கள் எதுவும் யோகத்தில் வேலை செய்யாது. முழுமையாக உணர்ந்தது நீண்ட நாட்கள் செய்த பயிற்சி மற்றும் அனுபவமே அவர்களுக்கு பயன்படும். பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பானவர்கள் என கூற முடியாது அல்லவா? அது போன்றதே இது.

Yoga therapy research என இணையத்தில் தேடிப்பாருங்கள். பல கோடி மதிப்பில் உலகின் பல இடங்களில் ஆய்வுகள் நடந்துவருகிறது. இந்தியாவில் பூனாவிற்கு அருகில் கைவல்ய தாம் என்ற இடமும், முதல் யோக பல்கலைகழகமான பீஹார் ஸ்கூல் ஆப் யோகாவும் யோக சிகிச்சைக்கான தன் ஆய்வுக்கூடம் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

யோக சிகிச்சையில் எப்படி நோய் குணமாகும் என என்னிடம் கேட்காதீர்கள் அதற்கு மூன்று பதிவுகள் எழுத வேண்டி வரும்.

என்னிடம் யோக பயிற்சி செய்ய வருபவர்களிடம், நோய் குணமாக்குதல், சிகிச்சை என்பது நான் செய்வதில்லை என திட்டவட்டமாக கூறிவிடுவேன். யோக பயிற்சி பற்றிய விளம்பரங்களிலும் அத்தகைய சொற்கள் இடம்பெறாது. அதனால் தான் நான் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த துறையிலும் தவறானவர்கள் இருக்கவே செய்கிறார்கள். நான் வசிக்கும் ஊரில் கூட ஒரு யோக பயிற்சி கழகம் செய்யும் விளம்பரம் மிகவும் வருத்தத்தை கொடுக்கும். நாள் பட்ட ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் இந்த யோக பயிற்சியில் குணமாகும் என சுவரொட்டி அடித்து பயிற்சிக்கு அழைக்கிறார்கள்.

ஹரித்துவாரில் ஒரு ’யோக மன்னன் புலிகேசி’ இருக்கிறார். அவர் தனக்கு மீடியா வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக புற்று நோய் குணமாக்குவேன், எய்ட்ஸை குணமாக்குவேன் என பேட்டிகள் தருவார். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பத்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பார். யோக பயிற்சி அவ்வாறு வழங்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அவரிடம் முகபொலிவுக்காக வாங்கிய ஆயுர்வேத களிம்பை பயன்படுத்தி பலர் பழைய டெலிப்போன் நிறத்தில் திரிகிறார்கள்.

இந்த புலிகேசி மூன்று மாதத்திற்கு முன் ஹோமோ செக்ஸுவல் என்ற நோயை குணமாக்குகிறேன் என பேட்டிகொடுத்தது. இவர் நோயை யார் குணமாக்குவது? கொடுமையின் உச்சம் இவர் வைத்துள்ள யோக மருத்துவ மனைக்கு பதஞ்சலியின் பெயரை வைத்தது தான்.

எத்துறையிலும் கெட்டவர்களும் நல்லவர்களும் இணைந்தே இருக்கிறார்கள். நாம் பதஞ்சலியை போல ப்ரதிபக்‌ஷ பாவனையில் இருந்தால் நமக்கு மேன்மை மட்டுமே ஏற்படும். பதஞ்சலி, யோகமுறை என பல விஷயங்களை நீண்ட தொடராகவோ, கட்டுரையாகவோ அமைக்கலாம் என இருந்தேன். சூழல் கருதி முடிந்த வரை சுருக்கமாக இங்கே எழுதி இருக்கிறேன்.

வலையுலகம் என்பது நாம் நினைத்ததை எழுதும் இடமல்ல. பலர் பார்க்கும் சந்தையில் நடந்து செல்லுவதை போன்றது. நாம் நினைத்த செயலை இங்கே செய்தோமானால் பிறர் நம் மேல் வைத்திருக்கும் பிம்பம் உடைய வாய்ப்புண்டு. அதுவும் ஊரில் ஒரு நல்லவராக காட்சி அளிப்பவர் திடிரென சந்தை மைதானத்தில் பல்டி அடித்தால் என்னை போன்ற பிச்சைக்காரர்கள் எல்லாம் கருத்து சொல்ல வேண்டி வரும்.

எழுதும் முன் நமக்கு ஒரு விஷயம் நன்றாக தெரிந்தால் மட்டும் எழுதுவது நல்லது. இல்லை என்றால் மொக்கை பதிவுகள் , வேட்டைக்காரன் விமர்சனம், தெரியாத பெரியாரிசத்தை நாத்தீகம் என்ற பெயரில் பதிவு ஏதோ ஒன்றை போட்டு ஜோதியில் ஐக்கியமாகிவிடுவது சால சிறந்தது.

Wednesday, April 29, 2009

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்
- ஆயுள் தரும் வேதம்.

மனித குலம் தோன்றியதிலிருந்து தொடர்ந்து போராடிவரும் ஒரு விஷயம் நோய்தடுப்பு. உடல் ஆரோக்கியம் பெற பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். புதிய வியாதிகளுக்கு மருந்து கண்டறிந்ததும் , மேலும் பல புதிய வியாதிகள் தோன்றி சவாலாக இருப்பதையும், கண்கூடாக காண்கிறோம். மனிதன் ஆயுளை வளர்க்கும் எண்ணத்தில் களைப்படையாமல் தொடர்ந்து போராடி வருகிறான் என்பது உண்மை.

நவீன மருத்துவத்துறை தற்சமயத்தில் அறிவியல் சார்ந்து பல வளர்ச்சியை கண்டிருக்கிறது. மேலும் பல புதிய ஆராய்சிகள் நடை பெற்றுவருகிறது. நவீன மருத்துவத்தில் உடல் உறுப்புகளை காட்டிலும், மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் அதிகம் எனலாம். மருத்துவதுறையின் சேவைகள் முடிவற்றது, வளர்ச்சி அடையக்கூடிய ஓர் துறை. மனிதனுக்கு ஏற்பட்ட சிக்கல்களை மருத்துவத்தால் குணமாக்கும் மருத்துவர் தெய்வத்திற்கு நிகராக கருதப்படுகிறார். மனித உடம்பை இயந்திரமாக பாவித்து வாகனத்தை பழுது பார்ப்பதைப் போல உதிரிபாகங்களை பழுது பார்க்கும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், எனினும் நல்லவர் ஒருவர் இருந்தாலும் உலகில் மழை பொழியும் எனும் சான்றோர் வாக்கினைப்போல பல மனித நேய மருத்துவர்கள் இருக்கிறார்கள்.


நமது பாரத கலாச்சாரம் அனைத்து துறையிலும் பன்மடங்கு முன்னேற்றம் அடைந்திருந்தது. கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நிலையை அடைந்த பொற்காலம் உண்டு. இந்திய தேசத்தை காண வந்த வெளிநாட்டினர்களின் பயணக்குறிப்பை கண்டால் இந்தியாவின் உயர்வை உணர முடியும். 750 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பயணித்த பயணியின் குறிப்பேட்டில் ஓர் அதிசயிக்கத்தக்க விஷயம் இருந்தது. இந்தியாவில் சிலருக்கு நெற்றிப்பகுதியில் முக்கோணமாக தழும்பு இருப்பதைக் கண்டார்கள். அந்த காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக மூக்கு பகுதியை துண்டிக்கச் செய்தார்கள். இதனால் மருத்துவர் புருவ மத்தியிலிருந்து தலைகீழாக முக்கோண வடிவில் தோலை எடுத்து மூக்கு பகுதியை உருவாகினார்கள்.

வெளிநாட்டினரின் பயணகுறிப்பில் எழுதப்பட்ட இந்த தகவல் நவீன பிளாஸ்டிக் சர்ஜரிக்கு வித்தாக அமைந்தது. நமது வேதங்களின் பிற சேர்க்கையாக இருப்பது உப வேதங்கள் என்கிறோம். இதில் தர்ம சாஸ்திரம், தனுர் வேதம் [போர்கலை ] மற்றும் ஆயுர்வேதம் என பல உப பகுதிகள் உண்டு.


ஆயுர்வேதம் எனும் இந்த மருத்துவ பிரிவு, 100 பிரிவுகளையும் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் கொண்டது. ஆயுளை கூட்டும் வேத மந்திரம் என்பதால் இதை ஆயுர்வேதம் என்கிறோம். சரகர், ஸுஸ்ருதர், வாக்பாதர் மற்றும் சாரங்கதாரர் எனும் ரிஷிகள் பலர் மருத்துவ துறையில் புகழ்பெற்று அயுர்வேத மருத்துவ துறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்கள். சரகர் என்பவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராவார்.


இவர் பயன்படுத்திய கருவிகளை கண்டு தற்கால அறுவைசிகிச்சை மருத்துவர்கள் வியப்படைந்தார்கள், இவர் வழியில் வந்த மாணவர்கள் தான் வெளிநாட்டினர் கண்ட மூக்கு அறுவை சிகிச்சையை செய்தவர்கள். மேற்கண்ட ரிஷியிகளின் குறிப்பிலிருந்து நவீன மருத்துவர்கள் பல விஷயங்களை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். மருந்து தயாரித்தல், அறுவை சிகிச்சை வியாதியை ஆராய்தல் என ஆயுர்வேதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.


மனித உடல் மூன்று அம்சங்கள் கொண்டது என ஆயுர்வேதம் வரையறுக்கிறது. 'தோஷ தாது மல மூலம் ஹி சரீரம் ' என்பது ஆயுர்வேத கூற்று. மூன்று தோஷம், எழு தாதுக்கள், மும்மலங்கள் உடலை உருப்பெற செய்கிறது என்பதே இதன் விளக்கம்.


வாதம் - பித்தம் - கபம் என்பது மூன்று தோஷங்கள். இவை சம நிலை தவறும் பொழுது உடல் நோய் ஏற்படும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.


ரசா, இரத்தம், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்லம், சதை [மாமிசம்] என்பவை சப்த தாதுக்கள் எனவும், வியர்வை, மலம், சிறுநீர் என்பவை மும்மலம் எனவும் பிரிக்கப்படுகிறது. மூன்று தோஷத்தின் பாதிப்பு சப்த தாதுக்களிலும் ' மும்மலத்திலும் எதிரொலிக்கும் என்பது ஆயுர்வேத விளக்கம்.


இந்த தெய்வீக மருத்துவ முறை உப வேதத்தில் இருப்பதற்கு காரணம், மனித உடல் நோயினால் பாதிப்பு அடைவதற்கு கர்ம வினை காரணம் என உறுதியாக கூறுகிறது. வேதத்தின் சாரம் என அழைக்கப்படும் வேதாந்தங்களின் உண்மை இதில் பளிச்சிடுவதை நாம் உணர வேண்டும்.


சாத்வ, தமோ, ரஜோ குணங்கள் கொண்டு ஆயுர்வேதத்தில் மூன்று தோஷங்கள் பிரிக்கப்படுகிறது. சாத்வ குணம் கொண்டது பித்தம், தமோ குணம் கொண்டது கபம், ரஜோ குணம் கொண்டது வாதம் என கூறலாம். இவை சம நிலையில் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமும்,

சமநிலை தவறி எந்த தோசம் ஆளுமை செலுத்துகிறதோ அதன் அடிப்படையில் உடல் செயல் அமையும். உதாரணமாக கபம் அதிகரித்தவர்கள் தமோ குணத்திற்கு ஏற்ப மந்த தன்மையையும் செயலில் பின்னடைவும் ஏற்படுவதை உணரலாம்.

உடலின் விஞ்ஞானம் மட்டுமல்லாமல், சூழ்நிலையின் விஞ்ஞான உண்மைகளையும் ஆயுர்வேதம் விளக்குகிறது. வருடத்திற்கு ஆறு பருவ காலங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு காலத்திற்கும் எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும், என்ன பொருளை உணவாக உட்கொண்டால் பருவ காலங்களில் உடல் ஆரோக்கியம் பெறலாம் என ஆயுர்வேதம் நீண்ட பட்டியலை தருகிறது.


வேதத்தின் அங்கம் ' வேதாங்கம்' என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வேத பிரிவுகளும் [அங்கங்களும்] பிற அங்கங்களுடன் தொடர்புடையது. ஆயுர்வேதம் எனும் இந்த தெய்வீக மருத்துவ முறை, ஜோதிடம் எனும் மற்றொரு வேத அங்கத்துடன் இணைந்து சக்தி மிக்கதாக செயல்பட்டு வந்தது. தற்சமயத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள் ஜோதிட அறிவுடன் செயல்படுவது குறைவே. கர்ம வினையை கருவாக கொண்ட இரு பரிமாணங்கள் தான் ஜோதிடமும், ஆயுர்வேதமும். ஒருவரின் ஜாதகத்தை கொண்டு அவரின் நோய் தன்மையை ஆராய்ந்து மருத்துவம் செய்வதில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் ஒருவருக்கு குணமாகாது என ஜோதிடத்தில் உணர்ந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்கவும் என ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. குழந்தை பிறப்பு குறைபாடுடன் வந்தால், முதலில் அவர்களின் ஜாதகத்தை கொண்டு குழந்தை பாக்கியம் உண்டா என ஆராய்ந்த பின் மருந்து கொடுக்க வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் செயல்முறை.


இந்த முறையில் செயல்படாத பட்சத்தில் மருத்துவருக்கும், ஆயுர்வேதத்திற்கும் களங்கம் ஏற்படும் என்பதே இதற்கு பின்னால் உள்ள உண்மை.


ஜோதிடம், வேத கால மருத்துவ முறையில் சோதனை களமாக இருந்தது. தற்கால இரத்த பரிசோதனை, எக்ஸ் - ரே என்பதற்கு பதிலாக செலவில்லாத சோதனை களமாக பயன்பட்டது.





மும்மலங்கள், தோசங்கள் மற்றும் தாதுக்கள் இவை நவகிரகங்களின் தொடர்புடன் இயங்குகிறது. இதன் பட்டியல் பின்வருமாறு:


மூன்று தோசங்கள் மூலம் பிரிக்கப்படும் 27 நட்சத்திரங்கள்.


வாதம் : அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.
பித்தம் : பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
கபம் : கிருத்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி.

சப்த தாதுக்கள் குறிக்கும் கிரகங்கள்

ரசம் [உணவிலிருந்து ஜீரணிக்கப்பட்ட சத்து] : சூரியன்
இரத்தம் : செவ்வாய்
மாமிசம் [சதை] : குரு
கொழுப்பு : சந்திரன்
எலும்பு : சனி
எலும்பு மஜ்ஜை : சனி / புதன்
சுக்லம் : சுக்கிரன்

மும்மலங்கள் குறிக்கும் கிரகங்கள்

வியர்வை : சனி
சிறுநீர் : சந்திரன்
மலம் : செவ்வாய்

நோய் கொடுக்கும் 6 ஆம் பாவம் மேற்கண்ட நட்சத்திரங்கள், கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது உடலில் நோய் உண்டாகிறது. இதை வைத்து நீங்களும் எளிதாக நோயை ஆராயலாம்.

ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் இணைத்து மருத்துவம் செய்பவர்கள் மிகவும் குறைவு. தற்காலத்தில் சிலர் ஆயுர்வேத மருத்துவம் என்ற பெயரில் சாஸ்திரத்திற்கு புறம்பாகவே செயல்படுகிறார்கள். ஆயுர்வேதத்தை பொறுத்த வரை மருந்து தயாரிக்கும் கிழமை, திதி, நட்சத்திரம் என அனைத்தும் சாதகமாக இருந்தால் தான் மருந்து தயாரிக்க வேண்டும். நோயாளியின் ஜென்ம நட்சத்திரத்திற்கு வேதை நட்சத்திரத்திலோ, வேதை திதியிலோ மருந்து உட்கொள்ள துவங்கக் கூடாதுஎன ஆயுர்வேதம் விளக்குகிறது.

ஆனால் தற்சமயம் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்கள் போன்று மருந்தை தயாரித்து சேமித்து வைக்கிறார்கள். மேலும் நோயளியின் நட்சத்திரத்தை பார்த்து மருந்து உட்கொள்ள சொல்லுவதில்லை. இதனால் ஆயுர்வேத மருத்துவத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவருகிறது. ப்ரணவ பீடம் சார்பில் ஜோதிடமும், ஆயுர்வேதம் இணைந்த பயிற்சியும் கொடுக்கும் எண்ணம் உள்ளது. பரப்பிரம்மத்தின் கருணையால் அது நடைபெறும் என நம்புவோமாக.


மார்ச் 2007

Saturday, October 11, 2008

வேதகால வேளாண்மை

வேதகால வேளாண்மை
- உரமாகும் கிரக சக்தி

ப்ரணவ பீடம் வேதகாலவாழ்க்கையின் முக்கியத்துவத்தை கூறுகிறது. ஆனால் இதை நவீன விஞ்ஞான கொள்கை உடையவர்கள் ஏற்பதில்லை. மேலும் மேற்கத்திய கலாச்சாரத்தில் கலந்திருக்கும் அனைவரும் இதில் முரண்படுவார்கள். உண்மையில் நமது வாழ்க்கை வேதகாலத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதை முன்பே கூறி வழிநடத்துவது தான் ப்ரணவ பீடத்தின் நோக்கம். இன்னும் சில ஆண்டுகளில் வேதகால வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும். மக்கள் அதன் படி வாழ முற்படும் சமயம் அவர்களை வழிநடத்த ஆட்கள் குறைவாக இருப்பார்கள். இந்த குறைபாட்டை போக்கவே ப்ரணவ பீடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வேதகால வாழ்க்கை :

வேதகால வாழ்க்கை என்பது விஞ்ஞான பூர்வமானது. விஞ்ஞானம் என்றவுடன் நவீன கால விஞ்ஞானத்தை கருதவேண்டாம். ஓர் விஞ்ஞான கண்டுபிடிப்பானது பிற உயிர்களுக்கும், எதிர்கால வாழ்க்கை முறைக்கும் பாதிக்காத வகையில் இருந்தால், அது வேதகால விஞ்ஞானம். நவீன விஞ்ஞானம் சுயநலமானது , அவர்களின் கண்டுபிடிப்பு ஒரு விஷயத்திற்கு தீர்வாகவும் பல விஷயத்திற்கு பாதிப்பையும் தரும். உதாரணமாக உணவு பொருட்கள் பதப்படுத்த கண்டுபிடிக்க பட்ட பொருள் ஓஸோன் மண்டலத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதில் பதப்படுத்திய உணவை உட்கொள்வதால் உடல்நல குறைகளும் ஏற்படும் என்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

உங்கள் சிறுவயதில் சமையல் அறை வாயிலில் இருக்கும் தானியத்தை கொத்தும் குருவியை பார்த்திருக்கிறீர்கள் தானே? தற்சமயம் அதை காண முடியாது. உங்கள் சந்ததியினரும் இனி காணமாட்டார்கள். அதற்கு காரணம் செல்போனில் வரும் கதிர்வீச்சால் குருவி இனம் சிறுக சிறுக அழிந்து கொண்டிருக்கிறது.

நவீன ஆராய்ச்சியாளர்கள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறார்கள். எதிர்கால பிர்ச்சனையை உள்ளடக்கி ஆராய்ச்சியை தொடர்ந்தால் இது போன்ற விளைவுகளை தவிர்க்கலாம். வேதகாலத்தில் கண்டிபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் எவரையும் பாதிக்காதவாறு உள்ளது. இதை தெய்வீக கண்டுபிடிப்புகள்(divine invention) எனலாம். உதாரணமாக உலோக பயன்பாடுகள் இருந்தாலும், மண் பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என கண்டறிந்து பயன்படுத்தினார்கள்.

இந்த மண்பாண்டங்கள் பயனற்று போகும் சமயம் மண்ணுடன் கலந்து விடும். மேலும் மின் கடத்தா பொருளுக்காக இயற்கையான தர்பை புல்லை பயன்படுத்தினார்கள். தர்பை புல்லை பயன்பாட்டிற்க்கு பிறகு குப்பையுடன் கலந்தாலும் ,இயற்கையான பொருள் என்பதால் பாதிப்பதில்லை. நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பான செயற்கை ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பயன்படுத்தி ஏற்படும் விளைவை விளக்க தேவை இல்லை.நவீன விஞ்ஞானம் அனைத்தும் தவறு என கொள்ள வேண்டாம். பொது நல நோக்கமற்ற கண்டுபிடிப்பை மட்டுமே நாம் தவிர்க்க சொல்கிறோம்.


வேதகால விஞ்ஞானத்தை உள்ளடக்கிய வாழ்க்கை முறைதான் வேதகால வாழ்க்கை. ஜோதிடம், யோக சாஸ்திரம் போன்ற வேதகால விஞ்ஞானத்தை அனைத்து வாழ்வியல் கோட்பாடுகளிலும் பயன்படுத்தி விழிப்புணர்வுடன் வாழும் வாழ்க்கையாகும். இந்த முழுமையான வாழ்க்கையால் தனக்கோ பிறர்க்கோ எந்த ஒரு தீங்கும் இன்றி வாழலாம். மேலும் இதை நடைமுறை படுத்துவதால் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பால் பூமிக்கு ஏற்பட்ட குறைபாடுகளை போக்கலாம்.

வேத கால வாழ்க்கை முறையின் ஓர் அங்கமே வேதகால வேளாண்மை.


நவீன வேளாண்மை பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 வருடங்களில் ரசாயனங்களை புகுத்தி அழிவை ஏற்படுத்தியது. இயற்கைக்கு முரண்பாடான அதிக மகசூலை பெறும் சமயம் இதன் விளைவை அவர்கள் உணரவில்லை. விளைலம் சக்தி அற்றும். அதில் விளையும் பொருட்கள் சத்துக்கள் இல்லாமல் ரசாயனமாக இருக்கிறது. தற்சமயம் இந்த விளை நிலங்கள் எலும்புக்கூடாக நிற்கும் பொழுது ,நிதர்சனமும் முகத்தில் அரைகிறது. இதன் காரணமாக மனித குலத்தின் உடலில் இரத்தத்திற்கு பதில் ரசாயன கலவையே உள்ளது எனலாம். இதை தாமதமாகவே உணர்ந்தனர் நவீன விஞ்ஞானிகள். மேலும் 1980க்கு பிற்கு பிறந்தவர்களுக்கு மலட்டுதன்மை அதிகரிக்க ரசாயனம் கலந்த உணவு பொருளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.


20 வருடங்களுக்கு முன்னால் பொது இடங்களிலும் , வீடுகளிலும் மூட்டை பூச்சி கொசு ஆகிய பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். இதற்கு தனியாக ரசாயன மருந்து மூலம் அழிப்பார்கள். இவை இக்காலத்தில் மருந்து அடிக்காமலே வெகுவாக குறைந்துவிட்டது. தற்காலத்தில் மனிதனை கடிக்கும் பூச்சிகள் தாமாகவே இறந்து விடுவதால், ரசாயன மருந்து தேவையில்லை. மனிதன் அவ்வளவு ரசாயனமாகிவிட்டான். இவ்வாறு மனித இரத்தம் ரசாயனமாக மாறியதை பற்றி வேடிக்கையாக கூறுவார்கள்.

ஜெர்மானிய மக்கள், வேடிக்கையான ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைகளும் உண்டு என்பார்கள். அதைபோல இதில் சில உண்மையும் உண்டு. உபஷத்துகளில் ஒன்றான கடோ பஷத்து கூறும் மந்திரம் " எதை உண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்". இயற்கையான உணவை உண்டால் இயற்கையாகவும், ரசாயன கலவையை உண்டால் ரசாயனமாகவும் மாறுவது இயல்புதானே?

ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு விவசாயம் செய்வது? இயற்கை விவசாயத்தை பற்றி தெரியாதவர்கள் கேட்கும் கேள்வி இது. முற்காலத்தில் வேளாண்மை செய்யும் பொழுது ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு செய்தார்கள்? இதை தெரிந்து கொண்டால் நமது வேளாண்மை வேதகால வேளாண்மை ஆகிவிடும்.

நம் முன்னேர் கண்டறிந்த "பஞ்சகவ்வியம்" ஒரு வரப்பிரசாதம். இதை உரமாக கொண்டால் மண்ணுக்கும், விளைச்சலுக்கும் எந்த கெடுதலும் கிடையாது. பஞ்சகவ்வியம், மண்புழு உரம் ஆகியவை இயற்கை நமக்கு அளிப்பவை. இதைகொண்டு வேளாண்மை செய்வதால் நல்ல விளைச்சலையும், விளைபொருட்கள் நல்ல உயிரோட்டம் உள்ளவையாக இருக்கும். இதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்வதுடன், அனைவரையும் இதை செய்ய சொல்லுகிறது. ஆயுர்வேதம் பஞ்சகவியத்தை மருந்தாக உட்கொள்ள சொல்கிறது.

பஞ்சகவ்வியம் என்பது பசு மாடு நமக்கு வழங்கும் பால்,தயிர்,நெய், பசுஞ்சாணம், கோமியம் ஆகிய ஐந்தும் சில விகிதாச்சாரத்தில் கலந்த கலவையாகும். ஓர் மனிதன் பஞ்சகவ்வியத்தை நிலத்தில் இடும்பொழுது அதை சாப்பிட்டால் அவனிக்கு ஒன்றும் ஆகாது. இதே அவன் ரசாயன உரத்தை உண்டால் அவனின் நிலையை நினைத்து பாருங்கள். தன் உடல் போன்றது தானே அந்த பயிறும் என உணரும் நிலை விவசாயிக்கு இல்லை.முற்காலத்தில் விவசாயம் செய்யும் விவசாயி ஒவ்வொருவரும் மாடுகளை வைத்திருந்தனர். தற்சமயம் நவீன கருவிகளான டிராக்டர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் மாடுக்கும் விவசாயிக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.

உலோகத்தை பயன்படுத்திய நம் முன்னோர் , நிலத்தை உழும் கலப்பை மற்றும் விதை வைக்கும் கலன் ஆகியவற்றை மரத்தில் வைத்திருந்தார்கள். இதற்கும் சில காரணங்கள் உண்டு. இரும்பில் இருக்கும் அயனிகள் காந்த மின்னூட்டம் அடைந்து விளைலங்களையும், விதையையும் உயிரற்றதாக்கிவிடும். விவசாயத்திற்கு பயன்படும் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்களை அழித்துவிடும். இதை அறிந்து கொண்ட வெளிநாட்டுகாரர்கள் மரத்தை கலப்பையாக பயன்படுத்துகிறார்கள்.

இந்தியன் என்றும் முன்னோர்களை உதாரணமாக எடுப்பதை காட்டிலும் வெளிநாட்டுகாரர்களையே உதாரணமாக்க விரும்புவான். இதனால் கூடிய சீக்கிரம் நாமும் மண்கலப்பையை பயன்படுத்துவோம் என்பது மகிழ்ச்சியான செய்தி.

இது போன்ற இயற்கை வேளாண்மையை மேலும் தரம் உயர்த்தும் வண்ணம் ஜோதிடத்தையும் இணைத்து கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப வேளாண்மை காரியங்களை செய்வதால் பல வகையில் முன்னேற்றம் உண்டு. உதாரணமாக சில கிரகங்கள் சார்ந்து செய்ய தகுந்த விவசாய கடமைகள்.

கிரகம்------------------------ தன்மை ----------------------- செயல்
குரு ------------------------ புதிய வளர்ச்சி------------------- விதைத்தல்
சனி ------------------------ மறைவு பொருட்கள் ------------- கிழங்கு பயிரிடல்
சுக்கிரன்-------------------- கவர்ச்சியான பொருள் -------------பூக்கள்/ தோட்டம்
சூரியன்---------------------நிர்வகித்தல்------------------------ களை / உரமிடல்
செவ்வாய்---------------- திடீர்செயல்கள்----------------------பயிர் சீர்செய்தல்
சந்திரன் -------------------- திரவலை------------------------ நீர்விடுதல்
புதன் ------------------------ திட்டமிடல் ----------------------- உழுதல்/விதைத்தல்

இதே போல திதி மற்றும் நட்சத்திரத்திற்கு சில தன்மைகள் உண்டு. இதை கொண்டு வேளாண்மை செய்யும் பொழுது பயிரில் உயிரோட்டம் இருக்கும். சாதாரண ரசாயண உரத்தில் ஒரு கனி 5 நாட்கள் கெடாமல் இருந்தால் , இயற்கைவிவசாயம் செய்யும் பொழுது 8 முதல் 9 நாட்கள் கெடாமல் இருக்கும். இத்துடன் வேதகால வேளாண்மை இணையும் பொழுது கனியின் ஆயுட்காலம் நிச்சயமாக உயரும். இதற்காக தனியாக "வேளாண்மை பஞ்சாங்கம்" ப்ரணவ பீடத்தில் விவசாயத்திற்கு என்றே வெளியிடப்படுகிறது.


பஞ்சகவ்வியம் மற்றும் இதர இயற்கை முறை களைப் பயன்படுத்துவது போக , மந்திர ஜபம் மூலம் பயிர்களை வளர்த்துவது எனும் முறை ஒன்று இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு அருகில் காயத்திரி மந்திரம் அல்லது மஹா மிருத்தியஜெய் மந்திரத்தை ஒலிக்கவிடுவதால் பயிர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படிகிறது என நிரூபணம் செய்துள்ளோம். செடிகளுக்கு வேதமந்திரத்தால் உயிரோட்டம் பெருகிறது என்றால், மனிதர்களான நாம் அதை உண்டால் எவ்வளவு உயிரோட்டம் அடைவோம் என சிந்திக்க வேண்டும். வேதகால வேளாண்மை என்பது விவசாய விஞ்ஞானிகளாலும் ஏற்கப்பட்ட ஒன்று என கூற விரும்புகிறோம்.

மேலும் ப்ரணவபீடம் இயற்கை முறையிலோ அல்லது வேத கால வேளாண்மை முறையிலோ விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு உதவ காத்திருக்கிறது. உலகை வேதகால வேளாண்மையால் பசுமையாக்குவோம், கடவுளின் இருப்பை உணர்த்துவோம்.

Tuesday, September 9, 2008

விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...!

மனித வாழ்வில் விரதங்களை கடைபிடிப்பதால் மேல் நிலையை அடைந்தவர்கள் ஏராளம். அப்படி ஒவ்வொருவரையும் மேல்நிலைக்கு ஏற்றுவதே எங்கள் நோக்கம். வேதங்களில் விரதங்களுக்கு தனி இடம் உண்டு எனலாம்.

விரதம் என்பது பலவகை உண்டு உதாரணமாக உண்ணாமல் இருப்பது, பிரம்மச்சரியம், அகிம்சை என கூறலாம்.இங்கு விரதம் என நான் குறிப்பிடுவது உண்ணா நோன்பு இருப்பதை பற்றிதான். இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

நம் முன்னோர்கள் சொல்லும் விரத தினங்கள் நாள், திதியின் அடிப்படையில் இருப்பதால் இவை ஜோதிடத்தின் மூலம் வந்தது என மனதில் கொள்ளுங்கள். விரதமிருப்பது என்பது உணவு உற்கொள்ளாமல் இருப்பதை மட்டும் காட்டுவதில்லை அதை மீறி சில விஷயங்கள் உண்டு.எல்லா நாளிலும் விரதம் இருக்காமல் சில நாட்களில் மட்டும் விரதமிருப்பதை கூறும் காரணமும் இதுதான்.

வான்மண்டலத்தில் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிலையை அனுசரித்து அதன் அடிப்படையில் விரதமிருந்தால் உடல்,மனம் மற்றும் ஆன்மா உயர்லையை அடையும் என்கிறார்கள். இந்து மதம் மட்டும் அல்லாமல் எல்லா மதத்தினரும் விரதத்தை கடைபிடிப்பது, விரதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என காட்டும்.

இந்திய கலாச்சாரத்தில் பலதரப்பட்ட விரத அனுஷ்டானங்கள் உண்டு.இதில் திதி மற்றும் வாரதினங்கள் அடைப்படியில் விரதமிருப்பது என்பது முக்கியமானதாகும். ஏகாதசி, சஷ்டி, சதுர்த்தி போன்ற திதிகளிலும் மற்றும் திங்கள் (சோம வாரம்) , வியாழன் (குருவாரம்) போன்ற வாரநாட்களிலும் விரதமிருப்பது நன்று.

சட்டியில் இருந்தால் - அகப்பையில் வரும் - என்பது பழமொழி. இது காலத்தால் மருவி இந்த நிலையில் உள்ளது. இதன் உண்மையான கருத்து " ஷஷ்டியில் இருந்தால் -அகப்பை வளரும்".

அதாவது ஷஷ்டியில் விரதம் இருந்தால் -அகப்பை (கருப்பை)வளரும் என்பதாகும். இந்த
பழமொழியை கொண்டே இதன் சிறப்பை அறியலாம். மேலும் திதிகள் என்பது 15 நாளுக்கு ஒருமுறை வரும். மாதத்தில் 2 முறை விரதம் இருப்பது நமது உடல் நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்தையும் வளர்க்கும்.

சந்திராம்ஸ விரதம் என சிலர் வட இந்தியாவில் கடைபிடிப்பதுண்டு. சந்திரன் 15 நாள் வளர்பிறையாகவும் பின்பு 15 நாள் தேய்பிறையாகவும் இருப்பதை வைத்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள். உதாரணமாக முதல் திதி அன்று ஒரு கவளம் சாப்பாடு, 2ஆம் திதி அன்று இரு கவளம் சாப்பாடு என உயர்த்தி பௌர்ணமி அன்று முழு சாப்படு சாப்பிடுவார்கள்.

இதேபோல அடுத்தநாள் ஒரு கவளம் சாப்பாடு குறைத்துக் கொண்டே வந்து அமாவசை அன்று ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். இதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்துகிறார்கள்.

ஆனால் வேத சாஸ்திர ரீதியில் ஏகாதசி விரதித்திற்கு ஓர் முக்கியத்துவம் உண்டு. பகவத்த்கீதையில் பரமாத்மா திதியில் ஏகாதசியாக இருக்கிறேன் என கூறுகிறார். ஏகாதசியில் விரதமிப்பது மிகவும் சிறந்தது. சிலர் இதை தவறாக கடைபிடிக்கிறார்கள். ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல விரதம். இதை முறைப்படி கடைப்பிடிப்பது விரதமாகும். உதாரணமாக ஏகாதசிக்கு முன்பு 3 நாட்கள் , பின்பு 3 நாட்கள் என மொத்தம் 7 நாட்கள் விரதம் மேற்கொள்ளவேண்டும்.

முதல் நால் எளிய உணவும், அடுத்த நாள் பழவகைகள் உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். மூன்றாம் நாள் பழரசம் மட்டும் பருகவும். அதற்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று, எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் விரததினமாகும். அதற்கு அடுத்த தினம் இதே போல படிப்படியாக உணவு லையை மாற்றவும்.இதை கீழே உள்ள அட்டவணை விளக்கும்.,

திதி உணவு முறை
------ ---------------------
அஷ்டமி எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)

நவமி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்

தசமி பழரசங்கள், எலுமிச்சை ரசம்

ஏகாதசி கோவில் சென்று துளசி தீர்த்தம் அருந்தி விரதம் துவங்கவும்

துவாதசி பழரசங்கள், எலுமிச்சை ரசம்

திரயோதசி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்

சதுர்தசி எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)

இந்த உணவு முறையை கடைபிடிக்கும் சமயம் அந்த நாளில் திதி ஆரம்பிக்கும் நேரத்தை சரிபார்த்து ஆரம்பிக்கவும். ஒருநாளின் பிற்பகுதியில் கூட திதி ஆரம்பிக்கலாம். பஞ்சாங்க உதவியுடன் இதை பின்பற்றவும். இந்த விரத முறை மிகவும் படிபடியாக மற்றும் விஞ்ஞான ரீதியில் அனுகும் முறையாகும். வழக்கமாக திடீரென ஒரு நாள் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் நமது உடல் மற்றும் மனத்தடுமாற்றம் ஏற்படும். இதை தவிர்க்கவே இந்த முறை.

ஜோதிடரீதியில் விரதங்களின் தொடர்பை பார்ப்போம். 2 ஆம் பாவம் உணவு உண்பதை காட்டும். 6ஆம் வீடு உடல் நோய் குறிக்கும். விரதம் இருக்கும் சமயம் இதன் விரய பாவம் 1 மற்றும் 5 நடக்கும். 1,5 என்பது ஆன்மிக முன்னேற்றம் மற்றும் நோயற்ற வாழ்வை குறிக்கிறது.நாம் மனமுவந்து இதை செய்வதால் 1,5,11 என செயல்பட்டு சிறந்த வாழ்க்கையை காட்டும்.

விரத நாளான ஏகாதசி அன்று மௌன விரதம் இருப்பதும் நன்று. மௌன விரதம் இருந்தாலும் 1,5,11 என்ற வீடும் குரு மற்றும் சூரியன் சம்மந்தப்படு வேலை செய்வதால் உடல் மற்றும் ஆன்ம முன்னேற்றம் உண்டு

மேலும் ஏகாதசி அன்று, வளர்பிறை அல்லது தேய்பிறை என எந்த ஏகாதசியானாலும் சூரியனும் சந்திரனும் 120 டிகிரி அதாவது சரியான கோணம் என்ற நிலையில் இருப்பதால் கோள்கள் ரீதியாக இதற்கு முக்கியத்துவம் உண்டு. அன்று நமது உடல் மற்றும் மனது தெய்வ நிலைக்கு(மேல் நோக்கி) செல்ல தயாராகிறது.

நாம் உணவு உட்கொண்டு உணவை ஜீரணம் செய்ய கீழ்நோக்கி இழுப்பது பாவச்செயல் ஆகும். வட இந்தியாவில் இந்த ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பாகவும் மற்றும் அதிக கட்டுப்பாடுடனும் கடைபிடிக்கிறார்கள். ப்ரம்மச்சாரிகள்(18 வயதுக்கு உட்பட்டவர்கள்), சன்யாசிகள், கர்பிணி பெண்கள், முதியவர்கள் விரதத்தை கடைபிடிக்க தேவை இல்லை என சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தால் உங்கள் மனம் மற்றும் உடல் முன்னேற்றத்தை பார்த்து நீங்களே இதை கடைப்பிடிப்பதா அல்லது வேண்டாமா என முடிவுசெய்யலாம். ஒருவர் உடல் சுகமில்லாமல் இருந்தால் எந்த திதியானாலும் மேற்கண்ட முறையில் 7 நாட்கள் விரதம் இருந்தால் நோய் எளிதில் மாத்திரை உட்கொள்ளாமல் குணமாவதை காணலாம்.

ஆகவே பகவத்கீதை தோன்றிய நாளான ஏகாதசியை மறக்காமல் கடைபிடித்தால் பரமனின் திருவடியை அடையலாம்.