Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, April 29, 2009

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்
- ஆயுள் தரும் வேதம்.

மனித குலம் தோன்றியதிலிருந்து தொடர்ந்து போராடிவரும் ஒரு விஷயம் நோய்தடுப்பு. உடல் ஆரோக்கியம் பெற பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். புதிய வியாதிகளுக்கு மருந்து கண்டறிந்ததும் , மேலும் பல புதிய வியாதிகள் தோன்றி சவாலாக இருப்பதையும், கண்கூடாக காண்கிறோம். மனிதன் ஆயுளை வளர்க்கும் எண்ணத்தில் களைப்படையாமல் தொடர்ந்து போராடி வருகிறான் என்பது உண்மை.

நவீன மருத்துவத்துறை தற்சமயத்தில் அறிவியல் சார்ந்து பல வளர்ச்சியை கண்டிருக்கிறது. மேலும் பல புதிய ஆராய்சிகள் நடை பெற்றுவருகிறது. நவீன மருத்துவத்தில் உடல் உறுப்புகளை காட்டிலும், மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் அதிகம் எனலாம். மருத்துவதுறையின் சேவைகள் முடிவற்றது, வளர்ச்சி அடையக்கூடிய ஓர் துறை. மனிதனுக்கு ஏற்பட்ட சிக்கல்களை மருத்துவத்தால் குணமாக்கும் மருத்துவர் தெய்வத்திற்கு நிகராக கருதப்படுகிறார். மனித உடம்பை இயந்திரமாக பாவித்து வாகனத்தை பழுது பார்ப்பதைப் போல உதிரிபாகங்களை பழுது பார்க்கும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், எனினும் நல்லவர் ஒருவர் இருந்தாலும் உலகில் மழை பொழியும் எனும் சான்றோர் வாக்கினைப்போல பல மனித நேய மருத்துவர்கள் இருக்கிறார்கள்.


நமது பாரத கலாச்சாரம் அனைத்து துறையிலும் பன்மடங்கு முன்னேற்றம் அடைந்திருந்தது. கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நிலையை அடைந்த பொற்காலம் உண்டு. இந்திய தேசத்தை காண வந்த வெளிநாட்டினர்களின் பயணக்குறிப்பை கண்டால் இந்தியாவின் உயர்வை உணர முடியும். 750 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பயணித்த பயணியின் குறிப்பேட்டில் ஓர் அதிசயிக்கத்தக்க விஷயம் இருந்தது. இந்தியாவில் சிலருக்கு நெற்றிப்பகுதியில் முக்கோணமாக தழும்பு இருப்பதைக் கண்டார்கள். அந்த காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக மூக்கு பகுதியை துண்டிக்கச் செய்தார்கள். இதனால் மருத்துவர் புருவ மத்தியிலிருந்து தலைகீழாக முக்கோண வடிவில் தோலை எடுத்து மூக்கு பகுதியை உருவாகினார்கள்.

வெளிநாட்டினரின் பயணகுறிப்பில் எழுதப்பட்ட இந்த தகவல் நவீன பிளாஸ்டிக் சர்ஜரிக்கு வித்தாக அமைந்தது. நமது வேதங்களின் பிற சேர்க்கையாக இருப்பது உப வேதங்கள் என்கிறோம். இதில் தர்ம சாஸ்திரம், தனுர் வேதம் [போர்கலை ] மற்றும் ஆயுர்வேதம் என பல உப பகுதிகள் உண்டு.


ஆயுர்வேதம் எனும் இந்த மருத்துவ பிரிவு, 100 பிரிவுகளையும் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் கொண்டது. ஆயுளை கூட்டும் வேத மந்திரம் என்பதால் இதை ஆயுர்வேதம் என்கிறோம். சரகர், ஸுஸ்ருதர், வாக்பாதர் மற்றும் சாரங்கதாரர் எனும் ரிஷிகள் பலர் மருத்துவ துறையில் புகழ்பெற்று அயுர்வேத மருத்துவ துறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்கள். சரகர் என்பவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராவார்.


இவர் பயன்படுத்திய கருவிகளை கண்டு தற்கால அறுவைசிகிச்சை மருத்துவர்கள் வியப்படைந்தார்கள், இவர் வழியில் வந்த மாணவர்கள் தான் வெளிநாட்டினர் கண்ட மூக்கு அறுவை சிகிச்சையை செய்தவர்கள். மேற்கண்ட ரிஷியிகளின் குறிப்பிலிருந்து நவீன மருத்துவர்கள் பல விஷயங்களை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். மருந்து தயாரித்தல், அறுவை சிகிச்சை வியாதியை ஆராய்தல் என ஆயுர்வேதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.


மனித உடல் மூன்று அம்சங்கள் கொண்டது என ஆயுர்வேதம் வரையறுக்கிறது. 'தோஷ தாது மல மூலம் ஹி சரீரம் ' என்பது ஆயுர்வேத கூற்று. மூன்று தோஷம், எழு தாதுக்கள், மும்மலங்கள் உடலை உருப்பெற செய்கிறது என்பதே இதன் விளக்கம்.


வாதம் - பித்தம் - கபம் என்பது மூன்று தோஷங்கள். இவை சம நிலை தவறும் பொழுது உடல் நோய் ஏற்படும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.


ரசா, இரத்தம், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்லம், சதை [மாமிசம்] என்பவை சப்த தாதுக்கள் எனவும், வியர்வை, மலம், சிறுநீர் என்பவை மும்மலம் எனவும் பிரிக்கப்படுகிறது. மூன்று தோஷத்தின் பாதிப்பு சப்த தாதுக்களிலும் ' மும்மலத்திலும் எதிரொலிக்கும் என்பது ஆயுர்வேத விளக்கம்.


இந்த தெய்வீக மருத்துவ முறை உப வேதத்தில் இருப்பதற்கு காரணம், மனித உடல் நோயினால் பாதிப்பு அடைவதற்கு கர்ம வினை காரணம் என உறுதியாக கூறுகிறது. வேதத்தின் சாரம் என அழைக்கப்படும் வேதாந்தங்களின் உண்மை இதில் பளிச்சிடுவதை நாம் உணர வேண்டும்.


சாத்வ, தமோ, ரஜோ குணங்கள் கொண்டு ஆயுர்வேதத்தில் மூன்று தோஷங்கள் பிரிக்கப்படுகிறது. சாத்வ குணம் கொண்டது பித்தம், தமோ குணம் கொண்டது கபம், ரஜோ குணம் கொண்டது வாதம் என கூறலாம். இவை சம நிலையில் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமும்,

சமநிலை தவறி எந்த தோசம் ஆளுமை செலுத்துகிறதோ அதன் அடிப்படையில் உடல் செயல் அமையும். உதாரணமாக கபம் அதிகரித்தவர்கள் தமோ குணத்திற்கு ஏற்ப மந்த தன்மையையும் செயலில் பின்னடைவும் ஏற்படுவதை உணரலாம்.

உடலின் விஞ்ஞானம் மட்டுமல்லாமல், சூழ்நிலையின் விஞ்ஞான உண்மைகளையும் ஆயுர்வேதம் விளக்குகிறது. வருடத்திற்கு ஆறு பருவ காலங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு காலத்திற்கும் எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும், என்ன பொருளை உணவாக உட்கொண்டால் பருவ காலங்களில் உடல் ஆரோக்கியம் பெறலாம் என ஆயுர்வேதம் நீண்ட பட்டியலை தருகிறது.


வேதத்தின் அங்கம் ' வேதாங்கம்' என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வேத பிரிவுகளும் [அங்கங்களும்] பிற அங்கங்களுடன் தொடர்புடையது. ஆயுர்வேதம் எனும் இந்த தெய்வீக மருத்துவ முறை, ஜோதிடம் எனும் மற்றொரு வேத அங்கத்துடன் இணைந்து சக்தி மிக்கதாக செயல்பட்டு வந்தது. தற்சமயத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள் ஜோதிட அறிவுடன் செயல்படுவது குறைவே. கர்ம வினையை கருவாக கொண்ட இரு பரிமாணங்கள் தான் ஜோதிடமும், ஆயுர்வேதமும். ஒருவரின் ஜாதகத்தை கொண்டு அவரின் நோய் தன்மையை ஆராய்ந்து மருத்துவம் செய்வதில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் ஒருவருக்கு குணமாகாது என ஜோதிடத்தில் உணர்ந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்கவும் என ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. குழந்தை பிறப்பு குறைபாடுடன் வந்தால், முதலில் அவர்களின் ஜாதகத்தை கொண்டு குழந்தை பாக்கியம் உண்டா என ஆராய்ந்த பின் மருந்து கொடுக்க வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் செயல்முறை.


இந்த முறையில் செயல்படாத பட்சத்தில் மருத்துவருக்கும், ஆயுர்வேதத்திற்கும் களங்கம் ஏற்படும் என்பதே இதற்கு பின்னால் உள்ள உண்மை.


ஜோதிடம், வேத கால மருத்துவ முறையில் சோதனை களமாக இருந்தது. தற்கால இரத்த பரிசோதனை, எக்ஸ் - ரே என்பதற்கு பதிலாக செலவில்லாத சோதனை களமாக பயன்பட்டது.

மும்மலங்கள், தோசங்கள் மற்றும் தாதுக்கள் இவை நவகிரகங்களின் தொடர்புடன் இயங்குகிறது. இதன் பட்டியல் பின்வருமாறு:


மூன்று தோசங்கள் மூலம் பிரிக்கப்படும் 27 நட்சத்திரங்கள்.


வாதம் : அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.
பித்தம் : பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
கபம் : கிருத்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி.

சப்த தாதுக்கள் குறிக்கும் கிரகங்கள்

ரசம் [உணவிலிருந்து ஜீரணிக்கப்பட்ட சத்து] : சூரியன்
இரத்தம் : செவ்வாய்
மாமிசம் [சதை] : குரு
கொழுப்பு : சந்திரன்
எலும்பு : சனி
எலும்பு மஜ்ஜை : சனி / புதன்
சுக்லம் : சுக்கிரன்

மும்மலங்கள் குறிக்கும் கிரகங்கள்

வியர்வை : சனி
சிறுநீர் : சந்திரன்
மலம் : செவ்வாய்

நோய் கொடுக்கும் 6 ஆம் பாவம் மேற்கண்ட நட்சத்திரங்கள், கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது உடலில் நோய் உண்டாகிறது. இதை வைத்து நீங்களும் எளிதாக நோயை ஆராயலாம்.

ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் இணைத்து மருத்துவம் செய்பவர்கள் மிகவும் குறைவு. தற்காலத்தில் சிலர் ஆயுர்வேத மருத்துவம் என்ற பெயரில் சாஸ்திரத்திற்கு புறம்பாகவே செயல்படுகிறார்கள். ஆயுர்வேதத்தை பொறுத்த வரை மருந்து தயாரிக்கும் கிழமை, திதி, நட்சத்திரம் என அனைத்தும் சாதகமாக இருந்தால் தான் மருந்து தயாரிக்க வேண்டும். நோயாளியின் ஜென்ம நட்சத்திரத்திற்கு வேதை நட்சத்திரத்திலோ, வேதை திதியிலோ மருந்து உட்கொள்ள துவங்கக் கூடாதுஎன ஆயுர்வேதம் விளக்குகிறது.

ஆனால் தற்சமயம் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்கள் போன்று மருந்தை தயாரித்து சேமித்து வைக்கிறார்கள். மேலும் நோயளியின் நட்சத்திரத்தை பார்த்து மருந்து உட்கொள்ள சொல்லுவதில்லை. இதனால் ஆயுர்வேத மருத்துவத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவருகிறது. ப்ரணவ பீடம் சார்பில் ஜோதிடமும், ஆயுர்வேதம் இணைந்த பயிற்சியும் கொடுக்கும் எண்ணம் உள்ளது. பரப்பிரம்மத்தின் கருணையால் அது நடைபெறும் என நம்புவோமாக.


மார்ச் 2007

19 கருத்துக்கள்:

புருனோ Bruno said...

//ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் இணைத்து மருத்துவம் செய்பவர்கள் மிகவும் குறைவு.//

எனது கட்டுரை ஒன்றில் இருக்கும் கருத்துக்களையும் ஒரு முறை படித்து பாருங்கள் :) :)

எனக்கு தெரிந்து பலரும் (மருத்துவர்கள்) ராகு காலத்தில் (அவசர வகை அறுவைசிகிச்சைகள் தவிர்த்த பிற) அறுவை சிகிச்சை செய்வதில்லை. அஷ்டமி நவமி போன்ற நாட்களையும் தவிர்க்கிறார்கள்

ஆனால் இதை (ஜோதிட நம்பிக்கையை) வெளிப்படையாக சொல்வதில்லை.

நான் அப்படியில்லை. எனக்கு சரியென்று தோன்றுவதை வெளிப்படையாக கூறிவிடுவேன் :) :)

essusara said...

சுவாமி ஓம்கார் ,

உங்கள் ஆயுர்வேதம் பற்றிய கட்டுரை படித்த பொது கடந்த வரம் என் மருத்துவ நண்பனிடம் பேசி கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

நான் அவனிடம் ஆயுர்வேதம் பற்றி விளித்தபோது ஆயுர்வேதத்தில் உலோகங்கள் பயன்படுத்த படுவதாகவும் அது சிறு நீரகம், இதயம், மூளை போன்றவற்றை செயல் இலக்க செய்து விடும் என்றும் அதனாலேயே அதன் மற்ற சிறப்பு அம்சங்கள் வெளிவராமல் நவீன மருத்துவம் அதை ஒதுக்கி விடுகிறது என்று கூறினான் .

இது எந்த அளவிற்கு உண்மை ?

அன்புடன்
essusara.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,

உங்கள் அளவிற்கு ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் குறைவு.

மருத்துவ ஜோதிடம் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு சாஸ்திரம். மருத்துவரை அனுகும் ஒருவரின் ஜாதகம் இல்லாமலேயே அவரின் உடல் நோய் அதன் தாக்கம் என அனைத்தையும் சொல்ல முடியும்.

முன்காலத்தில் ஜோதிடரும் வைத்தியரும் ஒருவரே.

முன்காலத்தில் 'பல்ஸ்' பார்த்து வைத்தியம் செய்தார்காள்.

தற்காலத்தில் ‘பர்ஸ்' பார்த்தே வைத்தியம் செய்கிறார்கள்.
:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு essusara,

உங்கள் நண்பரின் கருத்து தவறானது.

சித்த வைத்தியத்தில் மட்டுமே அதிகமாக உலோகம் பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் மூலிகைகளும், நெய் போன்ற வஸ்துக்களும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பயன்படும் மருந்துக்கள் அனைத்தும் இயற்கையான பொருட்களே.

தற்காலம் சிறந்த ஆயுர்வேதிகள் காண்பது அரிது. காரணத்தை கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.
மேலும் ஏழ்மையானவர்களுக்கு எட்டாத உயரத்தில் ஆயுர்வேதம் இருப்பதும் ஒரு குறை.

மற்றபடி பிரசவ காலம்,(பக்கவாதம்)நரம்பியல் சிகிச்சை, உடல் தூய்மை ஆக்கும் சிகிச்சைகள் அனைத்தும் ஆயுர்வேதத்தின் உன்னதமானது.

எம்.எம்.அப்துல்லா said...

//சரகர், ஸுஸ்ருதர், வாக்பாதர் மற்றும் சாரங்கதாரர் எனும் ரிஷிகள் பலர் மருத்துவ துறையில் புகழ்பெற்று அயுர்வேத மருத்துவ துறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்கள். சரகர் என்பவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராவார்.
//

சாமி தன்வந்திரி இல்லையா சாமி???

எம்.எம்.அப்துல்லா said...

எனது நண்பரான யுனானி மருத்துவரிடம் பேசும் போது ஒரு விஷயம் சொன்னார்... யுனானியும் ஆயுர்வேதமும் கிட்டத்தட்ட ஒன்று என்று. “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவன்” அப்பிடின்னு ஒரு பாட்டு இறைவனைப் பற்றி உண்டு. அதுதான் நினைவுக்கு வருகின்றது.

புருனோ Bruno said...

//நான் அவனிடம் ஆயுர்வேதம் பற்றி விளித்தபோது ஆயுர்வேதத்தில் உலோகங்கள் பயன்படுத்த படுவதாகவும் அது சிறு நீரகம், இதயம், மூளை போன்றவற்றை செயல் இலக்க செய்து விடும் என்றும் அதனாலேயே அதன் மற்ற சிறப்பு அம்சங்கள் வெளிவராமல் நவீன மருத்துவம் அதை ஒதுக்கி விடுகிறது என்று கூறினான் .//

உலோகங்கள் பயன்படுத்துவது உண்மை. ஆனால் முறையாக ஆயூர்வேதமோ, சித்தாவோ முழுவதும் படித்த வைத்தியர் என்றால் அவர் மிக குறைந்த அளவில், போதிய “பத்தியங்களுடன்” மட்டுமே அந்த மருந்தை சாப்பிட கூறுவார்

மேலும் ஒவ்வொருவருக்கும் அந்த மருந்தில் அளவு, சாப்பிட வேண்டிய முறை, மருந்துடன் சேர்க்க வேண்டிய காய்கறிகள், தவிர்க்க வேண்டிய காய்கறிகள், அசைவம் உண்ணலாமா, எண்ணை சேர்க்கலாம போன்ற விஷயங்களை எல்லாம் கூறுவார்

அப்படி முறையாக சாப்பிட்டால் பிரச்சனை வரும் வாய்ப்பு குறைவு

இது எதுவும் தெரியாத “விடுதியில் அறை பிடித்து வாலிப வயோதிக அன்பர்களே” என்று கூவுபவர்களிடம் சென்றால் உங்கள் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவை பாழ்

எனக்கு சித்த மருத்துவத்தில் சிறு அளவிற்கு அறிவு உண்டு. ஆனால் நான் யாருக்கும் மருந்து அளிப்பதில்லை (ஏதோ நல்லெண்ணை, மஞ்சள், ஆடாதொடா, ஊமி ஒத்தடம்) என்ற அளவில் நிறுத்தி கொள்கிறேன் :)

ஆனால் என்னை விட சித்தா / ஆயுர்வேத மருத்துவ அறிவு குறைவாக இருந்தும் தைரியமாக மருந்து கொடுப்பவர்களை பார்த்து நொந்து கொள்ளத்தான் முடிகிறது :(

புருனோ Bruno said...

//ஆயுர்வேதத்தில் மூலிகைகளும், நெய் போன்ற வஸ்துக்களும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பயன்படும் மருந்துக்கள் அனைத்தும் இயற்கையான பொருட்களே.//

உலோகம் கூட இயற்கை பொருள் தான் சாமி

அலோபதி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் கூட 80 சதம் இயற்கை தான் !!

இயற்கையோ செயற்கையோ

மருந்து என்பது குறைந்த சரியான அளவிலான விஷம்
விஷம் என்பது அளவிற்கு அதிகமான மருந்து (அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்)

drugs are poisons in small correct doses
poisons are drugs in large doses

It is the dose which is important along with drug interactions

எனவே இயற்கையாக கிடைக்கிறது என்பதற்காக ஊமத்தங்காயை சாப்பிட முடியாது :) :) :)

புருனோ Bruno said...

//சரகர் என்பவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராவார். //

சுஷ்ருதா தான் அறுவை நிபுணர்
சரகர் மருத்துவர் மட்டும் தான்

//சாமி தன்வந்திரி இல்லையா சாமி???//
தன்வந்திரி அறுவை நிபுணர் தான்
அவரை ஆயூர்வேத கடவுள் என்று மகாவிஷ்னுவின் அவதாரம் என்றும் அழைப்பார்கள்

புருனோ Bruno said...

//தற்காலம் சிறந்த ஆயுர்வேதிகள் காண்பது அரிது.//
அதற்கு மூலிகைகள் கிடைப்பது கடினமானதும் ஒரு காரணமா

//மேலும் ஏழ்மையானவர்களுக்கு எட்டாத உயரத்தில் ஆயுர்வேதம் இருப்பதும் ஒரு குறை.//

அப்படியா ??

//மற்றபடி பிரசவ காலம்,(பக்கவாதம்)நரம்பியல் சிகிச்சை, உடல் தூய்மை ஆக்கும் சிகிச்சைகள் அனைத்தும் ஆயுர்வேதத்தின் உன்னதமானது.//

இப்படி பொதுவாக கூறுவது ஆபத்து

பிரசவ காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதத்தில் சிகிச்சை கிடையாது (உதாரணம் - நஞ்சு கிழ் இருத்தல்)

அதே போல் பக்கவாதம் பல காரணங்களால் ஏற்படலாம். சிலவற்றிற்கு (eg extradural lesions) ஆயூர்வேதத்தில் சிகிச்சை கிடையாது. சில வகைகளுக்கு அலோபதியை விட சிறப்பான சிகிச்சை உண்டு

அது போலவே சில வகை மஞ்சள் காமாலைக்கு (eg obstructive) ஆயூர்வேதத்தில் சிகிச்சை கிடையாது. சில வகைகளுக்கு (eg Hep A) அலோபதியை விட சிறப்பான சிகிச்சை உண்டு

எனவே என்ன நோய் என்று சரியாக தெரிந்து கொள்ளமால் ஆயூர்வேதம் மட்டுமே சாப்பிட்டால் சிக்கல் தான்

அதே போல் அலோபதியை மட்டும் பார்த்து ஆயூர்வேதத்தை கண்டுகொள்ளாமல் விட்டாலும் நஷ்டம் தான்

ஷண்முகப்ரியன் said...

பயனுள்ள பதிவும்,பின்னூட்டங்களும்,பின்னூட்டங்களுக்கான உங்கள் மவுனமும்.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

//சரகர், ஸுஸ்ருதர், வாக்பாதர் மற்றும் சாரங்கதாரர்//
இவர்கள் எல்லாம் ரிஷிகள்.

தன்வந்திரி, அஸ்வினி குமாரர்கள் இவர்கள் தேவர்கள்.

//“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவன்” அப்பிடின்னு ஒரு பாட்டு இறைவனைப் பற்றி உண்டு. //

முழுமையாக ஒத்துபோகிறேன். எகிப்து,சீனா, அரேபியா, இந்தியா, மெக்சிகன் என எந்த பகுதியை எடுத்துக்கொண்டாலும் அதன் அடிப்படை மருத்துவ அமைப்பில் அதிகமான ஒற்றுமை உண்டு. இது ஜோதிடத்திற்கும் பொருந்தும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,

நீங்கள் சொல்லுவது உண்மை. முழுமையாக பயன்படுத்துபவர்கள் குறைவு.

மக்களின் அறியாமையும் இதில் உண்டு. அனேக மருத்துவர்களிடம் சென்று நோய் முற்றிய பின்பு ஆயுர்வேத மருத்துவர்களிடம் வருகிறார்கள்.
என்ன நோய்க்கு எளிய முறையைல் குணமாக்கும் மருத்துவ முறை எது என்ற விழிப்புணர்வு இல்லை.

தற்காலத்தில் அனேக மருந்துகளை/மூலிகைகளை பிரித்தறியும் தன்மை ஆயுர்வேதம் கற்பவர்களிடம் குறைவு. மேலும் ஆயுர்வேதம் கல்லூரியில் கற்றுக்கொள்ளும் மருத்துவம் அல்ல. கல்லூரியில் முதல் ஆண்டு கல்வி ஆங்கில மருத்துவமே அவர்களுக்கு கற்று கொடுக்கிறார்கள்.இதற்கு அரசு ஆணையும் ஒரு காரணம்.

குருவழி கற்றுக்கொள்ளவேண்டிய ஆயுர்வேதம் கல்லூரியில் சிக்கி தவிக்கிறது.

ஆயுர்வேத கிரந்தங்கள் 20% நம்மிடம் உண்டு. அனேகம் தனிமனித சுயநலத்தால் வீழ்ந்துவிட்டது. மேலும் ஆயுர்வேத மருத்துவம் கார்ப்ரேட் நிலைக்கு அடைந்துவிட்டது.

கருவுற்ற பின் தாய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவம் ஆக்கும் தன்மை ஆயுர்வேதத்திற்கு உண்டு. அதை தான் பிரசவ சிகிச்சை என கூறினேன்.

ஆயுர்வேதம் மூன்று பிரிவுகள் கொண்டது. மருத்துவ முறை, அறுவை சிகிச்சை, ஹோமாவிதானம்.

தற்காலத்தில் அறுவை சிகிச்சையை யாரும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்துவதில்லை (இவர்களுக்கு அரசு உரிமை வழங்கப்படுவதில்லை).

ஹோமங்கள் மூலம் நோய் குணமாக்கும் தன்மை. இதையும் யாரும் அதிகமாக செய்வதில்லை.

ஆயுர்வேத மருத்துவர் தானும் ஸ்டெதஸ் வைத்துக்கொண்டு மேஜையில் உட்காரவேண்டும் என்ற எண்ணம் வந்து ஆயுர்வேதத்தில் மண்ணைவாரி போட்டார்கள் என சொல்லவேண்டும்.

மருத்துவ ஜோதிடம் என்பது ஆயுர்வேதம் மட்டும் கொண்டதல்ல. அனேக மருத்துவ முறையிலும் இணைக்கலாம். எனது பயிற்சியில் எந்த முறை மருத்துவம் எடுத்தால் ஜாதகர் குணமாவர் என்றும் சொல்லி வருகிறேன். அது மிகச்சரியான பலன் அளிக்கிறது.

மருத்துவரான உங்களின் எண்ணப்பகிர்வு மேலும் இந்த கட்டுரையை மெருகூட்டியது. நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

மெளனம் சர்வ வேத லக்‌ஷணம் எனும் குருவழி என்னுடையது. :)

உங்கள் வருகைக்கு நன்றி.

புருனோ Bruno said...

//ஆயுர்வேத மருத்துவர் தானும் ஸ்டெதஸ் வைத்துக்கொண்டு மேஜையில் உட்காரவேண்டும் என்ற எண்ணம் வந்து ஆயுர்வேதத்தில் மண்ணைவாரி போட்டார்கள் என சொல்லவேண்டும்.//

மிகவும் எளிதாக இந்த பிரச்சனையின் ஆணிவேரை கூறிவிட்டீர்கள்.

//மருத்துவ ஜோதிடம் என்பது ஆயுர்வேதம் மட்டும் கொண்டதல்ல. அனேக மருத்துவ முறையிலும் இணைக்கலாம். எனது பயிற்சியில் எந்த முறை மருத்துவம் எடுத்தால் ஜாதகர் குணமாவர் என்றும் சொல்லி வருகிறேன். அது மிகச்சரியான பலன் அளிக்கிறது.//

இது குறித்து நீங்கள் ஏதாவது ஆராய்ச்சி செய்துள்ளீர்களா.

இது குறித்த தகவல்களை / விபரங்களை அறிந்து கொள்ள ஆவல்.

நேரம் கிடைக்கும் போது உங்களை நேரடியாக சந்தித்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

புருனோ Bruno said...

//கருவுற்ற பின் தாய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவம் ஆக்கும் தன்மை ஆயுர்வேதத்திற்கு உண்டு. அதை தான் பிரசவ சிகிச்சை என கூறினேன்.//

உண்மைதான் சாமி.

கருவுற்ற காலத்தில் இருந்து ஒரு தேர்ந்த ஆயூர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவம் பார்த்தால் தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,

வரும் வாரங்களில் சென்னையில் இருப்பேன். உங்களுக்கு நேரம் இருந்தால் சந்திப்போம்.

உங்கள் வருகைக்கு நன்றி.

அமர பாரதி said...

ஸ்வாமி,

மும்மலம் என்பது "ஆணவம்", "கண்மம்", "மாயை" என்ற மூன்று வகையாக அழுக்குகளைக் குறிக்கிறது என்றே படித்திருக்கிறேன். நீங்கள் சிறு நீர், வியர்வை மற்றும் மலம் என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் சொன்ன இந்த விளக்கத்துக்கு ஏதாவது ஆதாரம் கொடுக்க முடியுமா?

அமர பாரதி said...

ஸ்வாமி,

மும்மலம் என்பதை மூன்று மலம் (கழிவு) என்று பிரித்து விட்டீர்களா? நீங்கள் சரியான ஆதாரத்துடன் விளக்கமளிக்க வேண்டுகிறேன்.