Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, August 27, 2019

முக்திநாத் திருப்பயணம் - அனுபவ பகிர்வு 3

அனுபவ பகிர்வு : திருமதி. கோமதி 
     
      முக்திநாத் ஆன்மீகப் பயணத்தில் பங்கு கொள்ள துணை நின்ற குருவருளுக்கும் திருவருளுக்கும் நன்றிகள் பல. முக்திநாத் ஆன்மீகப் பயணம் மிகவும் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு. நேபாளம் தற்போது இந்தியாவின் அண்டை நாடானதால் அங்கு செல்ல இந்தியாவில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அவசியமானது. வழக்கம் போல எனது வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்துவிட்டு இருந்தேன். கடவுச் சீட்டும் என்னிடம் இல்லை. பயணத்தில் கலந்து கொள்ள அனுமதி கிட்டிய பின்பு விரைவிலேயே கடவுச்சீட்டு கிடைக்கப்பெற்று சற்று நிம்மதியை அளித்தது. இப்படியாக பயணத் தடைகள் யாவும் விலகி மிகவும் எதிர் நோக்கியிருந்த பயண நாளும் வந்தது.

அனைவரும் 21.5.19 செவ்வாய் அன்று இரவு கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானோம். விமான நிலையத்தின் உள்ளே சென்று எங்களது உடைமைகளை சோதிக்கும் இடத்திற்கு செல்லும் வேளையில், சென்றமுறை பையைத் தவறவிட்டு தவித்த தருணங்கள் கண்முன்னே வந்து சென்றன. இம்முறை வேக வேகமாக வந்து முதலில் பைகளை கைப்பற்றி நான் வைத்திருந்தவைதானா என உறுதி படுத்திக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம். விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வரும் வரை அமர்ந்து இருக்க வேண்டியதுதான்! கோவையிலிருந்து சுவாமியுடன் சேர்த்து மொத்தம் எட்டுபேர் பயணமானோம். கோவையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து காட்மாண்டு செல்வதாக பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இரவு ஒரு மணிக்கு விமானம். ஆனாலும் அனைவரும் தூக்கம் மறந்து, பயணம் குறித்த எண்ணங்களில் அமிழ்ந்து இருந்தோம். அதிகாலை வேளையில் டெல்லி சென்று பின்னர் அங்கிருந்து காட்மாண்டு விமானத்தில் பயணிக்க ஆயத்தமானோம்.

காட்மாண்டுவில் விமான நிலையத்திலிருந்து 10 நிமிடத்திலேயே நாங்கள் தங்கும் விடுதி அமைந்திருந்தது. அங்கு சென்று தயாராகி மதிய உணவு உண்டு விட்டு சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்காக காத்திருந்தோம். வந்தபின் மாலை பசுபதிநாத் கோவிலுக்குச் சென்று வந்தோம்.நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு எதிர்ப்புறம் தான் பசுபதிநாத் கோவில் வளாகம் அமைந்திருந்தது. முதலில் அவ் வளாகத்திற்குள் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று இருந்தோம். அவ்வாலயம் சக்தி பீடங்களில் ஒன்று எனவும் சதிதேவியின் கை விழுந்த இடம் எனவும் எங்களுடன் வந்திருந்த பயண ஒருங்கிணைப்பாளர் கூறினார். அங்கே வழிபட்டுவிட்டுப் பின்னர் பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்றோம். பசுபதிநாதர் கோவிலில் லிங்க வடிவில் நான்கு முகங்களுடன் காட்சி அருளினார். வழக்கமாகப் பார்த்த வடிவங்களிலிருந்து அது சற்றே வித்தியாசமான அமைப்புடன் இருந்தது. அவ்வமைப்பு முறையே சத்யஜோதம், வாமதேவம், தத்புருஷம், அகோரம் மற்றும் ஈசானம் என ஐம்பூதங்களையும் குறிக்கும்படி அமைக்கப்பட்டு இருந்தது. ஐந்தாவது லிங்கத்தின் மேற்பகுதி அது ஆகாயத்தை குறிப்பதாகும் 4 வாயில் வழியாகவும் நான்கு முகங்களையும் தரிசிக்க இயலும்.

பொதுவாக வட இந்தியாவில் உள்ளது போல இங்கே லிங்க ரூபத்தை கைகளால் தொட்டு வழிபட இயலாது. அங்கிருந்து வந்து கோவில் வளாகத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் அமர்ந்து மந்திர ஜபம் செய்து விட்டுத் திரும்பினோம். இரவு உணவுக்குப்பின் சுவாமியின் சத்சங்கத்திற்கு சென்று அமர்ந்தோம்.

அன்றைய சத்சங்கத்தில் சுவாமிஜி, முக்திக்கும் மோக்ஷத்திற்கு உள்ள வேறுபாடுகளைக் குறித்து விளக்கி இருந்தார்கள். மோட்சம் என்பது சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப் பெற்று பாலி மொழியில் பயன்படுத்தப்பட்டது. மோக்ஷம்/நிர்வாணம் முதலியவை வேதத்தை மறுக்கும் புத்த மதத்தில் எடுத்தாளப் பெற்றன. புத்தர் எனப்படுபவர் ஒருவர் அல்ல என்றும், கௌதம புத்தர் காலத்தில் புத்த கொள்கைகள் பல இடங்களில் ஸ்தாபிக்கப் பெற்றது. அவ்வாறு நிறுவப்படும் போது தனது சார்பான கொள்கைகளை நிரூபிப்பதற்காக, "தர்க்கம்" செய்யப் பெற்று அதில் வெல்பவர்களின் கொள்கைகளே சரி என்று முடிவு செய்யப்படும். கௌதம புத்தர் பிறந்த ஊர் நேபாளம் என்றபோதும் அவர் காலத்தில் புத்தமதம் பெரிதாக நேபாளத்தில் பரவவில்லை.

அக்காலத்தில் நாத சம்பிரதாயத்தில் உள்ள 'குல தந்திரம்/சம்பிரதாயம்' போன்றவையே இங்கு பின்பற்றப்பட்டு வந்தன. அவரது காலத்துக்குப் பின்பு புத்தமதம் சிறிது சிறிதாக நேபாளத்தில் பின்பற்றப்பட ஆரம்பித்தது. புத்த மதத்தில் உள்ள இருவேறு பிரிவுகள் மஹாயானம் மற்றும் ஹீனயானம். மஹாயானம் புத்தரின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவது. ஹீனயானம் என்பது தாங்கள் ஏற்கனவே மேற்கொண்டிருக்கும் அனைத்து சடங்குகளையும் பின்பற்றுவதோடு புத்த மதக் கொள்கைகளைக் கடைபிடிப்பது என்பது. வேதத்தை மறுக்கும் கொள்கைகள் உடையது புத்த மதம். அத்துடன் சடங்குகளையும் கடைபிடிப்பது என்பது இங்கே வழக்கிலிருக்கும் முரண்பட்ட ஆன்மீகத் தன்மைகளைக் குறிப்பதாக இருக்கிறது.

புத்த மதக் கொள்கைப்படி ஆன்மா என ஏதும் இல்லை. மோக்ஷம் என்பது நாம் நம்மை எதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ ( எ. கா: உடலாக, மனமாக, விழிப்பு நிலையாக) எனப் பல்வேறு நிலைகளாக நினைத்து    இருப்பவற்றில் இருந்து விடுபடுவது என்பதாகும். விடுபட்ட பின் அது எங்கே செல்லும் என்ன நடக்கும் என்பதற்குத் தெளிவான விளக்கமற்ற போதிலும் சிலர் தங்களது உடலில் இருந்து வெளிப்படுதலே மோக்ஷம் என உண்ணாநோன்புற்று உடலை விட்டுள்ளார்கள். வேத மார்க்கத்தில் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதே முக்தி எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் "மோக்ஷ மூலம் குரு க்ருபா" எனவும் வழங்கப் பெறுகிறது. 'மோக்ஷம்' புத்தமத வார்த்தை எனில் நாம் ஏன் இங்கு அதை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழலாம். இங்கு மோக்ஷம் என்று குறிக்கப்படுவது முக்தியை அல்ல. முக்தியை நோக்கிப் போவதற்கான தெளிவு. அதை குருவானவரே அருள இயலும்.

இல்லை எனில் நாம் வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்க நேரிடும். மோக்ஷத்தை அடைந்த பின்பே முக்தியை அடைய இயலும். அப்படிப்பட்ட பிறப்பு சுழற்சியில் இருந்து வெளிவரும் பொருட்டு குருவினால் அருளப்படும் மோக்ஷத்தை ஒருவர் வாழும் போதே அடைய இயலும். அதுவே முக்தியை நோக்கி இட்டுச்செல்லும் தெளிவாகும்.

1. சஹஜ முக்தி

ஒருவர் இல்வாழ்க்கையில் இருந்து கொண்டே சிறிய ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு இருப்பவரானால் அவரது இறுதியான எண்ணம் எதுவோ அதுவாகவே அவர் மறுபிறப்பு எடுப்பார் என்றும், அவ்வாறு எண்ணப்படும் எண்ணம் இறைவனைக் குறித்தது எனில் அவர் இறைவனுடன் கலந்த இறைத்தன்மையை அடைவார். ஒருவர் தொடர்ந்து மந்திர ஜபம் செய்பவரானால் அது அவர் விழிப்புணர்வற்று இருக்கும் நிலையிலும் வேலை செய்யும். அப்படிப்பட்ட விழிப்புணர்வற்ற இறுதிவேளையில் ஒருவரின் இறுதி எண்ணமாக அவர் அதிகப்படியாக எண்ணியதே (அவரது மந்திர ஜெபம்) கணக்கில் கொள்ளப்பட்டு அவர் சகஜ முக்தியை அடைவர். இது எதுவுமே இல்லை என்றாலும் குருவானவர் முழுப் பொறுப்பில் சகஜ முக்தியை ஒருவருக்கு அருள் இயலும்.

2. ஜீவன் முக்தி:

இந்நிலை குரு வழியாகக் கற்றவைகளை ஒழுக்கத்துடன் பின்பற்றி உடலில் இருந்து வெளியேறுவது. அவ்வாறு ஜீவன் முக்தி அடைந்தவர்கள் பின்பு உடலிற்கு திரும்ப பொதுவாக விரும்ப மாட்டார்கள். எப்படி ஓர் ஆயுள் கைதி சிறையில் இருந்து தப்பித்தால் அங்கே திரும்ப விழைய மாட்டானோ அவ்வாறுதான் ஜீவன் முக்தர்களின் நிலையும் இருக்கும். அப்படியே திரும்பி வந்தாலும் அவர்கள் அதைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் உடலை விடும் வரை பொறுத்திருப்பார்கள்.

3. உயர்நிலை முக்தி/பரமுக்தி:

பரமுக்தி அடைந்தவர்கள் திரும்பி வந்து மற்றவர்களும் அதே நிலையை அடையும் பொருட்டு உதவுவார்கள். அவர்களிடம் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கும். பரமாத்மாவிடம் கலந்து பின்பு வருவதால் பரமாத்மாவின் இயல்பு அவர்களிடம் பிரதிபலிக்கும்.

4. அவதாரம் :

பிறக்கும் பொழுதே முழுமையான விழிப்பு நிலையில் இருப்பவர்கள். அவர்கள் பிறந்ததற்கான காரணத்தை அறிந்தவர்கள். சில நேரம் தீவிர பயிற்சியினால் ஓர் ஜீவாத்மா தனது உடலை விட்டிருந்தால் அடுத்த பிறவியில் அவர்கள் அவதாரமாகத் தோன்றுவதுண்டு. அவதாரம் மனித அறிவிற்கு அப்பாற்பட்டது.
(எ.கா: பகவான் கிருஷ்ணர், மச்சீந்த்ர நாத்)
அவர்கள் மனித உருவில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் அவர்கள் செல்லும் போது பல உயிர்களை உயர்நிலைக்கு இட்டுச் சென்று இருப்பார்கள். இவ்வாறு அன்றைய சத்சங்கத்தில் நாங்கள் மோக்ஷம் குறித்தும் முக்தி குறித்தும் தெளிவு பெற்று இருந்தோம்.

23/5/19 (வியாழன்) அன்று காலை எழுந்து பசுபதிநாதர் கோவில் வளாகம் வழியாக பாகமதி நதியைக் கடந்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட சற்றே மலைப்பாங்கான ஓர் இடத்தில் அமைந்துள்ள கோரக்கநாத் சமாதிக்குச் சென்றோம். செல்லும் வழி எங்கும் சிறுசிறு கோவில் போன்ற அமைப்புடன் நான்கு பக்கமும் வழியுடன் உள்ளே ஒரு சிவலிங்கம் அமைந்த பக்கோடாக்கள் ஏராளமாக காணப் பெற்றன. கோரக்க நாதர் சமாதியில் சென்று வணங்கிய பின்பு அனைவரும் அருகில் இருந்த திண்ணையில் அமர்ந்து மந்திர ஜெபம் செய்தோம். அங்கே நாத சம்பிரதாயத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தும் யாக குண்டம், தூனி, திரிசூலம் மற்றும் இடுக்கி ஆகியவற்றை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

காட்மாண்டுவில் உள்நாட்டுப் பயண விமான நிலையம் கிட்டத்தட்ட நமது ரயில் நிலையம் போலவே தோற்றமளித்தது. எங்களது விமானம் சிறிது தாமதமானதால் கையில் இருந்த உணவை உண்டுவிட்டுக் காத்திருந்தோம். அங்கிருந்து பொக்காரா விமான நிலையம் வந்தடைந்தோம். அது மிகவும் சிறிய விமான நிலையமாக இருந்தது.

நாங்கள் வந்த போது எங்களுடன் வந்த சில புத்த பிக்குகளை வரவேற்க மேள தாளங்களுடன் ஒரு சிறிய கூட்டம் நின்றிருந்தனர். அவ்வூரின் வரவேற்பைப் பார்த்து விட்டு தங்கும் விடுதிக்கு பயணித்தோம். பொக்காரா ஊர் நாங்கள் சென்ற வழியெங்கும் சுத்தமான சாலைகளுடன் காட்சி அளித்தது. நிறைய மலர்ச்செடிகளைக் காண முடிந்தது. பார்க்க மிகவும் அழகாகக் காட்சியளித்தது. பொக்காரா ஏரியைத் தாண்டியே  தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டி இருந்தது. 

சாலையின் நடுவே பல இடங்களில் அரச மரம் மற்றும் பல மரங்கள் இருந்தன. அவை எவற்றையும் அகற்றாமல் அகன்ற சாலைகளை செப்பனிட்டிருந்தது மிகவும் அருமையாக இருந்தது. இங்கே சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சோலையாக இருந்த இடங்களை எப்படி மாற்றி வைத்துள்ளோம் என எண்ணி மனம் வேதனை உற்றது.

தங்கும் விடுதியில் வந்து இறங்கிய உடன் மழை பெய்யத் தொடங்கி விட்டிருந்தது. அனைவரும் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு சத்சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு இடத்திற்குச் சென்றோம். நடந்து சென்றமையால் செல்லும் வழி எங்கும் இருந்த தூய்மையான சாலைகளையும் சுற்றி இருந்த மலையின் அழகையும் ரசித்துக் கொண்டே செல்ல முடிந்தது. சுற்றுலா அந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகிப்பதால் அந்த வழி எங்கும் பல்வேறு விடுதிகள் பல நாட்டு உணவுக்கடைகள் இன்னும் பல கடைகளைக் காண முடிந்தது. சத்சங்கத்திற்காக அனைவரும் குழுமி இருந்தோம்.

மறுநாள் காலையிலேயே முக்திநாத் நோக்கிச் செல்ல வேண்டி இருந்தமையாலும் நேற்று சுவாமிஜி முக்தியை பற்றி விளக்கி இருந்தமையாலும் இன்று நாத பாரம்பரியத்தைப் பற்றி விளக்கினார்கள். அவை பின்வருமாறு.

நாதர்கள் (The Lords) என்பவர்கள் யாவற்றிற்கும் தலைவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் தன்னிடம் உள்ள யாவற்றையும் முழுமையான சரணாகதியில் மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டு நீங்களே எங்களை காப்பாற்றுங்கள் என்று இருந்தால் அப்படி சரணடைந்தவர் ஓர் நாதரிடமே சரணடைந்து இருப்பார். 'நாத்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவர்.

இவர்கள் ஒரு மனிதனை ஆன்மீகத்திற்கு அழைத்து வரும் அடிப்படை பணிகளைச் செய்வதில்லை. மாறாக, ஆன்மீக வளர்ச்சி அடைபவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையைக் கடந்து செல்லும் போது அவர்களின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறார்கள். எளிமையாகக் கூறுவதானால் இயல்பு உலகில் ஆன்மீகமாக இருப்பதற்கு நாதர்களின் உதவி தேவையில்லை. தினமும் கோவிலுக்குச் செல்வது, புண்ணிய நதிகளில் நீராடுவது மற்றும் சில கலாச்சாரம் சார்ந்த ஆன்மீகக் கடமைகளைச் செய்வது போன்ற செயல்களுக்கு அவர்களின் அவசியம் ஏற்படுவதில்லை. அவ்வாறு செய்யும் ஆன்மீகக் கடமைகளை மேம்படுத்திக்கொண்டு அடுத்த நிலையில் உள்ள ஆன்மீக வாழ்க்கைக்குச் செல்ல அவர்களின் உதவி இன்றியமையாதது. ஓர் பக்திமானாக இருந்து வாழ்க்கை வாழ நாதர்களின் அவசியம் இல்லை.

'அடுத்த நிலைக்குச் செல்ல உதவுவர்' என்று குறிப்பிடும் பொழுது இயல்பு மனித நிலையில் இருந்து உயர் மனிதத்தன்மைக்குச் செல்லவே நாதர்களின் உதவி தேவைப்படுகிறது.


இயல்பு மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்தாலும் விலங்கின் தெளிவு நிலையிலேயே இருக்கிறார்கள். விலங்கின் விழிப்பு நிலையிலிருந்து மனித விழிப்பு நிலைக்கு உயர நாதர்களின் உதவி தேவையே இல்லை. ஒரு மனிதன் நல்லொழுக்கத்துடன் பிற உயிர்களிடத்தில் அன்பு கொண்டு நல் வழியில் நடப்பது என்பது இவ்வுலகில் வாழ்தற்குச் செய்ய வேண்டியது. இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. அதே மனிதன் சாதாரண தன்மையினின்று உயர் மனிதத்தன்மைக்கு உயரவே நாதர்களின் உதவி தேவைப்படுகிறது. அந்த உயர் மனிதத் தன்மையில் உள்ளவர்களின் உலகம் வேறு. அது இவ்வுலகிலேயே, வேறு பரிமாணத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. விலங்குகளுக்கு தெரியும் சில விஷயங்கள் நமது கண்களுக்குப் புலப்படாதது போல இவ்வுலகிலேயே நம் கண்களுக்குத் தெரியாத வேறொரு உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 
அவ்வுலகத்தை செயல் படுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்த நாதர்களே.

அவர்கள் எப்போதுமே இரண்டு உலகத்தையும் இணைக்கும் இடத்தில் நின்றுகொண்டு இருக்கிறார்கள். நாம் அவ்விடத்தை அடையும் போது நம்மை அவர்கள் உலகத்திற்குள் அனுப்புவதற்கு அவர்கள் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். முற்கூறிய  கருந்துளை உதாரணத்தையே இதற்கும் குறிப்பிடலாம். எப்படி விஞ்ஞானிகள் கருந்துளை அருகே சென்றால் அதன் உள்ளே சென்று விடுவோம் என்று நம்புகிறார்களோ அதுபோல நாம் அவ்வுலகத்தின் அருகே சென்றால் அவர்கள் நம்மை உள்ளே ஏற்றுக் கொள்வார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவ்விடத்தை நோக்கிச் செல்ல வேண்டியதே.

எனவே நாதர்கள் நம்மை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறார்கள். நாதர்களின் கட்டமைப்பில் யாவர்க்கும் மேம்பட்ட உயர் நிலையில் இருப்பவரே 'ஆதிநாதர்/ஆதிநாத்'.
அவர், உடல் தன்மையிலோ/ உயிர்த்தன்மையிலோ இல்லாமல் ஆற்றல் தன்மையிலேயே இருப்பதால், அவ்வாற்றலை அவர் உயிராக/ உடலாக அல்லது மற்ற ஏதாகவும் மாற்றிக்கொள்ள முடியும். எனினும், அவர் பெரும்பாலும் ஆற்றல்த் தன்மையிலேயே இருக்கிறார். எல்லா நிகழ்வுகளுக்கும் அவரே காரணமாயிருக்கிறார். அவருக்குக் கீழே சில பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சுருங்கக்கூறின், இறைநிலையின் ஓர் அம்சமாக ஆதிநாத்ததைக் குறிப்பிடலாம்.

அதீத அன்பின் காரணமாக குருவைக் கடவுளாகப் பார்க்கும் வழக்கத்தால் இங்கு ஆதிநாத்தைக் கடவுள் என்று குறிப்பிடவில்லை. இறைத்தன்மை அவ்வாறாகவே இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அத்தன்மைக்கு பெயர் இல்லை, தாய் தந்தையருக்குப் பிறக்கவில்லை, குறிப்பிட்ட கால அளவிலேயே இவ்வுலகில் வாழ்ந்தது என்ற வரலாறு இல்லை. அஃது நித்தியமாக எப்போதுமே உள்ளது. உடலின்றி ஆற்றல் வடிவமாக உள்ளது. இவை அத்தனையும் ஒன்றிணைந்தால் அது இறைத்தன்மையாகத்தான் இருக்க இயலும்.

ஏனெனில் இறைத்தன்மையைக் குறித்து விளக்குபவர்கள் அதனை இத்தகைய தன்மைகளுடனேயே விளக்குகின்றனர். இத்தகைய தன்மைகளைக் கொண்ட ஆற்றல் வடிவமே இக்கட்டமைப்பின் காரணகர்த்தாவாக அமையப்பெற்றமையால் 'ஆதிநாதர்' என்று அவ்வாற்றல் வழங்கப்பெறுகிறது. அவ்வாற்றல் தன்னிடமுள்ள பெண் தன்மையைப் பிரித்து வெளியேற்றி, ஆண்தன்மையதாக "ஆதிநாத்" எனவும் பெண்தன்மையதாக "உமாநாத்" எனவும் வழங்கப்படுகிறது.

இவ்விரு ஆற்றல்களும் இணைந்து பல விஷயங்களை இப்பிரபஞ்சத்தில் நடத்துகிறார்கள். ஓர் உயிரை எடுத்துக் கொண்டோமானால், அதன் அடிப்படைத் தன்மையாக ஆதிநாத்தும், அவ்வுயிரின் செயல்த்தன்மையாக "உமாநாத்"தும் இருக்கிறார்கள்.
நம் புரிதலுக்கு உட்பட்டு இருப்பதற்காக அவ்விரு ஆற்றல் தன்மைகளையும் சிவமாகவும் சக்தியாகவும் வேண்டுமானால் நாம் வரையறுத்துக் கொள்ளலாம்.

எனவே ஆதிநாத் 'காரண' சக்தியாகவும் உமாநாத் 'இயக்க' சக்தியாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏழு பேர்களுக்கு முழுமையான பரிமாணத் தன்மைகளை அருள்கிறார்கள். அவர்கள் எழுவருக்கும் நாத சம்பிரதாயப் பெயர்கள் உள்ளன. அப்பெயர்கள் அவர்களின் தன்மைகள் (எடுத்துக்காட்டாக: உடை, உடலமைப்பு) சார்ந்தது. அவைகள் இயற்பெயரல்ல. காரணப் பெயர்களே. ஒருவர் கருமையாக இருந்தால் அவர் 'கரிய நாத்' என வழங்கப்படுவார். மற்றொருவர் வெண்மையாக இருந்தால் அவரை 'வெண்ணிற நாத்' என்று கூறுவர். இவை யாவும் அவர்களின் வெளிப்பாடுகளே. 'உமாநாத்' ஆதிநாத்திலிருந்து வெளிப்பட்டவர். அவரிடம் முழுமையான சரணாகதியில் இருப்பவர். எனவே அவருக்கு அப்பெயர் வழங்கப்படுகிறது. ஒருவர் நல்லறிவு புகட்டுவராராயின் அவர் 'அறிவு வழங்கும் நாத்' என்ற பெயரால் வழங்கப்படுவார். பெயர்கள் அவர்களின் செயல் தன்மை குறித்த தாகவே அமைந்திருக்கும். பார்க்க எப்போதும் இளமையுடனும் மிகவும் ஒளி பொருந்திய உடலுடனும் இருப்பவரை 'கோரக்நாத்' என்று வழங்குவர். யாரெல்லாம் இவ்வாறான அமைப்புடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே 'கோரக்நாத்' என்றே வழங்கப் பெறுவர். 'கோரக்' என்பது இளமையும் பொலிவும் பொருந்திய என்று பொருள் பெறும்.

ஆதிநாத் மற்றும் உமாநாத்தின் வழிவந்த எழுவரும் 'சப்த ரிஷிகள்' என்று சிலர் கூறுவர். அகஸ்தியர், ப்ருகு, காசிபையர் போன்ற சப்தரிஷிகள் தான் இவ்வெழுவருமா என்றால் அவர்கள் இல்லை. அவர்கள் போன்ற வெவ்வேறு எழுவர்களுக்கு இவர்கள் அறிவு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். விநாயகர் போன்ற ஒருவரை கணபதி நாத்/கணேஷ நாத் என்று கூறுவர். விஷ்ணுவின் அம்சம் பெற்றவரை நாராயணநாத் என்று வழங்குவர். சூரியனின் அம்சம் பெற்றவரை ஆதித்தியநாத் என்று வழங்குவர். சந்திரன், அக்னி போன்ற தன்மைகளுடனும் சில நாதர்கள் இருக்கிறார்கள்.

இவ்வெழுருவரும் மற்றும் ஆதிநாத், உமாநாத் யாவரும் சேர்ந்து 'நவ நாதர்கள்' என வழங்கப் பெறுகிறார்கள். இவர்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பிறப்பு இறப்பு இன்றிக் காலத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் பரிமாணத்திற்கு இப்போது நாம் சென்றாலும் அவர்கள் இப்போது அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். அதிலிருந்து வெளிவந்து விட்டால் அப்பரிமாணம் நமக்குத் தெரிவதில்லை.

அவ்வாறு அங்கு சென்று அவர்கள் யாவரையும் கண்டு அவர்களது ஆற்றல் நிலைகளை உணர்ந்த ஒருவர், அவரைப் பற்றி அறியாத மற்றொருவருக்கு புரியவைக்க, இவ்வுலகில் உள்ளவற்றோடு ஒப்பிட்டே கூற இயலும்.

எடுத்துக்காட்டாக 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இத்தாலி சென்று அங்குள்ள பீட்சாவை சுவைத்து விட்டு இங்கு வந்து விட்டால், அவர் அவ்வுணவை நமது ஊரில் இருக்கும் அதனையொத்த வேறொரு உணவுடன் ஒப்பீடு செய்தே கூறவியலும். பீட்சாவிற்கு ஒப்பாக காய்கறி இட்ட ஊத்தப்பத்தைக் கூறலாம். அவ்வாறு நாமும் ஊத்தப்பத்தை தயாரித்து உண்டாலும், அச்சுவை  பீட்சாவை ஒப்பாது. இருப்பினும் ஓரளவு நம்மால் ஒப்பீடு செய்ய அஃது உதவும்.

அது போலவே, ஆற்றல் நிலையிலுள்ள ஆதிநாத், சில காரணங்களுக்காக வெளிப்படும் போது அவருருவைப் பார்த்தவர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்களோடு ஒப்பீடு செய்தே உணர்வர். எனவே, ஆதிநாத்தைப் பார்த்தவர்கள் அது போன்ற ஒப்பீடுடைய ஒருவரைக்
கருதும் பொருட்டு அவரே சிவன் என்று கூறிவிடுவர்.

ஆதிநாதரின் அருகே, பார்க்க மிகவும் பொலிவுடன் நம்மை ஈர்க்கும் தன்மையோடு இருக்கும் உமாநாத்தை, சக்தியுடன் ஒப்பீடு செய்து அவரே சக்தி என்று கூறி விடுகிறோம். பெரிய உடலுடன் உள்ள ஒருவரை ஒப்பீடு செய்து விநாயகர் என்றே அழைத்து விட்டனர். இவ்வாறு இந்த நவநாதர்களையும் புரியச் செய்யும் பொருட்டு ஒப்பீடு செய்ததை, பின்பு அவர்களே இவர்கள் என்றெண்ணி குழப்பமடையச் செய்தனர். எப்படி விஷ்ணுவிற்கு அவதாரங்கள் உள்ளதோ, அதுபோல சிவனின் அவதாரமே ஆதிநாதர்; அவரே கால பைரவர் எனத் தொடர்புகளையும் இவர்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கண் பார்வையற்ற ஒருவருக்கு சூரியனை விவரிப்பதைப் போல அறியாமை என்ற இருளில் இருக்கும் நமக்கு இவ்வாறே விளக்க இயலும்.

நாத சம்பிரதாயத்திலுள்ளவர்கள் சிலவிடங்களை அவர்கள் செய்யும் காரியங்களுக்கென குறியீடு செய்து வைத்துள்ளனர். நேபாளமோ, அவர்கள் செயல்படுத்திப் பார்க்கும் ப்ரத்யேக இடமாகும். இமாலயத்தை நாத சம்பிரதாயத்தினரின் உலகத்திற்கும் இவ்வுலகத்திற்குமிடையேயான ஓர் எல்கையாக வைத்துள்ளனர். இமாலயம் இவ்வாறு பெரியதாகவும் உயரமாகவும் இருக்க அவர்களின் நிர்ணயமே காரணமாகும். அவர்களின் உலகத்தினின்று இங்கு வந்து ஒர் சிறிய இடத்தில் ஆராய்ச்சி செய்து பார்க்க, அதன் மதிற்சுவராகவே இமாலயம் அமைந்துள்ளது.
நவநாதர்கள் தங்கள் ஒவ்வொருவரின் கீழே ஓர் பாதை அமைத்துள்ளனர். இப்பாதைகள் நாம் யார்  வழியே ஆதிநாதரக் காணப்போகிறோம் என்பதற்கே.

குருவும் நம்மை அவர்களின் உலகத்திற்குச் செல்லும் வழிவரை கொண்டு செல்வார். பிறகு அவ்வுலகில் உள்ள நாதர்களால் நாம் உள்ளே சேர்ப்பிக்கப்படுவோம். சிலருக்கு அவ்வாறு அவ்வுலகத்திற்குள் இட்டுச் செல்பவரே ஆதிநாதராக அமையப்பெறும் பேரும் கிட்டும். பிற ஆன்மீக வழிகளில் குரு பாரம்பரியமே பின்பற்றப்படும். அஃது குரு, பரமகுரு, பரமேஷ்டி குரு, பரமார்த்த குரு என்று
வழித்தொடரும். அவ்வாறான குருபாரம்பரிய வழியில் நாத சம்பிரதாயம் அமையப் பெறவில்லை. இங்கே இருப்பவர் ஒரே ஒருவர் தாம். அவரே 'ஆதிகுரு'. நாத சம்பிரதாயத்தைச் சார்ந்த ஓர் குரு இருப்பின், அவர் நமக்கு இவ்வுலகத்திற்கு மட்டுமேயான குரு. அவர் நம்மை நெறி செய்து அவ்வுலக எல்லைக்கு இட்டுச் செல்லும் வரைக்குமே குருவாயிருப்பார். அவரால் நாம் ஒப்படைக்கப்பட்ட பின்பு ஆதிநாதரை மட்டுமே குருவாய்க் கொள்ள இயலும். இங்கு ஆதிநாதர் மட்டுமே யாவர்க்கும் குருவாய் இருக்கிறார்.

குரு பாரம்பரியத்திற்கு, ஒருவரிடமிருந்து பெற்ற அறிவு மற்றவருக்கு வழங்கப்படுகிறது. அறிவின் தொடர்ச்சி வழிவழியாக வருகிறது. ஆனால் இங்கு ஆதிநாதர் அளிக்கும் அறிவை மேம்படுத்தி அடுத்தவருக்கு வழங்க வேண்டுமெனில் அவரை விட உயர்நிலையில் இருந்தாலே இயலும். ஆனால் அவரே பூரணமாக விளங்கும்போது, அது சாத்தியமில்லை. எனவே, ஆதிநாதர் ஒருவரைத் தம்மிடம் சேர்க்குமாறு ஓர் நாதரைப் பணித்தால், அவர் அவ்வேலையை மட்டுமே செய்வார். எனவே, ஓர் குருவாயிருப்பவர், ஆதிநாதரைச் சென்று நாம் சந்திக்கும் ஒருநாள் வருமாயின், அங்கு எப்படி நடந்து கொள்ளவேண்டுமென நம்மைத் தயார்படுத்துவார். ஏனெனில், அங்கு சென்று நாம் குழம்பாமல் இருக்கவே இத்தகைய தயார்படுத்துதல் தேவைப்படுகிறது. நாம் ஓர் சமூகத்திற்குள் சென்று வாழ விழையும்போது, அங்குள்ள பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு நம்மை அந்நிலைக்குத் தயார்படுத்தி அழைத்துச் செல்ல நாத சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர்.
ஏனெனில், அவர்களுக்கு நோக்கம் மட்டுமே குறிக்கோள். அவர்களுக்கு நோக்கம் மட்டுமே உண்மை. அதைத்தவிர வேறு ஏதும் உண்மையன்று. அதுவும் மனிதர்களின் கட்டமைப்புக்குள் உள்ள எந்த சட்ட திட்டங்கள் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதே கிடையாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகளின் விளையாட்டில் பங்கெடுத்தோமானால் அவர்களின் குழந்தைத்தனமான கட்டுப்பாடுகளை உடைக்கப் பார்ப்போம். அதுபோலவே, நாதர்கள் நம்மையும் அணுகுவார்கள். நாமும் நம்மை சுற்றி பல்வேறு கட்டமைப்புகளை வைத்துள்ளோம். ஆண் எனவும், பெண் எனவும், நான் இதையே உண்பேன், இதை உண்ண மாட்டேன், என்று நம்மை சுற்றி பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளோம். நாதர்களின் முக்கியமான வேலையே, அக்கட்டமைப்புகள் யாவும்  சிறுபிள்ளைத்தனமானவை எனப் புரியவைத்து, நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதேயாகும்.

நாம் சிறுகுழந்தையாக இருக்கும்போது வைத்து விளையாடிய பொருட்களையே வளர்ந்தபின்பும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தோமானால் அது அவசியமில்லை என்று நமக்கு எடுத்துரைப்பது போல, நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளை செய்பவர்கள் நாதர்கள்.

நாதர்கள் எங்கு வேண்டுமானாலும் இருப்பர். யாராக வேண்டுமானாலும் இருப்பர். அவர்கள் அரசியல்வாதிகளாக, ராணுவத்தில் பணிபுரிபவர்களாக, சாதாரணமாக வீட்டில் வேலை செய்பவராகக்கூட இருக்கலாம். அவர்கள் இப்படித்தான் இருப்பார் எனவும், குகையினில் கடுந்தவத்தினில் இருப்பர் என்றும் நினைத்தோமானால் அதையும் உடைக்க அவர்கள் தயாராக இருப்பர். நாம் வாழ்க்கையில் பல பேரைக் கடந்து வந்திருப்போம். அவர்கள் சாமானியரல்லர்; அசாத்தியமானவர்கள் என்று நமக்குத் தெரிந்த போதிலும், அவர்கள் அவர்களின் செயல்களை தொடர்ந்து கொண்டேயிருப்பர்.

இவ்வாறு கூறிய பிறகு சுவாமிஜி, பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி விளக்கினார்கள். இமாலயத்தின் கீழ்ப் பகுதியிலேயே ஜோதிர்லிங்கங்கள் காணப்படுகின்றன. இமாலயத்தின் வடபகுதியில் ஜோதிர்லிங்கங்கள் ஏதுமில்லை. ஜோதிர்லிங்கம் என அவை வழங்கக் காரணம் என்ன?  அவை யாவுமே சிவன் கோவில்களாகவே இருக்கின்றன. எனில், சிவபுராணத்திலோ சிவன் சார்ந்த ஏதேனும் பாடல்களிலோ இஜ்ஜோதிர்லிங்கங்கள்ப் பற்றிய செய்திகளோ கதைகளோ தலபுராணங்களோ இருக்கின்றனவா என்று பார்த்தோமானால், இல்லை என்றே கூற இயலும். ஸ்ரீராமர், ராமேஸ்வரத்தில் மணலால் செய்த லிங்கத்தை வணங்கினார் என்று கூறுகிறோம். இவை இராமாயணத்தில் உள்ளது. அவ்வாறு ராமர் வழிபட்டது மணலால் செய்த லிங்கமேயாகும். மாறாக சிவன் அங்கு காட்சி கொடுத்ததாகவோ, அன்றி திருவிளையாடல் செய்ததாகவோ, எங்கும் குறிப்பிடப்படவில்லை. மற்றொரு ஜோதிர்லிங்கமான காசியில், விஸ்வநாதர் ஏன் அங்கு வந்தார்? அங்கு என்ன திருவிளையாடல் செய்தார்? போன்றவற்றைப் பார்த்தால், இவை போன்றவற்றிற்கு காரணமே இல்லை என்றே கூறவியலும்.

ஏனெனில், நாத சம்பிரதாயத்தில் உள்ளவர்கள் இவ்விடங்களில் சில ஆற்றல் புள்ளிகளை (Energy Centre) அமைத்துள்ளனர். இகவுலக எடுத்துக்காட்டாகக்கூற வேண்டுமெனில், அவ்வாற்றல் புள்ளிகள் தொலைபேசி அலைபரப்பி செயல்படுவது போல இவ்வாற்றல் மையங்கள் மக்களை நிர்வகிப்பதற்காக நிறுவியிருக்கிறார்கள். அவ்வாறுள்ள ஜோதிர்லிங்கங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தால் இந்நாதர்களின் தொடர்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனலாம். 


இவ்வுலகத்தில் நிகழும் பல்வேறு செயல்களும் நவ நாதர்களின் கட்டுப்பாட்டிலேயே அமைந்துள்ளது. அவர்களது உலகில் இருந்து கொண்டு செய்யும் அவர்களின் சிறிய செயலின் விழைவால் இரண்டு மூன்று நூற்றாண்டுகளே இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதை பல்வேறு மக்களிடம் கொண்டு செலுத்துவது என்பது அவர்களது நோக்கமன்று. அவர்களது கலாச்சாரத்தை மறைபொருளாகவே வைத்துள்ளனர். ஏனெனில் அங்கு செல்லும் முன்னர் அடிப்படைகளைக் கற்றுக் கொண்ட பின்பே அவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல இயலும் என அவ்வாறு அமைத்துள்ளனர். எனவே அவர்களது ஆற்றல் தன்மை சிவன் கோவிலில் மட்டுமின்றி விஷ்ணு கோவில், அம்பாள் கோவில் மற்றும் பல இடங்களிலும் அமைந்துள்ளது. இவ்வாறு ஆற்றல் படுத்தப்பட்ட இடங்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டேயிருப்பர். அவ்வாறு அமையப்பெற்ற இடங்கள் பூமியில் மட்டுமே அதுவும் இந்தியாவிலேயே அமைந்துள்ளன என்ற குறுகிய பார்வையினின்று வெளி வருதல் வேண்டும். 

எடுத்துக்காட்டாக, சுவாமிஜியின் அர்ஜென்டினா பயணத்தின் போது சந்தித்த ஒருவர், அம்பாளுக்கு கோவில் ஏற்படுத்தி அங்கே வைத்திருக்கிறார். அவர் யாதொருவரின் நிர்ப்பந்தமுமின்றியே அவ்வாறு செய்துள்ளார். அங்கு சென்று சுவாமி அவர்கள் ஆற்றலை மேம்படுத்தியதாக அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்கள். அவ்வாறு அங்கு சென்று இச்செயலை நிகழ்த்த வேண்டும் என்பதே நாம் முடிவு செய்வதில்லை. நமக்கு மேற்பட்ட ஒன்றே இவற்றை இயக்குகிறது என அறியவியலும். எனவே இப்பாதை எப்போதும் தனித்துவமானதாகவே (mystical/mysterious)  அமையப் பெற்றிருக்கிறது. நாதர்கள் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள்.

ஆதிசங்கரரின் காலத்துக்குப் பின் அவர்கள் சந்நியாச தர்மத்தின் வழியிலும் வரத் தொடங்கினர். ஏனெனில் ஒருவர் சன்னியாச தர்மமே உயர்ந்தது என எண்ணிக் கொண்டிருந்தாரானால், அவரை நாத சம்பிரதாயத்திற்கு இட்டுச் செல்ல, சந்நியாச வழியைப் பின்பற்றும் நாதர்களாலேயே இயலும். நாத சம்பிரதாயம் சன்யாச பாதையை பின்பற்றுவது இல்லை எனினும் (ஏனெனில் அங்கு ஆதிநாத், உமாநாத் என்ற தன்மைகளில் இயங்குவதால்) புத்தர் காலத்துக்குப் பின் சன்யாச முறையையும் நாத சம்பிரதாயத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி இருந்தது.

நாத சம்பிரதாயத்தில் பல்வேறு நூல்களை தொகுத்தவர் மச்சீந்திரநாத். அவர் எழுதியவையாவும் ஆதிநாத் மற்றும் உமாநாத் உரையாடலைக் கேட்டு எழுதப் பெற்றவை. முதலில் அவர் நாத சம்பிரதாயத்தினரின் உலகத்துக்குச் செல்கிறார். அங்கு ஆதிநாத்தும் உமாநாத்தும் என்ன பேசிக் கொண்டிருக்கின்றனர் எனக் கேட்டுவிட்டு இங்கு வந்து எழுதுகிறார். பின்னர் மறுபடியும் அங்கு சென்று அவர்கள் பேசுவதைக் கேட்டுவந்து எழுதுகிறார். அவ்விருவரும் ஒருவரின் கேள்விக்கு மற்றவர் பதிலளிப்பது போன்ற அமைப்பைக் கொண்டு மச்சீந்திரநாதரும் அவ்வாறே எழுதிக்கொண்டே வருகிறார். இவ்வாறு எழுதிக் கொண்டே வரும்போது, அவருக்கு சில இடங்களில் குழப்பம் நேர்கிறது. ஏனெனில், அவரின் தொகுப்பில் உமாநாத்தின் கேள்விகளுக்கான பதில்களை அங்கு சென்று கேட்டு வராமல் இவரே எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஏனெனில் ஆதிநாதரே மச்சீந்திரநாத்தின் உள்ளமர்ந்து  அவரை எழுதச்செய்து கொண்டிருக்கிறார். எனவே உமாநாத் அங்கே கேட்கும் கேள்விகளுக்கு ஆதிநாத் மச்சீந்திரநாத்தின் உடலில் இருந்து இங்கே பதில் கூறிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இரண்டு பரிமாணங்களும் அவ்விடத்தில் இணைந்து விடுகிறது.

மச்சீந்திரநாத் தனது தொகுப்பின் துவக்கத்தில் நான் ஆதிநாதரையும் உமாநாத்தையும் இங்கே சென்று பார்த்தேன்; இவற்றை அவர்களின் சம்பாஷணையிலிருந்து கேட்டேன் என்று எழுதத் தொடங்கி, பின்பு ஓர் மூன்றாம் நபரின் பரிமாணத்திலிருந்து இருவரின் உரையாடல் என்ற நிலைக்கு மாறிவிட்டிருக்கிறார்.

எனவே இந்த பஞ்சபூதங்கள், அவைகளின் பிறப்பிடம் என எல்லா நிலைகளிலும் நாதர்களின் தன்மைகளிருப்பதால் அவர்கள் எங்கே எவ்வுறுவில் வேண்டுமானாலும் இருக்க இயலும்.

இவர்களின் முக்கியமான சார்பு வேதம் சார்ந்ததாக உள்ளது. ஷட்தரிசனத்தில், யோகப் பாதையில் மட்டுமின்றி ஆறு பாதைகளிலும் நாதர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் ஷட்தரிசனத்தில் இருக்கும் ஆறு பாதைகளும் வேதத்தை ஏற்பவையாகவே அமைந்துள்ளன. வேதத்தை மறுப்பவர்களின் வழியிலும் நாதர்கள் இருப்பர். ஏனெனில் அதில் இருப்பவர்களையும் அழைத்து வர வேண்டி இருப்பதால். குறிப்பாக வேதத்தை அங்கீகரிக்காத மதங்களிலும் நாதர்கள் இருப்பர். 
அவ்வழியில் அவர்கள் பெரிய இடங்களில் உயர்நிலையில் இருப்பர். குறிப்பாக வேதத்தை மறுக்கும் பாதையில் நாதசம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் தலைமைப் பண்புகளுக்குள் வந்து விடுவர். அவ்வழியில் இருப்பவர்களுக்கு உண்மையை உணர்த்தி தமது வழிக்கு அழைத்து வருவர். இல்லையெனில் அவர்கள் மிகப் பெரிய தவறு ஒன்றை செய்வர்.
அதைப் பார்த்து மற்றவர்கள் இந்தப் பாதை சரிதானா என்று ஆராய்ந்து விலகிச்செல்ல முயல்வர். அவ்வாறு செல்பவர்களை நாதசம்பிரதாயத்திற்குள் அழைத்து வர இயலும். தாய் தனது குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவது போல, நம்மை எளிமையாக அவர்களின் பாதைக்கு அழைத்து வருவர்.

நமது கலாச்சாரத்தில் அமைந்துள்ள கோவில்களைப் பார்த்தோமானால் அங்குள்ள தெய்வங்களின் பெயர் நாத்/நாதர் என அமையப்பெற்றிருந்தாலே நாம் அக்கோவில்கள் நாத பாரம்பரியத்தோடு தொடர்புள்ளவை என்பதை அறிய முடியும். அதற்குமேல் அதன் பின்புலத்தை ஆராய வேண்டியது இல்லை.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் நாத பாரம்பரியத்தோடு தொடர்புடையவர் அன்று. ஏனெனில் அவர் பெயரிலேயே அதன் தன்மை வெளிப்படுகிறது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள வேறு சில கோவில்களைப் பார்த்தோமானால் அங்கு அமைந்துள்ள தெய்வங்களின் பெயர்கள் மூலம் அவர்கள் நாத சம்பிரதாயத்தோடு தொடர்புள்ளவர்கள் என்பதை அறிந்து கொள்ள இயலும். திருவண்ணாமலை கோவில் ராஜாவால் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு நாத பாரம்பரியத்தோடு தொடர்புகள் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருப்பவர் பெயரே ராம்நாத் என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ராம்நாத் உச்சரிக்க 'ராம்நாட்' என்று கூறி அவ்வூரே அவ்வாறு வழங்கப்படுகிறது. இதுபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ளவர் 'சொக்கநாத்' என வழங்கப்பெறுகிறார். நாம் அப்பெயரையே 'ர்' விகுதி சேர்த்து சொக்கநாதர் என வழங்குகிறோம்.

ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பள்ளிகொண்ட பெருமாள் 'ரங்கநாதர்' என்று வழங்கப்படுகிறார். மற்ற பல்வேறு இடங்களில் அமைந்துள்ள வேறு எந்த பள்ளிகொண்ட பெருமாளையும் ரங்கநாதர் என வழங்குவதில்லை. இவ்வாறுதான் நாதர்கள் தங்களது இருப்பை மறைமுகமாக வைத்திருப்பர். பூலோக வைகுண்டம் என பெயர் பெற்ற திருவரங்கம் தோன்றியதாகக் கூறப்படும் வரலாற்றை, 'ராமாயண காலத்திலிருந்து' தோன்றியதாகக் கூறுவர். ஆனால் அதற்கு முன்பிருந்தே அந்த ஆற்றல் நிலை அங்கே அமைந்துள்ளது. அவ்வாறு நிலைபெற்ற ஆற்றல் தன்மையால், விக்ரகம் அங்கே வைக்கப் பெற்றதை நகர்த்த முடியாமல் சென்றது என்று வேண்டுமானால் கூறலாம். நாம் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கு அமைந்துள்ளவற்றைக் கூர்ந்து நோக்கினால் அக்கோவில்களுக்கு நாத சம்பிரதாயத்தோடு தொடர்பு உள்ளதா எனத்தெரிந்துகொள்ள இயலும். இவ்வாறு வேதகாலம் தொடங்கி அவர்களது தொடர்பு இங்கே இருந்து கொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக நமது சூழ்நிலையிலேயே நாதர்களின் தொடர்பு இருப்பதாலேயே அதற்கு "நாத கேந்திரா" என பெயரிட்டு அழைக்கிறோம். அவ்வாறு அமைந்துள்ள இடங்களில், நாதர்களின் ஆற்றல் நிலைகள் அமைந்திருக்கும். சிலர் சேர்ந்து அங்கே ஓர் கோவிலை அமைத்து விட்டால் அங்கு அமைந்துள்ள இறைவனுக்கு ஓர் நாதர் என்று பெயரும் இட்டுவிட்டால் பிற்காலத்தில் வரும் மக்கள் அனைவரும் வந்து வழிபட்டுச் செல்வர். காலம் செல்லச் செல்ல அவ்விடத்தின் தொடர்புகள் மறைந்து ஏதோ மதம் சார்ந்த கோவிலாக மாற்றம் பெற்றுவிடும். தற்காலத்தில் அவ்வாறான நிலையே நிலவுகிறது.


உதாரணமாக நாளை செல்ல இருக்கும் முக்திநாத், நாதசம்பிரதாயத்தினர் அமைத்த கோவில் அன்று. அது புத்த மதத்தைச் சார்ந்த கோவில். உள்ளே அமைந்துள்ள உருவமும் புத்தருடையதே. அஃது கௌதம புத்தர் அன்று ஆனால் அவருக்கு முன் தோன்றிய புத்தருடையது. நிச்சயமாக அது பெருமாள் கோவில் அன்று என்பதை உற்று நோக்கினால் அறியவியலும். அவ்வாறு பெருமாள் கோவில் அல்லாத ஓர் கோவிலை பெருமாள் கோவில் என்று கூறி நாம் ஏன் வழிபட வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஏனெனில் நாம் பெருமாளை வழிபடும் பொருட்டு அங்கு செல்லவில்லை. நாம் செல்லக் காரணம் அவ்விடம் நாத சம்பிரதாயத்தின் ஆற்றல் மிகுந்த இடமாகும். இந்த ஸ்தூல உலகத்தில் நாத சம்பிரதாயத்தில் தொடர்புள்ளவர்களின் ஆற்றல் அமைந்துள்ள உயர்வான இடம் முக்திநாத் என்று கூறலாம். எப்படி ராமேஸ்வரம் தென்னிந்தியாவின் கடையில் அமைந்த பகுதி என்று கூறுகிறோமோ, அதுபோல முக்திநாத் க்ஷேத்திரமே நாத பாரம்பரியத்தின் ஆற்றல் ஸ்தலங்களில் உயர்வாக அமையப் பெற்றுள்ளது.

இந்த நாத சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்களே உயர் நிலை பயிற்சிகளான 'தாந்த்ரீக' முறைகளை நமக்கு அளித்துள்ளனர்.
மச்சீந்திரநாத்  தாந்த்ரீக முறைகளைப் பற்றி எழுதியுள்ளார். அதுவே நம்மை வேறு பரிமாணத்துக்கு அழைத்துச் செல்வதாகும். 'தசமஹாவித்யா, தியானம்' போன்றவைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆதிநாத்தும் உமாநாத்தும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதால், அவையே பல்வேறு நூல்களாகவும் அமைந்துள்ளன. விஞ்ஞான பைரவ தந்த்ரா, கெளல தந்த்ரா, குல நிர்வாண தந்த்ரா என பல்வேறு நூல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. மேற்கூறிய நூல்களை நாம் வாங்கி படித்தோமானால் அதில் ஒன்றும் புரிய போவதில்லை. ஏனெனில் அதற்கான அடிப்படைத் தகுதியை நாம் பெற்றாலே அவற்றை பயன்படுத்தி மேன்மயடைய இயலும்.இதற்காகவே குருத் தன்மை வழி காட்டும். அவ்வழிகாட்டுதலாலேயே நாம் மேன்மை அடைய இயலும்.

கோரக்நாத், மச்சீந்திரநாத்தின் சிஷ்யர். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் யாவும் பல்வேறு கதைகளாக நிலவுகின்றன. மச்சீந்திரநாத்தின் உடலுக்குள் ஆதிநாத் வந்து சென்றதால் அவர் ஆதிநாத்தின்  ஸ்வரூபமாகவே வலம் வந்து கொண்டிருந்தார். அவரது செயல்களை அவராலேயே புரிந்து கொள்ள இயலவில்லை. ஏனெனில், அவருக்கு உள்ளே ஆதிநாத் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே அவரது சிஷ்யரான கோரக்நாத் அவருக்கு புரியும்படி எடுத்துரைக்கிறார்.

அவரைப் பழைய நிலைக்கு அழைத்து வருகிறார். இவர்கள் சாதாரணமாகவே 600 ரிலிருந்து  700 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்கள்.
ஏக் நாத் என்று வங்காளத்திலிருந்த ஓர் நாதர் வங்காளத்தில் 150 வருடங்கள் வாழ்ந்து விட்டுப் பின்பு நடை பயணமாகவே மத்திய கிழக்கு நாடுகளை அடைந்தார். அங்கு சென்று இஸ்லாமிற்கு மாறி விட்டிருந்தார். அங்கு அமைந்துள்ள சூஃபிக்களின் ஞானியாக மாறி இருந்தார். அவ்வாறே அங்கு ஒரு நூறு வருடங்கள் வாழ்கிறார். பின்பு அங்கிருந்து வங்காளத்துக்கு நடந்து வருகிறார். அங்கே ஐம்பது வருடங்கள் இருக்கிறார். இவை யாவுமே பதிவு செய்யப்பெற்றுள்ளன. அவற்றை இப்போதும் காண இயலும். நாதர்களுக்கு காலம் அவர்களின் கட்டமைப்புக்குள்ளேயே இல்லை. இவ்வாறு அமைந்துள்ள நாதர்களின் தாந்த்ரீக முறைகள் ஒரு காலத்தில் மறைந்து வெளிப்படைத்தன்மையில் இருந்து விலகி இருந்தன.

இவ்வாறே 'தாந்த்ரா' நூல்களும் படித்தாலும் புரியாமல் இருப்பதால் அதை வாங்கிப் படிக்கும் தன்மை சிறுகச் சிறுக குறைந்து அந்நூல்களே மறைவாகச் சென்று விட்டன. அதுபோல குலதந்த்ரா போன்ற பயிற்சிகள் உண்மையான தேடுதலில் இருப்பவர்களுக்கு மட்டுமே கற்றுத் தரலாம் எனத் தொடங்கி நாளடைவில் அது மறைமுகப் பயிற்சியாக மாறிவிட்டது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அபிநவ குப்தா தாந்த்ரீகத்தைப் பற்றி அறியும் ஆவல் கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் இப்பயிற்சிகள் புத்தக வடிவிலின்றி குருக்கள் மூலமாகவே அறிவு செலுத்தப்பட்டது. அவ்வாறு வழிவழியாக அறிவு பரப்பப்பட்டு வந்தது.

நாதர்களின் முக்கியமான தன்மை தங்களை மறைத்துக் கொள்வதே. அவர்களின் செயலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பர். குறிப்பாக தங்கள் பெயரின் பின்பு அமைந்துள்ள 'நாத்' என்பதையே அவர்களின் தன்மை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். பிறரிடம் அவர்கள் அதை வெளிப்படுத்த மாட்டார்கள்.

எடுத்துக்காட்டாக திருமூலர் நாத சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்.  அவரது நாத சம்பிரதாயப் பெயர் 'சதாசிவ நாத்' என்பதாகும். இதை அவரது பாடல்களில் குறிப்பிட்டிருப்பார். ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு அவரது இப்பெயர் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் அவரது பெயரை அவரே மறைமுகமாக் கையாள்கிறார். அதுபோலவே அபிநவ குப்தா மறைமுகமாக அமைந்துள்ள தாந்திரீக பயிற்சிகள் அனைத்தையும் தொகுத்து (நாதபாரம்பரியத்தில் உள்ளவை மற்றும் அவற்றில் இல்லாதவை என) அனைத்து தாந்த்ரீக முறைகளையும் ஒரே புத்தகமாக்கினார். அதன்பின்பே நாத சம்பிரதாயத்தில் இவ்வாறான தாந்த்ரீக முறைகள் உண்டு என்பதே மக்களுக்குத் தெரியத் துவங்கியது. மேற்கூறிய அபிநவகுப்தரும் நாத சம்பிரதாயத்தைச் சார்ந்த ஒருவராகவே இருக்கிறார். ஆனால் அவரது தன்மையை வெளிப்படுத்தாமல் இருந்துள்ளார். அவரைப் பற்றி அறிந்தவர்களின் வாயிலாகவே அஃது அறியப்பெற்றுள்ளது.

கோரக்நாத் இளமையுடனும் துடிப்புடனும் இருந்தமையால் அவ்வாறு பெயர் பெற்றார். அவர் கோரக்க தந்திரம், யோக தந்திரம் போன்றவற்றை எழுதினார்.  'ஹதயோக பரதீபிகா' என்ற யோக நூலை இயற்றியவர் சுவாத ராமா/ சுவாத ராம்நாத். அவர், நாதர்கள் யாவரையும் வணங்கி இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளமையால் அவர் நாத சம்பிரதாயத்தைச் சார்ந்தவர் என்று தெரியவருகிறது. இவ்வாறு அவர்களைப் பற்றி தெரிந்தமையாலேயே அவர்கள் மூலமாகத் தான் தாந்திரீக முறைகள் இவ்வுலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.

அவர்கள் முழுமையாக அவர்களது அடையாளத்தை மறைத்திருந்தால் இம்முறைகளும் எடுப்பார் கைப்பிள்ளையாக சம்பந்தம் இல்லாதவர்கள் யாவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் சென்றுவிட வாய்ப்புள்ளது.

நாதர்களைப் பற்றியும் அவர்களது சம்பிரதாயம் பற்றியும் கூறினால் அதை சிறிது நேரத்தில் கூறி முடிக்க இயலாது. ஏனெனில் அவர்கள் எங்கும் இருக்கின்றனர். எனவே நாம் அவ்வப்போது சிறிது சிறிதாக பேசியே அதைப் பற்றி அறிந்து கொள்ள முயல வேண்டும். மேலும் அவர்கள் வேறு பரிமாணத்தில் இருப்பதால் நமது உலகின் பார்வையால் அவர்களைப் பார்க்க முயலும்போது அஃது பார்வையற்றவர், பார்வையுள்ள மனிதரின் அருகே அமர்ந்து அவர் கூற இயலும் பொருளைப் பற்றி அறிய முயல்வது போலாகும்.

அக்கடவுள் உருவில் சிவனா விஷ்ணுவா விநாயகரா என உற்று நோக்குவதை விடுத்து, ஆற்றல் நிலையில் உணர முற்பட வேண்டும். புறத்தோற்றத்தை வணங்கி மதிப்பளிக்க வேண்டும். எனினும் அமைதியாக உள்நிலையில் ஆற்றல் தன்மையை உணர்ந்தாலே, நாம் செல்லும் மற்ற இடங்களிலும் எங்கெங்கு ஆற்றல் நிலை மேம்பட்டு விளங்குகிறது என்று அறிய உதவும். வேகவேகமாகப் பல கோவில்களுக்கு செல்வதால் அங்குள்ள ஆற்றல் நிலையை உணர இயலாது. எடுத்துக்காட்டாக நாம் ஒரு பூவின் நறுமணத்தை முகர்ந்து பார்த்திருந்தோமானால், அதே நறுமணத்தை வேறு இடத்திற்கு சென்றாலும் உணர முடிந்தால், அப்போதுதான் நாம் இதை முன்னரும் உணர்ந்துள்ளோம் எனவும், நறுமணம் முன்பை விட அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறது என்றும் உணர்ந்து பார்க்க இயலும்.

அதேபோன்று நாம் வீட்டில் இருந்து தியானம் செய்யும் போதும் அதே ஆற்றல் நிலையை உணர முடிந்தால், அவர்களது இருப்பு நம்மைச் சுற்றி இருக்கிறது என்பதை நாம் அறிய இயலும். அதை விடுத்து புறமாக சென்று வருவதில் பெரிய அளவில் எந்த மாற்றமும் உணர இயலாது. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் பன்னிரு ஆழ்வார்களிலும் பல்வேறு நாதர்கள் உள்ளனர். அவ்வாறு அவர்கள் பல இடங்களிலும் இயங்குகின்றனர். அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்தியே செயல்படுத்துவர் என்று கூற இயலாது. அவர்களது இயல்பு நிலையிலேயே அவர்கள் தங்களது பணிகளை தொடர்ந்து கொண்டே இருப்பர். எடுத்துக்காட்டாக திருமங்கை ஆழ்வார் நாதர்களில் ஒருவர். மற்ற ஆழ்வார்களை ஒப்பீடு செய்தால் இவரது வாழ்க்கை முறை செயல்பாடுகள் யாவையும் தனித்துவமாக இருக்கும். அதுபோல நாத சம்பிரதாயத்தில் பெண்களின் பங்கும் தவிர்க்க இயலாதது. ஆனால் வேத மறுப்பு கொள்கையான புத்தமதம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் நாத சம்பிரதாயத்தில் உள்ளவர்கள்  அச்சூழ்நிலைக்கேற்ப அக்காலகட்டத்தில் பெரும்பான்மையான புத்தகங்களை வெளியிடவில்லை. இவ்வாறான சன்யாச மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை. அவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்பட்ட வழியில் கோரக்கர் முக்கியமான ஒருவராக விளங்கினார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் அவர் பிரம்மச்சாரியாக இருக்கவில்லை. அதை அவரது கோரக்க தந்திரம் மூலம் அறியலாம். அவர் சன்யாசி அன்று என்பதையும் அறிய இயலும்.

அபிநவகுப்தரின் காலத்திற்குப் பின்பே கோரக்க தந்த்ரா போன்ற நூல்கள் மீண்டும் பரவ ஆரம்பித்தன. கோரக்கநாதர் பெண் சன்யாசிகளையும் உருவாக்கினார். எனவே நாத சம்பிரதாயத்தில் பெண்களுக்கு சரியான வகையில் பங்களிக்கப்பட்டுள்ளது.

தாந்திரீக முறைகளிலும் தசமஹா வித்யாவில் பெண் தன்மைக்கு உண்டானவற்றை அவர்கள் பின்பற்றுவர். நவ நாதர்களின் ஒன்பது பாதைகளில் உமா பந்த் என்று கூறப்படும் உமாநாத்தின் வழி, ஸ்தூல உடலில் பெண்களாக இருப்பவர்கள் பின்பற்றுவதாகும்‌. தாந்த்ரீக முறைகளில் கோரக்க தந்த்ரம் சிறிது வலிமையானது. மச்சீந்திரநாதருடையது தத்துவார்த்தமானது. 

இவ்வாறு விளக்கிய பின்பு முக்திநாத் பெயர்க்காரணம் பற்றி சுவாமிஜி அவர்கள் குறிப்பிட்டார்கள். அதில் மகாவிஷ்ணுவிற்கு துளசி சாபம் கொடுத்து விட்டதாம். அதற்காக மகாவிஷ்ணு இத்தலத்திற்கு வந்து தியானம் மேற்கொண்டு சாபவிமோசனம் எய்தினாராம். இதுவே முக்தி நாத் தலபுராணமாக கூறப்பெறுகிறது. ஆழ்வார்களால் மங்களசாசனம் பாடப்பெற்ற தலம் இந்த முக்திநாத். நாதர்கள் இம்மாதிரியான அடையாளங்களை மக்களை தம்மிடம் ஈர்த்து அவர்கள் வழிக்கு இட்டுச் செல்வதற்காகவே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு முக்தியைப் பற்றியும் நாதர்களைப் பற்றியும் விளக்கி எங்களை மறுநாள் செல்லவிருக்கும் முக்திநாத் பயணத்திற்கு முழுமையாக தயார் படுத்தி இருந்தார்கள் சுவாமிஜி.

24 5 2019 வெள்ளி அன்று காலை 6 மணியளவில் காலை மற்றும் மதிய உணவுகளைக் கட்டிக் கையில் எடுத்துக்கொண்டு பயணத்திற்கு தயாரானோம். குளிர்ந்த சூழ்நிலையில் சுற்றிலும் பசுமையோடு காட்சியளித்த இடங்களை ரசித்தவாறே பொக்காரா விமான நிலையத்தை அடைந்தோம். கையில் இருந்த காலை உணவை உட்கொண்டுவிட்டு விமானம் மூலம் ஜாம்சம் செல்லத் தயாரானோம். அன்று காலை எங்களுக்கு முன்னமே சுவாமிஜி ஜாம்சம் சென்று விட்டிருந்தார்கள்.

நாங்கள் பயணம் செய்யும் முன்பு அலைபேசியை flight mode இல் இடும் முன்பு சுவாமிஜியின் முன்னெச்சரிக்கை செய்தியைக் கண்டோம். சாகசம் நிறைந்த பயணத்துக்கு தயார் ஆகுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது வேறு வயிற்றை ஏதோ செய்வது போன்ற உணர்வை அளித்துக் கொண்டிருந்தது.

பொக்காரா விலிருந்து ஜாம்சம் செல்லும் விமானங்கள் மிகமிகச் சிறியதாக இருந்தன. மொத்தத்தில் 15 அல்லது 16 பேர் (விமானி, பணிப்பெண் உட்பட) செல்லும் படியாக இருந்தது. உள்ளே ஏறினால் பூங்காவில் உள்ள அமரும் பெஞ்ச் போன்று இருக்கைகள் இருந்தன. அவற்றை சரிசெய்து அமர்ந்தோம். விமானம் மெதுவாக மேலெழும்ப ஆரம்பித்து வயிற்றுக்குள் பலவித ஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணுக்கினிய காட்சிகளைக் கொண்ட பொக்காரா சிறிதாக மாறி மறைந்து போய்க் கொண்டிருந்தது. ஹிமாலயாவின் சிறுசிறு சிகரங்கள் சூழ விமானத்தின் எந்த ஜன்னல் வழி பார்க்கிலும் மலைகள் மட்டுமே காட்சி அளித்துக் கொண்டிருந்தன.

மலைக்குன்று, பள்ளத்தாக்கு, பின் மலைக்குன்று என்று எங்கெங்கு காணினும் மலையின் குன்றுகள். அரியணை அமர்ந்த அரசனின் மணிமகுடம் போல மலைகளின் உச்சியில் பனி மகுடம் தரித்து இருந்தது காண மிகவும் அழகாய் இருந்தது. சற்று தூரம் செல்லச்செல்ல சுற்றிலும் மேகமூட்டம் எங்களோடு பயணித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு வரை மகுடம் போன்ற பனி இப்போது மலைக் குன்றுகளின் ஆடையாய் மாறிவிட்டிருந்தது. முற்றிலும் பனியால் மூடப்பட்ட மலைக்குன்றுகள், உறைந்த நிலையில் தண்ணீர் என எங்கும் வெண்பனிமயம். விமானம் வேறு அவ்வப்போது கடகடவென சத்தத்துடன் குதித்து குதித்து சென்று கொண்டு இருந்தது. மற்ற பயணங்களை விட இது மிகவும் சிறிய நேரப்பயணமாகவே இருந்தது. விமானி தரை இறங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். நானும் சுவாமிஜி கூறியதை நினைவு கூர்ந்து நல்ல வேளை தப்பித்தோம்; சாகசம் எல்லாம் ஏதும் நிகழாமல் நல்லபடியாக தரையிறங்கப் போகிறோம் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே விமானம், போர் விமானக் கண்காட்சிகளில் காட்டுவது போல ஒரு பக்கமாக சரிந்து கொண்டே செல்ல ஆரம்பித்தது. 

அருகருகே மலைமுகடுகளில் எங்கே விமானத்தின் இறக்கை சென்று மோதி விடுமோ என்று தோன்றும் அளவு ஒரு பக்கமாகவே சிறிது தூரம் சென்று வேகமாகத் தரையிறங்கியது. எங்களின் இருக்கைகளில் பின்புறம் சாயுமாறு கொடுத்திருந்த அமைப்புகள் யாவும் கிடு கிடுவென ஆடிக் கொண்டே எங்கள் மீது சாய்ந்து கிடந்தது. நாங்கள் அனைவரும் கலவரமடைந்து அமர்ந்திருந்தோம். பிறகுதான் விமானியின் அறிவிப்பு மூலம் தெரிந்தது நாங்கள் ஜாம்சம் விமான நிலையம் வந்தடைந்த செய்தி.

விமானத்தில் இருந்து இறங்கும்போதே குளிர்ந்த காற்று வந்து அரவணைத்து வரவேற்றது. அனைவரும் குளிர் தாங்கும் உடைகளுக்குள் புகுந்துகொண்டோம். ஜாம்சம் விமான நிலையம் மிகவும் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட இடமாக அமைந்திருந்தது. விமான நிலையத்திற்கு வெளியே பெயர்ப்பலகை இருப்பதை வைத்தே அது விமான நிலையம் என்று அறிய இயலும்படி இருந்தது. பைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்தோம். இடப்பக்கம் திரும்பினால் சிறிது தூரத்திற்கு அப்பால் மலை மட்டுமே தெரிந்தது. வலப்பக்கம் திரும்பினால் தெருவின் முடிவில் மலை சூழ்ந்திருப்பது தெரிந்தது. சரி என்று ஒருமுறை நின்ற இடத்திலேயே இருந்து சுற்றிப் பார்த்தால் எங்கும் மலைக் குன்றுகள். அவ்விடம் விமான வழியில் முக்திநாத் செல்பவர்களை விமானம் கடைசியாக இறக்கிவிடும் இடம் என்பதால் அங்கு சில கடைகள், ஆங்காங்கே உணவகங்கள், தங்கும் விடுதிகள் என இவை அனைத்தும் தெருவின் இருமருங்கிலும் அமைந்திருந்தன. 


பொதுவாக எல்லா கட்டிடத்தின் கூரைகளிலும் அப்பகுதியில் பிரத்தியேகமாக கிடைக்கப்பெறும் நீளமான கற்களை நான்கைந்து அடுக்குகளாக வைத்திருந்தனர். எங்கள் வழிகாட்டி விடுதிக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். ஏதேனும் வண்டியில் செல்ல வேண்டும் என நினைத்து வண்டியை தேடிக்கொண்டிருந்தால், வழிகாட்டி நடக்கத் தொடங்கி விட்டிருந்தார். பிறகுதான் தெரிந்தது அந்த தெருவின் எதிர் வரிசையில் ஒரு 5 நிமிட நடைபயணத்தில் தங்கும் விடுதி அமைந்திருந்தது. விடுதியை அடைந்து முக்திநாத் செல்லத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு விரைந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அவ்விடுதி புராதனமானஅமைப்போடு பழையகால வீடுகளை நினைவூட்டும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் முக்திநாத் செல்லத் தேவையானவை மட்டும் எடுத்துக்கொண்டு தரை வழியாக பேருந்து மூலம் பயணப் படத் துவங்கி இருந்தோம். 

பயணத்தின் துவக்கத்திலிருந்தே கரடு முரடான பாதைதான். சிறிது நேரத்திற்கெல்லாம் கண்டகி நதியின் உள்ளே பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். நதியின் ஆற்றுப்படுகை பரந்து விரிந்திருந்தது. ஆங்காங்கே சில இடங்களில் ஓடை போல வெள்ளி நிற நீர் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் சற்று தூரத்தில் இருந்து முற்றிலும் மலைப்பாதை. இரு வண்டிகள் எதிர் எதிராக வந்தால் சற்று சிரமப்பட்டே நகர முடிகிறது. பாதை எங்கும் ஒருபுறம் மலைமுகடு மற்றொருபுறம் மலைச்சரிவு.

எங்கு திரும்பினாலும் சற்றே கரிய நிறமுடைய மலைக் குன்றுகளைக் காண முடிந்தது. மேலே ஏற ஏற கீழ் வழியாக பயணப்பட்ட கண்டகி நதிப் படுகை பரந்து விரிந்து கருப்புக் கம்பளம் போல தோற்றம் அளித்துக் கொண்டிருந்தது. செல்லும் வழியில் நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி அங்கே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.

அவ்விடத்திலிருந்து கீழே அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பச்சை பசேலென புல்வெளியைக் காண மிகவும் அருமையாக இருந்தது. அங்கிருந்து மேல் நோக்கிச் செல்லும் வழி எங்கும் பல அரச மரங்களைக் காண முடிந்தது. ஆனால் மேலே செல்லச் செல்ல மரங்களின் எண்ணிக்கை குறையத் துவங்கி இருந்தது. பேருந்து தன்னால் முடிந்த வரை சென்று விட்டிருந்தது. 

அங்கிருந்து நாங்கள் நடைப்பயணமாக முக்திநாத் கோவிலை நோக்கிப் பயணப்பட்டோம். நடக்க இயலாதவர்கள் அங்கிருந்து குதிரை மூலமாகவும் செல்ல முடியும். முக்கால் மணி நேர நடை பயணத்திற்குப் பின், முக்திநாத் கோவிலின் நுழைவு வாயிலை வந்தடைந்தோம். அங்கிருந்து கிட்டத்தட்ட நூறு படிக்கட்டுகள் ஏறினால் கோவிலை அடையலாம். அப்படிக்கட்டுகளில் பாதி வழியில் சாளக்கிராம கற்களை வைத்து பூஜை செய்யும் ஓர் கோவிலைக் கண்டோம். அங்கு பல்வேறு அளவுகளில் நிறைய சாளக்கிராமங்களை வைத்து வழிபடுகின்றனர். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு பின்பு மீண்டும் படியேறத் துவங்கினோம்.

எங்களது இடப்பக்கத்தில் மலைமீதிருந்து வரும் நீரோடை ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது. அதை ரசித்தவாறு மேலே ஏறிக் கோவிலை அடைந்தோம். கோவிலின் முன் அமைந்திருந்த இரு தீர்த்தங்களை முதலில் கண்டோம். பின்பு முக்திநாத் கோவிலின் நுழைவு வாயிலைக் கண்டோம். இவ்வளவு நாட்கள் எதிர்பார்த்து, இத்தனை தூரம் கடந்து, பல்வேறு வகையில் பயணப்பட்டு இப்பயணத்தின் இலக்கை அடைந்த அந்த நொடி மிகவும் பரவசமாக இருந்தது.

கோவிலுக்கு செல்லும் முன்பு கோமுக் (பசு முகம்) தீர்த்தம் என்று அழைக்கப்படும் 108 பசுவின் முகங்களை போன்ற அமைப்பின் வழியாக நீர் அருவி போன்று விழும் அமைப்பில் நீராடி விட்டு செல்ல வேண்டும் என நாங்கள் அனைவரும் நீராடத் தயாரானோம். முதலில் அமைந்துள்ள ஐந்து முதல் ஆறு நீர்வீழ்ச்சி வரை கடும் குளிரை உணர முடிந்தது. அதன் பின்பு தலைக்கு உள்ளிருந்து ஆயிரக்கணக்கான ஊசிகள் தலையை அழுத்துவது போன்ற ஓர் உணர்வு ஏற்பட தொடங்கி விட்டிருந்தது. பக்திப் பரவசத்தில் ஒவ்வொரு தீர்த்தத்திலும் உடலில் அனைத்துப் பகுதியும் நனைந்தாலே அடுத்த தீர்த்தத்திற்கு செல்வேன் என அடம்பிடித்து என் முன்னால் செல்பவர்கள் நிற்க, நான் அவர்களிடமிருந்து விலகி வேகவேகமாக 108 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு வெளியே வந்து விட்டேன். இப்போது நினைத்தாலும் அந்த குளிர் உணர்வு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அதற்குப் பின்பு கோவிலின் முன் அமைந்துள்ள இரு குளங்களிலும் நீராடி விட்டு முக்தி நாதரை தரிசிக்கத் தயாரானோம்.

கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து 10 அடிக்குள் முக்திநாதர் அமர்ந்திருக்கும் கோவில் கருவறை. அங்கு புத்த மதம் சார்ந்த பெண் சன்னியாசி போல இருந்த ஒருவரே பூஜை செய்கிறார். கருவறை வாயிலின் முன் இருந்த தடுப்பின் அருகே நின்று முக்தி நாதரை தரிசித்தோம். பின்பு கோவிலின் அருகே அமைந்துள்ள மரத்தடியில் அனைவரும் அமர்ந்து, சுவாமிஜியின் தலைமையில் தன்வந்திரி மந்திரம், சுதர்சன மந்திரம் மற்றும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் யாவும் கூறி யாகம் செய்தோம். பின்பு மந்திர ஜபம் செய்துவிட்டு அருகே இருந்த புத்தர் சிலையைக் கண்டு அதன் பின்பு கையில் கட்டி எடுத்து வந்திருந்த புளியோதரையை அனைவரும் உட்கொண்டோம்.

நேபாளத்தில் பிற இடங்களில் அமைந்துள்ள கோவில்களைப் போல முக்திநாத் கோவிலைச் சுற்றியோ அங்கு செல்லும் வழியிலோ ஒரு சிறு கடை கூட காணப்பெறவில்லை. அவ்வாறு அமைந்துள்ள ஓரிடத்தில் அம்மலைப் பிரதேசத்தில் அவசரத் தேவைக்குக்கூட ஏதும் கிடைக்க இயலாத ஓர் இடத்தில் வந்து சுவாமியை தரிசித்து நமது அன்றாட தென்னிந்திய உணவினை உண்ணும் அனுபவம் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. உணவருந்தி விட்டு பின்பு மீண்டும் ஒருமுறை முக்தி நாதரை தரிசித்துவிட்டுப் புறப்படத் தயாரானோம்.

இரண்டு மூன்று மணிக்குப் பின்னர் அங்கு சில நேரங்களில் புயல் ஏற்படும் என அறிவுறுத்தப் பெற்றிருந்ததால் நாங்கள் கீழே இறங்க துவங்கிவிட்டிருந்தோம்.
வரும் வழியில் விஷ்ணு பாதம் அமைந்திருந்தது. அதை வணங்கி, பின்பு கீழே இறங்கி வந்து மீண்டும் பேருந்து நிற்கும் இடத்தை அடைந்து, அங்கிருந்து ஜாம்சம் நோக்கிப் பயணப்படத் துவங்கினோம். வரும் வழியெங்கும் மலையின் அழகைக் கண்டவாறே ஜாம்சம்மில் நாங்கள் அன்றிரவு தங்கும் விடுதியை அடைந்தோம். மறுநாள் காலை சிறிது சீக்கிரமாக கிளம்ப வேண்டி இருந்ததாலும் உடல் களைப்பினாலும் சீக்கிரமே உறங்கிப் போனோம்.

மறுநாள் காலையிலேயே இரு குழுக்களாக பிரிந்து 25 5 2019 சனிக்கிழமை அன்று பொக்காரா வந்து அடைந்தோம். பொக்காராவில் எங்களுக்காக காலை உணவு (இட்லி வடை கேசரி) என தயாராகக் காத்திருந்தது. அங்கு உணவருந்தி விட்டு பின்பு அங்கே அமைந்துள்ள கோவில்களுக்குச் செல்லத் தயாரானோம். முதலில் பொக்காராவில் ஏரியின் நடுவே அமைந்துள்ள வாராகி கோவிலுக்குச் சென்றோம். யாவரும் படகு மூலம் கோவிலை அடைந்து பிரார்த்தனை செய்து விட்டுத் திரும்பினோம். அக்கோவிலில் நமது ஊரில் சிதறுதேங்காய் அர்ப்பணிப்பது போல வழக்கம் இருக்கிறது. ஆனால் ஒரு சிறிய மாற்றம்.தேங்காயை சிதற வைக்க ஓர் இயந்திரத்தை அமைத்து ஒருவர் அதற்கு பொறுப்பாளராக தேங்காய்களை உடைத்துக் கொண்டு இருந்தார். சிறிது வேகமாக இட்டால் தானாக உடைபடும் தேங்காய்க்கு ஓர் இயந்திரம் மற்றும் அதற்கு ஒரு பொறுப்பாளர் எனக் காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது அவ்வமைப்பு. கோவிலைச் சுற்றி நீர் நிறைந்த ஏரியைக் கண்டு களித்து விட்டு பின் திரும்பினோம்.

அங்கிருந்து அடுத்ததாக குப்தேஷ்வர் மஹாதேவ் என்ற சிவன் கோவிலுக்கு சென்றோம். அன்று வெயிலின் வெப்பம் மிகவும் அதிகமாக இருந்தது. கோவிலுக்குள் செல்ல நுழைவுச் சீட்டு வாங்கும் இடம் சற்று உயரத்தில் படிக்கட்டுகளோடு அமைந்திருந்தது. நுழைவுச் சீட்டு வாங்கி விட்டு உள்ளே சென்றோம். அங்கு ஜலநாராயணர் என விஷ்ணு அனந்த சயனத்தில் நீரில் இருப்பது போல ஒரு சிலை அமைக்கப்பட்டிருந்தது. காண்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. அங்கிருந்து மீண்டும் உள்ளே செல்லச்செல்ல வளைந்து வளைந்து படிக்கட்டுகள் கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தது. உள்ளே செல்லச்செல்ல ஒளியின் அளவு குறைந்து கொண்டே வந்தது. ஈரப்பதமான ஓர் சூழ்நிலை நிலவியது. சிறிது தூரம் சென்ற பின்பு மிகவும் பழமையான ஓர் சிவலிங்கம் அமைந்திருந்தது. குப்தேஷ்வர் மஹாதேவ் என்று அழைக்கப்படும் அவரை வணங்கிவிட்டு அதற்கும் மேல் குகைக்குள் செல்ல ஆரம்பித்தோம். குகையின் வழி மிகமிக குறுகிக் கொண்டே வந்தது. செல்லும் வழியெங்கும் மேலிருந்து நீர்  ஆங்காங்கே தலைமீது  சொட்டிக்கொண்டே இருந்தது. 

தரை எங்கும் ஈரமுற்று இருந்தது. சுற்றிலும் சுண்ணாம்பு கற்களாலான பாறைகள் சூழ்ந்துஇருந்தன. செல்லச் செல்ல நீர்வீழ்ச்சியின் சத்தம் கேட்கத் துவங்கியது. உள்ளே முன்னேறிச் சென்று தேவி நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியை தூரத்திலிருந்து கண்டு களித்தோம். கரும் பாறையின் இடுக்கு வழியே வெண் பஞ்சு போலத் தோற்றமளித்தது அவ்வருவி. பொதுவாக அருவிகளுக்கு சென்றால் அருகில் சென்று நீரில் இறங்கியே பழகி இருந்த எனக்கு அருவியை தொடக் கூட முடியாத தூரத்தில் பார்த்து திரும்பியது சிறிது வருத்தம் அளித்தது.

அங்கிருந்து வெளியே வந்ததும் யாவரும் அருவியைக் காணச் செல்லலாம் எனக் கூறி அழைத்துச் சென்றனர். மறுபடியும் நுழைவுச் சீட்டு வாங்கி சாலையின் மறுபுறம் இருக்கும் அருவியை காணச் சென்றால் அதே அருவி இப்போது வெளிச்சமாக கண்முன்னே வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஆனால் அதுவும் தொடமுடியாத தூரத்தில் தான்.அதைக் கண்டு

பின்பு அங்கிருந்து கிளம்பி விந்தியவாசினி கோவிலை வந்தடைந்தோம்.அக்கோவில் தரைமட்டத்தில் இருந்து சற்றே உயரத்தில் அமைந்திருந்தது. படிக்கட்டுகள் வழியாக கோவிலை அடைந்தோம். அங்கு உறைந்திருந்த விந்திய வாசினியைப் பிரார்த்தித்துவிட்டு கோவிலைச் சுற்றி அமைந்திருந்த இடத்தில் புறாக்களுக்கு மத்தியில் உலாவிக் கொண்டு இருந்தோம். அப்போது எங்களுடன் பயணித்த விஜி ராம் கோவிலுக்கு அருகே ஒரு திருமணம் நடந்து கொண்டிருப்பதை காண்பித்தார்கள். அத்திருமணத்தில் மணப்பெண் மாப்பிள்ளை இருவரையும் சேர்த்து மொத்தமே பத்து பேர்தான் இருந்திருப்பார்கள். மிகவும் எளிமையான முறையில் நடந்து கொண்டிருந்த திருமணச் சடங்குகளை சிறிது நேரம் கண்டிருந்தோம்.

பின்பு அங்கிருந்து கிளம்பி நாங்கள் தங்கியிருந்த விடுதியை அடைந்தோம்.  மணி 3 க்கு மேல் ஆகியிருந்தது. அன்று அருமையான மதிய உணவு எங்களுக்காக காத்திருந்தது. உணவருந்தி பின்னர் ஓய்வெடுக்கச் சென்றோம். சிறிது நேரத்திற்குள் படபடவென மழை பெய்யத் தொடங்கிவிட்டது.

மறுநாள் 26 5 2019 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு பொக்காராவிலிருந்து கிளம்பி விமானம் மூலம் காட்மாண்டு வந்தடைந்தோம். அன்று மாலை காட்மாண்டுவில் உள்ள கோவில்களுக்குச் செல்வதாக பயணத் திட்டம்.

மாலை சுயம்புநாத் மஹாதேவ் என்று அழைக்கப்பட்ட புத்தமதக் கோவிலுக்குச் சென்றோம். அது முன்பு இந்துக் கோவிலாக இருந்து பிறகு புத்த மதக் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே சில உலோகத்தாலான எந்திரம் போன்ற வடிவமைப்புகளைக் காண முடிகிறது. அக்கோவிலின் கோபுரம் போன்ற அமைப்பில் இரு கண்கள் வரையப்பட்டிருந்தன. அக்கோவிலின் சுற்றுப் புறத்தில் இருந்து பார்த்தால் காட்மாண்டு நகரின் ஒரு பகுதியைக் காண முடிந்தது.

அங்கிருந்து கிளம்பி ஜல நாராயணர் கோவிலை வந்தடைந்தோம். சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்க அனந்த சயனக் கோலத்தில் நாராயணரை தரிசித்தோம். முற்றிலும் சாளகிராமத்தால் வடிவமைக்கப்பட்டிருந்த ஜலநாராயணரை வணங்கி விட்டு வெளியில் உள்ள திண்ணை ஒன்றில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அக்கோவிலில் உள்ள ஓர் மரத்தில் மரத்தாமரை மலர்கள் பூத்திருந்தன. அவற்றையும் அங்கே இருந்த ருத்ராக்ஷ மரத்தினையும் கண்டு பின்பு தங்கும் விடுதிக்குத் திரும்பினோம்.

27 5 2019 திங்கள் அன்று காலை உணவருந்திய பின் அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்றோம். மிகவும் உயரமான சிவன் சிலை சங்க மஹாதேவ் என்ற பெயருடன்  நின்றகோலத்தில் காட்சி அளிப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்து பக்தபூரில் உள்ள டோலேஷ்வர் மஹாதேவ் என்ற சிவன் கோவிலை வந்தடைந்தோம்.

சிவன் ஓர் எருதின் உருக்கொண்டு பாண்டவர்களிடமிருந்து மறைந்து கேதார்நாத்தில் இருந்தாராம். பாண்டவர்கள் ஒருவழியாக சிவன் எங்கே உள்ளார் என்பதைக் கண்டறிந்தவுடன் அவ்வெருதை எங்கும் நகர விடாமல் தடுக்கும் பொருட்டு வாலைப் பிடித்தனராம். அப்போது எருதின் தலை மட்டும் காணாமல் போய்விட்டதாம். அத்தலைப் பகுதியே பக்தப்பூரில் உள்ள டோலேஷ்வர் மஹாதேவ் என்ற பெயரில் வழங்கப்படுவதாக குறிப்பிடுகிறார்கள். அக்கோவிலுக்கு வெளிப்புறப் பிரகாரத்தில் பெரியதாக இடுக்கி, உடுக்கை போன்றவற்றை வடிவமைத்திருந்தனர்.சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கே சில இடங்களில் இடிபாடுகளை இன்னமும் காண முடிந்தது.

அங்கே வழிபட்ட பின்பு சங்கு நாராயணர் கோவிலை வந்தடைந்தோம். கோவிலுக்குச் செல்லும் வழியில் இரு மருங்கிலும் பல்வேறு கடைகள். அக்கடைகள் பலவற்றிலும் பிரதானமாக பல்வேறு மரத்தாலும் உலோகத்தாலும் செய்யப்பட்ட கைவினைப் பொருள்களைக் காண முடிந்தது. பல அழகிய ஓவியங்களையும் கண்டவாறு கோவிலை வந்தடைந்தோம்.கோவிலில் எங்களையும் இறைவனையும் தவிர பெரியதாக மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தது.புறாக்கள் கூட்டம் கூட்டமாக கோவில் கோபுரத்தில் குடியிருந்தன.அக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் கலைநயம் மிக்கதாகக் காணப்பட்டது. கோவிலின் இடப்புறத்தில் அம்மன் சன்னிதி ஒன்று அமைந்திருந்தது. அது தசமஹாவித்யாவிற்கான கோவில் என சுவாமிஜி குறிப்பிட்டிருந்தார்கள். உள்ளே இருட்டாக இருந்ததால் கதவு வழியே பார்த்ததில் பெரிதாக ஏதும் தெரியவில்லை. அங்கிருந்து கோவிலைச் சுற்றி அமைந்திருந்த பல்வேறு சிற்பங்களைக் கண்ட வண்ணம் சுவாமி சன்னதியை அடைந்தோம். அங்கே சுவாமிக்கு எதிரே ஒரு பெரிய அளவிலான கருடன், சுவாமியை வணங்குவது போல் கல்லால் வடிவமைத்திருந்தனர். அங்கு சுவாமியின் கழுத்தைச் சுற்றி உண்மையான பாம்பைப் பாடம் செய்து ஆபரணமாக அணிவித்திருப்பதாக கோவிலின் அர்ச்சகர் தெரிவித்தார். அங்கு சுவாமியை வழிபட்ட பின்னர் வெளியே வந்து கையில் எடுத்து வந்திருந்த உணவினை மனமாற உண்டு மகிழ்ந்தோம். பின்பு அங்கிருந்து கிளம்பி விடுதியை வந்தடைந்தோம்.மறுநாள் ஊருக்கு திரும்ப வேண்டிய நாள் அதற்குள் பயணம் நிறைவுற்று விட்டதே என மனம் கூறிக் கொண்டிருந்தது.
உடைகளையும் உடைமைகளையும் எடுத்து சீர்படுத்தி வைத்து விட்டுக் கிளம்ப ஆயத்தமானோம்.

மறுநாள் 28 5 2019 செவ்வாயன்று காலை கோரக்நாத் சமாதியை அடைந்து வணங்கி விட்டு மந்திர ஜபம் செய்தோம். பின்பு சுவாமிஜி நிறைவுரை வழங்கினார்கள். அதில், விளக்கின் ஒளி சில நேரங்களில் குன்றும் போது அதைத் தூண்டி ஒளியை சீர்படுத்துவது போலவே ஆன்மிக பயணங்களும் நம்மை புத்துணர்வுடன் ஆன்ம சாதனையில் ஈடுபட உதவும் என்று குறிப்பிட்டார்கள். இவ்வாறு உடலில் வலு இருக்கும் காலத்தில் பயணங்களை மேற்கொண்டுவிட்டு ஓய்வெடுக்கும் வயதில் அனுபவங்களைக் கொண்டு மனதால் பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்கள். ஏதோ அதிசயம் நடந்தாலே ஆன்மீகப்பயணம் சிறப்பு வாய்ந்தது என்று அர்த்தம் இல்லை.நாம் இங்கு வந்ததிலிருந்து இந்நொடி வரையில் யாவரும் நல்ல உடல் நலம் மற்றும் மன நலனும் இருக்கப் பெற்றமையே ஓர் ஆசி என்றும் நமது செல்வாக்கின் மூலம் கோவிலில் வரிசையில் நிற்காமல் தரிசிப்பது போன்ற சலுகைகளை பணம் மூலம் பெற இயலும். ஆனால் இயற்கையின் ஒத்துழைப்பைப் பணத்தால் பெற இயலாது.முக்திநாத் சென்று திரும்பும் வரையில் அங்கு நிலவிய தட்பவெப்பம் மிகவும் ஏற்புடையதாகவும் பயணத்திற்கு உதவி புரிவதாகவும் அமைந்திருந்தது பெரிய வரமே என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெறற்கு அரிய பயண வாய்ப்பை நல்கிய குருவருளையும் திருவருளையும் வணங்கி இப்பயணக் கட்டுரையை அவர்களின் திருப் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

Monday, August 26, 2019

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2  - 


    அனுபவ பகிர்வு : விஜி ராம்


பயணம் வேறு யாத்திரை வேறு. பயணத்திற்கு நண்பர்கள் தேவை. யாத்திரைக்கோ குரு மிக அவசியம். புராண தலங்கள், ஆன்மீகதலங்கள் போன்றவை நண்பர்களுடன் செல்வதை விட நம்மை அறிந்த நாம் புரிந்து கொள்ள நினைக்கும் குருவுடன் செல்வது நம்முள் இருக்கும் அறியாமை இருளை நீக்கி, அந்தந்தத்தலங்களை இன்னும் அதிகம் அனுபவிக்க வழிவகுக்கும்.நான் போக வேண்டும் என்று நினைத்த பெரும்பாலான தலங்கள் குரு மூலமே தரிசித்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம் நம் எண்ணத்தை சொல்லிவிட்டு மறந்து விடலாம், எப்படியேனும் நம்மை அழைத்து சென்றிடுவார். திருவண்ணாமலை, காசி, அலகாபத், கயா, ஹிமாலயாஸ், தேவப்ரயாகை, கும்பமேளா என்ற அந்த வரிசை இன்னும் அதிகம், 2015 வருடம் முக்திநாத் செல்லும் ஆர்வத்தை செயலாக்கும் போது பூகம்பத்தால் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. இதோ இந்த மேமாதம் முக்திநாத்தை தரிசிக்கும்  பாக்யம் பெற்றோம். முக்தி நாத்: 

நாத பரம்பரையின் பூமி, ஆதிநாதரின் ஆதிக்கபூமி. அங்கே செல்கிறோம் என்ற எண்ணமே மிக உவப்பானதாக இருந்தது. போகும் முன் பார்த்த , படித்த விசயங்கள் அனைத்துமே கொஞ்சம் பீதியளிப்பவையாகவே இருந்தது. ஆனால்  அதைப்பற்றி அதிகம் என்றுமே யோசித்ததில்லை, அழைத்துசெல்பவர் கண்டிப்பாக இவற்றை சரிபடுத்தி நல்ல தரிசனத்துடன் ஆனந்த பயணமாகவே ஆக்குவார். டெல்லி, காத்மாண்டு, போஹ்ரா, ஜோம்சம் என்று தினமுமே குறிப்பிட்ட தூரம்  பயணம்  செய்தே முக்திநாதரை அடைய முடியும். பயணத்திட்டம் நாம் தீட்டலாம், ஆனால் இயற்கையே இறுதி முடிவெடுக்கும். மழை, பனிப்புயல், நிலச்சரிவு, அடிக்கடி நடக்கும் விபத்துகள் என்று அனைத்தையும் தாண்டி இயற்கை நம் பயணத்தின் தன்மையை தீர்மானிக்கும்.  ஆதிநாதர் அனுமதித்து, இயற்கை விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். 

மே 21 நடு இரவு 1 மணி விமானத்தில் டெல்லிக்கு பயணித்து காத்மாண்டு விமானம் ஏறி  மதியம் 2 மணிக்கு காத்மாண்டு விமான நிலையம் அடைந்தோம். காத்மாண்டு நேபாள தலைநகர், மலைப்பிரதேசமே, ஊருக்கு நடுவில் விமான நிலையம், எங்கு சென்றாலும் அதனை சுற்றியே பாதைகள். எங்களுடய பயணமத்திட்டம்  தினமும் காலை ஆரம்பித்து 3வது  நாள் தான் முக்திநாத்தை அடையும்படியானது. 


காத்மாண்டு : ஊர் முழுதும் சாலையோர  ஊதாப்பூக்கள் சிந்தும் மரங்கள், சற்றே அழுக்கான நகரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, பரபரப்பிலும் நிதானமான ஊர்.  காத்மாண்டு அடைந்து மற்ற மாணவர்களும் வந்த பின் மாலை முதலில் சென்ற இடம் பசுபதிநாதர் கோவில் . யுனெஸ்கோவின்  கீழிருக்கும் சின்னமாக அறிவித்திருக்கிறார்கள். பெரிய சுற்றுப்புறத்துடன் , வெறும் செங்கல் கட்டுமானத்துடன் கேரளாவை நினைவுபடுத்தும் கோவில். இந்த பயணம் முழுதும்   துளி வெயில் இன்றி, மழை மேகங்கள் சூழ, அவ்வப்போது மழை சாறலாகவும் பெருமழையாகவும் பெய்து ஆசிர்வதித்துக்கொண்டே இருந்தது. பசுபதிநாதர் கோவில் வலதுபுறத்தில் இருக்கும் புவனேஸ்வரியை தரிசித்து , பசுபதிநாதரை தரிசிக்க வரிசையில் இணைந்த போது மணி 6. 

பசுபதிநாதர்  , லிங்க வடிவில் இருந்தாலும் நான்கு புறமும் முகம் கொண்டு சதுர்முகனாக இருக்கிறார். வழக்கமாக ஒரு கதவு திறந்திருக்கும் தரிசித்து வரலாம், காலையில் 9.30 முதல் 12.30 வரையிலும் மாலை 6.30 மணி முதல் 8 வரையிலும் நான்கு கதவுகளும் திறந்திருக்கும் நாற்புறம் சுற்றி வந்து சிவனை தரிசிக்கலாம். நாங்களும் காத்திருந்து நாற்புறமும் சுற்றி  நாதரை தரிசித்து வரும் போது மழை தூறலாக ஆசிர்வதிக்க ஆரம்பித்திருந்தது. இரவு சிறிய அறிமுக உரையுடன் பிரிந்தோம்.


2 ஆம் நாள் :

 காலை பத்து மணிக்கே எங்களுக்கு போஹ்ரா விமானம். இங்கு கவனிக்க வேண்டியது விமானம் கிளம்ப எந்த குறிப்பிட்ட நேரமும் இல்லை, வரும்போது வரும், கிளம்பும் போது கிளம்பும், எனவே உங்களுக்கு சொல்லப்பட்ட நேரத்தில் விமான நிலையம் அடைந்து விடுவது நலம். காலை 6 மணிக்கு கோரக்கர் சன்னதிக்கு பயணம். பசுபதிநாதர் கோவிலின் இடதுபுறம் ஒரு சாலை பிரியும் அதில் சிறு குன்று உண்டு, பெரிய பெரிய படிகளில் அநேகம் பேர் ஓடிக்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் இருப்பார்கள், அந்த படிகளில் ஏறி சிறு குன்றின் உச்சியை அடைந்தால் அங்கே வசிக்கிறார் கோரக்கர்.  தலைவரின் அனுமதியுடன் தான் எந்தப்பயணமும் ஆரம்பிக்கவேண்டும், இதோ கோரக்கரை தரிசித்து, அனுமதிபெற்றுக்கொடிருக்கிறோம். மந்திர ஜெபமோடு அந்த சூழல் இன்னொரு முறை மீண்டும் வாய்க்க குருவருள் துணையிருக்கட்டும்.


விமான நிலையம் அடைந்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் போஹ்ரா அடைந்தோம். போஹ்ரா, அழகான சிறிய ஊர். காத்மாண்டு போல் கூட்டமில்லை, மிக மிக இதமான கால நிலை, அழகான ஏரியை சுற்றி அமைதியான பாதையும், ஒரு புறம் கடைகளும், நினைத்த பொழுது வானத்தை பிளந்த மழையும் தூரத்தில் வெள்ளிப்பனி மலையுமாக கண்நிறைந்த ஊர். மாலை சத்சங்கத்தில் முக்திநாத், ஏன் எதற்கு, நாத பரம்பரை, இன்னும் எங்களின் எத்தனையோ கேள்விகளுக்கு  பதிலுரைத்து அடுத்த நாள் பயணத்திற்கு மனதளவில் தயார் படுத்தப்பட்டோம்.3-ம் நாள் = ஜோம்சம் பயணம் 

போஹ்ராவிலிருந்து 16 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகவிமானம், உங்கள் பெயர் அச்சிட்ட போர்டிங் பாஸ் எதுவும் இருக்காது. இங்கு வருவதற்கு முன்பே அன்னபூர்ணா மலையேற்றம் குறித்து அனுமதி வாங்கியிருந்தோம். தோராயமாக ஒருவருக்கு இந்திய ரூபாயில் 750 ரூபாய் ஆகும். காலை 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கும். நான்கு விமான கம்பனிகள், சிறிய வீடு போன்ற விமான நிலையம். வெறும் 16 நிமிட பயணமே, மண்ணால் ஆன மலைகள், பனிசிகரங்கள், காடுகள், சமவெளிகள், நதிகள், சூரியன் பட்டு ஜொலிக்கும் அன்னபூர்னா சிகரம் என்று வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பயணம் அது. கொஞ்சம் உயிர் பயத்தையும் காட்டியே ஜோம்சம்மில் நம்மை இறக்கிவிடுவார்கள். விட்டார்கள், ஒரே ஒரு நீண்ட தெரு, அதில் இந்தக்கோடியில் விமானநிலையம் பாதி வழியில் ஹோட்டல், அந்தக்கோடியில் காளிகண்டகி நதி. 8 மணிக்கு  முக்திநாத் செல்ல தயாரானோம். இங்கிருந்து 21 கிலோமீட்டர் பயணம், ஆனால் 2 முதல் 3 மணிநேரம் ஆகும். சாலை என்பது கடைசி 10 கிலோமீட்டருக்கே அதுவரை தண்ணீர் வற்றிய கண்டகி நதியில் பஸ் பயணம். குலுங்கி  விலா எலும்புகள் இடம் மாறுகையில் பாதை தென்பட்டது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி புகைப்படும் எடுத்து மீண்டும் பஸ்ஸில் ஏறி இரண்டு கிலோமீட்டர் போனதுமே கவனித்தேன் என் ஹேண்ட் பேக் காணோம். பாஸ்போர்ட் முதல் கொண்டு எல்லாமே இருந்தது. ட்ரைவர் உடனே வண்டியை திருப்ப முடியாது என்று மீண்டும் ஒரு கிலோ மீட்டர் போய் வண்டியை திருப்பி நாங்கள் புகைப்படம் எடுத்த இடம் வந்த போது வைத்த இடத்திலேயே என் கைப்பை அநாதையாக கிடந்தது. அதுவரை அந்த ரோட்டில் ஒரு வண்டியோ மனிதனோ கடக்கவில்லை. முக்திநாத்  ஆட்டோ ஸ்டேண்ட் எனப்படும் வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து நடக்க வேண்டும். 2 கிலோமீட்டர் மட்டுமே. நடக்க முடியாதவர்களுக்கு போனி எனப்படும் மட்டக்குதிரை சவாரியும், டோலி எனப்படும் நான்கு பேர் சேர்ந்து தூக்கிசெல்லும் வசதியும் ஹோம்சம்மிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. அப்படி ஒன்றும் கடினமான பாதை அல்ல, கொஞ்சம் படிகள்  கரடுமுரடான பாதை என்று மொத்தமே 2 கிலோமீட்டர் தான். மெதுவாக ஏறலாம்.  கவனிக்க வேண்டியது இங்கு அனைத்து கடைகளும் காலை 6 மணிக்கு திறந்து மாலை 4 மணிக்கு மூடப்படும். எலுமிச்சம் பழம் கிடைக்காது. தண்ணீர் தேவைக்கு எடுத்து செல்லவும். குளிர் கொஞ்சம் அதிகம். . முக்திநாத்தை அடைகிறோம். ஐந்தாம் திருமொழியில் கூறப்படும் திருசாளக்கிராமம், 108 வைணவத்தலங்களுள் ஒன்றின் முன் நிற்கிறோம் என்பதே நம்பமுடியாத ஒன்றாக. அத்தனை உயரத்தில் தமிழைப்பார்த்ததும் வரும் உணர்வு வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. இதே போல் தேவப்பிரயாகையிலும் தமிழை பார்த்த நினைவுவந்தது. இரண்டடுக்கு கோபுரம் கொண்ட கோவில் கோபுரம், சுற்றியும் 108 சுனைகளில் தீர்த்த நீர், முன்புறம் பாவ, புண்ணியக்குளங்கள். பிரம்மாண்டமான கோவில்களையே தமிழகமெங்கும் பார்த்த நமக்கு இது மிகச்சிறிய கோவில். கோவிலின் வலது புறம் கழிப்பறைவசதிகள், பெண்கள் உடைமாற்றும் அறை. 108 சுனைகளிலும், சந்திரசூரிய குளங்களிலும் நீராட ஆயுத்தமாகிறோம்.சிறிய சுனைகள் , அழகாக கூட்டமில்லாமல் குளிக்கலாம் என்று முதல் சுனையில் தலையை நீட்டியதும் தான் உறைத்தது, இது  கொடும் பனிநீர் என்று. தலைக்குள் உறைந்து காது வழியாக வெப்பம் வருவதை உணர்ந்தேன். குளிர் அப்படின்னு சொல்லமுடியாத குளிர், கைகால்கள் நடுங்க, உடம்பே உறைந்த நடக்கமுடியாத குளிரில் உடம்பு நடுங்க வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து குறுகி உட்கார்ந்தேன். இவை அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்தது. அத்தனை குளிரை உள்வாங்கி உடம்பு உணர்ந்து சுவாசம் நன்றாகவே கால் மணி நேரம் ஆயிற்று. இன்னும் இரண்டு குளங்கள் இருக்கிறதே. மனசை தைரியப்படுத்தி இரண்டிலும் முங்கி குளித்து ஓடி உடைமாற்றி வந்து அரைமணி நேரம் கழித்தே  உடம்பில் வெப்பமும் சுவாசமும் சாதாரணமானது. முக்திநாதரை தரிசிக்க சென்றால் அங்கு பூஜை செய்பவர் ஒரு பெண்மணி. புத்தருக்கான கோவிலாக மாற்றியிருந்தாலும்  வைணவத்தலமாகவே இருக்கிறது.  மதியம் ஒரு மணிநேர நடை சாற்றல் சமயமானதால் கூட்டமும் இருந்தது. ஆனாலும் எங்கள் மாணவர்கள்   கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் தரிசனத்தை சாத்தியமாக்கினர்.  மந்திர ஜெபமும், மஹாமிருத்யங்க யாகமும் முடித்து கொண்டு வந்த புளியோதரையை உண்டு சிறிது தூரத்தில் இருக்கும் பிரம்மாண்ட புத்தரையும் தரிசித்து கீழிறங்க ஆரம்பித்தோம். மீண்டும் காளி கண்டகிவழி விடுதி திரும்பி இரவை ஜோம்சம்மில்  பெருமழை சப்தத்தில் கழித்து காலையில் போஹ்ரா மீண்டும் கிளம்பினோம்.


காத்மாண்டு – போஹ்ரா தோராயமாக 200 கிலோமீட்டர் விமானத்தில் 20 நிமிடமும் வளைந்து நெளிந்த ரோட்டில் 10 மணிநேரமும் ஆகும். போஹ்ரா – ஜோம்சம் 180 கிலோ மீட்டர் விமானத்தில் 16 நிமிடங்களும் பாதை வழியில் 12 மணி நேரமும் ஆகும். பாதை வழியில் சென்றால் மனோ காம்னாக்யா தேவியை தரிசிக்கலாம். நாங்கள் விமானத்தில் சென்றதால் இம்முறை இயலவில்லை. அடுத்த முறை தேவி அருளட்டும்
போஹ்ரா, காலை விமானத்தில் போஹ்ராவை அடைந்ததும் ஆரம்பித்த  மழை  விடாமல் பெய்துகொண்டே இருந்தது. போஹ்ராவில் பார்க்கவேண்டிய இடங்களில் சில, பராஹி கோவில் ( வராஹி கோவில்) ஏரிக்கு நடுவில் அமைந்துள்ளது, படகில்  இந்திய மதிப்பில் போக வர 100 ரூபாய், அழகிய சிறு கோவில், இங்கு கோவில்களில் ஸ்டிக்கர் பொட்டு, கண்ணாடி வளையல் போன்றவைகளை ஸ்வாமிக்கு சமர்பிப்க்கின்றனர். 
குப்தேஸ்வர மஹாதேவ் கேவ் : குகைக்கோவில், தரையிலிருந்து  100 படிகள் வரை கீழிறங்கி சென்றால்  ஆயிரம் வருட பழமையான சிவன் கோவிலும் இன்னும் இறங்கினால் ஆர்பரிக்கும் அருவியையையும் பார்க்கலாம்..
குப்தேஸ்வரர் கோவிலுக்கு எதிர்புறம் உள்ளது டாவிஸ் அருவி. இந்த அருவிதான் குப்தேஸ்வரர் கோவிலுக்குள்ளும் விழுகிறது.
பிந்தியபாஷினி கோவில் : பழைய பஜார் பகுதியில் உள்ள பிந்தி பாஷினி கோவில் முக்கியமான துர்கை ஆலயம். சிவன், கிருஷ்ணர், பஜ்ரங்பலி என்று எல்லாருக்கும் சந்நதி உள்ளது. சிறு குன்று போன்ற இடம். லிப்ட் உண்டு, கட்டணமும் உண்டு.
இந்த இடங்களை பார்த்து , ஓய்வெடுத்து அடுத்த நாள் காத்மாண்டு பயணித்தோம்.

காத்மாண்டு. 
நினைத்ததை விட சுலபமாக, நிறைவான தரிசனம் முக்திநாத்திலும், போஹ்ராவிலும். நாங்கள் காத்மாண்டு அடைந்த பின்னரே அறிந்தோம் அன்றும் அதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு முக்திநாத் சேவை பனிப்புயல், கடும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது என்று. ஆதிநாதரின் அருளின்று எங்கள் பயணம் இதுவரை இத்தனை சிறப்பாக இருந்திருக்காது. காத்மாண்டுவில் பார்க்க வேண்டிய சில இடங்கள்

ஸ்வய்ம்பு நாத் : முழுதான ஹிந்துக்கள் நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் புத்த மதமும் பரவியிருக்கிறது. ஸ்வம்புநாத் அதில் ஒன்று. சிறு குன்றின் மேல் இருக்கும் புத்த ஆலயம், அருமையான சிற்பக்கலைகளுடன் பெரிய கண்கள் வரையப்பட்ட ஸ்தூபியை வணங்குகின்றனர்.

ஜலநாராயணன் கோவில் : தண்ணீரில் துயில் கொள்ளும் பிரம்மாண்ட  விஷ்ணுவின் கோவில், அதன் சின்ன  அளவு சிலையை வைத்து தினப்படி யாகம் நடத்தப்படுகிறது.

கைலாத்நாத் கோவில் : ஊரைவிட்டு சிறிது தள்ளி இருக்கும் 140 அடி சிவன் கோவில்,, தனியாருக்கு சொந்தமானது.

டோலேஸ்வர் கோவில் : காத்மாண்டுவை சுற்றி பெரும்பாலும் ஹிந்து கோவில்கள், அதில் முக்கியமானது டோலேஸ்வர், மஹாபாரதக்கதைகளில் இடம்பெற்ற பழமை வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

சங்குநாராயணன் கோவில். மலைமேல் இருக்கும் விஷ்ணு கோவில், மிக மிக அழகான சிற்பங்களும் விஷ்ணுபுராண சிலைகளுமாக அழகான இடம்.

இந்த கோவில்கள் அனைத்திலும் ஆள் நடமாட்டம் குறைவு, நுழைவுக்கட்டணம் உண்டு, அனைத்துமே காத்மாண்டுவின் நான்கு திசைகளிலும் தள்ளி அமைந்திருக்கிறது.காத்மாண்டுவை விட்டு கிளம்பும் நேரம்  வந்துவிட்டது. மீண்டும் பசுபதிநாதரை தரிசித்து, கோரக்கரிடம் நன்றிகூறி தியானித்து , யாத்திரையின் நிறைவு உரையாக ஸ்வாமி ஓம்கார் அவர்களிடம் சந்தேகம் தெளிந்து அருளாசி வாங்கி டெல்லியை நோக்கி பயணப்படுகிறோம்.
இது ஒரு பயணக்கட்டுரை அல்ல, ஆயிரம் பக்கம் எழுதினாலும் தீராத அனுபவங்கள் அவை. முக்திநாத் போகவேண்டும் என்று நினைப்போருக்கு  இப்படி இருக்கும் என்ற சிறிய வழிகாட்டி. நாதர்களின் பூமியின் அருளையும், அனுபவத்தையும் வார்த்தைகளில் எழுத முடியாது என்றாலும் , எப்போது  படித்தாலும் மீண்டும் அந்த இடங்களுக்கு கண்மூடி மனதளவில் பயணிக்கவும், காளி கண்டகியின் வழியில் முக்திநாதரை தரிசிக்கவும், கோரக்கரை அருகிருந்து உணரவும் ,, மறுபடியும் வாழ்வில் இன்னொரு முறை அவர்களை காணும்  வாய்ப்பினையும் வேண்டவும் ஒரு வழி. மீண்டும் குருஅருள் மனம் வைத்து கோரக்கரையும் நாதபுரியையும் தரிசிக்க அருள்புரியட்டும்.