Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, August 28, 2010

நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே...!

சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கும் கூறுவதற்கும் எனக்கு தயக்கம் உண்டு. அதில் அதி முக்கியமானது சமாதி என்ற ஒரு விஷயம். சமாதி என்ற கருத்தை வெளிப்படுத்தும் பொழுது பலருக்கு இந்த கருத்து புரிவதில்லை. சமாதி பற்றி பேசவோ எழுதவோ என்றும் நான் விரும்பியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் விளக்குவதால் பலர் விளங்காமல் போகலாம். விளக்காமல் போனால் சிலர் வீணாகப் போகலாம். விவரித்தாலும் விவரிக்கவில்லை என்றாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றே என்பது சமாதி என்ற கருத்தில் மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன்.

நம்மில் இருப்பவர்களில் இக்கருத்தை பற்றி அறிந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஒரு சிலருக்கு சமாதி என்றால் இறந்த பின் வைக்கும் கல்லறை என நினைக்கிறார்கள். சென்னைக்கு செல்லும் நம் ஆட்கள் கூட அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி பார்க்கும் திட்டத்துடன் செல்லுவதுண்டு. இவர்களுக்கு கல்லறை என்பதை அந்தஸ்தாக கூறும் வார்த்தையே சமாதி. சமாதி என்பதை தெரிந்து கொள்ள முயலாமல் தங்களுக்கு தெரிந்த சமாதி என்பதே சரி என்பவர்கள் இவ்வகை.

இன்னும் சிலருக்கு சமாதி என்பது பல்வேறு ஆன்மீக நூலில் படித்த வாசகம் என்றோ அல்லது பெரிய ஆன்மீக உயர் நிலை என்றோ கருதுவார்கள். என்னிடம் யோகம் பயில வரும் சிலர் புத்தக குப்பைகளை அவர்களுக்குள் சுமந்து வருவார்கள். சமாதிகளையும் சமாதியின் வகைகளையும் இவர்கள் விலாவாரியாக பேசுவார்கள். ஆனால் அந்த நிலை அடைய ஒரு துளி கூட முயற்சி செய்ய மாட்டார்கள்.

மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் இந்த இரண்டு தன்மையையும் கடந்து இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாமல் உடுத்தி, உண்டு, உறங்கி இறந்துவிடுவார்கள்.

எங்காவது சமாதி என்ற வார்த்தையை கேள்விப்பட்டு விளக்கமாக தெரிந்து கொள்ளும் நோக்கில் இவர்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்கள் தெரியுமா?

முதல் வகை : தம்பி பார்த்து யோகா செய்யுப்பா. யோகா பண்ணி மூளை வெடிச்சு செத்துப்போகிறதைத்தான் சமாதினு சொல்லுவாங்க.
(இவ்வாறு தனக்கு தெரிந்ததை சரி என நினைத்து கொஞ்ச நஞ்ச ஆட்களையும் நஞ்சாக்கிவிடுவார்)

இரண்டாம் வகை : தம்பி சமாதினா சாதாரண விஷயமா? ஹிமாலயாவில ஒரு குருஜி இருக்காராம் அவர் முன்னூறு வருஷமா சமாதியில இருக்காராம். அதுக்கு குண்டலாமிக ஜிர்விஸ்தி சமாதினு பேராம். அதை பத்தி நேத்து தான் படிச்சேன்.
(இதை கேட்டதும் நம் ஆட்கள், ஓ இது பெரிய விஷயம் போல என ஒதுங்கிவிடுவார்கள்)

மூன்றாம் வகை : என்ன தம்பி யோகா அப்படி இப்படினு ஏதோ சொல்லிக்கிட்டு. சமாதினு சொன்னவுடன தான் எனக்கு நியாபகம் வருது, நம்ம வளர்மதிக்கு வர இருபதாம் தேதி கல்யாணம். உனக்கு பத்திரிகை வச்சாங்களா?
(இவர்களுக்கு சமாதி என்பது ஏதோ ஒரு அன்னிய மொழி)

மேற்கண்ட மூன்று நிலையில் கடைசி நிலையில் இருப்பவர்கள் மேம்பட்டவர்கள் என்பேன். முதல் இரண்டு நிலையில் இருப்பவர்கள் மிகவும் கொடூரமானவர்கள், இவர்களால் பலருக்கு தீங்க விளையும் என்பது உண்மை.

சமாதி என்ற விஷயத்தை பற்றி விளக்குவதற்கான விவரிப்பு அல்ல இது. விவரிப்பதால் யாதொரு பயனும் இல்லை. மொழியால் விளக்க முடியாத ஒரு விஷயம் தான் என்றாலும் சமாதியை பற்றி விளக்குவதை விட சமாதியில் இருப்பவர்களை பற்றி விளக்குவது இங்கே அவசியமாகிறது.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் சமாதி யோகம் என்ற விஷயம் ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனம் மற்றும் ஐந்து வகையான உணர்வு உறுப்புகளை குவித்து தாரணை என்ற நிலையில் ஒருவர் இருந்தால் அதிலிருந்து த்யாணா என்ற நிலைக்கு செல்லலாம். அந்த த்யாணா (தியானம்) என்ற நிலை விரைவில் அவர்களை சமாதிக்கு இட்டுச்செல்லும். சமாதி நிலையில் இருக்கும் ஒருவருக்கு உடல் உணர்வு இல்லாமல் முழுமையாக அசைவற்று இருப்பார்கள். அவர்களின் சுவாசம் இல்லாமல் நாடி துடிப்பு இல்லாமல் ஒரு மரம் போல இருப்பார்கள். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இவர்கள் வாழும் பிணம்...!

இதைத்தான் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்.

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

இவ்வாறு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் அடுத்த நிலை சமாதிக்குமாற்றம் அடைந்துவிடுவார்கள். இவர்கள் பார்க்க சாதாரணமான நம்மை போல வேலைகளில் ஈடுபடுவார்கள் ஆனால் உள்ளே ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு கால தேச வித்தியாசம் இருக்காது. மேலும் சுவாசிக்கும் தன்மையிலும் உள் நிலையிலும் வித்தியாசமாக இருப்பார்கள்.

பூமியின் வட துருவத்திற்கு சென்று வந்த ஒருவர் அங்கே வீசும் பனிப்புயலை பற்றி எவ்வளவு தான் விளக்கினாலும் நமக்கு புரியாது. நாம் பனிப்புயலில் இருந்தால் தானே அது உணர முடியும். அது போன்றதே சமாதி பற்றிய விளக்கமும் என்பேன்.

இறைவனுடன் முழுமையாக கலக்கும் இந்த உயர் ஆன்மீக நிலையை பலர் தவறாக புரிந்துகொள்வதும், தவறாக பயன்படுத்துவதும் உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு தவறான நபரின் விடியோ உலகை வட்டமிட்டது. அவர் தன்னை காப்பற்றிக்கொள்ள நான் சமாதியில் இருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்றார் என கேள்விபட்டேன். உலகில் சமாதியை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. இப்படியே போனால் நாளை திருமணம் முடிந்து ‘சமாதி’ முகூர்த்தத்திற்கு நாள் பார்க்க சொல்லுவார்கள்.

தான் சமாதி அடைந்தேன் என அதை விவரிப்பவர்கள் உண்மையில் சமாதி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது அறிக. இவர்களை போன்றவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். முன்காலத்தில் ஆன்மீக வாதிகளின் போர்வையில் இருந்த பலர் தான் பெரிய யோகி என காட்டுவதற்கு, இந்த நாளில் இந்த நேரத்தில் ஜீவசமாதி அடையப் போகிறேன் என அறிவிப்பார்கள். அந்த நாளில் அவர்கள் இருக்கும் இடமும், ஊரும் திருவிழாக் கோலம் கொண்டு திகழும். மக்கள் இவர் சமாதி ஆவதை காண நேரில் வருவார்கள்.

சமாதி கட்டும் குழிக்குள் இந்த யோகி அமர்ந்திருப்பார் நேரம் செல்லும் ஆனால் உடலை விட்டு உயிர் பிரியாது. உண்மையான யோகிக்குதானே அதெல்லாம் முடியும்? இவரோ டம்மி பீஸ்...! நேரம் கடக்க கடக்க மக்கள் கொந்தளிக்க துவங்குவார்கள். இன்னும் தாமதித்தால் விபரீதம் என உணரும் சிஷ்ய கோடிகள் குருவுக்கு தீபாராதனை காட்டி அவரின் உச்சந்தலையில் நன்றாக முற்றிய தேங்காயால் ஒரே போடு...!

குருஜி கபால மோக்ஷம் அடைந்துவிடுவார். சொன்ன தேதியில் ஜீவ சமாதியான (ஆக்கப்பட்ட) யோகியின் புகழ் பரவும். இல்லையேல் மக்கள் குருவை நையப்புடைப்பார்கள் அவர் வேறு ஊரில் ஆசிரமும் தேடுவார். இது போன்று நடந்த சம்பவங்கள் ஏராளம். இவற்றை புரிந்துகொள்ளாத மக்கள் இன்னும் கூட ஆன்மீக உயர் நிலை அடைய தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளுவதுண்டு. இப்படிபட்ட (போலி)யோகிகளின் வழிகாட்டினால் இப்படி பட்டவர்களே தானே உருவாகும் சாத்தியம் உண்டு ?

ஏதோ திருமந்திரத்திலும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் மட்டும் இதை பற்றி கூறி இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். அனைத்து மத நூல்களிலும் இக்கருத்து மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஏன் மறைமுகமாக கூறவேண்டும்? உழுத நிலத்தில் தானே விதைக்க முடியும்? இல்லை என்றால் பயிரும் களை என கூறுவார்கள் அல்லவா? அதனால் முழுமையான தெளிவு பிறக்கும் பொழுது மத நூல்களில் இருக்கும் மறை பொருட்கள் விளங்க துவங்கும்.

அப்படிபட்ட வாசகம் தான் பைபிளில் உள்ள “நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே” என்ற வாசகம்.

Isa 2:22
Cease ye from man, whose breath [is] in his nostrils: for wherein is he to be accounted of? (நன்றி bible.cc)

இதற்கு நேரடியான விளக்கம், சமாதியில் இருக்கும் தன்மை கொண்டவர்களை நம்பு உன்னை ஆன்மீக உயர் நிலை அடைய செய்வார்கள் என்பதே ஆகும். சமாதி நிலை கண்டு நாசியில் சுவாசமில்லா மனிதர்கள் முழுமையான ஞான நிலையை அடைந்தவர்கள். அதைவிடுத்து சாதாரணமாக உன்னை போன்று சுவாசிக்கும் மனிதனை வழிகாட்டியாக நம்பி விடாதே என எச்சரிக்கிறது. திருமூலர் கூறிய “செத்திட் டிருப்பார் ” என்ற பதத்தை இங்கே நினைவு கூறுங்கள்.

"i am that I am" போன்ற வசனங்கள் பழைய ஏற்பாட்டில் முழுமையான யோக நிலையை உணர்வதற்காக அமைந்திருக்கிறது. பைபிளில் மட்டுமல்ல இது போல குரானிலும், குரு கிரந்த சாகிப் என்ற சீக்கிய புனித நூலிலும், பெளத்த மற்றும் சமண நூலிலும் காணக்கிடைக்கிறது.

“நாசியில் சுவாசம் இருக்கும் மனிதனை நம்பாதே” என்ற வாசகத்தை ஒரு கற்று தெளிந்த ஆட்சியாளர் - யாரையும் நம்பாதே என்பதற்கு உதாரணமாக பத்திரிகை பேட்டியில் பேசியது கவலை அளித்தது. இது போன்ற அறிய கருத்துக்களை ஆராயாமல் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது.

நான் அனைத்து மத நூல்களையும் ஆழ்ந்து படித்தவன் அல்ல. எனக்கு தெரிந்தவற்றை அவ்வாசகத்துடன் தொடர்பு கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறேன். இவ்வாசகங்களை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோன்றியதை இங்கே விவரித்தேன். அவ்வளவே..!

சரி... சமாதி என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? நான் கேட்டதற்கு பின்வருமாறு திருமூலர் கூறினார்.

காரிய மான உபாதியைத் தாங்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே

.............. என்ன புரிஞ்சுச்சா?

Thursday, August 19, 2010

தீக்‌ஷை

உலகில் எத்தனையோ உறவு முறைகள் உண்டு. உங்கள் ஆசைகளையும் கனவுகளை நிறைவேற்றும் உறவு முறைகள், உங்கள் கடமைகளையும் உரிமைகளையும் உணர்த்தும் உறவு முறைகள் என பல்வேறு உறவு முறைகள் இருந்தாலும் இவற்றிற்கு அப்பாற்பட்டு ஓர் உறவு நிலை உண்டு.

அது குரு சிஷ்ய உறவு என்பதாகும். உண்மையில் குரு சிஷ்ய இணைவு என்பது உறவு முறை என்று கூறக்கூடாது. இது உறவு முறை அல்ல உயிர் முறை. தன் உயிரின் மூலம் எங்கே இருக்கிறது என அறிய வழிகாட்டும் ஒருவர் குரு. அப்படி பார்த்தால் இது உயிர் முறை தானே? உங்கள் வாழ்க்கையில் இருக்கும் உறவு முறைகள் எதோ ஒரு சுய நலத்தின் அடிப்படையில் இயங்கும். சுய நலத்தின் சதவிகிதம் வேறுபடுமே தவிர தன்னலமற்ற உறவு இருக்கவே முடியாது. ஆனால் குரு என்பவர் தன்னலமற்ற கருணையை என்றும் பொழிபவராக இருக்கிறார்.

தற்காலத்தில் குரு சிஷ்ய உறவு முறை மற்றும் குருவின் தன்மை ஆகியவை கேலிக்கு உண்டான விஷயமாகிவிட்டது. சுயநல சிஷ்யர்கள் சுயநலமிக்க போலி ஆன்மீகவாதிகளை நாடி செல்லுவதால் இன்னிலை ஏற்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் சின்ன பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆன்மீகவாதியை நாடும் இவர்கள் பிறகு இவர்களை குரு என நினைத்துக் கொள்ளுகிறார்கள்.

குரு தன்மை என்பதை பற்றிய போதிய அறிவில்லாததால் பார்ப்பவர்களை எல்லாம் குரு என்பார்கள் சிலர். பள்ளியில் கற்றுக்கொடுத்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களை கூட குரு என அழைப்பார்கள். குரு வேண்டுமானால் ஆசிரியராக இருக்கலாம். ஆசிரியர்கள் என்றும் குருவாகிவிட முடியாது.

என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆசிரியர் உங்கள் அறிவை வளர்ப்பவர். குரு உங்களின் உயிரை வளர்ப்பவர். உங்களின் உள்ளே ஒளியை வழங்கி அறியாமையை போக்குபவர். ஆச்சாரியன் என்ற வார்த்தை ஆசிரியரை குறிக்கும். மஹாபாரதத்தில் அர்ச்சுனனின் பாத்திரத்தை உணர்ந்தால் இக்கருத்தை புரிந்துகொள்ளலாம். வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணாச்சாரியார் அர்ச்சுனனுக்கு ஆச்சாரியார், ஞானத்தை வழங்கிய ஸ்ரீகிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு குரு.

உங்களின் உலகப்பார்வையை மாற்றி உயிர்ப்பிக்கச் செய்பவர் குரு. இந்த உயிர்ப்பிக்கும் தன்மைக்கு தீக்‌ஷை என பெயர். வடமொழி சொல்லான தீக்‌ஷா என்ற வார்த்தை தமிழில் தீக்‌ஷை/ தீச்சை / தீட்டை என பல வழிகளில் அழைக்கப்படுகிறது.

குரு அனைவருக்கும் தீட்ஷை அளிப்பதில்லை. ஒரு ஆன்மா ஆன்மீக உயர் நிலை காண தயார் நிலையில் இருப்பதை கண்டு அதற்கு மட்டுமே குருவால் தீட்ஷை வழங்க முடியும். தீட்ஷை என்றால் என்ன என பலருக்கு தெரியாததால் பல்வேறு போலிகள் தீட்சை கொடுக்கிறேன் என ஏமாற்றுகிறார்கள்.

குரு தன் ஆன்மாவால் உங்கள் ஆன்மாவை தீண்டி உணரச் செய்வதை தீக்‌ஷை என கூறலாம். தீட்ஷையில் பல்வேறு முறைகள் மற்றும் வகைகள் உண்டு.

தீட்ஷை மூன்று வகையாக அளிக்கப்படுவதாக தத்தாத்ரேய புராணம் கூறுகிறது. அவை ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மோன தீட்சை என்பதாகும்.


குரு தன் உடல் அங்கங்களால் சிஷ்யனை தொட்டு கொடுப்பது ஸ்பரிச தீட்சை. பசு தன் கன்றை நாவால் தடவி பேனுவது இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.


குரு தன் கண்களால் சிஷ்யனை முழுமையாக பார்த்து கொடுக்கும் தீட்சைக்கு நயன தீட்சை என பெயர். தாய் வாத்து தனது குழந்தைகளை வாயால் எதையும் கூறாமல் கண் பார்வையிலேயே வழி நடத்திச் செல்லுவது இதற்கு சரியான உதாரணம்.



சிஷ்யன் குருவிற்கு அருகில் இல்லாமல் வெவ்வேறு இடத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாலும் தன் ஞான பலத்தால் தீட்சை அளிப்பது மோன தீட்சை எனப்படும். ஆமை ஆழ்கடலில் உணவு தேடிக்கொண்டிருந்தாலும் அதன் நுட்பமான மனதால் கடற்கரையில்இருக்கும் குஞ்சுகளை தொடர்பு கொண்டிருக்குமாம். அவற்றிற்கான உணவு நேரம் வந்ததும் கடற்கரைக்கு வந்துவிடும் என்பார்கள். ஆமையின் தன்மையில் இந்த தீட்சை செயல்படுகிறது.

இவ்வாறு மூன்று நிலையில் அளிக்கப்படும் தீட்சை பல்வேறு தேவைகளுக்காக அளிக்கப்படுகிறது. மந்திர தீட்சை, யோக தீட்சை, ஆன்ம தீட்சை, ஞான தீட்சை, மெளன தீட்சை, சன்யாச தீட்சை என காரணங்கள் நீண்டு கொண்டே செல்லும்.

தற்சமயம் பத்திரிகைகளில் கடன் தொல்லை நீங்க, புதிய வேலை கிடைக்க, நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க என்ற பல்வேறு அற்புத காரணங்களுக்கு தீட்சை தருகிறார்கள். ஒன்று புரிந்துகொள்ளுங்கள்.... தீட்சை அக உலகுக்கு தரப்படுவது, புற உலகுக்கு அல்ல. உங்களுக்குள் பெரும் அணு குண்டு வெடிப்பு நிகழச்செய்யும் தீட்சையை விடுத்து இது போன்ற சின்ன காரியங்களுக்கு தீட்சை வழங்குபவர்கள் தரமானவர்களாக இருப்பார்களா சிந்தியுங்கள்.

தீட்சை வாங்க வேண்டும் என்றல்லாம் கட்டாயம் இல்லை. நாம் ஒருவரை அனுகி தீட்சை தாருங்கள் என கேட்க வேண்டியது அவசியமும் அல்ல. தீட்சை என்பது ஞானம் எனும் வேள்விக்கு ஊற்றப்படும் நெய்.

குரு அருள் அனைவருக்கும் கிடைக்கும் தன்மை உண்டு. அக்காலத்தில் குருவின் அருள் உங்களை தீட்சை பெறும் நிலைக்கு உயர்த்தும்.

தீட்சை சார்ந்து பல்வேறு நபர்களை நான் சந்தித்து உள்ளேன். நான் இவரிடம் தீட்சை வாங்கினேன், நான் ஒன்றுக்கு மேம்பட்ட நபர்களிடம் தீட்சை வாங்கினேன். இவர்கள் எல்லாம் ஆன்மீகத்தில் கொடிகட்டிப் பறப்பவர்கள் என தங்களின் தீட்சையை பெருமையாக கூறுவார்கள். தீட்சை அளிப்பது என்பது உங்களுக்கும் உங்கள் குருவுக்குமான தனிப்பட்ட விஷயம்.

இதை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பது ஆணவமே. அப்படி வெளிப்படுத்தும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் தீட்சை வாங்கும் அளவுக்கு முன்னேற்றம் அடையவில்லை என பொருள்.

இன்னும் சிலரோ உங்களுக்கு பணம் (டொனேஷன்) கொடுக்கிறோம் தீட்சை தாருங்கள் என கேட்பார்கள். அவர்களுக்கு தீட்சை என்பது ரூபாய்க்கு இரண்டு கிடைக்கும் பொருள். இவர்கள் எப்பொழுதும் திருந்தப் போவது இல்லை. எதிர்வரும் காலத்தில் குருவை கடத்தி கொண்டு போய் தீட்சை கேட்டாலும் கேட்பார்கள்.

சுயநலம் மற்றும் ஆணவம் என்ற விழித்திரை உங்களுக்கு இருக்கும் வரை குரு உங்களுக்கு தீட்சை அளிக்கமாட்டார். விழித்திரையின்றி முழுமையாக கண் திறக்க முயலுங்கள் குரு உங்களுக்கு முன் நிற்பது தெரியும்.

குருவருள் உங்களை வழிநடத்தட்டும்.

மந்திர தீட்சை பற்றிய குரு கதை படிக்க இங்கே சொடுக்கவும்.



Wednesday, August 11, 2010

வேதாந்த வகுப்பில் சுப்பாண்டி

சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒருவர் வந்து வேதாந்த கருத்துக்களை கொண்டு தர்க்கம் செய்தார். நான் இயல்பாகவே தர்க்கங்களில் ஆர்வம் செலுத்தாததால் மெளனமாக இருந்தேன். இதை கண்ட சுப்பாண்டி மிகவும் மன வருத்தம் கொண்டான். நான் வேதாந்தம் தெரியாமல் தோற்றுவிட்டதாகவும், என்னை பின்பற்றும் அவனுக்கு அது மிகப்பெரிய அவமானமாகவும் கருதி வருந்தினான். இந்த வரலாற்று அவமானத்தை சரி செய்ய தானே வேதாந்தம் கற்பது என முடிவுக்கு வந்துவிட்டான்.

பிறகு ஒரு நாள் வந்து “குருஜீ நான் வேதாந்தம் கற்றுக் கொள்ளப்போகிறேன்” என்றான். போகிறேன் என எங்கோ இருக்கும் இடத்தை குறிப்பிடுகிறான் என்பதால், “நான் வேண்டுமானால் கற்றுக்கொடுக்கவா?” என கேட்டேன். என் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தவாறே, “உங்களுக்கு தெரிஞ்சிருந்தா நான் ஏன் கத்துக்கப்போறேன்” என்றான். இதற்கு நான் ஒன்றும் கூறவில்லை. சரி சென்று வா என வாழ்த்தி அனுப்பினேன்.

ஓவர் டூ வேதாந்த வகுப்பு .......

வேதாந்த ஆசிரியர் ராஜூ சாஸ்திரியின் முன் பவ்வியமாக அமர்ந்திருந்தான் சுப்பாண்டி.

“சுப்பாண்டி இன்று நாம் ஆன்மா என்பதை பற்றி பேசுவோம். ஆன்மா என்பதே உன் சொரூபம், நீ உடல் அல்ல, நீ மனம் அல்ல. ஆன்மாவே உண்மை”

“ஆன்மா-னா என்ன? அது எப்படிப்பட்டது?”

“எது தீயால் சுட முடியாதோ, எது நீரால் மூழ்கடிக்க முடியாதோ, எது காற்றை விட லேசானதோ, எது ஆகாயத்தை போல தூய்மையானதோ அதுவே ஆன்மா”

“அப்படிப்பாத்தா சூப்பர் ஸ்டார் தான் ஆன்மாவா? அவரைத்தான் வில்லன்களால எதுவுமே செய்ய முடியாது”

“ஸ்ப்ப்பா... அது இல்லை சுப்பாண்டி. சினிமா என்பது மாயை, பொய் பிம்பம். ஆன்மா என்பது உண்மையான வஸ்து”

”ஆன்மானே ஒரு சினிமா வந்துச்சே...அப்போ அது பொய்யா? கொஞ்சம் டீட்டெய்லா சொல்லுங்க”

”சுப்பு.... கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ....
கண் எதனால் பார்க்கப்படுகிறதோ, கண் எதை பார்க்காதோ அது ஆன்மா.
காது எதனால் கேட்கிறதோ, காது எதை கேட்காதோ அது ஆன்மா.
வாய் எதனால் வேலை செய்கிறதோ வாயால் எதை உணர முடியாதோ அது ஆன்மா.”

“நம்ம கண்ணு காதுல உணர முடியாத குப்ப சமாச்சாரத்தை பத்தி நாம ஏன் பேசனும்? வேற எதாவது உருப்படியா சொல்லித்தாங்க சாஸ்திரி”

“என்னது குப்ப சமாச்சாரமா? ஆன்மா என்பதை புரிந்து கொண்டால் தான் வேதாந்தத்தை புரிந்து கொள்ள முடியும். உதாராணமா உன் உடல் நீ இல்லைனு சொன்னேன் இல்லையா? நீ போட்டிருக்கும் உடை மாதிரி இந்த உடலை ஆன்மா போட்டுருக்கு. இந்த உடலை நீ என சொல்லிக்க கூடாது. இந்த பேண்ட் டீ சர்ட் உன் உடலோட உறுப்பு இல்லை இல்லையா? அது போல உன் உடல் நீ அல்ல, பேண்ட் சர்ட் அழுக்காச்சுன்னா மாத்திக்கிற மாதிரி இந்த ஆன்மா உடல் வேலை செய்யலைனா மாத்திக்கும்.”

“ஓஹோ, அப்ப வேற வேற உடல் நமக்கு கிடைக்கும்? உடல் நிரந்திரம் இல்லை அப்படித்தானே”

“சபாஷ், இப்பத்தான் நீ புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்க..”

“நீங்க எப்பவும் வெள்ளை வேஷ்டி மேல் துண்டு போட்டுருக்கீங்க. என் குருஜீ எப்பவும் காவி கலர் போட்டிருக்காரு, அப்ப உங்க உடை மாறாதே? அப்ப உங்க உடல் தான் நீங்களா?”

“அ...அத்..து..அ...அப்படி இல்லை..தம்பி...உடை நிறம் ஒரே மாதிரி இருந்தாலும் ஒரே வேஷ்டியவா நான் கட்டிப்பேன்? அதுபோலத்தான் உடை நிரந்திரமல்ல. ஆன்மாவே நிஜம்”

“அப்ப உடை இல்லாம இருக்கிறவங்கதான் நிஜமா இருக்கறவங்களா? நீங்க சொல்லித்தர்ரது ஒரே அசிங்கமா இருக்கே”

"அது இல்லடா... ஆன்மா அஹங்காரம்னு உடை போட்டிருக்கு. அதனால மாயை அதில் சேர்ந்திருக்கும். அஹங்காரமும் மாயையும் இணைஞ்சுருக்கரதால ஆன்மாவை பார்க்க முடியாது. அஹங்காரமும் மாயையும் அழிஞ்சாத்தான் ஆன்மாவை முழுமையா உணர முடியும். “

“நம்ம வீட்டில கொசு கரப்பான் அழிச்சா வீடு சுத்தமாகிற மாதிரி சரியா?”

“சரியாச்சொன்னடா”

”அப்ப அஹங்காரம் மாயை அழிக்கும் பூச்சி மருந்து எங்க கிடைக்கும்?”

“டேய் அறிவு கெட்டவனே.. விளங்காமாறி...உன்னையெல்லாம் எவண்டா இங்க அனுப்பினது..

நீ வேதாந்தம் படிக்கலைனு யாரு அழுதா? வேனும்னே என்னை கலாய்க்கிறியா? போடாங் ?!?!!@!@!@*@!@*&*””

“சாஸ்திரி....முதல்ல சுப்பாண்டின்னீங்க, அப்பறம் சுப்பு, அப்பறம் தம்பி.. கடைசியா டேய்..இப்ப கெட்டவார்த்தையில திட்டீட்டீங்க... அப்படி என்ன நான் தப்பா கேள்வி கேட்டேன்? புரியலைனு தானே கேட்டேன்.. சரி சரி கோபப்படாதீங்க. ஏதோ ஆன்மா ஆன்மானு சொன்னீங்களே அப்படினா என்னானு சொல்லுங்க”

“என்னது திருப்பியும் முதல்ல இருந்தா........”

Monday, August 2, 2010

அடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம்

கோவை ப்ரணவ பீடத்தில் அடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு ஞாயிறும் காலை 9 முதல் 12 வரை வகுப்புகள் நடைபெறும். 8 வாரங்களில் முழுமையான ஜோதிடத்தை கற்று தெளிவு பெறலாம்.

இந்த பயிற்சியில் அடிப்படை ஜோதிடம், பிறப்பு ஜாதகத்திற்கு பலன் கூறுதல், பிரசன்ன ஜாதகத்திற்கு பலன் கூறுதல் மற்றும் உயர் நட்சத்திர ஜோதிடம் ஆகியவை கற்றுக்கொள்ளலாம்.

இந்த பயிற்சிக்கு முன் ஜோதிடம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கான பயிற்சி இது.


மேலும் விபரங்களுக்கு : 99 44 2 333 55, 99 44 1 333 55