Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, April 7, 2013

பழைய பஞ்சாங்கம் 7-4-2013


சுப்பாண்டியார் - சுப்பாண்டி யார் ?

நமது வலைபக்கத்தை வாசிக்கும் பலருக்கு சுப்பாண்டியை நன்றாக அறிமுகம் உண்டு. நான் பல ஊர்களுக்கு பயணிக்கும் பொழுது சுப்பாண்டி கூட வந்திருக்காரா? என கேட்பதுண்டு. தொலைபேசியில் என்னுடன் பேசுபவர்கள் கூட பேச்சின்முடிவில் சுப்பாண்டியை கேட்டதாக சொல்லுங்க என்பார்கள். அவனுக்கு தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளை எழுதி அதற்கு ஆலோசனை வேண்டி பலர் கடிதம் எழுதுகிறார்கள். நான் ஒருவன் இங்கே இருப்பதையே சுப்பாண்டி மறைத்துவிடுகிறான். ஒரு சில வேளைகளில் இவன் பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து எனக்கு பொறாமை கூட ஏற்படுவதுண்டு. இந்த சுப்பாண்டியை பலருக்கு அறிமுகம் செய்துவைத்ததே நான் தான். அவன் எனக்கு எப்படி அறிமுகம் ஆனான் தெரியுமா?


ஒரு நாள் பல்பொருள் கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பணம் செலுத்தும் இடத்தில் ஒரே கூட்டமும் கூச்சலுமாக இருந்தது. நமக்குத்தான் பிறர் பிரச்சனையில் ஆர்வம் அதிகம் வருமே? உடனே சென்று கூட்டத்தை விலக்கிப்பார்த்தேன்.

அங்கே குழந்தை தனமான முகத்துடன் அமர்ந்திருந்தான் சுப்பாண்டி. இப்படி ஒரு அப்பாவியை அடித்திருக்கிறார்களே என நினைத்து, என்னப்பா இங்க பிரச்சனை என கேட்டேன்.

கடையில் ஒருவர் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது பணம் வாங்குபவரிடம் சுப்பாண்டி கேட்டானாம்.., 

“ஏன் சார் காசு கொடுத்து தானே சிகரெட் வாங்கரீங்க? நல்ல சிகரெட் கொடுக்காம, கடைக்காரர் எப்படி உங்களை ஏமாத்தரார் பாருங்க” 

என அவன் சிகரெட் பெட்டியை காண்பிக்க, அதில் புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என எழுதி இருந்தது. முகத்தை பெருமையாக வைத்துக்கொண்டு கடைக்காரரை பார்த்து, “உடம்பை கெடுக்காத சிகரெட்டா கொடுங்க” என கூறவும், நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது.

இத்தனை அறிவு கொண்ட ஆள் நம்முடன் இருக்கட்டும் என அவனை அழைத்துவந்தேன். அன்று பிடித்தது...!

-------------------------------

மனைவி எப்படி நிற்கனும்?

என்னிடம் ஆசிவாங்கும் தம்பதியினர் பெரும்பாலும் என் முன் கபடி ஆடுவதை பார்த்திருக்கிறேன். கணவனுக்கு எந்த பக்கம் மனைவி நின்று கொண்டு ஆசிவாங்க வேண்டும் என்பதில் அவர்கள் ஆசிவாங்க குனியும் பொழுதே சந்தேகம் வரும். பிறகு வலது இடது என கணவனும் மனைவியும் மாறி கபடிக்கு ஒப்பாக பாவனை செய்வார்கள். நம் சம்பரதாயத்தில் இறைவனின் ஆண் தன்மை வலது புறமும், பெண் தன்மை இடது புறமும் இருப்பதாக கூறுகிறார்கள். அது சிவன் சக்தியோ, பெருமாளும் தாயாருமோ என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உலகில் பல்வேறு கலாச்சரத்திலும் ஆண் பெண் தன்மை வலது இடதாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆன்மீக நிலை கொண்ட ஒரு இடத்தில் தம்பதிகளாக ஆசி வாங்கும் பொழுது ஆணின் வலது பக்கம் பெண் இருக்க வேண்டும். அதனால் தம்பதிகளின் பெண், ஆன்மீகவாதியின் பெண் தன்மைக்கும், தம்பதிகளின் ஆண் ஆன்மீகவாதியின் ஆண் தன்மைக்கும் வணக்கம் செய்வதை போல ஆகும்.

எனக்கு இத்தகைய வெளிச்சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. ஒருவன் பக்தியுடன் வணங்கினால் எப்படி இருந்தாலும் தவறில்லை என நினைப்பவன். ஆனால் தற்கால குடும்பங்களில் பெரியவர்கள் வழிகாட்டுவதற்கு இல்லை என்பதால் அனேக தம்பதியினர் என்னிடம் கேட்பார்கள். நானும் பொறுமையாக கூறுவேன். இருந்தாலும் அடுத்த முறை ஆசிவாங்க வரும் பொழுது அவர்களுக்கு குழப்பம் வந்துவிடும். மீண்டும் என்னிடம் கேட்ப்பார்கள். இப்படி குழப்பத்துடன் இருந்த தம்பதிகள் என்னிடம் அடிக்கடி கேட்க, நான் பொறுமை இழந்து சுப்புவை கைகாட்டி இவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.

அடுத்த முறையிலிருந்து அவர்களிடம் குழப்பம் இல்லை...! நானும் ஆச்சரியத்துடன் எப்படி சுப்பு இவங்க குழப்பத்தை தீர்த்த? நானே தீர்க்க முடியாம இருந்தேனே என கேட்டேன். 

“வேற ஒன்னும் இல்லை சுவாமிஜி, கீப்  லெப்டு - மனைவி தான் எப்பவும் ரைட்டுனு சொன்னேன்” என்றான். எனக்கு இதில் ஒன்றும் புரியவில்லை. உங்களுக்கு புரிஞ்சுதா?

-------------------------------

அரேபிய விமானம்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுது அந்த நாட்டிற்கு உண்டான விமான சேவையையே பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பேன். அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் விமான சேவை மிக குறைந்த கட்டணமாக இருக்கும். அல்லது அந்த நாட்டின் பிரத்யோகமாக குறைந்த கட்டண சேவையை தேர்ந்தெடுப்பதும் உண்டு. பெரும்பாலும் எனக்கான விமான சீட்டு வேறு ஒருவர் தான் எடுப்பார்கள். 

எனக்கு விருப்ப தேர்வு என இருக்காது. சமீபத்தில் எனது ஐரோப்பிய பயணத்திற்கு இதே போல மற்றொருவர் விமான சேவையை தேர்வு செய்தார். எதிஹாட் ஏர்வேஸ் என்ற விமான சேவை அது. துபாய் நகரை மையம் கொண்டு செயல்படும் நிறுவனம். முதன் முதலாக அரேபிய விமானத்தில் பயணம். 

நான் பயணம் செய்ய துவங்கும் முன் ப்ரார்த்தனையில் ஈடுபடுவது உண்டு. அதே போல இந்த விமானத்தில் அமர்ந்ததும் பெல்ட் அணிந்து கண்களை மூடி ப்ரார்த்தனை செய்ய துவங்கும் சமயம், ஸ்பீகரில் குரல் ஒலித்தது....! திருக்குரானிலிருந்து அற்புதமான வரிகள்..என் ப்ரார்த்தனைக்கு மிகவும் நெருக்கமான வரிகள் மெய்சிலிர்த்து போனேன்.

பெரும்பாலான விமான சேவைகள் ப்ரார்த்தனை செய்வதில்லை. இஸ்லாமிய விமான சேவை அனைத்திலும் இது போன்ற ப்ரார்த்தனைகள் இருப்பதாக அறிந்து மகிழ்ந்தேன். அனைத்து விமானங்களிலும் இச்சேவையை துவங்கலாம். சமயசார்பற்ற நாடுகள் அனைத்து சமய ப்ரார்த்தனையையும் செய்யலாம். இது ஒரு வேண்டுகோள்.

அது சரி அந்த திருக்குரான் ப்ரார்த்தனை என்ன என்று தானே கேட்க்கிறீர்கள்? எனக்கு தெரிந்த முறையில் மொழி பெயர்த்துள்ளேன்.

முழுமுதற்கடவுளின் பெயரால் அவரை வணங்குகிறேன். இறையருள் நம் அனைத்து பயணங்களையும் அதற்கான கருவிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அதே இறையருள் திரும்பி வருவதற்கும் துணை நிற்கட்டும். 

இப்படி அனைத்து விமானங்களிலும் ப்ரார்த்தனை செய்ய துவங்கினால்., மத நம்பிக்கையும் ப்ரார்த்தனையில் நம்பிக்கையும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் ஒரு வழி உண்டு. அவர்கள் விமானம் ஏறுவதற்கு முன்பே பஞ்சு வாங்கி காதில் வைத்துக்கொள்ளலாம்..!

---------------------------------------
ஜென்னிசம்

வானிலிருந்து இறங்கிய 
பனித்துளியால் புல் நிறம் மாறவில்லை 
மாறாக தலைசாய்த்து பணிந்தது...!