Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, July 30, 2009

ஹதயோகம்

நமது பாரத கலாச்சாரம் யோகசாஸ்திரத்தின் களஞ்சியமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. யோகத்தின் அனைத்து பரிணாமங்களையும் உலகுக்கு அளித்தது பாரதம்.

யோகம் என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோத்தின் ஒரு பகுதியே தவிர யோகம் என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் என்ன என சிறிது விளக்கமாக பார்ப்போம்.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.

யோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.

நமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.

தன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.

பக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.

கர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.

ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.

ஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.

மேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.

யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.

பிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.
ஒரு கிராமத்தில் ஒரு வீடு மண்ணால் கட்டப்பட்டுள்ளது மற்றொரு வீடு சிமெண்டால் கட்டப்பட்டுள்ளது என்றால், அடர்த்தியான மழைவரும் காலத்தில் மண்வீடு தான் பாதிப்பு அடையும். மழைவருவது கர்மா மற்றும் இயற்கை, ஆனால் நம்மிடம் இருப்பது மண்வீடா, சிமெண்ட் வீடா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அது போல உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.

ஹத யோகம் என்ற பெயர் காரணத்திற்கான விளக்கம் பார்ப்போம். ஹட யோகம் என்ற பெயரே சரியானது. ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எப்படி இரு புலத்துடன் செயல்படுகிறதோ அது போக நமது உடல்,மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடிய படி இருக்கும். அதை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.

அர்த்தனாரிஸ்வர தத்துவம் போல நம் உடல் சூரியனுக்கு உண்டான அக்னி தன்மை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சி இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ஹ என்றால் வெப்பம் - டா என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவார்கள்.


உடலை பாதுகாத்து ஆசனங்கள் செய்வது நமது ஆன்மீக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கமா என கேட்கலாம். திருமூலர் கூறும் அருமையான கருத்துக்களை கேளுங்கள்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

எனைய யோக முறை இருந்தாலும் அதை பின்பற்றும் மனிதனுக்கு அவற்றை சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம்.
உடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என ஹதயோகத்தை குறிக்கிறார். ஹதயோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கி செல்லலாம் என கூறிகிறார். இதைவிட எளிமையாக ஹதயோக சிறப்பை கூறமுடியுமா?

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.

தனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

உள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும் நமது உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும், ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாக சொல்லி ஹதயோகத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்.

ஆசனம் மட்டுமே பலருக்கு யோகாசனம் என நினைக்கிறார்கள். பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா ஆகியவற்றை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(.........யோகம் தொடரும்)

27 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.//

முதலில் 'நான்' யார் என்று அறிந்து கொள்ளனும், அப்பறம் அந்த 'நானை' பரபிரம்மத்தில் முக்கி மறைஞ்சிடனும்.

இப்பவே அப்படித்தானே 'நானை' மறந்து இருக்கிறார்கள், எதுக்கு தேடிக் கண்டுபிடித்து தொலைக்கனும் ?

புரியல சாமி புரியல ! தயவு செய்து விளக்கவும்.

நிகழ்காலத்தில்... said...

\\உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.\\

மிகக் குறைவாகவே தாக்கும்.

நல்ல முயற்சி ஸ்வாமி ஓம்கார் அவர்களே.,

இந்த விழிப்புணவு நம் மக்களிடையே மிகக் குறைவு.,

இதைத் தாங்கள் செய்வது சிறந்த தொண்டாக கருதுகிறேன்

வாழ்த்துக்கள்

VSK said...

நல்ல பதிவு! எளிமையாகப் புரிய வைக்கிறது!
வணக்கம் ஐயா!

நான் said...

என்னுடைய சந்தேகம் ஆன்மீகத்தில் முறைபடி ஈடுபட்ட சங்கரர்,விவேகானந்தர்,பரமகம்சர்,சிறு வயதிலேயே மாண்டதன் காரணம் புரியவில்லை....அறியலாமா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

போங்க சாமி... நீங்க பாட்டுக்கு அப்படி இபபடி வளைஞ்சு போஸ் கொடுத்திட்டு போய்டறீங்க.. நாங்க அப்படி செஞ்சு எங்கயாச்சும் சிக்கிக்கிட்டால் யாரு வந்து பிரிச்சு விடுவாங்க?

கோவி.கண்ணன் said...

//கிறுக்கன் said...
என்னுடைய சந்தேகம் ஆன்மீகத்தில் முறைபடி ஈடுபட்ட சங்கரர்,விவேகானந்தர்,பரமகம்சர்,சிறு வயதிலேயே மாண்டதன் காரணம் புரியவில்லை....அறியலாமா?

July 30, 2009 8:34 AM
//

நம்ம நிகழ்காலம் சிவாவிடம் கேட்டீர்கள் என்றால் அவர்கள் முறையான காயகற்ப பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை. விந்தைக் கட்டினார்கள் என்பார் என்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.//

108 மணிகள் கோர்த்த மாலை, உருட்டும் போது 108 மந்திரம் சொல்லிவிட்டதை நினைவு படுத்தும் முடிச்சு. மனிதனின் இந்தக் கண்டுபிடிப்பு உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்குது. இதுக்கும் மேல தான் அறிவியல் மற்றதெல்லாம்.

ஸ்வாமி நான் சீரியஸாக சொல்கிறேன். நம்புங்க

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,
//முதலில் 'நான்' யார் என்று அறிந்து கொள்ளனும், அப்பறம் அந்த 'நானை' பரபிரம்மத்தில் முக்கி மறைஞ்சிடனும்.

இப்பவே அப்படித்தானே 'நானை' மறந்து இருக்கிறார்கள், எதுக்கு தேடிக் கண்டுபிடித்து தொலைக்கனும் ?
//
இது ஞான யோகம் பற்றிய கட்டுரை அல்ல. அதனால் நீண்ட விளக்கம் கொடுக்க இயலாது என்றாலும் எளிமையாக விளக்குகிறேன்.

நான் யார் என கண்டறிந்தால் அங்கே விஞ்சி இருப்பது பரப்பிரம்மம் தான். அதனால் அதை தேடி தொலைக்க ஒன்றும் இல்லை. ஆதிசங்கரரை படித்து பிரிந்து கொள்வது கஷ்டம்.

ஆனால் ரமணர் நமக்காக நிறைய எழுதி உள்ளார் முடிந்தால் படியுங்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்.
திரு VSK,


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிறுக்கன்,

உங்கள் கேள்வியின் உள்நோக்கம் அவர்கள் பிரம்மச்சரித்து இருந்ததால் இளமையில் இறந்தார்களா என்பது தானே?

நிறைய பேருக்கு இதில் சந்தேகம் உண்டு.


உண்மையில் ஆதிசங்கரர் ,விவேகானந்தர் ஆகியோர் உடல் நோயால் துன்பப்பட்டவர்கள். அதை குணமாக்க முயலாமல் மக்களுக்கக உழைத்து மாண்டனர்.

மொரார்ஜி தேசாய் (100 வருடம்) பலவருடம் வாழ்ந்தவர் அவர் என்ன பல பெண்களுடன் சம்போகம் செய்தவரா?

ஜப்பானில் அதிக வருடம் வாழ்கிறார்கள் அதற்காக அவர்கள் பிரம்மச்சரியத்தில் இல்லை என பொருளா?

காந்தி அடிகள் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டார். சுடப்படவில்லை என்றால் அவரும் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.

தங்கள் உணர்வையும் உறுப்பையும் அடக்க முடியாதவர்கள் சொன்ன வதந்தி இது.

விரைவில் ப்ரம்மச்சரியம் பற்றிய கட்டுரை பதிவேற்றம் செய்கிறேன்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குறையொன்றும் இல்லை...

//நாங்க அப்படி செஞ்சு எங்கயாச்சும் சிக்கிக்கிட்டால் யாரு வந்து பிரிச்சு விடுவாங்க?//

பிரிச்சுவிடுவதற்காக அல்ல யோகம். பரம்பொருளுடன் சேர்த்து விடுவதற்கவே யோகம்.

படத்தை பார்த்து யோக பயிற்சியெல்லாம் செய்யாதீர்கள். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி. இன்று ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க :)

//108 மணிகள் கோர்த்த மாலை, உருட்டும் போது 108 மந்திரம் சொல்லிவிட்டதை நினைவு படுத்தும் முடிச்சு. மனிதனின் இந்தக் கண்டுபிடிப்பு உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்குது. இதுக்கும் மேல தான் அறிவியல் மற்றதெல்லாம்.

ஸ்வாமி நான் சீரியஸாக சொல்கிறேன். நம்புங்க//


ஜபயோகத்தில் இருப்பவர்கள் மாலையை ஆரம்ப கட்டத்தில் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஜபத்தை பூஜையாக செய்பவர்கள் மட்டுமே மாலைகொண்டு செய்வார்கள். மாலையுடன் செய்வதால் சில நன்மை உண்டு.
மாலையில் ஜபம் செய்யும் பொழுது விழிப்புடன் இருக்க வேண்டும். அதை மந்திர ஜபம் (படிக்கவேண்டுமய்யா :)) என்ற கட்டுரையில் கொடுத்த்திருக்கிறேன்.

ஜபயோகிகள் என நான் குறிப்பிட்ட நாரதர் கையில் மாலை வைத்திருக்க மாட்டார்...

வால்மீகி என்றால் புற்றில் இருந்து வெளிப்பட்டவர் என அர்த்தம். அவரும் ஜபம் செய்து எறும்பு புத்துக்குள் சென்றுவிட்டார் அதனால் அவருக்கும் மாலை கிடையாது.

தமிழ்ப்பிரியா said...

பயனுள்ள தகவல் ஸ்வாமி...

நிகழ்காலத்தில்... said...

//நம்ம நிகழ்காலம் சிவாவிடம் கேட்டீர்கள் என்றால் அவர்கள் முறையான காயகற்ப பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை. விந்தைக் கட்டினார்கள் என்பார் என்று நினைக்கிறேன்.//

:)))

இல்லை, என்னை தீவிரவாதியாக நினக்காதீர்கள்., மிதவாதிதான்

கோவி.கண்ணன் said...

//நிகழ்காலத்தில்... said...
//நம்ம நிகழ்காலம் சிவாவிடம் கேட்டீர்கள் என்றால் அவர்கள் முறையான காயகற்ப பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை. விந்தைக் கட்டினார்கள் என்பார் என்று நினைக்கிறேன்.//

:)))

இல்லை, என்னை தீவிரவாதியாக நினக்காதீர்கள்., மிதவாதிதான்
//

அபச்சாரம் அபச்சாரம், காயகற்ப பயிற்சி எடுத்தவர்களை தீவிரவாதி என்று சொன்னேனா ?

ஸ்வாமி ஓம்கார் said...

விந்தைக் காட்டினார்கள் என்றால் வேடிக்கை பார்க்கலாம்.
விந்தைக் கட்டினார்கள் என்றால் கஷ்டம்தான் :))

Rajagopal.S.M said...

சுவாமிஜி, இப்பதான் ஸ்ரீ சக்ரபுரி விளம்பரம் பாத்தேன்.இத்தொடரை ஆவலுடன் வரவேற்கிறேன்.இதில் ஸ்ரீ சக்ர வழிபாடை பற்றியும், ஸ்ரீ வித்யா உபாசனாவின் உச்சமான "சௌந்தர்யா லஹரி" பற்றிய எளிய விளகங்களையும் எதிர்பார்கிறேன்.

நிகழ்காலத்தில்... said...

இல்வாழ்வில் தாம்பத்ய வெற்றிக்கு
விந்தைக்கட்டுவது உடலளவு வெற்றி,

அதே சமயம் (ஆன்மீக உயர்வுக்கு) தேவையான உயிராற்றல் திணிவுபெற விந்தை தரப்படுத்துவது ஆன்மீக வெற்றிக்காக

இது போன்ற பயிற்சிகளினால் மரணம் தள்ளிப்போடப்படும். கோவியாரே

பரியங்கயோகம் தெரியுமா:)))

Rajagopal.S.M said...

//ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும்.//
சுவாமிஜி, என்னிடம் இதை பற்றிய ஒரு புத்தகம் இருக்கிறது. உங்களது முகவரியை எனது மெய்லுக்கு அனுப்புங்கள் (rajagopalsm@gmail.com) நான் அந்த புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.

Rajagopal.S.M said...
This comment has been removed by the author.
Anonymous said...

மிகவும் அருமையான பதிவு சுவாமிஜி! கிரியா யோகா கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இங்கே அமெரிக்காவில் மூன்று வாரம் முன்பு எனக்கு கிடைத்து. அதை பற்றி தெரிந்து கொள்ள மேலும் ஆசை. உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருப்பேன்.

sakthi said...

அருமையான பகிர்வு சுவாமி

Sridhar said...

Swami Bhandham,Kiriya yendral yenna ?

நான் said...

ராமகிருஷ்ண பரம்ஹம்சர் திருமணம் முடித்தவர் தானே...
அருப்புகோட்டையில் ராமலிங்கா குரூப் நடத்தி வந்த ஆசிரமத்தில் ஒரு தலைமை பயிற்சியாளர் 40 வயதில் மாண்டார்....
அவர் இயற்கை உணவு. தியாணம் அதிகம் செய்தவர்...
இவர்கள் அனைவரும் தியானம் அதிகம் செய்தவர்கள் ... ....என்ன தொடர்பு என்று புரியவில்லை...

நான் said...

ராமகிருஷ்ண பரம்ஹம்சர் திருமணம் முடித்தவர் தானே...
அருப்புகோட்டையில் ராமலிங்கா குரூப் நடத்தி வந்த ஆசிரமத்தில் ஒரு தலைமை பயிற்சியாளர் 40 வயதில் மாண்டார்....
அவர் இயற்கை உணவு. தியாணம் அதிகம் செய்தவர்...
இவர்கள் அனைவரும் தியானம் அதிகம் செய்தவர்கள் ... ....என்ன தொடர்பு என்று புரியவில்லை...

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி ஒரு டவுட்டு,

யோகா பண்ணும் போது புகைப்படம் எடுத்தார்களா ?

புகைப்படத்திற்காக யோகா செய்தீர்களா ?

Unknown said...

சுவாமிஜி இப்போதெல்லாம் பதிவுகளின் மேல் உள்ள விருப்பம் போல கருத்துக்களை படிப்பதிலும் வருகிறது. கருத்துக்கள் பகுதியையும் தனியாக ஒரு பதிவாக போடலாம்.