வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
சிவனை வணங்கும் ஒருவருக்கு நவக்கிரகங்கள் கேடு செய்யாது என துவங்கும் கோளரு பதிகத்தை பாடி மதுரை ஆதீனகர்த்தா செங்கோலை பிரதமருக்கு வழங்கினார். செங்கோல் பெற்ற நாள் முதல் செம்மையான ஆட்சி மலர்ந்ததோ இல்லையோ பல சர்ச்சைகள் புறப்பட்டு வந்தவண்ணம் இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஆதீனங்கள் ஒன்றிணைந்து சென்ற வாரம் பிரதமருக்கு அளித்த செங்கோல் தற்பொழுது சர்ச்சைக்கோலாக மாறி இருக்கிறது. அப்படி என்ன சர்ச்சை என்றால் செங்கோல் வழங்கப்பட்ட பிறகு இருநூறு பேரை பலி கொண்ட ரயில் விபத்து நிகழ்ந்தது. இதற்கு காரணம் அந்த செங்கோல் தான் என்கிறார்கள். விவாதங்கள் எத்திசையிலும் பறக்கிறது.
பல ஜோதிடர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவர்களின் அறிவை தொலைக்காட்சி விவாதங்களில் சிதற விடுகிறார்கள். நிமித்தம் சரியில்லை, ஏதோ இறைவன் ரயில் விபத்தால் சொல்ல துடிக்கிறார். அடுத்த தேர்தலில் மோடி பிரதமராக மாட்டார் அதனால் செங்கோலை இனி அவர் கண்களால் பார்க்கக்கூடாது என இப்படி பலவகையான விவாதங்கள் மற்றும் வியாக்கியானங்கள்.
செங்கோல் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமா? கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் விரிசல், தனியார் சரக்கு ரயில் தடம் புரண்டது என ரயில் வண்டி பிரச்சனையாக கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது.
செங்கோலை பிரதமரிடம் கொடுத்தார்களா இல்லை ஏதேனும் ரயில் தண்டவாளத்தில் நெம்புகோலாக கொடுத்தார்களா என ஐயம் ஏற்படும் அளவுக்கு ரயில் விபத்து சர்ச்சைகளை சுமந்துகொண்டு இருக்கிறது செங்கோல்.
செங்கோல் என்பது இத்தகைய விளைவை ஏற்படுத்துமா என சாஸ்திரங்களின் வாயிலாக பார்ப்போம். முதலில் செங்கோல் என்பது ஆட்சியாளர்களின் அடையாளமாக இருக்கிறது. மன்னராட்சி காலத்தில் அதிகாரத்தின் அடையாளமாக, அரசன் செல்ல முடியாத சூழலில் செங்கோலை மன்னனாக பாவித்து முடிவுகள் எடுப்பார்கள். மக்கள் ஆட்சிகாலத்தில் மேயர் முதல் நீதிபதிகள் வரை அவர்களின் அடையாளச்சின்னமாக இருந்தாலும் அவர்களுக்கு இணையாக செங்கோலை பயன்படுத்த முடியாது.
தமிழ் நாட்டின் மேல் பற்றுக்கொண்ட பிரதமர் ஆதீனங்கள் கொடுத்த ஒரு மரியாதையை பெற்றுக்கொண்டார் என்ற அளவிலேயே இதை பார்க்க வேண்டும். பிரதமர் பதவி ஏற்கும் விழாவில் இத்தகைய செங்கொல் அளிக்கப்பட்டால் அதற்கு ஒருவகை முக்கியத்துவம் உண்டு என கருதலாம். புதிய பாராளுமன்றத்தில் இருக்கும் மற்றும் ஒரு அலங்காரப்பொருள் என்பதை தவிர செங்கோலுக்கு வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லை.
பல கோவில்களில் மரியாதை ஏற்பதற்காக பரிவட்டம் கட்டியதால் ஊர் பெரியவருக்கு முடி உதிர்ந்து வழுக்கையானது என கிராமத்தில் பேசுவதற்கு சமமானது செங்கொல் நாட்டில் தீமைகளை ஏற்படுத்துகிறது என பேசுவது. கோவிலுக்கு செல்லும் ஊர் முக்கியஸ்தருக்கு செய்யும் மாலை மரியாதையை போன்றது செங்கோல் என்பதை தவிர அதில் அர்த்தம் கொள்ள ஏதும் இல்லை.
செங்கோல் ரயில் விபத்துக்கு காரணம் என பல ஜோதிடர்கள் விவாதிப்பதை பார்க்க முடிகிறது. மதுரை ஆதீனம் அவர்கள் கோளரு பதிகம் பாடி செங்கோலை பாரத பிரதமருக்கு வழங்குகிறார். ஜோதிடர் கண்ணோட்டத்தில் பார்த்தோம் என்றால் கோளரு பதிகம் பாடிய பின் கோளாரு வந்திருக்க கூடாது. திருஞான சம்பந்தருக்கும் , சம்பந்தரின் வழிவந்த ஆதீன கர்த்தருக்கும் தெரியாத புதிய மெய்யறிவு ஜோதிடர்களுக்கு இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.
ஜோதிட சாஸ்திரத்தில் முண்டேன் ஜோதிடம் என்ற ஒரு வகை உண்டு. இயற்கை சீற்றங்கள், குழு மரணங்கள் (group death) , பேரிடர் இவற்றை முன்பே கணிக்க உதவும் ஜோதிட வகையாகும்.
செவ்வாய் விபத்துக்கான கிரகம், சூரியன் அரசை குறிக்கும் கிரகம், குரு ஆட்சியாளர்களை குறிக்கும். இப்படி ஒன்பது கிரகங்களும் ராசிமண்டலத்தில் இருக்கும் அமைப்பை கொண்டு ஒரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிர்கால பலனை சொல்லும் தன்மை முண்டேன் ஜோதிடத்திற்கு உண்டு.
புதன் என்ற கிரகம் ரயில் பெட்டி மற்றும் ரயில் போக்குவரத்தை குறிக்கும். ஜூன் இரண்டாம் தேதி ராகு கேது என்ற தீய விளைவுகளை ஏற்படுதும் கிரகங்களுக்கு இடையே புதன் என்ற கிரகம் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறது. ராகு கேது மற்றும் புதன், சந்திரன் ஆகியவை மேஷ துலா ராசிகளில் ஒன்றிணைந்த காலத்தில் ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்தது. இத்தகைய கிரக சஞ்சாரம் செங்கோல் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நிகழும்.
ஜூன் 8ஆம் தேதி வரை ரயில் சார்ந்த விபத்து செய்தி நமக்கு கிடைத்த வண்ணம் இருக்கும். பெரிய விபத்துகளுக்கு சாத்தியம் இல்லை என்றாலும் புதன் மேஷ ராசியை விட்டு நீங்கும் வரை தண்டவாளம் பாதுகப்பு குறைந்தே இருக்கும். ஜூன் 13ஆம் தேதி முதல் சந்திரன் மீண்டும் ராகு கேதுவுக்கு இடையே நுழைகிறார். இந்த முறை புதன் மேஷ ராசியில் இருந்து நகர்ந்துவிடுவார் அதனால் ரயிலில் விபத்து நடக்காது. ராகு கேதுவுக்கு இடையே சந்திரனுடன் குரு அமர்வதால் விமான விபத்துக்கள் ஹெலிகாப்டர்கள் விபத்து நடக்கும் வாய்ப்பு உண்டு. அரசியல் தலைவர்கள் விபத்தில் சிக்க நேரலாம். இதற்கும் செங்கோல் காரணம் என கிடைத்த கேஸ் எல்லாம் எளியவர்கள் மேல் எழுதுவதை போன்றது இது.
இரவு பகல் எப்படி இயல்பானதோ அது போல கிரகங்களின் நல்ல மற்றும் தீய பலன்கள் சமூகத்திற்கு நன்மையும் தீமையையும் கலந்தே அளிக்கிறது. ஜோதிட ரீதியாக கிரகங்கள் என்ற நவகோள்கள் விபத்துக்கு காரணமே தவிர செங்கோல் அல்ல..! காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததை போல என்பார்கள் இது குருவி உட்கார பலாப்பழமே விழுந்தது போன்று இருக்கிறது.
தமிழக ஆதீனங்கள் கொடுத்த செங்கோல் டில்லியில் பிரதமார் வாங்கினார் என்றால் ஒடிசாவில் எப்படி விபத்து நடக்கும் என கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
அரசியல் மற்றும் ஜாதீய காழ்புணர்வு ஆகியவையே இத்தகைய சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. செங்கோல் என்பது ஒரு காரணம் மட்டுமே. இதில் ஜோதிடர்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.
0 கருத்துக்கள்:
Post a Comment