Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, May 21, 2009

விசேஷ கால தாத்பர்யம்

நமது கலாச்சாரம் சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது. சனாதன தர்மம் என்பது அனைத்து செயலிலும் பரமாத்ம சொரூபத்தை காண்டு அதில் ஆழ்வது என எளிமையாக கூறலாம். உலகில் எந்த கலாச்சாரத்திலும் இல்லாத எளிமையும் கட்டுபாடற்ற தன்மையும் தான் நமது தர்மத்தை காக்கிறது என சொல்லலாம்.

இயற்கை நம்மை இரு துருவங்களில் பயணம் செய்ய சொல்லுகிறது. பிறப்பு இறப்பு, இரவு பகல், நன்மை தீமை, ஏற்ற தாழ்வு என எதிலும் இருமை இருப்பதை நாம் காண முடியும். ஆனால் இந்த இரு துருவங்களில் பயணிக்காமல் மைய்யத்தில் இருப்பது ஆன்மீகம். பிறப்பு இறப்பு இல்லாமல் முக்தி எனும் நிலை அடைவது ஆன்மீக வாழ்க்கை என சொல்லலாம். இந்த இரு துருவ நிலையில் வாழாமல் இறைவனுடன் ஒருமித்த நிலையில் வாழ கற்றுக் கொடுப்பது தான் நமது விசேஷ காலங்களின் நோக்கம்.

விரதம் இருந்து பட்டினி கிடப்பதும், அன்னாதானம் செய்து உண்பதும் என இரு தன்மைகளையும் நமது விசேஷ தினங்கள் கொண்டிருக்கின்றன. நீண்ட முடி வளர்ப்பதும் கடவுளுக்காக அதை காணிக்கை ஆக்குவதும் என இருதன்மைகள் கொண்டு நம்மை இறைவனுடன் ஒருமிக்க செய்கிறது இந்த நாட்கள். விசேஷ தினங்கள் என நமது முன்னோர்களால் முடிவு செய்யப்பட்ட நாட்களுக்கு பின்னால் பல்வேறான தத்துவங்கள் உண்டு.

விரதகாலங்களில் உண்ணும் உணவு, செய்யும் செயல் மற்றும் கால நிலை என அனைத்திலும் ஒரு வாழ்வியல் தத்துவங்களை வடிவமைத்த கலாச்சாரம் நம்முடையது.

நமது உடல் என்பது “பிண்டம்” இந்த பிரபஞ்சம் என்பது “அண்டம்” இதை இணைப்பதால் ஏற்படுவது ஆன்மீக ஞானம். இணைக்காமல் வாழும் நிலையின் பெயர் அஞ்ஞானம். அண்டத்தில் உள்ளது இந்த பிண்டத்திலும் உள்ளது எனும் கூற்றுக்கு நிகராக, பிரபஞ்ச ஆற்றலின் அதிர்வை நமது உடலில் நிலைபெறும் வகையில் அமைக்கப்பட்டது தான் நமது விஷேட தினங்கள்.

விசேஷ காலத்தை உற்று நோக்கினால் அதனுள் ஆன்மீகம், அறிவியல் மற்றும் மெய்ஞானம் என அனைத்தும் புதைந்திருக்கிறது.

திருவிழாக்களில் யானை, குதிரை, ஆடு என பல மிருகங்கள் மனிதனுடன் உலாவரும். ஆனால் அவற்றிக்கு தெரியாது இங்கே என்ன கொண்டட்டம் நடக்கிறது என்று. அது போல நாகரீகம் என்ற பெயரில் மனிதன் தனது சுயத்தன்மையை இழந்து சான்றோர்களில் தன்மை புரியாமல் இயங்க
துவங்கிவிட்டான். இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல் நாம் கொண்டாடப்படும் தினங்கள் எப்படி நம்மை ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொடுக்கும்?

விசேஷ காலமும் சூரிய சந்திரர்களும் :

வேத சாஸ்திரம் நமது பிரபஞ்சத்தில் பல சூரியன் இருக்கிறது என சொல்லுகிறது. துவாதச ஆதித்யர் எனும் பதம் பன்னிரு சூரியன் கொண்டது இந்த பிரபஞ்சம் என்கிறது. சூரியனின் ஆற்றல் அக்னி சொரூபமானது என்பதால் தான் சன்மதங்களை ஸ்தாபிதம் செய்த ஆதிசங்கரர் அதனுள் சூரிய வழிபாட்டை அமைத்தார்.

சைவம், வைணவம், கெளமாரம் (முருகன் வழிபாடு), கணபதியம் ( விநாயகர் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு) என பிரித்த பிறகு சூரிய வழிபாடு என்றும் ஆறாவதாக சங்கரர் அமைத்தார். ஆனாலும் நாளடைவில் அனைத்து வழிபாட்டு முறையிலும் சூரிய வழிபாடு ஒன்று இணைந்து விட்டது.

வேதத்தில் சூரியன் நமது ஆன்மாவை குறிப்பதாகவும், சந்திரன் நமது மனதை குறிப்பதாக சொல்லபடுகிறது. சூரியன் சந்திர நிலைகள் பஞ்சாங்கத்தில் திதியாகவோ , வாரமாகவோ நட்சத்திரமாகவோ அமைகிறது. அதனால் நமது ஆன்மாவும் மனதும் தூய்மை பெற்று மேன்மை அடையும் நாட்களில் திருநாட்களை நமது முன்னோர்கள் தொகுத்தார்கள்.

ஸ்ரீக்ருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என சொன்னாலும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவரின் பிறந்த தினத்தை கொண்டாடுகிறோம். காரணம் அந்த குறிப்பிட்ட நாளில் இருக்கும் பிரபஞ்சத்தின் கிரக நிலைகள் நம்மை ஸ்ரீகிருஷணரின் பாதகமலத்தை அடையச்செய்யும் வல்லமை வாய்ந்தது.

ஸ்ரீ ராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களுக்கு ஏது பிறப்பு? அவர்கள் நித்தியமானவர்கள் அல்லவா? இருந்தாலும் அந்த புண்ணிய தினம் கொண்டாட காரணம் நமது ஆன்மீக முன்னேற்றம் அடையத்தான்.

சூரியன் சந்திரன் இடையே இருக்கும் இடைவெளி திதி என அழைக்கப்படுகிறது. அமாவாசை, பெளர்ணமி எனும் திதிகள் அம்மனை வழிபடவும், சிவனை வழிபடவும் இருக்கிறது. மேலும் சதுர்த்தி விநாயகருக்கும், ஷஷ்டி ஸ்ப்ரமணியருக்கும், ஏகாதசி மாஹாவிஷ்ணுக்கும் ஏற்ற திதிகள் என கூறப்படிகிறது.

ஒரு குறிப்பிட்ட திதிகள் அன்று நாம் வழிபடும்பொழுது சூரியனாகிய ஆன்மாவும், சந்திரனாகிய மனதும் ஒன்றினைந்து நமது உடலில் ஆன்மீக மேம்பாட்டை ஏற்படுத்துகிறது. திதிகள் போல நட்சத்திரங்களுக்கும் சிறப்பு உண்டு.

திருவாதிரை, மகம், உத்திரம் மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நமது வழிபாட்டு நட்சத்திரங்களாக கொண்டாடுகிறோம். மேற்கண்ட நட்சத்திரங்கள் வரிசையாக படித்தால் இதில் என்ன விசேஷம் இருக்கு என உங்களுக்கு தோன்றலாம்.

ஆருத்திரா தரிசனம், மாசி மகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் என அடைமொழியுடன் சொன்னால் அன்றைய தினத்தின் சிறப்பை உங்களால் உணர முடியும்.

பெளர்ணமியும் உள்நிலையும் :

முழு நிலவு எப்பொழுதும் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பெளர்ணமி அன்று சூரியன் சந்திரன் இருவரும் சூரிய மண்டலத்தில் நேர்கோட்டில் அமைவதால் நமது உடலிலும் சூரிய சந்திர கலைகள் நேர்கோட்டில் இயங்குகிறது. சந்திரமாம்ச மாத நாள்காட்டிகளில் பெளர்ணமியை மாதத்தின் முதல் நாள் என சொல்லுகிறார்கள்.

ஒரு வருடத்திற்கு மொத்தம் பன்னிரெண்டு பெளர்ணமி வருகிறது. சில பெளர்ணமி மட்டும் அல்லாமல் அனைத்து பெளர்ணமியையும் விசேட தினங்களாக நாம் கொண்டாடி வருகிறோம், சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் நமக்கு ஆன்மீக வழிகாட்டுதலை செய்கிறது.

பெளர்ணமி தேவியின் சொரூபமாக வணங்கிய அபிராமிபட்டருக்கு , அம்பாள் பூரண சந்திரனாக காட்சி அளித்த நிகழ்ச்சியை நினைத்துபாருங்கள். உள்ளார்ந்த பக்தியில் இந்த பிண்டத்திலிருந்து வணங்கினால் தேவி அந்த அண்டத்தையே மாற்றுவாள்.

அமாவாசை ஆளவற்ற ஆற்றலும் :

முழுநிலவு என்பது பூரணத்துவம் என்பதை காட்டுவதால் அதற்கு பூர்ணிமா என பெயர். நிலவு அற்ற நிலை அமாவாசை அல்லது சூன்ய நிலை என கூறலாம். சந்திரன் அண்டத்தில் மனதை குறிப்பதாக கூறினேன். அமாவாசை அன்று சந்திரன் இல்லாத நிலை, ஆன்மீகத்தின் உயர்நிலையான மனமற்ற நிலையை காட்டுகிறது.

அமாவாசை எப்படி ஏற்படுகிறது என்பதை உணர்த்த மஹாபாரத கதை ஒன்றை கேட்டிருப்பீர்கள். அமாவாசை அன்று ஒரு செயலை செய்யவேண்டும் என ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். பஞ்சபாண்டவர்கள் அமாவாசைக்கு நிறைய நாள் இருக்கிறதே என வருத்தப்படுகிறார்கள். உடனே ஸ்ரீகிருஷ்ணர் ஆற்றங்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க துவங்குகிறார். இதை கண்ட சூரியனும்- சந்திரனும் குழப்பம் அடைகிறார்கள். கிருஷ்ண பரமாத்மாவே தர்ப்பணம் கொடுக்கிறார் என்றால் தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டோம் என எண்ணி இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை பார்க்க வருகிறார்கள்.

சூரிய சந்திரர்கள் ஸ்ரீக்ருஷ்ணரை பார்த்து கேட்கிறார்கள் ஐயா இன்று அமாவாசை இல்லையே ஏன் தர்ப்பணம் செய்கிறீர்கள் ? பரமாத்மா புன்னகையுடன் கூறினார், “சூரியனும் சந்திரனும் எப்பொழுது ஒன்றாக இருக்கிறார்களோ அன்று அமாவாசை, இன்று என் முன்னால் இருவரும் இணைந்திருக்கிறீர்களே,ஆகையால் அமாவாசை தானே?” என்றார்

பரமாத்மாவின் அருகாமையில் இருந்தால் அவரின் ஆற்றலால் தினம் தினம் முழுமையான நாளாக மாற்றம் அடையும்.

ஆன்மா மற்றும் மனம் எனும் தாத்பரியத்தில் சூரியன் சந்திரன் செயல்படும் பொழுது அண்டத்தில் சூரியன் மற்றும் சந்திரன் இணைந்து இருக்கும் நாள் தான் அமாவாசை. அதாவது ஆன்மாவில் மனம் ஒடுங்கிய நாள் இது என புரிந்துகொள்ளுங்கள். மனமற்ற நிலையில் நமது முன்னோர்களின் ஆன்மாவிற்கும் நமது ஆன்மாவிற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யும் நாள் அமாவாசை.

உத்திராயணம் மற்றும் தட்சிணாயனம் துவங்கும் மாதமாகிய தை மற்றும் ஆடிமாதம் அமாவாசைக்கு சிறப்பு உண்டு. அதே போல் புரட்டாசி மற்றும் ஐப்பசி அமாவாசைகளுக்கும் சிறப்பை கூற காரணம் உண்டு. வானியல் ரீதியாக புரட்டாசி மற்றும் ஐப்பசி காலத்தில் சூரியனிடமிருந்து பூமி அதிக தொலைவில் இருக்கும். ஆன்மாவாகிய சூரியனின் பலத்தை பெற அமாவாசை அன்று ப்ரார்த்தனை செய்கிறோம். ஐப்பசி அமாவாசைக்கு முன் தினம் நாம் திபாவளி கொண்டாடி உடலை மேம்படுத்திகொள்வது அதனால் தான்.

விசேட கால உணவும், உடையும் :

நமது பாரத தேசத்தில் சீதோஷண நிலை இடத்திற்கு இடம் மாறுமடும். கால நிலை மாற்றத்திற்கு ஏற்ப உடை மற்றும் உணவை உற்கொள்வது அவசியம். உடல் ஆரோக்கியம் என்பது ஆன்மீகத்திற்கு மிக அவசியமானது அல்லவா ?

கோடைகாலத்தில் அதற்கு ஏற்ப எளிய உணவும், குளிர்காலத்தில் திண்ம உணவும் உற்கொள்ளுவதற்கு ஏற்ப நமது விசேட நாட்கள் அமைந்துள்ளது. எத்தகைய உணவாக இருந்தாலும் அவற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்பதால் நமக்கு ஆன்ம பலம் கூடுகிறது.

தெற்கில் கோவிலில் பூஜை செய்பவர் மேல்சட்டை அணிந்திருக்க மாட்டார், வடக்கில் தனது உடல் முழுவதும் உடை அணிந்திருப்பார். கலாச்சாரம் ஒன்றானாலும் நமக்கு கால நிலைக்கு ஏற்ப உடை சம்பிரதாயம் உண்டு.

தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு அன்று புத்தாடை உடுத்தியும் அந்த கால நிலைக்கு ஏற்ற உணவை உண்டும் நம்மை மேம்மடுத்திகொள்வது இதன் நோக்கமாகும்.

உள்ளம் பெருங்கோவில் ஊண் உடம்பே ஆலையம் என்கிறார் திருமூலர், இறைவனை நாம் வணங்கி வழிபடுவது நமது உடலில் இருந்து துவங்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் தாத்பரியம்.

நமது பாரத தேசத்தில் மஹான்களும், யோகிகளும் குறிப்பிட்ட நாளில் அவதரித்து , குறிப்பிட்ட நாளில் ச்மாதி கொள்கிறார்கள். அன்றைய நாளில் அவர்களை பூஜித்து தியானித்தால் அவர்களின் ஆசியும் ஆற்றலும் நம்மில் உறையும்.

தற்சமயம் மக்கள் விசேஷ நாட்களை நல்ல நாட்கள் என எண்ணி அதில் சுபகாரியங்களை துவக்குகிறார்கள். உண்மையில் விசேஷ நாட்கள் விரத நாட்களை சுபகாரியம் துவக்க பயன்படுத்த கூடாது. அன்று இறைவழிபாடு செய்து விரதம் இருப்பதற்காக ஒதுக்கப்பட்ட நாட்களாகும்.

இனிவரும் காலங்களில் விஷேடங்களை ஒரு விடுமுறைநாளாக கருதி தொலைக்காட்சியில் தொலைத்துவிடாமல், அதன் உள்ளார்ந்த கருத்தை உணர்ந்து பிறருக்கும் எழுத்துரையுங்கள். அண்டத்தில் இருக்கும் பரமாத்மா சொரூபத்தை இந்த பிண்டத்தில் ஜீவாத்ம நிலையில் வழிபடுங்கள்.

டிஸ்கி : இந்த கட்டுரை மே மாத “சுப வரம்” எனும் ஆன்மீக மாத இதழில் வெளிவந்தது.

6 கருத்துக்கள்:

Unknown said...

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரபு,

உங்கள் ஒரு வார காத்திருப்பு பூர்த்தி அடைந்ததா :)

உங்கள் வருகைக்கு நன்றி

Sanjai said...

ஐயா, இது என்னுடைய முதல் பதிவு

சாஸ்திரம் பற்றிய திரட்டு, சுவையுடன் அருமையாக இருந்தது.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என்ற உண்மையை உரைத்தமைக்கு நன்றி!

என்றும் அன்புடன்

ஷண்முகப்ரியன் said...

நீங்கள் குறிப்பிடும் கவித்துவம் புரிவதற்கு ஒரு மனோ நிலை வேண்டும் ஸ்வாமிஜி..
அது இல்லாமல் இயந்திரத் தனமாக சடங்குகளை அனுசரித்தாலே போதும், பலன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால்தான் நமது மதம் இன்று இவ்வளவு சீரழிந்து கிடக்கிறது.

தகுதி இருந்தால்தான் துவக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கே இடங்கள் கிடைக்கின்றன. ஆனால் இறைப் பொருள் மட்டும் இலவச இணைப்பாக எல்லோருக்கும் கிடைத்து விடும் என்று சொல்வதால்தான் கோவில்களின் அமைதியைக் கெடுத்து தேவையற்ற புரியாத கும்பலும்,இரைச்சலும் அலை மோதுகின்றன.

மக்களிடம் வெற்று நம்பிக்கைகளை வளர்ப்பதைக் காட்டிலும் ,மக்களுடைய ஆன்மீகத் தகுதிகளை வளர்ப்பதே இன்றைய உண்மையான ஆன்மீகத் தொண்டு.

yrskbalu said...

festivels are kepted to see inside the man , atleast for that one day.

now everybody forget the reason behind and searching happiness outside materials .

anyone can try to spend atleast 2 hrs in nama japa, silent , reading spirtual books, bhajan, sathsang, pooja or any sadana on festival days.

Unknown said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html