Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, January 7, 2010

காசி சுவாசி - பகுதி 5

குருதே கங்காஸாகர கமநம்
வ்ரதபரிபாலன மதவா தானம் மி
ஜ்ஞானவிஹீந:ஸர்வமதே ந
முக்திம் ந பஜதி ஜன்மசதேந

கங்கையிலும், பல சமுத்திரங்களிலும் குளித்தாலும், பல விரதங்கள் மற்றும் தான தர்மங்கள் செய்தாலும் தன் ஆன்மீக வழி எப்படிப்பட்டது என உணராதவன் என்றும் முக்தி அடைவதில்லை.

-பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர்
---------------------------------------------------------

பாரத தேசத்தை பாரத மாதாவாக நினைத்தால் அவளின் தனங்களில் வரும் வற்றாத பால் போன்றது கங்கை நதி. கங்கைக்கு பலர் பலவாறு புனிதம் கொண்டதாக கருதுகிறார்கள். நாராயணரின் கால்களில் இருந்து வருகிறது. பிரம்மனின் கைகளில் உள்ள கலசத்திலிருந்து வருகிறது. இன்னும் சிலரோ சிவனின் தலையிலிருந்து வருகிறது என்கிறார்கள்.


கங்கை எங்கிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல கங்கை என்ற நதியில் என்ன வருகிறது என்பதே முக்கியம். நீர் என்பது உற்பத்திக்கான ஒரு வஸ்து. அதனால் நீர் பெண்ணாக கருதப்படுகிறது. அதனாலேயே இந்தியாவில் இருக்கும் நீராதாரங்களுக்கு பெண் பெயர்கள் வைக்கப்படுகிறது. நிலையான இயற்கை தன்மைக்கு ஆண் பெயரும், இயற்கையை வளப்படுத்தும் தன்மைக்கு பெண் பெயரும் வைப்பது பாரத கலாச்சாரமாகும்.

கங்கை என்பது பெண்ணாக உருவகப்படுத்தியதன் விளைவு, சிலர் சிவனுக்கு கங்கை இரண்டாவது மனைவி என துவங்கிவிட்டார்கள். விநாயகர், முருகன் சிவனின் புதல்வர்கள், பார்வதி முதல் மனைவி என தனக்கு என்ன உண்டோ அதை கடவுளிடமும் காண்கிறார்கள். நம் ஆட்கள் விட்டால் சிவனின் குடுப்பத்திற்கு ரேஷன் கார்டு கூட கைலாய முகவரியில் கொடுப்பார்கள்.

கங்கையில் குளித்தால் பாவம் தொலையும் என்பது பலரின் நம்பிக்கை. இக்கருத்தை பலர் தவறாகவே புரிந்துகொள்வார்கள். நம் ஆட்கள் தம்பதிகளாக கங்கையில் குளித்துவிட்டு அவசர அவசரமாக தங்கள் துணையை பார்ப்பார்கள். பாவம் தொலைந்ததா என பார்க்கிறார்களாம். :) நம் ஆட்களின் கிண்டலுக்கு அளவே இல்லையே..

பல காலமாக கூறப்படும் கிராமத்து கதைகள் கங்கையில் குளிப்பதன் உண்மையான தத்துவங்களை போதிக்கிறது. ஒரு முறை சிவனும் பார்வதியும் தனிமையில் இருக்கும் பொழுது பார்வதி சிவனிடம், “கங்கையில் குளிப்பதால் முக்தி என கூறுகிறீர்களே ஸ்வாமி, தினமும் ஆயிரக் கணக்கானவர்கள் அதில் நீராடினாலும் சிலர் மட்டுமே முக்தி அடைகிறார்களே? இது முரண்பாடாக இருக்கிறதே?” என கேட்டார்.

“சக்தியே இதை விளக்குவதை விட நேரடியாகவே காண்பிக்கிறேன் என்னுடன் வா” என கங்கைக்கரைக்கு அழைத்துச் சென்றார் சிவன்.

இருவரும் மிகவும் வயது முதிர்ந்த முதியவர்கள் போல உருமற்றம் அடைந்தார்கள். பார்வதிக்கு தன் நாடகத்தின் திரைக்கதையை கூறினார் சிவன்.

நடக்க இயலாத முதியவர்கள் போல கங்கை கரையில் அமர்ந்து கொண்டார்கள். கங்கையில் குளித்துவிட்டு
வருபவர்களிடம், “ஐயா, புண்ணியவான்களே... எங்களால் நடக்க முடியாது, அதனால் கங்கையில் குளிக்க முடியவில்லை. தயவு செய்து நீங்கள் பெற்ற புண்ணியங்களை எங்களுக்கு கொடுத்திவிட்டு செல்லுங்கள். ஐயா உதவுங்கள் ஐயா...” என கேட்கத் துவங்கினார்கள்.

யாரும் முதிய தம்பதிகளுக்கு உதவ முன்வரவில்லை. நேரம் கூடிக்கொண்டே சென்றது யாரும் உதவவில்லை. ஒரு இளைஞன் குளித்துவிட்டு வந்து தனது கையில் இருந்த குடம் மூலம் இருவர் கையிலும் கங்கையை ஊற்றினான். பின் அந்த இளைஞன் கூறினான், “முதியவர்களே இதோ என் புண்ணியங்கள் எல்லாம் உங்களுக்கு தருகிறேன்.”

முதியவர் வேடத்தில் இருந்த சிவன் கேட்டார்,” இளைஞனே உனக்கு புண்ணியம் வேண்டாமா?”

“ஐயா கங்கை என்ற புனிதம் இங்கே பிரவாகமாக ஓடுகிறது. என் புண்ணியம் தீர்ந்தால் என்ன? மீண்டும் இதில் குளித்தால் புண்ணியம்
கிடைத்துவிடும்” என்றான் இளைஞன்.

முதிய வேடத்தில் இருந்த சிவனும் பார்வதியும் தங்களின் சுய உருவை காட்டி அவனுக்கு முக்தியை அளித்தார்கள்.

கங்கையில் குளித்தால் புண்ணியம் பெருகும்
என்ற சித்தாந்தத்தை காட்டிலும்,

கண்டிப்பாக புண்ணியம் பெருகும் என்ற நம்பிக்கை அதைவிட பெரியது.


கங்கை மாசுமடுகிறது. அதை தூய்மையாக்குகிறோம் என்று பல கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என்கிறார்கள்.அரசியல்வாதிகளோ ஐயாயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். கங்கைக்கா இல்லை இவர்களுக்கா யாருக்கு ஒதுக்க சொல்லுகிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது. சில பகுத்த-அறிவு-வாதிகள் கங்கை அசுத்தமானது என்கிறார்கள்.

கங்கை அசுத்தம் எனும் மேன்மக்களே, காசி நகரம் தோன்றி ஐயாயிரம் வருடம் ஆகிவிட்டது. பல நூற்றாண்டுகளாக ஓடும் கங்கை,
இன்றும் கங்கையாகவே இருக்கிறது. ஆனால் நீங்கள் வசிக்கும் சிங்கார சென்னை என்ற பெருநகரம் தோன்றி முன்னூறு வருடங்களே நிறைவடைந்து இருக்கிறது. படகு போக்குவரத்து இருந்த கூவம் என்ற ஆற்றில் தற்சமயம் உங்களால் குளிக்க முடியுமா?

தமிழகத்தின் தலைநகரில் ஓடும் புண்ணிய நதி

கூவத்தில் அறுபது வருடத்திற்கு முன் தினமும் குளித்து அதில் பூஜைக்கு நீர் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. முதலில்
உங்கள் காலடியில் இருக்கும் ஆற்றின் லட்சணத்தை பாருங்கள். அதை சுத்திகரிக்க முயலுங்கள்.

கூவத்தை சுத்திகரிக்க பல கோடி ரூபாயை ’வாழும் கடவுளிடம்’ கேட்கிறார்கள். உண்மையில் கூவத்தை சீரமைப்பது என்பது ஆறு மாதத்தில் சில லட்சங்களில் செய்து முடிக்க வேண்டிய விஷயம்.

கேரளா போன்ற மேற்கில் இருக்கும் நில அமைப்பின்படி கடல் நீர், நகரத்தில் உள் புகுந்து கடல் நீரின் அடர்த்தியால் கழிவுகள் தேங்காத நீர் ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. அதுபோல கூவ நதியை ஒட்டி உள்ள கடல் பகுதியை ஆழப்படுத்தினால் கடல் நீர் கூவ நீருடன் கலந்து அடர்த்தியின் காரணமாக கழிவுகள் கடலில் கலந்துவிடும். கடல் நீர் கூவம் நதியின் உள்ளே கலப்பதால் படகு போக்குவரத்து செய்ய ஏதுவாக இருக்கும்.

கொச்சின் நகரம் இதற்கு சிறந்த உதாரணம். ஆனால் இந்த எளிய முயற்சி யாரும் செய்ய மாட்டார்கள். செய்தால் பல கோடி கிடைக்காதே? கூவம் உண்மையாக எங்கே ஓடுகிறது என புரிகிறதா?


கைலாஷ் மானசரோவர் என்பது பலர் புனிதமாக மதிக்கும் இடம். சிவனின் உறைவிடம் என கூறப்படுகிறது. உலகின் உயரமான இடத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏரி மானசரோவர். ஆனால் இந்த ஏரியை புனிதமாக கருதினாலும் யாரும் வீட்டுக்கு தீர்த்தமாக எடுத்து வருவதில்லை....!

காசிக்கு செல்லுபவர்கள் கங்கையை தங்களுடன் எடுத்து வருகிறார்கள். பல காலம் தங்களுடன் வைத்து பூஜிக்கிறார்கள்.

உரக்க
சொல்லுகிறேன் கேளுங்கள். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் கங்கை மாசுபடுவது என்பது சாத்தியம் இல்லை. இன்னும் பல நூற்றாண்டுகள், பலகோடி தொழில்சாலைகள் வந்துவிட்டாலும், பல கழிவுகள் மிதந்தாலும், பிணங்கள் அழுகினாலும் காங்கை மாசுபடாது. இது நிச்சயம்...!

இக்கருத்தை பக்தியால் உணர முற்படுவதை விட, நம் பகுத்தறிவுக்கு புரிந்துகொள்ள நாம் கொஞ்சம் அறிவியலின் உதவியை நாட வேண்டும்.

நான் அறிவியல் என்றவுடனேயே, “அறிவியலை எல்லாம் நீ எப்படி பேசலாம்?” எனக் கேட்கும் நண்பர்களே தயாராக இருங்கள். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது...!

[...சுவாசிப்பேன்]

19 கருத்துக்கள்:

Subbaraman said...

நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது, ஸ்வாமி.நன்றி..

Sivakumar said...

மிக மிக சுவாரசியமாக செல்கிறது காசி சுவாசி.
சரியான இடத்தில் தொடரும் போட்டு எங்களின் ஆர்வத்தை
மேலும் தூண்டியுள்ளீர்கள்.
ஏன் கங்கை மாசடைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள
ஆவலாய் இருக்கிறேன்.

யாசவி said...

ஏன் இந்த உக்கிரம்?

நான் கங்கையை கல்கத்தாவில் / சாகர் தீவில் (சங்கமிக்கும் இடம்) பார்த்திருக்கிறேன்.

அனால் கல்கத்தாவில் உள்ள கங்கை மிக மிக அசுத்தம் ஆனாலும் மக்கள் உபயோகிக்கிறார்கள்.

Thirumal said...

//சித்தாந்தத்தை காட்டிலும், நம்பிக்கை அதைவிட பெரியது.//

அழகாகச் சொல்கிறீர்கள் ஸ்வாமி.

ஆதிசங்கரரின் பஞ்ச், அற்புதம் :-))

எம்.எம்.அப்துல்லா said...

போட்டோவுல, கங்கை சுத்தமா இருக்கான்னு நீங்க முகர்ந்து பார்த்து ஆராய்ச்சி செய்யிறமாதிரி இருக்கு :)

Mahesh said...

ம்ம்ம்ம்... இண்டெரெஸ்டிங்கா போகுது....

சும்மா ஒரு 'இது'க்காக கேக்கறேன்... கோச்சுக்காதீங்க... அப்ப ஓடுகிற ஆறு எதுவுமே மாசுபட முடியாதுன்னு சொல்றீங்களா? நொய்யல் கூட நல்லா ஓடின நதிதான்...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்புராமன்,

உங்கள் கருத்துக்கு நன்றி.

திரு சிவகுமார்,

உங்கள் வருகைக்கு நன்றி

திரு யாசவி,

காசியில் கங்கை அசுத்தமாகாது என்பதே என் கருத்து. கங்கை கடலில் கலக்கும் இடம் கல்கத்தா.

இதில் உக்கிரம் எதுவும் இல்லை ஐயா :)

திரு திருமால்,

உங்கள் ரசனைக்கு நன்றி.


அப்துல்லா அண்ணே,

கங்கையில் என் பாவம் போகுதானு செக் பண்ணறேன். :)


திரு மகேஷ்,

//சும்மா ஒரு 'இது'க்காக கேக்கறேன்... கோச்சுக்காதீங்க...//

எதுக்கு கேட்டாலும் கோவிச்சுக்க மாட்டேன் :)
உங்களுக்கான பதில்,
ஓடும் ஆறு மாசு படும்.
கங்கையும் மாசுபடும்.
ஆனால் கங்கை ரிஷிகேசம் முதல் காசி வரை மாசுபடாது.

புரிஞ்சுதோ:)

Unknown said...

காசி தொடர் அருமையாக செல்கிறது

Siva Sottallu said...

எதோ விறுவிறுப்பாக செல்ல துவங்குவது போல் தோன்றுகிறது... தொடரட்டும் உங்கள் அரும்பணி.

மிக்க நன்றி சுவாமி.

திவாண்ணா said...

கூவத்தில் நகர கழிவு நீரை கொண்டு விடுகிறார்கள். இதை நிறுத்துவது எப்படி என்று தெரியவில்லை. அதான் பிரச்சினை. தனியா கழிவு நீர் ஓட ஒரு வழி செய்தால் போதும். பச்சயப்ப முதலியார் கூவத்தில் குளித்து கோவில் சென்று தரிசனம் செய்ததை எழுதி வைத்து இருக்கிறார் என்று படித்த நினைவு.
--
கடல் நீரை இழுத்துவிட்டால் அப்புறம் நகர கிணறுகள் என்னாவது? உப்பு நீராகிவிடுமே?

ATOMYOGI said...

*** நண்பர்களே தயாராக இருங்கள். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது...!***

நாங்கள் தயார்!!!!!!

ரங்கன் said...

தற்போதைய அரசு கூவத்தை சரி செய்ய வேண்டி அறிக்கைகளை விட்டுஇருக்கிறது. இந்த முறை எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது அது கண்டிப்பாக வெகு விரைவில் நடக்கும் என.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜேஷ்,
திரு ரங்கன்,
திரு சிவா,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திவா,

//கடல் நீரை இழுத்துவிட்டால் அப்புறம் நகர கிணறுகள் என்னாவது? உப்பு நீராகிவிடுமே?//

டெல்டா மற்றும் கடல் சார்ந்த பகுதியில் இருக்கும் கிணறுகள் உப்பு நீராக இருக்கும் சாத்தியங்கள் குறைவு.

மண்ணுக்கடியில் ஏற்படும் வினைகளால் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
இராமேஸ்வரத்தில் 21 தீர்த்த கிணறுகளில் நீர் உப்புகரிக்கிறதா?

கடல்நீர் உற்புகும் (backwater) இடங்களில் நீர் இருக்கும் பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக இருக்காது.

உங்கள் வருகைக்கு நன்றி

sarul said...

பதில் சொல்வதில் ஸ்வாமி காட்டும் பொறுமை மலைக்க வைக்கிறது.
எனக்கும் கோபம் வரும் என்ற பொருளில் முன்பு எழுதியதாக ஞாபகம் ,அதுதான் பொய்போலுள்ளது.

Unknown said...

காசி போல் ராமேஸ்வரம்மும் புனித இடம் தான் ராமேஸ்வரம் பற்றி எழுதுவீர்களா சுவாமி

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர் - அருமையாகச் சொல்லி இருக்கிறார்.

கங்கை எங்கிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல - என்ன வருகிறதெனப் பார்

சிவனின் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு - மிகவும் ரசித்தேன் - ஆதங்கம கலந்த நகைச்சுவையினை

பக்கத்தில் இருக்கிறாளா - பாவம் தொலைய வில்லையா - நக்கலா

புண்ணியம் தீர்ந்தால் என்ன - மறுமுறை குளித்தால் வந்து விடுமே - அருமையான சிந்தனை

கங்கை மாசுபடாது - ரிஷிகேஷ் முதல் காசி வரை - நம்பிக்கை வாழ்க

நல்வாழ்த்துகள் ஓம்கார்

sutha said...

கங்கையிலும், பல சமுத்திரங்களிலும் குளித்தாலும், பல விரதங்கள் மற்றும் தான தர்மங்கள் செய்தாலும் தன் ஆன்மீக வழி எப்படிப்பட்டது என உணராதவன் என்றும் முக்தி அடைவதில்லை///

saami remba nalla irukku unga blog enakku oru santhegam.
தன் ஆன்மீக வழி எப்படிப்பட்டது என உணராதவன் என்றும் முக்தி அடைவதில்லை/// solli irukkingale,, than aanmiga vali eppadi pattathunnu epdi unarrathu sollungale thappa iruntha manichukonga puriya vaitthal santhosapaduven

திவாண்ணா said...

சுதா கேள்விகளை கேளுங்க. அப்பதானே விடை கிடைக்கும்?