Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, June 20, 2009

குரு பூர்ணிமா பகுதி - இரண்டு

குருபூர்ணிமா அன்று குரு தீட்சை பெற்ற சாதகன் அந்த பிறப்பில் தனது ஆன்ம உயர்வை பெற முடியாவிட்டாலும் அடுத்துவரும் பிறப்புகளில் முக்தி அடைய குருவின் அருள் தானாகவே தொடர்ந்து வருகிறது.

குருவானவர் யார், எப்படிப்பட்டவர் என பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளேன். இன்னும் விளக்கினாலும் திருப்தி ஏற்படாது. குரு வரையறைக்குள் அடங்காதவர், பரம்பொருள் என்பது நிதர்சனம். ஆனால் சிஷ்யனாகவே குருவை பின்பற்றுபவர் சில வரையறையில் இருக்க வேண்டியது அவசியம்.

குரு பரம்பரையும், குருவை நாடிச்செல்லும் செயலும் பல வருடங்களாக விடுபட்டதால் நமக்கு எவ்வாறு குருவிடம் அணுகவேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது. குரு உங்களின் உள்ளே இருக்கும் சக்திதான், ஆனால் அதற்கு போலியான மரியாதை தருவதோ அதே சமயம் அலட்சியப்படுத்துவதோ மாபெரும் பாவச்செயலாகும். ஆன்ம உயர்வுக்கு பாடுபடும் சாதகன், குருவிடம் எப்படி நடந்துகொள்ளகூடாது என்பதை ஓர் கதை மூலம் காணலாம்.

ஒரு வயதான முனிவர் ஊரின் எல்லையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்துவந்தார். அவருக்கு மகா சோம்பேறியான சிஷ்யன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இரவு இருவரும் படுக்கைக்கு சென்றார்கள். குரு கூறினார் " சிஷ்யா, வெளியே மழை பெய்கிறது என நினைக்கிறேன். நமது ஆடைகள் நனைந்துவிடும். அதை எடுத்துக்கொண்டு வா" என்றார். சோம்பேறி சிஷ்யன் "இப்பொழுது ஆசிரமத்திற்குள் வந்த பூனையை தொட்டுப் பார்த்தேன், அதன் மேல் ஈரம் இல்லை எனவே வெளியே மழை பெய்யவில்லை குருதேவா" என்றான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் குரு சிஷ்யனை பார்த்து கூறினார் " கதவை மூடிவிட்டு வா, தூங்கலாம்" என்றார். "நாம் என்ன செல்வந்தர்களா குருவே, திருடர்கள் வந்து அபகரிக்க, கதவை திறந்துவைத்தாலும் இழப்பதற்கு என்ன இருக்கிரது நம்மிடம் ?" என்றான் சிஷ்யன். மீண்டும் குரு கூறினார், "அந்த விளக்கையாவது அனைத்துவிட்டு வா" என்றார். "குருவே, இரு வேலைகளை நான் செய்தேன். இந்த ஒரு வேலையாவது நீங்கள் செய்யக்கூடாதா?" என்று கேட்டான் சோம்பேறி சிஷ்யன்.

நவீன கால சிஷ்யர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தாங்கள் ஒரு துரும்பையும் அசைக்கமாட்டோ ம். ஆனால் குரு தங்களுக்கு வாரி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்படிபட்டவரா நீங்கள் ? அப்படியென்றால் உடனே மாறிவிடுங்கள். இல்லையென்றால் திருமூலர் போல குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குழியில் விழ வேண்டிவரும். சரி சிஷ்யன் எப்படித்தான் இருக்கவேண்டும் என கேட்பது புரிகிறது. இதற்கும் ஒரு கதை மூலம் விளக்கம் பெறலாம்.

குருவை அடைய ஒருவன் ஒருசில குணங்களை பெற்றவனாக இருக்கவேண்டும். அதேபோல சில குணங்களை களைந்தவனாக இருக்கவேண்டும். இன்னும் விளகமாக சொல்ல வேண்டுமானால் கீழ்படிதல், கற்றுக்கொள்ளும் ஆர்வம், நேர்மை குருவை பூஜிக்கும் தன்மை எனும் குணங்களை கொண்டவனாகவும், பிறரை துன்புறுத்துதல், சந்தேகம், ஆணவம், பொருளாசை என துன்பங்களை ஏற்படுத்தும் குணங்களற்றவனாகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவர் சிஷ்யனுக்கோ அவர் மேல் சந்தேகம். தன்னைப் போலவே வாழும் இவர் எப்படி ஞானியாக இருக்க முடியும் ? என தன்னிறைவு அற்று இருந்தான். இருவரும் ஒரு நாள் வேறு ஊருக்கு பயணமானார்கள். பயணத்தின் இடையே வன பகுதி குறுக்கிட்டது. சிஷ்யன் கேட்டான், "குருவே தாங்கள் முக்காலும் உணர்ந்த ஞானி என கூறிகிறார்கள். இதை சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். அதற்கு உங்கள் அனுமதி தேவை" . அவனை புன்முறுவலுடன் பார்த்த குரு "தாராளமாக சோதனை செய்" என்றார்.

நடைபாதையில் இருந்த சிறிய செடியை காண்பித்து சிஷ்யன் கேட்டான் " குருவே இதன் எதிர்காலத்தை கூறமுடியுமா?" என்றான். அந்த சிறு செடியை கூர்ந்து பார்த்த குரு கூறினார். "இந்த செடி வளர்ந்து பிரம்மாண்டமான விருட்சமாக மாறும்" என்றார்.

வில்லங்கமான சிரிப்புடன் குருவை பார்த்த சிஷ்யன் அந்த சிறு செடியை வேறுடன் பிடிங்கி தூர எறிந்தான். " இப்பொழுது எப்படி இந்த செடி முளைக்கும் குருதேவா?" என குருவை தோற்கடித்த மகிழ்ச்சியில் கேட்டான். பதில் எதுவும் கூறாமல் ஞானி பயணத்தை தொடர்ந்தார். சென்ற இடத்தில் எல்லாம் நான் குருவை தோற்கடித்தேன் என கூறி மகிழ்ந்தான் சிஷ்யன். பல வருடங்கள் கழிந்தன. குருவும், சிஷ்யனும் மீண்டும் தங்களின் ஆசிரமத்திற்கு பயணமானார்கள். அதே வனப்பகுதியை கடக்கும் பொழுது சிஷ்யன் அந்த செடியை பார்த்தான். சிஷ்யன் வேருடன் பிடுங்கி எறிந்த இடத்தில் சாய்வாக வேர் விட்டு மரமாக வளர்ந்திருந்தது அந்தசெடி. அவனின் முகத்தை புன்னகையுடன் பார்த்த குரு எந்த வார்த்தைகளும் கூறாமல் சிஷ்யனை கடந்து சென்றார்.

எனது மாணவர்களில் சிலர் நான் கூறும் கருத்தில் சந்தேகம் அடைவதுண்டு. அவ நம்பிக்கை கொண்ட மாணவருக்கு மேற்கண்ட கதையை சொல்லும் போது அந்த மாணவர் சொன்னார் " அந்த சிஷ்யன் ஒரு அறிவுகெட்டவன், நானாக இருந்தால் அந்த செடியை துண்டு துண்டாக அல்லவா ஆக்கியிருப்பேன்" என்றார். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவர்களின் அறியாமையை கண்டு ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவர்கள் சாரத்தை விட்டுவிட்டு இவர்களின் புத்திசாலித்தனத்தில் தொங்குபவர்கள்.

முழுமையான நிலையில் இருபவர்கள் செய்யும் தவறு கூட நன்மையை மட்டுமே தரும் என்கிறது வேதம். குரு செய்வது தவறு என தெரிந்தாலும் அதன் மூலம் ஏற்படும் நன்மையை ஆய்பவனே சிறந்த சிஷ்யனாக இருப்பான். உண்மையில் குருவிற்கு நன்மை மற்றும் தீமை என்பது கிடையாது. அறியாமையால் காண்பவருக்கே அது நன்மை அல்லது தவறு என கற்பிதம் ஏற்படுகிறது. குரு தன்மையில் இருப்பவர்களுக்கு தனக்கென செயல்களோ, கர்ம வினையோ இருப்பதில்லை. தங்கள் உடலையும், மனதையும் கருவிகளாக்கி இறைவனின் இயக்கத்தை வெளிப்படுத்துவார்கள். இறைவனின் செயல்கள் அவர்கள் மூலம் வெளிப்படுத்துவதால் அவர்கள் எவ்வாறு நன்மையோ, தீமையோ செய்யமுடியும் ? ஒலி பெருக்கியில் ஒலி வருவது ஒலி பெருக்கியால் அல்ல. ஒலியை மைக் மூலமாக யார் பேசினார்களோ அவர்கள் மூலம் தான்.

ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய ஓர் செவி வழி கதையுண்டு. ஓர் நாள் கோபியர்கள் எங்கு தேடியும் பகவானை காணவில்லை. வெகு நேரம் கழித்து ஸ்ரீ கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் வந்தார். பரம புருஷரை பார்த்த கோபிகள், " கிருஷ்ணா! எங்களிடம் உனக்கு ஏற்பட்டதை விட பன்மடங்கு பரம சந்தோசத்தில் இருக்கிறாயே, எங்களை விட பக்தி செலுத்தும் வேறு கோபிகைகளுடன் சென்றாயோ?" என கேட்டனர். "கோபிகளே! யமுனை ஆற்றின் மறுகரையில் எனது குருநாதர் துர்வாசர் வந்தார். அவரை தரிசித்துவிட்டு வருகிறேன்" என்றார் வசுதேவ புத்திரன். "கேசவா! எங்களை விட பரமசுகம் அளிக்கும் உனது குருவை நாங்கள் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. நாங்கள் இனிப்புகளை தயார் செய்து கொண்டு வருகிறோம். எங்களுக்கு குருவின் இருப்பிடத்தை அடைய வழி சொல்லு பரமாத்மா" என்றனர் கோபிகைகள்.

அந்த காலத்தில் குரு மற்றும் ஆன்மீக பெரியார்களை சந்திக்கும்பொழுது பழம் அல்லது இனிப்புகளை வாங்கி செல்வார்கள். மகான்கள் சிறிது இனிப்பை எடுத்துக்கொண்டு அவற்றை பிறருக்கு பகிர்ந்தளிப்பார்கள். அதை பிரசாதமாக ஏற்றுக்கொள்வது மரபு. தற்சமயம் கலியுகமல்லவா? அதனால் குருமார்கள் இனிப்புடன் சிஷ்யர்களை துரத்துகிறார்கள்.

கோபியர்கள் பலவகையான இனிப்புகளை தயாரித்து தலையில் பெரும் கூடையின் யமுனை ஆற்றங்கரைக்கு வந்தனர். முரளிதரன், தனது புல்லாங்குழலில் தேவ காந்தாரத்தை வாசித்துக்கொண்டிருந்தார். யமுனை ஆற்றில் வெள்ளம் இயல்பைவிடஅதிகமாக பெருக்கெடுத்து ஓடியது. "முகுந்தா என்ன இது சோதனை? உனது குரு துர்வாசரைக் காண யமுனை தடையாக இருக்கிறதே இதற்கு நீ உதவக்கூடாதா?" என சரண் புகுந்தனர். கள்ள புன்னகை பூத்த காளிங்க நர்த்தனன் "கோபிகைகளே இதற்கு எளிய வழி ஒன்று உண்டு. யமுனையிடம் சென்று, "கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி" என உரக்க மூன்று முறை சொல்லுங்கள் யமுனை வழிவிடும்" என்றார். கோபிகைகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மாதவா இது என்ன வேடிக்கை? நீ பிரம்மச்சாரி என சொல்வதே வேடிக்கையானது, என்றும் பிரம்மச்சாரி என கூறுங்கள் என்று சொல்கிறாயே எங்களுக்கு உதவும் எண்ணத்தில் சொல்கிறாயா இல்லை உனது லீலையில் இதுவும் ஒன்றா?" என கேட்டனர்.

கோவிந்தன் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கவே அனைவரும் யமுனையிடம் சென்று "கிருஷ்ணர் நித்ய பிரம்மச்சாரி" என மும்முறை கூறினார்கள். உடனே யமுனை இரண்டாகப் பிரிந்து வழிவிட்டது. கோபியர்கள் உற்சாகத்துடன் மறுகரையில் அமர்ந்திருந்த துர்வாச முனிவரை தரிசித்தனர்.

தாங்கள் கொண்டு வந்த இனிப்பை அவரிடம் கொடுத்தனர். ஆனால் மரபுக்கு மீறி துர்வாசர் அனைத்து இனிப்புகளையும் சாப்பிட்டுவிட்டார். இனிப்பு கூடைகள் அனைத்தும் காலியாக இருந்தது. கோபத்துக்கு பெயர்போனவர் துர்வாசர், அவரின் சாபத்திற்கு பயந்து அவரிடம் எதுவும் கேட்கவில்லை. தரிசனம் முடிந்ததும் யமுனையை கடக்க மீண்டும் அந்த மந்திரத்தை கூறினார்கள் கோபியர்கள், யமுனை வழிவிடவில்லை. கோபிகைகள் துர்வாசரிடம் சென்று "குருதேவா, யமுனையை கடக்க மாதவன் எங்களுக்கு ஓர் வழி கூறினான். அதை மீண்டும் கூறி யமுனையை கடக்க முயற்சித்தோம் முடியவில்லை. பெருக்கெடுத்து ஓடும் யமுனையை கடக்க உதவுங்களேன்" என்றனர்.

கோபியர்களைப் பார்த்த துர்வாச மகரிஷி "கோபிகைகளே! துர்வாசன் நித்ய உபவாசி என கூறுங்கள் யமுனை வழிவிடும்" என்றார். தாங்கள் கொண்டுவந்த பத்துபேருக்கான இனிப்புகள் அனைத்தையும் ஒரே ஆளாக சாப்பிட்டு விட்டு, என்றும் விரதம் இருப்பவர் என சொல்ல சொல்கிறாரே என கோபிகைகள் குழம்பினர். கிருஷ்ணனின் கருத்தையே ஏற்றுக்கொள்ள தயங்கிய கோபியர்களுக்கு துர்வாசரின் கருத்து சற்று மிகையாகவே பட்டது. இருந்தாலும் கிருஷ்ணனின் குருவல்லவா! இவர் சொல்வதிலும் உண்மை இருக்கும் என எண்ணி மூன்று முறை உச்சரித்தனர். யமுனை வழிவிட்டது. மறுகரைக்கு வந்த கோபியர்கள் கிருஷ்ணனை கண்டனர். அவனது பவளவாயில் இனிப்பு தின்ற சுவடுகள் இருந்தது. தங்களை வைத்து ரமணன் லீலை புரிந்ததை கோபியர்கள் உணர்ந்தனர்.

இக்கதை மூலம் ஞானியர்களுக்கு கர்ம தொடர்பு இல்லை என்பதையும், பரமார்த்த சொருபமே அவர்களின் இயக்கத்திற்கு காரணம் என்பதையும் உணருங்கள். மேற்கண்ட ஸ்ரீ கிருஷ்ணரின் கதையை படிப்பதன் மூலம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் உள்ள அவரின் பெயர்களை உச்சரித்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. உங்களை அறியாமலேயே உங்களின் அறியாமையை போக்கும் தன்மை குரு என்ற நிலைக்கு உண்டு.

அவதார புருஷர்களாகிய ஸ்ரீ ராமருக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் தாங்கள் பரமாத்மா என உணர குரு தேவைப்பட்டனர். இறை நிலையாக இருக்கும் குரு நிலை, இறைநிலையை காட்டிலும் மேலானது. குருவை சிந்திப்போம், குருவருள் பெறுவோம்.
-----------------------------------------------

குருபூர்ணிமா

ஜூலை மாதம் 6ஆம் தேதி ஏற்படுகிறது.
அன்று குருவை தியானித்து இருள் விலக்குங்கள்.

9 கருத்துக்கள்:

அது ஒரு கனாக் காலம் said...

நன்றி குருவே," இவர்கள் சாரத்தை விட்டுவிட்டு இவர்களின் புத்திசாலித்தனத்தில் தொங்குபவர்கள்." இந்த வரிகள் மிகவும் உண்மையானது ....

இது , அலுவகலத்தில், இந்த அதிகாரிக்கு ஒன்னும் தெரியாது ... நான் அப்படி கிழுச்சிருப்பேன் / புரட்டிபோட்ட்ருப்பேன் சொல்றவங்களை நிறய பார்க்கலாம் ...நானும் அது மாதிரி இருந்ததுண்டு... அந்த என்ன ஓட்டத்திற்கு போகாமல், என்னை காக்க குருவின் கிருபை வேண்டும்

அடியார் said...

நல்ல கருத்துக்களை சிறுகதைகளைக் கொண்டே விளக்கிவிட்டீர்கள் சுவாமி...

நன்றி...

Anonymous said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு.,
அரும் பேராற்றல் கருணை.,எனக்கு என்ன தேவை என்பதை உங்கள் மூலம் தெரிய படுத்தி இருக்கிறது.
அந்த அரும் பேராற்றல் கருணைக்கும் உங்களுக்கும் நன்றி.

//திரு சன்யாசி.
உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பகுதியில் இருக்கிறது//

இதன் மூலம் எனக்கு... கேள்விக்கு பதில் மாத்திரம் அல்ல , கேள்வியே ஏலாத ஒரு சூழ்நிலை உண்டகயுள்ளது

ஷண்முகப்ரியன் said...

முற்றிலும் முரண்பாடுகளால் ஆன குரு-சிஷ்யன் உறவை விளக்கியே தீர வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு கடினமாக உழைக்க்கிறீர்கள் ஸ்வாமிஜி.

உங்களைப் படிப்பவர்களிடமும் அதே சிரத்தையும்,கவனமும் நிகழ வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி.

Mahesh said...

_/\_

இதுக்கு மேல சொல்லத் தெரியல....

ATOMYOGI said...

வணக்கம் ஸ்வாமிஜி!

உங்க‌ள‌து ப‌திவுக‌ள் அருமை. ஆன்மீக கருத்துக்களை விளக்க தாங்கள் கையாளும் இந்த‌ புதுமையான‌ வழி அருமை.

**நமது தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் வந்ததாக தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.**

அப்படியானால் ஆதியில் தோன்றிய‌ ரிஷிக்கு யார் குருவாக‌ இருந்திருக்க‌ முடியும்? அந்த ஆதிகுரு யார்? அவரை குரு பூர்ணிமா வில் எப்படி நினைவு கொள்வது?

கேள்விகள் சிறுபிள்ளைதனமாக இருப்பதாக நினைத்து விடையளிக்க மறுத்து விட மாட்டீர்களே?!

yrskbalu said...

gi,

1. this topic gives the feeling of reading of GURU GEETHA .

2. every words having deep meaning and value

3. have faith in guru words and guru. thats all.

4.to get real guru - pray god for real guru. he will take care. one fine day he will send guru to you.

Unknown said...

வணக்கம். யதேச்சையாக தங்கள் பக்கம் வரும் பாக்கியம் கிட்டியதை எனது புண்ணியம் என உணர வைக்கும்படியான கட்டுரை. குரு - மாணாக்கன் உறவை/தொடர்பை வெகு எளிதாக புரிந்து கொள்ள வைத்திருப்பதற்கு நன்றி!

தங்கள் பதிவுகள் அனைத்துமே பயனுள்ளவையாக இருக்கிறது. அதிலும் எனக்கு ஜோதிடம் மிகுந்த பயனளிக்கிறது. நன்றி!

தொடரட்டும் தங்கள் சேவை...

sowri said...

Thank you for the explanation and clarity of expression.