Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, June 10, 2009

இளம்பெண்ணுக்கு கிழவனை திருமணம் செய்ய விருப்பம்

பழைய பஞ்சாங்கத்தில் திருமந்திரத்திற்கான விளக்கம் கேட்டிருந்தேன்.

திருமந்திரத்தில் இருக்கும் 3048 பாடல்களில் எது பிடிக்கும் என பிரிப்பது சிரமம். பூந்தி லட்டுவில் எந்த பூந்தி இனிப்பானது என சொல்லுவதை போல திருமந்திரத்தில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் நிலையும் ஒன்று. இருந்தாலும் அந்த லட்டுவுக்கு இடை இடையே முந்திரி திராட்சை இருந்து அதன் தித்திப்பை அதிகரிக்குமே? அது போன்ற சில பாடல்கள் உண்டு.

திருமந்திரம் ஒரு ஆன்மீக என்சைக்ளோபிடியா. இந்த ஒரு புத்தகம் இருந்தால் போதும் வேறு எதையும் கற்றுக்கொள்ள தேவையில்லை. காரணம் அனைத்து ஆன்மீக விஷயத்தின் சாரமே திருமந்திரம்.

திரு மூலரையும் திருமந்திரத்தையும் பற்றி கூறுவது என்பது எனக்கு எவ்வளவு பிடித்த விஷயமோ அவ்வளவு பிடிக்காதது.

பிடித்தது எதுவெனில் திருமந்திரத்தில் இருக்கும் சொற்பிரயோகம், அதன் நேர்த்தி, பல்கோண விளக்கம் மற்றும் வார்த்தையின் அடர்த்தியான பொருள் என நீண்ட பட்டியல் உண்டு.

பிடிக்காதது என்னவென்றால் பிறருக்கு விளக்கம் கொடுக்க துவங்கினால் தேன் கிண்ணத்தில் விழுந்த எறும்பு போல நான் என்னை மறந்து அதில் இறந்துவிடுவேன்.

இப்பொழுது கூட பாருங்கள் ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்ல வந்த நான் எங்கோ மூழ்கிப்போகிறேன்.

திருமந்திரம் பாடல் 1514:

இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.

மேற்கண்ட திருமந்திரம் மட்டுமல்ல அனேக திருமந்திர பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் இருக்கிறது. படிப்பவரின் நிலை மற்றும் ஆன்மீக தன்மைக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கும் பாடல். எளிமையாக சொல்லுவது என்றால் இது ஆன்மீகக் கண்ணாடி. உங்களை சரியாக பிரதிபலிக்கும். சூழல் மற்றும் ஸ்திதியை பொருத்து இதற்கு பன்முக விளக்கம் கொடுக்க முடியும். அவற்றில் சில...

ஞான யோக விளக்கம் :

ஜகத் எனும் உலகம் இரு மஹாபொருளால் உருவாக்கப்பட்டது. அது பிரகிருதி மற்றும் புருஷார்த்தம். பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம நிலை.

பிரகிருதி புருஷனுடன் இணைவதால் நமக்கு கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள் உருவாகி, சாத்வ ரஜோ மற்றும் தமோ குண சேர்க்கைகள் ஏற்படுகிறது. இதனால் குணங்களை கடந்து பிரகிருதி நிலையில் புருஷார்த்த தன்மை இருந்தால் அதன் பெயர் ஜீவன் முக்தி.

பக்தி யோக விளக்கம் :

சக்தி என்பவள் மாற்றத்திற்கு உட்பட்டவள். சிவ நிலை என்பது மாறாதது. என்றும் இருக்கும் சிவ நிலையானது முதுமையானது. சக்தியானவள் தன்னை எப்பொழுதும் புதுப்பித்து கொள்வாள். அதனால் தான் சக்தியை கன்னிப்பெண்ணாகவும், குமரிப்பெண்ணாகவும் வணங்கும் வழக்கம் நம்மில் உண்டு.

நம்மில் இருக்கும் சிவதன்மையில் சக்தி நிலை ஒன்றிணந்து பரவச நிலைக்கு கொண்டு சேர்ப்பது பக்தியோகத்தின் திருமணம் எனலாம். கோவில்களில் நடக்கும் மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம் இவை இதற்கு சான்று.

குண்டலினி யோக விளக்கம் :

குண்டலி எனும் மஹாசக்தி மூலாதரத்தில் உறங்குகிறாள். அவள் இருப்பது தெரியாமல் அனைவரும் குருட்டுநிலையில் இருக்கிறார்கள். உடலை காட்டிலும் அவள் எப்பொழுதும் இளமையானவள். என்றாவது ஒருநாள் அவள் பல சித்துக்களை நமக்கு காட்டி தன்பால் வசமாக்கி அறியாமையை நீக்கி சகாஸ்ராரத்தை அடைவாள்.

அறிவியல் விளக்கம் :

அனுக்கரு என்பது நிலையான ஒன்று. அனு உருவாக்கத்தில் முதலில் தோன்றுவது அனுக்கரு. அனுவை சுற்றிவரும் எலக்ட்ரான்கள் /புரோட்டான்கள் ஆற்றல் நிலையில் இருப்பதால் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். சில அறிவியல் வினையால் (குணம் பல காட்டி) அனுக்கருவான கிழவனை பிளந்து இவற்றுடன் மோதசெய்வதால் வெளிப்படும் ஆற்றல் அளவில்லாதது. திருமணம் எப்படி தனி ஒருவனாக செய்ய முடியாதோ, அனைவருக்கும் தெரிந்து விடுமோ அது போல இந்த செயலும் மறைத்து தனிமனிதனாக செய்ய முடியாது.

எளிய விளக்கம் :

ஆன்மீகம் என்றவுடன் ஏதோ வயதானவருக்கான விஷயம் நமக்கு ஏன் என கேட்பவர்கள் உண்டு. அறுபது வயசுக்கு மேல கிருஷ்ணா ராமானு இருக்கிறது தானே இருபது வயசுல இது தேவையா என சிலர் இளைஞர்களை பார்த்து கேட்பதை பார்த்திருக்கிறேன்.

ஆன்மீகம் என்பது இளம் பெண்ணை போன்றது. ஒரு இளம் பெண்ணை முதிய வயதில் திருமணம் செய்தால் எவ்வளவு சிக்கல் வருமோ அதுபோன்றது அறுபது வயது வரை ஆன்மீக நாட்டம் இல்லாமல் அதன் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடுவது.

தக்கவயதில் ஆன்மீகத்தில் ஈடுபடுவது சரியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

எனது விளக்கம்


இதயம் எனும் இருட்டு அறையில் பரமாத்மா எப்பொழுதும் ஒளியுடன் திகள்கிறது. இருள் எனும் அறியாமையில் இருக்கும் மனதை ஒளிபெறச்செய்கிறது. அவ்வாறு செய்யும் பொழுது பல குண தோஷங்களை நீக்கியும், எதிர்பாராத நிகழ்வுகள் (மருட்டி) மூலமும் 'தான்' எனும் அகந்தையை நீக்கி இருப்பது தெய்வீக திருமணம் அல்லவா? தான் எனும் அகந்தை அற்று அதனுள் ஒன்றாக இணையும் தெய்வீக திருமணத்திற்கு முயலுங்கள்.

மேற்கண்ட பாடலுக்கு ஓரளவு சரியாக விடை சொன்ன
புதுகை.எம்.எம்.அப்துல்லா
மற்றும் திருப்பூர் சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். ப்ரணவ பீடத்தில் தயாரான தியான ஆசனம் அவர்களுக்கு எனது இதயப்பரிசாக அளிக்கிறேன்.

பி.கு : எனது திருமந்திர விளக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டம் செய்யவும். மேலும் மிக நுட்பமான திருமந்திரங்களுக்கு விளக்கம் சொல்ல முயலுகிறேன்.


19 கருத்துக்கள்:

Mahesh said...

நல்ல விளக்கம். நான் இந்த "குணம் பல காட்டி" க்குதான் என்ன சரியான விளக்கமா இருக்கும்னு யோசிட்துக் கொண்டிருந்தேன். மற்றபடி ஜீவனை கிழவன் என்றும் பரமனை குமரி என்றும் புரிந்து கொண்டேன்.

தியாகராஜன் said...

ஸ்வாமி,
திருமந்திர பாடலின் விளக்கத்தை பல்வேறு கோணங்களில் விளக்கியிருக்கும் விதம் அருமை.
மொத்தத்தில் "எளிய விளக்கம்" தான் எமக்கானது.

ஷண்முகப்ரியன் said...

சிவம் அனாதி,முதியது.சரி ஆனால் ‘குருட்டுக்’ கிழவன் என்று சொல்லப் படுவதற்குத் தாங்கள் விளக்கம் தரவில்லையே ஸ்வாமிஜி?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ் உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தியாகராஜன்,

திருமந்திரம் அனைவருக்கும் ஒரு செய்தியை தாங்கி நிற்கிறது.
நமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம்.

வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

//சிவம் அனாதி,முதியது.சரி ஆனால் ‘குருட்டுக்’ கிழவன் என்று சொல்லப் படுவதற்குத் தாங்கள் விளக்கம் தரவில்லையே ஸ்வாமிஜி?//

உங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கு எனது மகிழ்ச்சி. பதிவின் நீளம் கருதி சிலவிஷயங்களை ஆழப்படுத்தவில்லை.

சிவம் என்பது நிலையானது. அனாதி.
நிச்சலம்(அசலம்).

பார்வை அற்றவர்கள் அதிகமாக உலாவரமாட்டார்கள். முதிய வயதினரும் உலாவர இயலாது.
இதில் முதிய நிலையில் பார்வையும் இல்லை என்றால் கொஞ்சம் இருக்கும் நகர்வு கூட இருக்காது.
அது போல சிவ நிலை என்பது ஆழ்ந்த நிலைத்தன்மை கொண்டது. (Stillness and Byond stillness).

என்னிடம் இருக்கும் சிறிய மொழியால் சிவத்தை இவ்வளவு தான் விளக்க முடியும்.
என் இயலாமைக்கு வருந்துகிறேன்.

Unknown said...

பன்முக கோணம் அருமை.

என்னை ஆட்கொண்ட்டீர்.

வாழ்த்துக்கள்.

Unknown said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

நிகழ்காலத்தில்... said...

//எனது திருமந்திர விளக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டம் செய்யவும். மேலும் மிக நுட்பமான திருமந்திரங்களுக்கு விளக்கம் சொல்ல முயலுகிறேன்.//

தொடர்ந்து இதுபோல் நிறைய கொடுக்கவும். பதிவுலகில் இந்தத் துறையில் சரியான விளக்கங்கள் இல்லை.

//ப்ரணவ பீடத்தில் தயாரான தியான ஆசனம் அவர்களுக்கு எனது இதயப்பரிசாக அளிக்கிறேன்.//

பரிசை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இதய பரிசு என்றவுடன் கலைஞர் ஞாபகம் வருகிறது. பரிசு வருமா?

ராமகுமரன் said...

அருமை, மேலும் பல திருமந்திரங்களின் விளக்கங்களை தாருங்கள்

நன்றி,
ராம்குமரன்

Anonymous said...

சுவாமி, பக்தி யோகா விளக்கம், அறிவியல் விளக்கம், மற்றும் எளிய விளக்கம் எனக்கு மிகவும் பிடித்து. இது போல் பல திருமந்திரத்தை கூறி அதன் அர்த்தம் விளக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

அமர பாரதி said...

ஸ்வாமி,

விளக்கம் அருமை. தொடருங்கள். கேள்விகள் எழும் போது அதற்குப் பதிலும் தர வேண்டுகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

பரிசுக்காய் என்னை தேர்ந்தெடுத்ததில் ரொம்ப நன்றி சாமி. அப்புறம் நான் விரிப்பு விரித்து தொழுகை நடத்தும் ஆசாமி. நீங்கள் அன்போடு தரும் ஆசனத்தை வைத்து என்ன செய்வது என்று அறியாதவன். இருப்பினும் உங்கள் அன்பின் அடையாளமாய் கண்டிப்பாக நான் அதைப் பெற்றுக் கொள்கின்றேன். எந்த மதத்தையும் விட அன்பு உயர்ந்தது என்று என் தந்தை அடிக்கடி சொல்வதை இங்கு நினைவு கூர்கின்றேன். மிக்க நன்றி.

:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரவிஷங்கர்,
திரு ராம் குமார்,
திரு மதுரைவீரன்,
திரு அமர பாரதி,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்...

//பரிசை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இதய பரிசு என்றவுடன் கலைஞர் ஞாபகம் வருகிறது. பரிசு வருமா?//

பரிசு நிச்சயம் உண்டு. அதை அஞ்சலில் அனுப்பவா அல்லது உங்களால் நேரில் வந்து பெற்றுக்கொள்ள முடியுமா என தனி மடலில் கூறவும்.

கலைஞர்கள் என்றாலே சொன்னதை செய்பவர்கள் தானே :)

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே முடியல...

/எந்த மதத்தையும் விட அன்பு உயர்ந்தது என்று என் தந்தை அடிக்கடி சொல்வதை இங்கு நினைவு கூர்கின்றேன். மிக்க நன்றி.//

தியானம் என்பது மதம் சார்ந்தது அல்ல.
தொழுகை ஒரு வகை தியானம் தான்.

மேலும் நான் மத ரீதியாக எதையும் கொடுக்க வில்லை. நீங்கள் தொழுகை செய்யும் பொழுது இதை உபயோகிக்கும் விதமாகவே இருக்கும்.

உங்கள் தந்தையின் உயர்ந்த கருத்துக்கு எனது வணக்கங்கள்.

பரிசை நேரில் தான் தருவேன் என்பது மட்டுமே இதில் இருக்கும் கண்டீஷன்.

ஷண்முகப்ரியன் said...

//பார்வை அற்றவர்கள் அதிகமாக உலாவரமாட்டார்கள். முதிய வயதினரும் உலாவர இயலாது.
இதில் முதிய நிலையில் பார்வையும் இல்லை என்றால் கொஞ்சம் இருக்கும் நகர்வு கூட இருக்காது.
அது போல சிவ நிலை என்பது ஆழ்ந்த நிலைத்தன்மை கொண்டது. (Stillness and Byond stillness).//

விளக்கம் அருமை ஸ்வாமிஜி.

'Stillness and Beyond stillness' க்குக் ‘குருட்டுக் கிழவன்’ என்ற உவமையைப் பயன் படுத்திய திருமூலரின் இந்த அங்கத உணர்வைத்தான் தாங்களும் உங்கள் கட்டுரைகளில் கையாள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி ஸ்வாமிஜி.

நிகழ்காலத்தில்... said...

\\பரிசு நிச்சயம் உண்டு. அதை அஞ்சலில் அனுப்பவா அல்லது உங்களால் நேரில் வந்து பெற்றுக்கொள்ள முடியுமா என தனி மடலில் கூறவும்.\\

\\பரிசை நேரில் தான் தருவேன் என்பது மட்டுமே இதில் இருக்கும் கண்டீஷன்.\\

நேரிலேயே வருகிறேன். பரிசு கிடைக்கும் என்றால் ’டில்லி’கூட
வரத் தயார்.

தேதி,நேரம் பொறுமையாக தனிமடலில்

virutcham said...

குருட்டுக் கிழவன் பற்றி விளக்கவில்லையே என்று யோசித்துக் கொண்டே பின்னூட்டம் படித்தேன். தெளிவு பெற்றேன்.

நன்றி