Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, August 9, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி நான்கு

ஸ்ரீ சக்ர புரி பகுதி 1
பகுதி 2
பகுதி 3


எனது அனுபவத்தை தெரிந்துகொள்ளும் முன் சில வார்த்தைகள்...


ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் , தனி வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதற்கு சில காரணங்கள். எனது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை தன்மையை திறந்து வைக்கும் பொழுது சிலர் அதை வியப்புடன் பார்க்கலாம், சிலருக்கு என் மேல் அதிகப்படியான மரியாதை வரலாம். இதனால் இயல்பாக அவர்களுடன் பழகும் நிலை கெட்டுவிடும் என்ற பயம் என்றும் எனக்கு உண்டு. என்னை கிண்டல் செய்தாலோ, திட்டினாலோ என்னால் கேட்க முடியும். பாராட்டும் முகாந்திரமாக யாராவது முயற்சி செய்தால் அதை வளரவிடாமல் தடுப்பேன்.

என்னால் இதை மட்டும் சகிக்க முடியாது.

எனது தந்தைக்கும் எனக்கு ஐம்பது வயது வித்தியாசம். அவருடன் என்னை பார்ப்பவர்கள் , என்னை அவரின் பேரன் என நினைப்பார்கள். ஆன்மீக வாழ்க்கையில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் அவர். ஆனால் எனது அனுபவங்களையும் ஆன்மீக மேம்பாட்டையும் முழுமையாக உணர்ந்த காரணத்தால் இயல்பான ஒரு தந்தையாக அவரால் என்னிடம் இருக்க முடியவில்லை.

ஊருக்கே வழிகாட்டிய எனது தந்தை என்னிடம் பணிவுடன் இருப்பதை என்னால் சகிக்க முடியவில்லை என்பதே உண்மை. என் ஆன்மீக அனுபவத்தை அவர் உணர்ந்ததால் தந்தையை இழந்தேன் என சொன்னால் மிகையில்லை. அத்தருணத்திலிருந்து எனக்கு ஒரு வித இறுக்கம் ஏற்பட்டது.

எனது ஆன்மீக நண்பர்கள், இந்தியாவில் பெரிய ஆன்மீகவாதிகள் என்னை உணர்ந்தாலும் என்னை வெளிப்படுத்தாதீர்கள் என வேண்டுவேன். என்னுள் எது நடந்தாலும் இயல்பாக முகபாவனையுடன் இருப்பேன். இதனால் என்னை மலைமுழுங்கி என கிண்டலாக அழைக்கும் ஆன்மீக நண்பர்கள் உண்டு.

எனது மாணவர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு கூட எனது வாழ்க்கை மற்றும் ஆன்மீக அனுபவங்களை கூறியதில்லை. அதனால் பாதகம் அதிகம் என்பது எனக்கு தெரியும். அதனால் சில மாணவர்களுடன் கிண்டலும் கேலியுமாக இருப்பது அவர்களுடன் இயல்பாக என்னை இணைத்துக்கொள்ளத்தான். எனது எழுத்தில் கூட சில நேரங்களில் நகைச்சுவை எனற பெயரில் சில கருத்துக்களை வெளியிட்டதால் தான் என்னுடன் உங்களால் இயல்பாக பேசி சில கருத்துக்களை கூறமுடிந்தது என்பேன். எனது பேச்சுக்களையும், கருத்துக்களையும் கேட்பவர்கள் எப்படி இவருக்கு இது தெரிந்தது? எங்கு படித்தார் என என்னை ஆய்வு செய்ய துவங்குவார்கள்.

நான் அவர்களுக்கு கூறுவதெல்லாம் ஒன்றுதான். என் கருத்துக்களை பிடித்து தொங்குங்கள். என்னை பிடித்து தொங்காதீர்கள் என்பேன்.

சில நாட்களுக்கு முன் எழுதிய ஜென் கவிதையிலும் இக்கருத்தை உள்ளீடு செய்தேன்.

நேரத்திற்கு தான் மதிப்பு
கடிகாரத்திற்கு அல்ல.

தேனீருக்கு தான் மதிப்பு
கோப்பைக்கு அல்ல.

இனி வரும் பகுதிகளில் தேனீருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என வேண்டுகிறேன். ஸ்ரீசக்ர புரியை எழுதாவிட்டால் என் அனுபவங்களை சொல்ல தேவை இருந்திருக்காது. காரணம் என்னுடன் அந்நகரம் என்றும் ஒரு தொடர்புடனேயே இருந்து வருகிறது.

---------------------------------------------------------------------------

அது ஒரு கோடை விடுமுறைக்காலம். மைதானத்தில் தனியே விளையாடிக்கொண்டிருந்தேன். எனது சகோதர சகோதரிகள் என்னைவிட அதிக வயது வித்தியாசம் கொண்டவர்கள் என்பதால் தனியே விளையாடுவது இயற்கையாக அமைந்துவிட்டது. வயது வித்தியாசத்தில் கடைக்குட்டியாக பிறப்பவர்களுக்கு இது இயல்புதானே..

மைதானத்தில் குழிபறித்து அதில் நீர் நிறைத்து விளையாடும் விளையாட்டு எனக்கு பிடித்த ஒன்று. அவ்வாறு அன்றும் விளையாடிக்கொண்டிருந்தேன்.

என் பின்னால் யாரோ நடந்துவருவது அவர்களின் நிழல் என்மேல் படர்வதன் மூலம் அறிந்து கொண்டேன். காலடியோசை மிக அருகில் கேட்டதனால் மெல்ல திரும்பி மேல் நோக்கி பார்த்தேன்.சூரியன் பின்னால் தெரிய ஒரு இருளான உருவம் தெரிந்தது. கண்களை கசக்கி ஆழ்ந்து பார்த்தேன்.
நன்றி -YaLE Studio

அங்கே ஒரு நடுவயது மனிதர் நின்று கொண்டிருந்தார். சட்டை அணியாத உடல்வாகு. மழிக்கப்பட்ட தலை. இடுப்பிலிருந்து முழங்கால் வரை இருக்கும் பழுப்பு நிற முக்கால் வேட்டி. கழுத்தில் சில மணிமாலைகளும், கால்களில் ஒரு கயிறும் கட்டி இருந்தார். கையில் ஒரு ஊன்று கோல் , தோளில் ஒரு பை. அதில் அளவுக்கு மீறி பொருட்கள் நிரப்பப்பட்டதால் வீங்கி காணப்பட்டது.ஒருவிதமான வாசனையுடன் என்னை நெருங்கி சினேகமாக சிரித்தார்.

“நானும் விளையாட வரவா?” என அவர் கேட்டது தான் தாமதம் விரைவாக தலையசைத்தேன். தனியாகவே விளையாடி தனியாக திரிந்த எனக்கு அவர் கேட்டது ஒரு மகிழ்ச்சியை உண்டு செய்தது.

பையை கீழே வைத்துவிட்டு என்னுடன் சேர்ந்து குழியை தோண்ட ஆரம்பித்தார். நானும் அவருடன் தோண்டி மண் எடுத்து அருகில் குவித்தேன். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவரை பார்க்கும் பொழுதெல்லாம் என்னை பார்த்து சிரித்தார்..

நீர் கொண்டு வர சென்று திரும்புகையில் அவர் குவிக்கப்பட்ட மண்னை ஒரு மலை வடிவில் செய்து என்னை பார்த்து “ நல்லா இருக்கா..” என்றார். நான் தலையசைத்துவிட்டு நீரை குழியில் ஊற்றினேன். பிறகு இன்னும் சில கைப்பிடி மண் எடுத்து அவர் செய்ததை போல மலைவடிவம் உருவாக்க முயன்றேன்.

என்னுடன் மலைவடிவம் போன்று மண் குவிக்க அவரும் உதவினார். மண்ணில் கைகளை வைத்து மலை வடிவுக்காக அழுத்தம் கொடுத்துகொண்டிருந்தாலும் என்னை பார்த்தவாறே இருந்தார். சிறிது நேரம் கழித்து...

“இந்த இடத்துக்கு போகலாமா?” என்றார்

புரியாமல் “ என்னது?” என்றேன்..

“ ஒனக்கு ஒன்னும் தெரியாது....” என்றவாரே செல்லமாக எனது தலையை தட்டினார்...

அவரின் கைகள் எனது தலையை தட்டும்பொழுது ஒரு வினாடி கண்களை மூடி திறந்தேன்..

பேசிக்கொண்டே இருக்கும் பொழுது எதிரில் இருப்பவரின் தலையை மெல்ல தட்டி பாருங்கள் கண்களை மூடி திறப்பார்கள்...

நானும் அதை செய்தேன்...ஒரு வினாடிதான் மூடி திறந்தேன்...

நான் இருந்த இடம் புதிதாக இருந்தது. நகரம் முழுவதும் தெரிந்தது. ஒரு மேடான பகுதியில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் அவரும் இருந்தால். தனிமையில் கழித்த சிறுவனுக்கு ஒருவர் ஊர் சுற்றி காட்ட கூட்டி சென்றதால் மகிழ்ச்சிதானே ஏற்படும்? அது எனக்கு ஏற்பட்டது. புதிய இடத்திற்கு வந்த பயமோ கிளர்ச்சியோ ஏற்படவில்லை..

என் கைகளை பிடித்து பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டேன்.. குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கலாம்...அத்தனை இடங்கள்..

மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சாப்பிட சொல்லி திணிப்பவர்களோ பசியோ உணரவில்லை..
அந்த இடம் எனக்கு பிடித்திருந்தது.

முதன் முதலாக நான் என் வீட்டைவிட்டும் உடலை விட்டும் பயணித்த அந்த இடம் - ஸ்ரீசக்ர புரி.

மீண்டும் நான் மைதானத்திற்கு திரும்பும் பொழுது என்னுடன் குழி தோண்டியவர் இல்லை. தோண்டப்பட்ட இரு குழிகள் நீர் நிரம்பி அப்படியே காட்சி அளித்தது. சில நிமிஷங்களே கரைந்திருந்தது என புரிந்து கொண்டேன்.

என்னுள் அனைத்தும் நிரம்பி நானே வெடித்துவிடுவேன் என்ற உணர்வு எழுந்தது... மைதானத்தை சுற்றியும் தெருவிலும் அடக்கமுடியாத உணர்வுடன் தலைதெறிக்க ஓடினேன். எனது முதுகில் ஒரு கை “பட்” என அறைந்தது.

என் அம்மா என்னை கோபத்துடன் பார்த்து, “ என்னடா ரோட்டுல ஆட்டம் வா வீட்டுக்கு” என அழைத்து சென்றார்.

அதற்கு பிறகு பலவருடம் கழித்து என் நண்பனுடன் முதன் முதலாக திருவண்ணாமலை செல்லும் பொழுது அது முற்றிலும் பழகிய இடமாக இருப்பதை உணர்வு நிலையில் புரிந்து கொண்டேன். முதலில் செல்லுபவர்கள் பயணிப்பது போல் அல்லாமல், சென்றவுடன் விரைவாக மலையில் ஏறி உச்சியை அடைந்தேன்...

ஆம்.. ஒன்பது வயதில் நான் முதன் முதலாக திருவண்ணாமலையில் கால் பதித்த இடம் அது தான். மீண்டும் என்னுள் அந்த ஆனந்தம் நிறைந்தது. கற்றுக்கொடுக்காமல் நிறைய விஷயங்கள் புலப்பட துவங்கின..மூளையின் செயல் பல்நோக்கு நிலையை அடைந்திருந்தது...

அதே நேரத்தில் நான் 'காணவில்லை' என வீட்டில் ஊர் முழுவதும் தேடிக்கொண்டிருந்தார்கள். யாருக்கும் சொல்லாமல் நண்பனுடன் திருவண்ணாமலைக்கு வந்ததை
இதற்கு முன் நான் உங்களிடமும் சொல்லவில்லை.


(தொடரும்)

11 கருத்துக்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் அவர்களுக்கு கூறுவதெல்லாம் ஒன்றுதான். என் கருத்துக்களை பிடித்து தொங்குங்கள். என்னை பிடித்து தொங்காதீர்கள் என்பேன்//

சூப்பரோ சூப்பர்!
எவர்க்குமே பொருந்தும்!
ஆன்மீகம் பேசுவார்க்கும், ஆன்மீகம் பழகுவார்க்கும் இன்னும் பொருந்தும்! :)

//இதனால் என்னை மலைமுழுங்கி என கிண்டலாக அழைக்கும் ஆன்மீக நண்பர்கள் உண்டு//

உண்மை தானே ஸ்வாமி?
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! ஸ்ரீ சக்ர புரியான அண்ணா"மலையை" நீங்கள் உங்களுக்குள் முழுங்கிக் கொள்ள வில்லையா? அப்படி என்றால் நீங்க மலை முழுங்கி தான்!
:)

//ஒன்பது வயதில் நான் முதன் முதலாக திருவண்ணாமலையில் கால் பதித்த இடம் அது தான். மீண்டும் என்னுள் அந்த ஆனந்தம் நிறைந்தது//

நீங்காத ஆனந்தம் நிறைந்து ஏல்-ஓர் எம்பாவாய்!
அண்ணாமலையைத் தொலைவில் இருந்து "பார்ப்பது" ஒரு ஆனந்தம் என்றால், கால் பதிப்பது ஒரு ஆனந்தம்! அந்தக் காற்றை மூச்சுள் இழுப்பதும் ஒரு ஆனந்தம்!

Mahesh said...

அருணாச்சலேஸ்வரா !!! எல்லாம் அவன் செயல்.....

ஷண்முகப்ரியன் said...

ரமண மகரிஷியின் அனுபவத்தைப் போல இருக்கிறது ஸ்வாமி,தங்கள் அனுபவங்கள்.
நான் கதையாகக் கற்பனை பண்ணியதை உங்கள் மூலம் நேரடி வாழ்க்கையாகக் கேட்கிறேன்.
உங்கள் அந்தரங்க நிகழ்வுகளின் உட்புற அர்த்தங்களையும் கூடவே எழுதினால் என் போன்ற பல ஆன்மீக அப்ரண்டிஸ்களுடைய மனம் தெளியும்.
உங்களைப் பகிர்வதில் பேறு பெற்றோம்.இறையருளுக்கு நன்றி.

நிகழ்காலத்தில்... said...

\\எனது தந்தைக்கும் எனக்கு ஐம்பது வயது வித்தியாசம். \\

அதனாலேயே ஓம்கார் நமக்கு கிடைத்துள்ளார்., ஒருவேளை 30 வருட வித்தியாசம் என்றால் ஓம்கார் பிறந்த இடம் வேறாக இருந்திருக்கும்.இவர் ஓம்காராக இருந்திருக்க மாட்டார்.

\\என் ஆன்மீக அனுபவத்தை அவர் உணர்ந்ததால் தந்தையை இழந்தேன் என சொன்னால் மிகையில்லை. அத்தருணத்திலிருந்து எனக்கு ஒரு வித இறுக்கம் ஏற்பட்டது.\\

எங்களைப் போல் சாதரணன் ஆக இருக்காதீர்கள். நீங்கள் ஓம்கார்:))

எம்.எம்.அப்துல்லா said...

ஓருமுறை ”என்னை யார் ஹிந்து என்று சொன்னது?” எனச் சொன்னீர்கள். அர்த்தம் இன்று தெளிவாகப் புரிகின்றது. இந்தத் தொடரை ஓருமணி நேரத்திற்கு ஒரு பகுதியாக வெளியிடக்கூடாதா??

:)

எம்.எம்.அப்துல்லா said...

//எனது எழுத்தில் கூட சில நேரங்களில் நகைச்சுவை எனற பெயரில் சில கருத்துக்களை வெளியிட்டதால் தான் என்னுடன் உங்களால் இயல்பாக பேசி சில கருத்துக்களை கூறமுடிந்தது என்பேன்

//

உண்மைதான்.உங்களை சாமின்னு நினைச்சு இருந்தா நான் இந்தப்பக்கமே வந்துருக்கமாட்டேன்.நம்மள மாதிரி மொக்கைச்சாமின்னு நினைச்சதாலதான் இந்தப் பக்கமே வந்தேன்.

:)))))

கோவி.கண்ணன் said...

நீங்கள் கதையை யாரிடமும் சொல்லாமல் பாபா படம் எப்படி எடுத்தார்கள் ?

:)

கோவி.கண்ணன் said...

//உண்மைதான்.உங்களை சாமின்னு நினைச்சு இருந்தா நான் இந்தப்பக்கமே வந்துருக்கமாட்டேன்.நம்மள மாதிரி மொக்கைச்சாமின்னு நினைச்சதாலதான் இந்தப் பக்கமே வந்தேன்.

:)))))//

ரிப்பீட்டே

ஸ்வாமி ஓம்கார் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

பின்னூட்டத்தில் கருத்துபகிர்வு இல்லாமல் பாராட்டு முகமாக இருப்பதால் அனைவருக்கும் நன்றிகளை மட்டும் தெரிவித்துகொள்கிறேன்.

மொக்கச்சாமி
ஸ்வாமி ஓம்கார்

Anonymous said...

சுவாமிகளுக்கு ஏது பெற்றோர்கள்? எல்லோரும் நண்பர்கள் தானே? நண்பர்களில் பெரிய நண்பர்கள் சிறிய நண்பர்கள் என்று ஒன்றும் இல்லையே? என்னுடைய தாழ்மையான கருத்து. தங்கள் சுய சரிதை மிகவும் அருமை! இதுவரை நான் என் வாழ்கையில் திருவண்ணாமலை சென்றதில்லை, அதன் காரணம் இதுதான் போல - திருவன்னமலையின் அருமை நன்றாக தெரிந்த பின்னர் செல்ல வேண்டும் என்பது! கடவுள், புண்ணிய ஸ்தலங்களை பற்றி போன வருடம் வரை எதுவும் தெரியாதவன்ஆகா இருந்தேன். உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்தபின் பல ஆழ்ந்த கருத்துக்களை தெரிந்துகொண்டேன். எல்லாம் கடவுள் காட்டிய வழி, நான் தற்செயலாக உங்கள் பதிவை வந்து அடைந்தது (அது இன்று தற்செயலாக தெரியவில்லை!) தேடுபவர்களுக்கு என்றும் கடவுள் வழி காட்டுவார் என்ற நம்பக்கை மிகவும் அதிகம் ஆகி உள்ளது.

வடுவூர் குமார் said...

உங்களை யாரோ ஒருவர் அழைத்துப்போன மாதிரி என்னுடைய நண்பருக்கு பல முறை ஒரே கனவு திரும்ப திரும்ப வந்ததாம் அதில் குகை அதனுள் பலர் ஏதோ முனுமுனுப்பது போலவும் ஆனால் அந்த இடத்தை இது வரை நேரில் கண்டதில்லை என்றும் சொன்னார்.பிறகு சில நாட்கள் வேறு யாரிடமோ பேசிக்கொண்டிருகும் போது அந்த மாதிரி குகைகள் திருவண்ணாமலையில் உள்ளதாக கேள்விப்பட்டாராம்.அவர் முலம் தான் தியானம் என்று இருப்பதும் அதன் பலன் என்னவென்று சொல்லிக்கொடுத்தார்.இரவு வேலை போது அவ்வப்போது கிடைக்கும் இடைவெளியில் இவற்றை பற்றி என்னிடம் மட்டும் சொல்லவேண்டிய காரணம்??? - இதுவரை தெரியவில்லை.