Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, August 11, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஆறு


திருவண்ணாமலை ஒரு காந்தம் போன்றது. ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கும். திருவண்ணாமலைக்கு ஒருமுறைமட்டும் தான் சென்றேன் என்பவர்கள் அரிது. ஒன்று போகாதவர்கள் இருப்பார்கள். இல்லை நிறைய முறை போனவர்கள் இருப்பார்கள். ஒரு முறை மட்டும் கிரிவலம் சென்றவர்கள் என யாரையும் காண முடியாது. கிரிவலத்திற்கு அப்படி ஒரு அசாத்தியமான காந்த சக்தி உண்டு.

சூரியன் வெடித்து சிதறி சூரியமண்டலமாக உருவாகும் பொழுது பூமி நெருப்பு கோளமாக இருந்தது. பிறகு கால மாற்றத்தால் குளிர்ந்து இறுகி பூமியாக மாற்றம் அடைந்தது. அப்படி உருவாகும் பொழுது முதலில் நெருப்பிலிருந்து உருவான இடம் திருவண்ணாமலை. அருணாச்சல மஹாத்மியம் எனும் புராணம் இதை விளக்குகிறது. நவீன காலத்தில் அருணாச்சல மலையை அகழ்வாராய்து மிகப்பழமையான கல் என உறுதி செய்திருக்கிறார்கள்.

அருணாச்சல மலை 800 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் அதன் கீழ்பகுதி எவ்வளவு தூரம் ஆழம் செல்லும் என்பது கண்டறிவது கடினம். பிரம்மாவை போல இல்லாமல் ஆணவம் இன்றி செல்லுபவர்க்கு அருணாச்சலத்தின் முடி தெரிந்துவிடுகிறது. ஆனால் மஹாவிஷ்ணுவைப் போல அடியை இன்றும் யாரும் காண முடியவில்லை.

நான்கு யுகத்திலும் அருணாச்சல மலை வெவ்வேறாக காட்சி அளித்ததாம். கிருதா யுகத்தில் தங்கமாகவும், த்ருதாயுகத்தில் வெள்ளியாகவும், துவாபர யுகத்தில் செம்பாகவும், கலியுகத்தில் இரும்பாகவும் இம்மலை இருக்கும் என அருணாச்சல மஹாத்மியம் கூறுகிறது. இக்கருத்தை உண்மையாக்கும் வகையில் அருணாச்சல மலையின் சில கற்கள் ஈரக்காற்றில் துருப்பிடித்து இருப்பதை காண முடியும். நம் உடையில் காவியை பூசி முனிவராக்கும் இறைவனின் திருவினையோ என நினைக்கத் தோன்றும்.

அத்தகைய இறைவனின் இருப்பிடத்திற்கு எனக்கு இறைவன் அளித்த பணியாக பயணத்திற்கு தயாரானேன். இரண்டு ஜோடி வேட்டிகள் மற்றும் ஒரு புத்தகம் இது மட்டுமே எனது பையில் இருந்தது. எனது உடமைகள் முழுமையாக சோதனையிட்டு எண்ணிடம் பணம் இல்லை என்பதை எனது நண்பர்கள் முடிவு செய்து கொண்டார்கள். கோவை பேருந்து நிலையத்தில் என்னை இறக்கிவிட்டு சிறிது தூரம் இருக்கும் கடையில் நின்று என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

இறைவன் மேல் இருக்கும் ஆழமான விஸ்வாசத்தில் கிளம்பிவிட்டேன். இருந்தாலும் பேருந்து நிலையத்தில் படபடப்பு என்னை பற்றிக்கொண்டது. திருவண்ணாமலை சென்று விட்டால் பிரச்சனை இல்லை. அங்கே பரந்துவிரிந்த உலகம் ஏதாவது மரத்தடியில் இருந்துகொள்ளலாம். ஆனால் இங்கிருந்து அங்கே செல்ல வேண்டுமே? பேருந்தில் பணம் இல்லாமல் போக முடியுமா? எனக்கு குழப்பம் பற்றிக்கொண்டது. என்னை வழியனுப்ப வந்தவர்கள் தூரத்தில் நின்று வேடிக்கைபார்த்தது மேலும் ஒரு படபடப்புக்கு காரணானது.

மனதுக்குள் இறைவனை வேண்டிய படியே பேருந்துக்கு அருகில் சென்றேன். திடிரென ஒரு வயதானவர் குறிக்கிட்டு “சாமீ எங்க போறீங்க” என்றார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. திருவண்ணாமலைக்கு என்றேன். அப்படியா நான் சேலம் போறேன். உங்க ஆசிர்வாதத்தால என் பொண்ணு கல்யாணம் நடந்துச்சு , இவர்தான் என் மாப்பிளை என அவர் காட்டியது நான் ஏற இருந்த திருவண்ணாமலை பேருந்தின் நடத்துனரை. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் விட்டு போனது. இறைவா என்னை அழைத்துவந்து அவமானபடுத்துகிறாயே.. என கலங்கினேன்.

என்னிடம் பணம் இல்லை என்பது தெரிந்து என்னை தவறாக நினைத்துவிடுவாரோ என்ற எண்ணம். பேருந்து தூரத்தில் இருந்தது. இந்த பெரியவரை தவிர்க்க இரண்டடி தள்ளி நின்று வேறு திசையில் வேடிக்கை பார்க்க துவங்கினேன். அந்த பெரியவரும் நடந்து வேறு திசைக்கு சென்றுவிட்டார். அந்த திருவண்ணாமலை பேருந்து மெல்ல ஊர்ந்து செல்ல துவங்கியது.

மீண்டும் வந்த அந்த பெரியவர் சாமீ பஸ்சு போகுது ஏறலையா? என்றார். இல்லை அடுத்த பஸ்ஸில போறேன் என்றேன். இல்ல சாமீ உங்களுக்காக டிக்கெட் போட்டுட்டேன் , இந்த பஸ்ஸிலயே போங்க என்றவாறே கையில் பேருந்து பயண சீட்டை திணித்தார். பேருந்து வேகம் எடுக்கவே ஓடி சென்று ஏறினேன். என்னை கையசைத்து வழியனுப்பினார் அந்த பெரியவர். தூரத்தில் என் நண்பர்கள் என்னை வியாப்புடன் பார்த்தவாறே இருக்க பேருந்து திருவண்ணாமலையை நோக்கி பயணித்தது. டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பித்து பிறகு நிம்மதியாக உறங்கிப்போனேன்.

காலை நான்கு மணிக்கு திருவண்ணாமலையின் தென்பகுதியில் ரமணாஸ்ரமம் முன் இறங்கினேன். நடத்துனரை பார்த்து ரொம்ப நன்றிங்க, உங்க மாமனாருக்கும் நன்றி சொன்னேனு சொல்லுங்க என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தவர். யாரு மாமனாரு? என் மாமனாரு எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே காலமாயிட்டாரு. ஏன் சாமி காலையில குழப்பறீங்க என்றார்.

அவருக்கு குழப்பமான விஷயம் எனக்கு புரிந்தது....

பேருந்து சென்றவுடன் அருணாச்சல மலையை பார்த்து நன்றியுடன் வணங்கினேன். திருவண்ணாமலையில் இது ஒரு சிறப்பு. நகரின் எந்த மூலையிலிருந்தும் இறைவனை தரிசிக்கலாம்.

ரமணாசிரமம் வாயிலில் இறங்கி வெளியில் இருந்தவாறே ரமணரை தொழுதேன். மெல்ல நடந்து அந்த பிரம்ம முஹூர்த்த வேளையில் அக்னி தீர்த்தம் எனும் குளத்திற்கு சென்று நீராடினேன்.

உலகின் எட்டு திக்கும் ஒவ்வொரு தேவதைகள் காப்பதாக புராணம் கூறுகிறது. அவர்களை அஷ்டதிக்கு பாலகர்கள் என்பார்கள். என்திசை தேவர் என்று பதிகங்களிலும் கூறுவர். திருவண்ணாமலையில் எட்டுதிசைக்கு உரிய தேவர்களையும் லிங்க ரூபமாகவே வைத்திருக்கிறார்கள். அது தவிர ஒன்பதாவது லிங்கமாக அருணாச்சல மலை நடுநாயகமாக நகரை சக்தியூட்டி வருகிறது.

அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு அங்கே இருக்கும் அக்னி லிங்கத்தை வணங்கி எனது பிரம்ம முஹூர்த்த கிரிவலத்தை ஆரம்பித்தேன்.கிரிவலம் வர ஏற்ற காலம் எது என்றால் பிரம்ம முஹுர்த்தம் என்பேன். எட்டு திசையில் தென் திசை எமன் என்ற மரண தேவனால் நிர்வகிக்கப்படுகிறது. மெல்ல நடக்க துவங்கினேன்.

தென்திசைக்காவலர் எமனும் என்னுடன் கிரிவலம் வருகிறார் என்று அப்பொழுது எனக்கு தெரியாது.

(தொடரும்)

Monday, August 10, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஐந்து


எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி ஊடே தொடர்மூலம்

செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்

நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.

----------------------------------------------------திருமந்திரம்
857

என் ஆன்மீக நண்பருடன் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தேன். அவர் இன்று இரவு நான் திருவண்ணாமலை செல்கிறேன் என சொன்னதும் எனது உடலில் ஒரு வித தவிப்பு ஏற்பட்டது. எனக்கு கிடைக்க வேண்டிய ஏதோ ஒன்றை அவர் மட்டும் எடுத்து செல்ல இருப்பது போல ஒரு தவிப்பு. தயங்கியபடியே நானும் வரவா என்றேன். அவர் வாருங்கள் செல்லுவோம் என்றார். அவ்வளவுதான் என் சூழல் மறந்து அவருடன் சென்றுவிட்டேன். வீட்டில் சொல்லும் அளவுக்கு மனம் செயல் நிலையில் இல்லை என்பதே உண்மை.

மூன்று தினங்கள் கழித்து திரும்ப வரும்பொழுது அவர்களின் வருத்தத்தை புரிந்துகொண்டேன். என் இளவயது முதலே இப்படிபட்ட செயலை நான் செய்வேன் என எதிர்பார்த்தார்கள். அப்பொழுது நான் இப்படி செய்யவில்லை. அவர்கள் இவன் போகமாட்டான் என நினைக்கும் சமயம் கிளம்பி சென்றதால் அவர்களுக்கு குழப்பமாக இருந்திருக்க வேண்டும்.

இன்றும் கூட நான் சிலநாட்கள் காணவில்லை என்றால் என்னை அவர்கள் தேடும் இடம் திருவண்ணாமலையாகத்தான் இருக்கும். வருடத்தில் பலமுறை நான் செல்லும் இடம் என்றால் அது அருணாச்சலகிரி என்றே சொல்லுவேன்.

எனது ஒன்பது வயதில் ஏற்பட்ட அனுபவம் அதற்கு பிறகும் பலமுறை வெவ்வேறு நிலையில் உலகின் பல்வேறு சக்திவாய்ந்த இடங்களை நோக்கி ஏற்பட்டாலும் முதல் அனுபவம் எப்பொழுதும் ஒரு தனிசுவைதானே?

புனிதபயணம் சென்றுவரும் எனது நண்பர்கள், மாணவர்களிடம் அங்கே இதை பார்த்தீர்களா அதை பார்த்தீர்களா என நான் கேட்கும்பொழுது என்னை மேலும் கீழும் பார்ப்பார்கள். கோவையை விட்டு நகர்ந்ததில்லை ஆனால் 'இது' அளந்துவிடுகிறதே என அவர்கள் சந்தேகப்படுவார்கள்.

நான் சொல்லுவது அனைவரும் நம்பவேண்டும் என கட்டாயம் இல்லை. காரணம் நம்பிக்கையின்மை என்பதும் சில தெய்வீக காரணத்தால்தான். வரும் பகுதிகளில் இது உங்களுக்கு புரியும்.

சில வருடத்திற்கு முன் ஆன்மீக அன்பர்களும் அவர்கள் சார்ந்தவர்களுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது பேச்சு பரமஹம்ஸ யோகானந்தரை பற்றி திரும்பியது. அவர் இந்தியாவின் ஆன்மீக யோகிகளில் சிறந்தவர்.

யோகியின் சுயசரிதை எனும் புத்தகத்தின் மூலம் பலருக்கு ஆன்மீக உணர்வை ஊட்டியவர். தன் வாழ்க்கையில் நடந்த ஆன்மீக விஷயத்தை வெளிப்படையாக அவர் சொன்னது நல்ல விஷயமாக இருந்தாலும் சில நிலையில் அது பிறரை தவறான வழியில் இட்டுச்சென்றது.

ஆன்மீகத்தை அமானுஷத்துடன் தொடர்பு கொள்ள செய்தது எனலாம். இவ்வாறு அந்த புத்தகத்தை பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுது அதில் உங்களுக்கு பிடித்த பகுதி எது என கேட்டார்கள்.

யோகானந்தரின் அண்ணன் அவரை வேலை செய்து பணம் சம்பாதிக்க சொல்லுவார். பணம் வாழ்க்கையில் முக்கியம் இல்லை என்பார் யோகானந்தர். கையில் ஒரு பைசா இல்லாமல் பிருந்தாவனம் செல்ல முடியுமா என அவர் அண்ணன் கேட்க கடவுள் கிருபையால் பணம் இல்லாமல் பிருந்தாவனத்திற்கு செல்லுவார். இந்த பகுதி எனக்கு பிடிக்கும் என்றேன். இதை சொல்லும் பொழுது எனக்கு தெரியாது என் நடுநாக்கில் சனி என்று....!


விவாதம் சூடுபிடித்தது. அவர்கள் சொன்னார்கள் கேட்க சுவாரசியமாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தினார்கள். கடவுள் மேல் ஆழந்த நம்பிக்கை இருந்தால் என்றும் சாத்தியமே என கூறினேன்.

நீங்கள் எங்களுக்கு இவ்வாறு செய்து எங்களுக்கு நிரூபிக்க முடியுமா என்றார்கள்.
எனக்கு எங்கிருந்து அந்த வேகம் வந்ததோ தெரியாது . சரி என்றேன். நான் கடவுளை நிரூபிக்க சரி என சொல்ல வில்லை; எனக்கு இறைவன் மேல் இருக்கும் நம்பிக்கையை நிரூபணம் செய்யவே சரி என்றேன்.

இடம் திருவண்ணாமலை என முடிவு செய்யப்பட்டது. நாள் குறிக்கப்பட்டது. அவர்கள் சொன்ன சவால் இது தான்.

கோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று மூன்று நாட்கள் இருந்துவிட்டு திரும்பி வரவேண்டும். ஆனால் கையில் ஒரு பைசா கொண்டு செல்ல கூடாது.


அந்த நாளும் நெருங்கியது...

நிற்க. என்னடா ஸ்ரீசக்ர புரியை பற்றி எழுத சொன்னால் இவரின் சொந்தகதை சோக கதையை எழுதுகிறாரே என கேட்பவர்களுக்கு.... கையில் பணத்துடன் செல்லுவது ஒரு ரகம், ஒரு பைசா இல்லாமல் பிச்சைக்காரனைவிட மோசமான சூழலில் திருவண்ணாமலை தரிசனம் செய்வது ஒரு தனி சுவை. அவ்வாறு பரதேசியாக நான் திருவண்ணாமலையில் மூன்று தினங்கள் பல இடங்களுக்கு சென்றேன்.

மூன்று தினங்கள் நான் பார்த்த இடங்களை உங்களுக்கு சுற்றிகாட்டுகிறேன். இயல்பான சூழலில் தரிசிக்காத இடங்களும் அதில் அடக்கம். வாருங்கள் திருவண்ணாமலையை தரிசிக்க கிளம்புவோம்... எனக்கு நடந்த இறைவனின் திருவிளையாடலை ரசித்தபடியே...

(தொடரும்)

ஸ்ரீ சக்ர புரி பகுதி 1
பகுதி 2
பகுதி 3

பகுதி 4

Sunday, August 9, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி நான்கு

ஸ்ரீ சக்ர புரி பகுதி 1
பகுதி 2
பகுதி 3


எனது அனுபவத்தை தெரிந்துகொள்ளும் முன் சில வார்த்தைகள்...


ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் , தனி வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதற்கு சில காரணங்கள். எனது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை தன்மையை திறந்து வைக்கும் பொழுது சிலர் அதை வியப்புடன் பார்க்கலாம், சிலருக்கு என் மேல் அதிகப்படியான மரியாதை வரலாம். இதனால் இயல்பாக அவர்களுடன் பழகும் நிலை கெட்டுவிடும் என்ற பயம் என்றும் எனக்கு உண்டு. என்னை கிண்டல் செய்தாலோ, திட்டினாலோ என்னால் கேட்க முடியும். பாராட்டும் முகாந்திரமாக யாராவது முயற்சி செய்தால் அதை வளரவிடாமல் தடுப்பேன்.

என்னால் இதை மட்டும் சகிக்க முடியாது.

எனது தந்தைக்கும் எனக்கு ஐம்பது வயது வித்தியாசம். அவருடன் என்னை பார்ப்பவர்கள் , என்னை அவரின் பேரன் என நினைப்பார்கள். ஆன்மீக வாழ்க்கையில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் அவர். ஆனால் எனது அனுபவங்களையும் ஆன்மீக மேம்பாட்டையும் முழுமையாக உணர்ந்த காரணத்தால் இயல்பான ஒரு தந்தையாக அவரால் என்னிடம் இருக்க முடியவில்லை.

ஊருக்கே வழிகாட்டிய எனது தந்தை என்னிடம் பணிவுடன் இருப்பதை என்னால் சகிக்க முடியவில்லை என்பதே உண்மை. என் ஆன்மீக அனுபவத்தை அவர் உணர்ந்ததால் தந்தையை இழந்தேன் என சொன்னால் மிகையில்லை. அத்தருணத்திலிருந்து எனக்கு ஒரு வித இறுக்கம் ஏற்பட்டது.

எனது ஆன்மீக நண்பர்கள், இந்தியாவில் பெரிய ஆன்மீகவாதிகள் என்னை உணர்ந்தாலும் என்னை வெளிப்படுத்தாதீர்கள் என வேண்டுவேன். என்னுள் எது நடந்தாலும் இயல்பாக முகபாவனையுடன் இருப்பேன். இதனால் என்னை மலைமுழுங்கி என கிண்டலாக அழைக்கும் ஆன்மீக நண்பர்கள் உண்டு.

எனது மாணவர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு கூட எனது வாழ்க்கை மற்றும் ஆன்மீக அனுபவங்களை கூறியதில்லை. அதனால் பாதகம் அதிகம் என்பது எனக்கு தெரியும். அதனால் சில மாணவர்களுடன் கிண்டலும் கேலியுமாக இருப்பது அவர்களுடன் இயல்பாக என்னை இணைத்துக்கொள்ளத்தான். எனது எழுத்தில் கூட சில நேரங்களில் நகைச்சுவை எனற பெயரில் சில கருத்துக்களை வெளியிட்டதால் தான் என்னுடன் உங்களால் இயல்பாக பேசி சில கருத்துக்களை கூறமுடிந்தது என்பேன். எனது பேச்சுக்களையும், கருத்துக்களையும் கேட்பவர்கள் எப்படி இவருக்கு இது தெரிந்தது? எங்கு படித்தார் என என்னை ஆய்வு செய்ய துவங்குவார்கள்.

நான் அவர்களுக்கு கூறுவதெல்லாம் ஒன்றுதான். என் கருத்துக்களை பிடித்து தொங்குங்கள். என்னை பிடித்து தொங்காதீர்கள் என்பேன்.

சில நாட்களுக்கு முன் எழுதிய ஜென் கவிதையிலும் இக்கருத்தை உள்ளீடு செய்தேன்.

நேரத்திற்கு தான் மதிப்பு
கடிகாரத்திற்கு அல்ல.

தேனீருக்கு தான் மதிப்பு
கோப்பைக்கு அல்ல.

இனி வரும் பகுதிகளில் தேனீருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என வேண்டுகிறேன். ஸ்ரீசக்ர புரியை எழுதாவிட்டால் என் அனுபவங்களை சொல்ல தேவை இருந்திருக்காது. காரணம் என்னுடன் அந்நகரம் என்றும் ஒரு தொடர்புடனேயே இருந்து வருகிறது.

---------------------------------------------------------------------------

அது ஒரு கோடை விடுமுறைக்காலம். மைதானத்தில் தனியே விளையாடிக்கொண்டிருந்தேன். எனது சகோதர சகோதரிகள் என்னைவிட அதிக வயது வித்தியாசம் கொண்டவர்கள் என்பதால் தனியே விளையாடுவது இயற்கையாக அமைந்துவிட்டது. வயது வித்தியாசத்தில் கடைக்குட்டியாக பிறப்பவர்களுக்கு இது இயல்புதானே..

மைதானத்தில் குழிபறித்து அதில் நீர் நிறைத்து விளையாடும் விளையாட்டு எனக்கு பிடித்த ஒன்று. அவ்வாறு அன்றும் விளையாடிக்கொண்டிருந்தேன்.

என் பின்னால் யாரோ நடந்துவருவது அவர்களின் நிழல் என்மேல் படர்வதன் மூலம் அறிந்து கொண்டேன். காலடியோசை மிக அருகில் கேட்டதனால் மெல்ல திரும்பி மேல் நோக்கி பார்த்தேன்.சூரியன் பின்னால் தெரிய ஒரு இருளான உருவம் தெரிந்தது. கண்களை கசக்கி ஆழ்ந்து பார்த்தேன்.
நன்றி -YaLE Studio

அங்கே ஒரு நடுவயது மனிதர் நின்று கொண்டிருந்தார். சட்டை அணியாத உடல்வாகு. மழிக்கப்பட்ட தலை. இடுப்பிலிருந்து முழங்கால் வரை இருக்கும் பழுப்பு நிற முக்கால் வேட்டி. கழுத்தில் சில மணிமாலைகளும், கால்களில் ஒரு கயிறும் கட்டி இருந்தார். கையில் ஒரு ஊன்று கோல் , தோளில் ஒரு பை. அதில் அளவுக்கு மீறி பொருட்கள் நிரப்பப்பட்டதால் வீங்கி காணப்பட்டது.ஒருவிதமான வாசனையுடன் என்னை நெருங்கி சினேகமாக சிரித்தார்.

“நானும் விளையாட வரவா?” என அவர் கேட்டது தான் தாமதம் விரைவாக தலையசைத்தேன். தனியாகவே விளையாடி தனியாக திரிந்த எனக்கு அவர் கேட்டது ஒரு மகிழ்ச்சியை உண்டு செய்தது.

பையை கீழே வைத்துவிட்டு என்னுடன் சேர்ந்து குழியை தோண்ட ஆரம்பித்தார். நானும் அவருடன் தோண்டி மண் எடுத்து அருகில் குவித்தேன். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவரை பார்க்கும் பொழுதெல்லாம் என்னை பார்த்து சிரித்தார்..

நீர் கொண்டு வர சென்று திரும்புகையில் அவர் குவிக்கப்பட்ட மண்னை ஒரு மலை வடிவில் செய்து என்னை பார்த்து “ நல்லா இருக்கா..” என்றார். நான் தலையசைத்துவிட்டு நீரை குழியில் ஊற்றினேன். பிறகு இன்னும் சில கைப்பிடி மண் எடுத்து அவர் செய்ததை போல மலைவடிவம் உருவாக்க முயன்றேன்.

என்னுடன் மலைவடிவம் போன்று மண் குவிக்க அவரும் உதவினார். மண்ணில் கைகளை வைத்து மலை வடிவுக்காக அழுத்தம் கொடுத்துகொண்டிருந்தாலும் என்னை பார்த்தவாறே இருந்தார். சிறிது நேரம் கழித்து...

“இந்த இடத்துக்கு போகலாமா?” என்றார்

புரியாமல் “ என்னது?” என்றேன்..

“ ஒனக்கு ஒன்னும் தெரியாது....” என்றவாரே செல்லமாக எனது தலையை தட்டினார்...

அவரின் கைகள் எனது தலையை தட்டும்பொழுது ஒரு வினாடி கண்களை மூடி திறந்தேன்..

பேசிக்கொண்டே இருக்கும் பொழுது எதிரில் இருப்பவரின் தலையை மெல்ல தட்டி பாருங்கள் கண்களை மூடி திறப்பார்கள்...

நானும் அதை செய்தேன்...ஒரு வினாடிதான் மூடி திறந்தேன்...

நான் இருந்த இடம் புதிதாக இருந்தது. நகரம் முழுவதும் தெரிந்தது. ஒரு மேடான பகுதியில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் அவரும் இருந்தால். தனிமையில் கழித்த சிறுவனுக்கு ஒருவர் ஊர் சுற்றி காட்ட கூட்டி சென்றதால் மகிழ்ச்சிதானே ஏற்படும்? அது எனக்கு ஏற்பட்டது. புதிய இடத்திற்கு வந்த பயமோ கிளர்ச்சியோ ஏற்படவில்லை..

என் கைகளை பிடித்து பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டேன்.. குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கலாம்...அத்தனை இடங்கள்..

மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சாப்பிட சொல்லி திணிப்பவர்களோ பசியோ உணரவில்லை..
அந்த இடம் எனக்கு பிடித்திருந்தது.

முதன் முதலாக நான் என் வீட்டைவிட்டும் உடலை விட்டும் பயணித்த அந்த இடம் - ஸ்ரீசக்ர புரி.

மீண்டும் நான் மைதானத்திற்கு திரும்பும் பொழுது என்னுடன் குழி தோண்டியவர் இல்லை. தோண்டப்பட்ட இரு குழிகள் நீர் நிரம்பி அப்படியே காட்சி அளித்தது. சில நிமிஷங்களே கரைந்திருந்தது என புரிந்து கொண்டேன்.

என்னுள் அனைத்தும் நிரம்பி நானே வெடித்துவிடுவேன் என்ற உணர்வு எழுந்தது... மைதானத்தை சுற்றியும் தெருவிலும் அடக்கமுடியாத உணர்வுடன் தலைதெறிக்க ஓடினேன். எனது முதுகில் ஒரு கை “பட்” என அறைந்தது.

என் அம்மா என்னை கோபத்துடன் பார்த்து, “ என்னடா ரோட்டுல ஆட்டம் வா வீட்டுக்கு” என அழைத்து சென்றார்.

அதற்கு பிறகு பலவருடம் கழித்து என் நண்பனுடன் முதன் முதலாக திருவண்ணாமலை செல்லும் பொழுது அது முற்றிலும் பழகிய இடமாக இருப்பதை உணர்வு நிலையில் புரிந்து கொண்டேன். முதலில் செல்லுபவர்கள் பயணிப்பது போல் அல்லாமல், சென்றவுடன் விரைவாக மலையில் ஏறி உச்சியை அடைந்தேன்...

ஆம்.. ஒன்பது வயதில் நான் முதன் முதலாக திருவண்ணாமலையில் கால் பதித்த இடம் அது தான். மீண்டும் என்னுள் அந்த ஆனந்தம் நிறைந்தது. கற்றுக்கொடுக்காமல் நிறைய விஷயங்கள் புலப்பட துவங்கின..மூளையின் செயல் பல்நோக்கு நிலையை அடைந்திருந்தது...

அதே நேரத்தில் நான் 'காணவில்லை' என வீட்டில் ஊர் முழுவதும் தேடிக்கொண்டிருந்தார்கள். யாருக்கும் சொல்லாமல் நண்பனுடன் திருவண்ணாமலைக்கு வந்ததை
இதற்கு முன் நான் உங்களிடமும் சொல்லவில்லை.


(தொடரும்)

Friday, August 7, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி மூன்று

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே.

-திருமந்திரம் -88.


லிங்கோத்பவராக இருக்கும் இறைவனின் புராண சம்பவத்தை உணரவேண்டுமானால் நம் உடலில் இருக்கும் நாடிகளை பற்றி தெரிந்துகொள் வேண்டும். நாடிகளை பற்றிய சாஸ்திரம் ”ஸ்வர சாஸ்திரம்” என அழைக்கப்படுகிறது. சரி அவற்றை சற்று விரிவாக பார்ப்போம். நிமிர்ந்து உட்கார்ந்துக் கொள்ளுங்கள்.

நாடி என்பது பரவலாக நம்மிடையே தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம். நரம்புகள் என்பது எப்படி இரத்தத்தை கடத்த உதவுகிறதோ அது போல உடலில் இருக்கும் ஆற்றலை கடத்த உதவுவது நாடிகள். கை மணிக்கட்டில் துடிப்புடன் இருப்பதை நாடி என்பார்கள் அது போல உடலில் அனேக ஆற்றல் புள்ளிகள் உண்டு.

நம் சாஸ்திரத்தில் மொத்த நாடிகள் 72,000 என கூறப்படுகிறது. அது என்ன கணக்கு 72000 என்றால் நம் உடலில் இருக்கும் நாடிகள் ஒரு நிமிடத்திற்கு அறுபது என வேலை செய்யும். அவ்வாறு ஒரு நாளில் 20 உடல் உறுப்புக்களை செயல்படுத்த தேவையானது 72,000 நாடிகளாகும். (3600 X 20)

அத்தகைய நாடிகள் உடலில் சில இடங்களில் தொடர்பு புள்ளிகளை (connection point) ஏற்படுத்துகிறது. அதன் எண்ணிக்கை 108. இந்த புள்ளிகள் நாடிகளின் சலனத்தை மாற்றும் இணைப்புக்கள். 108 புள்ளிகளை மேம்படுத்தவே 108 மணிமாலைகளில் ஜபம் செய்வது, சடங்குகளில் 108 எண்ணிக்கையை வைத்துகொள்வது என்பதை கடைபிடிக்கிறோம்.

பன்னிரண்டு ராசிகள் மற்றும் ஒன்பது கிரகங்களின் இணைவு (12X9=108) என
பிரபஞ்சத்தில் 108 புள்ளிகளை உருவாக்கி மனித உடலில் அந்த 108 புள்ளிகளையும் இணைக்கிறது. 108 நாடிகளில் முக்கியமானது மூன்று நாடிகள் அவை சூட்சுமனான கண்களுக்கு தெரியாத நாடிகளாகும். நமது உடலின் இடபாகத்தில் ஒரு நாடியும், வலது பாகத்தில் ஒரு நாடியும் இயங்கிவரும்.

இடது பக்கத்தில் இருக்கும் நாடி ஈடா நாடி என்றும் வலப்பக்கம் இருக்கும் நாடி பிங்கள நாடி என்றும் அழைக்கப்படுகிறது. பிங்கள நாடி வேலை செய்தால் வலபக்கமும், ஈடா நாடி வேலை செய்தால் நமக்கு சுவாசம் வரும். நம் உடலில் இருக்கும் சுவாசம் என்பது நாடி வேலை செய்து பிறகு வெளியேற்றும் கழிவு என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். தமிழில் இந்த சுவாசத்தை சூரிய கலை ,சந்திர கலை என்பார்கள்.

மனித இயக்கமே முற்றிலும் இந்த நாடிகளை சார்ந்து இருக்கிறது என்றால் மிகையில்லை. உங்களுக்கு வலது பக்கம் சுவாசம் வரும் சமயம் சூரிய நிலையில் இருப்பதால் ஆற்றல் மிகுந்த காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உதாரணமாக பிங்கள நாடி செயல்படும் பொழுது உடற்பயிற்சி செய்வது, பயணம் செய்வது மற்றும் பிறருடன் பேச்சு, வாதம் புரிவது என்ற வெளி செயல்களில் ஈடுபடுவீர்கள்.

சந்திர நாடியான ஈடா நாடி வேலை செய்யும் பொழுது கவிதை, கட்டுரை மற்றும் சங்கீத ரசனை ஆகியவை உண்டாகும். இப்பொழுது கூட உங்கள் இடது நாசியில் விரல் வைத்து பாருங்கள் அதில் வலது நாசியை விட சுவாசம் அதிகமாக இருப்பதை பாருங்கள். காரணம் இப்பதிவை படிக்கும் பொழுது உங்கள் ஈடா நாடி வேலை செய்வதால் இடதுபக்கம் சுவாசம் வரும்.

இரு நாடிகளும் இணைந்து வேலை செய்யும் பொழுது இந்நாடிக்கு ஸுக்‌ஷமணா என பெயர். இரு நாடிகளும் இணையும் பொழுது புதிதாக நாடி உருவாகாது. ஒளிரக்கூடிய இரு தீபமும் ஒன்றிணையும் பொழுது இணைந்த தீபம் நீண்டு பிரகாசிக்கும். அது போல இரு நாடிகளும் இணையும் புள்ளி ஸுக்‌ஷமணா எனலாம். ஸூக்‌ஷமணா செயல்படும் பொழுது நமது நாசியின் இரு துவாரத்திலும் சுவாசம் வரும்.

ஸூக்‌ஷமணா வேலை செய்யும் பொழுது நம் செயல்நிலைகள் ஒழிந்து நிலைத்தன்மைக்கு வருவோம். மனம் உள்முகமாகும். தியான நிலைக்கு தயாராகும். இயற்கையாக இந்நிலை அமைவது சிரமம். ஸூக்‌ஷமணா நாடியில் இயங்க பல ப்ராணாயம பயிற்சிகள் யோக சாஸ்திரத்தில் உண்டு. முனிவர்கள் கையில் தண்டம் வைத்திருப்பது தங்கள் உடலில் இருக்கும் நாடியின் ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்குத்தான்.

பாருங்கள் நாடி சாஸ்திரத்திற்குள் புகுந்து எங்கோ வந்துவிட்டோம். நாடி சாஸ்திரத்தின் இந்த விஷயங்கள்தான் எளிமையான பாமரனுக்கு புரியும் வகையில் புராணமாக்கப்பட்டது.

பிங்களா எனும் செயல் நிலை விஷ்ணுவின் செயலை குறிக்கும். பிரம்மா எனும் படைத்தல் நிலையை ஈடா நாடி குறிக்கும். நிலையான சிவ தன்மையை ஸூக்‌ஷமணா நாடி குறிக்கும்.

செயல் செய்து கொண்டிருக்கும் பன்றி (பிங்களா நாடி ) ஏன் லிங்கோத்பவருக்கு இடது பக்கம் இருக்கிறது? மன கற்பனை மற்றும் கலைத்திறனை குறிக்கும் அன்னம் எனும் ஈடா நாடி லிங்கோத்பவருக்கு வலது பக்கம் ஏன் இருக்கிறது என்பது புலனாகிறதா? தாழம்பூ மனதை மயக்கும் மணம் உண்டாக்குவது. கலைஞனுக்கு மனோமயக்கம் இயற்கையானது.

போதை மற்றும் கற்பனை அவனின் பிறவி குணம். அதனால் மனதை மயக்கும் தன்மையை தாழம்பூ குறிக்கிறது. மேற்கண்ட புராண கதை போன்றே விஷ்ணுவை பிரதானமாக வழிபடுபவர்கள் சிவனும் பிரம்மனும் போட்டிபோட்டதாக சொல்லுவதுண்டு. நமக்கு தேவை மூன்று எண்ணிக்கையும் அதில் நடுவில் என்றும் இணையில்லா பிரம்மாண்டம் கொண்ட ஸூக்ஷமணா நாடியும். இந்த சித்தாந்ததை உணர்ந்தால் புராண கதைகளைத் தள்ளி வைக்கலாம்.

வாழ்க்கையில் நாம் இரு நாடிகளிலும் மாறி மாறி இயங்கி வருகிறோம். சிவ நிலை எனும் ஸூக்‌ஷமணா நாடியில் இருந்தால் இயல்பாகவே பற்றற நிலையும் தியானமும் கைகூடும்.

நாடி நம்மை இயக்கினால் நீங்கள் மனிதர்.
நாடியை நீங்கள் இயக்கினால் நீங்கள் யோகி.

சித்தர்களும் யோகிகளும் நாடியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தங்களில் வாழ்க்கையை தங்கள் நினைத்தபடி செயல்படுத்துவார்கள்.


ஸ்ரீசக்ர புரி எனும் இந்த மாநகருக்கு ஒரு சிறப்பு உண்டு. அங்கே நீங்கள் இருக்கும் நாளில் அதிக பட்சமாக ஸூக்‌ஷமணா நாடி வேலை செய்து உங்களை தியான நிலையிலும் பேரானந்த நிலையிலும் வைக்கும்.

ப்ராணாயாமங்கள் பல செய்து வரவேண்டிய ஸூக்‌ஷமணா நிலை இயல்பாகவே அமைவது சாதாரண விஷயமா? இப்பொழுது தெரிகிறதா அங்கே ஏன் சித்தர்களும் , மஹான்களும் அதிகமாக உருவாகிறார்கள் என்று?

ஸ்ரீசக்ர புரி என்ற இத்தலத்தையும் நாடி சாஸ்திரத்தையும் நான் உணரும் பொழுது எனக்கு ஒன்பது வயது....!

ஒன்பது வயது சிறுவன் தன்னந்தனியாக திருவண்ணாமலை சென்று நாடிகளை பற்றி தெரிந்து கொள்ள முடியுமா?

ஆன்மீக வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாத எனது தனிப்பட்ட வாழ்க்கையை உங்களுக்காக கூறுகிறேன்.. கேளுங்கள்...

(தொடரும்)