Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 19, 2024

கும்பமேளா 2025

 யோக மரபு

யோக மரபில் பல பாதைகள் இருந்தாலும் அனைத்துற்கும் உயர் பாதையாக அமைவதும் ராஜ யோக பாதை. இந்த யோக பாதையின் பெயர் அனைத்து பாதைகளில் இது உயர்ந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மனிதனின் உடலை பிறவியினால் உருவாகும் சாபமாக பார்க்காமல் மனித உடல் ஒரு கருவி என கருதி அதைக்கொண்டே உயர் ஆன்மீக நிலையை அடையும் பாதை ராஜ யோகமாகும். முன்பு உடலை இழுக்கு என்று இருந்தேன் என திருமூலர் கூறுவதை போல பல சித்தாந்தங்களில் உடலை சாபமாக கண்டார்கள். அதில் இருந்து வேறுபட்டு உடலை கருவியாக்கி மேன்மை அடைவது ராஜ யோக பாதையாகும்.



நமது சக்தி உடலில் நாடிகள் என்ற தன்மையை விவரிக்கிறது ராஜ யோகம். பல ஆயிரம் நாடிகள் இருந்தாலும் சக்தியை கடத்தும் சாலைகளாக இருக்கும் நாடிகளில் இடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்ற நாடிகள் முக்கியமானது. நமது உடலின் வலது பக்க செயல்படுகளை இடா நாடியும், இடது பக்க செயல்பாட்டை பிங்கள நாடியும் செயல்படுத்துகிறது. இவை இரண்டும் இணைந்து உடல் முழுமையான வடிவில் செயல்படும் பொழுது அனைத்தையும் சுஷ்மணா நாடி இயக்குகிறது.

மூன்று நாடிகளும் நமது புருவ மையம் இருக்கும் நெற்றிப்பகுதியில் ஒன்றிணைகிறது. சுஷ்மண நாடியில் அதாவது முழுமையான நாடிகளின் செயல்பாட்டில்  இருக்கும் நிலையில் ஒருவரால் உயர் ஆன்மீக நிலையை அடைய முடியும். ஆன்மீக பயிற்சியில் இருப்பவர் நீண்ட நேரம் சுஷ்மண நாடியில் இருக்க முனைந்தால் பல்வேறு உயர் ஆன்மீக சக்திகளை பெற முடியும் என்பது ராஜ யோகத்தின் உட்கருத்தாகும்.

அஷ்டாங்க யோகத்தின் பகுதிகளான ஆசனம், ப்ராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை மற்றும் தியானம் ஆகியவை நீண்ட கால அளவில் நம்மை சுஷ்மண நாடியில் நிலைத்திருக்க செய்கிறது.

நாடிகள் ஒருங்கிணைந்து சுஷ்மண நாடியில் இருந்தாலும் புறச்சூழலில் ஏற்படும் விளைவுகளால் நாடிகள் சலனம் அடைந்து இடா அல்லது பிங்கள நாடிகளின் ஆளுமைக்கு சென்றுவிடும்.

புறச்சூழல் ஆன்மீக தன்மையில் இருக்கும் பொழுது உடல் சுஷ்மண நாடியில் பல மணி நேரங்கள் நிலைத்து இருக்கும்.

நமது உடலில் மூன்று நாடிகள் இருப்பதை போல பூமியை உடலாக கொண்டால் கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் இடா, பிங்களா மற்றும் சுஷ்மணாவை குறிக்கிறது. இதே போல மூன்று நாடிகள் சூரிய மண்டலத்தில் சூரிய,சந்திர மற்றும் குரு கிரகங்களாக இருக்கிறது.

நமது உடல், பூமி மற்றும் சூரிய மண்டலம் ஆகிய மூன்றின் நாடிகளும் ஒன்றிணையும் பொழுது ஆன்மீக பெரும் செயல்பாடுகள் நடக்க வாய்ப்பு உண்டு. நாடிகள் நமது புருவ மையத்தில் ஒன்றிணைவது போல , திரிவேணி சங்கமத்தில் நதிகள் ஒன்றிணைகின்றன. வான மண்டலத்தில் கிரகங்கள் ஒன்றிணைகிறது. இவை அனைத்தையும் சரியாக ஒரு ஆன்மீக சாதகன் பயன்படுத்தினால் இறைநிலையை உணரும் விழிப்புநிலையை அடைவார்கள்.



பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது என்ற சொல்லாடலை போல வானில் இருக்கும் ஆற்றல் இறங்கி திரிவேணியில் விழுந்து அது நமது நாடியில் விழும் நிகழ்வே மஹா கும்பமேளா என்பதை உணருங்கள்.

ராஜ யோகிகள் மட்டுமல்லாமல் கர்ம, பக்தி மற்றும் ஞான யோகிகளும் மஹா கும்பமேளாவில் இணைகிறார்கள். பல கோடி உயிர்கள் ஒரே நேரத்தில் இறைவனை பக்தி செலுத்தும் இடம் உலகில் வேறு ஏதேனும் உண்டா? தொடர்ந்து கீர்த்தனைகளும் இறை நாமமும் கும்பமேளா திசை எங்கும் பக்தி யோகிகளால் நிரப்பப்படுகிறது.

சேவை செய்வதையே இறைவனின் பாதையாக கொண்ட கர்ம யோகிகள் ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு தொடர்ந்து அமுது படைத்து இருப்பிடம் கொடுத்து கர்ம யோகத்தில் ஆனந்தம் அடைகிறார்கள். சத்சங்கங்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தி இறை உணர்வில் திளைக்கிறார்கள் ஞான யோகிகள். அனைத்து யோக பாதையின் பெரும் திருவிழா கொண்டாட்ட திடலாக இருப்பது மஹாக்கும்பமேளா என்பதை பல நூற்றாண்டுகள் வரலாறு நிரூபித்தவண்ணம் இருக்கிறது.

யோகம் என்றாலே ஒன்றிணைதல் என்பதே அடிப்படை பொருள்.  உடலில் உள்ள நாடி மூலமாக, பூமியில் உள்ள ஜீவ நதி மூலமாக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மூலமாக என அனைத்தையும் ஒன்றிணைப்பது தானே சரியான யோகம் என்பதற்கான பொருளாக இருக்க முடியும்?

மஹா கும்பமேளா என்ற மஹா யோகத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா?

 

(தொடரும்)

Wednesday, July 17, 2024

மஹா கும்ப மேளா 2025

 ஜோதிட சாஸ்திரம்

நமது கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் மேலோட்டமாக எதுவும் வைக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் பின்புலமாக ஜோதிட சாஸ்திரம் இருக்கிறது.

ஒரு அரசரின் கட்டளையாகவோ அல்லது ஓர் குழுவினரின் முடிவாகவோ நிகழ்வுகளை நாம் கொண்டாடுவதில்லை. வான மண்டலத்தில் இயங்கும் கிரகங்களின் நிலையே நம் கொண்டாட்டத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

சக்கரத்தின் அச்சு எப்படி முக்கியமானதோ அது போல நமது கலாச்சாரம் ஒரு கொண்டாட்டத்திற்கு அச்சாக கிரகங்கள் வான மண்டலத்தில் அமையும் நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது.

நமக்கு தீபாவளி என சொன்னாலும் அது ஐப்பசி திரயோதசி திதி என்பதே தீபாவளியின் பின்புலமாக இருக்கிறது. மகர ராசியில் சூரியன் பிரவேசித்து உத்ராயண காலத்தை துவங்குவதே பொங்கலாக கொண்டாடுகிறோம். மாறாக பானை இருக்கிறது அரிசி இருக்கிறது என்பதற்காக பொங்கல் கொண்டாடுவது இல்லை. நமது மரபின் அடிநாதம் ஜோதிட கிரக தத்துவம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

வருடாந்திர பண்டிகைகளே இத்தகைய ஜோதிட கொள்கையின் மேல் கட்டமைக்கப்படும் பொழுது கும்பமேளா என்பது வெறும் கூட்டம் கூடுவதால் நடந்துவிடுமா என்ன?

சூரியன் நமது ஆன்மாவை குறிக்கும் சந்திரன் நமது மனதை குறிக்கும் குரு என்பது நமது உள்நிலை ஆன்மீக செயல்பாடுகளை குறிக்கும் கிரகங்கள். கும்பமேளா என்பது குரு,சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டு உள்ளது.

குரு ரிஷிப ராசியில் இருக்கும் காலத்தில் சூரியன் மற்றும் சந்திரன் மகர கும்ப ராசியில் பயணிக்கும் காலத்தில் மஹா கும்பமேளா ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெறுகிறது.

குரு என்ற கிரகம் ராசி மண்டலத்தை சுற்றி வருவதற்கு 12 வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இந்தியாவில் நான்கு இடங்களில் கும்பமேளா நடைபெறும்.
அதனால் மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஓர் இடத்தில் என நான்கு இடங்களில் நடைபெறுகிறது. மீண்டும் அதே இடத்தில் நடைபெறுவதற்கு பன்னிரெண்டு வருடங்கள் ஆகும்

 இதன் அடிப்படையில் ரிஷப ராசியில் குரு இருக்கும் நேரத்தில் ப்ரயாக் ராஜ் உத்திர பிரதேசத்தில் மஹா கும்பமேளா நடைபெறுகிறது. சூரியன் சிம்ம ராசியில் இருக்கும் நேரத்தில் நாசிக் என்ற இடத்தில் கும்பமேளா நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் குரு இருக்கும் நேரத்தில் உஜ்ஜயின் என்ற இடத்தில் கும்பமேளா நடைபெறும். கும்ப ராசியில் குரு இருக்கும் நேரத்தில் ஹரித் துவாரில் கும்பமேளா நடைபெறும்.

கும்ப என்ற வார்த்தை வருவதால் கும்ப ராசியில் குரு இருக்கும் காலத்தில் நடைபெறும் விழாவை தானே கும்ப மேளா என கூற வேண்டும் என கேள்வி எழலாம். முன்பே சொன்னதை போல நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெற்றாலும் ப்ரயாகையில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் திரிவேணி சங்கமம் உண்டு என்பதே மஹா கும்ப மேளா என அழைக்க காரணமாகிறது. இங்கே கங்கை சூரியனாகவும், யமுனை சந்திரனாகவும், குரு சரஸ்வதி நதியாகவும் இயங்குகிறது.

உண்மையில் கும்பத்தில் இருந்து அமிர்ந்த விழ்ந்தது என புராணங்கள் கூறும் குறியீடு இது தான். கும்ப ராசி என்ற வான மண்டலத்தில் உள்ள இடத்திலிருந்து உயர் ஆற்றல் பூமிப்பகுதியில் வீழும் தன்மையையே புராணங்கள் இப்படி குறியீடாக உருவாக்கி உள்ளனர்.

குரு ரிஷப ராசியில் இருக்கும் பொழுது சூரியன் மகரத்தில் தை மாத உத்திராயண காலத்தை துவங்கும் தருணத்தில் மஹா கும்பமேளா ஆரம்பிக்கிறது. பிறகு மாசி மாதம் சிவ ராத்திரியுடன் நிறைவு பெறுகிறது.


இரு மாதங்கள் நடைபெறும் மஹா கும்பமேளாவில் புனித நீராடும் முக்கிய நாட்கள் என இருக்கிறது. தை மாச பெளர்ணமி, தை அமாவாசை, தை மாத பஞ்சமி (வசந்த பஞ்சமி), தை மாத சப்தமி (ரத சப்தமி), மாசி பெளர்ணமி ஆகியவை முக்கியமான நாட்கள். மஹா கும்பமேளாவின் ஒவ்வொரு நாளும் ஆற்றல் நிறைந்த நாட்கள் என்றாலும் இந்த ஐந்து நாட்கள் கிரகங்கள் சிறப்பான நிலையில் அமைகிறது.

பெளர்ணமி காலத்தில் ராசி மண்டலத்தில் சூரியன் சந்திரன் எதிர் எதிரான நிலையில் இருக்கும். இதற்கு மையத்தில் குரு அமர்கிறது. அமாவாசை காலத்தில் சூரியன் சந்திரன் ஒரே ராசியில் அமர்ந்து குருவிற்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. சூரியன் என்கிற ஆன்மா, சந்திரன் என்ற மனதும் எப்பொழுதும் குரு என்கிற உயர் ஆன்மீக நிலையை நோக்கியே இயங்கும் தன்மையில் கிரக நிலைகள் அமைந்திருக்கிறது.

குரு,சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் சிறப்பான காலநிலையில் சூரிய மணடலே ஒரு வித ஆன்மீக உயர்நிலையில் உந்தப்படுகிறது. எந்த ஆன்மீக பின்புலமும் இல்லாத ஒரு மனிதனின் ஆன்மா மற்றும் மனது ஆன்மீக நிலை நோக்கி உந்தப்படுகிறது. இதனால் தான் பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரம் சாதாரண மனிதர்களை கும்பமேளாவை கொண்டாட உந்தி தள்ளுகிறது.

ஜோதிட சித்தாந்தத்தில் பல்வேறு வகையாக கும்பமேளாவை விளக்கினாலும் கும்பமேளா என்பது பூமியில் அதுவும் இந்தியாவில் மட்டும் நடைபெறும் நிகழ்வு அல்ல என்பது புரிந்துகொள்ள வேண்டும். சூரிய மண்டலத்தில் இருக்கும் சூரிய,சந்திர மற்றும் குரு கிரகங்களின் ஒருங்கிணைவு மற்றும் ராசி மண்டலங்களின் தாக்கம் இதற்கு அவசியம். 



பூமியின் வட்டப்பாதை மற்றும் பூமியின் அச்சில் உள்ள சாய்மான நிலை ஆகியவற்றை உண்மையான கிரக நிலைக்கு சரி செய்யும் விதமாக அயனாம்சம் என்ற ஒரு மதிப்பை கிரகங்களின் உண்மையான நிலையில் இருந்து கழித்தே கிரக நிலை கணிக்கப்படுகிறது. கிரகங்களின் உண்மை நிலை சயனம் என்றும் பூமியின் சாய்மான நிலை அயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் பூமியில் இருந்து பார்க்கும் கோணத்தில் கணிக்கப்படுகிறது.

சூரிய மண்டலத்தின் ஆன்மீக நிலையை கருத்தில் கொண்டால் கிரகங்களின் உண்மையான நிலையை எடுத்துக்கொண்டால் போதுமானது. அயனாம்சம் கழிக்கப்படாத கிரக நிலையை எடுத்துக்கொண்டால் குரு என்ற கிரகம் மஹா கும்பமேளா நடக்கும் பொழுது ரிஷப ராசியில் இருக்காது. அது மிதுனத்தில் இருக்கும். மிதுன ராசி என்பது உபய ராசி என்ற தன்மை கொண்டது. மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகியவை உபயராசிகள் என்பதால் சயன தத்துவத்தில் குரு உபய ராசியில் சஞ்சரிக்கும் பொழுது கும்பமேளா நடைபெறுகிறது. ராசி மண்டலத்தில் முதல் உபய ராசியான மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் காலமே மஹா கும்பமேளா என்பதை புரிந்துகொள்வோம்.

குரு மிதுனத்தில் சயன நிலையில் இருக்கும் பொழுது சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும். அதனால் தான் மஹா கும்பமேளா என அழைக்கப்படுகிறது.

ப்ரயாகை தவிர பிற இடங்களில் நடைபெறும் கும்பமேளாக்கள் தை மாதத்தில் நடைபெறுவது இல்லை. அதற்கு என கிரக நிலைகள் உண்டு.

இவ்வாறு குரு-சூரிய சந்திர இணைவின் மூலமே கும்பமேளா என்ற நிகழ்வு கட்டமைக்கப்படுகிறது.

ஆழ்ந்த ஜோதிட பின்புலனை கண்டோம். இனி யோக சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வை காண்போம்.


(தொடரும்)


Saturday, July 13, 2024

மஹா கும்பமேளா 2025

அஞ்ஞானத்தை உதாரணமாக கூற கண்ணில்லாதவர்கள் யானையை பார்த்த கதையை சொல்லுவார்கள். ஒருவன் முறம் என்றான் மற்றொருவன் தூண் என்றான் காரணம் அவர்களுக்கு கண்கள் இல்லை. இதுபோலவே ஞானத்திற்கு உதாரணம் சொல்லுவதானால் இறைவன் ஒருவனாக இருந்தாலும் ஞானிகள் இறைவனை பல்வேறு தளத்தில் கண்டார்கள்.


ஒருவர் எனக்கு கடவுள் எஜமானன் என்றார் மற்றொரு ஞானி ஒளி வடிவமானவர் என்றார். இன்னும் சில ஞானியரோ நானே அது என்றனர்.

ஞானம் கொண்டவர்களும் இறைவனை பல்வேறு பாவனையில் உணர்கிறார்கள். அதுபோல கும்பமேளா என்ற மகத்தான நிகழ்வு பல்வேறு வடிவில் பார்க்கப்படுகிறது.




புராணம்

நமது கலாச்சாரத்தில் உருவாகிய புராணங்கள் என்பது விஞ்ஞான மற்றும் மெய்ஞான கருத்துக்களை எளிய வடிவில் புரிய வைக்கும் கருவியாக இருக்கிறது. பதினெட்டு புராணங்களில் பல இடங்களில் ஒரே கூற்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டு இருக்கிறது. அது பால் கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் சம்பவம்.

பால்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் பொழுது அதில் இருந்து சில துளிகள் பூமியில் விழுந்தது. அந்த அமிர்த துளிகள் விழுந்த இடங்கள் கும்ப மேளா நடக்க காரணமாக இருக்கிறது.

ஹரித்துவார், நாசிக், உஜ்ஜயின் மற்றும் ப்ரயாகை ஆகிய இடங்களில் அமிர்த துளிகள் விழுந்ததாக கருதப்படுகிறது. பால் கடலை கடைந்து எடுத்த அமிர்த துளிகள் விழுந்த பின் மூன்று வருடத்திற்கு ஒரு முறை அமிர்த துளிகள் குறிப்பிட்ட நாளில் மேலோங்கி இருக்கிறது. அத்தருணத்தில் நதிகளில் புனித நீராடினால் அந்த அமிர்தத்தை நாமும் அடையலாம் என்கிறது புராண குறிப்புகள்.

புராணத்தில் குறிப்பிடப்படும் அம்ரிதம் என்றால் என்ன என தெரிந்து கொள்வோம். மிருதம் என்றால் இறப்பு. அமிர்தம் என்றால் இறப்பற்ற நிலை.  பாவ புன்ணியங்களை கடந்து இறப்பற்ற நிலைக்கு செல்லுவதற்கு கும்பமேளாவில் நீராடவேண்டும் என்பது பாரத தேசத்தில் பலருக்கும் நம்பிக்கையாக இருக்கிறது.

ஹரிதுவார், நாசிக் மற்றும் உஜ்ஜயினில் நடைபெறும் நிகழ்வு கும்பமேளா என்றும் ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெறுவது மஹா கும்ப மேளா என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் திருவேணி சங்கமம் என அழைக்கப்படும் கங்கா யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம் ப்ரயாகையில் மட்டுமே உண்டு. பிற கும்ப மேளா இடங்களில் நதிகள் உண்டு புண்ணிய நீராடுவதற்கு ஆனால் திருவேணி சங்கமம் ப்ரயாகையில் மட்டுமே இருப்பதால் இங்கே நடைபெறும் கும்ப மேளா , மஹா கும்ப மேளா என அழைக்கப்படுகிறது.

யஜுர் வேதம் மற்றும் இதிகாசங்களில் கும்பமேளா பற்றிய குறிப்புகள் உண்டு. சனாதன தர்மம் மற்றும் அல்லாமல் புத்த மதம், ஜைன மதம் மற்றும் சீக்கிய மதங்களில் கும்பமேளா குறிப்புகளை காணலாம். பல மதங்கள் ஒன்றாக உணர்ந்த நிகழ்வு என்பதற்கு இது ஒர் சான்று.

கும்ப மேளா என்பது மூன்று வருடத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட இடங்களில் வரும் நிகழ்வு. ஆனாலும் கூட ஒவ்வொரு வருடமும் நான்கு முக்கிய இடங்களிலும் தை மாசி மாதங்களில் மகா மேளா என வைபவம் கொண்டாடப்படுகிறது.

புராண குறிப்புகள் தவிர உலக பயணிகள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு உட்பட்ட ஐநூறு வருட கால குறிப்புகள் கும்ப மேளா பற்றிய வரலாற்று பதிவுகள் தற்சமயம் உண்டு.

புராண ரீதியாக கும்பமேளாவின் தொன்மையை உணர்ந்தோம்.

சாஸ்திரங்களில் முக்கியமான சாஸ்திரமான ஜோதிட மற்றும் யோக சாஸ்திரத்தின் வழியில் கும்பமேளாவை தெரிந்துகொள்வோம்.

(தொடரும்)

Thursday, July 11, 2024

மஹா கும்ப மேளா 2025

உலகில் நடக்கும் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழா…!!


ஒரு குழுவோ அல்லது மனிதர்களோ ஒருங்கிணைக்காமல் நடைபெறும் திருவிழா…!


கோவில்கள் இல்லாத இடத்தில் நடக்கும் ஆன்மீக கொண்டாட்டம்.


இறைத்தூதரோ அல்லது மதமோ சம்பந்தம் இல்லாத நிகழ்வு


பூமியில் அதிக மக்கள் கூடும் பெரும் விழா


வானில் ஏவிய செயற்கைக் கோள்கள் கூட இத்தனை மனித கூட்டமா என கவனிக்கும் நிகழ்வு


உலக வரலாற்றில் பெரும் போர்கள் நடக்கும் சமயத்தில் மட்டும் தான் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் அல்லது இடம் பெயர்வார்கள். ஓர் அமைதியான ஆன்மீக விழாவுக்கு கோடிக்கணாக மக்கள் அழைப்பிதழ் இன்றி கூடுவது உலக வரலாற்றில் இங்கே மட்டும் தான்.


வடக்கில் காஷ்மீரம், தெற்கில் தமிழகம், மேற்கில் ராஜஸ்தான் மற்றும் குஜராத், கிழக்கில் அசாம் என வெவ்வேறு மனிதர்கள் பல்வேறு கலாச்சார மொழி கொண்டவர்கள் வசிக்கிறார்கள். இத்தகைய இந்திய பெரும் நிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மொழி, இன, கலாச்சார பேதம் இன்றி மக்கள் அலை அலையாக வரும் ஓர் பெரும் நிகழ்வு.


பல நூற்றாண்டு காலமாக மேற்கண்ட முறையில் இடைவிடாமல் ஒரு நிகழ்வு அதுவும் பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது.


அது தான் மஹா கும்பமேளா….


கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கம் என்ற இடத்தில் ப்ரயாக் ராஜ் என்ற ஊரில் பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு தான் மஹா கும்பமேளா.


கும்பமேளா என்பது என்ன? 

உண்மையில் கும்பமேளா நமக்கு அவசியமான நிகழ்வா?

அது ஏன் உத்திர பிரதேசத்தில் ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெற வேண்டும்?

அடுத்த கும்பமேளா எப்பொழுது?


கும்பமேளாவின் வகைகள் மற்றும் சாஸ்திர பின்புலம் என்ன என வரும் பகுதிகளில் தெரிந்துகொள்வோம்.


(தொடரும்…)