Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, July 17, 2024

மஹா கும்ப மேளா 2025

 ஜோதிட சாஸ்திரம்

நமது கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் மேலோட்டமாக எதுவும் வைக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் பின்புலமாக ஜோதிட சாஸ்திரம் இருக்கிறது.

ஒரு அரசரின் கட்டளையாகவோ அல்லது ஓர் குழுவினரின் முடிவாகவோ நிகழ்வுகளை நாம் கொண்டாடுவதில்லை. வான மண்டலத்தில் இயங்கும் கிரகங்களின் நிலையே நம் கொண்டாட்டத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

சக்கரத்தின் அச்சு எப்படி முக்கியமானதோ அது போல நமது கலாச்சாரம் ஒரு கொண்டாட்டத்திற்கு அச்சாக கிரகங்கள் வான மண்டலத்தில் அமையும் நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது.

நமக்கு தீபாவளி என சொன்னாலும் அது ஐப்பசி திரயோதசி திதி என்பதே தீபாவளியின் பின்புலமாக இருக்கிறது. மகர ராசியில் சூரியன் பிரவேசித்து உத்ராயண காலத்தை துவங்குவதே பொங்கலாக கொண்டாடுகிறோம். மாறாக பானை இருக்கிறது அரிசி இருக்கிறது என்பதற்காக பொங்கல் கொண்டாடுவது இல்லை. நமது மரபின் அடிநாதம் ஜோதிட கிரக தத்துவம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

வருடாந்திர பண்டிகைகளே இத்தகைய ஜோதிட கொள்கையின் மேல் கட்டமைக்கப்படும் பொழுது கும்பமேளா என்பது வெறும் கூட்டம் கூடுவதால் நடந்துவிடுமா என்ன?

சூரியன் நமது ஆன்மாவை குறிக்கும் சந்திரன் நமது மனதை குறிக்கும் குரு என்பது நமது உள்நிலை ஆன்மீக செயல்பாடுகளை குறிக்கும் கிரகங்கள். கும்பமேளா என்பது குரு,சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டு உள்ளது.

குரு ரிஷிப ராசியில் இருக்கும் காலத்தில் சூரியன் மற்றும் சந்திரன் மகர கும்ப ராசியில் பயணிக்கும் காலத்தில் மஹா கும்பமேளா ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெறுகிறது.

குரு என்ற கிரகம் ராசி மண்டலத்தை சுற்றி வருவதற்கு 12 வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இந்தியாவில் நான்கு இடங்களில் கும்பமேளா நடைபெறும்.
அதனால் மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஓர் இடத்தில் என நான்கு இடங்களில் நடைபெறுகிறது. மீண்டும் அதே இடத்தில் நடைபெறுவதற்கு பன்னிரெண்டு வருடங்கள் ஆகும்

 இதன் அடிப்படையில் ரிஷப ராசியில் குரு இருக்கும் நேரத்தில் ப்ரயாக் ராஜ் உத்திர பிரதேசத்தில் மஹா கும்பமேளா நடைபெறுகிறது. சூரியன் சிம்ம ராசியில் இருக்கும் நேரத்தில் நாசிக் என்ற இடத்தில் கும்பமேளா நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் குரு இருக்கும் நேரத்தில் உஜ்ஜயின் என்ற இடத்தில் கும்பமேளா நடைபெறும். கும்ப ராசியில் குரு இருக்கும் நேரத்தில் ஹரித் துவாரில் கும்பமேளா நடைபெறும்.

கும்ப என்ற வார்த்தை வருவதால் கும்ப ராசியில் குரு இருக்கும் காலத்தில் நடைபெறும் விழாவை தானே கும்ப மேளா என கூற வேண்டும் என கேள்வி எழலாம். முன்பே சொன்னதை போல நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெற்றாலும் ப்ரயாகையில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் திரிவேணி சங்கமம் உண்டு என்பதே மஹா கும்ப மேளா என அழைக்க காரணமாகிறது. இங்கே கங்கை சூரியனாகவும், யமுனை சந்திரனாகவும், குரு சரஸ்வதி நதியாகவும் இயங்குகிறது.

உண்மையில் கும்பத்தில் இருந்து அமிர்ந்த விழ்ந்தது என புராணங்கள் கூறும் குறியீடு இது தான். கும்ப ராசி என்ற வான மண்டலத்தில் உள்ள இடத்திலிருந்து உயர் ஆற்றல் பூமிப்பகுதியில் வீழும் தன்மையையே புராணங்கள் இப்படி குறியீடாக உருவாக்கி உள்ளனர்.

குரு ரிஷப ராசியில் இருக்கும் பொழுது சூரியன் மகரத்தில் தை மாத உத்திராயண காலத்தை துவங்கும் தருணத்தில் மஹா கும்பமேளா ஆரம்பிக்கிறது. பிறகு மாசி மாதம் சிவ ராத்திரியுடன் நிறைவு பெறுகிறது.


இரு மாதங்கள் நடைபெறும் மஹா கும்பமேளாவில் புனித நீராடும் முக்கிய நாட்கள் என இருக்கிறது. தை மாச பெளர்ணமி, தை அமாவாசை, தை மாத பஞ்சமி (வசந்த பஞ்சமி), தை மாத சப்தமி (ரத சப்தமி), மாசி பெளர்ணமி ஆகியவை முக்கியமான நாட்கள். மஹா கும்பமேளாவின் ஒவ்வொரு நாளும் ஆற்றல் நிறைந்த நாட்கள் என்றாலும் இந்த ஐந்து நாட்கள் கிரகங்கள் சிறப்பான நிலையில் அமைகிறது.

பெளர்ணமி காலத்தில் ராசி மண்டலத்தில் சூரியன் சந்திரன் எதிர் எதிரான நிலையில் இருக்கும். இதற்கு மையத்தில் குரு அமர்கிறது. அமாவாசை காலத்தில் சூரியன் சந்திரன் ஒரே ராசியில் அமர்ந்து குருவிற்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. சூரியன் என்கிற ஆன்மா, சந்திரன் என்ற மனதும் எப்பொழுதும் குரு என்கிற உயர் ஆன்மீக நிலையை நோக்கியே இயங்கும் தன்மையில் கிரக நிலைகள் அமைந்திருக்கிறது.

குரு,சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் சிறப்பான காலநிலையில் சூரிய மணடலே ஒரு வித ஆன்மீக உயர்நிலையில் உந்தப்படுகிறது. எந்த ஆன்மீக பின்புலமும் இல்லாத ஒரு மனிதனின் ஆன்மா மற்றும் மனது ஆன்மீக நிலை நோக்கி உந்தப்படுகிறது. இதனால் தான் பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரம் சாதாரண மனிதர்களை கும்பமேளாவை கொண்டாட உந்தி தள்ளுகிறது.

ஜோதிட சித்தாந்தத்தில் பல்வேறு வகையாக கும்பமேளாவை விளக்கினாலும் கும்பமேளா என்பது பூமியில் அதுவும் இந்தியாவில் மட்டும் நடைபெறும் நிகழ்வு அல்ல என்பது புரிந்துகொள்ள வேண்டும். சூரிய மண்டலத்தில் இருக்கும் சூரிய,சந்திர மற்றும் குரு கிரகங்களின் ஒருங்கிணைவு மற்றும் ராசி மண்டலங்களின் தாக்கம் இதற்கு அவசியம். 



பூமியின் வட்டப்பாதை மற்றும் பூமியின் அச்சில் உள்ள சாய்மான நிலை ஆகியவற்றை உண்மையான கிரக நிலைக்கு சரி செய்யும் விதமாக அயனாம்சம் என்ற ஒரு மதிப்பை கிரகங்களின் உண்மையான நிலையில் இருந்து கழித்தே கிரக நிலை கணிக்கப்படுகிறது. கிரகங்களின் உண்மை நிலை சயனம் என்றும் பூமியின் சாய்மான நிலை அயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் பூமியில் இருந்து பார்க்கும் கோணத்தில் கணிக்கப்படுகிறது.

சூரிய மண்டலத்தின் ஆன்மீக நிலையை கருத்தில் கொண்டால் கிரகங்களின் உண்மையான நிலையை எடுத்துக்கொண்டால் போதுமானது. அயனாம்சம் கழிக்கப்படாத கிரக நிலையை எடுத்துக்கொண்டால் குரு என்ற கிரகம் மஹா கும்பமேளா நடக்கும் பொழுது ரிஷப ராசியில் இருக்காது. அது மிதுனத்தில் இருக்கும். மிதுன ராசி என்பது உபய ராசி என்ற தன்மை கொண்டது. மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகியவை உபயராசிகள் என்பதால் சயன தத்துவத்தில் குரு உபய ராசியில் சஞ்சரிக்கும் பொழுது கும்பமேளா நடைபெறுகிறது. ராசி மண்டலத்தில் முதல் உபய ராசியான மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் காலமே மஹா கும்பமேளா என்பதை புரிந்துகொள்வோம்.

குரு மிதுனத்தில் சயன நிலையில் இருக்கும் பொழுது சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும். அதனால் தான் மஹா கும்பமேளா என அழைக்கப்படுகிறது.

ப்ரயாகை தவிர பிற இடங்களில் நடைபெறும் கும்பமேளாக்கள் தை மாதத்தில் நடைபெறுவது இல்லை. அதற்கு என கிரக நிலைகள் உண்டு.

இவ்வாறு குரு-சூரிய சந்திர இணைவின் மூலமே கும்பமேளா என்ற நிகழ்வு கட்டமைக்கப்படுகிறது.

ஆழ்ந்த ஜோதிட பின்புலனை கண்டோம். இனி யோக சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வை காண்போம்.


(தொடரும்)


0 கருத்துக்கள்: