Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 19, 2024

கும்பமேளா 2025

 யோக மரபு

யோக மரபில் பல பாதைகள் இருந்தாலும் அனைத்துற்கும் உயர் பாதையாக அமைவதும் ராஜ யோக பாதை. இந்த யோக பாதையின் பெயர் அனைத்து பாதைகளில் இது உயர்ந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மனிதனின் உடலை பிறவியினால் உருவாகும் சாபமாக பார்க்காமல் மனித உடல் ஒரு கருவி என கருதி அதைக்கொண்டே உயர் ஆன்மீக நிலையை அடையும் பாதை ராஜ யோகமாகும். முன்பு உடலை இழுக்கு என்று இருந்தேன் என திருமூலர் கூறுவதை போல பல சித்தாந்தங்களில் உடலை சாபமாக கண்டார்கள். அதில் இருந்து வேறுபட்டு உடலை கருவியாக்கி மேன்மை அடைவது ராஜ யோக பாதையாகும்.



நமது சக்தி உடலில் நாடிகள் என்ற தன்மையை விவரிக்கிறது ராஜ யோகம். பல ஆயிரம் நாடிகள் இருந்தாலும் சக்தியை கடத்தும் சாலைகளாக இருக்கும் நாடிகளில் இடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்ற நாடிகள் முக்கியமானது. நமது உடலின் வலது பக்க செயல்படுகளை இடா நாடியும், இடது பக்க செயல்பாட்டை பிங்கள நாடியும் செயல்படுத்துகிறது. இவை இரண்டும் இணைந்து உடல் முழுமையான வடிவில் செயல்படும் பொழுது அனைத்தையும் சுஷ்மணா நாடி இயக்குகிறது.

மூன்று நாடிகளும் நமது புருவ மையம் இருக்கும் நெற்றிப்பகுதியில் ஒன்றிணைகிறது. சுஷ்மண நாடியில் அதாவது முழுமையான நாடிகளின் செயல்பாட்டில்  இருக்கும் நிலையில் ஒருவரால் உயர் ஆன்மீக நிலையை அடைய முடியும். ஆன்மீக பயிற்சியில் இருப்பவர் நீண்ட நேரம் சுஷ்மண நாடியில் இருக்க முனைந்தால் பல்வேறு உயர் ஆன்மீக சக்திகளை பெற முடியும் என்பது ராஜ யோகத்தின் உட்கருத்தாகும்.

அஷ்டாங்க யோகத்தின் பகுதிகளான ஆசனம், ப்ராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை மற்றும் தியானம் ஆகியவை நீண்ட கால அளவில் நம்மை சுஷ்மண நாடியில் நிலைத்திருக்க செய்கிறது.

நாடிகள் ஒருங்கிணைந்து சுஷ்மண நாடியில் இருந்தாலும் புறச்சூழலில் ஏற்படும் விளைவுகளால் நாடிகள் சலனம் அடைந்து இடா அல்லது பிங்கள நாடிகளின் ஆளுமைக்கு சென்றுவிடும்.

புறச்சூழல் ஆன்மீக தன்மையில் இருக்கும் பொழுது உடல் சுஷ்மண நாடியில் பல மணி நேரங்கள் நிலைத்து இருக்கும்.

நமது உடலில் மூன்று நாடிகள் இருப்பதை போல பூமியை உடலாக கொண்டால் கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் இடா, பிங்களா மற்றும் சுஷ்மணாவை குறிக்கிறது. இதே போல மூன்று நாடிகள் சூரிய மண்டலத்தில் சூரிய,சந்திர மற்றும் குரு கிரகங்களாக இருக்கிறது.

நமது உடல், பூமி மற்றும் சூரிய மண்டலம் ஆகிய மூன்றின் நாடிகளும் ஒன்றிணையும் பொழுது ஆன்மீக பெரும் செயல்பாடுகள் நடக்க வாய்ப்பு உண்டு. நாடிகள் நமது புருவ மையத்தில் ஒன்றிணைவது போல , திரிவேணி சங்கமத்தில் நதிகள் ஒன்றிணைகின்றன. வான மண்டலத்தில் கிரகங்கள் ஒன்றிணைகிறது. இவை அனைத்தையும் சரியாக ஒரு ஆன்மீக சாதகன் பயன்படுத்தினால் இறைநிலையை உணரும் விழிப்புநிலையை அடைவார்கள்.



பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது என்ற சொல்லாடலை போல வானில் இருக்கும் ஆற்றல் இறங்கி திரிவேணியில் விழுந்து அது நமது நாடியில் விழும் நிகழ்வே மஹா கும்பமேளா என்பதை உணருங்கள்.

ராஜ யோகிகள் மட்டுமல்லாமல் கர்ம, பக்தி மற்றும் ஞான யோகிகளும் மஹா கும்பமேளாவில் இணைகிறார்கள். பல கோடி உயிர்கள் ஒரே நேரத்தில் இறைவனை பக்தி செலுத்தும் இடம் உலகில் வேறு ஏதேனும் உண்டா? தொடர்ந்து கீர்த்தனைகளும் இறை நாமமும் கும்பமேளா திசை எங்கும் பக்தி யோகிகளால் நிரப்பப்படுகிறது.

சேவை செய்வதையே இறைவனின் பாதையாக கொண்ட கர்ம யோகிகள் ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு தொடர்ந்து அமுது படைத்து இருப்பிடம் கொடுத்து கர்ம யோகத்தில் ஆனந்தம் அடைகிறார்கள். சத்சங்கங்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தி இறை உணர்வில் திளைக்கிறார்கள் ஞான யோகிகள். அனைத்து யோக பாதையின் பெரும் திருவிழா கொண்டாட்ட திடலாக இருப்பது மஹாக்கும்பமேளா என்பதை பல நூற்றாண்டுகள் வரலாறு நிரூபித்தவண்ணம் இருக்கிறது.

யோகம் என்றாலே ஒன்றிணைதல் என்பதே அடிப்படை பொருள்.  உடலில் உள்ள நாடி மூலமாக, பூமியில் உள்ள ஜீவ நதி மூலமாக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மூலமாக என அனைத்தையும் ஒன்றிணைப்பது தானே சரியான யோகம் என்பதற்கான பொருளாக இருக்க முடியும்?

மஹா கும்பமேளா என்ற மஹா யோகத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா?

 

(தொடரும்)

0 கருத்துக்கள்: