Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, December 17, 2009

யோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா ?

ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் நான் வினை ஆற்றுவதில் கவனமாக இருப்பேன். கர்மாக்களை களைந்து இறை நிலையில் இருக்க முயற்சி செய்வது ஆன்மீக வாழ்க்கையின் ஒரு அங்கம். வினையற்று இருப்பதுவே தியானமும் சமாதியும் என என் ரகசிய எதிரி திருமூலரின் கருத்து.

அப்படி இருந்தாலும் இந்த தலைப்பில் எதிர்வினையாற்றலாமா என யோசித்தேன். என் சுய நலத்திற்காக ஒரு வினையோ, பிறருக்கு செய்வினையோ வைத்தால் தானே தப்பு :) . ஒரு சிந்தாந்தத்தை பற்றி மக்களுக்கு குழப்பம் வரும் பொழுது, அக்குழப்பத்தின் பதில் என்னிடம் இருந்தும் குழப்பங்களை கண்டு சும்மா இருந்தால் அதுவே தீவினையாக மாறுமல்லவா? என்ன ரொம்ப குழப்பமா இருக்கா? மேற்கொண்டு படியுங்கள். :)

யோகம் என்பதும் தியானம் என்பதும் பலர் குழப்பிக்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

அஷ்டாங்க யோகம் என்ற ஒரு முறை உண்டு. அது யாமம், நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு நிலைகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்ற பெயர் பெறுகிறது.


பதஞ்சலி என்பவர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை என்ற அழைப்படுகிறார். அதற்கு முன் பலர் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றினாலும் புத்தக வடிவில் அஷ்டாங்க யோகத்தை வடித்தவர் பதஞ்சலி. இவர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவரை பற்றி கூற பல விஷயங்கள் உண்டு. இருந்தாலும் இவர் கூறும் சில வார்த்தைகளை கொண்டு நம் கேள்விக்கு பதில் தேடுவோம். அவர் கூறும் சூத்திரங்களில் முதலில் எடுத்தவுடனேயே கூறுவது

“யோகா சித்த விருத்தி நிரோதனா”

இதன் பொருள் , யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.

நம் மனநலத்தின் காரணமான சித்தம் மேம்படுகிறது. சித்தம் என்பது உணர்வதற்கு அரிய ஒரு உள் மன கட்டமைப்பு. பதஞ்சலி நம்முள் இருக்கும் மனம் என்ற உள்நிலையை மூன்று கட்டமைப்புகளாக பிரித்து பதஞ்சலி யோக சூத்திரத்தில் ஆய்வு செய்கிறார். அவை மனம், சித்தம், புத்தி என வகைப்படுத்துகிறார்.

பதஞ்சலியின் இந்த அலசல் அசாத்தியமானது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு மனிதன் மனோத்தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் இப்படி அலசமுடியுமா என யோசித்ததால் எனக்கு பல நாள் தூக்கம் கேட்டது உண்டு.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் இறைவன் என ஒருவன் இருக்கிறான் என ஒரே ஒரு இடத்தில் மறைமுகமாக கூறுவதுடன் நிறுத்திவிடுகிறார். வேறு எங்கும் இறைவனையோ வழிபாட்டு முறையை பற்றியோ கூறுவதில்லை.

நீ இருக்கிறாய் உனக்கு கூறுகிறேன் என்ற கட்டமைப்பில் அமைந்தது பதஞ்சலி யோக சூத்திரம். மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறலாம்.மேலை நாடுகளில் தத்துவ பள்ளிகளிலும், பல பல்கலைகழகத்திலும் ஆய்வு நூலாக இருக்கிறது.

நம்
நாட்டில் பதஞ்சலி யோக சூத்திரம் என்பதை ஒரு படித்த மனிதனிடம் கேட்டால் பதஞ்சலியா? - பாஞ்சாலியின் தங்கச்சியா என கேட்கக் கூடும்.

நம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமை அடையும் நோக்கத்தில் செய்யபடுவதே யோக முறைகள். யோக முறை என்பது முன்பு ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கே பயன்பட்டு வந்து.

யோக முறை இருவகையாக தற்காலத்தில் இருவகையாக பயன்படுகிறது. ஒன்று யோக பயிற்சி மற்றொன்று யோக சிகிச்சை.

யோக பயிற்சி என்பது ஆன்மீக பாதையில் நம்மை செலுத்த உதவும் கல்வி. முன்காலத்தில் குருவுடன் இருந்து பயணித்து கற்றதை ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கற்றுக்கொள்ளும் பாஸ்ட் புட் பயிற்சிகள்.

இதை தீவிரமாக முயற்சி செய்தால் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும். இத்தகைய
பயிற்சிகள் ஆன்மீக கிண்டர் கார்டன் என வேடிக்கையாக சொல்லலாம்.

யோக சிகிச்சை என்பது தனி நபரின் உடல் குறைபாடுகள், மனக்குறைபாடுகள் கண்டு அதற்கான பயிற்சியை அளிப்பது. எளிமையாக சொல்ல வேண்டுமானல் அஷ்டாங்க யோகத்தை மருந்தாக கொடுப்பது பலரும் யோக பயிற்சியையும், யோக சிகிச்சையையும் போட்டு குழப்பிகொள்கிறார்கள். யோக பயிற்சியால் நிச்சயமாக நோய் குணமாகாது. எதிர்காலத்தில் வரும் நோயை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால் யோக சிகிச்சையால் குணமாக வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

யோக பயிற்சி மற்றும் யோக சிகிச்சை இரண்டுமே மிகவும் தேர்ச்சி பெற்ற நபர்களால் வழங்கப்பட வேண்டும்.

’தேர்ச்சி பெற்ற’ என்றவுடன் பல்கலைகழக பட்டயம் கேட்டாதீர்கள். பட்டயங்கள் எதுவும் யோகத்தில் வேலை செய்யாது. முழுமையாக உணர்ந்தது நீண்ட நாட்கள் செய்த பயிற்சி மற்றும் அனுபவமே அவர்களுக்கு பயன்படும். பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பானவர்கள் என கூற முடியாது அல்லவா? அது போன்றதே இது.

Yoga therapy research என இணையத்தில் தேடிப்பாருங்கள். பல கோடி மதிப்பில் உலகின் பல இடங்களில் ஆய்வுகள் நடந்துவருகிறது. இந்தியாவில் பூனாவிற்கு அருகில் கைவல்ய தாம் என்ற இடமும், முதல் யோக பல்கலைகழகமான பீஹார் ஸ்கூல் ஆப் யோகாவும் யோக சிகிச்சைக்கான தன் ஆய்வுக்கூடம் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

யோக சிகிச்சையில் எப்படி நோய் குணமாகும் என என்னிடம் கேட்காதீர்கள் அதற்கு மூன்று பதிவுகள் எழுத வேண்டி வரும்.

என்னிடம் யோக பயிற்சி செய்ய வருபவர்களிடம், நோய் குணமாக்குதல், சிகிச்சை என்பது நான் செய்வதில்லை என திட்டவட்டமாக கூறிவிடுவேன். யோக பயிற்சி பற்றிய விளம்பரங்களிலும் அத்தகைய சொற்கள் இடம்பெறாது. அதனால் தான் நான் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த துறையிலும் தவறானவர்கள் இருக்கவே செய்கிறார்கள். நான் வசிக்கும் ஊரில் கூட ஒரு யோக பயிற்சி கழகம் செய்யும் விளம்பரம் மிகவும் வருத்தத்தை கொடுக்கும். நாள் பட்ட ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் இந்த யோக பயிற்சியில் குணமாகும் என சுவரொட்டி அடித்து பயிற்சிக்கு அழைக்கிறார்கள்.

ஹரித்துவாரில் ஒரு ’யோக மன்னன் புலிகேசி’ இருக்கிறார். அவர் தனக்கு மீடியா வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக புற்று நோய் குணமாக்குவேன், எய்ட்ஸை குணமாக்குவேன் என பேட்டிகள் தருவார். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பத்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பார். யோக பயிற்சி அவ்வாறு வழங்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அவரிடம் முகபொலிவுக்காக வாங்கிய ஆயுர்வேத களிம்பை பயன்படுத்தி பலர் பழைய டெலிப்போன் நிறத்தில் திரிகிறார்கள்.

இந்த புலிகேசி மூன்று மாதத்திற்கு முன் ஹோமோ செக்ஸுவல் என்ற நோயை குணமாக்குகிறேன் என பேட்டிகொடுத்தது. இவர் நோயை யார் குணமாக்குவது? கொடுமையின் உச்சம் இவர் வைத்துள்ள யோக மருத்துவ மனைக்கு பதஞ்சலியின் பெயரை வைத்தது தான்.

எத்துறையிலும் கெட்டவர்களும் நல்லவர்களும் இணைந்தே இருக்கிறார்கள். நாம் பதஞ்சலியை போல ப்ரதிபக்‌ஷ பாவனையில் இருந்தால் நமக்கு மேன்மை மட்டுமே ஏற்படும். பதஞ்சலி, யோகமுறை என பல விஷயங்களை நீண்ட தொடராகவோ, கட்டுரையாகவோ அமைக்கலாம் என இருந்தேன். சூழல் கருதி முடிந்த வரை சுருக்கமாக இங்கே எழுதி இருக்கிறேன்.

வலையுலகம் என்பது நாம் நினைத்ததை எழுதும் இடமல்ல. பலர் பார்க்கும் சந்தையில் நடந்து செல்லுவதை போன்றது. நாம் நினைத்த செயலை இங்கே செய்தோமானால் பிறர் நம் மேல் வைத்திருக்கும் பிம்பம் உடைய வாய்ப்புண்டு. அதுவும் ஊரில் ஒரு நல்லவராக காட்சி அளிப்பவர் திடிரென சந்தை மைதானத்தில் பல்டி அடித்தால் என்னை போன்ற பிச்சைக்காரர்கள் எல்லாம் கருத்து சொல்ல வேண்டி வரும்.

எழுதும் முன் நமக்கு ஒரு விஷயம் நன்றாக தெரிந்தால் மட்டும் எழுதுவது நல்லது. இல்லை என்றால் மொக்கை பதிவுகள் , வேட்டைக்காரன் விமர்சனம், தெரியாத பெரியாரிசத்தை நாத்தீகம் என்ற பெயரில் பதிவு ஏதோ ஒன்றை போட்டு ஜோதியில் ஐக்கியமாகிவிடுவது சால சிறந்தது.

Thursday, December 10, 2009

பழைய பஞ்சாங்கம் 11-12-2009

”ஸ்ஸ்...ப்பா இவனை வைச்சுக்கிட்டு....”

மாணவர்களுடன் கோவிலுக்கு பயணமாகி இருந்தேன்.எல்லோரும் கோவில் நுழை வாயிலில் செல்லும் முன்னால் என் காது அருகில் கிசு கிசுத்தான் சுப்பாண்டி.

“ஸ்வாமி நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை. எல்லோரும் சமம்னு சொல்லி தத்துவம் மட்டும் பேசரீங்க. ஆனா கோவிலுக்கு வந்தா எல்லா தகவலும் நீங்களே விளக்கறீங்க. இந்த ஒருமுறை நான் விளக்கவா? நானும் நீங்களும் சமம் தானே?” என்றான்.


திடீரென இப்படி கேட்க எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. சுப்பாண்டியை பார்த்து ’சரி’ என தலையாட்டினேன்.

கோவில் முன் பிரகாரத்தில் நுழைந்தவுடன் மாணவர்கள் அனைவரும் என்னை சூழ்ந்து நின்றார்கள்.. கோவிலின் உள் நுழைந்ததும் நான் தல வரலாறு கூறி கோவிலின் விஷேஷங்களை கூறுவேன். அதற்காக காத்திருந்தார்கள். சுப்பாண்டி என்னை புரியாமல் பார்க்க... நான் அவன் காதருகில்.. “தல வரலாறு...ம்ம்ம்ம்” என்றேன்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு...”முதலில் பிரேம புஸ்தகம் தான் தெலுங்கில வந்துச்சு.. அதுக்கு முன்னாடியே அமராவதியில் வர்க் பண்ண ஆரம்பிச்சுட்டார்...” என துவங்க.. எனக்கு புரிந்து அவன் கால்களை மிதித்து... நான் கோவிலின் தல வரலாறு கூறத் துவங்கினேன்.

-------------------------------------------------
ப்ரணவச் சுற்று

கோவிலுக்குள் வலம் வரும் பொழுது சண்டிகேஸ்வரர் என்ற சன்னிதி கருவறை பார்த்து இருப்பதை கண்டும் சிலர் அதில் கைத்தட்டி வணங்குவதை கண்டு மாணவர்கள் ஏன் இந்த சன்னதி அப்படி இருக்கிறது? ஏன் கைத்தட்டுகிறார்கள் என கேட்டார்கள்.

மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என கண்களில் கெஞ்சிய சுப்பாண்டி கூறத்துவங்கினான்.

“கிழக்கு பார்த்து இருக்கும் கோவில் கருவறை முன் நின்று வணங்கிவிட்டு, இடப்புறமாக வலம் வந்து கருவறையின் புன்புறமாக வரும் பொழுது நாம் அரைவட்டம் அடித்திருப்போம். சண்டிகேஸ்வர் சன்னிதியில் வணங்கிவிட்டு தீபஸ்தம்பத்தில் சுற்றை நிறைவு செய்தால், நாம் வலம் வந்த பாதை தமிழில் ’ஓ’ என வந்தது போல இருக்கும். உடலால் ப்ரணவம் சொல்லும் முறைதான் கருவறையை வலம் வருதல். இங்கே கைத்தட்டுவது எல்லாம் தப்பு. அமைதியா கடவுளை வணங்கனும். புரிஞ்சுதா?” என்றான் சுப்பாண்டி. எல்லோரும் அவனை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

சில மாணவர்கள் கேட்டார்கள், “எப்படி சுப்பு இப்படி கலக்குற? இதையெல்லாம் யார் சொல்லித்தந்தா?” என கேட்டனர். என்னை பார்த்தவாறே...கூறினான். “அதெல்லாம் தானா பொங்கும்...”

“பட்”... இது நான் தலையில் அடித்துக்கொண்ட சத்தம் தான். :)

------------------------------------------------------------
தமிழு வாலுக

இணையத்தில் தமிழ் வளர்த்துகிறேன் என சிலர் செய்யும் அளவு கடந்த மொழிபெயர்ப்பு தாங்க முடியவில்லை. தூய தமிழில் பேசுவது என்பது சாத்தியம் என்றாலும் அதில் பேசியே தீருவேன் என சத்தியம் செய்தது போல இவர்கள் செய்யும் கலாட்ட கொஞ்ச நஞ்சமல்ல.

500 வருடங்களுக்கு முன் தமிழ் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது என வித்தியாசத்தை உணர்ந்தாலே தமிழ் தன்னை மாற்றிக்கொண்டே வளர்ந்து கொண்டும் இருக்கிறது என புரியும்.

என் பேச்சிலும், எழுத்திலும் பிற மொழி கலப்பு உண்டு. (கோவியார் கூட நான் எழுதிய இடுக்கையின் வரிகளை தமிழில் மொழிபெயர்ப்பார் :) .) ஆனால் எனக்கு உருப்படியாகவும் முழுமையாகவும் தெரிந்த மொழி என்றால் அது தமிழ் மட்டுமே.

திருமந்திரம் துவங்கி சித்தர்கள் பாடல்கள் வரை நான் மிகவும் நேசிக்கும் பாடல்கள் இருப்பது தமிழில் தான். ஆனால் இணையத்தில் சிலர் பொருட்களின் பெயர்களை தமிழ் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

மென்பொருள், விசைப்பலகை என கணினி சார்ந்த பொருட்களை தமிழாக்கினால் நான்றாக இருக்கும். ஆனால் இவர்கள் அந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவன பெயர்களை தமிழாக்கம் செய்வது தான் வேடிக்கை. பிரவுசர் என்பதை உலாவி என மொழியாக்கலாம். ஆனால் firefox என்பதை செந்தழல் நரி என்றும் நெருப்பு நரி என்றும் மொழி பெயர்ப்பது கொஞ்சம் கூடுதல் (ovar - என்பதன் தமிழ் சொல்). இப்படியே போனால்...

சோனி நிறுவனத்தில் கணினியை சத்தில்லா மடிக்கணினி என சொல்லுவார்களா?
நுண்மெல்லிய ஜன்னல் ஏழு என Mircosoft windows 7 சொல்லுவார்களா?

இதை எல்லாம் கூட பொருத்துக்கொள்ளலாம். you tube - இதை மொழிபெயர்த்தால் அபத்தமாக இருக்கிறது. - you tube -யை கண்டேன். இதை தமிழ் படுத்திப்பாருங்கள் கஷ்டம் புரியும்...! பொருட்களை தமிழாக்கலாம். நிறுவனபெயர்களை தமிழ் “படுத்த”க்கூடாது என்பது இந்த தமிழ் சூழ் சில்வண்டின் வேண்டுகோள்.

---------------------------------------------------------------------------------

ஜென் கவிதை

பார்வைக் கோளாறு

கண் பார்வை மங்கியதால்
கண் கண்ணாடி அணிந்தேன்.
பார்க்கும் காட்சிகள் தெரிந்தது.
எங்கு பார்த்தாலும்
கண்ணாடி தெரியவில்லை.

Tuesday, December 8, 2009

விசுவல் போஸ்ட்


தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே
-திருமந்திரம் 129


வேதத்தின் கண்மணிகள் : ஸ்வாமி நீங்க பதிவு எழுத முடியாத அளவுக்கு பிஸியா இருக்கீங்க ஒத்துக்கறோம். அதுக்காக இப்படியா.....

Monday, December 7, 2009

God@gmail.com

log in செய்து அனைவருடனும் தொடர்பு உண்டாக்கினேன்.

ஸ்டேட்டஸ் மெசேஜில் “நான் இறைவன்” என்றேன்.


ஒரு பெருங்கூட்டம் வந்து

அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்?

எதற்கு இந்த ஏற்றத்தாழ்வு என்றனர்.


ஸ்டேட்டஸ் மெசே
ஜில் “நீயே அது” என்றேன்.

எங்களால் உணர முடியாத விஷயத்தை கூறி
குழப்புகிறாய் என புலம்பினார்கள்.


ஸ்டேட்டஸ் மெசேஜை “நான் அன்புமயமானவன்” என மாற்றினேன்.

சுனாமியில் இறந்தவர்களும், தீவிரவாதத்தில்

இறந்தவர்களுக்கும் உன் அன்பு எப்படிபட்டது என்றனர்.


இவர்களுக்கு புரியவைக்க முடியாது
என
இன்விஸிபிள் ஆனேன்...!

இப்பொழுது எல்லோரு are you there...
????
என நித்தமும் கேட்கிறார்கள்.

தேடுங்கள்...தேடுங்கள்
எல்லாம் நான் log off செய்யும் வரை தானே...