Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, October 14, 2019

இமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்

ஆன்மீக பயணக் கட்டுரை - விஜி ராம்
ஆன்மீக பயணங்கள் எதற்கு? இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறான் என்றால் தனியாக ஒரு பயணம் எதற்கு?
யோகாச்சார்யா வகுப்புகளில் சாமி அவரோட யாத்திரை, ஹிமாலயா அனுபவங்கள், கங்கை, பிரயாகை பற்றியெல்லாம் அப்பப்ப சொல்லுவார். அதிலும் காசி பயணங்களில் இருளில், படித்துறையில்  கங்கை பாகிரதியாக பூமிக்கு வந்த நிகழ்வை  அவரின் மொழியில் கேக்கும் போது நாமும் கங்கையுடன் கிளம்பி வருவோம். அப்போதிருந்தே பிரயாகை பற்றிய அவரின் அனுபவங்களும் விவரிப்பும் என்னைக்காவது நமக்கு வாய்க்குமான்னு ஏங்க வைத்திருக்கிறது. முக்திநாத் பயணத்தின் போது கேதார்நாத் போகும் எண்ணத்தை அவர் தெரிவித்தவுடன் முதல் ஆளாக கை தூக்கிவைத்தேன்.
உண்மையில் நீங்கள் ஆன்மிக உயர்நிலையை அடைய அதீதமாக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. குருவுடன் பயணப்படுவதே அனைத்திலும் பெரிய சாதனையாகவும், முயற்சியாகவும் எனக்கு தோனுகிறது. எத்தனை பணம், வசதி, வாய்ப்புகள் இருக்கலாம், நீங்க சொன்ன வேலையை செய்து முடிக்க ஆட்களும் இருக்கலாம், இவை எதுவும் ஒரு குருவுடன் பயணிப்பதற்கு ஈடாகாது.  குருவுடன் பயணிக்கும் போது எந்த விதமான சாதகங்களும் தேவையில்லை, அவரை பார்த்துக்கொண்டோ, அவர் மொழி கேட்டுக்கொண்டோ இருப்பதே போதுமானது. குரு எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டே இருக்கிறார், நாம் தான் அகமும் புறமும் கண்களை உபயோகிக்காமலே இருக்கிறோம். கேதார்நாத் பயணமும் குருவழி வாய்த்தது முன்வினைப்பயனே.

ஒரு வார பயணமாக கேதார்நாத் கிளம்புகிறோம், பஞ்ச பிரயாகைகளில் ஸ்நானம் செய்து, கேதாரீஸ்வர்ரையும், பத்ரி நாராயணனையும் தரிசித்து திரும்புவது திட்டம். திட்டமிட்டதெல்லாம் நடந்தது, ஆனால் அதற்கு நடுவில் நிகழ்ந்தவை அனைத்துமே வாழ்நாள் பாடங்கள். காலை பதினொரு மணிக்கு ஹைதராபாத் சென்று அங்கிருந்து டேராடூன், டேராடூனிலிருந்து ஹரித்துவார் சென்றடையும்போது இரவு 7 மணி.  கங்கா ஆரத்தி முடிந்திருக்கும் என்றாலும் கங்கையை தரிசிக்கலாமே என்று கிளம்பினோம்/. எங்களுக்கு முன்பாகவும், முதல் நாளும் வந்திருந்த அனைத்து மாணவர்களும் சேர்ந்து கங்கையை கண்டு, தரிசித்து ஸ்நானம் செய்து தங்கியிருந்த இடத்திற்கு வந்து அடுத்தநாள் முதல் மேற்க்கொள்ளப்போகும் பயணத்தை குறித்து ஒரு சிறு அறிமுக உரையுடன் ஓய்வெடுக்க சென்றோம்.
எதிர்பாராத அதிர்ஷ்ட பரிசு எப்போதாவது கிடைக்கும் போது அதன் சந்தோசமே தனிதான். அப்படி அடித்த அதிர்ஷ்டம் தான் வசிஷ்ட குகை. எங்கள் பயணத்திட்டத்தில் உடனே இல்லாமல் இருந்தது, ஆனாலும் காலையில் முதல் தரிசனமாக வசிஷ்ட குகை. சில இடங்கள் உங்களை மீண்டும் மீண்டும் வசிகரிக்கும், அந்த இடமும் அதன் வாசனையும் அங்கிருக்கும் சூழலும் உங்களை மயக்கும், அது போன்ற இடம் எனக்கு வஷிஷ்ட குகை. வசிஷ்ட குகையில் குடியிருக்கும் இறைவனை தரிசித்து மந்திரஜெபம் முடித்ததும் காலை உணவும் அங்கேயே முடித்து தேவப்பிரயாகை நோக்கி பயணிக்கிறோம்.

பஞ்ச பிரயாகைகள்
தென்னிந்தியாவில் கோவிலும் விக்ரகங்களும் புனிதமானவை என்றால் வட இந்தியாவில் நதி தீரங்களே சிறப்பானவை. அதிலும் பிரயாகை எனப்படும் நதிகளின் சங்கமிக்கும் இடங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாகவும்சிறப்பானவையாகவும் இருக்கிறது.

வேதகாலங்களில் ரிஷிகள் வருடக்கணக்கில் தவமிருப்பார்களாம், இறைவன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் பஞ்ச பிரயாகைகளில் நீராடும் வரம் வேண்டுவார்களாம். எந்த தவமும் செய்யாமல், கேட்ட நிகழ்வுகளை அடிக்கடி மனக்கண்ணால் யோசித்து, என்றேனும் வாய்ப்பு வரும் என்று காத்திருந்த பஞ்ச பிரயாகையை நிஜத்தில் தரிசித்து அதில் நீராடப்போகிறோம் என்பதே மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். 2016 ஆண்டு இதே போல் பிரயாகைக்கு திட்டமிட்டு சென்றிருந்தோம். கடும் மழை காரணமாக தேவப்பிரயாகையுடன் திரும்பினோம்.  இந்த பயணங்களால் அறியப்படும் நீதி திட்டமிடுவதுடன் நம் வேலை முடிந்தது. நிறைவேற்றுவது இயற்கையின் பெருங்கருணையே.
தேவப்பிரயாகை
எல்லா இடங்களிலும் கங்கையை முன்னிருந்த்தியே எங்கள் யாத்திரை அமையும், இம்முறை கங்கையின் மூலத்தை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. முதலில் தேவப்பிரயாகை.  சடோபந்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும்கௌமுகியிலிருந்து பாய்ந்தோடி வரும் பாகீரதியும் சங்கமித்து இங்கிருந்து தான் கங்கையாக பெயர் பெறுகிறார். கலங்கிய நிறத்தில் அலக்நந்தாவும்இளம் பச்சை நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கும் இடம் அத்தனை அற்புதம். காணக்கண்கள் போதாது, மனமெல்லாம் நதியாகவே பிரவாகிக்கும். தேவப்பிரயாகை மூன்று நதிகள் சங்கமிக்கிறது. அலக்நந்தாவும், பாகீரதியும் கண்களுக்கு தெரிந்தும், பிரயாகையில் குடியிருக்கும் நெட்டுக்குத்தலான படிகளில் ஏறி சென்றால் அழகான அமைதியான ராமர் கோவில். பெரியாழ்வார் ரகுநாதனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடி, “கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டமெனும் கடிநகர் என்று புகழ்கிறார்கோவிலுக்குள் பாசுரங்கள் பதியப்பட்டுள்ளன. எங்கு சென்றாலும் தமிழ் மணக்கிறது.


ருத்ரபிரயாகை.

இது ’அலக்நந்தா’ நதியும் ‘மந்தாகினி’ நதியும் சங்கமிக்கும் இடம். இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாலும்ருத்ர வீணையில் இசை மீட்டியதாலும் இவ்விடம் ருத்ர பிரயாகை என்று வழங்கப்படுகிறது. நாரதர் தன் கர்வத்தால் தவறிழைத்து சிவனிடம் வீணையை வேண்டிய இடம். ருத்ரம் என்ற பெயருக்கு ஏற்பவே இங்கு இரு நதிகளும் பெரும் சப்தத்துடனும் ஆக்ரோசமாகவும் சந்திக்கின்றன. ஆனால் அதையும் தாண்டி அங்கு தெய்வீகமே தெரிகிறது. நதிக்கரையில் அமர்ந்து மந்திரஜெபம் செய்யும்போது நதியின் சப்தமும் குரு மந்திரம் போன்றே தோன்றியது. ஏனோ என்னை பெற்றவர்கள் நினைவு வந்தது. இதுபோன்ற ஒன்று இருக்கிறது என்றோ அங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றோ எதுவுமே தெரியாமல் இயற்கையோடு கலந்துவிட்டனர். இந்த பிரணவ பீடமோ, ஸ்வாமி ஓம்காரோ என் வாழ்க்கையில் வந்திராவிட்டால் நானும் அதே போல தானே. நன்றி அனைத்திற்கும்.

ருத்ரபிரயாகையிலிருந்து கிளம்பி குப்தகாசியை அடைகிறோம். நள்ளிரவிற்க்கும் மேலானதால் ஓய்வென்பது சிறிது நேரமே, விடியற்காலையில் கேதார்நாதரை தரிசிக்க கிளம்பவேண்டும்.

கேதாராஸ்ரமம்.

கேதார் – என் வாழ்நாளில் மறக்கமுடியாத யாத்திரை, இன்னொரு முறை செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியாது. ஆனாலும் இதுவே என் கடைசி நிமிடம் வரை நினைவிருக்கும். குப்தகாசியிலிருந்து சிதாபூர் பஸ் நிலையம் வரை நம் வண்டி போகும், அதன் பிறகு சோனாப்ரயாக் வரை ஜீப், அங்கிருந்து கவுரிகுண்ட் எனப்படும் கேதாரத்தின் அடிவாரம் வரை ஜீப். மொத்தம் இரண்டு ஜீப் பயணம். இரண்டுக்கும் நடுவிலும் குறைந்தது ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் நடையும் இருக்கும்.
 கனவொன்று நிஜமாகிறது. இதோ கேதாரமலையில் நடக்க ஆரம்பிக்கிறோம். கவுரி குண்ட்டில் வென்னீர் ஊற்று இருக்கிறது. 2013 பெய்த பேய் மழையில் இங்கு புவியியல் அமைப்பே மாறி நிறைய ஊற்றுகள் அழிந்துவிட்டன. நாங்கள் அங்கு குளிக்கவில்லை. பார்த்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறோம். எல்லா மலைக்கோவில்களையும் போல் இங்கும் குதிரைகளில் போகலாம், ஹெலிகாப்டரில் போகலாம், டோலி எனப்படும் நால்வர் சுமந்து செல்லும் தொட்டில் போன்ற பயணமும் உண்டு, ஒரே ஒருவர் தேயிலை கூடை போல உங்களை சுமந்தும் செல்வார்கள். நாங்கள் மொத்தம் 40 பேர், 9 பேர் முன்கூட்டியே ஹெலிகாப்டரில் புக் பண்ணியிருந்தோம்.  மற்றவர்கள் நடக்கலாம் என்று ஆரம்பித்தோம். ஒரே மாதிரி நடக்க உடியாது என்பதால். 8 கி, மீ தூரத்தில் இருக்கும் பீம் பாலியில் சந்திக்கலாம் என்று குழுவாக பிரிந்தனர். சிறிது நேரத்தில் நான் மட்டும் தனியாக நடந்து கொண்டிருந்தேன். சுற்றியும் அருவிகள், நேராக ஆகாயத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறதோ என்னும் அழகில், இன்னொரு பக்கம் காதடைக்கும் சத்தத்தில் ஆர்பரித்து ஓடும் நதி.  அதையெல்லாம் எழுத்தில் கொண்டுவர முடியாது. நெட்டுக்குத்தலான பாதை, சில இடங்களில் படிகள், சில இடங்களில் கற்கள், குதிரைகள் அவற்றீன் சாணம், அங்கன்னு ரெயின் ஷெல்டர்னு அரைக்கிலோ மீட்டருக்கு ஒன்னு. இது எதுக்கு இத்தனைன்னு யோசிச்சிட்டே மற்றவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தாயிற்று. இதற்கு மேல் குதிரையில் போகலாம் நு தோணியது. என்னுடன் சிலரும் வர விருப்பம் தெரிவிக்க, குதிரைக்கு காத்திருந்தோம். அன்னைக்கு அங்கு எதோ அதிகாரிகளின் ஆய்வு நாளாம், 12 மணிக்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்பதாலும் ஒரு நாளைக்கு குதிரை இருமுறைதான் போக வேண்டும் என்பதாலும் எங்களுக்கு குதிரையே கிடைக்கவில்லை. மழை வேறு கொட்டித்தீர்த்தது. ஏற்கனவே மழையில், அருவியில்னு ஷூ நனைந்து கால்கள் இழுக்க ஆரம்பித்திருந்தது.   

ஒருவழியாக 2 மணி நேர காத்திருப்புக்கு பின் உறுதியா குதிரை கிடைக்காது நடக்கலாம்னு மீண்டும் ஆரம்பித்தோம்.  மேலும் மூன்று கிலோ மீட்டர் நடந்ததும் கேதார் 6 கிலோ மீட்டர்னு போர்ட். சிறிது ஓய்வு எடுக்கலாம்னு உக்கார்ந்ததும் எங்கிருந்தோ நாலு அழகான குதிரைகள்டன் இரண்டு பசங்க வந்தாங்க. மாலை 5 மணி ஆகியிருந்தது. வருவார்களோன்னு தயக்கத்துடன் கேட்டதும் வருவதாக ஒத்துக்கொள்ளவே அங்கிருந்து குதிரையில் சென்றோம். நேரமாகஆக விரைவாக இருட்டியது. சரியாக குதிரை ஸ்டேண்டில் நாங்கள் இறங்கியதும் வானத்தை உடைத்து பெய்த மழையில் சிறிது அரண்டுவிட்டோம். குதிரை ஸ்டாண்டிலிருந்து கேதார் ஆலயத்திற்கு 2 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். வழி இல்லை, வெறும் கற்கள் மட்டுமே, கீழே விழுந்தால் நேரா கபால மோட்சத்துடன் கைலாயம். (அதானே பக்கம்) மழை விட்டதும் மெதுவாக நடந்து நாங்கள் தங்க வேண்டிய இடத்தை அடைந்த பின் தான் தெரிந்தது. ஹெலிகாப்டரில் வந்தவர்கள் திரும்பி செல்லவில்லை, நடந்து வந்த மற்றவர்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று. ஸ்வாமியிடமிருந்தும் மற்றவர்களிடமிருதும் வெகுநேரத்திற்கு பிறகே தகவல், மழையில் சிக்கியதால் அவர்கள் பாதியில் தங்கி காலையில் வருவதாக. களைப்பும் பதட்டமுமாக, மழையும் மைனஸ் டிகிரி குளிருமாக தூங்காத இரவு விடியக்காத்திருந்தோம். காலை 5.45க்கு கோவிலுக்கு வந்துவிட்டதாக ஸ்வாமிஜியின் மெசேஜ் பார்த்ததும் அடுத்த இரண்டாவது நிமிடம் அங்கிருந்தோம். திவயமான கேதார் நாதர் தரிசனத்திற்கு பிறகு மனம் பெரும் ஆசுவாசமாகியிருந்தது.


சுற்றிலும் பனிச்சிகரங்கள், நடுவே அடிமுடிகாணா பரம்பொருள். ஒரு நிம்மதியுடன் மந்திரஜெபம் செய்ய கோவில் சுற்றுசுவரில் நல்ல இடமாக பார்த்து உக்கார்ந்தேன். உக்காரும் போது ஹெலிகாப்டரில் போகலாம், இது எதுக்கு இத்தனை ரிஸ்க் என்று பலதும் எண்ணிக்கொண்டே மந்திரஜெபம் செய்ய ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் கண்விழித்து பார்த்தால் என் அருகில் பத்து ரூபாய் நோட்டு. யாரோ தர்மம் செய்திருக்கிறார்கள். பார்த்ததும் சிரிப்பு அடக்கமுடியவில்லை. அடுத்த நொடியே இது எதற்கு எனக்குன்னு மூன்று நாட்கள் தொடர்ந்து யோசனையாகவே இருந்தது. எதற்காக இருந்தாலும் அந்த இடத்தில் என்னுடைய ஈகோவோ என்னவோ அது கொஞ்சம் அடிவாங்கியது தான்.  என்னதான் இருக்கட்டும் இறைவன் இடும் பிச்சைதான் எல்லாமே என்று சொல்லாமல் சொன்னது. முறையாக தினம் ஒரு கோவிலுக்கோ நாலு வேளை பூஜையோ செய்யாத ஆள் நான், இப்ப வரைக்கும். ஆனால் நான் இருந்த நிலையிலிருந்து இன்றிருக்கும் நிலை என்றோ என் பெற்றோரோ நானோ செய்த எதோ ஒரு நல்ல செயல், அல்லது இதோ இந்த மாதிரி இறையின் பிச்சை. நினைக்க நினைக்க கொஞ்ச நாட்களாக என்னை உறுத்திக்கொண்டிருந்த சில பல விசயங்கள் பற்றி தெளிவாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது. அதே போல் இனிவரும் நாட்களின் எது எனக்கு தேவை, எதை நோக்கி நான் செல்லவேண்டும், முயற்சிக்கவாவது வேண்டும்னு புரிந்தது. நன்றி இறையே!

அனைவரும் வந்து தரிசனம் ஆனதும் கீழே இறங்க ஹெலிகாப்டரில் சென்றவர்கள் தவிர அனைவரும் குதிரையில் கிளம்பினோம். நானும் ஸ்வாமிஜியும் முன்னதாக இறங்குகிறோம். குதிரையில் இறங்குவது உசுரை கையில் பிடித்துக்கொண்டு வருவதுதான். சுற்றிலும் அடர்ந்த மலைக்காடும் வான் முட்டும் சிகரங்கள் அவற்றின் நடுவில் ஓம் என்னும் எழுத்து பாறையாக இருப்பதும் அதை சுற்று அருவி அதே வடிவில் வருவதும் ஸ்வாமிஜி காட்டிய போது இதயம் நின்று துடித்தது. ரிஷிகேஷில் ஏறும் போதே நினைத்தேன், இந்த இயற்கையை யாரும் எதுவும் கொண்டு அடக்க முடியாதுன்னு. கேதார் ஏறும் போது, இமயம் எத்தனையோ அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் தன்னுள் வைத்திருக்கிறதுன்னு நினைச்சிட்டே இருந்தேன். இதோ இந்த ஓம் காட்சி எதையாவது எனக்கு சொல்ல வருதா? வேற யாராவது சொன்னா நம்புவார்களா? யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நான் கண்ணாற கண்டேன், இனியொரு முறை இங்கு வரும் வாய்ப்பிருந்தால் நின்று நிதானமாக தரிசிப்பேன்..மாலை 5 மணிக்கு குப்தகாசியை அடைந்து உணவருந்தி உடனே பத்ரி நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறோம். பிப்பல்கோட்டி சென்று தங்கி மீண்டும் துவங்குவோம்.

பிப்பல் கோட்டி
நள்ளிரவிற்கும் மேல் ஆனது இங்கு சென்று சேர காலையில் உணவை முடித்து பத்ரி கிளம்புகிறோம். நடுவில் ஜோஷி மட் எனப்படும் திருப்பிரிதி , திவ்யதேசங்களில் ஒன்றான தலம் உள்ளது, நரசிம்மர் சாளக்கிராம வடிவில் இருக்கிறார்.  பத்ரியில் குளிர்காலங்களில் ஆலயம் மூடப்படும் போது பத்ரிநாராயணன் இங்கு தான் ஆறு மாதம் இருப்பார். அருகிலேயே பழைய கோவில் உள்ளது, அங்குள்ள அஷ்ட புஜ விநாயகரும், நவதுர்க்கையும் விஷ்ணுவும் கற்சிற்பங்கள் என்றாலும் நேரில் இருப்பது போல் அத்தனை உயிர்ப்புடன் இருக்கின்றனர். ஜோஷி மட் தரிசித்து விஷ்ணு பிரயாகை அடைகிறோம்.

 விஷ்ணு பிரயாகை :
பிரயாகைகள் அனைத்துமே குறைந்தது ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.. நெட்டுக்குத்தலான படிகளில் ஏறி இறங்க வேண்டும். விஷ்ணு பிரயாகையில் இறங்கி போட்டா எடுக்கும் போது கவனிக்கவில்லை, எதிர் வெயிலாக இருந்தது. கீழே பார்த்தால் இறந்தவரை எரித்துக்கொண்டிருந்தனர். ஒரு நிமிடம்  நடுக்கமாகிவிட்டது. அப்பா அம்மா, நெருங்கிய உறவினர்கள்னு நிறைய பேரை வாரிக்கொடுத்தாச்சு, மின் மயானத்தில் கடைசி சாம்பல் கிடைக்கும் வரை உக்காந்திருக்கேன். காசியில் மணிகர்ணிகாவில் அமைதியான நிறைய உடல்கள் எரிவதை பார்த்ததும் உண்டு. ஆனால் இது , உடல் எரிகிறது உறவினர் ஒருவரும் அருகில் இல்லை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆக்ரோசமான நதி. விஷ்ணு பிரயாகையில் நதிப்பிரவாகம் மைனஸ் டிகிரியில் ஓடுகிறது. காலை வைத்ததும் மறத்து போகும் குளிர், உடனே ஸ்நானம் செய்து, மீண்டும் அங்கிருந்த கோவிலுக்கு சென்று நதி நோக்கி அமர்ந்து வெகுநேரம் உடல் எரிவதை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆணோ பெண்ணோ, எத்தனை ஆசை, விருப்பம், கோபம், வன்மம், சாதனை, பெருமை  என்னவெல்லாமோ இருந்திருக்கும். பெயர் கூட இருந்திருக்கும்.  எத்தனையோ பேர், எத்தனையோ முறை, எத்தனையோ நோக்கங்களுக்காக  அழைத்திருப்பார்கள், இந்த உடலும் ஏகப்பட்ட உடல் எரிவதை பார்த்திருக்கும், என்றேனும் இப்படி நதிக்கரையில் யாருமில்லாமல் எரிவோம் என்று நினைத்திருக்குமா?  அதை பார்த்துட்டு இன்னொரு உடல் அதிர்ந்து புலம்புவதை அறியுமோ? முழுதும் எரிந்தபின் சாம்பல் கூட இல்லாமல் இழுத்து நதியில் விடுகின்றனர். அந்த நதி ஓடும் வேகத்திற்கு எதுமே தங்காது, நொடியில் அந்த இடம் சுத்தமானது, கண்ணுக்கெட்டும் தூரம் வரை எரிந்த எந்த அடையாளமும் இல்லை. இந்த யாத்திரையில் எல்லாரும் அறிந்த உண்மையை பொட்டில் அடித்து புரியவைத்த இடமிது. அலக்நத்தாவுடன் தவுலிகங்கா சங்கமிக்கும் இடம்.. நன்றி கங்கையே!!!


மானா வில்லேஜ்

மாலை 4 மணிக்கு மணா வில்லேஜ் எனப்படும் இந்தியாவின் கடைசி கிராமத்தை அடைகிறோம். இங்குதான் சரஸ்வதி நதி உற்பத்தி ஆகி பூமிக்கு மேல் தெரிகிறது.  பீமன் பாறை என்னும் பெரிய பாறையும் இருக்கிறது. பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் வழியில் சரஸ்வதி நதியை கடக்க பெரிய பாறையை எடுத்து வீசியதாகவும் அது பாலம் போல ஆனதாகவும் கூறப்படுகிறது. மலையில் எங்கோ ஓரிடத்திலிருந்து சரஸ்வதி வெகு உற்சாகத்துடன், கவலையற்ற கன்னிகைபோல் ஆர்பரித்து  துள்ளிகுதித்து வருகிறார். மிகப்பிரம்மாண்டமாகவும் சிறிது அச்சமூட்டுவதாகவும் அவரின் தோற்றமுள்ளது. வியாசரும் விநாயகரும் மஹாபாரதம் எழுதும் போது சரஸ்வதியின் இந்த அதீத உற்சாக கூச்சலால் இடையூறு ஏற்பட்டு வியாசர் சரஸ்வதியை சத்தமின்றி  பூமிக்குள் பாய சாபமிட்டாராம். சரஸ்வதிக்கென்று ஒரு கோவிலும் உண்டு, அவரை  தரிசித்து கொஞ்சம் மேலே இருக்கும் விநாயகர் குகைக்கு சென்று அங்கிருக்கும் கணபதியை தரிசித்து இன்னும் நெட்டுகுத்தலாக ஏறும் பாதையில் ஏறி வியாச குகையில் அவரையும் தரிசித்து பத்ரி திரும்புகிறோம்.

பத்ரிநாத் : பத்ரி விஷால் : பத்ரி நாராயணன்
பத்ரி என்றால் இலந்தை பழமாம், ஒரு காலத்தில் இலந்தை பழங்கள் சூழ்ந்த வனப்பகுதி, நரநாராயணர்கள் தவமிருந்த தால் ஒரு புறம் நரநாராயண மலையும், மறுபுறம் நீலகண்ட மலையும் சூழ முன்னே தப்த குண்டம் எனப்படும் வென்னீர் ஊற்றில் குளித்து பத்ரிநாராயணனை தரிசிக்கின்றனர். நாங்கள் இரவு 7 மணிக்கு சென்றதால் குளிக்க முடியவில்லை, கடும் குளிரும் காரணம். விஷ்ணு சகஸ்கரநாமாவளி பூஜைக்கு முன்பதிவு செய்திருந்தோம். கிட்டதட்ட 40 நிமிடங்கள் இறைவனுக்கு முன் அமர்ந்து நாங்கள் 40 பேர் மட்டும் கண் குளிர, மனம் குளிர, செவி குளிர பத்ரிநாராயணனை தரிசித்தோம். ஏக இறையை என்ன பெயரில் அழைத்தாலும் ஆதம திருப்தியும், அமைதியும் தருவதே அந்த பரம்பொருளை வணக்கும் நோக்கம். வணங்கி தங்கியிருந்த இடத்திற்கு வந்து, இரவு சத்சங்கம் முடித்து ஓய்வெடுத்தோம்.  கர்ணபிரயாகை, நந்த பிரயாகையை தரிசிக்க விடியற்காலையில் கிளம்பினோம்.

நந்த பிரயாகை
கடும் காய்ச்சல், ஜலதோசம், உடல் வலின்னு பஸ்ஸில் ஏறீயதும் மயக்கமாதிரி ஒரு தூக்கத்திற்கு போயிட்டேன். கண்ணைத்திறந்தால் நந்த பிரயாகையில் நிற்கிறோம். இறங்கி போய் குளிக்க முடியுமான்னு ஒரு நிமிடம் யோசிச்சேன். ஒரே ஒரு நிமிசம் தான், போற உசுரு பிரயாகையில் போகட்டும்னு கிளம்பினேன். அப்படி ஒரு நிமிடம் யோசித்ததற்கு பலன், கால் தடுமாறி கீழே விழுந்து கணுக்கால் வீங்கிருச்சு. வழி தவறி அரைகிலோமீட்டர் படி இறங்கி ஏறி ஒரு வழியா வெகு தூரம் நடந்து நந்த பிரயாகை சென்றடைந்தோம். பனி உருகிய நதி தான், ஆனாலும் பக்கத்தில் போனதும் பரவசமானது. இனி என்று கிடைக்கும் இந்த வாய்ப்புன்னு டக்குனு இறங்கிட்டேன். ஒரே ஒரு குளியலில் உடம்பின் வலியும் போனது, புத்துணர்ச்சியாகவும் இருந்தது. அலக் நந்தாவுடன் நந்தாகினி நதி சங்கமிக்கும் இடம், கிருஷ்னனின் வளர்ப்பு தந்தை நந்த கோபன் அரசாண்ட இடம், எல்லா பிரயாகைகள் போல் இங்கும் கோவில் உள்ளது

கர்ணபிரயாகை
நந்த பிரயாகையிலிருந்து 22 கிமீ தூரத்தில் கர்ணபிரயாகை உள்ளது. கர்ணனுக்கு கவச குண்டலங்கள் கிடைத்த இடம், அலக்நந்தாவுடன் பிண்டார் நதி சங்கமிக்கும் இடம். பெரிய படித்துறையும் ஒரு பக்கம் ஆர்பரிக்கும் அலக்நந்தாவும் இன்னொரு புறம் அமைதியான பிந்தார் நதியும் சற்றூ தொலைவில் சேருகின்றனர். கர்ணனுக்கும் தேவிக்கும் கோவில் உள்ளது.  மாலையானது, மதிய உணவை முடித்து ஹரித்துவார் சென்றடைகிறோம். விடியற்காலை 3 மணி ஆகிவிட்டது.

ஹரித்துவார்
2016-ல் பஞ்ச பிரயாகையை பார்க்க வந்து மழையின் காரணமாக ஹரித்துவார் ரிஷிகேஷில் தங்கி குளிரக்குளிர கங்கையை தரிசித்து மகிழ்ந்திருக்கிறோம். காலையில் கங்கை தரிசனத்துடன் தசமஹா வித்யா பீடமும், சக்தி பீடத்தில் ஒன்றுமான சதி தேவி கோவிலை அடைந்து தரிசனம் செய்து, இந்த யாத்திரையை நல்லபடியாக முடித்து வைத்த இறையருளுக்கு நன்றி சொல்லி கோவை திரும்பினோம். இந்த இடங்களுக்கெல்லாம் போக நினைப்பவர்கள் நல்ல உடல்நிலையுடன், நன்றாக நடக்கும் தன்மையிலிருக்கும் போதே செல்வது நல்லது. பின்னாளில் இருக்கும் இடத்திலிருந்து மனதில் தரிசித்தால் போதும். வயதான பின் இங்கெல்லாம் செல்வது சிறிது கடினமே
ஆன்மீக பயணங்கள் எதற்கு? இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறான் என்றால் தனியாக ஒரு பயணம் எதற்கு?
இந்த கேள்விக்கெல்லாம் முழுதான பதில் இல்லாவிட்டாலும் ஓரளவு இந்த யாத்திரையில் தெரிந்து கொண்டேன். ஆன்மீகமும் ஒரு அனுபவமே. மதம் சார்ந்த நம்பிக்கைகள் அதிகமில்லாவிட்டாலும், நம்மிலும் மேம்பட்ட ஒரு சக்தி இருப்பதிலும் அது நம்மை எல்லாவிதத்திலும் வழி நடத்துகிறது என்பதிலும் பெரு நம்பிக்கை உண்டு. போலியான பக்தியோ சிரத்தையோ தேவையில்லை. மனம் எதை நினைத்து, எதை நோக்கி பயணிக்கிறதோ அது எவ்வழியேனும் நிறைவேறும். ஆன்மீகமும் ஒரு அனுபவமே, எதையாவது என் அனுபவம் என்று விவரிக்க முயன்றால் குருடர்கள் சேர்ந்து யானையை அறிந்து கொண்டதைப்போல் ஆகிவிடும்.  ஆன்மீகமும் அனுபவமே, கலர்கலராக படங்களில் வழிபடுவதோ, ஒரு தீப ஒளியை மட்டும் வணங்குவதோ அது தனிமனித விருப்பம். அந்த அனுபவத்தை விவரிப்பது கடினம். வருங்காலத்திலும் இது போன்ற யாத்திரைகளில் பங்கேற்க குருவருள் ஆசிபுரியட்டும். நாம் குருவின் அருகில் இருந்தால் சடங்குகளோ ஆன்மீக பயிற்சியோ தேவையில்லை, குருவின் இருப்பே அனைத்தும் செய்யும். 
குரு எப்போதும் கற்றுக்கொடுப்பதில்லை, தனது வாழ்கை அனைவருக்கும் போதிக்கிறார். குரு நம்மை எதை செய்ய சொல்கிறாரோ அதுவே பெரிய ஆன்மீக செயல், இந்த யாத்திரையில், இந்த அனுபவங்கள் அனைத்தும் குரு மூலம் எனக்கு அளிக்கப்பட்டிருப்பது என் வரையில் ஆகப்பெறும் அனுபவமே. இதற்காக என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.

0 கருத்துக்கள்: