Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, October 18, 2019

இமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2


கட்டுரை எழுதியவர் - மணிகண்டன்

                  அனைவருக்கும் நமஸ்காரம் இறையருளும் குருவருளும் துணைபுரிய எங்களின் ஹிமாலய பயண அனுபவத்தை பற்றி இங்கு பதிவிடுகிறோம். சுவாமிஜி ஹிமாலய பயண அறிவிப்பு வந்தவுடன் எங்கள் மனம் அடைந்த மகிழ்சிக்கு அளவில்லை. பலநாள் பசியில் இருப்பவருக்கு தேனில் ஊறிய பலாச்சுலை கிடைத்தது போன்று இருந்தது. காசி முக்திநாத் கும்பமேளா பயணத்தில் கலந்து கொள்ளாததால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று சுவாமிஜியிடம் விண்ணப்பித்தோம் சுவாமிஜியின் ஹிமாலய வாட்ஸ்அப் குருப்பில் இணைத்ததும் இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி உரைத்தோம் 

சில நாட்களுக்குப்பிறகு சுவாமிஜி கேதர்நாத் கோவிலை அடைய 4 வழியைக் கூறினார்.

1. குதிரை

2. ஹெலிகாப்டர்

3. டோலி

4. நடத்தல்


இந்த கேள்வி எங்களை சிறிது திகிலடைய செய்தது. இருப்பினும் சுவாமிஜியின் முடிவே எங்களின் வழி எனக் கூறிவிட்டோம். குருப்பில் ஒருவர் சுவாமிஜியே சொல்லுமாறு கேட்டார் அதற்கு சுவாமிஜி பர்வதமலை போன்றது என எங்களுக்கு நடந்துவிட முடியும் என நம்பிக்கை ஊற்றெடுத்தது.


பிறிதொருநாளில் பனிமூடியமலையில் ஹெலிகாப்டரில் இருந்து வீடியோ எடுத்த காட்சியை பகிர்ந்து திகிலூட்டினார.; செப்டம்பர் 19 முதல் 25 வரையிலான பயண விவரங்களையும் என்ன கொண்டு வரவேண்டுமென்ற விவரங்களையும் கொடுத்தார். பயணத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு தேவையான பொருட்களை வாங்கி பேக்கங் செய்ய ஆரம்பித்தோம். 18ந் தேதி இரவு 12 மணிக்கு முழுவதும் முடித்தோம். இத்தனை நாட்களாக சென்னையில் மழையே இல்லை.ஆனால் இன்றைய இரவிலோ சோ… என மழை கொட்டியது.

காலையில் 7 மணிக்கு செக்கின் செய்ய வேண்டியதால் காலை 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு ஆயத்தமாகி விட்டோம். வுhடகை கார் 6:10க்கு வருமாறு புக் செய்தோம். ஆனால் 6:50க்கு வந்தது. மழையோ நிற்காமல் எங்களை வாழ்த்தி வழியனுப்ப பொழிந்துகொண்டே இருந்தது.

கார் சிறிது மெதுவாகவே ஊர்ந்தது. இதயமோ மிக வேகமாக படபடத்தது. ஒரு வழியாக கார் மிதந்து 7:46க்கு சென்னை விமான நிலையத்தை அடைந்தது. 9 மணிக்கு விமானம் சென்னையிலிருந்து ஸ்ஸ்ஸ்… என புறப்பட்டது. 

      விமான பயணம் எனக்கு சிறிது பயமான பிராயணமாகவே இருக்கும். புல வருடங்களுக்கு முன் 2 முறை பயணம் செய்திருக்கிறேன். இதனால் சிறிது பதட்டம் மனதில் இருந்துகொண்டே இருந்தது.நாங்கள் அனைவரும் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தோம். விமானம் மேலே பறக்கத் துவங்கும்முன் கண்களை இறுக்க மூடிய நிலையில் இருந்தேன் பயம் தெரியாமல் இருப்பதற்காக. இருந்தும் விமானம் மேலெழும்போது நெஞ்சம் படபடத்தது. சிறிது நேரத்திற்குப்பின் அமைதி அடைந்தது. இப்பொழுது மரங்கள் வண்டி கட்டிடம் அனைத்தும் சிறிய பொம்மைபோல் தெரிந்தது. பிறகு மேகத்திற்கு மேலே வானத்தில் விமானம் தஞ்சமடைந்தது. மேகங்கள் அனைத்தும் பார்பதற்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் போல இருந்தது. பழைய படங்களில் வருவதுபோல தேவர்களும் நாரதரும் வருகிறார்களா என்ற மாய எண்ணம் எங்களுக்கு வந்துபோனது. 

       அனுவும் திருமதி.அமுதா அவர்களும் சைலன்ட் ரிட்டிரீட்ல் கூறியபடி தியானம் செய்ய முயற்சிக்கலாம் என்றார்கள். அதை ஆமோதித்து அனைவரும் கண்கள் மூடிய நிலையில் சுவாசத்தை விமானத்தின் ஓசையோடு இணைக்க ஆரம்பித்தோம். 2 மணி நேர பயணத்திற்குப்பின் மும்பை விமான நிலையத்தை அடைந்தது. எங்களுடன் கொண்டு வந்திருந்த இட்லியை உண்டு பசியாறினோம். செக்யுரீட்டி செக் முடிந்தவுடன் டேராடூன் விமானத்திற்காகக் காத்திருந்தோம். 13:20 மணிக்கு விமானம் புறப்பட ஆயத்தமானது. இம்முறை கண்கள் மூடிய நிலையில் சுவாசத்தை விமானத்தின் ஓசையோடு இணைக்க ஆரம்பித்தோம். இப்பொழுது மனதில் சிறிதும் பயமில்லை. கவனம் முழுவதும் சுவாசத்துடனும் விமானத்தின் ஓசையோடும் இருந்தது. சிறிது நேரம் கழித்து கண்கள் திறந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தோம். சித்த சாஸ்திரத்தில் சொன்னபடி மேகத்திற்குமேல் மனதை கொண்டு செல்ல முடியாதை இப்பொழுது நேரடியாகக் காண முடிந்தது. பிறகு மேகத்திற்குக் கீழே பறந்தபோது இயற்கையின் அன்னையின் பேரழகைக் காண முடிந்தது. ஆம் டேராடூன் முழுவதும் பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் இருந்தது. மனம் நிரைவடையும் முன்பு விமானம் ஏனோ கோபம் கொண்டு தரையிரங்கியது எங்களுக்கு சிறிது வருத்தமாக இருந்தது. எனினும் சுவாமிஜியின் வரவுக்காக முன்பே தரையிரங்கியது ஆனந்தமே. நாங்கள் கோவை குழுவின் வருகைக்காகக் காத்திருந்தோம். சிங்கபுர் பெங்களுர் குழுக்கள் முன்பே ஹரித்துவார் ஹோட்டல் அறையை அடைந்திருந்தனர்.சுவாமிஜியின் விமானம் குறித்த நேரத்திலிருந்து 20 நிமிடங்களுக்கு முன்பே டேராடூனில் தரையிரங்கியது. நாங்கள் அனைவரும் சுவாமிஜியை வணங்கினோம். அனைவரும் சிறிய பேருந்து வந்தவுடன் ஹரித்துவார் ஹோட்டல் அறையை அடைந்தோம். அனைவரும் கங்காமாதாவிற்கான ஆர்த்தி காண ஆயத்தமானோம். சிறிய பேருந்து எங்கள் அனைவரையும் சுமந்துகொண்டு கங்கா ஸ்னானம் செய்யுமிடம் நோக்கி ஊர்ந்தது. எங்களுடைய காலதாமத்தினால் கங்காமாதாவிற்கான ஆர்த்தியைக் காணும் பாக்கியம் இழந்தோம். இருப்பினும் கங்கா ஸ்னானம் செய்ய வாய்ப்பளித்த இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி. எங்ஙளின் கங்கா ஆர்த்தி ஏக்கம் கங்கா தீர்த்தக்குளியலில் மறைந்தது. நம் அனைவருக்குமான அன்னை எங்களையும் அரவணைத்தது ஆனந்தமாய் இருந்தது. பிறகு அனைவரும் தங்களுடைய முன்னோர்களுக்கும் தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் சேர்த்து அன்னையிடம் விண்ணப்பம் (ஆர்கியம் ) வைத்தோம். 

   சுவாமிஜி இந்த யாத்திரையின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவுரைத்தார். “இது எனக்கு மிகவும் நெருக்கமான இடம். நாங்கள் அனைவரும் அதனைக் கருத்தில் கொண்டு நடக்கவேண்டும் என்றார்.” எனக்கு கேதர்னாத் பத்ரினாத் பஞ்ஞ ப்ரயாக் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. சுவாமிஜி எச்சரித்தபடி சரியானபடி நடக்கவேண்டுமென மனதில் வேண்டினேன். நானும் அனுவும் மௌனத்தில் இருப்பது என முடிவெடுத்து அப்பொழுதிலிருந்து முயற்சி செய்ய ஆரம்பித்தோம்.

   20-09-2019 அன்று காலை 5 மணிக்கு ஆயத்தமாகி எங்கள் குழுவான தேவ ப்ரயாக் மற்ற குழுக்களான நந்த ப்ரயாக் கர்ண ப்ரயாக் விஷ்ணு ப்ரயாக் ருத்ர ப்ரயாக் உடன் பேருந்தில் ஏற காத்திருந்தோம். 2 சிறிய பேருந்துகளில் எங்கள் பயணத்தை துவங்கினோம். 2 அரை மணிநேர பயணத்திற்குப் பிறகு வசிஷ்டர் குகை வந்தடைந்தோம். மகாபாரத இதிகாச நினைவலைகள் மோத வசிஷ்டர் தியானம் செய்த இடத்தில் தியானம் செய்ய அனுமதி கிடைத்ததை நாங்கள் அனைவரும் கிடைத்தற்கறிய பாக்கியங்களில் ஒன்றாக எண்ணி தியானம் செய்தோம்.  பிறகு அங்கே அருகில் பிரவாகமாய் பரவியிருந்த கங்கை அன்னையை தரிசித்து நேரம் கடத்தாமல் தேவ ப்ரயாக் வந்தடைந்தோம். ராமர் கோவில் சிறிது தொலைவில் இருந்ததால் நடந்து சென்றோம். படிகட்டில் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தபோது மலைபசு சிரித்தபடி கீழே இறங்கிக்கொண்டிருந்தது. ஒருவழியாக மேலே ஏறி ராமர் தரிசனம் கண்டோம். அங்கிருந்து மெதுவாக கீழே இறங்கி தேவ ப்ரயாக் வந்தடைந்தோம். ஒருபக்கம் பச்சை நிறத்திலும் மறுபக்கம் சாம்பல் நிறத்திலுமாக வந்து சங்கமமாகிறது. 

அலக்நந்தா பாகீரதி சங்கமத்தை தொடர்ந்து கங்கை அன்னையாக உருவெடுக்கிறாள். அங்கே அனைவரும் அன்னையின் மடியில் தவழ்ந்து பிறகு ஆர்கியம் கொடுத்தோம். நேரமின்மையின் காரணமாக அங்கிருந்து புறப்பட்டு வழியில் மதிய உணவை உண்டோம். பிறகு 16:30 மணிக்கு ருத்ர ப்ரயாக் வந்தடைந்தோம். அலக்நந்தாவும் மந்தாகினியும் சங்கமிக்கும் இடம் இதுவாகும். மாலையானாலும் தீர்த்தத்தில் இறங்கும்போது குளிர் தெரியவில்லை. ருத்ர ப்ரயாக் பெயருக்கு ஏற்றாற்போல் ருத்ரமாக பாய்ந்துகொண்டிருந்தது. அதனால் ஒருவர்பின் ஒருவராக தீர்த்தமாடினோம். மாலை 6 மணிக்கு இங்கே கங்கா ஆர்த்தி செய்தார்கள்.  

ஹரித்துவாரில் கங்கா ஆர்த்தியை தவறவிட்டது இங்கே நிறைவேறியது. அங்கிருந்து குப்தகாசி இரவு வந்தடைந்தோம். அங்கே இரவு உணவு உண்டபிறகு சுவாமிஜி 21-09-2019 அன்று காலை 5 மணிக்கு கேதர்நாத் கிளம்புவோம் எனவும் அதிகமான பொருட்களுடன் மலையேற சிரமம் அதனால் ஸ்லீப்பிங் பேக்கும் ஜெர்கின் மற்றும் ஒரு செட் துணியும் எடுத்துக்கொள்ளக் கூறினார். 21-09-2019 காலை 5 மணிக்கு குப்தகாசியிலிருந்து பேருந்தில் கிளம்பினோம். காலை தேவையான உணவை அனைவருக்கும் சிறிய டப்பாவில் கொடுத்திருந்தனர். காலை 8:30 மணிக்கு மலை அடிவாரம் அடைந்தோம். அங்கே அனைவரும் டீ எடுத்துக்கொண்டனர். நானும் அனுவும் டீ சாப்பிடுவதில்லையாதலால் மலைமேல் நடக்க ஆரம்பித்தோம். மலைமேல் ஆக்ஸிஜனின் அளவு குறையும். அதை சமாளிக்க சுவாமிஜி முதல்நாளே நீர் நிரைய குடிக்கவும் திட உணவை குறைவாவும் தேவையற்ற திண்பண்டங்களை தவிர்க்கவும் கூறினார். 

மலையின் படிகட்டுகளில் மெதுவாக ஏறினோம். இமயமலையின் இயற்கை அழகை ரசித்தபடியே மனம் துவளும்போது குருமந்திரத்தை மனதில் கூறியபடியே பயணப்பட்டோம். கங்கை அன்னை வழியெங்கும் எங்களால் தொடமுடியாத தூரத்தில் பாய்ந்துகொண்டிருந்தார். வுழியெங்கும் வானுயர்ந்த மரங்கள் அனைவரையும் வாழ்த்தி மேலேறி வாருங்களென வரவேற்றன. நாங்கள் சற்றுவடையவே ஓரிடத்தில் அமர்ந்தோம். அங்கே எழுமிச்சை சாறு கிடைத்தது. அதை வாங்கி பருகி இளைப்பாறினோம். அப்பொழுது சுவாமிஜியும் சில மாணவர்களும் வந்து எழுமிச்சை சாறு பருகி இளைப்பாறினர். நானும் அனுவும் அங்கிருந்து கிளம்பினோம். அப்பொழுது சுவாமிஜி எங்களிடம் எதற்கு மலையேற உதவும் கம்பை உபயோகப் படுத்தாமல் இருக்கிறீர்கள் என கேட்டார். அதனை ஆமோதித்து நாங்கள் கம்பை ஊன்றி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். ஒருசிலர் டோலியிலும் குதிரையிலும் மலையில் ஏறினர். 

 மெதுவாக இமயமலையின் இயற்கை அழகை ரசித்தபடியே மெல்ல நடந்தோம். ஓரிடத்தில் குதிரையானது முழுதுமாகத் தரையில் படுத்திருந்தது. குதிரையோட்டிகள் செய்வதறியாது அந்த குதிரையின் அருகில் நின்றிருந்தனர். எங்கள் மனம் குருமந்திரம் கூறியபடியே முன்னேறிக்கொண்டிருந்தோம். இன்னொரு இடத்தில் ஒரு பெண்மணி நின்றுகொண்டு கத்திக்கொண்டிருந்தார். அங்கே ஒரு குதிரை ஆக்ரோஷமாக பின்னங்கால்களை உயர்த்தி உதைத்துக் கொண்டிருந்தது. குதிரையோட்டி ஒரு கம்பை வைத்து அடித்துக்கொண்டிருந்தார். நாங்கள் மறு ஓரமாக குருமந்திரத்துடன் முன்னேறிக்கொண்டிருந்தோம். திருமதி.விஜியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் சுவாமிஜியுடன் பேசியபோது சுவாமிஜி இதுவரை 7 கிலோமீட்டரே கடந்துள்ளோமென்றார். எங்களுக்கு சிறிது தலை சுற்றியது. சுவாமிஜியின் நேற்றைய உரையாடலின்போது வேகமாக நடந்தால் 4 மணி நேரத்திலும் மெதுவாக 6 மணி நேரத்திலும் கேதர்நாத் கோயிலை அடையலாமென்றார். அடிவாரத்தில் 16 கி.மீ என இருந்தது. மேலும் வாட்ஸ்அப் குருப்பில் பர்வதமலை போன்றதே என்றார். ஏறக்குறைய கால் பங்கு தூரமே கடந்துள்ளோமென நினைத்தபோது தலை சுற்றியது.

திருமதி.விஜி அவர்கள் அனுவிடம் கடைசி 4 கி.மீ மிகவும் கடினமாக இருக்குமென்றார். அதனால் அவரும் சிலரும் குதிரையில் பயணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இப்பொது எங்கள் மனது சிறிது கலக்கமுற்றது. இருந்தும் வழியில் நடந்தவற்றை பார்த்ததில் நடந்தே செல்வது என நானும் அனுவும் முடிவெடுத்தோம். திரு.வேணு திருமதி.சித்ரா அவர்களும் உண்டபிறகு சுவாமிஜியிடம் கூறி அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து நடந்தோம். 2 கி.மீ கடந்தவுடன் திருமதி.விஜி கூறியபடி கடினமான பாதையாகவே இருந்தது. அனு என்னிடம் திருமதி.விஜி கூறியபடியே குதிரையில் சென்றிருக்கலாமென்றார்கள். சிறிது அங்கே இளைப்பாறிய பிறகு மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். சிறிது துhரம் சென்றபிறகு அனு நடக்க மிகவும் கடினமாக உள்ளது என்றார்கள். எனக்கோ தலை பாரமாகி வலியெடுக்க ஆரம்பித்தது. நான் மௌனத்தில் இருந்ததால் வாய்திறந்து இதைப்பற்றிக் கூறவில்லை.  சுவாசம் இரண்டு நாசி வழியாகவே நடந்தது. இருந்தும் சுவாசக்காற்று எனக்குக் குறைவாகவே இருந்தது. சுவாமிஜி பின்னால் வரும் நம்பிக்கையாலும் மனதில் கூறும் குருமந்திரத்தாலும் நம்பிக்கையுடன் முன்னேறினோம். ஓரிடத்தில் ஒரு பாட்டியுடன் சிலர் குறுக்கு வழியில் வருவதைப் பார்த்தோம். திரு.வேணு அவர்கள் அந்த பாட்டிக்கு உதவும் பொருட்டு தன் கைகொடுத்து தூக்கிவிட முயற்சிசெய்தார். ஆனால் அந்த பாட்டியோ கையை தட்டிவிட்டு அவரே ஏறியது எங்களை பிரமிப்படையச் செய்தது. எங்களுக்குள் நம்மாலும் நடக்கமுடியுமென நம்பிக்கை அதிகரித்தது.


      நாங்கள் சிறிது வேகமாக இப்பொழுது நடக்க ஆரம்பித்திருந்தோம். எனக்கு தலை பாரம் இன்னும் குறையவில்லை. அதனால் நான் நீரை அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். ஓரிடத்தில் முன்னர் பார்த்த பாட்டியும் அவருடன் வந்திருந்தவர்களும் அமர்ந்திருந்தனர். நாங்கள் ஓய்வெடுக்காமல் வேகமாக நடப்பதைப் பார்த்து அவர்களில் ஒருவர் “மர்னேக்கேளியே ஜாரே க்யா” என கேட்டார். ஆக்ஸிஜன் இங்கு குறைவு அதனால் மெதுவாக ஓய்வெடுத்து செல்லுமாறு வலியுறுத்தினார். நாங்கள் அங்கே சிறிது இளைப்பாறியபோது திரு.டிவிஎஸ் குடும்பம்  திருமதி.விஜி மற்றும் சிலபேர் எங்ளைக் கடந்து சென்றார்கள். அவர்களிடம் எங்களுடைய ஸ்லீப்பிங் பேக்கை கொடுக்க முயற்சி செய்தபோது அவர்களின் குதிரையோட்டி இதை அனுமதிக்கவில்லை. நாங்கள் வேறுவழி இன்றி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். குதிரையில் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தபோது முன்பு பார்த்த குதிரை பற்றிய சம்பவங்களும் அந்த பாட்டியின் முயற்சியும் மனதில் ஓடிய குரு மந்திரமும் நடந்துசெல்லத் தூண்டி நம்பிக்கை ஊட்டின. 

மெதுவாக நாங்கள் நால்வரும் நடக்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் சுவாமிஜியும் சில மாணவர்களும் எங்களைக் கடந்து முன்னேறினார்கள். இப்பொழுது எனக்கு சிறிது பயம் தொற்றிக்கொண்டது. என் தலைபாரம் இன்னும் நீங்கவில்லை. எங்களின் கைகளில் உள்ள பாட்டிலில் நீர் தீர்ந்தபோது அருகில் பாய்ந்த தீர்த்தத்தில் பாட்டிலை நிரப்பிக்கொண்டோம். அங்கு இருந்த குளிரில் இந்தக் குளிர்ந்த தீர்த்தத்தைப் பருகுவது அசௌகரியமாக இருந்தாலும் பருகிய பிறகு சுவாசிப்பதில் சிறிது சௌகரியமாக இருந்தது. அதனால் அடிக்கடி தீர்த்தம் குடித்தோம். ஆங்காங்கே சௌசாலை (கழிப்பிடம்) வைத்திருந்ததால் இயற்கை உபாதையை பற்றிய கவலை இன்றி நடந்தோம். மேலும் வெயிலும் மழைச்சாரலும் மாறி மாறி வந்ததால் நடப்பதற்கு சௌகரியமாக இருந்தது.


            சுவாமிஜி குறுக்குப்பாதை வழியே செல்லலாமென அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம். சுவாமிஜி முன்செல்ல அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தோம். நான் களைப்பாய் இருந்ததால் மெதுவாகவே பின்தங்கி நடந்து வந்தேன். இப்போது நாங்கள் நால்வர் தவிர யாரும் இல்லை. எப்படியாவது அனைவருடனும் சென்று சேர்ந்துவிட வேண்டுமென இதயம் மிக வேகமாகப் படபடத்தது. ஆனால் கால்கள் மெதுவாகவே நகர்ந்தன. சுவாமிஜியை பார்க்க முடியாததால் மனது கனத்தது. ஏற்றம் கடினமாக இருந்ததால் மெதுவாகவே நடக்க முடிந்தது. ஒரு கடையில் சுவாமிஜியும் 10 மாணவர்களும் அமர்ந்திருந்தனர். நாங்கள் மகிழ்ச்சியடைந்து அங்கே சென்றோம். 

              ஹரித்துவாரில் குளிரில்லாததால் பலரும் சுவாமிஜியிடம் ஜெர்க்கின் ஸ்லீப்பிங் பேக் எல்லாம் தேவையில்லாமல் கொண்டுவந்திருக்கிறோம் என்றோம். அது முற்றிலும் தவறுயென இப்போது புரிந்தது. ஒரு மாணவர் முகம்கூட தெரியாத அளவிற்கு முழுவதுமாக மூடி உட்கார்ந்திருந்;தார். குளிர் இப்போது ருத்ரதாண்டவமாடியது.  இப்பொழுது இமயமலையின் அழகை முழுமையாக மறைத்து காரிருள் சூழ்ந்தது. திடீரென எங்களின் பேச்சு சப்தத்தைவிட அதிகமாக வெளியே சட சட எனக் கேட்டது. ஆம் அது அடைமழையே. என்ன கோமமென்றுத் தெரியவில்லை. மிகுந்த ஆக்ரோசமாக மழைநீர் மண்ணில் மோதியது. ஒருமணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்துகொண்டிருந்தது. நேரமோ 20:00 மணி காட்டியது

அங்கேயே டென்ட் இருந்ததால் அங்கேயே தங்கலாமெனவும் காலையில் 3 மணிக்கு கிளம்பலாமெனவும் 5 மணியளவில் கேதர்நாத் கோவிலில் புஜையை பார்க்கலாமெனவும் சுவாமிஜி கூறவே அங்கேயே தங்கினோம். அனைவரும் மிக நெருக்கமாக ஸ்லீப்பிங் பேக்கில் படுத்தது அனைவருக்கும் கதகதப்பாக இருந்தது. அனைவரும் காலை 3 மணிக்கு எழுந்து இயற்கை உபாதைகளை முடித்து 3:30க்கு அங்கிருந்து புறப்பட்டோம். 

சுவாமிஜி முன்னால் செல்ல அனைவரும் பின்னால் நடந்தோம். புஜை பார்ப்பதற்காக நிறையபேர் வேகமாக நடந்தனர். நானும் அனுவும் திரு.ஜிவி குடும்பமும் கடைசியாக மெதுவாகவே நடந்தோம். அந்த கடைசி 5 கி.மீ ரில் தங்குவதற்கு எங்கும் டென்ட் இல்லை. மேலும் நடக்கும் வழியில் ஓரிடத்தில் மழையினால் தண்ணீர் தேங்கி திடீரென வெள்ளமாக ஓடுமென்றும்; அதனாலேயே டென்ட்டில் தங்கியதாகவும் சுவாமிஜி கூறியதாக சிலர் கூறினர். சுவாமிஜி ஏன் அந்த தேநீர் கடையில் அமைதியாக அமர்ந்திருந்தாரென்று அப்பொழுதுதான் புரிந்தது. 

         இறையருளுக்கும் குருவருளுக்கும் மனதில் நன்றி என தெரிவித்து குருமந்திரத்தின் துணையுடன் மெதுவாக முன்னேறினோம். இப்பொழுது நான் அனு திரு.ஜிவி குடும்பமும் திரு.வேணு குடும்பமும் திரு.டிவிஎஸ் அவர்களின் புதல்வி அனுவும் ஓரிடத்தில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் ஒன்றாக நடந்தோம். கோவிலை அடைய 3 கி.மீ இருந்தது. தேநீர் அருந்த திரு.வேணு குடும்பமும் திரு.ஜிவி குடும்பமும் நின்று விட்டனர். நாங்கள் 3 பேரும் இப்பொழுது சிறிது வேகமாக முன்னேறி 2 கி.மீ கடந்துவிட்டோம். 22-09-2019 காலை மணி 5:30 ஆகிவிட்டது. இப்போது கோவில் இருக்கும் இடத்தைக் காண முடிந்தது. இருளில் மின்விளக்கு காரணமாக தங்கநிற வெளிச்சத்தில் தெரிந்தது. கோவிலின் அருகில் வர வர படிகட்டுகள் நீண்டு எங்களை நடக்கவிடாமல் தளர்வடைய செய்தன. கால்கள் வலித்ததால் கண்கள் கலங்கியிருந்தன. கடைசி 0.5 கி.மீ கடப்பதற்குள் மனமும் உடலும் மிகவும் சோர்வடைந்துவிட்டது. ஒருவழியாக கோவிலை அடைந்துவிட்டோம். சுவாமிஜி நம் அனைவரையும் வழிநடத்தாவிட்டால் இங்கே வருவதற்கு சாத்தியம் உண்டோ ?!!! பசுவைக் கண்ட கன்றுபோல் சுவாமிஜியை அங்கே கண்டவுன் நன்றி தெரிவிக்கும் பொருட்டு சுவாமிஜியிடம் ஆசிர்வாதம் வாங்கினோம். மடை திறந்த வௌ;ளம்போல் எங்கள் கண்கள் குளமாகின. இப்போது கடவுளை தரிசிக்க வரிசையில் நின்றோம். 30 நிமிடம் கடந்த வேளையில்  கோவிலின் உள்ளே பிரவேசித்துவிட்டோம். 

கேதர்நாத் முக்கோணமும் வட்டமுமான வடிவத்தை வரையறுக்கமுடியாத லிங்கமாக காட்சியளிக்கிறார். அவரை தொட்டு தீர்த்தத்தால் மகிழ்வித்து எங்கள் கரங்களையும் சிரத்தையும் அவர்மேல் வைத்து மனதை அவரிடம் பறிகொடுத்தோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தை விட்டு உடல் நகர்ந்தது. மனமோ இன்னொரு வாய்ப்பு எப்போது கிடைக்குமென தெரியாததால் அங்கேயே இருந்துகொண்டு வர மறுத்தது. அடித்தது 2 மணிநேரம் ஓய்வு 5 நிமிடமா என ஒரு திரைப்படத்தில் கேட்பதுபோல நடந்தது 10 மணிநேரம் இறைவனை தரிசிக்க 5 நிமிடமா என மனது கேட்டது. பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து தியானம் செய்தோம். கோவிலுக்கு பின்புறமுள்ள மலைத்தொடர் அதிகாலையில் தங்க நிறத்தில் காட்சியளித்தது. இப்போதோ பனியையே கம்பளமாக மூடிய மூடுபனியுடன் காட்சியளித்தது.  எல்லோரும் சுவாமிஜியுடன் குருப் புகைப்படம் கேதர்நாத் கோவில் தெரியுமாறு எடுத்துக்கொண்டோம். இப்போதோ அந்த மலைத்தொடரை பனிப்புகையானது முழுவதுமாக மறைத்திருந்தது. பிறகு ஹெலிகாப்டர் நிற்கும் இடத்திற்கு அனைவரும் வந்தோம். அன்று மிகுந்த மேகமூட்டமாக இருந்ததால் ஹெலிகாப்டர் சேவையை நிறுத்தினார்கள். விரைவில் கீழிறங்கினால் மட்டுமே மற்ற இடங்களையும் காண நேரம் கிடைக்குமென்பதால் அனைவரும் குதிரையில் செல்லலாமென சுவாமிஜி கூற முன்பு குதிரையை பார்த்த நிகழ்ச்சிகளால் என் நெஞ்சம் கலக்கமுற்றது. இந்த நடக்கமுடியாத தூரத்தையே சுவாமிஜி கடக்கவைத்துவிட்டார். இனி குதிரை சவாரிதானே என மனம் சமாதானமடைந்து குதிரை சவாரிக்கு ஆயத்தமானோம்.

நீண்டநேர குதிரை பயணம் ஒரு புதிய அனுபவம். குதிரை மலையின் ஓரத்தில் செல்லும்போது அங்கிருந்து கீழே பார்க்க சற்று பயமாக இருந்தாலும் இமயமலையின் இயற்கை அழகை வர்ணிக்க அளவே இல்லை. பாய்ந்தோடும் தீர்த்தங்கள் எங்கள் மனதையும் கொள்ளை கொண்டு ஓடின. குதிரையின் காலடி ஓசையும் அதன் கழுத்தில் ஆடிய மணியின் ஓசையும் திரு.இளையராஜாவின் இசையைத் தோற்கடித்தன. மனதில் மௌனமாக குருமந்திரம் ஓடிக்கொண்டிருந்தது. அலக்ஸாண்டர் ஓடும் குதிரையிலேயே உறங்குவாரென கேள்விபட்டதுண்டு. நானும் கண்களை மூடி குதிரையின் காலடி ஓசையை கவனிக்க முற்பட்டேன். குதிரை அசைந்து அசைந்து செல்வதால் நானே கீழே சரிவதுபோல உணர்ந்தேன். அது கண்களை மூடி விருட்சாசனம் செய்வதற்கு சமமாக இருந்தது. இடையிடையே குதிரையோட்டி என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் சைகையிலேயே பதிலளித்ததால் அவருக்கு சிறிது புரிந்தும் புரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் அனுவிடம் நான் பேசமாட்டேனா எனக் கேட்டேவிட்டார். ஹிந்தி தெரியாததால் பேசவில்லை என அனு சமாளித்தார். குதிரையோட்டியோ என்னை பரிதாபமாகவே பார்த்தாரென என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில சமயம் குதிரை வேகமெடுக்க குதிரையோட்டி அவர் குரலை உயர்த்த குதிரை அவ்வப்போது வேகமெடுத்தது. திடீரென ஒரு இறக்கத்தில் அவரின் குரலுக்கு பயந்து வேகமெடுக்க முன்னங்காலிடறி கீழே விழ குதிரையிலிருந்து நானும் முதுகுபுறம் தரையில் மோத கீழே விழுந்தேன். 

முதுகில் பேக் மாட்டியிருந்ததால் அடிபடவில்லை. ஆனால் கைபிடியை இறுக்கமாக பிடித்ததால் இடதுகை முறுக்கப்பட்ட நிலையில் முட்டி தரையில் மோத ஊண்றினேன். என் இடது காலோ குதிரையில் கால் வைத்து ஏறுமிடத்தில் சிக்கிக்கொண்டது. என் காலை விடுவிக்கமுடியவில்லை. அந்நிலையில் குதிரை எழுந்து மெதுவாக நகர முயற்சி செய்தது. அதனால் என் இடதுகால் மேலும் முறுக்கிக்கொண்டது. நல்லவேளையாக பின்புறமிருந்த வேறொரு குதிரையோட்டி என் காலை ஒருவழியாக போராடி விடுவித்தார். மெதுவாக எழுந்து ஓரிடத்தில் அமர்ந்தேன். அப்போதுதான் கவனித்தேன் கேதாரீஸ்வரரின் மகிமையை. நான் வாய் திறந்து கத்தவில்லையென உணர்ந்தேன். நாம் எவ்வாறு இருக்க விரும்புகிறோமோ அவ்வாறு இருக்க இறைநிலை அருள்புரிகிறார் என புரிந்தது. சிறிது தூரம் சென்ற உடன் சுவாமிஜி குதிரையிடம் சண்டைபோட்டீர்களோ என என்னிடம் கேட்டார். அப்பொழுதுதான் புரிந்தது இறையருள் மட்டுமல்ல குருவருளும் துணை புரிகிறதென்று. மனதில் குருமந்திரத்துடன் ஒருவழியாக குதிரையில் மலைறயடிவாரம் அடைந்து அனைவரும் வந்தவுடன் பேருந்தை அடைந்தோம். 

குதிரைப் பயணம் பின்வரும் திருமந்திரத்தை நினைவுபடித்தியது.

ஆரியனல்லன் குதிரை இரண்டுள

 வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை

கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.


ப்ராணன் என்ற குதிரையை நாம் ஒழுங்காக கையாளாவிட்டால் எப்படி கீழே வீழ்வோம் என புரிந்தது.

     
             காலை சிற்றுண்டி முடித்து பேருந்தில் ஜோஷிமட் வந்தடைந்தோம். பத்மாசனத்தில் உள்ள பத்ரிநாதர் 6 மாதம் பனி காலத்தில் இங்குதான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இப்போது பனி காலமில்லாததால் இங்கு சாளக்கிராமமும் நரசிம்மரையும் தரிசனம் செய்தோம். ஆதி சங்கரர் சிலைக்கு அருகில் அனைவரும் தியானம் செய்தோம். பிறகு அங்கேயுள்ள ராஜராஜேஸ்வரி லட்சுமி தேவியை தரிசனம் செய்தோம். அங்கிருந்து புறப்பட்டு விஷ்ணு ப்ரயாக் அடைந்தோம். இந்த தீர்த்தத்தில் அலக்நந்தாவும் தௌலிகங்காவும் இணைகிறது. அங்கு கீழே இறங்கி தீர்த்தமருகில் சென்றபோது இறந்த ஒருவரின் உடலை எரியுட்ட ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு இடையுறு கொடுக்காமல் அருகில் வேறொரு இடத்தில் குளிக்க ஆயத்தமானோம். அப்போது ஒரு மாணவர் நதியில் இறங்கி 0 டிகிரி உள்ளதாகவும் விரைவாக குளித்து வெளியே வருமாறும் எச்சரித்தார். அதிகக் குளிர் காரணமாக அனைவரும் விரைவாக குளித்து ஆர்கியம் கொடுத்து வெளியேறினோம். பிறகு அங்கே தியானம் செய்தோம். சுவாமிஜி இன்னொரு பக்கத்தில் உள்ள தீர்த்தத்தை தெளிப்பதை பார்த்து அவசரமாக குளிக்குமிடத்தில் பிடித்த தீர்த்தத்தை அங்கே விட்டு விட்டு இந்த இடத்தில் தீர்த்தம் பிடிக்க இறங்கினோம். அங்கே தீர்த்தம் பிடித்தபோது மேலிருந்து ஒருவர் உடலெரித்த சாம்பலையும் முக்கால்வாசி எறிந்த விறகு கட்டையையும் தீர்த்ததில் தள்ளிவிட்டார். அந்த இறந்த உடல் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்திருக்கும். பலபேரால் உயிரோடு உள்ளபோதே பார்க்க வாய்ப்பில்லாமல் ஞானம் முக்தியை நோக்கி பயணிக்காமல் உள்ளார்கள். சொற்ப சிலருக்கே இறந்தபிறகு அவருடல் கங்கையுடன் ஐக்கியமாகும் பாக்கியம் உள்ளது. அந்த உடலின் ஆன்மா  முக்தியை நோக்கி பயணித்திருக்குமென மனது கூறிற்று. தீர்த்தத்தை வணங்கி  அங்கிருந்து கிளம்பினோம். அனைரும் பேருந்தில் பயணித்து பத்ரிநாத் அருகிலுள்ள ஹோட்டல் அறைக்கு வந்து மதிய உணவு உண்டோம். 


பிறகு இந்தியாவின் கடைசி எல்லை கிராமமான மானா பகுதியை பார்க்க சென்றோம். அங்கே சரஸ்வதி தீர்த்தத்தின் ஆரம்பப் பகுதி பீமன் பாலம் கேஷவ் ப்ரயாக் பார்த்தோம். பிறகு கணபதி குகை. அங்கே சுவாமிஜியுடன் சிறு பஜன். இந்த குகையில்தான் வியாசர் கூற கணபதி தன் தந்தத்தை உடைத்து மகாபாரதம் எழுதினார். அங்கிருந்து அரை கி.மீ. மேலே வியாசர் குகை. ஆதிசங்கரரின் குரு இங்கே வியாசரின் பெரிய சிலையை நிறுவியதாகத் தகவல். அங்கே கண்ணை மூடி மனதில் 2 நிமிடம் குருமந்திரம். பிறகு விரைவாக கீழிறங்கி ஹோட்டல் அறைக்கு வந்து பத்ரிநாத் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானோம்.  45 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்த பத்ரிநாதரை தரிசித்தோம். பிறகு கோவில் பிரகாரத்திற்கு வந்து தியானம் செய்தோம். காலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானோம். சிலமணிநேர பயணத்திற்குப் பிறகு நந்த ப்ரயாக் அடைந்தோம். அங்கு அனைவரும் காசியில் நீராடியதுபோல இங்கு நீராடினோம். இந்த தீர்த்தத்தில் நந்தாகினியும் அலக்நந்தாவும் சங்கமமாகிறது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு கர்ண ப்ரயாக் அடைந்தோம். இங்கு அலக்நந்தாவும் பிந்தரும் சங்கமமாகிறது. தீர்த்தத்தில் ஆனந்தமாக நீராடி ஆர்கியம் கொடுத்தோம். 4 மணிக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். ஹரித்வார் ஹோட்டலுக்கு இரவு 2 மணிக்கு வந்தோம். 

அடுத்த நாள் காலை ஹரித்துவாரில் கங்கை அன்னை மறுபடியும் எங்களனைவரையும் அரவணைத்தாள் மழைச் சாரலாக…. இந்த பயணத்தின்போது இமயத்து ஆசான்களின் புத்தகமாகிய சுவாமி ராமா அவர்களைப் பற்றிய வியப்பும் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கு நடந்தே வந்த ஆதிசங்கரரின் மீது பிரமிப்பும் ஏற்பட்டதில் பெரிய வியப்பில்லை. 

   இந்த வாய்ப்பருளிய இறையருளுக்கும் குருவருளுக்கும் நன்றி. மேலும் இதுபோன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென இறையருளையும் குருவருளையும் பிராத்திக்கின்றோம்….

0 கருத்துக்கள்: