Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, September 24, 2010

நிமித்தத்தை புரிஞ்சுக்குங்க..!

சில நாட்களாக இங்கே நான் எழுதவில்லை. பலரும் பல்வேறு கடிதங்கள், தொலை பேசி அழைப்புகள் மூலம் என் நலன் விசாரித்தனர். அவர்களின் அன்புக்கு என் வணக்கங்கள். சிலர் முதன் முதலில் என்னுடன் உரையாடி, ‘இவர்’கள் எல்லாம் என் வலைபக்கத்தை படிக்கிறார்களா என வியக்க வைத்தார்கள்.

சென்ற பதிவுகளில் நான் குறிப்பிட்ட நிமித்தம் என்ற இயற்கை மொழியை பலர் பாராட்டி இருந்தீர்கள். தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிமித்தமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கூட பகிர்ந்துகொண்டீர்கள். பலர் நிமித்தம் ஒரு துர்சம்பவத்திற்கு அறிகுறியாகவே விளக்கி இருக்கிறார்கள்.

உண்மையில் நிமித்தம் அனைத்து சம்பவங்களையும் கூறும் பொது தன்மை கொண்டது. அப்படியானால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் மட்டும் எப்படி தெரிகிறது?

அதற்கு காரணம் ஏதேனும் தவறாக நடக்கக்கூடும் எனும் பொழுது உங்கள் விழிப்புணர்வு முழுமையாக திறந்த நிலையில் இருக்கும். அதனால் தான் முன்பு “உங்கள் உள்ளுணர்வை தீட்டி விழிப்புணர்வுடன் இருந்தால் நிமித்தம் உங்களில் பல அற்புதத்தை நிகழ்த்தும்” என கூறினேன். விழிப்புணர்வு என்பது என்ன என பலர் வெவ்வேறு தளத்தில் விளக்குகிறார்கள். உண்மையில் விழிப்புணர்வு என்றால் என்ன என தெரிந்துகொள்வோம். :)

நாம் மனம் மற்றும் உடல் என்ற இரு கருவிகளால் ஆளப்படுகிறோம். ஆனால் இரு கருவிகளும் இணைந்து செயல்படாமல் தனித்தனியே வேலை செய்கிறது. அதனால் நம் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருப்பதில்லை. உதாரணமாக உணவு உட்கொள்ளும் பொழுது நம் உடல் உணவை உண்ணுகிறது ஆனால் நம் மனம் வேறு ஒன்றை சிந்திக்கிறது. மனம் உண்ணாத உணவை, உடல் மட்டும் உண்ணுவதால் உடல் வியாதியால் துன்பப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் உண்ணும் செயலில் மனம் மற்றும் உடல் இணைந்து செயல்பட்டால் அதன் பெயர் விழிப்புணர்வுடன் உண்ணுவது என்பதாகும்.

இரட்டை மாட்டு வண்டியை செலுத்தும் பொழுது மாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் சென்றால் என்ன நடக்கும்? இரு மாடுகளையும் தன் வழிக்கு கொண்டுவந்து வண்டியை ஓட்டுவது வண்டிக்காரனின் தொழில் அல்லவா? அதனால் தான் மனம் மற்றும் உடல் என்ற மாடுகள் இணைந்த வண்டி என்ற வாழ்க்கையை ஆன்மா என்ற வண்டிக்காரன் சரியாக ஓட்டவேண்டும். இவ்வாறு மனம் மற்றும் உடல் இணைந்த நிலைக்கு விழிப்புணர்வுடன் இருத்தல் என பெயர். இதையே யோகா என்கிறோம்.

மனம் மற்றும் உடல் ஒன்றி நம் வாழ்க்கையை கவனிக்கும் பொழுது ஒவ்வொரு ஷணமும் நமக்கு இயற்கை பலவற்றை கற்றுக்கொடுக்கும். இக்கருத்தைத்தான் நிமித்தம் என்பதில் விளக்கினேன். ஒரு நிமித்தத்தை விழிப்புணர்வுடன் கவனிப்பதற்கும் விழிப்புணர்வு அற்று கவனிப்பதற்கு என்ன வித்தியாசம்? இதை ஒரு கதைவடிவில் பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் நடந்த சம்பவம் இது. சுப்பாண்டியும் சுந்திர பாண்டியும் ஜோதிட மாணவர்கள். குருகுல முறையில் சாஸ்திரங்களை பாஸ்கராச்சாரியார் என்ற ஜோதிட ஆச்சாரியரிடம் பயின்று வந்தனர். ஒரு நாள் இருவரும் தங்கள் குருவிடம் சென்று ஐயா நாங்கள் பல நாள் இங்கே சாஸ்திரம் கற்றுவிட்டோம், ஆனால் இதை பயன்படுத்தும் சூழல் இல்லை. பல தேசங்களுக்கு சென்று நீங்கள் கற்றுக்கொடுத்ததை பயிற்சி செய்யலாம் என இருக்கிறோம் என்றனர்.

பாஸ்கராச்சாரியார் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணிக்கும் படி கூறினார். முன்பு சிஷ்யர்கள் இருவரும் பயணத்தை துவங்கி செல்லவும், சில நாட்கள் கழித்து தானும் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் திட்டம் உண்டு என்றும் கூறினார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுப்புவும், சுந்திரனும் தங்கள் பயணத்தை துவக்கினார்கள்.

பழங்காலத்தில் பயணங்கள் கால்நடையாகவே செல்வார்கள் என்பதால் இருவரும் அவ்வாறே பயணமானார்கள். வழியில் இருவருக்கும் தாகம் எடுத்தது. நீர் குடிக்க அருகில் வசதி உண்டா என தேடும் பொழுது அங்கே ஒரு பெண் கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே இருவரும் சென்று, “அம்மா, எங்களுக்கு குடிக்க சிறிது நீர் தருகிறீர்களா?” என கேட்டனர். அந்தப்பெண் திடீரென தனக்கு பின்னால் கேட்ட சப்தத்தால் பயந்து கிணற்றில் கையிறுடன் கட்டப்பட்டிருந்த நீர் இறைக்கும் மண் பானையை தவறவிட்டாள். பிறகு தன்னிலை அடைந்து அசுவாசம் கொண்டால். தன்னிடம் உள்ள மற்றொரு பானையின் உதவியால் நீர் எடுத்து இருவரின் தாகத்தையும் தீர்த்தாள்.

இருவரும் திருப்தியாக நீர் அருந்தியதும், “அம்மா, எங்கள் தாகத்தை தீர்த்தீர்கள். உங்களுக்கு பிரதி உபகாரமாக ஏதேனும் செய்யவேண்டும் என எண்ணுகிறோம். நாங்கள் சாஸ்திரம் கற்றவர்கள். உங்களுக்கு ஏதேனும் ஜோதிட பலன் தேவைப்பட்டால் கூறுகிறோம் கேளுங்கள்” என்றனர்.

பெண் வேண்டாம் என கூறினாலும் இவர்கள் உதவுகிறோம் என கூறியதால் அப்பெண் கேட்கத் துவங்கினாள். “நீண்ட நாட்களுக்கு முன் என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. அவர் வருவாரா? எப்பொழுது வருவார் என கூறுங்கள்?” என்றாள்.
இருவரும் மூளையை கசக்கினார்கள், பிறகு ஒரே நேரத்தில் பதில் கூறினார்கள். சுப்பாண்டி “வருவார்” என்றான், சுந்திர பாண்டியோ “வரமாட்டார்” என்றான்.

இந்த பதிலை கேட்டு அப்பெண் குழம்பிப்போனாள். சுப்பாண்டியும், சுந்திரபாண்டியும் தாங்கள் சொன்னது தான் சரி என விவாதம் செய்யத் துவங்கினார்கள். விவாதம் சண்டையாக மாறியது. அந்த ஊர்மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கத் துவங்கினார்கள். முடிவில் இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்துக்கு சென்றது.

பஞ்சாயத்தை விசாரித்த ஊர் தலைவர் சுப்பாண்டியை பார்த்து கூறினார், “சுந்திர பாண்டி பெண்ணின் கணவர் வரமாட்டார் என கூறினார். அதனால் அதை மேற்கொண்டு ஆராய முடியாது. நீங்கள் வருவார் என கூறி இருக்கிறீர்கள். அப்படியானால் எப்பொழுது என கூறுங்கள்?” என்றார்.

சுப்பாண்டி கணிதம் செய்து, நாளை காலை சூரிய உதயத்திற்கு பிறகு இரண்டு நாழிகையில் பெண்ணின் கணவர் வருவார் என பலன் கூறினான். நாளை வருவார் என கூறுவதால் பஞ்சாயத்தை நாளை வரை தள்ளிவைத்து காத்திருப்போம். அவ்வாறு நடக்கவில்லை என்றால் சுந்திர பாண்டி சொன்ன பலனே சரி என முடிவுக்கு வருவோம் என்றார் ஊர் தலைவர்.

அடுத்த நாள் சூரியன் உதித்தது, பஞ்சாயத்தில் ஊர்மக்கள் கூடி நின்றார்கள். அந்த பெண்ணும் காத்திருந்தாள். நேரம் இரண்டாம் நாழிகையை நெருங்கிய சமயம் அப்பெண்ணின் கணவர் வந்தார். அவர் வேறு யாரும் அல்ல பாஸ்கராச்சாரியார் தான்...!

சுந்தர பாண்டியும், சுப்பாண்டியும், “குருவே” என அவரின் முன் சென்று வணங்கினர். பாஸ்கராச்சாரியார் நடந்தவற்றை கேட்டு உணர்ந்தார். தான் வெகு காலம் முன் மனைவியை பிரிந்து பல தேசம் சென்றதையும், பிறகு அவளை இங்கே சந்திப்பேன் என நினைக்கவில்லை என கூறி மகிழ்ச்சி அடைந்தார். ஊர்மக்கள் சுப்பாண்டியின் ஜோதிட திறமையை பாராட்டினார்கள்.

அனைவரும் இணைந்து பாஸ்கராச்சாரியாரின் குருகுலம் இருக்கும் ஊரை நோக்கி செல்ல துவங்கினார்கள். அப்பொழுது குரு தன் சிஷ்யர்களிடம், “இருவருக்கும் சமமாக அறிவை போதித்தேன், ஆனால் நீங்கள் எப்படி முரண்பட்ட பலன்களை ஏன் கூறினீர்கள்?” என கேட்டார்.

“குருவே அம்மையார் கேள்வி கேட்கும் முன் தன் கையில் இருந்த மண் குடத்தை கிணற்றில் தவறவிட்டார். அதை பார்த்து கணவன் வரமாட்டார் என கூறினேன்” என்றான் சுந்திரபாண்டி.

நீ எப்படி கூறினாய் என்பது போல சுப்பாண்டியின் மேல் பார்வை செலுத்தினார் பாஸ்கராச்சாரியார். “குருவே நானும் அதே மண்குடத்தை வைத்து தான் கூறினேன். ஆனால் வேறு கோணத்தில் சிந்தித்தேன். மண்னும் நீரும் குழைந்து செய்ந்த மண் குடம் கிணற்றில் விழுந்ததும் இத்தனை நாள் பிரிந்திருந்த மண்ணுடன் மண்ணும், கிணற்று நீருடன் நீரும் இணைந்திருக்கும் அல்லவா? அதனால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள் என கூறினேன்” என விளக்கினான்.

இதைத்தான் சூட்சுமமாகவும் விழிப்புணர்வுடனும் நிமித்தத்தை கவனிப்பது என்கிறேன். இவ்வாறு செய்வதற்கு பயிற்சி எல்லாம் தேவையில்லை உணர்ந்து கொண்டால் போதுமானது.

ஒருவருடன் தொழில் சார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். அச்சமயத்தில் தபால்காரர் நம் பெயருக்கு ஒரு கடிதத்தை கொண்டு வருகிறார். தொழில் பற்றி பேசும் பொழுது புதிய விஷயங்கள் நம்மை வந்து அடைகிறது என்ற நிமித்தத்தை இதில் உணரலாம். ஆனால் இப்படி மேலோட்டமாக நிமித்தத்தை அணுகாமல் அந்த அஞ்சல் எப்படி பட்டது என பார்க்க வேண்டும். அது நல்ல செய்தி கொண்ட கடிதமானால் தொழில் முன்னேற்றத்தால் நன்மை வந்து அடையும் என கொள்ளலாம். மாறாக அது உங்களுக்கு தவறாக வந்த கடிதமாக இருந்தாலோ, வக்கீல் நோட்டீஸாக இருந்தால் இந்த நிமித்தம் தொழில் மேன்மையை காட்டாது...!

என் மாணவரின் உறவினர் ஒருவர் காணாமல் போய்விட்டார். குடும்பத்தைவிட்டு திடீரென காணாமல் போனதால், அவர் திரும்ப வருவாரா என என்னிடம் ஜோதிடத்தில் கேட்பதற்கு வந்தார். நான் கிரகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுத் அவரின் கைபேசி ஒலித்தது. என் மாணவரின் மனைவி அவருக்கு தொடர்பு கொண்டார் என நினைக்கிறேன்.

மறு முனையில் என்ன கேள்வி என தெரியவில்லை. ஆனால் என் மாணவர் “ஆமா ஆமா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன். வந்துடுவேன்” என்றவாறே பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார். இப்பொழுது சொல்லுங்கள் அந்த உறவினர் திரும்ப வந்திருப்பாரா இல்லையா? ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். அவர் உறவினர் மீண்டும் குடும்பத்தை வந்தடைந்தார்.

இதே மாறாக அவர் கைபேசியை எடுத்து, “அலோ... இல்லீங்க... ராங் நம்பர்” என்றால் அவர் உறவினர் கண்டிப்பாக வரமாட்டார் என நிமித்தம் உணர்த்தும்.

லேட்டஸ்டாக நடந்த சம்பவம் ஒன்று உங்களுக்காக...

புதன் கிழமை அன்று என்னை சந்திக்க வருவதாக சொன்ன நண்பர் வரவில்லை. அவருக்காக காத்திருந்து வராத காரணத்தால் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரோ சில காரணத்தால் நாளை கிளம்பி வருகிறேன் இன்று வரவில்லை, பயணம் “தள்ளிப்போகிறது” என்றார். பிறகு பேச்சுவாக்கில் அயோத்தி தீர்ப்பு வெள்ளி அன்று 24ஆம் தேதி வருகிறதாமே அந்த நேரத்தில் பயணம் செய்வது நல்லதா என கேட்டார்.

நானோ அன்று தீர்ப்பு வராது தள்ளிப்போகும் என்றேன். நேற்று என்னை சந்தித்து எப்படி இவ்வளவு உறுதியாக சொன்னீர்கள் என கேட்டார். அதெல்லாம் “தேவரகசியம்” என்றேன்...! உங்களுக்கு இந்த தேவ ரகசியம் புரிந்தது தானே?

நிமித்தத்தை தேவையான அளவு விளக்கிவிட்டேன். இனி விழிப்புணர்வுடன் நிமித்தம் பார்த்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

8 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

நன்று.. உங்களோட தளத்தில் இருந்து விழிப்புணர்வை விளக்கியமைக்கு..


ஓட்டுப்போட்டு பாராட்டுகிறேன்.

ராமுடு said...

Excellent Mr.omkar..

கிறுக்கன் said...

புரியுது ஆனா புரியல

கிறுக்கன்.

sarul said...

இந்நிகழ்வு கிரிஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தகத்திலும் விபரிக்கப்பட்டுள்ளது ,இதே சிண்ற்றினுள் குடம் அறுந்து விழும் சம்பவம், அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது

*இயற்கை ராஜி* said...

purinchikitom swamiji:-)

Anonymous said...

அருமையான பதிவு.நிமித்தத்தை பற்றி உண்மையான வரையறையை விளக்கிவிட்டீர்கள்.ஆனால் அதை பயன்படுத்துவதற்கு தன்னை சுற்றி நடப்பவற்றை கூர்ந்து உற்று நோக்கும் தன்மை இருக்கவேண்டும் என்கிறீர்.அப்படித்தானே?

Sivakumar said...

சரி சுவாமி.... நாளை என் நண்பன் மதுரையில் இருந்து பெங்களூர் வருகிறான்.
இதை தட்டச்சு செய்யும் பொழுது, நான் மறந்துவிட்டிருந்தவர்களைப் பற்றிய எண்ணங்கள் வருகின்றன
----------------------------------
இப்போது சொல்லுங்கள் வரும் 28ம் தேதி அயோத்தி தீர்ப்பு வருமா?

C Jeevanantham said...

Nandri iyya.