Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, September 7, 2010

நிமித்தம் - பகுதி 2

மனிதன் தான் என்ற அஹம்பாவம் இருக்கும் வரை இறை அருளை உணர்வதில்லை. இக்கருத்து நிமித்தத்திற்கும் பொருந்தும். இயற்கை நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

தயாராக மட்டுமல்ல பதில் கூறியும் வருகிறது. ஆனால் நம்மால் அந்த கருத்தை உணர முடியவில்லை. காரணம் நம்மை விட விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்ற ஆணவப்போக்கு இதன் மூல காரணமாகும்.

இயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முடியாத இயலாமையில் இருப்பதை பலர் உணர்வதில்லை. உங்களுக்கு சில விஷயங்களை கூற இயற்கை எப்பொழுதும் தயாராக இருக்கிறது. இயற்கையின் மொழியை மொழிபெயர்க்க கற்றுக்கொள்ளுங்கள். அம்மொழியின் பெயரே நிமித்தம்.

சகுனம் என்ற வட மொழி சொல்லுக்கு அசையும் பொருள் / சலனமடையும் என்று அர்த்தம். சகுனம் என்பதற்கு எதிர்பதம் நிர்குணம் என்பார்கள். இறைவன் நிர்குண ப்ரம்மம் என்பார்கள். சகுனம் என்பது அசையும் பொருட்களான மனிதன், விலங்குகள், பறவைகள் கொண்டு கூறக்கூடியது. உதாரணமாக பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனம் என்பார்கள். விதவைகள் எதிரில் வந்தால் கெட்ட சகுனம். சுமங்கலி எதிரில் வந்தால் நல்ல சகுனம் என்பார்கள். இது மூடநம்பிக்கை. காரணம் சகுனத்தை உங்களால் உருவாக்க முடியும். நிமித்தம் தானாகவே நிகழ்வது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நிமித்தம் என்பது உங்களுக்கு நிகழப்போவதை சூசகமாக வேறு ஒரு நிகழ்வின் மூலம் குறிப்பிடுகிறது. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் விழிப்புணர்வுடன் கவனிப்பதற்கு நிமித்தம் பெரும் உதவியாக இருந்தது. சில சம்பவங்களை உங்களின் புரிதலுக்காக விவரிக்கிறேன்.

நான் வெளியூர் செல்வதாக இருந்தால் என் வெளியூர் பயணம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நிமித்தம் பயன்படுத்துவேன். நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் வரை எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுகிறதோ அதே போன்ற நிலைதான் என் முழு பயணத்தின் பொழுது நிகழும் என்பதை நிமித்தம் சுட்டிக்காட்டும்.

ரயில் நிலையம் செல்லுவதற்கு டாக்ஸியில் செல்லும்பொழுது டிரைவருக்கும் எனக்கும் நடக்கும் சம்பாஷணை மற்றும் சிக்னலில் நிற்கும் பொழுது ஏற்படும் தாக்கம் போன்றவை என் முழு பயணம் எப்படி இருக்கும் என்பதை கூறிவிடும். இக்கருத்தை நீங்களும் முயன்று பாருங்களேன்..!

சில வருடங்களுக்கு முன் என் நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வாளர். தனது ஆய்வு மூலம் ஐநா சபையின் பாராட்டுதலை பெற்றவர். தான் அடுத்த ஆய்வு செய்யப்போவதாகவும், அது முந்தைய ஆய்வை விட மேம்பட்டதாக மக்களிடையே சென்று அடையுமா என்றும் கவலைப்பட்டார்.

அவ்வாறு அவர் சொல்லும் பொழுது அவரின் சட்டைப்பையில் இருந்த பேனாவிலிருந்து மை கசிந்து அவரின் சட்டையில் பரவத்துவங்கியது. நான் சட்டைப்பையை கவனிப்பதை கவனித்த அவர் உடனடியாக செயல்பட்டு அருகில் இருந்த தண்ணீர் குடத்திலிருந்து நீர் எடுத்து மையை கழுவத் துவங்கினார். நீர் பட்டதும் மை மேலும் பரவி சட்டை முழுவதும் கறைபடிந்தது. இந்த நிமித்தம் என்ன சொல்லுகிறது என உங்களால் யுகிக்க முடிகிறதா?

இந்த நிமித்தம் கண்டதும் மகிழ்ச்சியுடன் கூறினேன், “ஐயா.. முன்பு நீங்கள் செய்த ஆய்வு தானே பாராட்டப்பட்டது. ஆனால் தற்சமயம் நீங்கள் செய்யும் ஆய்வு முன்பு செய்ததைவிட மிகவும் பாரட்டப்பட்டு உலக புகழ் அடையும் என்றேன்”. சில மாதங்களில் அவ்வாறே நடந்தது.

இப்படி என் வாழ்க்கையில் நான் நிமித்தத்தை பயன்படுத்தியதை பற்றி கூறத்துவங்கினால் அது என் சுயசரிதையாக மாறும் அபாயம் உண்டு. மேலும் இதை படிப்பவர்கள் என்னுடன் இயல்பாக பழகாமல் போகவும் வாய்ப்புண்டு. இது நல்ல நிமித்தமல்ல :)

முன்னாள் பாரதப் பிரதமர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று கூறுகிறேன். தான் செல்லும் விமானம் மூன்று முறை எதிர்பாராதவிதமாக பழுதுபட்டு விட அவர் தான் செல்லும் ஊருக்கு சென்றே ஆகவேண்டும் என முடிவு செய்கிறார். விமானி ஓட்ட முடியாது என கூறியும், விமான கோளாரு என்றும், வானிலை சரி இல்லை என்றும் பல தடைகள். தானே ஒரு விமானி என்பதால், நானே ஓட்டுகிறேன் என முயற்சிக்கிறார்.

கடைசியில் பைலட்,விமானம் எல்லாம் தயாராகி பயணமாகிறார். அவர் அந்த அசுப நிமித்தத்தை உணராமல் பயணப்பட்டதால் தற்சமயம் நம்மிடையே இல்லை. அவர் திரு ராஜீவ் காந்தி.....!

உங்கள் உள்ளுணர்வை தீட்டி விழிப்புணர்வுடன் இருந்தால் நிமித்தம் உங்களில் பல அற்புதத்தை நிகழ்த்தும். இக்கணம் முதல் இயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முயலுங்கள். இயற்கை உங்கள் முன் பல முறை இனிய நாதத்தை வாசித்தும், அபாய சங்கையும் ஊதியும் இருக்கிறது. ஆனால் நாம் காதில்லா பிறவியாக இருந்திருக்கிறோம்.

இனி நித்தமும் உங்களில் நிமித்தம் நிகழட்டும்....


10 கருத்துக்கள்:

ravikumar said...

Intersting and it is true if u consider

essusara said...

சுவாமிஜி உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன் .

இசை ஞானி இளையராஜா முதன் முதலில் இசை அமைக்கும் பணியை ஏற்ற போது
ஸ்டார்ட் என்று சொன்னவுடன் மின்சாரம் துண்டித்தது எல்லோரும் பதற இளையராஜா அவர்கள் மட்டும்
நம்பிக்கை இழக்காமல் இசை அமைத்தார். அந்த படம் தான் அன்ன கிளி . சக்கை போடு போட்ட தமிழ் படம்.
இளையராஜா என்ற மாபெரும் இசை கலைஞன் நிமிததின் மீது நம்பிக்கை வைக்காமல் தான் திறமை மீதும்
உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்தால் வெற்றி பெற முடிந்தது.

profit500 said...

உண்மைதான் ஜி ! நான் நிறையதடவை மீறி செயல்பட்டு ----நல்ல அடி

Udayakumar JR said...

உணர்ந்து பயன்படுத்த வேண்டிய விஷயம்.

Mahesh said...

// சகுனத்தை உங்களால் உருவாக்க முடியும். நிமித்தம் தானாகவே நிகழ்வது //

இதை நீங்க எழுதணும்னு எதிர்பார்த்தேன்.... நன்றி.

நிகழ்காலத்தில்... said...

//சட்டைப்பையில் இருந்த பேனாவிலிருந்து மை கசிந்து அவரின் சட்டையில் பரவத்துவங்கியது. அருகில் இருந்த தண்ணீர் குடத்திலிருந்து நீர் எடுத்து மையை கழுவத் துவங்கினார். நீர் பட்டதும் மை மேலும் பரவி சட்டை முழுவதும் கறைபடிந்தது.//

இது என்னைப் பொறுத்தவரை எதிர்மறையான செய்தியை உள்ளடக்கியதாகவே நினைத்தேன்.கசிவும் கறையும் என் கண்ணுக்குப் பட்டது.

உங்களுக்கோ பரவுதலே கண்ணுக்குப் பட்டது.

நிமித்தத்தை புரிந்து கொள்வதில் இன்னும் பக்குவம் வரவேண்டுமா ?

gopi said...

THAT SHOULD BE SANJAY GANDHI WHO DIED IN AIR CRASH ??

மதி said...

>>இக்கணம் முதல் இயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முயலுங்கள்<<

sari swamiji....aanal itharkana pakkuvam varavendume...!!

Sridhar said...

அப்போ சகுனம் பார்க்க கூடாது . நிமித்தம் தான் பார்க்கணும் ல :-) .

நிமித்ததை எப்படி சரியாக புரிந்துகொள்வது ?

பேனாவிலிருந்து மை கசிவததை நானும் நண்பர் நிகழ்காலத்தில் போல எதிர்மறையாக தான் நினைதேன் ஆனால் உங்கள் விளக்கம் நல்லபடியாக இருந்தாது ஆகையால் கொஞ்சம் குழப்பமாக இறுக்கு .. எப்படி சரியாக புரிந்துகொள்வது என்று..

கொஞ்சம் விளக்கினால் நன்றாக இறுக்கும் சுவாமி :)..

Balaji Palamadai said...

நானும் பல முறை இது போன்று உணர்ந்து இருக்கிறேன் இது நிமித்தம் என்று இன்று தான் அறிந்தேன் மிக சிறந்த பதிவு இது.