Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, May 30, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 7

சங்கிய தத்துவத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சென்ற பகுதியில் விளக்கினேன்.


மனிதனின் உள் நிலையின் பகுதிகளே சாங்கியம் விளக்குகிறது. உனக்குள் இருப்பது மட்டுமே உண்மை நிலை என்கிறது சாங்கியம். ராமாயணம் மற்றும் மஹாபாரதங்கள் சாங்கிய தத்துவத்தின் கட்டமைப்பை கதாப்பாத்திரங்களாக கொண்டவை என்பதே உண்மையாகும். ஏதோ சில கதாசிரியரின் கற்பனையில் தோன்றியவை அல்ல. இது சாங்கிய தத்துவத்தின் விளக்க வடிவம்.

சாங்கிய வரைபடத்தில் கூறப்படும் அறிவு என்பது என்ன? ஸாத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என்றால் என்ன? என கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால் சாங்கிய தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாமல் வேறு திசையில் பயணிக்க வேண்டி வரும். ஆனால் சாங்கியத்தை நாம் கதைவடிவிலும் கதாப்பத்திரத்தின் செயல் வடிவிலும் புரிந்துகொள்வது எளிது.

உதாரணமாக ராமாயணத்தில் தசரதனின் இடத்திலிருந்து ராம கதை துவங்குகிறது. தசரதனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் புத்திரன் கிடைக்க யாகம் செய்கிறார். தசரதனுக்கு மூன்று மனைவிகள் மற்றும் அறுபதனாயிரம் துணைவிகள்.

தசரதன் என்ற பெயரை கவனியுங்கள். பத்து ரதத்தையும் கட்டுப்படுத்த தெரிந்தவன் என அர்த்தம். ஞானேந்திரியம் மற்றும் கர்மேந்திரியத்தை சேர்த்து பத்து முக்கிய இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் தசரதன். அவனுக்கு ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் கொண்ட மூன்று மனைவிகள் முறையே கெளசல்யா, கைகேயி, சுமித்ரா. ஞானேந்திரியம், கர்மேந்திரியம், தன்மத்திரைகள் மற்றும் பஞ்சபூதம் ஆகிய இருபதும், மூன்று குணத்துடன் ஆயிரம் முறை இணைவதல் (20X3X1000) அறுபதனாயிரம் துணைவிகள்.

ஸாத்வ குணம் என்பது ஆன்மீக நிலை மற்றும் மேன்மையான குணம் என்பதால் கெளசல்யாவிற்கு ராமர் என்ற ஆன்மா ரூபம் குழந்தையாக பிறக்கிறது. கைகேயி ரஜோகுணம் கொண்டவள் என்பதால் அவளுக்கு பரதன். ரஜோகுணம் பதவி மற்றும் போக நிலையில் வாழ்தலை குறிக்கும். இதனால் கைகேயி பரதனுக்கு முடிசூட்டவேண்டும் என கேட்கிறாள். சுமித்ரா என்ற தமோநிலையில் இருப்பவளுக்கு லட்சுமணன் மற்றும் சத்ருகன் பிறக்கிறார்கள். கோபம் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் என்பது தமோநிலை குணங்களாகும். அதனால் லட்சுமணன் எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவனாகிறான்.

சீதா என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மனித பிறப்பு போல இல்லாமல், மண்ணுக்குள் இருந்து கிடைக்கிறாள். ராமாயணத்தின் முடிவில் சீதா மண்ணுக்குள்ளேயே சென்றுவிடுகிறாள். சீதா பிருகிரிதி ரூபமாக காட்சி அளிக்கிறாள். இயற்கையே வடிவானவள். அதனால் பொறுமையின் சிகரமாகவும், இராவணனிடம் கோபம் கொண்ட சீற்றமாகவும் காணப்படுகிறாள்.ஆன்மா என்ற புருஷார்த்த நிலையில் இருக்கும் ராமர், தன் சுய தன்மையையும் பிரகிருதி சீதையை விட்டு விலகி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ப்ராண சக்தி என்ற அனுமான் (வாயு புத்ரன்) மூலம் மீண்டும் இணையும் தன்மையே ராமாயணம்.

நம்முள்ளும் ஆன்ம ரூபமாக இருக்கும் ராமர், ப்ரகிருதியினால் விலகி தன்னை உடலாகவும் உடல் உறுப்பாகவும் கருதுகிறது. உங்களின் உள்ளே ராமர் சீதையை விட்டு விலகிவிட்டார்..! வாயுவால் பிறந்த வாயுபுத்ரன் என்கிற ஆஞ்சநேயரால் (சுவாசத்தால்) இருவரையும் இணைத்தால் மீண்டும் ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். நீங்கள் ஆன்மா என்கிற தன்மையை உணர்ந்து ஆன்மாவாகவே இருப்பதை பட்டாபிஷேகம் என்கிறேன்.

உங்கள் சுவாசத்திற்கே தெரியாது அதற்கு எத்தனை விஷயங்கள் செய்ய முடியும் என்பது. அது போலத்தான் ஹனுமானுக்கு தன் சுயபலம் தெரியாது. வேறு ஒருவர் சொல்லுவதை கொண்டே தன் பலத்தை உணர முடியும் என்கிறது ராமாயாணம். குரு கூறும் ப்ராணாயம முறைகளை கொண்டு உங்களின் சுவாசத்தை சரி செய்தால் நீங்களும் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்பதே இதன் பின்னால் உள்ள கருத்து.

இவ்வாறு விளக்க துவங்கினால் ராமாயணத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களையும் நம்மால் முழுமையாக உணர முடியும். சாங்கிய கருத்தை வெவ்வேறு கதாப்பாத்திரம் வாயிலாக கூற முனைவதே இதிஹாசங்கள்.

சாங்கிய கட்டமைப்பையும் அதனால் ஏற்படும் இதிஹாச தொடர்பையும் உணர்ந்தீர்கள் அல்லவா? இப்பொழுது நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் எளிமையாக பதில் கூறமுடியும்.

இராவணன் ஏன் பத்து தலையுடன் இருக்கிறான்?
இராவணன் அவனுடைய சகோதரர் இருவர் இணைந்து ஏன் மூன்று நபர்கள் மட்டும் இருக்கிறார்கள்?
விபீஷணன் எனும் இராவணனின் சகோதரர் ஏன் நல்ல பண்புடன் இராமனை பின்பற்றுகிறார்? மற்றொரு சகோதரர் கும்பகர்ணன் ஏன் தூங்கிக்கொண்டே இருக்கிறார்?

இதற்கெல்லாம் உங்களால் உடனுக்குடன் பதில்கூற முடிகிறது என்றால் நீங்கள் சாங்கிய கட்டமைப்பை ஓரளவேனும் புரிந்துகொண்டீர்கள் என அர்த்தம்.

இப்பொழுது சொல்லுங்கள் ராமாயணம் உண்மையா? நடந்த கதையா? இல்லை நடக்கின்ற கதையா?

(வினை தொடரும்)

Thursday, May 26, 2011

தென்கைலாய திருப்பயணம் - 2011

அருள்பொருந்திய ஆன்மாக்களுக்கு,

ஆன்மீக ஆன்பர்களுக்காக ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் பல்வேறு ஆன்மீக பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, காசி மற்றும் பல்வேறு இடங்களுக்கு எங்களுடன் பயணித்து ஆன்மீக அமுதை சுவைத்தவர்கள் பலர். அதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலைப்பயணம் திட்டமிட்டுள்ளோம்.

இறையருளால் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலையில் பயணித்து உங்களின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

வரும் ஜூன் மாதம் 10,11ஆம் தேதிகளில் (வெள்ளி, சனி) இரு நாட்கள் மலைப்பயணம் இருக்கும்.

தென்கைலாய பயணத்தில் தியானம், பஜன் மற்றும் மந்திர ஜபம் ஆகியவை நடைபெறும். சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் மற்றும் ப்ரார்த்தனைகளை செய்யலாம்.

இதற்கான கட்டணம் : உங்களின் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் மட்டுமே...!

இப்பயணம் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் நடத்தப்படுவதால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அறக்கட்டளை சார்ந்தது.

எல்லோரும் கலந்து கொள்ளலாமா? - இப்பயணம் எளிமையானது அல்ல என்பதால் சில கட்டுப்பாடுகள் உண்டு.

1) இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்
2) ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் கொண்டவர்கள்
3) பெண்கள்
4) அதிக தூரம் நடக்க முடியாதவர்கள் அல்லது மலைபயணம் கடினம் என எண்ணுபவர்கள்

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.

10ஆம் தேதி காலை ப்ரணவ பீடம் அறக்கட்டளையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் (11ஆம் தேதி) மாலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைதல் என்பதே அடிப்படை திட்டம்.

பதினைந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் ஜுன் 5ஆம்
தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு தனிமடலில், எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் பிற விஷயங்களை அனுப்பி வைக்கிறோம்.

ஆன்மீக அற்புதங்களை உணர நீங்கள் தயாரா?

Tuesday, May 24, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 6

கபில முனிவர் சாங்கிய தத்துவத்தை ஏதோ தனக்கு தோன்றிய கருத்து என விளக்கவில்லை. மிகவும் அறிவியல் ரீதியாக படிப்படியாக விளக்குகிறார். இங்கே அறிவியல் என நான் குறிப்பிடுவது நவீன அறிவியலை அல்ல. மெய்ஞானத்தை அறியும் விஞ்ஞானத்தை கபிலர் கையாண்டார் என்கிறேன்.

நம் உடல் என்பது எத்தகையது. அதன் இயக்கங்கள் தோற்றங்கள் ஆகியவற்றை அவர் விளக்கும் அமைப்பு அலாதியானது. சாங்கிய தத்துவம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது அல்ல. குருபரம்பரை மூலமாக கூறப்பட்டும், தன்னகத்தே ஞானம் பெற்றவர்களால் உணரப்பட்டு விளக்கப்படுவதே சாங்கியம்.

நாம் தோற்றம் எங்கிருந்து வந்தது. நாம் எங்கே இருக்கிறோம். எங்கு செல்லப்போகிறோம் என கேள்விகள் மனிதனுக்கு தோன்றும் சமயம் சாங்கியம் அதற்கு பதில் அளிக்கிறது.

ஆன்மாவானது ப்ரகிருதி எனும் இயற்கை நிலையுடன் இணைந்து அறிவை தோற்றுவிக்கிறது. அவ்வறிவு அஹங்காரம் எனும் தன்முனைப்பை ஏற்படுத்துகிறது. எங்கே தன்முனைப்பு ஏற்படுகிறதோ அங்கே பிறப்பு நிகழுகிறது. முக்குணங்கள் பிறந்து அக்குணங்களின் தன்மைக்கு ஏற்ப நம் புலன்களும் இப்பிரபஞ்சமும் கண்முன் விரிகிறது.

இக்கருத்தை படமாக கீழே கொடுத்துள்ளேன். அதை பிரதி எடுத்து கையில் வைத்துக் கொண்டீர்களானால் இனி வரும் பகுதியில் நான் விளக்கும் பொழுது உங்களுக்கு தெளிவு பிறக்கும்.
படத்தின் மேல் அழுத்தி பெரிதாக பார்க்கலாம்

ஸாத்வ குணம் மூலம் தோன்றும் மனமே ஐபுலன்களை இணைக்கும் கருவியாக இருக்கிறது. மனம் என்பது நம் தோற்றம் அல்ல. மனம் என்பது நம்மில் ஒரு உறுப்பு ஆகும். எனவே இதில் நீங்கள் உணர வேண்டியது மனம் அற்ற நிலை என்பது சாத்தியம் உண்டு. மனம் இல்லையேல் அங்கே குணம் மட்டுமே உண்டு. புலன்கள் இல்லை.
இத்தகைய மனமே உங்களுக்குள் போலியான உலகை ஏற்படுத்துகிறது. ஸாத்வ குணம் மூலம் நினைவு நிலையில் ஓர் உலகையும், தமோகுணம் மூலம் கனவு நிலையில் ஒரு உலகையும், ரஜோ குணம் மூலம் பாதி விழிப்பு நிலையில் இரு தளத்திலும் பயணிக்க செய்கிறது.

மூன்று குணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது நான் என்ற அஹங்காரம். தன்முனைப்பு என்ற அஹங்காரமே நம் செயலுக்கு காரணமாக இருக்கிறது. உங்களுக்குள் நான் என்ற முனைப்பு எங்கே தோன்றுகிறது என பாருங்கள். அந்த பகுதியை பிடித்தீர்களானால் எளிமையாக அடுத்தடுத்த உயர்நிலைக்கு சென்று உங்களின் உண்மையான தோற்றமான ஆன்ம நிலையை அடைய முடியும்.

ஆன்மீகவாதிகள் தங்களின் உள் பயணிக்கும் பொழுது கர்மேந்திரியம் மற்றும் ஞானேந்திரியத்திலிருந்து படிப்படியாக மேல் நோக்கி பயணிக்கிறார்கள். அனைவரும் ஆன்மா என்ற நிலையை உணர்ந்தார்களா என தெரியாது. ஆனால் தாங்கள் கண்டவற்றை தங்களின் கலாச்சாரத்திற்கு விளக்கினார்கள். அதுவே மதமாக பரிணாமித்தது.

ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் தான் மேல் நாட்டில் பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியானது. சமணத்தில் ஸத்வ குணமும் அஹங்காரமுமே முடிவு நிலையானது. பல்வேறு அடிப்படை மதங்கள் ஸத்வ குணம் என்பதில் உள்ள அன்பை போதிக்கிறது. சிலர் ப்ரகிரிதியை பெண் வடிவம் கொடுத்து அம்மனாக வழிபடுகிறார்கள். சிலர் புருஷார்த்தம் என்ற நிலையை சிவனாக வழிபடுகிறார்கள். இவ்வாறு பல்வேறு இறைவழிபாட்டின் சுவடுகளுக்கு அடிப்படை காரணமாகவும் காரணியாகவும் இருப்பது சாங்கிய தத்துவமே ஆகும்.

ஆன்மாவானது ப்ரகிருதியுடன் இணைந்து அறிவு பெற்று அஹங்கார நிலை அடைந்ததும் ஆன்மா தன்னை மறந்துவிடுகிறது. ஆன்மா தன்னை உணராமல் அஹங்காரத்தாலும் முக்குணத்தாலும் தான் ஐபொறியாக எண்ணிக்கொள்கிறது. இதனால் ஆன்மாவானது தன்னை வேறொன்றாக நினைப்பதால் வரும் சிக்கலே இது.

குயவன் ஒருவன் பானையை செய்வதை பார்ப்போம். குயவன் பானையை செய்ய களிமண்ணை சக்கரத்தில் வைத்து சுத்தும் பொழுது சக்கரத்தை சுற்றி வெற்றிடம் இருக்கிறது. அவன் பானையை வடிவம் கொடுக்கும் பொழுது பானைக்குள் இருக்கும் வெற்றிடமானது பானை வடிவில் சிறைப்பட்டுள்ளது. பானை இருக்கும் வரை அதன் உள்ளே இருக்கும் வெற்றிடத்தில் யாருக்கும் கவனம் இல்லை. பானை உடைந்ததும் அந்த வெற்றிடம் முன்பிருந்த வெற்றிட நிலைக்கே கலந்துவிடுகிறது. கலந்துவிட்ட பின்னும் வெற்றிடத்தில் யாருக்கும் கவனம் இல்லை. அந்த வெற்றிடம் எதுவாக இருந்ததோ அதுவாகவே மாறிவிட்டது. இதையே ஆன்மா உருவாவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை என்கிறது சாஸ்திரம்.

ப்ரகிரிதியின் காரணமாக சிறைபட்ட புருஷார்த்தம் என்ற ஆன்மா தன் சுய வடிவினை இழக்கிறது. மீண்டும் தன் சுயத்தை பெறும் பொழுது அது ஞானம் என்றழைக்கப்படுகிறது.

இப்பொழுது சொல்லுங்கள், மனம் என்ற ஒரு உறுப்பால் உங்களின் ஐபுலன்களும் உந்தப்பட்டு நீங்கள் வாசிக்கும் இவ்வரிகள் உண்மையானதா? ஆன்மா என்ற சூரியனின் ஒளி , மனம் என்ற தார் சாலையில் விழும்பொழுது உண்டாகும் கானல் நீர்தானே உடல் உறுப்புகள் ?

உங்களின் மெய் என்ற உடலில் உள்ளே இருப்பது தானே மெய்? இதை நீங்கள் கண்டால் உங்களின் பெயர் மெய் கண்டார்..! உங்கள் ஐபுலனும் அஹங்காரமும் கொண்ட உடலுக்கே பெயர் உண்டு. அதை கடந்தவர்களுக்கு என்றுமே ஒரே பெயர். மெய் கண்டார்...!

ஆன்மா என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்ததும் என்ன நிகழும்?

என் செல்ல எதிரி திருமூலர் எளிமையாக விளக்குகிறார் பாருங்கள்.

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே

எம்பிரான் என்னும் ஆன்மாவை சந்தித்தால் என்ன நடக்கும் என புரிகிறதா?

நான் பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி இவ்வற்றை விளக்கினாலும் உங்களின் உள்ளே மாற்றம் நிகழும் பொழுதே இவற்றை உணர முடியும்.

சாங்கியத்தில் குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் உணர வேண்டுமானால் நீங்கள் புலன்களில் இயங்கக் கூடாது. இது சொல்வது எளிது நாம் கடும் முயற்சி செய்தால் மட்டுமே புலன்களை விடுத்து மேல்நிலையான அறிவு, பிரகிருதி என செல்ல முடியும். நாம் புலனில் இயங்கக்கூடாது என கூறும் பொழுதே அதை படித்துக்கொண்டிருக்கும் இந்த கண்கள் ஒரு புலன் தானே?

நாம் அஹங்கார ரூபமாக வெளி உலகை கவனிக்கையில் இயற்கையே (ப்ரகிருதி) ஒரு நாள் நம்மை ‘பளார்’ என அடித்து ஆன்மாவை நோக்கி திருப்பும். அன்று விழும் அடி என்றும் மறக்காது. அன்று விழும் அடியால் அனைத்தும் புரிந்துவிடும். அனேகமாக ஞானம் பெற்ற பலருக்கு இவ்வனுபவம் இருக்கும். இத்தகைய நிலை ஏற்பட்டு அஹங்காரம் உடைத்தெரியப்பட்டு சூன்ய நிலையில் இருப்பார்கள். விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள். அப்பொழுது தான் தான்முனைப்பு ஏற்பட்டு தன்னுள்ளே கவனிக்க ஆரம்பிப்பார்கள். ஞானம் பிராசிக்கும்.

கெளதம புத்தர் உலகியல் இன்பங்களில் நாட்டத்துடன் இருக்கும் ஒரு நாள் இறப்பு, மூப்பு நோய் போன்றவற்றை கண்டதும் தன் சூன்ய நிலைக்கு சென்று தன்னுள்ளே தேடத்துவங்கினார்.

வேட்டையாடி உலகியல் இன்பத்தில் நாட்டங் கொண்ட வேடன், முனிவர்களின் கேள்வியால் தன்முனைப்பு பெற்று தன்னுள்ளே தேடத்துவங்கி வால்மிகியானான்.

வெற்றிமட்டுமே போரில் சந்தித்த ஒரு அரசன், திடிரென தோற்று போனான். தன் நாட்டை இழப்பதை விட தன் வெற்றியை இழப்பது இழுக்காகப்பட்டது. அஹங்காரத்தில் அடிவிழுந்தது.
விரக்தியின் உச்சத்தில் சூன்ய நிலைக்கு சென்றான். பகைவரிடத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள குகையில் அடைபட்டவனுக்கு தன்முனைப்பு ஏற்பட்டது. ஞானம் பிறந்தது. பிறகு அவன் பகைவனை மட்டுமல்ல தன்னையே வெற்றிக் கொண்டான்.

இப்படி ஞானிகளின் வாழ்க்கை எங்கே ஞானம் பெறும் இயக்கம் துவங்கியது என பார்த்தால் அவர்களின் அஹங்காரத்தில் விழுந்த அடி என உணரலாம். அதனால் ஏற்பட்ட சூன்யமே அவர்களை தன் ஆய்வுக்கு இழுத்து சென்றிருக்கிறது.

ஸ்வாமி ராமாயணம் மஹாபாரதம்னு சொல்லி இப்ப எங்கையோ கூட்டிக்கிட்டு போறிங்களேனு நினைக்கிறீர்களா? :)

வால்மீகி தன்னுள் கண்ட சாங்கியத்தை வரிவடிவில் வடித்தது தான் ராமாயணம். வியாசர் தன்னுள் கண்டதை வரிவடிவில் வடித்தது தான் மஹாபாரதம். இரண்டும் சாக்கிய வரைபடத்தின் வெவ்வேறு பரிமாணங்கள். அடிப்படையில் அனைத்தும் ஒன்றே.

சாங்கிய வரை படத்தை கையில் அச்சிட்டு வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த பகுதியில் இராமாயண கதாப்பாத்திரங்களை அதனுடன் ஒப்பிட்டு நோக்குவோம்..!

(வினைத் தொடரும்)

Friday, May 20, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 5

முழுமையான ஞானிக்கும், இறைவனை பற்றி தெரியாமல் இருக்கும் அறியாமை கொண்டவர்களுக்கு கடவுளை பற்றிய கவலை இருக்காது. முன்னவர் உணர்தவர், பின்னவருக்கு அதைப் பற்றி கவலை இல்லை.

அறியாமையில் இருக்கும் மக்களை விட கொஞ்சம் அறிந்தவர்களின் நிலை மிகவும் வேடிக்கையானது. எளிமையாகச் சொன்னால் நிறைகுடமும் காலி குடமும் தழும்பாது..!

பாதி நிறைந்த குடமான இவர்களின் அல்லாட்டம் இருக்கிறதே சொல்ல சொல்ல நிறைவடையாதது. இந்த பாதி நிறை குடங்களை அடையாளம் காண்பது எளிது. :)

கடவுளை பற்றி பேசினோமானால் உடனே ஒரு ரெடிமேட் டயலாக் வைத்திருப்பார்கள். “கடவுள் நமக்கு உள்ளேதான் இருக்கிறார், அவரை வெளியே தேடி என்ன பிரயோஜனம்?”

இவர்கள் இப்படி சொல்லுவதை கேட்பவர்கள் மெளனமாக இருந்தால் இவர்கள் பிழைத்தார்கள். அப்படி இல்லாமல், “நமக்குள்ள கடவுள் இருக்காருனு சொல்றீங்களே எங்க இருக்காரு? சுண்டு விரலிலையா? என் தலைக்குள்ளையா?” என கேட்டால், விதாண்டாவாதம் செய்யாதீங்னு சொல்லிவிட்டு இடத்தை காலி செய்வார்கள். இவர்களும் தம்முள்ளே இறைவன் எவ்வடிவில் இருக்கிறான் என ஆராயமாட்டார்கள்.

சிலர் கடவுள் மனசில் இருக்கிறார், அதனாலத்தான் “கட+உள்” என சொல்லுகிறோம் என மெய்சிலிர்க்க வைப்பார்கள். கடவுள் அன்ம வடிவில் இருக்கிறார் என தாங்கள் எங்கோ படித்ததை அவிழ்த்துவிடுவார்கள்.

“நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்” எனும் சிவவாக்கியர் என்ற மெய்ஞான சித்தரின் பாடல் இவர்களிடம் சிக்கி படும்பாடு இருக்கிறதே என்னவென்று சொல்ல? நாதன் நம்முள்ளே இருக்கார் என சொல்ல இப்பாடலை சொல்லியாகிவிட்டது. நாதன் நம்முள்ளே எங்கே எதுபோல இருக்கிறார் என ஆராய்ந்ததுண்டா? நம்மில் வியர்வையாக? இரத்தமாக? சீழாக? மலமாக நம்முள் என்னவாகத்தான் இருக்கான் அந்த நாதன்? இவ்வாறு அழுத்திக்கேட்டால் இவர்கள் சொல்லும் பதில் “இப்படி பேசாக்கூடாது.உம்மாச்சி கண்ணக்குத்தும்”- தானும் ஆராயாமல், பிறரையும் ஆராயவிடாமல் இருக்கும் இவர்களுக்கு சரியான வழிகாட்டுதலே சாங்கிய தத்துவம்.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான இறைத்தத்துவங்கள் உண்டு. அதில் முதன்மையானதும் அற்புதமான தத்துவம் சாங்கியம். கபிலர் என்ற முனிவர் இத்தத்துவத்தை தோற்றுவித்தார் என் கூறப்பட்டாலும், சாங்கிய தத்துவத்தின் வரலாறு குழப்பமாகவே உள்ளது. கபிலர் இந்தியர் எனவும், இல்லை அவர் வெளிநாட்டினர் என்றும் பல கதைகள் உண்டு. கபிலர் பிறந்த இடம் காலிபோர்னியா என சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆன்மீக தத்துவத்தை கண்டுபிடுத்தவரை விட நமக்கு தத்துவம் தானே முக்கியம்? சாங்கிய தத்துவத்தை எளிமையாக சொல்ல முயல்கிறேன்.

“நான் என்ற இருப்பே உண்மை. மற்றவை எல்லாம் பொய்.” இதுவே சாங்கியத்தின் ஆதார வரிகள்.

நீங்கள் பார்க்கும் உலகம், இந்த வரிகள், கம்ப்யூட்டர் என அனைத்தும் பொய். இது நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் மாய தோற்றம். உண்மையில் நீங்கள் இருப்பது மட்டுமே நிஜம்..!

இக்கருத்தை உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம். அப்பொழுது இந்த உலகமும் அதன் இருப்பும் எங்கே சென்றது?

அதே போல கனவில் பல இடங்களையும் மனிதர்களையும் காண்கிறோம். முழித்தவுடன் அவை எங்கே சென்றன?

ஆக நம் உறக்கத்திலும், விழிப்பிலும் காண்பது உண்மையல்ல. நாம் இருப்பது மட்டும் தானே நிஜம்?

இயல்பாகவே பொய்யை பற்றி தெரிந்துகொள்வதில் நமக்கு ஆர்வம் அதிகம். மெய்யை பற்றி தெரிந்துகொள்ள கசக்கும்..!

பாருங்கள் தமிழில் கூட நம் உடலுக்கும் உண்மைக்கு ஒரே சொல், “மெய்”. ஒரு சித்தரின் பெயர் கூட மெய்கண்டார். இவர் கண்ட மெய்யை நாமும் கண்டுகொள்ளப் போகிறோம்.

இதுவரை நாம் மேலோட்டமாக பார்த்த விஷயங்கள் எளிமையாக தோன்றலாம். இனிவருவது கதை படிப்பதை போல படித்தால் புரியாது. அடுத்த பகுதியை படிக்க அமைதியான சூழலும், கவனம் தேவை...!

அதுவரை வேதமந்திரத்தின் ஒருவரியை கூறிக்கொண்டிருங்கள்.

அசத்தோமா சத்கமைய.....

பொய்மையிலிருந்து மெய்மை அடைய வேண்டும்.. பெய்மையான புறத்தைவிட்டு மெய்யான அகத்தை காண வேண்டும்...!

(வினைத்தொடரும்)