Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, December 30, 2009

காசி சுவாசி - பகுதி 3

தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் மி
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே மிமி

தேவர்களின் தலைவன் வணங்கும் திருவடியை கொண்டவரும், சந்திரனை போன்ற ஒளி பொருந்திய யஜ்ந்ஞோபவீதம் கொண்ட கருணை மிகுந்தவரும், யோகிகளால் வணங்கப்படும் யோகியர்களின் தலைவனும், உடலில் ஆடைகள் இன்றி திகம்பர நிலையில் காசி மாநகரில் இருக்கும் கால பைரவரை நான் வணங்குகிறேன்.
- ஆதிசங்கரர், கால பைரவ அஷ்டகம்

------------------------------------------------------

இறைவனை மூல சக்தியாக கண்டால் ஒன்று தான். ஆனால் இறை சக்தி செயல்படும் பொழுது பல்வேறு சக்தியாக மாற்றமடைகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அனுக்களால் ஆனது. அனு என்பது இதன் மூலம். ஆனால் அனைத்து பொருளும் ஒன்று போலவே இருப்பது இல்லை அல்லவா?

”கால பைரவ்” என வட மொழியில் கூறப்படும் காலபைரவர் என்ற இறை சக்தி மூல சக்தியின் பரதிபிம்பம் என்றாலும் தனித்துவமானது. காசி என்ற நகரத்தின் முழுமையான கடவுள் கால பைரவர். ஞானத்தின் வடிவமாகவும் ஞானிகளுக்கு எல்லாம் முதல் ஞானியாகவும் இருக்கும் இறைவனே கால பைரவன்.
அகோரிகள் தங்களையே இறைவனாக வணங்குபவர்கள். ஆனாலும் அவர்கள் தங்களை காலபைரவனாகவே வணங்குகிறார்கள். காலத்தை கடந்து நிற்பவர்களும், ஞானத்தை உணர்ந்து இருப்பவர்களும் கால பைரவர்கள் தான்.

நாய் காலபைரவரின் வாகனம் என்பார்கள். என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் தன்மை நாயாக உருவகப்படுத்தபடுகிறது. ஆடையில்லாமல் இருப்பதே கால பைரவரின் தன்மை என்றாலும் சில கோவில்களில் கருப்பு ஆடை அணிவிக்கிறார்கள்.

கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது. இந்த கருத்தை நினைவில் கொள்ளுங்கள் பின்னால் இதற்கு வேலை இருக்கிறது.

கால பைரவரின் தன்மை அறியாமையை ஒழித்து ஞானத்தை வணங்குவதாகும். ஆணவம் மற்றும் மாயை என்ற மயக்கத்தில் இருப்பவர்களுக்கு தகுந்த நிலையில் உணர்வுகொள்ள செய்து ஞானத்தை வழங்குவார். ஆனால் காலபைரவரிடம் சாத்வீகமான அனுகுமுறையை எதிர்பார்க்க முடியாது. அவரின் ஒவ்வொரு செயலும் அதிரடியாகவே இருக்கும்.

ஒரு சந்தையில் ஒருவர் அனைவரையும் அழைத்து ஒரு செய்தி சொல்லுகிறார் என கொள்வோம். அந்த செய்தியை அனைவரும் கூடி கேட்பார்களா என கூற முடியாது. இதே ஒருவர் சில சாகசங்களை மக்கள் முன் செய்து அதிரடியாக ஒரு செய்தியை கூறினால் பாமர மக்களுக்கு அந்த செய்தி சென்று அடையும். கால பைரவர் ஞானம் வழங்கும் நிலை இந்த இரண்டாம் வகையை சார்ந்தது.

அகோரிகளின் ஆதி குரு காலபைரவர். அகோரிகள் தங்களை காலபைரவ ரூபமாகவே நினைக்கிறார்கள். அதனால் அகோரிகளின் சில செயல்பாடுகள் மக்களின் அறியாமையை அதிரடியாக சுட்டிகாட்டுவது போல இருக்கும். சிலர் அதில் அருவருப்படைவார்கள் சிலர் அகோரிகளை விட்டு ஓடிவிடுவார்கள்.

சில வருடங்களுக்கு முன் நான் காசி பயணத்தில் கண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அருவெறுப்பு அடையக்கூடியவர்கள் அடுத்த பத்தியை கடந்து செல்லுவது நல்லது.

கங்கை கரையில் நான் அமர்ந்திருக்கும் பொழுது நான் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு அகோரி அமர்ந்திருந்தார். வெளி ஊரிலிருந்து வரும் சிலர் அகோரியை கடந்து செல்லும் பொழுது வணங்கிவிட்டு சென்றார்கள். அவரும் அதை தவிர்த்து வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டார். ஆனாலும் மக்கள் விடுவதாக இல்லை. சிலர் அவரை வணங்குவதை பார்த்த மேலும் சிலர் அந்த அகோரியை வணங்க துவங்கினார்கள். ஆனால் அனைவர் முன்னிலையில் யாரும் சற்று எதிர்பாராத சூழலில் அருகில் இருந்த மலத்தின் ஒருபகுதியை கைகளில் எடுத்து சுவையாக உண்ணத் துவங்கினார் அந்த அகோரி. அவ்வளவுதான் அங்கே ஒரு ஈ காக்கா இல்லை. வணங்கத்தக்க ஒருவர் மலம் தின்றுகொண்டிருந்தால் நம் மக்கள் புனிதராக பார்க்குமா? சொல்லி புரியவைப்பதில்லை அகோரிகள்...!

ஒளரங்கசீப் காலத்தில் செல்வம் கொள்ளை என்பதை தாண்டி மத திணிப்பு மற்றும் மதப்போர்கள் நடந்துகொண்டிருந்தது. காசியை இஸ்லாமிய புனித நகரமாக மாற்ற முயற்சி செய்துவந்தார் ஒளரங்கசீப். ஒருபுறம் கடினமான போர் தந்திரம் மற்றும் பிரம்மாண்டமான போர் படை என ஒளரங்கசீப் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை மற்றும் அவர்களின் குழப்பம் விளைவிக்கும் செய்கை ஆகியவற்றால் முகலாய சக்ரவர்த்தியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

காசியில் சந்துகளை கட்டி குழப்பம் விளைவித்தனர். சிலர் எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்களை அமைத்து அதை வணங்கினார்கள். இதனால் ஒளரங்கசீப் குழப்பம் அடைந்தார். முடிவில் சில சூழ்சிகளும் தந்திரங்களை செய்து விஸ்வநாதர் கோவிலை கண்டுபிடித்து முற்றிலும் சிதைத்தார். அங்கே இந்த சுயம்பு சிவலிங்கத்தை சுக்குநூறாக்கினார்.

விஸ்வநாதர் கோவில் சிதைக்கவருகிறார்கள் என்றும் கைமீறி போகிறது என்பதையும் தெரிந்துகொண்ட சிலர் சுயம்பு லிங்கத்தை எடுத்து கோவிலுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் வீசிவிட்டார்கள். சுயம்பு லிங்கம் இருந்த இடத்தில் வேறு ஒரு பாணலிங்கம் வைக்கப்பட்டது.

ஒளரங்கசீப் சிதைத்தது சுயம்புலிங்கத்தை அல்ல..!

சிதைத்தது மட்டுமல்லாமல் விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் பெரிய மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்தினார் ஒளரங்கசீப். இன்று விஸ்வநாதர் கோவில் என மக்கள் வழிபடும் இடம் முன்பு விஸ்வநாதர் கோவில் இருந்த இடம் அல்ல. முன்பு மூலஸ்தானத்தை பார்த்து இருந்த நந்தி இப்பொழுது மசூதியை பார்த்து நிற்கிறது.


ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட படம்.விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதி. புகைப்படத்தின் வலது கோடியில் சிதிலம் அடைந்த கோவில் கோபுரம் தெரியும்.
தற்சமயம் இருக்கும் காசி விஸ்வநாதர் தங்க கோபுரம். பின்புறம் மசூதி.

நந்திக்கு அருகில் இருக்கும் கிணற்றில்தான்
இன்றும் விஸ்வநாதர் இருக்கிறார். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை பல முறை சிதைத்து மறுபடியும் மறுபடியும் கட்டபட்டது விஸ்வநாதர் கோவில். முகலாய பேரரசு வீழ்ந்ததும் தற்சமயம் இருக்கும் விஸ்வநாதர் கோவில் வடிவம் பெற்றது. இன்றும் அந்த கேணிக்கும், மசூதிக்கும் துணை ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அரசியலில் இன்றளவுக்கு சிவன் முக்கிய துருப்பு சீட்டு இல்லை. இருந்தால் ராம ஜென்ம பூமி என்பதற்கு பதில் நம் ஆட்கள் சிவ ரவுத்திர பூமி என கூவ துவங்கி இருப்பார்கள்.

ஞானகேணி பழைய படம்.கேணியின் வலது பக்கம் மசூதி,
இடது பக்கம் கோவில் என இரண்டுக்கும் மையத்தில் அமைந்துள்ளது.


விஸ்வநாதர் கோவிலில் இருக்கும் கேணியை ஞானக்கேணி என கூறுகிறார்கள். இதில் இருக்கும் நீர் தீர்த்தமாக குடித்தால் ஞானம்
கிடைக்கும் அறிவு பெருகும் என நம்பிக்கை நிலவுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விஸ்வநாதர் கோவிலை பூஜிப்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்கள் பாண்டாக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வரும் மக்களிடம் பணம் பறிப்பது, மேலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வது போன்ற துவேஷங்களை செய்து வந்தனர்.

கங்கையில் குளித்துவிட்டு சிறிது நீரை எடுத்து வந்து விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது
பக்தர்களின் வழக்கமாக இருந்தது. அதற்கு மிகப்பெரிய வரிசையாகவும், நீர் அபிஷேகம் செய்வதே ஆன்மீகத்தின் முக்கிய நிலை என்றும் மக்கள் நம்பத்துவங்கினார்கள். இவ்வாறு அறியாமை பெறுக விஸ்வநாதர் கோவிலை பூஜை செய்துவந்தவர்களும் காரணமாக இருந்தார்கள்.

மக்களின் அறியாமையை அதிரடியாக போக்கும் தன்மை கொண்டவர்கள்தான் அகோரிகள் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு வேளை வந்தது. ஞான கேணியில் இருக்கும் விஸ்வநாதரை கண்டுகொள்ளாமல் மக்கள் தங்கள் விஸ்வநாதரை பூஜிக்கிறோம் என்ற அகந்தை மற்றும் அறியாமையில் இருப்பதை கண்ட அந்த அகோரி கூட்டமாக இருந்த விஸ்வந்தாரர் கோவிலுக்குள் சென்று அந்த காரியத்தை செய்தார்.

அனைவர் முன்னிலையிலும் திடீரென சிறுநீரை நேராக சிவலிங்கத்தின் மேல் செலுத்தினார். அனைவரும் அறுவெறுப்படைந்து வெளியேரினார்கள். தனது கையில் இருக்கும் சங்கை எடுத்து மிகவும் சப்தமாக ஒலி எழுப்பி பிறகு கூறினார்....

உங்களுக்குள் இருக்கும் விஸ்வநாதரை வணங்கு....
உன் ஞானம் என்ற கங்கையால் அபிஷேகம் செய்..

இவ்வாறு கூறிவிட்டு ஒடி மறைந்தார் அந்த அகோரி. அனைவரும் உணரத்துவங்கினார்கள்.

இன்று மக்கள் வணங்கும் விஸ்வநாதர்.

அகோரிகளின் குழுவை அகடா என கூறுவார்கள். அகோரிகளின் இந்த குழுவை தவிர அகோரிகளின் ஆற்றல் பெற்றவர்கள் பலர்
இருக்கிறார்கள். அகோரிகள் தங்களின் ஆற்றலை பிறருக்குள் செலுத்தி அவர்களை கருவியாக்கி சமூகத்தை தூய்மையாக்குவார்கள்.

காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மாற்றபட்டாலும், முக்கியமாக சிலருக்கு இப்படி மாற்றம் செய்யபட்டு அவர்கள் கருப்பு உடையில் நம் சமூகத்தை வலம் வந்தார்கள். ஒருவர் பாரதி மற்றொருவர் பெரியார்...! கருப்பு என்பது சமூகத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பது மட்டுமல்ல காலபைரவரின் நிறம் அது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காசி நகரமே காலபைரவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காசி நகருக்கு சென்று திரும்பும் எவரும் ஏதோ ஒருவிதத்தில் தங்களுக்குள் மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்வார்கள்.

அகோரிகளின் அதிரடிக்கு மேலே சில உதாரணங்கள் கூறினேன். இதைவிட ஆதிசங்கரருக்கே ஒரு அகோரி ஆப்பு வைத்தார். வாருங்கள் கங்கையின் சலனத்தை ரசித்தவாறே அந்த சம்பவத்தை கூறுகிறேன்...கேளுங்கள்..

(...சுவாசிப்பேன்)

சிரிப்பு டிஸ்கி: விஸ்வநாதர் கோவில் கிணற்றின் பெயரை ஜம்புள் செய்தால் என்னை பிறர் செல்லமாக கூப்பிடும் பெயர் இருக்கும் :)

[படங்கள் உதவி : விக்கிபிடியா]

Tuesday, December 29, 2009

தினம் தினம் திருமந்திரம் - புத்தகம் ஓர் அறிமுகம்

திருமந்திரம் என பலராலும் அழைக்கப்படும் சதாசிவ மந்திரம் என்ற நூலுக்கு எளிய விளக்கம் அளித்துள்ளேன். சதாசிவ மந்திரம் என்பது ஆன்மீகத்தின் உயர் நிலையில் எழுதப்படாமல் ஆன்மீக உச்ச நிலையில் எழுத்தப்பட்டது. இந்த நூலுக்கு பல நூற்றாண்டுகளாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை சைவ சிந்தாந்தம் அல்லது இந்து சமயம் என்ற வட்டத்தின் உள்ளேயே அமைந்திருந்தது.

ஒரு வரையறையில் அடைக்கப்படாமல் தினம் தினம்
திருமந்திரம் ஒரு வித்தியாசமான படைப்பாக அமைந்துள்ளது. ஆன்மீக கண்ணோட்டம் கொண்டு ஒவ்வொரு மந்திரங்களும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் தேவையான விளக்கங்கள் இதில் இருக்கிறது. ஜாதி,மத மற்றும் இனம் கடந்த நிலையில் திருமந்திரம் விளக்கபட்டிருப்பது இந்த நூலில் மட்டுமே என கூறலாம்.

3088 திருமந்திரங்கள் இருப்பதாக கூறினாலும் திருமூலர் காலத்திற்கு பிறகு பல மாற்றங்கள் அதில் செய்யப்பட்டன. திருமூலரின் திருமந்திரத்தில் 3000 திருமந்திரங்களையும் படிக்க வேண்டிய சூழலில் நாம் இல்லை. அதனால் 3000 திருமந்திரத்தில் இருந்து 366 திருமந்திரம் மட்டும் தேர்வு செய்து விளக்கி உள்ளேன். இதனால் தேதி வாரியாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு திருமந்திரம் என அமைப்பில் வடிவமைக்கபட்டுள்ளது.

3000 திருமந்திரங்களை படிக்க இந்த 366 மந்திரங்கள் தூண்டுகோலாக அமையும் என கூறலாம். திருமந்திரத்தில் யோகம் செய்யும் முறை, சித்துக்கள் அடையும் தன்மை, சமாதி செய்யும் முறை, சன்யாசம் என பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இவை சம்சார வாழ்க்கைக்குள் இருப்பவர்களுக்கு தேவையில்லை. தினம் தினம் திருமந்திர புத்தகத்தில் இயல்பு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உதவும் நிலையில் திருமந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கி பயன்பெறுவது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பரிசளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறைந்த எண்ணிக்கையில் முதல் பதிப்பு அமைகிறது என்பதால் சில நூறு பிரதிகளே வெளி விற்பனைக்கு இருக்கிறது.


இந்த புத்தகத்தை அச்சுடும் பணியை நம் சக பதிவர் திரு வடகரை வேலன் அவர்கள் செய்கிறார். அவருக்கு என் நன்றிகள்.

வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி ஒன்றாம் தேதி “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு நிகழ்சிகள் துவங்கும்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் முகவரி :

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை
பொன்னுரங்கம் சாலை கிழக்கு,
ஆர் எஸ் புரம், கோவை.

தொலைபேசி :99 44 2 333 55

கோவையை சேர்ந்த பதிவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யவில்லை. அதற்கான விளக்கம் விரைவில் கிடைக்கும்.

Friday, December 25, 2009

காசி சுவாசி - பகுதி 2

யஸ்யாமிதம் கல்பிதமிந்த்ரஜாலம்
சராசரம் பாதி மனோ விலாஸம் மி
ஸச்சித்ஸுகைகா பரமாத்மாரூபா
ஸா காசிதாஹம் நிஜபோதரூபா மிமி

இந்திர ஜாலம் போல இந்த உலகமானது நம் மனதில் மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. இவை அனைத்தும் மனம் போன போக்கில் தோற்றுவிக்கபட்டது. பரமாத்மாவின் சத்- சித்- ஆனந்த ரூபமே காசி நகரம். ஆகவே நான் காசியாக இருக்கிறேன்...!

-ஆதிசங்கரர்.

----------------------------------------------

உலகின் புகழ் பெற்ற நகரங்களில் தொன்மையானது என காசியை கூறலாம். காசி என்பது எந்த மதத்திற்கும் சார்ந்த நகரம் அல்ல. இந்த செய்தி உங்களுக்கு சற்று ஆச்சரியமாக இருக்கலாம்.

இந்துக்கள்,ஜைனர்கள்,சமணர்கள்,முகமதியர்கள், சீக்கியர்கள் என ஆசிய கண்டத்தின் அனைத்து மதத்தினருக்கும் ஒருவித இறைவழிபாடு செய்யும் முக்கிய நகரமாக வாரணாசி விளங்குகிறது.

இந்துக்களின் திருமணத்தில் காசி யாத்திரை என்ற ஒரு நிகழ்வு உண்டு. அதாவது ஒருவர் தனது வாழ்க்கையை துறந்து சன்யாசம் பெற்றுக்கொள்ளும் செயலை குறியீடாக சொல்லுவது காசியாத்திரை. பிறகு மணமகனின் மனதை மாற்றி திருமணம் செய்வது போல இந்த நிகழ்வை செய்வார்கள். முன்காலத்தில் உணர்வு பூர்வமாக இருக்கும் ஒரு நிகழ்வு, தற்பொழுது உணர்வற்று வெறும் சடங்காக இருக்கிறது. நம் கோவிலில் முன்பு பக்தியுடன் செய்யும் பூஜைகள் நாளடைவில் இவ்வாறு சடங்காக மாற்றம் கொள்வது உண்டு.

காசி யாத்திரை என்ற இந்த சடங்கை திருமணத்திலிருந்து தப்பிக்க மண மகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு என வேடிக்கையாக சொல்லுவார்கள்.

வாரணாசியின் நகர வடிவமைப்பு சற்று வித்தியாசமானது. நகரம் முழுவதுமே ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கும் சிறுவர்களுக்கான வலைவிளையாட்டு போன்று பல சந்துகள் கொண்டது. சாலைகள் என்பதே கிடையாது. அனைத்தும் சந்துகள் தான். உங்கள் இரு கைகளையும் அகல விரித்துக்கொண்டு நடுவில் நின்றீர்கள் என்றால் உங்கள் உள்ளங்கையில் சலையின் இரு புறமும் தட்டுப்படும். அவ்வளவு குறுகிய சந்துகள். ஒருவிதத்தில் வாரணாசியின் அமைப்பில் சுவாரசியம் கூட்டுவது இந்த சந்துகள் தான்.

ஒரு தூய்மையான காசி தெரு

பழம்பெரும் நகரம் எல்லாம் நாளடைவில் கட்டிட ஆக்கிரமிப்புகளால் குறுகும் என நாம் அறிவோம். ஆனால் காசிநகரம் இதிலும் வித்தியாசமானது. ஆக்கிரமிப்பு இருக்க கூடாது என்பதற்காக இங்கே கட்டிடங்கள் கட்டபட்டது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் காசி குறுகிய சந்துகளால் ஆனது அல்ல.

ஆப்கான் தேசத்தவர்களின் படையெடுப்பால் இந்தியாவில் பல நகரங்கள் கொள்ளையடிக்கபட்டது. அதில் குஜராத்தில் உள்ள சோமநாத் கோவிலும், காசியில் உள்ள விஸ்வநாத் கோவிலும் முக்கியமானது. இவ்வாறு தொடர் கொள்ளையால் கோவில்கள் சிதைக்கபட்டு, அதில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயின. சில முட்டாள் ஆப்கான் அரசர்கள் இஸ்லாமியத்தை கடைபிடிக்கிறேன் என பல கோவில்களில் இருக்கும் மூர்த்தங்களை மூர்க்கமாக சிதைத்தார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன் இந்தியாவின் ஜோதிர்லிங்க கோவில்கள் மிகவும் சிறப்பன செல்வ நிலையில் இருந்தன. இதனால் கோவிலை அழித்த மாதிரியும் ஆயிற்று செல்வம் கிடைத்த மாதிரியும் ஆயிற்று என அத்துமீறல்களை செய்தார்கள்.

காசி என்ற நகரில் விஸ்வநாதர் கோவில் ஜோதிர் லிங்கத்தில் ஒன்று மற்றும் முதன்மையானது. அதனால் அதில் செல்வத்தின் அளவு அதிகமாகவும், மக்கள் வணங்குவது அதிகமாகவும் இருந்தது. இதனால் அங்கே கொள்ளையடிக்க வந்த ஒளரங்க சீப் போன்றவர்கள் முதலில் சிதைக்க நினைத்தது விஸ்வநாதர் கோவிலையும் அதன் உள் இருக்கும் விஸ்வநாதரின் லிங்கத்தையும் தான்.
சுகந்திரமான சன்யாசியும், சட்டத்தில் அடைக்கபட்ட சம்சாரியும்
என்ற தலைப்பில் ஒரு உலகப்புகழ் புகைப்பட கலைஞர் எடுத்த படம். :))


முகமதிய அரசர்களின் படை நெருங்கக் கூடாது என்பதற்கும் எளிதில் அடையாளம் கண்டறியக்கூடாது என்பதற்கும் பல சந்துகள் மற்றும் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து விஸ்வநாதர் இருக்கும் இடத்தை மறைத்தார்கள். காசியின் முக்கியவீதியில் இருந்து எந்த பக்கம்

திரும்பினாலும் சந்துகளாகவே இருக்கும். அனைத்தும் ஒன்று போலவே இருக்கும். மக்கள் தங்கள் கோவிலை காப்பாற்ற செய்த இந்த முயற்சிகள் சில காலம் கைகொடுத்தது. முக்கிய வீதியிலிருந்து கோவில் இருக்கும் இடம் வரை இரண்டு கிமீ தூரம் சந்துகள்தான். சிறிய கார் கூட செல்ல முடியாது. சரக்கு எடுத்து செல்லும் மூன்று சக்கர சைக்கிள் சென்றாலே எதிரில் வருபவர்கள் நடக்க முடியாது.

எனக்கு பிடித்த சந்துகளில் இதுவும் ஒன்று

காசியில் இந்த நகர கட்டமைப்பு உலகின் எந்த பகுதியிலும் இல்லை என்பது சிறப்பு. இந்த வீதிகளில் நடந்தால் இதற்கு முன் எப்பொழுதோ இங்கே வந்தது போன்ற உணர்வு இருக்கும். புதிய இடமாக இருக்காது. இந்த திருப்பத்தில் வலது பக்கம் திரும்பினால் இன்ன இடம் என்பது போல எல்லாம் பழகிய இடமாக இருக்கும். சந்துகள் எல்லாம் வளைவுகளாக இருந்தாலும் இந்த வலையினுள் தான் விஸ்வநாதரும் இருக்கிறார்.

இப்படி மக்கள் பிறரிடம் இருந்து பாதுகாத்து வைத்து புனிதமாக வணங்கி வந்த விஸ்வநாதருக்கு வந்தது ஒரு சங்கடம். ஆறுகால பூஜை நடந்து வந்த லிங்க திருமேனியின் மேல் ஒரு அகோரி என்ன செய்தார் தெரியுமா?

நின்ற வாக்கில் சிறுநீறு கழித்தார்...!

அவரை திட்டிக்கொண்டிருங்கள்..... மீண்டும்....

(சுவாசிப்பேன்...)

Wednesday, December 23, 2009

காசி சுவாசி - பகுதி 1

காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்.

நாம் பயணம் செய்யப்போவது இரண்டாம் நகரமான ஆன்மீக நகரம். கங்கை நதியின் பயணத்திற்கு ஏற்ப கரையில் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 350க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருக்கின்றன. இவற்றை காஹட் (Ghat) என அழைக்கிறார்கள். ஒவ்வொரு காஹட்க்கும் ஒரு பின்புலமும் காரணமும் இருக்கிறது. படித்துறைகளை மூன்று வகையாக பிரித்திவிடலாம். அரசர்கள் கட்டிய படித்துறை, ஆன்மீக மடங்கள் கட்டிய படித்துறை மற்றும் பொதுமக்களுக்கான படித்துறை என வகைப்படுத்தலாம். இதில் ஆன்மீக மடங்களின் படித்துறை பொதுமக்களின் படித்துறையாகவே பயன்படுத்தபடுகிறது.

விஷேஷ காலத்தில் மட்டும் ஆன்மீக மடாதிபதிகள் அவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அரசர்களின் படித்துறை என்பது அரசர் மட்டுமே பயன்படுத்தும் அமைப்பாக இருந்துவந்தது. தற்காலத்தில் அரசர்கள் மற்றும் முடியாட்சி இல்லாத காரணமாக இவை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
காசியில் அதிகாலை தியானம் முடிந்ததும் நான் கண்ட காட்சி.

குடும்பமோ வேறு நபர்களோ அதிகமாக படித்துறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அரசர்களின் படித்துறை என்றவுடன் ஒன்று தான் என நினைத்துவிடக்கூடாது. பாரத தேசத்தின் பல அரசர்கள் இங்கே தங்களுக்கு என பிரத்யோகமான படித்துறையை கலைநயத்துடன் கட்டியிருக்கிறார்கள். அதில் அவர்கள் மட்டும் ஏகாந்தமாக கங்கையை ரசிக்கவும், ஆராதிக்கவும் ஏகப்பட்ட விஷயங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.

பல அரசர்களுக்கு படித்துறை கட்டும் அளவுக்கு காசி நகரம் பொதுவான ஊராக இருந்தது. இவற்றை புரிந்துகொள்ள வரலாற்று பாடத்தின் சில பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். காசி என்பது நகரம் என்பதை காட்டிலும் அது ஒரு நாடு என கூறலாம். பாரத தேசம் பல சிற்றரசர்களால் சிதறுண்டு ஆளும் காலத்தில் காசி நகரம் ஒரு அரசின் கீழ் இருந்தது.

காசி மற்றும் அதன் சுற்றுபுற நகரங்கள் இணைந்து காசி சமஸ்தானமாக இருந்தது. காசி சமாஸ்தானம் பிற அரசுகளை விட ஒரு தனித்துவமாக இருந்தது. காசி சமஸ்தானத்தில் ராணுவம் மற்றும் போர்படை என்பது இல்லை. காசி ராஜா காசியை நிர்வாகிக்கும் தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தார். காசி மேல் யாரும் போர் தொடுக்கவோ, காசி அரசர் பிறர் மேல் போர் தொடுக்கவோ மாட்டார். தற்காலத்தில் கூட உலகில் ஒரு நாடு அப்படி இருக்கிறது. அது உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

காசியில் பல கல்விச்சாலைகள் இருந்ததால் பாரத தேசத்தில் பல நாட்டு அரசர்களும், அறிஞர்களும் அங்கே வந்து பாடம் பயின்றனர். அதனால் காசி மாநகரம் கல்விக்கு பிரதானமான விஷயமாக இருந்தது. ஐநூறு வருடத்திற்கு முன் தமிழகத்தில் ஒருவர் காசி சென்று படித்தவன் என கூறினால் அவருக்கு கிடைக்கும் மதிப்பு அளவிட முடியாதது. காசி ராஜா அங்கே இருக்கும் பல்கலைகழகத்தின் சிறந்த கல்வியாளராக தேர்ச்சி பெற்று சமஸ்தானத்தில் அறிஞர்களுடன் அலங்கரிப்பவராக இருப்பார்.

பாரத தேசத்தில் உள்ள அறிஞர்கள் தங்களின் ஆறிவை நிரூபணம் செய்யவும், ஆராய்ச்சிகளை வெளியிடுவதற்கும் காசிக்கு செல்லுவார்கள். அங்கே அறிஞர்கள் குழு ஒன்று (Senate members) ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கும். சான்றிதழ்கள் செப்பு தகட்டில் அமைந்திருக்கும். சில அறிஞர்கள் தனது செப்பு பட்டையத்தை சுமந்து வர பல அடிமைகளையும், குதிரைகளையும் வைத்திருந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகிறது.

காசி ராஜாவின் அரண்மனை பிரம்மாண்டமானது. காசி அரசர்களுக்கு பல கலைகள் தெரியும் என்றும் அதில் பல அறிவிப்பூர்வமான காரியங்கள் செய்தார்கள் என நாடோடிக்கதைகள் உண்டு.

காசியில் உள்ள படித்துறைகளில் பல நாட்டு ராஜக்களுக்கு சிறிய அரண்மணைகளை கட்டுவதற்கு அனுமதித்து, இரு விரோத நாட்டு ராஜாக்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் சச்சரவு இல்லாமல் அமைதியை நிலைநாட்டுவது காசி ராஜாவின் முக்கிய பணியாக இருந்தது.

படித்துறையில் ராஜாக்களுக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாதாரணமானது அல்ல. ஒவ்வொன்றும் குட்டி அரண்மனை. சில அரண்மனைகளில் இருந்து பார்த்தால் கங்கை நதியும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக் தெரிவார்கள். ஆனால் கரையில் இருந்து பார்த்தால் அரண்மனையில் இருப்பவர்களை பார்க்க முடியாது. இது போன்ற கலை நயம் பல அதில் உள்ளன. ராஜாஸ்தான் அரசர் ராஜா ரஞ்சித் சிங் , தனது நாட்டிலிருந்து ஊதா நிற சலவைக் கற்களை கொண்டு வந்து இங்கே அரண்மனை கட்டி இருக்கிறார். சத்ரபதி சிவாஜி இங்கே ஒரு அரண்மனை படித்துறை அமைத்திருக்கிறார். நேப்பாள் மஹாராஜாவும், சோழ அரசர்களும் இங்கே தங்கள் சந்ததியினர் வந்தால் தங்குவதற்கு அரண்மனை கட்டியிருக்கிறார்கள்.

காசி நகரம் இவ்வளவு தொன்மையான ஊராகவும், பல நாட்டு அரசர்கள் விரும்பும் ஊராகவும் இருந்தது.

நிற்க... எதற்கு இந்த விக்கிப்பிடியா விளக்கம் என்கிறீர்களா?


பாரத தேசத்தில் இருக்கும் அரசர்கள் மக்கள் விரும்பும் படி காசியில் என்ன இருக்கிருக்கிறது ? அங்கே ஐந்து அதிசயங்கள் நடக்கிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். அவற்றை பட்டியலிடுகிறேன்

1) பல்லி சப்தம் எழுப்பாது. : - காசியில் பல்லிகள் உண்டு. ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.

2) பிணம் நாற்றம் எடுக்காது : பிணம் எரியும் பொழுது பக்கத்தில் நின்று இருக்கிறீர்களா? பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள். ஆனால் இங்கே பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது.

3) கருடன் வட்டமிடாது - காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும், உணவுகள் சிதறிகிடந்தாலும் இறைக்காக கருடன் வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும் ஆனால் வட்டமிடாது.

4) பூ மணக்காது : இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். :) என்ன செய்ய காசியில் அப்படித்தான் இருக்கிறது. தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது, முக்கியமாக மல்லி முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும். தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும்.

பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது எனலாம். அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால்
காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது. ஆனாலும் அவை வாசங்கள் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் காசி பூக்கள் மணப்பதில்லை.

5) பால் வற்றாது : இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் கட்டப்படுவதில்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை. பசுக்கள் கங்கையின் உருவில் உலாவருவதாக மக்கள் கருதுகிறார்கள். அதனால் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு. கங்கை இந்த நகரத்தில் என்றும் __________________ அதனால் பசுக்களின் பாலும் வற்றாது என்கிறார்கள்.

அது என்ன வாக்கியம் விடுபட்ட இருக்கிறது என்கிறீர்களா? கங்கை ________ என கூறினால் பல கோடிவருடம் தினமும் ஆயிரம் பசுக்களை கொன்ற பாவம் கிடைக்குமாம். நான் என்றைக்காவது கங்கை ________ உண்டா என கேட்க தனது துடுப்பை எடுத்து என்னை தாக்க வந்தான் ஒரு படகு ஓட்டி. எனக்கு ஏற்கனவே பாவம் கிடைத்தது. அதை கங்கையில் குளித்து சரி செய்துவிட்டேன் :).

படகோட்டி கூறிய அதிசங்களைதான் நான் இங்கே கூறி இருக்கிறேன். இதில் ஐந்தையும் ஆராய்ந்து உண்மை என உணர்ந்து இங்கே பட்டியலிடுகிறேன். பலவருடங்கலாக இன்றும் இயற்கையாகவே ஐந்து விஷயங்கள் நடக்கிறது. காசியில் மட்டும் என்ன இப்படி நடக்கிறது என உங்களால் காரணத்தை யூகிக்க முடியுமா? கொஞ்சம் யோசியுங்கள். அதற்குள் நான் கங்கை கரையின் படித்துறையில் உலா சென்று வருகிறேன்.

(சுவாசிப்பேன்..)