Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 28, 2009

இசையும் இறைவனும்

இசை என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய அர்த்தம் உண்டு. சராசரியாக இசை என்ற வார்த்தையை ஒலி என்றும் பாடல்கள் என்றும் பயன்படுத்துகிறோம். இசை என்பதன் மூல அர்த்தம் இணங்குவது, ஆனந்தம் கொள்வது என்பதாகும்.

திருவள்ளுவரும் இசைபட வாழ்தல் என்கிறாரே அப்படி என்றால் பாடிகொண்டே வாழ்வதை குறிப்பதில்லை. பிறருக்கு தர்மம் செய்வதன் மூலம் மனநிறைவுடன் ஆனந்தமாக வாழ்வதை இசைபட என்கிறார். பிறர் போற்ற வாழ்வது என இத்திருக்குறளுக்கு அர்த்தம் போதிக்கபடுகிறது. சான்றோர்கள் பிறருக்கு தானம் செய்து பெருமை தேடிக்கொள் என கூறி இருக்கமாட்டார்கள்.

இசை என்பது ஒருவித யோக முறை. யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். இறைநிலையுடன் ஒன்றிணைந்து இரண்டற கலப்பதற்கு இசை என்ற யோக முறை மிக முக்கியமானது.

இசை என்றவுடன் அதை பற்றி சில விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இசை என்பது மொழிகளை கடந்தது, மதங்களையும்... ஏன்.. மனித நிலையையும் கடந்தது.

இங்கே இசை என நான் குறிப்பிடுவது வார்த்தைகள் கொண்டு உருவாக்கபட்ட பாடல்களின் வடிவம் அல்ல. சங்கீதத்தில் ஆலாபனை என கூறுவார்களே அது போல வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறக்க நிலையே ஆலாபனை.

இசை என்பது இறைவனின் வடிவம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். இசை என்பதை நாதம் என பொருள் பட கூறுகிறார்கள். ப்ரணவம் இறைவனின் நாத வடிவம். முதலில் நாதம் பிறகே அனைத்து படைப்புகளும் விரிந்தது.

நாதம் என்ற ப்ரணவத்தின் கூறுகளான ஆ - உ- ம என்ற ஒலிகளின் மூலமே அனைத்தும் வெளிப்பட்டது. நம் மொழிகள் கலாச்சாரம், சிந்தனை அனைத்தின் உள்கட்டமைப்பும் இந்த ஒலியாலேயே விவரிக்க முடியும்.

நான் கூறிய ப்ரணவ மந்திரம் என்ற கருத்து ‘இந்து மதத்தின்’ கூறுகள் அல்ல. வேதம் என்ற ஆன்மீக நிலை இந்து மதம் என்ற வடிவம் கொண்டவுடன் தன் சுயத்தை இழந்து விடும் அபாயத்தை உணர்ந்து தன்னை மதத்திலிருந்து விடுவித்துக்கொண்டது.

எங்கே ஆன்மீகம் மத வடிவம் எடுக்கிறதோ அங்கே இசை என்ற நாதம் தன்னை விடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறது என்பது என் புரிதல். பாரத தேசத்தில் தோன்றிய ஞானிகள் இசையுடன் தங்களை மிகவும் ஒன்றிணைத்து கொண்டே இருந்தனர். மீரா, புரந்தர தாசர், ஞான சம்பந்தர் மற்றும் ஏனைய ஞானிகளை வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம்.

இசை என்ற பாடல் வடிவம் சன்யாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விலக்கபட்டு இருக்கிறது. சன்யாசிகள் பாடல், நடனம் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றில் மூழ்கக் கூடாது என கூறுவதன் காரணம் அவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதுதான். சன்யாச நிலை என்ற சூன்ய நிலையில் தோன்றிய மதங்கள் இசையை விலக்கின.

உலகின் சில மதங்கள் கூட தவறுதலான புரிதலால் இசையை விலக்கிவிட்டது.

சமணம்,இஸ்லாம் மற்றும் சில கிருஸ்துவ பிரிவுகள் இதில் அடக்கம்.

நாதத்தை (ஓசையை) பெட்டியில் அடைக்கமுடியாது என்பதை போல மதத்தால் இசையை அடக்க முடியாது. அதனால் தான் மதங்கள் இவ்வாறு விலக்கினாலும் ஞானிகள் இறைவனுடன் கலக்கும் பொழுது இசையை ஒரு பாதையாக தேர்ந்தெடுத்தனர். இதனால் இஸ்லாமிலிருந்து சூஃபியும், சமணத்திலிருந்து ஜென் என்ற ஞான மார்க்கங்கள் கிளைத்தன.

நாதமே கடவுளின் வடிவம் என்றால் மதத்தில் இருந்து நாதம் வெளியேறிவிட்டது என்றால் அப்பொழுது மதத்திற்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

இசைவடிவில் இறைவனை காண முற்பட்டால் உலக சமுதாயம் ஒரே இறைவனை காண முடியும்.

மதங்களை கடந்த ஆன்மீகம் அவசியமானது. மதங்களையும் உருவங்களையும் கடந்த இறைநிலையே முழுமுதற் கடவுளான பிரம்ம நிலை என்கிறார் திருமூலர்.

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

-----------------------------------------திருமந்திரம் - 105

ஒரு இசை வடிவத்தை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால் அந்த இசை உங்களை ஈர்த்தது என்பதல்ல. உங்களுக்குள் இருக்கும் இறைநிலை ஒலிவடிவில் இருக்கிறது. அந்த ஒலி தன்னை போன்ற இசைவடிவை வெளியில் இருந்து ஈர்த்தது.

உங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் நிலைக்கேட்ப இசை உங்களை ஈர்க்கும். நீங்கள் மிகவும் கடினமான தன்மையில் இருந்தால் கடினமான இசையும், மிகவும் மென்மையாக இருந்தால் மெல்லிசையும் உங்களை கவரும். எளிமையாக சொன்னால் நீங்களே இசைதான். வெளியே கேட்கும் இசை உங்கள் உள் இசையை தூண்டுவதற்காத்தான்.

மதம்- இசை - இறைவன் என நிறைய பேசிவிட்டோம். உங்களுக்கு ஒரு சின்ன போட்டி...

கீழே இருக்கும் 2 நிமிட ஒலிக் கோப்பில் மதம் சார்ந்த புனித ஒலி இருக்கிறது. இந்த ஒலியை முழுமையாக கேட்டு அது எந்த மதம் சார்ந்தது என கூறுங்கள்.
Sound of religion....





விடையுடன் அடுத்த பதிவில் சந்தி
க்கிறேன்.

Thursday, November 26, 2009

உடலற்றவன்



கண்ணிலாத இருவர்

பார்த்துக் கொண்டிருந்த
டீவியை அணைத்தேன்.

பேச முடியாத இருவர்
கை ஜாடையில் பேசிய
ரகசியத்தை ரசித்தேன்.

காது கேட்காதவர்கள் பலர்
பாடிய பாடல்களை விமர்சித்தேன்.

கையில்லாதவர்கள் செதுக்க
இருந்த சிலையின் வடிவை
சீரழித்தேன்.

கால் இல்லாதவர்கள் மைதானத்தில்
உதைக்க இருந்த பந்தை வலைக்குள்
உதைத்தேன்.

ஊனமுற்றவர்களிடம் போராடி வெறுமையில்
முழுமையான உடல் இருப்பவனை
தேடும்பொழுது தான் தெரிந்தது...

எனக்கு உடலே இல்லை என...

Tuesday, November 24, 2009

பழைய பஞ்சாங்கம் 24-11-2009

திருவண்ணாமலையும் வலையுலகமும்

கடந்த 10ஆம் தேதி மாணவர்களுடன் ஸ்ரீசக்ர புரிக்கு பயணம் மேற்கொண்டேன். மூன்று நாள் திகட்ட திகட்ட ஆன்மீக உணர்வு உண்டு மகிழ்ந்தோம். சுப்பாண்டி இப்பயணத்தில் இணைந்து சிறப்பித்தார். அத்துடன் உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு வலயுலக பிரபலம் இதில் கலந்து எங்களை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தினார். அவரை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.

கிரிவலம் வரும் பொழுது அங்கே மொட்டையன் சாமி என்ற அவதூதரை மாணவர்களுக்கு காட்டினேன். அழுக்கான தேகம், கையில் மூக்குப்பொடி, வாய்க்கு வந்ததை பேசி பிறரை திட்டுவது என வித்தியாசமானவர் மொட்டையன் சாமி. அவர் ஒரு டீக்கடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எல்லா மாணவர்களும் வியப்புடன் அவரை பார்த்துக் கொண்டிருக்க சுப்பாண்டியும் நம் பிரபல பதிவரும் அவரை பார்த்து அதிசயிக்காமல் சாதாரணமாக அமர்ந்திருந்தனர்.
எனக்கோ ஆச்சரியம். அவர்களிடம் தனிதனியே கேட்டேன்.

பிரபல பதிவர் சொன்னார், “வாய்க்கு வந்ததை பேசும் எத்தனையோ பதிவர்களே இது போல இருக்காங்க. நீங்க என்னடான இதை அதிசயங்கிறீங்க” என்றார்.


அதே கேள்வியை சுப்பாண்டியிடம் கேட்டேன், “உங்க ஸ்பீச்சை கேட்டு கேட்டு பழகி யார் பேசரதை கேட்டாலும் நீங்க பேசறமாதிரியே இருக்கு ஸ்வாமி” என்றான் உள் குத்துடன்.

நான் இருவரின் கருத்தையும் இணைத்து பார்க்க விரும்பவில்லை...!
-----------------------------
நேமா(அ)ல(ர்)ஜி

ஒரு நேமாலஜி வெறியரிடம் சிக்கிவிட்டேன். என்னிடம் தன் பிரதாபங்களை காட்ட அவரின் கருத்துக்களை என் மேல் வாரி தெளித்துக்கொண்டிருந்தார். எனக்கு நேமாலஜி மேல் நம்பிக்கை உண்டா என்றோ அதை பற்றிய கருத்தோ கேட்காமல் சராமாரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.


தீபா என பெயர் வைக்க கூடாதாம். அதில் தீ என்ற வார்த்தை இருக்காம். குரு பிரசாத் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் SAD என நடுவில் வருமாம். அதனால் அவர்களின் வாழ்க்கை சோகமாகிவிடுமாம். என் பெயரில் பின்னால் கார் என்ற ஒலி வருகிறதாம் அதனால் என்னால் சுயமாக இயங்க முடியாதாம். யாரோ ஒருவர் தான் என்னை இயக்குவாரம். முடியல...


அவரிடம் முகத்தை சீரியசாக்கிக் கொண்டு ஒரு கதை சொன்னேன்...


நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்தினரிடம் ஒரு வெளிநாட்டுக்காரர்கள் சிக்கிவிட்டார்கள். அதில் ஒருவர் பெயர் சேவு, இன்னொருவர் பெயர் காவு. இருவரையும் கட்டி தலையில் தூக்கிவைச்சு கொண்டு போனாங்க.
நம்மை சாப்பிட போறாங்கனு தெரிஞ்சு இருவரும் கதறினார்கள்.

சேவு ஆங்கிலத்தில், “மனிதர்களை எல்லாம் சாப்பிடலாம இது உங்களுக்கே நல்ல இருக்கா?” என கேட்டான்.
அந்த கூட்டதிலிருந்து ஒருவன் வெளிப்பட்டு ஆங்கிலத்தில் உங்க ரெண்டு பேரு பெயரையும் சொல்லுங்க என்றான். சேவுக்கு ஒரே ஆச்சரியம் கூட்டத்தில் ஒருவன் ஆங்கிலம் பேசுறான். இவன் கிட்ட எதையாவது சொல்லி தப்பிச்சிடலாம்னு நினைச்சான்.

அதற்குள் நம்ம நேமாலஜிட் குறுக்கிட்டு பார்த்தீங்களா நேமாலஜி வர்க் ஆயிருக்கு, அவன் பெயர் சேவு (save) என்றார்.


கதையை தொடர்ந்தேன்.
சேவு அந்த நரமாமிச ஆசாமியிடம் எதற்கு பெயரை கேட்கறீங்க என்றான். அந்த ஆசாமி சொன்னான், ”எங்க மெனு கார்டில் எழுதி வைக்கனும்”. சேவு என்ற நேமாலஜி வேலை செய்ததோ இல்லையோ.. கூட இருந்தவன் பெயர் வேலை செய்தது :)
------------------------------
வலையுலக ஜனநாயகம்

வர வர என் வலைப்பக்கத்தில் ஜனநாயகம் இல்லை என ஒரு பதிவர் தனிமடல் அனுப்பி இருந்தார். மாடுரேஷன் போடுகிறேனாம். சிலரை கண்டிக்கிறேனாம். பிறரின் கருத்தை ஏற்க மாட்டேன் என்கிறேனாம். ஒரே ஜனநாயக விதிமீறலாக இருக்கிறது என்றார்.


அவரின் ஆவலை மனதில் கொண்டு ஒரு ஜனநாயக விஷயத்தையாவது ஆவன செய்யலாம் என இருக்கிறேன். இந்த வலைபக்கத்தில் ஒரு விஷயத்தை எழுதவேண்டும் என நினைத்து உட்கார்ந்தால் ஏகப்பட்ட விஷயங்கள் என் முன்னால் நிற்கிறது. எதை எழுதவேண்டும் என தெரியவில்லை. (விஷயம் இல்லையா என கேட்பவர்கள் தனியாக சாட்டில் வரவும் :) ).


அனைத்து கருத்துக்களும் எனக்கு முக்கியமாக படுவதால், வலைப்பூவை படிப்பவர்களான உங்களிடத்திலேயே எந்த தலைப்பில் பதிவெழுதுவது என தேர்ந்தெடுக்க சொல்லலாம் என இருக்கேன்.

(ஏகப்பட்ட ஆணி இருக்கு அதில் எதை பிடுங்க? நீ பிடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான். போன்ற வசனங்கள் மாடுரேஷன் போடப்படும். ஆணியே பிடுங்க வேண்டாம் என சொல்லும் வசனங்கள் பார்த்தவுடன் டெலிட் செய்யப்படும் :) )

பக்கவாட்டில் இருக்கும் தேர்தலில்(poll) கலந்து கொண்டு பிடித்த தலைப்பை தேர்ந்தெடுங்கள். ஒன்றுக்கு மேம்பட்டது பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் வரிசைப்படுத்துங்கள்.
---------------------------------

கவிதை

சில நாளுக்கு முன் என் கூகுள் ஸ்டேட்டஸில் எழுதிய கவிதை வரிகள்.


பசு என்றேன் இந்து ப்ராமணன் என்றார்கள்
ஆடு என்றேன் ஆண்டவரே என்றார்கள்.
ஒட்டகம் என்றேன் அவனா நீ என்றனர்.

தயவு செய்து...மிருகத்தை வைத்தல்ல

மனிதனை வைத்தே மனிதத்தை எடைபோடுங்கள்.

Wednesday, November 18, 2009

பாவனாவை பற்றிய கிசு கிசு

தென்னிந்திய சினிமா நடிகை பாவனா உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரை பற்றி ஒரு கிசு கிசு கூறப்போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் எனக்கு அவ்வளவு புத்திசாலிதனம் இல்லை. நீங்கள் என்னிடத்தில் மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். பாவனா ரசிகர்கள் என்னை பொருத்தருள்க.

நாம் இங்கே பேசப்போவது “ப்ரதி பக்‌ஷ பாவனா” என்ற விஷயத்தை பற்றியது. பதஞ்சலி என்ற மாமுனிவர் எழுதிய பதஞ்சலி யோகசூத்திரத்தின் அற்புத வரிகளில் இதுவும் ஒன்று. இவ்வரிகளில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து பொருள் பார்ப்போம்.

ப்ரதி என்ற வார்தை தமிழில் பிரதி என பயன்படுத்தலாம்.
அதாவது ஒன்றை போன்ற மற்றொன்று என்று அர்த்தம்.

பக்‌ஷ என்றா நீங்கள் நினைப்பது போல நவீன ராவணனின் பெயர் இல்லை இது. பக்ஷம் என்றால் பகுதி என்று அர்த்தம். உங்கள் உடல் என்பது ஒரே தன்மை என்றாலும் அதில் வலது இடது என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? அது போல எப்பொருளும் இரு பிரிவுகள் அல்லது பல பிரிவுகள் கொண்டதாக இருக்கும். இப்பிரிவுகளுக்கு பக்‌ஷம் என்று பெயர். உங்கள் இடது தக்‌ஷிண பக்‌ஷம் மற்றும் வலதை வாமன பக்‌ஷம் என்கிறது வட மொழி.

பாவனா என்றால் ஒன்றை இருப்பதாக கருதுதல். பாவனை செய்தல் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக பிறருக்கு உணர்த்துவது என்பது பொருள். உதாரணமாக நாட்டியத்தில் நட்டியம் செய்பவர் கையில் பானை இருப்பது போல அசைந்து வருவார். அதை பார்க்கும் பொழுது நமக்கு பானையுடன் அவர் வருவது போலவே இருக்கும். நாட்டிய பாவனை என இதற்கு பெயர்.

மூன்று வார்த்தைகளையும் தனிதனியாக பார்த்தோம் ஒன்றாக இணைத்தால் இதன் பொருள் என்ன தெரியுமா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் கட்டாயம் ஒரு நன்மை ஒளிந்திருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு விஷயம் உண்டு.

தீமையான விஷயத்தில் மட்டுமல்ல. நன்மையான விஷயத்திலும் இது இருக்கும். நன்மையான விஷயத்தில் கூடுதலாகவும், பிற விஷயங்களில் குறைவாகவும் இருக்கும்.

எல்லா விஷயத்தையும் பாஸிடிவாக பார் என்பதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதஞ்சலி பாஸிடிவாக இல்லை என்றாலும் பாஸிடிவாகவே பார் என கூறவில்லை. ஒவ்வொரு நிகழ்விலும் 'கண்டிப்பாக' நன்மை உண்டு என உறுதியாக கூறுகிறார்.அதனால்தான் பதஞ்சலி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் நன்மையை ஒரு பிரிவாக உருவகித்துக்கொள் என்கிறார்.

சிலரின் வாழ்க்கையில் இயல்பாகவும், சிலர் முயன்றாலும் இவ்வழியை எளிமையாக பின்பற்ற முடியும்.

அறுபது வயது மதிக்கதக்கவர் என்னிடம் கூறினார். நல்ல வேளை நான் அரசு வேலையில் சேரவில்லை. இல்லை என்றால் இந்நேரம் ரிடையர் ஆகி இருப்பேன் என்றார். இது ஒருவகை ப்ரதிபக்‌ஷ பாவனை தானே?

சுப்பாண்டி ப்ரதி பகஷ பாவனையில் கை தேர்ந்தவன். இந்த தத்துவம் அவன் வாழ்வுடன் இணைந்துவிட்டது என்றே கூறலாம்.

காக்கை எச்சமிட்டால்.... நல்ல வேளை பசுக்கள் மேலே பறப்பதில்லை என்ற அளவுக்கு சுப்பாண்டியின் பரதிபக்‌ஷம் பிரசித்தி.

ஒரு இளைஞன் அடிக்கடி தற்கொலைக்கு முயல்கிறான் அவனை தெளிவுபடுத்துங்கள் என அவனின் தந்தை என்னிடத்தில் அனுப்பி வைத்தார்.

நானும் என்னால் முடிந்த அளவு அறிவுரைகள், குட்டிக்கதைகள் எல்லாம் பல மணி நேரம் சொல்லிப் பார்த்தேன். இளைஞனின் நிலை அப்படியே இருந்தது.

“குருஜீ நான் வேணும்னா முயற்சி செய்யவா?” என காதில் கிசுகிசுத்தான் சுப்பாண்டி.

நானும் கொஞ்சம் ஓய்வு எடுக்க சரி என கூறினேன். அந்த இளைஞனுடன் சுப்பாண்டி தனியே பேசினான். சில நிமிடங்களில் அந்த இளைஞன் என்னிடத்தில் வந்து இனிமேல் தற்கொலை செய்ய மாட்டேன் என்றான். எனக்கோ ஆச்சரியம். எப்படி இது. நான் தலைகீழாக நின்று முடியாத விஷயம் சுப்பண்டியால் சில நிமிடங்களில் முடிந்தது என குழப்பத்தில் அந்த இளைஞனிடமே கேட்டேன்.

அந்த இளைஞன் சொன்னான், “ முட்டாள் தனமா பேசற சுப்பாண்டியும், அவனை கட்டி மேய்க்கும் நீங்களும் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகணும்?”

பார்த்தீங்களா சுப்பாண்டியை நான் என்னுடன் வைத்திருப்பதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது.

என் வாழ்க்கையில் பல நிலைகளில் ப்ரதிபக்‌ஷ பாவனையை பயன்படுத்துகிறேன். என்னை பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாததால் அவற்றை விவரிக்க முடியாது.

இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களால் விளக்குகிறேன். வேதகால வாழ்க்கை என்ற தொடரை துவங்கியதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்னை பற்றி சில விமர்சனங்கள் கூறினார்கள்.

இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் இருக்க முடியும்?

வேதகால வாழ்க்கை தொடரை பதிவிட்டு திரட்டியில் இணைத்தப்பின் சிலர் மட்டுமே படிப்பார்கள் என நினைத்தேன். அது அவ்வளவு சுவாரசியமான பதிவல்லவே? எல்லோரும் படிப்பார்களா என நினைத்தேன். ஆனால் பதிவின் கருத்துக்களை திரட்டிகளை விட இவர்களின் திட்டுக்களே வெளிக்கொண்டுவந்தது.

பலர் என்னை காரசாரமாக விமர்சனம் செய்ய அதைபடித்த புதியவர்கள் அப்படி என்னதான் இவன் எழுதி இருக்கிறான் என படிக்க வந்தார்கள். புதிய நபர்களை இங்கே கூட்டி வந்த பெருமையும், பலருக்கு வேதகால வாழ்க்கை முறையை கொண்டு சேர்த்ததும் என்னை விமர்சித்தவர்களே. அவர்களுக்கு நன்றிகள்.

ஒரு நண்பர் என்னை விமர்சித்த பதிவில் நான் பத்தாம் வகுப்பு பெயில் என குறிப்பிட்டு என் வாழ்க்கை வரலாற்ற அவரே எழுதி இருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவை தாண்டாத என்னை பத்தாம் வகுப்பு வரை படித்ததாக அவர் கூறியதும் ஒருவகை பிரதிபக்‌ஷம் தானே?

ஸ்ரீசக்ர புரியில் அந்தணர்களின் மிகைமிஞ்சிய செயலை கண்டித்துள்ள வரிகளை மறந்து பசு,வேதம் என்றவுடன் நானும் அந்தணன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஸ்ரீசக்ர புரியில் இணைத்த புகைப்படத்தை மீண்டும் இங்கே இணைக்கிறேன்.

நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தில் நம் மக்கள் எதிர்பார்க்கும் அந்தணனுக்கு உண்டான லக்‌ஷணம் ஏதேனும் என்னிடத்தில் உண்டா? முக்கியமாக தோள்பட்டையில் பூணுல் இல்லை.
சரி இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் என்றுதானே கேட்கிறீர்கள்?

அவர்கள் அந்தணன் என நினைத்ததால் இந்த புகைப்படத்தை காட்டி விளக்க முடிகிறது. இதுவே நான் சூஃபி ஞானிகளை பற்றியோ, இஸ்லாமை பற்றியோ எழுதி இருந்தால்? எப்படிபட்ட புகைப்படத்தை காட்டி விளக்க வேண்டி இருந்திருக்கும்?

( சிந்தனை உதவிக்காக மாண்டோ அவர்களுக்கு நன்றி)

அதனால்தான் சொல்லுகிறேன்.... ப்ரதி பக்‌ஷ பாவனா... எல்லாவற்றிலும் காணலாம்.