சத்சங்கம் என்றால் உண்மை இணையும் இடம். சத்- உண்மை, சங்கம் கூடும் இடம். இது ஒரு முரண்பாடான வார்த்தை தான். உண்மை என்பது பன்மையாக இருக்காது.
உண்மைகள் என்னும் சொல் வேடிக்கையானது. பொய் வேண்டுமானால் பன்மையாக இருக்க முடியும். ஒரு உண்மையை மறைக்க பல பொய் என்று தானோ கூறுகிறோம்.
உண்மை என்பது ஒன்றுதான் என்றால் எப்படி சந்திக்க முடியும். இரண்டு விஷயம் இருந்தால் தானே சங்கம் - சந்திப்பு என்பது சாத்தியம் ஆகும் என கேள்வி எழலாம்.
நம்மில் இறைவன் ஆன்ம வடிவில் உறைகிறான் என்பது உண்மை. இந்த உண்மை உங்களிடமும் என்னிடமும் உணர்ந்துகொள்ள இரு ஆன்மாவும் இணையும் இடமே சத்-சங்கம்.
ஆதிசங்கரர் தன் பஜகோவிந்தத்தின் பின்வருமாறு கூறுகிறார்.
சத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி.
ஆன்மீக விஷயங்களுக்காக பல ஆன்மீகவாதிகளுடன் இணைந்தால், இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் இருந்தால் பந்தம் மற்றும் பற்று விலகும். பற்றுகள் விலகினால் நீ பரிசுத்தன் ஆவாய். பரிசுத்தனாகிய உனக்கே ஜீவன் முக்தி ஏற்படும்.
ஜீவன் முக்தி அடைய முதல் படியாக இருப்பது சத்சங்கம்.
கடந்த பத்து வருடங்களாக பல ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் சத்சங்கங்களை கடந்து வந்துள்ளேன். ஆன்மீக சாதகர்கள், ஆன்மீக தேடல் கொண்டவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது அலாதியானது.
ஆணவம் கொண்ட அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு இறைவன் அருளிய பதிலால் ஆணவத்தை சிதறடித்து அவர்களை முழுமையை நோக்கி பயணிக்கச் செய்வது அலாதியான அனுபவம்.
எனது சத்சங்க கேள்வி பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறோம். இப்புத்தகம் தயாராகி வருகிறது. உங்களுக்கும் கேள்விகள் எழுமானால் கேளுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய பதில்களை அளிக்கிறேன்.
இனிவரும் நாட்களில் ‘சத்சங்கம்’ என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதி வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.
உங்களுக்காக சத்சங்கத்தில் கேட்கப்பட்ட ஒரு சுவாரசியமான கேள்வியையும் அதன் பதிலையும் கீழே விவரித்துள்ளேன்.
-------------------------
கேள்வி : நீங்கள் துறவியா?
பதில் : என்னை பற்றி நான் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், நான் பொறாமை, குரூரம், பேராசை போன்ற தமோ குணத்தை துறந்தவன்.
துறவு என்பதை நீங்கள் தவறாக நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். குடும்பத்தையும் பொறுப்புகளையும் விட்டு ஓடுவது துறவு அல்ல. உலகே என் குடும்பம் என்றும் உலக நிகழ்வுகள் என் பொறுப்பு என்றும் இருப்பவன் துறவி.
கேள்வி : துறவி என்றால் பிச்சை எடுத்து தானே வாழ வேண்டும்.? நீங்கள் அப்படியா?
பதில் : ஆம். தனக்காக எதையும் உருவாக்காமல் பிறருக்காக உருவாக்கி அதில் தான் ஒரு பிச்சைக்காரனாக வாழ வேண்டும். இதுவே துறவு. நான் தொழிலதிபர் என்றோ அல்லது வியாபாரி என்றோ என்னை அடையாளப்படுத்த முடியுமா? நான் என்னை பிச்சைக்காரன் என கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கேள்வி : நான் உணவுக்காக பிச்சை எடுப்பதை கூறுகிறேன் நான். நீங்கள் உணவுக்காக கையேந்தி பிச்சை எடுத்தது உண்டா?
பதில் : உண்டு. என் செயல்பாடுகளும் நான் தினமும் உண்ணும் உணவும் பிறர் அளிக்கும் பிச்சை தான். நான் எதையும் உருவாக்குவதில்லை.
கேள்வி : பிச்சையாக எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வீர்களா?
பதில் : பிச்சை எடுக்க மட்டுமே எனக்கு உரிமை உண்டு. பிச்சையாக இதை கொடு என கேட்டால் அது பிச்சையாக இருக்காது அல்லவா?
கேள்வி : ஒரு பெண் தன்னையே பிச்சையாக அளிக்கிறேன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில் : மாட்டேன்.
கேள்வி : ஏன்?
பதில் : எனக்கு நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் இல்லை...!






