Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, December 23, 2009

காசி சுவாசி - பகுதி 1

காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்.

நாம் பயணம் செய்யப்போவது இரண்டாம் நகரமான ஆன்மீக நகரம். கங்கை நதியின் பயணத்திற்கு ஏற்ப கரையில் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 350க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருக்கின்றன. இவற்றை காஹட் (Ghat) என அழைக்கிறார்கள். ஒவ்வொரு காஹட்க்கும் ஒரு பின்புலமும் காரணமும் இருக்கிறது. படித்துறைகளை மூன்று வகையாக பிரித்திவிடலாம். அரசர்கள் கட்டிய படித்துறை, ஆன்மீக மடங்கள் கட்டிய படித்துறை மற்றும் பொதுமக்களுக்கான படித்துறை என வகைப்படுத்தலாம். இதில் ஆன்மீக மடங்களின் படித்துறை பொதுமக்களின் படித்துறையாகவே பயன்படுத்தபடுகிறது.

விஷேஷ காலத்தில் மட்டும் ஆன்மீக மடாதிபதிகள் அவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அரசர்களின் படித்துறை என்பது அரசர் மட்டுமே பயன்படுத்தும் அமைப்பாக இருந்துவந்தது. தற்காலத்தில் அரசர்கள் மற்றும் முடியாட்சி இல்லாத காரணமாக இவை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
காசியில் அதிகாலை தியானம் முடிந்ததும் நான் கண்ட காட்சி.

குடும்பமோ வேறு நபர்களோ அதிகமாக படித்துறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அரசர்களின் படித்துறை என்றவுடன் ஒன்று தான் என நினைத்துவிடக்கூடாது. பாரத தேசத்தின் பல அரசர்கள் இங்கே தங்களுக்கு என பிரத்யோகமான படித்துறையை கலைநயத்துடன் கட்டியிருக்கிறார்கள். அதில் அவர்கள் மட்டும் ஏகாந்தமாக கங்கையை ரசிக்கவும், ஆராதிக்கவும் ஏகப்பட்ட விஷயங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.

பல அரசர்களுக்கு படித்துறை கட்டும் அளவுக்கு காசி நகரம் பொதுவான ஊராக இருந்தது. இவற்றை புரிந்துகொள்ள வரலாற்று பாடத்தின் சில பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். காசி என்பது நகரம் என்பதை காட்டிலும் அது ஒரு நாடு என கூறலாம். பாரத தேசம் பல சிற்றரசர்களால் சிதறுண்டு ஆளும் காலத்தில் காசி நகரம் ஒரு அரசின் கீழ் இருந்தது.

காசி மற்றும் அதன் சுற்றுபுற நகரங்கள் இணைந்து காசி சமஸ்தானமாக இருந்தது. காசி சமாஸ்தானம் பிற அரசுகளை விட ஒரு தனித்துவமாக இருந்தது. காசி சமஸ்தானத்தில் ராணுவம் மற்றும் போர்படை என்பது இல்லை. காசி ராஜா காசியை நிர்வாகிக்கும் தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தார். காசி மேல் யாரும் போர் தொடுக்கவோ, காசி அரசர் பிறர் மேல் போர் தொடுக்கவோ மாட்டார். தற்காலத்தில் கூட உலகில் ஒரு நாடு அப்படி இருக்கிறது. அது உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

காசியில் பல கல்விச்சாலைகள் இருந்ததால் பாரத தேசத்தில் பல நாட்டு அரசர்களும், அறிஞர்களும் அங்கே வந்து பாடம் பயின்றனர். அதனால் காசி மாநகரம் கல்விக்கு பிரதானமான விஷயமாக இருந்தது. ஐநூறு வருடத்திற்கு முன் தமிழகத்தில் ஒருவர் காசி சென்று படித்தவன் என கூறினால் அவருக்கு கிடைக்கும் மதிப்பு அளவிட முடியாதது. காசி ராஜா அங்கே இருக்கும் பல்கலைகழகத்தின் சிறந்த கல்வியாளராக தேர்ச்சி பெற்று சமஸ்தானத்தில் அறிஞர்களுடன் அலங்கரிப்பவராக இருப்பார்.

பாரத தேசத்தில் உள்ள அறிஞர்கள் தங்களின் ஆறிவை நிரூபணம் செய்யவும், ஆராய்ச்சிகளை வெளியிடுவதற்கும் காசிக்கு செல்லுவார்கள். அங்கே அறிஞர்கள் குழு ஒன்று (Senate members) ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கும். சான்றிதழ்கள் செப்பு தகட்டில் அமைந்திருக்கும். சில அறிஞர்கள் தனது செப்பு பட்டையத்தை சுமந்து வர பல அடிமைகளையும், குதிரைகளையும் வைத்திருந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகிறது.

காசி ராஜாவின் அரண்மனை பிரம்மாண்டமானது. காசி அரசர்களுக்கு பல கலைகள் தெரியும் என்றும் அதில் பல அறிவிப்பூர்வமான காரியங்கள் செய்தார்கள் என நாடோடிக்கதைகள் உண்டு.

காசியில் உள்ள படித்துறைகளில் பல நாட்டு ராஜக்களுக்கு சிறிய அரண்மணைகளை கட்டுவதற்கு அனுமதித்து, இரு விரோத நாட்டு ராஜாக்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் சச்சரவு இல்லாமல் அமைதியை நிலைநாட்டுவது காசி ராஜாவின் முக்கிய பணியாக இருந்தது.

படித்துறையில் ராஜாக்களுக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாதாரணமானது அல்ல. ஒவ்வொன்றும் குட்டி அரண்மனை. சில அரண்மனைகளில் இருந்து பார்த்தால் கங்கை நதியும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக் தெரிவார்கள். ஆனால் கரையில் இருந்து பார்த்தால் அரண்மனையில் இருப்பவர்களை பார்க்க முடியாது. இது போன்ற கலை நயம் பல அதில் உள்ளன. ராஜாஸ்தான் அரசர் ராஜா ரஞ்சித் சிங் , தனது நாட்டிலிருந்து ஊதா நிற சலவைக் கற்களை கொண்டு வந்து இங்கே அரண்மனை கட்டி இருக்கிறார். சத்ரபதி சிவாஜி இங்கே ஒரு அரண்மனை படித்துறை அமைத்திருக்கிறார். நேப்பாள் மஹாராஜாவும், சோழ அரசர்களும் இங்கே தங்கள் சந்ததியினர் வந்தால் தங்குவதற்கு அரண்மனை கட்டியிருக்கிறார்கள்.

காசி நகரம் இவ்வளவு தொன்மையான ஊராகவும், பல நாட்டு அரசர்கள் விரும்பும் ஊராகவும் இருந்தது.

நிற்க... எதற்கு இந்த விக்கிப்பிடியா விளக்கம் என்கிறீர்களா?


பாரத தேசத்தில் இருக்கும் அரசர்கள் மக்கள் விரும்பும் படி காசியில் என்ன இருக்கிருக்கிறது ? அங்கே ஐந்து அதிசயங்கள் நடக்கிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். அவற்றை பட்டியலிடுகிறேன்

1) பல்லி சப்தம் எழுப்பாது. : - காசியில் பல்லிகள் உண்டு. ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.

2) பிணம் நாற்றம் எடுக்காது : பிணம் எரியும் பொழுது பக்கத்தில் நின்று இருக்கிறீர்களா? பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள். ஆனால் இங்கே பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது.

3) கருடன் வட்டமிடாது - காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும், உணவுகள் சிதறிகிடந்தாலும் இறைக்காக கருடன் வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும் ஆனால் வட்டமிடாது.

4) பூ மணக்காது : இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். :) என்ன செய்ய காசியில் அப்படித்தான் இருக்கிறது. தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது, முக்கியமாக மல்லி முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும். தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும்.

பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது எனலாம். அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால்
காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது. ஆனாலும் அவை வாசங்கள் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் காசி பூக்கள் மணப்பதில்லை.

5) பால் வற்றாது : இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் கட்டப்படுவதில்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை. பசுக்கள் கங்கையின் உருவில் உலாவருவதாக மக்கள் கருதுகிறார்கள். அதனால் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு. கங்கை இந்த நகரத்தில் என்றும் __________________ அதனால் பசுக்களின் பாலும் வற்றாது என்கிறார்கள்.

அது என்ன வாக்கியம் விடுபட்ட இருக்கிறது என்கிறீர்களா? கங்கை ________ என கூறினால் பல கோடிவருடம் தினமும் ஆயிரம் பசுக்களை கொன்ற பாவம் கிடைக்குமாம். நான் என்றைக்காவது கங்கை ________ உண்டா என கேட்க தனது துடுப்பை எடுத்து என்னை தாக்க வந்தான் ஒரு படகு ஓட்டி. எனக்கு ஏற்கனவே பாவம் கிடைத்தது. அதை கங்கையில் குளித்து சரி செய்துவிட்டேன் :).

படகோட்டி கூறிய அதிசங்களைதான் நான் இங்கே கூறி இருக்கிறேன். இதில் ஐந்தையும் ஆராய்ந்து உண்மை என உணர்ந்து இங்கே பட்டியலிடுகிறேன். பலவருடங்கலாக இன்றும் இயற்கையாகவே ஐந்து விஷயங்கள் நடக்கிறது. காசியில் மட்டும் என்ன இப்படி நடக்கிறது என உங்களால் காரணத்தை யூகிக்க முடியுமா? கொஞ்சம் யோசியுங்கள். அதற்குள் நான் கங்கை கரையின் படித்துறையில் உலா சென்று வருகிறேன்.

(சுவாசிப்பேன்..)

புத்தக வெளியீடு

அன்புள்ள வேதத்தின் கண்மணிகளுக்கு,

திருமூலரின் திருமந்திரத்தின் முக்கிய மந்திரங்களை விளக்கத்துடன் தொகுத்துள்ளேன். “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வரும் ஆங்கில வருடம் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு மக்களுக்கு அர்ப்பணிக்கபடுகிறது.

பதிவர்கள், இணைய வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் வந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

Monday, December 21, 2009

காசி சுவாசி - ஆன்மீக தொடர்


லகில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. நாகரீகத்தின் அடையாளமாக விளங்கும் இடத்தை நகரம் என அழைக்கிறோம். வரலாற்றை திரும்பி பார்த்தால் எங்கே நீர் நிலை இருக்கிறதோ அங்கே நாகரீகம் தோன்றி இருக்கிறது என கூற முடியும். நீர் நிலைகள் என்பதிலும் முக்கியமாக ஆறுகள் நாகரீகத்தின் தொட்டிலாக இருந்திருக்கிறது.

உலகின் எந்த கண்டங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆறுகளும் ஆறுகளை சார்ந்த இடமும் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. உலகின் பிற நில அமைப்புகளை காட்டிலும் இந்தியா ஒரு விஷேஷ தன்மையை கொண்டதாக இருக்கிறது. இதில் நாகரீகத்தை வளர்க்கும் நதிகள் பல இருக்கிறது.

தென் முனையில் சோழர்களை வளர்த்த காவிரி போன்று வடக்கில் கங்கை தனக்கென ஒரு பெரும் இடத்தை ஆக்கரமித்துள்ளது. கங்கை ஆற்றின் கரையில் எத்தனையோ நாகரீகங்கள் தோன்றினாலும் ஒரு நகரம் மட்டும் தனித்துவத்துடன் உலக புகழுடனும் விளங்குகிறது என்றால் அது காசி மாநகரம் மட்டும் என கூறலாம்.

வடமாநிலங்களில் சென்று காசி என்றால் பலருக்கு தெரியாது. வாரணாசி என்றாலே அந்த நகரை அடையாளம் காண்பார்கள். வாரண் மற்றும் அஸ்ஸி என்ற இரு கிளை நதிகளுக்கு இடையே அமைந்த நகரம் என்பதால் வாரணாசி என பெயர் பெற்றது.


ருத்திர பூமி, காலபைரவ புரி, பூலோக மயானம், கங்கா ஸ்தலம் என எத்தனை பெயர்கள் இந்த நகரத்திற்கு இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித சுவடுகள் கொண்ட நகரம்.அதனால் பழமையானது என்ற பெயரில் பனாரஸ் என்றும் அழைக்கிறார்கள். முன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் பாடசாலைகளும் ,ஆன்மீக மடாலயங்களின் தலைமை பீடங்கள் கொண்ட நகரமாக இருந்தது.


வாரணாசியை விவரிக்க வேண்டுமானால்...

குறுகலான சந்துகள், காசி மக்களின் அன்பு, திரும்பிய பக்கமேல்லாம் பசுக்கள், கண்களை மூடியபடி அமர்ந்திருக்கும் சாமியார்கள், அழுக்கு படர்ந்த கட்டிடங்கள், தன் நிறத்தை இழந்த கோட்டைகள், தன் இடையை வளைத்து செல்லும் கங்கை, எப்பொழுதும் எறிந்து கொண்டிருக்கும் மனித உடல்கள் என பல காட்சிகளை கண்முன்னே விரிக்கும் மஹாநகரம்.

காசி விஸ்வநாதர், அன்ன பூரணி, காசி விஷாலாக்‌ஷி என பல இறைசக்திகள் இங்கே இருக்கிறது. கால பைரவருக்கு இது தலை நகரம்.

உணவு சத்திரங்கள், தங்குவதற்கான இடங்கள், ஆன்மீக மடாலயங்கள், இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் படித்துறைகள், மிகவும் தித்திப்பான பால் இனிப்புக்கள் ஆகியவை காணப்படும் நகரம்.


மேற்கண்ட விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு ஐயாயிரம் ரூபாய் செலவழித்தால் போதுமானது. சுற்றுலா கொண்டு செல்லும் டிராவல்ஸ்காரர்கள் இரண்டு மினரல்வாட்டர் பாட்டிலுடன் காசியை சுற்றிக் காண்பித்துவிடுவார்கள்.

இதற்கு நான் ஏன் தொடர் எழுத வேண்டும்?

இங்கே நனும் நீங்களும் பேசப்போவது வாரணாசியின் இன்னொரு பரிமாணத்தை...!

வாரணாசி என்ற நகரை ஒரு சாக்காக கொண்டு சில உண்மைகளை உங்களிடம், உங்களுக்கு தெரியாமலேயே உள் புகுத்துவதே இந்த தொடரின் நோக்கம்..!

(சுவாசிப்பேன்...)



பின் குறிப்பு : மார்கழி என்ற தேவர்களின் மாதத்தில், சோமவாரம் என்ற சந்திரன் திகழும் திங்கள் கிழமையில் இறைவனின் இருப்பிடமான வாரணாசி பற்றிய தொடரை உங்களுக்காக துவங்குகிறேன்.நன்றி.


Friday, December 18, 2009

கோவியார் பவன் - உயர்தர சைவ உணவகம்..!



சிங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக நாடுகளால் விமர்சிக்கபட்ட கோவியார் பவனின் வாரம் முழுவதும் கிடைக்கும் உணவுகளின் பட்டியல் கீழே.

திங்கள் கிழமை: வர்ணப் பக்கோடா

நாலு வர்ணங்களில் கலர் கலராய் பக்கோடா கிடைக்கும். இதில் நெய்யும் முந்திரியும் சேர்த்து செய்யப்பட்ட முந்திரி பக்கோடா மட்டும் அதிகமாக வறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.

செவ்வாய் கிழமை: ஜாதிக்காய் பிரியாணி

காய்களில் இருக்கும் ஜாதியை சுட்டிக்காட்டும்படி செய்யபட்ட பிரியாணி. வாரம் ஒருமுறை இதில் இருக்கும் காய்கறிகள் மாறுமே தவிர ஜாதிக்காய் போடாமல் பிரியாணி செய்ப்பட மாட்டாது.

புதன் கிழமை: மத்திய கிழக்கு பொடிமாஸ்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விரும்பு சாப்பிடும் உணவுகள் இங்கே செய்து தரப்படும். அதில் நீங்கள் குற்றம் குறை கூறினால் , சமையல் புத்தகத்திலிருந்து அந்த பகுதி சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்படும்.

வியாழக்கிழமை: தினமலர் கிச்சடி

தினமும் பூக்கும் மலர்களை கொண்டு செய்யபட்ட கிச்சடி. மலரின் ஓரம் மடங்கி இருக்கிறது, அதில் இருக்கும் நிறம் சரியல்ல என சுட்டிகாட்டி உங்களுக்கு கிச்சடி பரிமாறுவார்கள்.

வெள்ளிக்கிழமை : எதிர் வினை பரோட்டா மற்றும் சுய வினை பாயா

அடுத்த ஹோட்டலில் இருக்கும் உணவுப்பொருள்களை கேவலப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட பரோட்டாக்கள். அவற்றை இங்கே வரவழைத்து உங்கள் முன்னால் கொத்து பரோட்டா போடப்படும். அனத்தும் சாப்பிட்டப் பிறகு சுய வினையின் காரணமாக ஏற்படும் அஜீரணத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை. வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் அரசியல் சூப் மற்றும் பெரிய புராணம் வடகறி செய்து தரப்படும். மேற்கண்ட உணவுகள் தயார் செய்யாத சூழலில் பிற ஹோட்டல்களில் பிராய்ந்து கொண்டு வந்த 'கலவை' சோறு கிடைக்கும்.

ஆயிரம் முறை உணவு அளித்த உலக சாதனை உணவகத்தில் நீங்களும் உணவருந்த வேண்டும் என துடிக்கிறீர்களா? எல்லாம் காலக் கொடுமையை காண :) இங்கே செல்லவும்.
-----------------------------------------------------------------------------------
இன்று பிறந்த நாள் காணும் திரு கோவி.கண்ணனுக்கு எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்.
இந்த இடுக்கையை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். இனி வரும் காலத்தில் அவர் மேற்கண்ட பட்டியலில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.