நாதம் என்ற நாதனை நாடினால்
நாளும் உன்னுள் நாதத்தை அறிவாய்
நாதமும் நாதனும் ஒன்றாகி
ஓம்கார நாதனாவாய்.
இசை என்றவுடன் சிலர் அதில் மனோமயக்க விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். பாரத கலாச்சாரத்தில் ஆன்மீகம் என்பது இசையின் முதுகெலும்பு கொண்டே வளர்க்கபட்டது. இசையை மாயை என காண்பவர்களும் , இசையை உன்னதமாக காண்பவர்களுக்கும் இடையே இருப்பது சின்னஞ்சிறிய வித்தியாசம் தான். ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். அது போல இசையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.
சிலர் இசையை மருத்துவ நிலையில் பயன்படுத்த முடியும் என ஆய்வு செய்து இருக்கிறார்கள் (Music therapy). மருந்து என்பது நம்மில் இல்லாத குறைவிஷயங்களை வெளியில் இருந்து கொடுப்பது அல்லவா? ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு மருந்து கொடுப்பார்கள். ஆனால் இசை மருத்துவம் என்பது அடிப்படையில் தவறு என்பேன். நம்மில் இசை இல்லா நேரம் எதுவும் இல்லையே..! அப்படி இருக்க எவ்வாறு வெளியில் இருக்கும் இசை நம்முள் நுழைந்து நம்மை குணமாக்கும்.?
வேத மந்திரங்கள் ஒருவித ஒலி அலையை ஏற்படுத்துகிறது. வேத ஒலி ஒரு இசையின் வடிவம்தான். வேதத்தை சுருதி என அழைக்கப்படுவதன் காரணமும் அதுதான். வேதம் என்பது மதம் கடந்தது என நான் அடிக்கடி கூறகாரணம் இந்த ஒலிவடிவம் தான்.
குயில் கூவுகிறது, பசு சப்தம் எழுப்புகிறது, மயில் அகவுகிறது இந்த ஒலி எல்லாம் எந்த மதத்தை சார்ந்தது? அப்படித்தான் வேத ஒலிகளும். சென்ற பதிவில் ஒரு ஒலிக்கோப்பை வைத்திருந்தேன். அது 2 நிமிடம் ஒலிக்கக்கூடிய ஒலி அலைகள். அதில் 1.06 நிமிடத்திற்கு நான்கு வேதத்தில் ஒன்றான சாம வேதமும், முடிவு வரை குரானில் தேனீ பற்றி ஓதும் வரிகளும் இருக்கிறது.
குரல் மற்றும் ஒலி தெளிவு தவிர பிற விஷயங்கள் ஒன்றுபோலவே இருக்கிறது பார்த்தீர்களா? இதில் சிலர் நாங்கள் இந்து என சொல்லி மார்தட்டும் எத்தனை பேருக்கு இது சாம வேதம் என தெரியும்? வேதத்தின் சுருதியை அறியாமல் இவர்கள் இந்து தர்மத்தை காப்பாற்றுகிறேன் என மசூதியை இடிக்கிறார்கள். இவை இரண்டையும் கேட்டு மகிழ்ந்திருந்தால் அதன் ஓசையில் இருக்கும் ஒற்றுமையை கேட்டு லயித்திருந்தால் உடைக்கவும் வேண்டாம் அதற்கு கமிஷனும் வேண்டாம்.
சாம வேதம் என்பது சங்கீத ரூபமாக உச்சரிக்கபடுகிறது. அதில் இருக்கும் பல வார்த்தைகள் ஓசைக்காகவே அமைந்திருக்கிறது. இராவணன் சாம வேதத்தை வீணையில் வாசிக்கும் ஆற்றல் பெற்று இருந்தான் என்கிறது ராமாயணம். அவன் சாமகாணம் வாசித்தால் கைலாய மலையே உருகுமாம். இது போல சாம கானத்தின் ஆற்றலை பலவாறு புகழ்ந்து இருக்கிறார்கள்.
ஸ்ரீகிருஷ்ணரும் பகவத் கீதையில் நான் வேதத்தில் சாமமாக இருக்கிறேன் என்கிறார். அதில் இசையின் வடிவாக இருக்கிறேன் என்றும் பொருள் கொள்ளலாம். தச அவதாரங்களில் இசைக் கருவியை கையில் வைத்திருக்கும் அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நான்கு வேதமும் தற்சமயம் மின் ஒலியாக கிடைக்கிறது. இலவசமாக அதை கணினியில் கேட்கமுடியும். ஆனாலும் நாம் வேட்டைக்காரனை விடுத்து வெளியே வருவதில்லை. :)
ஆன்மீக நிலையில் முன்னேற்றம் அடையும் பொழுது எல்லோரும் தசவித நாதம் என்ற நிலையை அடைவார்கள். நம்முள் பத்துவிதமான ஒலிகள் கேட்கத்துவங்கும். அவ்வொலி மத்தளம், பறை, பேரிகை, துந்துபி என பல்வேறு இசை கருவிகளை போல இருக்கும்.
இந்நிலையை உணரும் பொழுது நம் மூன்னோர்கள் தங்களில் உணர்ந்த ஒலியை எப்படி வெளியே கருவிகளாக செய்தார்கள் என்று ஆச்சரியம் அடைவீர்கள். முன்பின் தெரியாத ஓசை நம்மில் கேட்கும்பொழுது நமக்கு நோய் வந்ததாக முடிவுக்கு வருவோம். வெளியே கேட்கும் ஓசைகள் உங்களுள் கேட்கும் பொழுது அதை பிடித்து மேலே செல்ல முயலுவோம். அதனால் அவற்றை வெளியே இசை கருவியாக உண்டு செய்தார்கள்.
பல்வேறு வகையாக ஒலி இறைவனின் ரூபம் என கூறினாலும் நாம் அதை உணர்ந்தால் தானே புரிந்துகொள்ள முடியும். எளிய தியான பயிற்சி மூலம் நீங்களும் ஒலி ரூபமான இறைவனை உணர முடியும். அதை முயற்சி செய்ய நீங்கள் தயாரா?
அமைதியான ஒரு அரை இருள் கொண்ட அறையில் அமருங்கள். உங்கள் முதுகு பகுதியை சுவரில் சாய்த்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆழமாக சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். தொடர்ந்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்.
சில நிமிடத்தில் உங்கள் இதயத்தின் ஓசை மிகவும் நுட்பமாக உங்களுக்கு கேட்கத்துவங்கும். இந்த ஓசை உங்கள் காது என்ற புலனுக்கு கேட்’காது’. அது உங்களுக்குள்ளே கேட்கும். உங்கள் இதய ஓசையின் அளவை கவனியுங்கள். ஒரு ஓசைக்கும் அடுத்த ஓசைக்கும் இடையே உள்ள இடைவெளியை கவனித்த வண்ணம் இருங்கள். பிறகு அனைத்தும் தானாகவே நடக்கும்.
அதிகமாக நீங்கள் சாப்பிட்டுவிட்டு இந்த தியானத்தை செய்தால் உங்கள் தூக்கத்தில் எழும் நாதத்தை (குறட்டை ஒலி) பிறர் கேட்கத் துவங்குவார்கள். :)
இரயில் பயணங்களை நான் அதிகமாக தேர்ந்தெடுப்பதற்கு அதன் தாள லயம் ஒரு காரணம். ரயிலில் அமர்ந்து கண்களை மூடி அதன் தாளத்தை தியானம் செய்தபடியே பயணித்தது உண்டா? அருமையான ஒரு தியானவழிகாட்டி என்றால் ரயிலின் ஓசையை கூறலாம். அதே போல மாட்டு வண்டியும் சிறந்த கருவியே. அதில் அமர்ந்து பயணிக்கும் பொழுது நம்மை தியான நிலைக்கு இயல்பாகவே இட்டுச்செல்லும்.
அடுத்த முறை ரயிலிலோ மாட்டுவண்டியிலோ பயணிக்கும் பொழுது கண்களை மூடி அதன் தாளத்தில் தியானித்து பழகுங்கள். உங்களுக்குள் இருக்கும் நாதவடிவம் எங்கும் நிறைந்திருப்பது புரியதுவங்கும்.
எனக்கு ஒரு ரகசிய எதிரி ஒருவர் உண்டு. நான் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் அவர் சில வரிகளில் கூறிவிடுவார். அவர் பயன்படுத்தும் வார்த்தையும், கருத்தும் சில நேரங்களில் எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.
அவரின் வரிகளை படித்தால் செயலற்று கல்லாகிப்போவேன். அவரை போல கருத்துக்கள் எழுதமுடியவில்லையே என்ற ஆதங்கமே அவரை எதிரியாக்கியது. நீங்களும் அந்த எதிரியை தெரிந்து கொள்ளுங்கள். நான் இரு பகுதிகளாக எழுதிய இந்த கட்டுரையை அவரின் நான்கே வரி கள் மூலம் உணரலாம். அனைத்துக்கும் மூலமாக இருப்பதால் என் எதிரியின் பெயர் திருமூலன்.
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே
---------------------------------------------------------------திருமந்திரம் 30.
மண்ணாகவும், விண்ணாகவும், வேதமாகவும், இசையாகவும் இருப்பவனை நானும் காதலிக்க துவங்கிவிட்டேன்........... நீங்க?