Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, November 24, 2009

பழைய பஞ்சாங்கம் 24-11-2009

திருவண்ணாமலையும் வலையுலகமும்

கடந்த 10ஆம் தேதி மாணவர்களுடன் ஸ்ரீசக்ர புரிக்கு பயணம் மேற்கொண்டேன். மூன்று நாள் திகட்ட திகட்ட ஆன்மீக உணர்வு உண்டு மகிழ்ந்தோம். சுப்பாண்டி இப்பயணத்தில் இணைந்து சிறப்பித்தார். அத்துடன் உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு வலயுலக பிரபலம் இதில் கலந்து எங்களை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தினார். அவரை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.

கிரிவலம் வரும் பொழுது அங்கே மொட்டையன் சாமி என்ற அவதூதரை மாணவர்களுக்கு காட்டினேன். அழுக்கான தேகம், கையில் மூக்குப்பொடி, வாய்க்கு வந்ததை பேசி பிறரை திட்டுவது என வித்தியாசமானவர் மொட்டையன் சாமி. அவர் ஒரு டீக்கடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எல்லா மாணவர்களும் வியப்புடன் அவரை பார்த்துக் கொண்டிருக்க சுப்பாண்டியும் நம் பிரபல பதிவரும் அவரை பார்த்து அதிசயிக்காமல் சாதாரணமாக அமர்ந்திருந்தனர்.
எனக்கோ ஆச்சரியம். அவர்களிடம் தனிதனியே கேட்டேன்.

பிரபல பதிவர் சொன்னார், “வாய்க்கு வந்ததை பேசும் எத்தனையோ பதிவர்களே இது போல இருக்காங்க. நீங்க என்னடான இதை அதிசயங்கிறீங்க” என்றார்.


அதே கேள்வியை சுப்பாண்டியிடம் கேட்டேன், “உங்க ஸ்பீச்சை கேட்டு கேட்டு பழகி யார் பேசரதை கேட்டாலும் நீங்க பேசறமாதிரியே இருக்கு ஸ்வாமி” என்றான் உள் குத்துடன்.

நான் இருவரின் கருத்தையும் இணைத்து பார்க்க விரும்பவில்லை...!
-----------------------------
நேமா(அ)ல(ர்)ஜி

ஒரு நேமாலஜி வெறியரிடம் சிக்கிவிட்டேன். என்னிடம் தன் பிரதாபங்களை காட்ட அவரின் கருத்துக்களை என் மேல் வாரி தெளித்துக்கொண்டிருந்தார். எனக்கு நேமாலஜி மேல் நம்பிக்கை உண்டா என்றோ அதை பற்றிய கருத்தோ கேட்காமல் சராமாரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.


தீபா என பெயர் வைக்க கூடாதாம். அதில் தீ என்ற வார்த்தை இருக்காம். குரு பிரசாத் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் SAD என நடுவில் வருமாம். அதனால் அவர்களின் வாழ்க்கை சோகமாகிவிடுமாம். என் பெயரில் பின்னால் கார் என்ற ஒலி வருகிறதாம் அதனால் என்னால் சுயமாக இயங்க முடியாதாம். யாரோ ஒருவர் தான் என்னை இயக்குவாரம். முடியல...


அவரிடம் முகத்தை சீரியசாக்கிக் கொண்டு ஒரு கதை சொன்னேன்...


நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்தினரிடம் ஒரு வெளிநாட்டுக்காரர்கள் சிக்கிவிட்டார்கள். அதில் ஒருவர் பெயர் சேவு, இன்னொருவர் பெயர் காவு. இருவரையும் கட்டி தலையில் தூக்கிவைச்சு கொண்டு போனாங்க.
நம்மை சாப்பிட போறாங்கனு தெரிஞ்சு இருவரும் கதறினார்கள்.

சேவு ஆங்கிலத்தில், “மனிதர்களை எல்லாம் சாப்பிடலாம இது உங்களுக்கே நல்ல இருக்கா?” என கேட்டான்.
அந்த கூட்டதிலிருந்து ஒருவன் வெளிப்பட்டு ஆங்கிலத்தில் உங்க ரெண்டு பேரு பெயரையும் சொல்லுங்க என்றான். சேவுக்கு ஒரே ஆச்சரியம் கூட்டத்தில் ஒருவன் ஆங்கிலம் பேசுறான். இவன் கிட்ட எதையாவது சொல்லி தப்பிச்சிடலாம்னு நினைச்சான்.

அதற்குள் நம்ம நேமாலஜிட் குறுக்கிட்டு பார்த்தீங்களா நேமாலஜி வர்க் ஆயிருக்கு, அவன் பெயர் சேவு (save) என்றார்.


கதையை தொடர்ந்தேன்.
சேவு அந்த நரமாமிச ஆசாமியிடம் எதற்கு பெயரை கேட்கறீங்க என்றான். அந்த ஆசாமி சொன்னான், ”எங்க மெனு கார்டில் எழுதி வைக்கனும்”. சேவு என்ற நேமாலஜி வேலை செய்ததோ இல்லையோ.. கூட இருந்தவன் பெயர் வேலை செய்தது :)
------------------------------
வலையுலக ஜனநாயகம்

வர வர என் வலைப்பக்கத்தில் ஜனநாயகம் இல்லை என ஒரு பதிவர் தனிமடல் அனுப்பி இருந்தார். மாடுரேஷன் போடுகிறேனாம். சிலரை கண்டிக்கிறேனாம். பிறரின் கருத்தை ஏற்க மாட்டேன் என்கிறேனாம். ஒரே ஜனநாயக விதிமீறலாக இருக்கிறது என்றார்.


அவரின் ஆவலை மனதில் கொண்டு ஒரு ஜனநாயக விஷயத்தையாவது ஆவன செய்யலாம் என இருக்கிறேன். இந்த வலைபக்கத்தில் ஒரு விஷயத்தை எழுதவேண்டும் என நினைத்து உட்கார்ந்தால் ஏகப்பட்ட விஷயங்கள் என் முன்னால் நிற்கிறது. எதை எழுதவேண்டும் என தெரியவில்லை. (விஷயம் இல்லையா என கேட்பவர்கள் தனியாக சாட்டில் வரவும் :) ).


அனைத்து கருத்துக்களும் எனக்கு முக்கியமாக படுவதால், வலைப்பூவை படிப்பவர்களான உங்களிடத்திலேயே எந்த தலைப்பில் பதிவெழுதுவது என தேர்ந்தெடுக்க சொல்லலாம் என இருக்கேன்.

(ஏகப்பட்ட ஆணி இருக்கு அதில் எதை பிடுங்க? நீ பிடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான். போன்ற வசனங்கள் மாடுரேஷன் போடப்படும். ஆணியே பிடுங்க வேண்டாம் என சொல்லும் வசனங்கள் பார்த்தவுடன் டெலிட் செய்யப்படும் :) )

பக்கவாட்டில் இருக்கும் தேர்தலில்(poll) கலந்து கொண்டு பிடித்த தலைப்பை தேர்ந்தெடுங்கள். ஒன்றுக்கு மேம்பட்டது பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் வரிசைப்படுத்துங்கள்.
---------------------------------

கவிதை

சில நாளுக்கு முன் என் கூகுள் ஸ்டேட்டஸில் எழுதிய கவிதை வரிகள்.


பசு என்றேன் இந்து ப்ராமணன் என்றார்கள்
ஆடு என்றேன் ஆண்டவரே என்றார்கள்.
ஒட்டகம் என்றேன் அவனா நீ என்றனர்.

தயவு செய்து...மிருகத்தை வைத்தல்ல

மனிதனை வைத்தே மனிதத்தை எடைபோடுங்கள்.

Wednesday, November 18, 2009

பாவனாவை பற்றிய கிசு கிசு

தென்னிந்திய சினிமா நடிகை பாவனா உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரை பற்றி ஒரு கிசு கிசு கூறப்போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் எனக்கு அவ்வளவு புத்திசாலிதனம் இல்லை. நீங்கள் என்னிடத்தில் மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். பாவனா ரசிகர்கள் என்னை பொருத்தருள்க.

நாம் இங்கே பேசப்போவது “ப்ரதி பக்‌ஷ பாவனா” என்ற விஷயத்தை பற்றியது. பதஞ்சலி என்ற மாமுனிவர் எழுதிய பதஞ்சலி யோகசூத்திரத்தின் அற்புத வரிகளில் இதுவும் ஒன்று. இவ்வரிகளில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து பொருள் பார்ப்போம்.

ப்ரதி என்ற வார்தை தமிழில் பிரதி என பயன்படுத்தலாம்.
அதாவது ஒன்றை போன்ற மற்றொன்று என்று அர்த்தம்.

பக்‌ஷ என்றா நீங்கள் நினைப்பது போல நவீன ராவணனின் பெயர் இல்லை இது. பக்ஷம் என்றால் பகுதி என்று அர்த்தம். உங்கள் உடல் என்பது ஒரே தன்மை என்றாலும் அதில் வலது இடது என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? அது போல எப்பொருளும் இரு பிரிவுகள் அல்லது பல பிரிவுகள் கொண்டதாக இருக்கும். இப்பிரிவுகளுக்கு பக்‌ஷம் என்று பெயர். உங்கள் இடது தக்‌ஷிண பக்‌ஷம் மற்றும் வலதை வாமன பக்‌ஷம் என்கிறது வட மொழி.

பாவனா என்றால் ஒன்றை இருப்பதாக கருதுதல். பாவனை செய்தல் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக பிறருக்கு உணர்த்துவது என்பது பொருள். உதாரணமாக நாட்டியத்தில் நட்டியம் செய்பவர் கையில் பானை இருப்பது போல அசைந்து வருவார். அதை பார்க்கும் பொழுது நமக்கு பானையுடன் அவர் வருவது போலவே இருக்கும். நாட்டிய பாவனை என இதற்கு பெயர்.

மூன்று வார்த்தைகளையும் தனிதனியாக பார்த்தோம் ஒன்றாக இணைத்தால் இதன் பொருள் என்ன தெரியுமா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் கட்டாயம் ஒரு நன்மை ஒளிந்திருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு விஷயம் உண்டு.

தீமையான விஷயத்தில் மட்டுமல்ல. நன்மையான விஷயத்திலும் இது இருக்கும். நன்மையான விஷயத்தில் கூடுதலாகவும், பிற விஷயங்களில் குறைவாகவும் இருக்கும்.

எல்லா விஷயத்தையும் பாஸிடிவாக பார் என்பதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதஞ்சலி பாஸிடிவாக இல்லை என்றாலும் பாஸிடிவாகவே பார் என கூறவில்லை. ஒவ்வொரு நிகழ்விலும் 'கண்டிப்பாக' நன்மை உண்டு என உறுதியாக கூறுகிறார்.அதனால்தான் பதஞ்சலி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் நன்மையை ஒரு பிரிவாக உருவகித்துக்கொள் என்கிறார்.

சிலரின் வாழ்க்கையில் இயல்பாகவும், சிலர் முயன்றாலும் இவ்வழியை எளிமையாக பின்பற்ற முடியும்.

அறுபது வயது மதிக்கதக்கவர் என்னிடம் கூறினார். நல்ல வேளை நான் அரசு வேலையில் சேரவில்லை. இல்லை என்றால் இந்நேரம் ரிடையர் ஆகி இருப்பேன் என்றார். இது ஒருவகை ப்ரதிபக்‌ஷ பாவனை தானே?

சுப்பாண்டி ப்ரதி பகஷ பாவனையில் கை தேர்ந்தவன். இந்த தத்துவம் அவன் வாழ்வுடன் இணைந்துவிட்டது என்றே கூறலாம்.

காக்கை எச்சமிட்டால்.... நல்ல வேளை பசுக்கள் மேலே பறப்பதில்லை என்ற அளவுக்கு சுப்பாண்டியின் பரதிபக்‌ஷம் பிரசித்தி.

ஒரு இளைஞன் அடிக்கடி தற்கொலைக்கு முயல்கிறான் அவனை தெளிவுபடுத்துங்கள் என அவனின் தந்தை என்னிடத்தில் அனுப்பி வைத்தார்.

நானும் என்னால் முடிந்த அளவு அறிவுரைகள், குட்டிக்கதைகள் எல்லாம் பல மணி நேரம் சொல்லிப் பார்த்தேன். இளைஞனின் நிலை அப்படியே இருந்தது.

“குருஜீ நான் வேணும்னா முயற்சி செய்யவா?” என காதில் கிசுகிசுத்தான் சுப்பாண்டி.

நானும் கொஞ்சம் ஓய்வு எடுக்க சரி என கூறினேன். அந்த இளைஞனுடன் சுப்பாண்டி தனியே பேசினான். சில நிமிடங்களில் அந்த இளைஞன் என்னிடத்தில் வந்து இனிமேல் தற்கொலை செய்ய மாட்டேன் என்றான். எனக்கோ ஆச்சரியம். எப்படி இது. நான் தலைகீழாக நின்று முடியாத விஷயம் சுப்பண்டியால் சில நிமிடங்களில் முடிந்தது என குழப்பத்தில் அந்த இளைஞனிடமே கேட்டேன்.

அந்த இளைஞன் சொன்னான், “ முட்டாள் தனமா பேசற சுப்பாண்டியும், அவனை கட்டி மேய்க்கும் நீங்களும் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகணும்?”

பார்த்தீங்களா சுப்பாண்டியை நான் என்னுடன் வைத்திருப்பதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது.

என் வாழ்க்கையில் பல நிலைகளில் ப்ரதிபக்‌ஷ பாவனையை பயன்படுத்துகிறேன். என்னை பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாததால் அவற்றை விவரிக்க முடியாது.

இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களால் விளக்குகிறேன். வேதகால வாழ்க்கை என்ற தொடரை துவங்கியதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்னை பற்றி சில விமர்சனங்கள் கூறினார்கள்.

இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் இருக்க முடியும்?

வேதகால வாழ்க்கை தொடரை பதிவிட்டு திரட்டியில் இணைத்தப்பின் சிலர் மட்டுமே படிப்பார்கள் என நினைத்தேன். அது அவ்வளவு சுவாரசியமான பதிவல்லவே? எல்லோரும் படிப்பார்களா என நினைத்தேன். ஆனால் பதிவின் கருத்துக்களை திரட்டிகளை விட இவர்களின் திட்டுக்களே வெளிக்கொண்டுவந்தது.

பலர் என்னை காரசாரமாக விமர்சனம் செய்ய அதைபடித்த புதியவர்கள் அப்படி என்னதான் இவன் எழுதி இருக்கிறான் என படிக்க வந்தார்கள். புதிய நபர்களை இங்கே கூட்டி வந்த பெருமையும், பலருக்கு வேதகால வாழ்க்கை முறையை கொண்டு சேர்த்ததும் என்னை விமர்சித்தவர்களே. அவர்களுக்கு நன்றிகள்.

ஒரு நண்பர் என்னை விமர்சித்த பதிவில் நான் பத்தாம் வகுப்பு பெயில் என குறிப்பிட்டு என் வாழ்க்கை வரலாற்ற அவரே எழுதி இருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவை தாண்டாத என்னை பத்தாம் வகுப்பு வரை படித்ததாக அவர் கூறியதும் ஒருவகை பிரதிபக்‌ஷம் தானே?

ஸ்ரீசக்ர புரியில் அந்தணர்களின் மிகைமிஞ்சிய செயலை கண்டித்துள்ள வரிகளை மறந்து பசு,வேதம் என்றவுடன் நானும் அந்தணன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஸ்ரீசக்ர புரியில் இணைத்த புகைப்படத்தை மீண்டும் இங்கே இணைக்கிறேன்.

நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தில் நம் மக்கள் எதிர்பார்க்கும் அந்தணனுக்கு உண்டான லக்‌ஷணம் ஏதேனும் என்னிடத்தில் உண்டா? முக்கியமாக தோள்பட்டையில் பூணுல் இல்லை.
சரி இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் என்றுதானே கேட்கிறீர்கள்?

அவர்கள் அந்தணன் என நினைத்ததால் இந்த புகைப்படத்தை காட்டி விளக்க முடிகிறது. இதுவே நான் சூஃபி ஞானிகளை பற்றியோ, இஸ்லாமை பற்றியோ எழுதி இருந்தால்? எப்படிபட்ட புகைப்படத்தை காட்டி விளக்க வேண்டி இருந்திருக்கும்?

( சிந்தனை உதவிக்காக மாண்டோ அவர்களுக்கு நன்றி)

அதனால்தான் சொல்லுகிறேன்.... ப்ரதி பக்‌ஷ பாவனா... எல்லாவற்றிலும் காணலாம்.

Monday, November 16, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 13

வேதகால வாழ்க்கை என்ற இத்தொடரை துவங்கும் பொழுது கூறினேன் மனிதர்கள் அனைத்தையும் முன் முடிவுடனே அனுகுகிறார்கள் என்று. இதன் காரணம் நீங்கள் இப்பகுதியை படித்தால் விளங்கும்.

வேதகால வாழ்க்கை என்பது ஒரு தத்துவம் போல மேஜையில் அமர்ந்து கணினியில் செய்யும் கற்பனை விஷயம் அல்ல. இதற்கு நீங்கள் கொஞ்சம் உடல் உழைப்பு செய்ய வேண்டும்.

உங்கள் வாழ்க்கை சூழல் பிரகாசம் ஆக நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் என்ன தவறு? நவீன அறிவியல் என்ற பெயரில் பலர் கண்டுபிடிப்புகளால் பூமியின் சூழலையும், மனித மனங்களையும் அசுத்தமாக்குகிறார்கள். நவீன கண்டுபிடிப்புகள் தேவையை பொருத்தே கண்டறியப்படுகிறது. ஆனால் அதன் பின்விளைவுகள் மிகவும் கொடூரமானவை.

வாகனங்களுக்கு பெட்ரோல் பயன்படுத்தும் பொழுது நமக்கு தெரியாது ஓசோனில் ஓட்டைவிழும் என்று. அது போலவே செல்போன் பயன்படுத்தும் பொழுது அதன் கதிர்வீச்சால் பல பறவையினங்கள் மலடான விஷயம் என சொல்லிக்கொண்டே போகலாம். நான் நவீன விஞ்ஞானத்திற்கு எதிரானவன் அல்ல. சுயநலம் மட்டுமே மண்டிகிடக்கும் விஞ்ஞான யுக்திகளுக்கு எதிரானவன். உங்களின் குடை உங்களுக்கு செளகரியமாக இருக்கும் பொழுது அதன் கம்பி பிறர் கண்களை குத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

வேதகாலத்தில் இருக்கும் கண்டுபிடிப்புகள் பின்விளைவுகளை கொண்டது அன்று. மிருகத்தோலை பயன்படுத்திய ரிஷிகள் அவற்றை அப்படியே விட்டுவிட்டு சென்றாலும் சிலவருடங்களில் அது இயற்கையுடன் கலந்துவிடும். ஆனால் நீங்கள் பயன்படுத்திய சிப்ஸ் பாக்கெட்டை பல்லாயிரகணக்கான வருடம் சென்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு எடுப்பார்கள்.

பலவரலாற்று அறிஞசர்களுக்கு வேதகாலத்தை பற்றி சான்றுகள் கிடைக்காதது இதனால்தான். அவர்கள் பயன்படுத்திய, உருவாக்கிய விஷயங்கள் அனைத்தும் இயற்கையுடன் இணைந்தவிஷயங்கள். அவர்கள் காலத்திற்கு பிறகு எளிமையாக இணைந்துவிட்டது.

சில வேடிக்கை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். பிராணிகள் விடும் ஏப்பத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதாம் அது உலக வெப்பமயமாதலுக்கு காரணமாம். அவர்கள் உரையாற்றிய அரங்கில் இருக்கும் குளிர்சாதனம் வெப்பமயமாதலுக்கு காரணம் இல்லையா? அவர்கள் வந்த வாகனமும், விமானமும் உலக வெப்பமயமாதலுக்கு காரணம் இல்லையா?

பசு ஏப்பம் விட்டதும், கங்காருவின் வேண்டாம்.....விடுங்கள்.

விஞ்ஞானிகளுக்கு ஏதோ ஒரு
காரணம் வேண்டும். சிலர் உலக வெப்பமடைதல் என்ற விஷயத்தையே எதிர்கிறார்கள். காரணம் உலக சுழற்சியில் இது இயல்பு என்கிறார்கள்.

பூமி தோன்றிய நாளில்
வெப்பமாவும், பிறகு குளிர்ந்து உறை பனியாக இருந்தது. அப்படிபட்ட பனி உருகி வட, தென் துருவத்தில் மட்டும் இருக்கிறது. இடைபட்ட பகுதியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருகிய பனி எந்த மிருகம் விட்ட ஏப்பம் என கேட்க தோன்றுகிறது.

வேதகால வாழ்க்கை என்ற விஷயத்தை நான் ஒரு எழுத்துவடிவில் எழுதவில்லை.
செயல்வடிவில் கடந்த 5 வருடங்களாகவும். உணர்வு நிலையில் பலவருடங்களாகவும் கொண்ட விஷயம். கோவை வேளாண்மை பல்கலைகழகத்துடன் இணைந்து வேதகால வாழ்க்கை மற்றும் வேளாண்மையை மேற்கொண்டு சிறந்த விவசாய முறை என்ற ஆய்வை சமர்ப்பித்துள்ளேன்.


நீலகிரி தோட்டகலைத்துறையும், வேளாண்மை பல்கலைகழகமும் நான்கு முனைவர்களை கொண்டு இம்முறையை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் வேளாண்மையில் இம்முறை ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். எனது கள அனுபம், ஆன்மீக ஆனுபவத்தாலும் வேளாண் துறை மாணவர்களுக்கு இம்முறையை வருடத்திற்கு மூன்று கருத்தாய்வு நடத்தி வெளிப்படுத்துகிறேன்.

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி பட்டறையும், விவசாய அலுவலர்களுக்கு இதன் அடிப்படையும் விளக்குகிறேன். இவை அனைத்தும் பல்கலைகழகம் வாயிலாக மட்டுமே செய்கிறேன். இது போக சில தனியாரின் நிலங்களுக்கு வேதகால வேளாண்மை முறையில் வேளாண்மை செய்ய உதவி வருகிறேன்.

வேதகால வேளாண்மை தவிர, ’நட்சத்திர வனம்’ என்ற பெயரில் 27 நட்சத்திரத்திற்கான மரங்களை சிறிய தோட்டமாக நட்டு அப்பகுதி ப்ராணனை மேம்படுத்திவருகிறேன். இது ஒரு இலவச சேவையாக செய்துவருகிறேன். இது மனிதகுலத்துக்கான சேவையாக செய்துவருகிறோம். நீங்கள் இதில் இணைந்து எங்களுடன் பணியாற்ற விருப்பம் இருந்தாலும் கூறவும்.

உங்கள் பகுதியில் சிறிய நிலப்பரப்பு இருந்தால் கூறுங்கள், நாங்கள் இலவசமாக நட்சத்திரவனம் ஏற்படுத்தி தருகிறேம்.

ஊசியிலை காடுகளில் வளரும் 27 நட்சத்திர மரங்களை கண்டரிந்து உதகையில் நட்சத்திர வனம் ஏற்படுத்தி உள்ளேன். அதன் செய்தி இதோ சுட்டி.

எனது வேதகால பணிகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். கல்லூரி மாணவர்களிடம் இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். விரைவில் வேதகாலம் மலரும்.

ஆம் வேதகாலம் என்பது முன்காலத்தில் இருந்தது அல்ல. சக உயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல், முழுமையான ப்ரபஞ்ச ஆற்றலுடன் வாழும் வாழ்க்கையை நாம் இனிமேல்தான் உருவாக்க வேண்டும்.

முன்காலத்தில் சிலரால் மட்டுமே பின்பற்றபட்ட வேதகாலத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு நாமும் அந்த ஒளியில் கலந்து மேம்படுவோம்.

(நிறைவு)

Saturday, November 14, 2009

வேதகால வாழ்க்கை பகுதி - 12

நம் வாழ்க்கையில் நிறைய நன்மை கொடுக்கும் காரியங்களை நமக்கு தெரிந்தாலும் அவற்றை பின்பற்ற முடியாது. உதாரணம் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை சொல்லலாம். நமக்கு சுற்றுசூழலுக்கும் ஒவ்வாத காரியங்கள் பலவற்றை மன உறுத்தல் இல்லாமல் நம்மால் செய்ய முடிகிறது. அது போன்றுதான் வேதகால வாழ்க்கை முறையும். மரம் நமக்கு என்ன செய்கிறது, பசு நமக்கு கொடுக்கும் நன்மைகள் என்ன என அனைவருக்கும் புரிந்தாலும் அவற்றை வளர்க்க முயலமாட்டோம்.

மனித குணம் எப்பொழுதும் புலன் இன்பத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது. ஒருவருக்கு சுவையான உணவு இருக்கும் இடம் தெரிந்தால் அதை பெற அவர் பல காரணம் கூறுவார். அதே போல தானக்கு நன்மை என தெரிந்தும் சில காரியங்களை செய்ய நாம் பல காரணம் கூறி தட்டிக்கழிப்போம்.

பின்வரும் காரணங்கள் பலர் வேதகால வாழ்க்கை பின்பற்ற முடியாது என கூறும் காரணங்கள்.

மரம் வைக்க என் வீட்டில் இடம் இல்லை. நான் அப்பார்ட்மெண்டில் இருக்கிறேன். வெளிநாட்டில் வசிக்கிறேன் அதனால் நீங்கள் கூறும் மரங்கள் இங்கே இல்லை. பசு மாடு எங்கள் ஊரில் தடை. பசுமாடு வளக்கும் அளவிற்கு என் வீட்டில் வசதியான இடம் இல்லை. மேலும் பசுவை பராமரிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது.

முதலில் மரம் வளர்க்கும் முறையை பார்ப்போம்.

அனேகமாக நகரங்களில் மே ப்ளவர் மரங்கள் போன்ற மரங்களையே வீதிகளில் நடுகிறார்கள். இதன் காரணம் அவற்றிற்கு பராமரிப்பு குறைவு என்பதும், வேகமாக வளருவதும் ஒரு காரணம்.

மே-ப்ளவர் மரங்கள் ப்ராண சக்தி மிகவும் குறைவான மரங்கள். இவை புளியமரம் போல ப்ராணனை நம்மிடமிருந்து பறிப்பதில்லை என்பதும், நல்ல நிழல் மற்றும் காற்று தரும் மரம் என்பது ஆறுதலான தகவல்கள்.

ஆனால் இம்மரங்களுக்கு பதில் வன்னி, வேப்பம், பூவரசு, மரமல்லி போன்ற மரங்கள் வைத்தால் மிகவும் சிறப்பான சூழல் அமையும். உங்கள் பிறந்தநாள், மண நாள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் உங்கள் வீட்டின் அருகில் மரம் நடலாம். இதற்கு மரம் நடுவிழா என விளம்பரம் செய்ய தேவையில்லை.

இம்மரங்களின் கன்றுகள் அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கும். இவற்றை வாங்கி நட்டுவிட்டு நீர்விட்டீர்கள் என்றால் சில நாட்களில் துளிர்த்துவிடும்.

தினமும் சென்று தண்ணீர் ஊற்ற சிரமமா? தென்னை நார்களை மரகன்றின் அடியில் போட்டு நீர் ஊற்றுங்கள் மூன்று நாட்களுக்கு இது தாங்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஊற்றுங்கள். இப்படி இரு வாரங்கள் பார்த்தால் போதுமானது. பிறகு அந்த கன்று மரம் ஆகும் வரை தன்னை தானே பார்த்துக்கொள்ளும்.

இதற்கும் சிரமம் இருந்தால் மற்றொரு யோசனை இதோ.

பெரிய மரங்களின் கன்றுகளை வாங்கி சிறிய தொட்டியில் வளர்த்துங்கள். வீட்டின் உள் அறையில் கூட வளர்த்தலாம், அல்லது விட்டின் முன்புறம் அழகு செடிபோல வளர்க்கலாம். அதிகபட்சம் 8 முதல் 10 மாதங்களுக்குள் நன்கு வளரும். பிறகு அந்த செடியை வேறு நிலபகுதியில் வைத்துவிட்டு, அதே தொட்டியில் அம்மரத்தின் புதிய கன்றையோ அல்லது வேறு மரத்தின் கன்றையோ வளர்த்தலாம். இம்முறை வீட்டிலும் உங்கள் அலுவலக சூழலிலும் பின்பற்றலாம்.

இவ்வாறு செய்வதால் மரங்கள் பெருகுவதும், நம்மை சுற்றி நல்ல ப்ராணன் இயங்குவதற்கும் ஏதுவாக இருக்கும். நான் வேலை செய்யும் சூழல் குளிரூட்டபட்ட இடம், அதில் மரம் வளர்க்கலாமா என கேட்டால், மரத்தை சிரமப்படுத்தாதீர்கள் என கூறுவேன். நீங்களும், மரமும் ப்ராணன் அமுங்கிய நிலையில் குளிரூட்டபட்ட அறையில் இருப்பதை நினைக்கவே மனம் கலங்குகிறது.

உங்களுக்கும் மரம் வளர்க்க வேறு யோசனை இருந்தால் சொல்லுங்களேன்.

அடுத்து பசு. பசுவிற்கு ப்ராணன் அதிகம் என்றேன். ஆனாலும் அவற்றை நகரத்தில் வளர்த்துவது சிரம் அதிகம் உண்டு. பசுவை காருடன் (மகிழுந்து-car) ஒப்பிட்டு நோக்கினால் சில விஷயங்கள் புரியும்.

இரண்டுக்கும் நான்கு கால் இருக்கு என அபத்தமாக ஆரம்பிக்க வேண்டாம் :)

நம் வீட்டில் கார் நிறுத்த இடம் இல்லை என்பதாலும், அப்பார்ட்மெண்டில் வசித்தாலும் கார் வாங்காமல் இருக்கிறோமா? அது போல நமக்கு விருப்பம் இருந்தால் பசு வாங்கலாம். சில நண்பர்களுடன் இணைந்து பசுவும், காளையும் வாங்கி ஒரு பொதுவான இடத்தில் வைக்கலாம்.

கார் வாங்கி அவற்றை பொதுவான பார்க்கிங்கில் நிறுத்துகிறோம் அல்லவா அது போலத்தான். பொது பார்க்கிங்கிற்கு மாதம் சில ரூபாய் செலவிடுகிறோம். அத்தொகை ஒரு பசுமாட்டை பராமரிக்க போதுமானது.

அவற்றை பராமரிக்க ஒருவரை நியாமிக்கலாம். ஒரு 6 மாதம் முதல் 8 மாதம் வரை இவற்றிற்கு செலவு செய்தால் பிறகு பசுமாடு தன்னையும் தன் கூட்டத்தையும் பராமரிக்கும் செலவை சம்பாதிக்கும். அதன்மூலம் கிடைக்கும் பால் மற்றும் இதர விஷயங்கள் உங்களுக்கு உபரியாக கிடைக்கும்.

கார் வாங்கி சில வருடங்கள் கழித்து மற்றொரு கார் கிடைக்குமா? ஆனால் பசுவாங்கினால் சில வருடங்களில் பல்கிபெருகும்.

சுத்தமாக பராமரித்தால் பசுமாட்டிற்கு நல்லது. எந்த மாநகராட்சியும் இதற்கு தடை சொல்லாது. பசு மாடு கறவை முடிந்தாலும் அதில் ப்ராணன் உண்டு என்பதால், பால் கொடுக்காவிட்டாலும் பசுவால் பயன் உண்டு.

பசுவை உண்ணுவது தவறு என சொல்லும் அளவிற்கு நான் வள்ளலாரின் வழிவந்தவன் அல்ல. ஆனால் உயிர்வதை என்பதை கொண்டாலும், ஒரு உயிர்வதை செய்வதால் நம் உடலில் ஏற்படும் சில ப்ராண தடுமாற்றத்தையும் கருத்தில் கொண்டு தவறு என்கிறேன்.

சிலர் கேட்கிறார்கள் பசுமாடு இயற்கையாக இறந்து யாராவது பார்த்து இருக்கிறார்களா என்று, குரங்கின் இயற்கையாக இறந்த உடலை கூடத்தான் யாரும் பார்த்ததில்லை. அதற்காக குரங்கு சாப்பிடுபவர்கள் அதிகம் என கூறமுடியாது.

அடிமாடிற்கு பசுவை அனுப்புவது தவறு. ஆடு போல இறைச்சிகாக வளர்த்தி கொல்லுவது கூட அனுமதிக்கலாம். பசுவை கேரளாவில் எப்படி இறைச்சிக்காக வெட்டுகிறார்கள் என நேரில் ஒருமுறை பார்த்தால் அசைவம் சப்பிடுபவர்களுக்கும் மன நிலை தடுமாறும். பசுவின் இறைச்சி மென்மையாக இருக்க வேண்டும் என்று அவற்றை பயமுறுத்தி, பசு இருக்கும் அறையில் பட்டாசு வெடித்து அவற்று மிரள செய்து வெட்டுவார்கள்.

அதன் இரத்தம் சூடாகி, இருதயம் படபடப்புடன் இருக்கும் பொழுது வெட்டினால் இறைச்சி மிகவும் மென்மையாக இருக்குமாம். நினைத்துபாருங்கள் உங்கள் விரோதிக்கு இப்படி பட்ட சாவு வந்தால் கூட அனுமதிக்க மாட்டீர்கள் தானே?

தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அடிமாடாக செல்லும் காட்சியக் காணும் நகரத்தில் நான் வசிப்பது நான் எப்பொழுதோ செய்த பாவம்தான். பல நல்லுள்ளங்களின் உதவியுடன் கறவை முடிந்த பசுவையும், முதிர்ந்த காளைகளையும் பராமரிக்கும் கோசாலையை சிலர் கோவையில் ஏற்படுத்தியுள்ளனர். கோவையை விட்டு சில கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்தில் இந்த சூழல் இருக்கிறது. சில நூறு மாடுகள் பராமரிக்கபட்டு வந்தது. அடிமாடுகளாக சென்ற பாதிமாடுகள் இதில் அடக்கம். இதில் கொடுமை என்ன வென்றால் சில மாதங்களுக்கு முன் இதிலிருந்து மாடுகளை சிலர் களவாடி சென்று இறைச்சியாக்கிவிட்டார்கள்.

பிற உயிர்களை துன்புறுத்தி நம் உயிரை களங்கப்படுத்தாமல், நமக்கும் இயற்கைக்கும் நன்மை கொடுத்து வாழும் வாழ்க்கைதானே வேதகால வாழ்க்கை?

நான் வேதகால வாழ்க்கை பற்றி கூறுகிறேனே நான் வேதகால வாழ்க்கை முறைக்கு என்ன செய்தேன் ? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(......வேதம் ஒலிக்கும்)