Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, October 17, 2009

வேதகால வாழ்க்கை

நம்மில் பலருக்கு சிலவிஷயங்களில் உள்மன கட்டமைப்பு (Predefined Mind set) உண்டு. உதாரணம் வேதம் என்றாலே மத ரீதியான ஒரு புத்தகம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு.

வேதா என்ற வார்த்தைக்கு சரியான பிற மொழி சொல்லாடல் இல்லை என கூறலாம். தமிழில் மறை என்றும் ஆங்கிலத்தில் sacred text என்றும் கூறப்படுவது நான் அறிந்தவரையில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை. காரணம் இவை அனைத்தும் மதம் சார்ந்த மொழிபெயர்ப்புகள்.

வேதா என்றால் ஒன்றாக இருப்பதன் பல்வேறு பிரிவுகள் என கூறலாம். நீங்கள் மனித உடலாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியே கூறிக்கொண்டாலும் அனைத்தும் இணைந்தது நீங்கள் மொத்த உருவாக இருப்பீர்கள். உங்கள் உடலில் சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம் என இருக்கும் அல்லவா அது போன்று

பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கும் ஒரு ஒலியை வேறுபடுத்திக் கொள்ளுவது வேதம் என கூறலாம்.

இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் சிலர் வேதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் அது ஹிந்துமதம் என்பதன் கீழ் வருவதாக சிலர் சொல்லுகிறார்கள். சில அதிபுத்திசாலிகள் வேதம் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் அது ஏதோ சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதாக சொல்லிகிறார்கள்.

திருமூலர் இயற்றிய திருமந்திரம் தமிழில் இருந்ததால் சைவம் என்ற லேபிள் இட்டு அதை பன்னிரு திருமறையில் கொண்டிணைத்தனர். முடிவு தற்சமயம் திருமந்திரம் தன் சுயத்தை இழந்து வருகிறது.

வேத சாஸ்திரத்தில் இருக்கும் விஷயங்கள் ஒரு மொழி சார்ந்தது அல்ல. வேத சாஸ்திரம் ஒலி சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சரி.. இப்பொழுது யோசிப்போம் ஒலி எந்த மதத்தை சார்ந்தது, எந்த நாட்டை சார்ந்தது , எந்த மொழியை சார்ந்தது?

மாடு “...மா” என குரல் கொடுப்பதால் அது இந்திய மொழிதான் பேசுகிறது என்றும் உலகில் இருக்கும் மாடுகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் சென்றது என்றும் கூற முடியுமா?

வியாசர் என்பவர் வேதத்தை நான்காக பிரித்தார். அதற்கு முன் வேதம் ஒன்றாக இருந்தது. ஒன்றாக இருக்கும் பொழுது வேதம் என கூறப்படவில்லை. பிரிந்த பிறகே அது வேதமாகியது.

வியாசர் என்பவர் இதை பகுத்தார் என்றாலும் அவர் எத்தகையவர் என சரியான தகவல் நம்மிடையே இல்லை. வியாசம் என்றால் தொகுப்பு என பொருள். வியாசர் என்றால் வியாசம் செய்பவர். வேதத்தை வியாசம் செய்வதால் வேதவியாசர் என அழைக்க
ப்பட்டார்.

வேதம் என்பது பிரபஞ்ச ஒலி என்றேன் அல்லவா? அதற்கு பொருள் உண்டா என்றால் எனக்கு தெரிந்தவரை மொழிக்கு மட்டுமே பொருள் உண்டு. ஒலிக்கு பொருள் கற்பிக்க
ப்படலாமே தவிர இயற்கையாக இருக்காது.

வேதகால வாழ்க்கை என்ற தலைப்பில் வேதத்தை பற்றி கூறுகிறேனே என உங்களுக்கு குழப்பம் வரலாம்.

வேதகால வாழ்க்கை என்ற ஒரு காலகட்டம் நம் பூமியில் இருந்தது. வரலாற்று அறிஞர்களாலும், அனேகராலும் பதிவு செய்ய
ப்படாத ஒரு வாழ்க்கை முறை அது.

உலகின் பொன்னான காலம் என்றால் அது வேதகாலம். இந்த வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது என்பதே இந்த தொடரின் நோக்கம்.

என்ன புதிய தொடரா என நீங்கள் கேட்பது புரிகிறது...!

வேதகால வாழ்க்கை என்பதை சிலவரிகளில் கூறிவிட முடியாது. முதலில் வேதம் என்றால் என்ன? காலம் என்றால் என்ன? வேதகாலம் என்றால் என்ன மற்றும் வேதகாலத்தை எப்படி வாழ்க்கை முறையாக்குவது என பலபடிகள் கொண்ட விஷயத்தை குறள் வெண்பா வடிவில் இரண்டு அடிகளில் கூறிவிட முடியாது.

மேலும் விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(வேதம் ஒலிக்கும்..)

Tuesday, October 13, 2009

பழையபஞ்சாங்கம் 13 - 10 - 2009

பழக்கம் ஒரு விளக்கம்

நம்மில் பலருக்கு சில பழக்கம் இருக்கும். ஆளுக்கு ஆள் வேறுபட்டாலும் ஏதோ ஒரு பழக்கத்தை நாம் கொண்டிருப்போம். பழக்கத்தில் நல்லபழக்கம் கெட்ட பழக்கம் என சிலர் வகைப்படுத்துவார்கள். உண்மையில் நல்லது கெட்டது என இவற்றில் எதுவும் இல்லை. பழக்கம் என்பது எப்பொழுதுமே கெட்டது தான். இதை நான் சொல்லவில்லை பதஞ்சலி தன் யோகசூத்திரத்தில் சொல்லுகிறார். தன்னை எதனுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என நினைப்பவர்கள் தங்களுக்கு உள்ள பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

நான் கூறும் இவ்விஷயம் சற்றுக்குழப்பமாக இருக்கலாம். ஒரு வாழ்வியல் உதாரணத்தை பார்ப்போம். சென்ற பழைய பஞ்சாங்கத்தில் சிவா மற்றும் லீலாவை பற்றி எழுதி இருந்தேன். ஒரு வலையுலக நண்பர் நீங்கள் சிவா மற்றும் லீலாவுடன் இருக்கும் படம் வேண்டும் என்றார். அவருக்கு மூன்றையும் ஒன்றாக பார்க்க விருப்பமோ என்னவோ. :)

அவரின் கோரிக்கைக்காக புகைப்படம் எடுக்கத் தயார் ஆனேன். புகைப்படம் எடுக்க உதவியாளர் யாரும் இல்லாததால் சிவா மற்றும் லீலாவை என் அருகே நிற்க வைத்து தானியங்கி கேமராவை தயார் செய்து விட்டு விரைவாக வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தேன். 5..4....3.....2...1 என வினாடிகள் கரைந்தது.....

புகைப்படம் எடுக்கும் நேரத்தில் சிவாவும் லீலாவும் போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்து ஓடி கேமராவை எடுத்து வந்து என் கையில் கொடுத்தனர். க்ளிக்.. க்ளிக்...!

நான் தான் அவர்களை அப்படி பழக்கி இருந்தேன். சில நேரங்களில் பழக்கங்கள் பிரச்சனையாகிவிடும் என்பதற்கு இது ஓர் உதாரணம். ஓஷோ பழக்கம் ஒரு மனநோய் என இதற்கு ஒரு கதை சொல்லுவார். இங்கே வேண்டாம் அப்படிபட்டக் கதைகள். காரணம் இது போன்ற கதைகள் சொல்லி எனக்கு பழக்கம் இல்லை..!

-------------------------------------
நோபல் தரிசு - எழுத்துப்பிழை அல்ல...

சிவாமி சிவானந்தர் பற்றி கேள்விப்பட்டிருப்பீருகள். ரிஷிகேஷத்தில் ஆசிரமம் அமைத்து உலகளாவிய நிலையில் யோக மார்கத்தை பரப்பியவர். பூர்வாசரமத்தில் அவர் தமிழகத்தை சார்ந்தவர். அவர் ரிஷிகேஷ் சிவானந்தா ஆசரமத்தில் வசித்த காலத்தில் அங்கே பல கலைநிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கும். கர்னாடக சங்கீத வித்வான்கள் மற்றும் பல கலை நிபுணர்கள் இவர் முன் நிகழ்ச்சி நடத்துவதை பெருமையாக கருதினார்கள்.

எந்த நிகழ்ச்சியானாலும் சிவானந்தர் மிகவும் ரசிப்பார். தலையை ஆட்டி.. தாளம் போட்டு அவர் ரசிக்கும் பாவனையை பார்க்கும் எவரும் தங்களை அறியாமல் அந்த நிகழ்ச்சியில் ஒன்றிவிடுவார்கள். கலைஞர்களுக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் தன் கையாலேயே பாராட்டு சான்றிதழ் ஒன்றும் வழங்குவார். உண்மையில் எத்தகைய கலைஞராக இருந்தாலும் சிவானந்தர் இதையேதான் செய்வார் என பலருக்கு தெரியாது.

ஒரு நாள் புல்லாங்குழல் இசையை ஆரம்ப கட்டத்தில் பயின்று வந்த ஒருவர் தான் சிவானந்தரின் முன் வாசிக்க விரும்புவதாக கூறினார். சிவானந்தரும் ஆசிரமவாசிகளும் கூடி இருந்த மிகபெரிய அவையில் அவர் வாசிக்க துவங்க அபஸ்வரமாக வெளிப்பட்டது. அனைவரும் நெளிந்தனர். ஆனால் சிவானந்தர் வழக்கம் போல தலையை ஆட்டி ஆட்டி ரசித்து “ பிரமாதம் பிரமாதம் ” என கூறிக்கொண்டிருந்தார். புல்லாங்குழல் கலைஞர் தன் நிலையை சிறிது நேரத்தில் உணர்ந்து தானாகவே நிறுத்திக்கொண்டார்.

சிவானந்தர் அவருக்கு பொன்னாடை அணிவித்து ‘புல்லாங்குழல் மாஹாவித்வான்’ என்ற பட்டத்தை வழங்கினார். அவையோர்களுக்கு அதிர்ச்சி. இதை பெற புல்லாங்குழல் கலைஞருக்கு அளவில்லாத கூச்சம்.

ஒரு வருடம் கழித்து அதே நாளில் ஆசிரமவாசிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கலைநிகழ்ச்சிக்கான மேடையில் அதே புல்லாங்குழல் கலைஞர். ஆனால் இந்த முறை மிகவும் ஆனந்தமான இசையை அவையோர்களுக்கு வழங்கினார். அனைவரில் காதுகளிலும் புல்லாங்குழலால் தேன் நிரப்பினார். நிகச்சியை அவர் நிறைவு செய்து பேசும் பொழுது கூறினார், “ சென்ற ஆண்டு குருநாதர் கொடுத்த பட்டத்திற்கு நான் தகுதி அற்றவன் இல்லை என்பது எனக்கும் , உங்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தே இருந்தது.. பட்டத்திற்கு தகுதியானவனாக என்னை ஆக்கிக்கொள்ள ஒருவருடம் கடினமாக உழைத்து, என் குருநாதரின் வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என்றார்.

இந்த செய்திக்கும் ஒபமாவுக்கு கிடைத்த நோபல் பரிசுக்கும் சம்பந்தம் இல்லை.


-----------------------------------------
மொழிதை

ஒரு தேசத்தின் காலாச்சாரத்தை ரசிக்க வேண்டுமானால் அவர்களின் கவிதையை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மொழிக்கு மொழி கவிதையின் தன்மை மாறுபடும் என்றாலும் கலாச்சாரம் மற்றும் மொழியை தாண்டி கவிதை பிற கலாச்சாரத்தில் ஊடுருவும். இதற்கு காரணம் ரசிப்பு திறன் என்பது கலாச்சாரங்களை கடந்தது.

மரபு, நவீன, பின் நவீன, ஹைக்கூ என நம் மக்கள் கவிதையில் பல வடிவ முயற்சிகள் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கவிதை வகைகளில் ஒன்றுதான் மொழிதை. மொழி+கவிதை - ஒரு மொழியால் எற்படும் கவிதை மொழிதை. அதாவது ஒரு மொழியில் இருக்கும் வார்த்தையின் எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதுவதன் மூலம் சிலவரியில் கவிதையாக எழுதுவது இதன் கட்டமைப்பாகும். உங்களுக்காக என் மொழிதைகளில் சில இங்கே..


பெருகியது வாகனம்
சுருங்கியது வானகம்

-----------------------------

விசாலமான மனம்
கடவுளின் விலாசம்

இவ்வகை கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்வதால் பிற மொழியில் அதே கட்டமைப்பு கொடுக்காது. மொழியை மட்டுமே அடித்தளமாக கொண்டு கவிதையால் ஏற்படும் ரசிப்பை உண்டாக்குவது மொழிதை. ஒரு ஆங்கில மொழிதை இதோ..

Your Pet - Dog
You itself a Pet - God

நீங்களும் மொழிதையை முயற்சி செய்யுங்கள். மொழிதையை உருவாக்கியவர் போன்ற இலக்கியம் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். :)

-------------------------------------------------------------------------
ஞான ஒளி

தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளை கவரும் படி உருவாக்குகிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மைதான் போல இல்லையென்றால் என்னை கவருமா :) ?

ஒரு மாணவர் என்னிடம் என்ன விளம்பரங்கள் பிடிக்கும் என கேட்டார். இந்தியன் ஓவர் சீஸ் பாங்க் விளம்பரத்தில் வரும் அந்த நீண்ட முடி சிறுவன்
பிடிக்கும். அவனைபோன்ற இன்னொரு சிறுவன் வேகா லாண்ட் விளம்பரத்தில் வருவான் என்றேன். குறிப்பிட்டு ஏன் இந்த விளம்பரம் பிடிக்கும் என கேட்டார் மாணவர். நான் சொல்லுவதற்குள் சுப்பாண்டி இடைமறித்து “நமக்கு என்ன இல்லையோ அதைத் தானே ரசிப்போம்” என்றான். ஸ்....ப்பா... முடியல...

ஹவெல்ஸ் சிஎப்எல் பல்ப் விளம்பரம் என்னை கவர்ந்தது. திபெத்திய கலாச்சாரத்தை பகடி செய்வதாக இருந்தாலும் இந்த விளம்பரத்தின் கருத்து அனைத்து கலாச்சாரத்திற்கும் பொருந்தும். போலி மதவாதிகள் உருவாக்கும் மக்களின் அறியாமை அனைத்து இடத்திலும் இருக்கிறது அல்லவா?

தொலைக்காட்சியில் சிலவினாடிகளே காண்பிக்கபடும் இந்த விளம்பரம் ஒரு குறும்பட அளவுக்கு இருக்கிறது. உங்கள் பார்வைக்கு இதோ..


Saturday, October 10, 2009

ஆன்மீகவாதிகள் ஓர் விளக்கம்

ஆன்மீகவாதிகளை நாம் வரையறுக்க முடியாது என முன்பு கூறினேன். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். காட்டாறுகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது இயலாது. பின்பு எப்படித்தான் தெரிந்துகொள்ளுவது?

உங்களுக்கு முன் இருக்கும் விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு உணர்த்துவது உங்கள் புலன்களே. கண்ணாடி உங்களை பிரதிபலிக்கும் என்பது உங்கள் கண்கள் சரியாக வேலைசெய்தால் மட்டுமே கூற முடியும். உங்கள் கண்களில் குறை இருப்பின் நாம் கண்ணாடியே சரி இல்லை என கூறிவிடுவோம். அதனால் ஆன்மீகவாதிகளுக்கு அருகில் நீங்கள் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறுகிறேன். உங்களுக்குள் நான் சொல்லுவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அவர் உயர் ஆன்மீக நிலையில் இருக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்மீகவாதிகளை உணர்வு உறுப்புக்களில் தெரிந்து கொள்ளுவது சாத்தியமா என கேட்கலாம். ஆரம்ப நிலை சாதகர்களுக்கு இது அவசியம். பிறகு அவர் உங்களை உணர்வுக்கு அப்பால் அழைத்துச்செல்வார்கள்.

ஒரு ஆன்மீகவாதியின் அருகில் இருக்கும் பொழுது உங்களுக்குள் எப்படி இருக்கும் என இந்த கட்டுரையின் இறுதியில் கூறுகிறேன்.

அதற்கு முன் ஆன்மீகவாதியில் லட்சணங்கள் என நான் பட்டியலிட்ட விஷயங்கள் ஏற்படுத்திய விபரீதங்களை பார்ப்போம்

1) கண்களில் ஒரு ஒளியுடன், சாந்தமான முகமும் , கண்களில் கருணை வழிந்தோடிக் கொண்டிருக்கும். கைகளில் ஒருவிதமான ஆசி கொடுக்கும் பாவனையில் வைத்திருப்பார்கள். ஆனந்ததின் அடையாளமாக ஒரு புன்சிரிப்பு நிலையாக முகத்தில் இருக்கும்.

இவ்வாறு எதிர்பார்ப்பதால் தங்கள் முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சிலர் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது சொல்லிதெரியவேண்டியது இல்லை. புன்னகையை எதிர்பார்த்த காரணத்தால் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தும் வண்டியில் ஏறும்பொழுது புன்னகைக்கிறார்கள். பலவருடங்களாக புன்னகையை போலியாக சுமந்தவர்கள் எப்படி ஒரு நாளில் அதை விடுவிக்க முடியும்?

மேலே நான் குறிப்பிட்ட விஷயங்களில் ஆசிகொடுக்கும் தன்மையை விடுத்து பிற விஷயங்களை நீங்கள் விமான பணிப்பெண்ணிடம் காணலாம். வரும் வாடிக்கையாளர்களை செயற்கையாக அவர்கள் அனுகும் முறை இது. போலி ஆன்மீகவாதிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை இப்படித்தான் வலைவீசுகிறார்கள்.

2) தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். பசும்பால் மற்றும் பழங்கள் இவர்களின் தின உணவு.

இக்கருத்தை எழுதும் பொழுது நான் மிகவும் வேதனை அடைந்தேன். காரணம் எனக்கு தெரிந்த ஒரு ஆன்மீகவாதி நன்றாக உணவு சாப்பிடுபவர். ஒரு ஊருக்கு செல்லும் பொழுது அந்த மக்கள் உணவு வழங்காமல் பழங்களை கொடுத்து அவரை படுத்தபடுக்கையாக்கி விட்டார்கள். தற்காலத்தில் பால் மற்றும் பழங்களில் அளவுக்கு அதிகமான ரசாயனம் கலக்கப்படுகிறது. நிங்கள் ஒரு வேளை மட்டும் பால், பழம் சாப்பிட்டு பாருங்கள் ஒரு மணி நேரத்தில் உங்கள் ஜீரண உறுப்பு தன் வேலையைக்காட்டும். வயிற்றுப்போக்கால் அவர் பல நாள் எழுந்து நடக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

3) எப்பொழுதும் கைகளில் ஒரு ஜப மாலையோ அல்லது மதம் சார்ந்த பொருளை வைத்து கடவுள் நாமத்தை ஜபம் செய்வார்கள். நமக்கும் ஜபம் செய்ய வேண்டும் என மந்திரத்தை கேட்டால், தீட்ஷை வழங்குவார்கள். நாம் கேட்கும் மந்திரத்தை எந்த தயக்கமும் இன்றி வழங்குவார்கள்.

எல்லா ஆன்மீகவாதிகளும் மதப்பொருட்களை கைகளில் வைத்திருக்கமாட்டார்கள். மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இருப்பவர்கள் மக்கள் எந்த விஷயத்தை பயன்படுத்த வேண்டுமோ அதை அவர்களுக்காக கைகளில் வைத்திருப்பார்கள். காரணம் இவர்கள் பயன்படுத்துவதை பார்த்து அவர்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காக.
மேலும் நமக்கு எந்த மந்திரம் வேண்டும், நாம் ஜபம் செய்ய வேண்டுமா என்று முடிவு செய்பவர் நம் குரு மட்டுமே. ஆன்மீகவாதிகள் அல்ல. குறித்துக்கொள்ளுங்கள் அனைத்து ஆன்மீகவாதிகளும் உங்கள் குரு அல்ல..!

அனைவருக்கும் தீட்சை தருபவர் உங்களுக்கு குருவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலர் மார்கழி மாத பிரசாதம் போல நான் இவரிடத்தில் தீட்சை வாங்கினேன், பிறகு இவரிடத்தில் வாங்கினேன் என பெருமை பேசுவார்கள். தீட்சை என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே ஏற்பட வேண்டிய நிகழ்வு. தீட்சை பலரிடத்தில் வாங்குவது பெருமையல்ல. குறைந்த பட்சம் ஒருவரிடமாவது வாங்கியதை பயன்படுத்தவேண்டும் என்பதே அவசியம்.

ஒருவரிடம் தீட்சை பெற்று பின்பற்ற முடியாத சூழலில் இன்னொருவரிடம் தீட்சை பெறலாம். அதைவிடுத்து பார்ப்பவரிடம் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்ள தீட்சை என்பது தேர்தலில் வழங்கும் வாக்காளருக்கான பணம் அல்ல..!

4) அவர்கள் அதிகமாக தூங்கமாட்டார்கள். 24 மணி நேரமும் கடவுளை நினைப்பதால் தூங்குவது அவர்களின் இயல்பல்ல. அவர்களிடம் எப்பொழுது கேள்வி கேட்டாலும் தெய்வீக ரீதியான விளக்கத்தை கொடுப்பார்கள். அவர்களுக்கு காலம் நேரம் முக்கியமல்ல.

ஆன்மீகவாதிகளை நாம் எப்பொழுதும் எடுப்பார் கைப்பிள்ளையாக வைத்திருக்கிறோம். அவர்களின் உள்ளே தெய்வீக நிலை இருப்பதால் அதற்கு நாம் தக்க மரியாதை செலுத்தவேண்டும். ஒரு கேள்வி கேட்கும் பொழுதோ அல்லது உதவி பெறும் முன்போ அவரிடம் அனுமதி வாங்க வேண்டும். அவரின் உள் நிலையில் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கலாம். அது அவருக்கு பெரும் உபாதையாக அமையும்.

உதாரணம் நானும் ஒரு ஆன்மீகவாதியும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அவர் கொஞ்சம் பிரபலமானவர் கூட. ஆன்மீக விஷயங்கள் இல்லாமல் சில நடைமுறை சங்கடங்களை எனக்கு அவர் விளக்கிக் கொண்டிருந்தார். திடீரென எங்கள் முன் வந்த ஒரு இளைஞர், “ பகவத் கீதையில் மூன்றாம் அத்தியாயத்தில் முதல் ஸ்லோகத்தில் கூறப்படும் விஷயம் இப்படி இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என பெரிய பிரசங்கத்தை நடத்திவிட்டு கேட்டார்.

ஆன்மீகவாதி என்னை பார்த்துவிட்ட ஒன்றும் சொல்லாமல் நடக்கத் துவங்கினார். ஆனால் அந்த இளைஞர் தான் கேட்ட கேள்வியால் அந்த ஆன்மீகவாதி நிலைகுலைந்து சென்றார் என நினைத்து பெருமிதமாக எங்களை பார்த்துக்கொண்டிருந்தார். நான் அந்த ஆன்மீகவாதியிடம் கூறினேன் மக்கள் உங்களை ATM என நினைத்துவிடுகிறார்கள். அதாவது ஆன்மீகம் டெல்லிங் மஷின்...! அவர் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள் விஷயம் புரியும்.


இதனாலேயே அவர்கள் அனேகமாக தொலைபேசியோ அல்லது இணையத்தையோ நேரடியாக உபயோகப்படுத்துவதில்லை. 13ஆவது விஷயத்தில் ( நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.) நான் கூறியது உண்மைதான். பல ஆன்மீகவாதிகள் இதனாலேயே தொலைபேசியை பார்த்தால் ஓடுவார்கள். நம் பக்திமான்கள் பொது தொலைபேசியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு பிரம்மசூத்திரத்தை விளக்குங்கள் என கேட்டால் என்ன செய்ய? நம் சுயநலத்தால் அவர்களை எல்லா நேரத்திலும் பயன்படுத்துவோம். இது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கடினமான உண்மை.

5) உடை விஷயத்தில் பரம எளிமை அவர்களின் அடையாளம். நவீன உடை அணியாமல், வேஷ்டி அல்லது கெளபீணம் அணிந்திருப்பார்கள். அதிக உடை வைத்திருக்க மாட்டார்கள். சேர்த்து வைத்தால் பற்று வரும் என்பதால் இரு உடையுடன் இருப்பார்கள். ஒன்று துவைத்து காயும் பொழுது ஒன்று உடுத்தி இருப்பார்கள். காவி அல்லது வெண்மை என்பது அதன் நிறமாக இருக்கும்.

இவர்கள் உண்மையில் ஆடைகளை விரும்புவதில்லை. நிர்வாணமாக இருப்பதையே விரும்புவார்கள். மஹாவீரர் மற்றும் அனேக அவதூதர்கள் இத்தகைய நிலையை முழுமையாக பின்பற்றுவார்கள். சமூக சூழலுக்காகத்தான் அணிகிறார்கள். சில குறிப்பிட்ட நிறம் அணிவதும் நமக்காகத்தான். உடையின் வேறுபாடு தெரியாத சூழலில் நாம் அவர்களுக்கு பாதகங்களை செய்யலாம். உடையின் காரணத்தால் நாம் அதை தவிர்க்க முடியும். உதாரணம் அவர்கள் முன் காமம் சார்ந்த விஷயங்களை பேசமாட்டோம். ஆன்மீகவாதிக்கு உடல் மேல் ஆடை அணிவது முயல் மேல் பாறையை வைப்பது போல சங்கடமானது. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இதற்கு சரியான உதாரணம்.


பதிவின் நீளம் கருதி ஐந்து விஷயங்களுடன் நிறுத்திக்கொள்கிறேன். சென்ற பதிவு பதினைந்து எண்ணிக்கை வரவேண்டும் என மேலோட்டமாக எழுதபட்டதல்ல. அனைத்தும் விளக்கபட வேண்டிய விஷயங்களே அவை. எண்ணிக்கையில் பதினைந்தையும் கடந்து நிறைய இருக்கிறது.


சரி விஷயத்திற்கு வருவோம்...

ஆன்மீகவாதிகளின் அருகில் இருக்கும் பொழுது நமக்கு எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு உள்ளே ஒருவித பேரமைதி காணப்படும்.
  • அந்த கணத்தை தவிர பிற சிந்தனைகள் எழாது
  • அவரிடம் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என தோன்றினாலும் செயலாற்ற முடியாது.
  • அவரின் கண்களை பார்த்து அதிக நேரம் பேச முடியாது.
  • முதல் முதலாக பார்த்தாலும் பலநாள் பழகிய ஓர் இணக்கம் மனதில் இருக்கும். இருந்தாலும் எல்லை தாண்ட முடியாது
  • பலருடன் நாம் இருக்கும் பொழுது உள்ளுணர்வில் நம்மை மட்டும் அவர் கவனிப்பதை போன்று தோன்றும்.
  • அவரை சந்தித்துவிட்டு வந்த பிறகும் இன்னும் போதவில்லை என தோன்றும்.
  • உங்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தை கேட்ட தோன்றினாலும் செயலற்று நீங்கள் இருக்கும் பொழுது அவர் பிறருடன் உரையாடும் பொழுது உங்களுக்கான விடை அதில் இருக்கும்.
  • உங்களுடன் அவர் மிக நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் மிகவும் அதிக விலகியவாராகவும் உணர்வீர்கள்.

இது மட்டுமல்ல நிறைய உண்டு. நீங்கள் அத்தகையவரை கண்டால் இதை தவிர வேறு என்ன ஏற்பட்டது என கூறுங்கள். முக்கியமாக ஒன்று நிகழும் அதை நான் வேண்டுமென்றே இங்கே குறிப்பிடவில்லை. காரணம் இதை படித்துவிட்டு இது எல்லாம் உங்களுக்கு நடப்பதாக கூட உங்கள் மனம் உங்களை ஏமாற்றக்கூடும். அதனால் அப்படிப்பட்டவரை நீங்கள் சந்தித்தால்/சந்தித்து இருந்தால் அதையும் உணர்ந்து எனக்கு தனிமடலாக கூறுங்கள்.

ஆன்மீகவாதியை நீங்கள் சந்தித்தபோது உங்களுக்குள் நடப்பதும் உங்கள் அன்மீக குருவை சந்தித்தால் உங்களுக்குள் நடப்பதும் ஒன்றல்ல.

அவன் அருளால் அவன் தாள் வணங்கி என கூறுவது போல ஒரு நாள் ஆன்மீக ஆற்றலே உங்களுக்கு அனைத்தையும் உணர்த்தும்.



Friday, October 9, 2009

ஆன்மீகவாதியின் டாப் 15 லட்சணங்கள்

1) கண்களில் ஒரு ஒளியுடன், சாந்தமான முகமும் , கண்களில் கருணை வழிந்தோடிக் கொண்டிருக்கும். கைகளில் ஒருவிதமான ஆசி கொடுக்கும் பாவனையில் வைத்திருப்பார்கள். ஆனந்ததின் அடையாளமாக ஒரு புன்சிரிப்பு நிலையாக முகத்தில் இருக்கும்.

2) தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். பசும்பால் மற்றும் பழங்கள் இவர்களின் தின உணவு.

3) எப்பொழுதும் கைகளில் ஒரு ஜப மாலையோ அல்லது மதம் சார்ந்த பொருளை வைத்து கடவுள் நாமத்தை ஜபம் செய்வார்கள். நமக்கும் ஜபம் செய்ய வேண்டும் என மந்திரத்தை கேட்டால், தீட்ஷை வழங்குவார்கள். நாம் கேட்கும் மந்திரத்தை எந்த தயக்கமும் இன்றி வழங்குவார்கள்.

4) அவர்கள் அதிகமாக தூங்கமாட்டார்கள். 24 மணி நேரமும் கடவுளை நினைப்பதால் தூங்குவது அவர்களின் இயல்பல்ல. அவர்களிடம் எப்பொழுது கேள்வி கேட்டாலும் தெய்வீக ரீதியான விளக்கத்தை கொடுப்பார்கள். அவர்களுக்கு காலம் நேரம் முக்கியமல்ல.

5) உடை விஷயத்தில் பரம எளிமை அவர்களின் அடையாளம். நவீன உடை அணியாமல், வேஷ்டி அல்லது கெளபீணம் அணிந்திருப்பார்கள். அதிக உடை வைத்திருக்க மாட்டார்கள். சேர்த்து வைத்தால் பற்று வரும் என்பதால் இரு உடையுடன் இருப்பார்கள். ஒன்று துவைத்து காயும் பொழுது ஒன்று உடுத்தி இருப்பார்கள். காவி அல்லது வெண்மை என்பது அதன் நிறமாக இருக்கும்.

6) ஆன்மீக வாழ்க்கை என்பது அனைவராலும் திடீரென பின்பற்றக்கூடிய விஷயமல்ல. அதனால் ஆன்மீக வாழ்க்கையின் பிறப்பிலேயே கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். இவர்களின் தாய் -தந்தையர் தெய்வீக குணம் கொண்ட பக்திமானாக இருப்பார்கள். அதன் பயணாக இவர் பிறந்திருப்பார். பிறக்கும் பொழுதும் சிறுவயதிலும் அனேக அதிசயங்கள் இவரை சுற்றி நடந்திருக்கும்.

7) தான் ஞானம் அடைந்த விஷயம் மற்றும் ஆன்மீக உயர்வு கொண்ட சம்பவத்தை கேட்கும் பொழுது மிக உணர்ச்சி பெருக்குடன் விளக்குவார். எப்படி ஆன்மீகத்திற்குள் வந்தார், இவரின் குரு யார் போன்ற கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளிப்பார். ஆன்மீகவாதி என்பவர் ஒரு திறந்த புத்தகம் என்பதால் அவருக்கு எந்த ரகசியமும் கிடையாது. அனேக ஆன்மீகவாதிகள் சுயசரிதை எழுதுவார்கள். அதில் அவர்களின் வாழ்க்கையில் எப்படி அதிசயம் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படையாக இருக்கும்.

8) பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம் அல்லது திருமந்திரம் போன்ற ஏதோ ஒரு நூலை பின்பற்றியே அவரின் ஆன்மீக வாழ்க்கை இருக்கும். எந்த நூலை அவர் பின்பற்றுகிறார் என தெரிந்து கொண்டால் அவரின் ஆன்மீக வாழ்க்கை எப்படிபட்டது என எளிமையாக கணிக்கலாம். ஆன்மீகவாதி பேசும் பொழுது கூட இடை இடையே புனித நூலின் மேற்கொள்காட்டி பேசுவார்.

9) கைகளால் பணத்தை தொடுவது ஆன்மீகவாதியின் குணம் அல்ல. பணத்தை சேமிக்கவும் மாட்டார். மக்கள் பால் பழம், உடை கொடுத்திவிடுவதால் இவருக்கு தேவைகள் இருக்காது.

10) ஆன்மீகவாதிகளின் பெயர்கள் ஸ்வாமி, யோகி, மஹான், சத்குரு, ஸரஸ்வதி, பரமஹம்சர் போன்று அமையும். இப்பெயர்கள் அவர்களே வைத்துக் கொள்ளக்கூடாது. இமயமலையில் சில ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் இவர்களுக்கு பெயரை வழங்குவார்கள் அல்லது பெரிய மடாலயத்தில் தீட்சை வாங்கும் பொழுது இந்த பெயர்சூட்டும் வைபவம் நடக்கும்.

11) இவர்கள் திருமணம் ஆனவர்களாக இருக்கமாட்டார்கள். அப்படி திருமணம் செய்திருந்தாலும் குடும்பத்தைவிட்டு பிரிந்திருப்பார்கள். மணவாழ்க்கை என்பது ஆன்மீகத்திற்கு தடை என்பதால் தனித்து இருப்பார்கள்.

12) தினமும் நித்திய பூஜை செய்வார்கள். அவர்கள் எங்கு பயணித்தாலும் அவர்களுடன் விக்ரஹங்கள் எடுத்து சென்று பூஜை தொடர்வார்கள்.

13) நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.

14) எங்கும் நிரந்தரமாக தங்காமல் சஞ்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தங்களின் பக்தர்கள் கோரிக்கைக்கு இணங்க வெளிநாடு பயணம் செய்வார்கள். தர்மத்தை பிறநாடுகளில் பரப்புவது இவர்களின் கடமை. கடல் மேல் பயணிப்பது தர்மத்திற்கு எதிரானது என்றாலும் ஆன்மீக விஷயத்திற்காக அந்த பாவத்தையும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

15) தான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே அனேகமாக இருக்கமாட்டார்கள். ஒரு ஊரில் பிறந்து , வேறு ஊர்களில் சஞ்சரித்து, மற்றொரு ஊரில் ஆசிரமம் அமைத்து இருப்பார்கள். இதனால் தன் குடும்ப உறுப்பினர்களை விலக்கியே வைத்திருப்பார்கள். ஊரில் மேலும் உறவின் மேலும் பற்று இருக்க கூடாது என்பது இச்செயலின் உள்ளர்த்தம்.


கொஞ்சம் பெரிய டிஸ்கி :

இது எல்லாம் ஆன்மீகவாதியின் அடையாளம் என மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்புகள். மேற்கண்ட 15 விஷயங்களில் ஒன்றாவது நீங்கள் ஆன்மீகவாதியிடம் எதிர்பார்த்திருப்பீர்கள்.

ஆன்மீகவாதியை ஒரு சட்டதிட்டத்தில் அடக்க அவர்கள் செயற்கையான இயந்திரங்கள் அல்ல. ஆன்மீகவாதிகள்
இயற்கையான மலை, காட்டாறு போன்றவர்கள். இலக்கணத்தில் அவர்களை அடைக்க அவர்கள் ஒரு கலாச்சார சார்பு கொண்ட மொழி அல்ல. அவர்கள் அனைத்து கலாச்சாரத்தையும் தாண்டியவர்கள்.

மேற்கண்ட விஷயங்களை மக்கள் விரும்புகிறார்கள் என தெரிந்துகொண்டு சிலர் போலியாக இந்த வேடம் அணிந்து உலா வருவார்கள். அவர்களிடம் இந்த விஷயங்களை கண்டு மக்களும் மயங்கி தங்கள் அறியாமையால் வீழ்வார்கள். இந்த டாப் 15 விஷயங்களால் எத்தகைய முட்டாள்தனமும் மோசடியான விஷயங்கள் சமூகத்தில் நடந்திருக்கிறது என நாளை பட்டியலிடுகிறேன்.

நான் பல ஆன்மீகவாதிகளுடன் பழக்கம் உள்ளவன். அதனால் ஆன்மீகவாதிகள் எப்படி இருப்பார்கள் என்றும் வேறு ஒரு நாள் கூறுகிறேன். உங்களுக்கு தெரிந்துக்கொள்ள விருப்பம் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.